3. விசுவாமித்திரர் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

வேள்வியில் அடைந்த பாயசத்தை அருந்தியதின் பயனாக மூன்று பத்தினிகளும் கர்ப்பம் தரித்தார்கள். காலக்கிரமத்தில் கௌசல்யா தேவி ராமனைப் பெற்றாள். அடுத்தபடி கைகேயி பரதனைப் பெற்றாள். சுமித்திரா தேவி இரு குமாரர்களைப் பெற்றாள். அவர்களே இரட்டையர்களான லக்ஷ்மணனும் சத்ருக்னனும் பாயசத்தில் அருந்திய பங்கின் விகிதாசாரப்படி இந்த நான்கு குமாரர்களுக்கும் விஷ்ணு அம்சம் சொல்லப் படுகிறது. முறையே ராமன் விஷ்ணுவில் பாதி என்றும், லக்ஷ்மணன் விஷ்ணுவில் கால் பங்கு என்றும், பரதனும் சத்ருக்னனும் ஒவ்வொருவர் அரைக்கால் பங்காகவும் சொல்லப்படுகிறது. சுமித்திரை முதலில் அருந்தியது கால் பாகம். கடைசியாக அருந்தியது கைகேயிக்குத் தந்தது போக மிஞ்சி நின்ற அரைக்கால் பாகம். முந்தி அருந்திய கால் பங்கு பாயசம் லக்ஷ்மண சொரூபமாயிற்று. பிந்திய அரைக்கால் பங்கு சத்ருக்ன சொரூபமாயிற்று. இந்த விஷயங்கள் அவ்வளவு முக்கியமல்ல. கடவுளைப் பங்கு பண்ணிக் கணக்கிட முடியாது. பரம்பொருளில் ஒரு சிறு பங்கும் பூரணமாகவே நிற்கும் என்பது சுருதி.

ஓம் பூர்ண மதஹ் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே 

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே


“அங்கிருப்பது பூரணம், இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகியுள்ளது. பூரணத்தினின்று பூரணத்தை எடுத்த பிறகும் மிஞ்சி நிற்பது பூரணமே."


பரம்பொருள் பௌதிக கணித நூல் நியதிக்கு அடங்காது.


நான்கு பேர்களுக்கும் அரசகுமாரர்களுக்கு விதிக்கப்பட்ட எல்லாப் பயிற்சிகளும் தரப்பட்டன. குழந்தைப் பருவத்திலிருந்து லக்ஷ்மணனுக்கும் ராமனுக்கும் விசேஷப் பிரியம் வளர்ந்து வந்தது. அப்படியேதான் பரதனுக்கும் சத்ருக்னனுக்கும் பரஸ்பரம் அதிக அன்பு. எப்போதும் கூடவே இருப்பார்கள். இதுவும் தாய்மார்கள் பாயசம் அருந்திய முறையிலிருந்து உண்டாகிய நெருங்கிய பற்று என்று வைத்துக் கொள்ளலாம்.


நான்கு குமாரர்களைப் பெற்று, அவர்களுடைய குணங்களும் சாமர்த்தியமும் பிரீதியும் தேஜசும் வளர்ந்து சிறப்புற்று வர, தசரத மகாராஜன் தேவர்களால் சூழ்ந்த நான்முகக் கடவுளைப் போல் சந்தோஷமாக இருந்து வந்தான்.


ஒரு நாள் தசரதன் தன்னுடைய மந்திரிகளுடன் உட்கார்ந்து குமாரர்களுக்கு விவாகம் செய்வதைப் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தான். அப்போது காவல் அதிகாரிகள் பரபரப்புடன் உள்ளே வந்து, “விசுவாமித்திர மகா முனிவர் அரசனைக் காணக் காத்திருக்கிறார்” என்றார்கள். விசுவாமித்திரர் என்றால் எல்லாருக்கும் பயம்.


மகா சக்தியும் புகழும் பெற்ற முனிவர் எதிர்பாராதபடி தன்னைக் காண வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் தசரதன் தன் ஆசனம் விட்டு எழுந்து, முனிவரை எதிர்கொண்டு வரவேற்று, முறைப்படி அமரச் செய்தான்.


