அந்தந்த அஸ்திரங்களைப் பிரயோகிக்கவும் அவற்றை அடக்கிப் பின் திருப்பவும் உரிய மந்திரங்களையெல்லாம் உபதேசித்தார். அஸ்திரங்களுக்குரிய தேவதைகளும் ராமனுக்குப் பிரத்யட்சமாகத் தரிசனம் தந்து விட்டு, “உன் உத்தரவுக்கு அடங்கி எல்லாம் செய்வோம்” என்று சொல்லி மறைந்தன. ராமசந்திரனும் அவற்றையெல்லாம் தம்பி லக்ஷ்மணனுக்கும் உபதேசித்தான்.
அஸ்திர மந்திரங்களை ராமன் சரியாகப் பெற்றானா என்பதைப் பரீக்ஷை செய்து திருப்தியடைந்த பிறகு, “இந்த அஸ்திரங்களைக் கொண்டு தேவாசுர கந்தர்வ உரகர்களையும் நீ யுத்தத்தில் அழித்து வெற்றி பெறுவாய்” என்று ராமனை முனிவர் ஆசீர்வதித்தார்.
கொஞ்ச தூரம் நடந்து சென்றபின் ராமன் முனிவரைக் கேட்டான்: “அதோ, அங்கே தெரிகிறதே பெரிய மலையும் ரமணீயமான வனமும், அதுவா நாம் போக வேண்டிய வேண்டிய இடம்? உங்கள் வேள்வியைக் கெடுக்கும் துராத்மாக்கள் யார்? அவர்களை ஒழித்துத் தீர்க்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எனக்கு விவரமாகச் சொல்லுவீர்” என்றான்.
ராமசந்திரனுடைய கை துடித்தது. யுத்தம் செய்து வெற்றி பெற்று முனிவருடைய ஆசீர்வாதத்தைப்பெற ஆவல் கொண்டான்.
“அப்பனே! அந்த இடம்தான் நாம் போக வேண்டிய இடம். அதுவே ஆதிநாராயணன் முன்னாள் தவமிருந்த இடம். மகாவிஷ்ணு வாமனனாக அவதரித்த இடமும் அதுவே. அதனாலேயே அந்த ஆசிரமத்துக்குப் பெயர் சித்தாசிரமம் என்று வழங்கி வருகிறது” என்றார் முனிவர்.
பிரஹ்லாதனுடைய மகனான விரோசனனுடைய புத்திரன் மகாபலி என்ற அசுரன் புகழுடன் அரசு புரிந்தான். அவனுடைய ஆதிக்கப் பெருக்கத்தைக் கண்டு தேவர்கள் பயந்தார்கள். இந்திரன் ஆதிக்கத்தையெல்லாம் மகாபலி ஆக்கிரமித்துக் கொண்டு விட்டான்.
இந்திரனைப் பெற்ற காசியப முனிவரும் மனைவி அதிதியும் மகாவிஷ்ணுவைக் குறித்துப் பெரும் தவம் செய்து, “லோகநாதனே! எங்களுக்குப் புத்திரனாகவும் எங்கள் மகன் இந்திரனுக்குத் தம்பியாகவும் நீயே அவதரித்து இந்திரனையும் தேவர்களையும் மகாபலியினிடமிருந்து காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அதன் மேல் மகாவிஷ்ணு வாமனாவதாரம் எடுக்கத் தீர்மானித்து, அதிதிக்கு மகனாகப் பிறந்து வளர்ந்தான்.
மகாபலி செய்த ஒரு யாகத்துக்கு அழகிய சிறு பிரம்மச்சாரியாக வாமனன் சென்றான். மகாபலியின் ஆசாரியரான சுக்கிரர் - அசுரர் குலத்துக்கு இவர்தான் குரு - விஷயத்தைத் தெரிந்து கொண்டு “இந்த பிராமணன் யாசிப்பதைத் தரவேண்டாம்” என்று எச்சரித்தார்.
“மகாவிஷ்ணுவே என் யாகத்தில் வந்து யாசகம் கேட்டுப் பெறுவதைவிட எனக்கு என்ன மேலான நன்மை உண்டு” என்று மகாபலி தன் ஆசாரியருக்குச் சொன்னான்.
“என் பாதத்தால் அளந்த மூவடிப் பிரதேசம் வேண்டும்” என்று சிறுவன் கேட்டதை மகாபலிச் சக்கரவர்த்தி “தந்தேன்” என்று ஜலம் வார்த்துத் தந்து விட்டான்.
வாமனன் உடனே திரிவிக்கிரமனாகி வளர்ந்தோங்கிப் பூவுலகம் ஓரடியாலும் வானுலகம் ஓரடியாலும் அளந்து விட்டான். மூன்றாவது அடியாகத் தன் திருப்பாதத்தை நாராயணன் மகாபலிக்கு அபயம் என்று அவன் தலைமேல் வைத்தான். உலகப் பரப்புக்குச் சமானம் பக்தனுடைய தலை என்பது இந்தக் கடைசி நிகழ்ச்சியின் பொருள். ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன் ஆனான் மகாபலி.
இந்தப் புண்ணிய கதையைச் சொல்லி “ஆதியில் நாராயணன் தவமிருந்ததும், பிறகு காசியபர் தவம் செய்து தேவர்களைக் காப்பாற்ற வாமனனைப் பெற்றதுமான இந்த இடம் சித்தாசிரமம் என்கிற பெயர் பெற்றது. இந்தப் புண்ணியப் பிரதேசத்தில் நானும் ஆசிரமம் அமைத்து அதில் இருந்து வருகிறேன். என்னுடைய வேள்விக்குத் தடையாக அரக்கர்கள் இந்த வனத்துக்கு வந்து வேதனை செய்கிறார்கள். யாகம் நடைபெறாமல் செய்து விடுகிறார்கள். இப்போது நீ வந்திருப்பதே அவர்களுடைய முடிவு” என்றார் விசுவாமித்திரர்.
“அப்படியே யாகுக” என்றான் ராமன்.
அரசகுமாரர்களுடன் விசுவாமித்திரர் வந்து விட்டதைக் கண்டு அங்குள்ள மற்ற ரிஷிகள் மிக மகிழ்ச்சியடைந்து ஒருவர் பின் ஒருவராக வந்து முனிவரை வணங்கி வரவேற்றார்கள். ராஜகுமாரர்களுக்கும் முறைப்படி அதிதி பூஜை செய்து அமர்ந்தார்கள்.
“இன்றே தாங்கள் யாக தீக்ஷை யெடுக்கலாம்” என்று சக்கரவர்த்தித் திருமகன் பரபரப்புடன் முனிவருக்குச் சொன்னான். அவ்வாறே விசுவாமித்திரர் வேள்வித் துவக்கத்துக்கு உரிய விரதம் அன்றிரவு எடுத்துக் கொண்டார்.
மறுநாள் காலை சீக்கிரமாகவே ராஜகுமாரர்கள் எழுந்து யாகசாலையிலிருந்த முனிவரை வணங்கி, “ராக்ஷசர்கள் எப்போது வருவார்கள்? நாம் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாதல்லவா? எங்களுக்கு விவரமாகச் சமயத்தைத் தெரியப்படுத்த வேண்டும்” என்றார்கள்.
அங்கிருந்த ரிஷிகள் இதைக் கேட்டு வெகு சந்தோஷ மடைந்தார்கள்.
“முனிவர் விசுவாமித்திரர் மௌன விரதத்திலிருக்கிறபடியால் இனிப் பேச மாட்டார். ஆறு நாட்கள், இரவும் பகலும் நீங்கள் தூங்காமல் யாகத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்கள்.
ராஜகுமாரர்கள் வில்லும் கையுமாக ஆறு நாட்கள் இரவும் பகலும் காத்தார்கள். ஆறாவது நாள் காலையில் லக்ஷ்மணனுக்கு ராமன் சொன்னான்: “தம்பி! இப்போது வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இதுதான் அரக்கர்கள் வரும் சமயம்” என்றான்.
இதைச் சொல்லும்போதே அக்னி குண்டத்திலிருந்து நெருப்பு கொழுந்துவிட்டு எழுந்தது. ராக்ஷசர்கள் ஆகாயத்தில் வந்து நின்றது அக்னிக்குத் தெரியும். யாக காரியம் சகலமும் கிரமமாக நடந்துகொண்டிருக்க, மேலே ஆகாயத்தில் ஒரு பெரும் கர்ஜனை கேட்டது. ராமன் மேலே பார்த்தான்.
மாரீசனும் சுபாஹுவும் அவர்கள் பரிவாரமும் அசுத்த மாமிசமும் ரத்தமும் கொண்டு வேதிகையின் மேல் சொரிந்து யாகத்தைக் கெடுக்க ஆயத்தமாக நின்றதைக் கண்டான். ஆகாயம் முழுவதும் நீர் கொண்ட மேகம் மூடினாற் போல் அரக்கர் கூட்டம் நின்றது. உடனே மானவாஸ்திரத்தை எடுத்து, “லக்ஷ்மணா, பார்!” என்றான் ராமன்.
அந்த அஸ்திரம் மாரீசனைத் தாக்கி அவனை நூறு யோசனை தூரம் தாண்டிக் கடற்கரையில் கொல்லாமல் வீழ்த்திற்று.
பிறகு ராமன் ஆக்னேயாஸ்திரம் விட்டான். அது சுபாஹுவைத் தாக்கி, அவன் மாண்டு விழுந்தான். பிறகு வேறு அஸ்திரங்களைப் பிரயோகித்து அரக்கர் கூட்டத்தை ராஜகுமாரர்கள் முற்றிலும் அழித்தார்கள்.
ஆகாயம் மறுபடியும் வெண்மையாகப் பிரகாசித்தது.
இவ்வாறு யாகத்தைக் கெடுக்க வந்த அரக்கர்கள் வீழ்த்தப்பட்டு ரிஷிகளுக்கு ஏதொரு தொந்தரவு மில்லாமல் காரியம் முடிந்தது. விசுவாமித்திரர் எல்லை கடந்த மகிழ்ச்சி யடைந்தார்.
“சக்கரவர்த்தி தசரதனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவன் ஆணைப்படி நடத்திக் கொடுத்தீர்கள். உங்களுடைய பராக்கிரமத்தைப் பாராட்டுகிறேன். இந்த ஆசிரமம் மறுபடியும் எங்களுக்கு சித்தாசிரமம் ஆயிற்று” என்று சொல்லி ராஜகுமாரர்களை ஆசீர்வதித்தார்.
அன்றிரவு ராஜகுமாரர்கள் சித்தாசிரமத்தில் தூங்கிக் களைப்புத் தீர்த்துக் கொண்டார்கள்.
மறுநாள் காலை நியமங்களை முடித்துவிட்டு ராம லக்ஷ்மணர்கள் முனிவர் முன் நின்று வணங்கி, “என்ன உத்தரவு?” என்றார்கள்.
அவதார ரகசியம் முனிவருக்குத் தெரிந்ததுதான். உபதேசித்துத் தந்த அஸ்திரங்களின் வல்லமையும் அவர் அறிந்ததே. ஆயினும் எதிர்பார்ப்பது வேறு. எடுத்த காரியம் முடிந்து அதை நேரில் அனுபவிக்கும் மகிழ்ச்சியே வேறு.
விசுவாமித்திர முனிவருக்குச் சொல்லொணாத சந்தோஷம். அவர் முகம் அக்னி சுவாலையைப்போல் பிரகாசித்தது. இன்னும் ராமசந்திரனுக்குத் தாம் செய்ய வேண்டிய பணியைப் பற்றி நினைக்கலானார். அதுவே சீதா கலியாணம்.
அங்கு கூடிய ரிஷிகளும் விசுவாமித்திரரும் ராமனை நோக்கிச் சொன்னார்கள் :
“நாங்கள் மிதிலைக்குப் போவதாக இருக்கிறோம். ராஜ சிரேஷ்டரான ஜனகர் ஒரு யாகம் செய்யப் போகிறார். அங்கே நாம் அனைவரும் போகப் போகிறோம். ராஜகுமாரர்களும் நம்முடன் போவது நல்லது. ஜனகருடைய அற்புத வில்லைச் சக்கரவர்த்தித் திருமகன் தரிசித்தல் தகும்.”
அவ்வாறே நிச்சயம் செய்தார்கள். ராம லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரருடன் மிதிலைக்குச் சென்றார்கள்.