விசுவாமித்திர முனிவர் ஓர் அரசனாக இருந்து, பிறகு தவஞ் செய்து முனிவரானவர். தவத்திலும் வெகு பாடுபட்டு வெற்றி பெற்றவர். சாபத்தால் வருந்திய திரிசங்குவின் பேரில் கருணை கொண்டு முன்னொரு காலத்தில் புதியதொரு பிரம்மாவையே உண்டாக்கி, ஒரு புதுப் பிரபஞ்சத்தையும் சிருஷ்டி செய்து விடுவேன் என்று தொடங்கித் தம் தபோ பலத்தால் நட்சத்திரங்களை உண்டாக்கி, ஆகாயத்தின் தென் பாகத்தில் நிலைக்கச் செய்தவர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிப் புதுச் சிருஷ்டியை அந்த அளவில் நிறுத்திக் கொண்டார். இவை ராமாயண நிகழ்ச்சிக்கு முன்பு.


விசுவாமித்திரர் முனிவராவதற்கு முன், கௌசிக ராஜாவாக இருந்த காலத்தில், தம் சைன்யத்துடன் சுற்றுப் பிரயாணம் செய்துகொண்டு போகும் சமயம், ஒருநாள் வசிஷ்ட மகரிஷியின் ஆசிரமத்துக்குச் சென்றார். வசிஷ்ட மகா முனிவரை நமஸ்கரித்து அவரிடம் தாமும் மரியாதை பெற்றுக் கொண்டார்.


க்ஷேம சமாசாரம் விசாரித்த பிறகு “உமக்கும் உம்முடைய ஆட்களுக்கும் நான் அதிதி உபசாரம் செய்து போஜனம் செய்வித்துக் கௌரவம் அடைய வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றுவீராக” என்று வசிஷ்டர் சொன்னார்.


விசுவாமித்திரர், “சுவாமி, தாங்கள் எனக்கு ஜலம் தந்து செய்த உபசாரமே பெரிய விருந்தாக வைத்துக் கொள்ளுகிறேன். தங்களைத் தரிசித்ததே என் பாக்கியம். ‘உனக்கு அதிதி பூஜை செய்ய விரும்புகிறேன்’ என்று தாங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளே எனக்கும் என் சேனைக்கும் செய்த பெரும் விருந்தாகும். எனக்குப் போக விடை கொடுத்தருள வேண்டும்” என்றார்.


ரிஷியாசிரமத்தில் பெரும் சேனையோடு வந்த ஒரு அரசனுக்கு எவ்வாறு விருந்து செய்விக்க முடியும்? ஆகையால் வசிஷ்டர் சொன்னதைச் சாதாரண உபசார வார்த்தையாக வைத்துக்கொண்டு விசுவாமித்திரர் மேற்கண்டவாறு சொன்னார்.


ஆனால் வசிஷ்டர் போஜனம் செய்தே போக வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.


விசுவாமித்திரர், “கோபித்துக் கொள்ளக்கூடாது. தங்களுடைய போஜன உபசாரத்தை நான் இகழ்ந்ததாக வைத்துக்கொள்ள வேண்டாம். எனக்கும் என்னுடைய பெரும் பரிவாரத்துக்கும் இவ்விடம் ஆசிரமத்தில் எப்படி போஜன பதார்த்தங்கள் திடீர் என்று கிடைக்கும்? இதற்காகத்தான் கவலைப்படுகிறேன்” என்று வியக்தமாகச் சொன்னார்.


வசிஷ்ட முனிவர் புன்னகை செய்து, தம் பசுவை அழைத்து, “குழந்தாய், சபலையே! அரசனுக்கும் பரிவாரத்துக்கும் வேண்டிய போஜனம் உடனே தந்து உபசரிப்பாய்” என்றார்.


அப்போது கௌசிகராஜன் திகைத்துப் போகும் படியான ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்தது. அரசனுடைய பரிவாரத்துக்கும் பெரும் சேனைக்கும் வேண்டிய அளவில் அநேக விதமான ருசியான பதார்த்தங்கள் தாமாகத் தோன்றிக் குவிந்து விழுந்தன. அன்ன பான வகைகள், பணியாரங்கள், நெய், தயிர், புஷ்பம், வாசனைத் திரவியங்கள் ஒன்றும் விடாமல் எல்லாம் மனத்தில் நினைத்த மாத்திரத்தில் ஆசிரமத்தில் எல்லோருக்கும் பரிமாறப்பட்டன. கௌசிகருடைய பத்தினிமார்கள், மந்திரிகள், பந்து பரிவாரங்கள், புரோகிதர்கள், சேனையாட்கள், வேலையாட்கள், அனைவரும் ரிஷியாசிரமத்தில் திருப்தியாக விருந்து உண்டு. ரிஷியின் தபோ பலத்தைக் கண்டு வியப்பில் மூழ்கினார்கள்.


விசுவாமித்திரர் தம்முடைய நன்றியைத்தெரிவித்து விட்டு முடிவில் வசிஷ்டரைக் கேட்டுக்கொண்டார்.


“இந்தச் சபலையை எனக்குத் தர வேண்டும். இதன் சக்தியை நான் கண்டேன். இத்தகைய பொருள் ராஜ தருமத்தின்படி அரசனுக்கே உரியது” என்றார்.


இதைக் கேட்ட வசிஷ்டர் மிகவும் வருத்தப்பட்டார். சபலையை விட்டுத் தாம் பிரிய முடியாது, அதற்குப் பல காரணங்கள் உண்டு என்று சொல்லி, பசுவைக் கொடுக்க மறுத்தார்.


மறுக்க மறுக்க அரசனுக்கு ஆசை அதிகரித்தது. பசுவுக்குப் பதிலாக உமக்கு இதைத் தருவேன், அதைத் தருவேன் என்று கௌசிகர் வசிஷ்டருடைய மனத்தை மாற்றப் பார்த்தார். முடியவில்லை. வசிஷ்டர் ஒரே உறுதியாக, இந்தப் பசுவுக்கு விலையாக நீர் கொடுக்கக் கூடிய செல்வம் அனைத்தும் எனக்குக் கொடுத்தாலும் பயனில்லை. சபலையைக் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்.


அதன் பேரில் விசுவாமித்திரர் கடுங் கோபம் கொண்டு, தம் சேனையாட்களுக்கு உத்தரவிட்டுச் சபலையைப் பலவந்தமாக இழுத்துப் போகப்பார்த்தார்.


சபலை கண்ணீர் விட்டு அழுதுகொண்டு, “நான் ரிஷிக்கு என்ன அபராதம் செய்தேன்? ஏன் என்னைக் கைவிட்டார்? இவர்கள் என்னை இழுத்துக்கொண்டு போகப் பார்க்கிறார்களே! என் எஜமானராகிய முனிவர் சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறாரே!” என்று சுற்றி நின்ற சேனையாட்களை முட்டித் துரத்திவிட்டு வசிஷ்டரிடம் சரணமடைந்தது.


கூடப் பிறந்த தங்கையைப்போல் பிரியமான தம் அருமைப் பசு சோகத்தால் கதறுவதைப் பார்த்து வசிஷ்டர், “குழந்தாய், உன்னை இம்சிக்கும் இவர்களைத் தாக்கும்படியான சேனையை நீ உண்டாக்குவாயாக!” என்று சொன்னார்.


உடனே அப் பசு “ஹூம், ஹூம்” என்று கர்ஜித்துக் கர்ஜித்து எண்ணிறந்த வீரர்களை உண்டாக்கி விசுவாமித்திரருடைய ஆட்களைச் சிதற அடித்தது.


இதைக் கண்ட விசுவாமித்திரர், கண்கள் சிவந்து அடங்காக் கோபங் கொண்டு, ரதம் ஏறிப் பாணங்களைப் பிரயோகித்தார். சபலையும் புதிய புதிய படை வீரர்களைத் தன் உடலிலிருந்து வெளிப்படச் செய்து விசுவாமித்திரரை முறியடித்து அவர் பெருஞ் சேனையையும் நாசம் செய்தது. போர் முற்றிப் போயிற்று. விசுவாமித்திரருடைய குமாரர்களில் சிலர் வசிஷ்டரையே கொல்ல வந்தார்கள். வசிஷ்டர் அவர்களைப் பார்த்து வாயால் அதட்டியதும் சாம்பலானார்கள்.


அவமானமடைந்த விசுவாமித்திரர் முகக் காந்தியை இழந்து அந்த இடத்திலேயே தம் ராஜ்யத்தை ஒரு மகனிடம் ஒப்படைத்துவிட்டு, வசிஷ்டரை எப்படியாவது அடக்க வேண்டும் என்று உமாபதியை நோக்கித் தவஞ் செய்ய இமயமலைச் சாரலுக்குப் போய் விட்டார்.



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை