ஏழாவது ஸ்கந்தம் - ஏழாம் அத்தியாயம்
(ப்ரஹ்லாதன் தான் மாத்ருகர்ப்பத்தில் நாரதரிடம் தத்வோபதேசம் கேட்டதை அஸுர குமாரர்களுக்குக் கூறுதல்)
ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- இவ்வாறு அஸுர குமாரர்களால் வினவப்பெற்ற மஹாபாகவதனான ப்ரஹ்லாதன், என்னிடத்தில் கேட்டதை நினைத்துச் சிரித்துக்கொண்டே, அவர்களை நோக்கி இவ்வாறு மொழிந்தான்.
ப்ரஹ்லாதன் சொல்லுகிறான்:- எங்கள் தந்தையாகிய ஹிரண்யகசிபு, தவம் செய்வதற்காக மந்தர பர்வதத்திற்குப் போயிருக்கும் பொழுது, இந்த்ரன் முதலிய தேவதைகள், “உலகங்களை வருத்துகிற பாபிஷ்டனான (பாபியான) இவ்வஸுரன், எறும்புகளால் கடியுண்ட ஸர்ப்பம்போலத் தன் பாபத்தினாலேயே பக்ஷிக்கப்பட்டான் (உண்ணப்பட்டான்)” என்று சொல்லிக் கொண்டு அஸுரர்களோடு யுத்தம் (போர்) செய்ய முயற்சி கொண்டார்கள். இந்த்ரன் முதலிய அத்தேவர்கள், பலத்தினால் யுத்தத்திற்கு (போர் செய்ய) முயன்றிருப்பதைக் கண்டு அஸுரத் தலைவர்கள், அவர்களால் பீடிக்கப்பட்டுப் பயந்து, மனைவி, பிள்ளை, பணம், நண்பர், பசுக்கள், மற்ற வஸ்துக்கள் ஆகிய இவற்றையெல்லாம் துறந்து, ப்ராணனைப் பாதுகாக்க முயன்று அனைவரும் மூலைக்கொருவராக எல்லாத் திசைகளையும் பற்றி விரைவுடன் ஒடிப்போனார்கள். ஜயசீலர்களான தேவதைகள், ராஜாவான ஹிரண்யகசிபுவின் க்ருஹத்திலுள்ள ஸமஸ்தமான சொத்துக்களையும் பறித்துக்கொண்டு அதைப் பாழ் செய்தார்கள். இந்த்ரன், ராஜ மஹிஷியான என் மாதாவைப் பிடித்துக்கொண்டு போனான். அவ்வாறு இந்த்ரன் கொண்டு போகும் பொழுது, தேவரிஷியான நாரதர் திடீரென்று வழியில் வந்து, பயந்து, நடுங்கி, அழுகுரலில் பக்ஷி (பறவை) போலக் கதறுகின்ற என் தாயைக் கண்டு இந்த்ரனைப் பார்த்துத் “தேவேந்த்ரனே! நிரபராதையான இவளைக் கொண்டு போவது யுக்தமன்று (ஸரியன்று). மிகுந்த மதி (புத்தி) உடையவனே! பிறனுடைய பார்யையை விட்டுவிடு. இவள் பதிவ்ரதை. இவளைக்கொண்டு போகாதே” என்றார். தேவேந்த்ரனும் அதைக் கேட்டு “இவளுடைய வயிற்றில் பிறரால் பொறுக்க முடியாத ஹிரண்யகசிபுவின் வீர்யம் கர்ப்பமாயிருக்கின்றது. ஆகையால், இவள் ப்ரஸவிக்கும் வரையில் என் வசத்தில் இருக்கட்டும். பிறகு, பிறந்த பிள்ளையை வதித்து, என் ப்ரயோஜனத்தை முடித்துக்கொண்டு, இவளை விட்டுவிடுகிறேன்” என்றான். நாரதரும் அதைக் கேட்டு, “இவளுடைய கர்ப்பத்திலிருக்கும் சிசு, உன்னால் மரணம் அடையக் கூடியதன்று. அது பாபமற்றது; மஹாபாகவத லக்ஷணம் அமைந்தது; சிறந்த குணங்களுடையது; பகவானுடைய பரிவாரங்களில் சேர்ந்தது; மஹாபலமுடையது” என்றார்.
தேவேந்திரன், தேவர்ஷியின் வார்த்தையைக் கேட்டு, வெகுமதித்து அப்படியே அவளைத் துறந்து, அவளுடைய கர்ப்பத்திலிருக்கிற பகவத் பக்தனாகிய என்னிடத்தில் கௌரவத்தினால் அவளை ப்ரதக்ஷிணம் பண்ணி, ஸ்வர்க்கலோகம் போய்ச் சேர்ந்தான். அப்பால் தேவர்ஷி என் மாதாவைத் தனது ஆச்ரமத்திற்கு அழைத்துக்கொண்டு போய், ஸமாதானப்படுத்திக் “குழந்தாய்! உன் பர்த்தா வரும்வரையில், நீ இவ்வாச்ரமத்தில் இருப்பாயாக” என்றார். அவளும் அப்படியே ஆகட்டுமென்று அத்தேவர்ஷியின் ஆச்ரமத்தில் நிர்ப்பயமாக (பயமின்றி) வஸித்திருந்தாள். அஸுர ச்ரேஷ்டனாகிய ஹிரண்யகசிபு பயங்கரமான தவத்தில் இழிந்து, அதினின்று மீண்டு வராதிருந்தவரையில், பதிவ்ரதையும் கர்ப்பிணியுமான என் தாய், தன் கர்ப்பத்தின் க்ஷேமத்திற்காகவும், தான் நினைத்தபொழுது தன் கணவன் வந்த பின்பு ப்ரஸவிப்பதற்காகவும், மிகுந்த பக்தியுடன், நாரத மஹர்ஷிக்குச் சுச்ரூஷை (பணிவிடை) செய்து வந்தாள். ஸமர்த்தராகிய அம்மஹர்ஷி, கருணை உடையவராகையால், அவ்வாறு சுச்ரூஷை (பணிவிடை) செய்து கொண்டிருக்கிற என் மாதாவுக்கு என்னை உத்தேசித்துப் பகவத் பக்தியோகமாகிற தர்மத்தின் ஸ்வரூபத்தையும், தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், உபதேசித்தார்.
அப்பொழுது, அம்மஹர்ஷி உபதேசித்த அவ்வுணர்வு, என் தாய் பெண்ணாகையாலும், நெடுங்காலம் ஆனமையாலும், அவளுக்கு மறந்து போயிற்று. மஹானுபாவராகிய அந்நாரத மஹரிஷியால் அனுக்ரஹம் செய்யப்பெற்ற எனக்கு, அவ்வுபதேசம் இப்பொழுதும் மறக்கவில்லை. ஒ தைத்யகுமாரர்களே! உங்களுக்கு என் வார்த்தையில் நம்பிக்கை உள்ளதானால், உங்களுக்கும் அவ்விரண்டு ஜ்ஞானமும் உண்டாகும். ஸ்த்ரீகளுக்கும், பாலர்களுக்கும் தத்வ விஷயத்தில் (ஜீவாத்மா, பரமாத்மாவைப் பற்றியவற்றில்) திறமையுள்ள புத்தி உண்டாக வேண்டுமென்றால், ச்ரத்தையினால்தான் (ஆழ்ந்த நம்பிக்கை, ஆர்வத்தினால் தான்) உண்டாக வேண்டும். ச்ரத்தை (ஆழ்ந்த நம்பிக்கை, ஆர்வம்) இல்லாத பக்ஷத்தில், எவ்வளவு வருந்தினாலும், அது உண்டாகாது. எனக்கு இந்த ஜ்ஞானம் ச்ரத்தையினால் தான் (ஆழ்ந்த நம்பிக்கை, ஆர்வத்தினால் தான்) உண்டாயிற்று. நான் உங்களுக்கு அதை உபதேசிக்கிறேன். அதை ச்ரத்தையுடன் (ஆழ்ந்த நம்பிக்கை, ஆர்வத்துடன்) கேட்டுத் தரிப்பீர்களாக (மனதில் நிலைநிறுத்துவீர்களாக). ஸத்வாதி குணங்களுக்குப் பரிணாமத்தை (மாறுபாடுகளை) விளைவிக்கவல்லதும், பரமபுருஷனுக்குச் சரீரமுமாகிய காலத்தினால் விளைகிற பிறவி முதலிய (தேஹத்தின் தர்மங்களேயன்றி, ஆத்மாவின் தர்மங்களன்று. வ்ருக்ஷம் (மரம்) ஒருவாறாயிருக்கும் பொழுதே, அதில் பூ பூத்து, காய்த்து, வளர்ந்து, பழுத்து, விழுந்து, மறைந்து போகின்றது. அவ்வாறே, ஆத்மா ஒருவாறாயிருக்கையில், தேஹத்திற்குப் பிறவி முதலிய விகாரங்கள் உண்டாகின்றன. ஆத்மா பிறவி, நாசம் (அழிவு), அபக்ஷயம் (குறைவு, தேய்தல்), வ்ருத்தி (வளர்ச்சி), பரிணாமம் (மாறுபாடு) முதலிய விகாரங்களற்றவன்; ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலிய ப்ரக்ருதியின் குணங்கள் தீண்டப்பெறாத பரிசுத்தன்; ஜ்ஞானத்தையே வடிவாக உடையவனாகையால், எல்லாச் சரீரங்களிலும் ஒருவாறாயிருப்பவன்; சரீரத்தை என்னுடையதென்று நினைக்குந் தன்மையுடையவன்; ஸ்வயம்ப்ரகாசன் (வேறு ஒன்றின் தேவையின்றித் தானே தோன்றுபவன்); தேஹம், இந்த்ரியம் முதலியவற்றிற்கு ஆதாரமாயிருப்பவன்; அவற்றின் வ்யாபாரங்களுக்குக் காரணமாயிருப்பவன்; தன்னைப்போன்ற மற்றொரு ஜீவனோடு ஸம்பந்தமற்றவன்; அழிவற்றவன். தேஹம், அநித்யம்; ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்களுக்கிடம்; தேவன், மனுஷ்யன் முதலிய பல பிரிவுகளையுடையது. ஜ்ஞானமற்றது; பிறர்க்கு ஆதாரமாயிராது; தந்தை, பிள்ளை முதலிய பல ஸம்பந்தங்களுக்கிடமாயிருக்கும். இவ்வாறு ஆத்மாவுக்குப் பன்னிரண்டு தர்மங்கள் சொன்னேன். இவை. ஆத்மாவுக்குத் தேஹத்தைக் காட்டிலும் மேன்மையை அறிவிக்கின்றன. அறிவுடையவன், இந்த லக்ஷணங்கள் அமைந்த ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து, தேஹத்திலும் அதைத் தொடர்ந்த மற்றவைகளிலும் அஜ்ஞானத்தினாலுண்டான (அறியாமையால் உண்டான) நான், என்னுடையது என்னும் துரபிமானத்தைத் (வீணான பெருமையைத், கெட்ட எண்ணத்தைத்) துறந்து, ஆத்மஸ்வரூபத்தை ஆராய்வதில் ஊக்கமுற்றிருக்க வேண்டும். பொன் விளையும் கற்களின் நிலைமை தெரிந்த பொன்வேலைக்காரன், அத்தகைய கற்கள் இருக்குமிடம் தேடியறிந்து, அக்கற்களையெடுத்து, அவற்றை உருக்குவது முதலிய உபாயங்களால் அவற்றினின்று பொன்னையெடுப்பது போல தேஹங்களாகிற இடங்களில் அத்தேஹங்களைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவின் உண்மையை உணர்தற்குரிய உபாயங்களால் அவ்வாத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவன், பிறகு ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும் அளவிடமுடியாத பரமபுருஷனுடைய ஸாக்ஷாத்காரத்தைப் பெறுவான். பூமி, ஜலம், அக்னி, வாயு, ஆகாசம், மனம், புத்தி, அஹங்காரம் என்று எட்டு ப்ரக்ருதிகள். ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸூக்கள் அவற்றின் குணங்கள். ஜ்ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள், பஞ்சப்ராணன், சித்தம் என்று பதினாறு விக்ருதிகள். ஒவ்வொரு சரீரத்தில் ஒவ்வொரு ஜீவன் உளன். இதுவே சாஸ்த்ரங்களுக்கும் அனுபவத்திற்கும் இணங்கி வருமென்று கீதாசார்யன் முதலியவர்களால் கூறப்பட்டுள்ளது. எட்டு ப்ரக்ருதிகள், பதினாறு விக்ருதிகள் இவற்றின் ஸமுதாயமே தேஹம். அது ஜங்கமம் (அசைவன), ஸ்தாவரம் (அசையாதன) என்று இருவகைப் பட்டிருக்கும். அத்தேஹத்தில், ஜீவாத்மாவை ஆராய்ந்தறியவேண்டும். அத்தேஹத்திலுள்ள ஆத்மாவைக் காட்டிலும், வேறுபட்ட பூமி ஜலம் முதலியவற்றையெல்லாம் “கந்தமுடையது (வாசனை உடையது; வாசனை பூமியின் குணம்) ஆத்மாவன்று, ரஸமுடையதும் (சுவை உடையதும்; சுவை நீரின் குணம்) ஆத்மாவன்று. ஸ்பர்சமுடையதும் (தொடு உணர்ச்சி உடையதும்; தொடு உணர்ச்சி காற்றின் குணம்) ஆத்மாவன்று” என்று துறந்து அவற்றைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவைத் தேடி அறியவேண்டும். “நான் அறிகிறேன். நான் இச்சிக்கிறேன். நான் த்வேஷிக்கிறேன்” என்று ஞானம், இச்சை, த்வேஷம் முதலிய குணங்கள் ஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மாவினிடத்தில் அமைகின்றமையாலும் “என் தலை, என் கை, என் கால்” என்று எல்லா அவயவங்களைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டுத் தோற்றுகையாலும், ஆத்மா நானென்று தோற்றுகையாலும், தேஹம் அப்படி தோற்றாமையாலும், ஸ்ருஷ்டி, ஸ்திதி முதலியவற்றை எடுத்துரைக்கிற வேதாந்த வாக்யங்களின் ஆராய்ச்சியாலும் உணர்த்துணர்ந்து ஆத்மா தேஹாதிகளைக் (உடல், இந்த்ரியங்களைக்) காட்டிலும் வேறுபட்டவனென்று அறிய வேண்டும். புத்திக்கு, விழித்தல், ஸ்வப்னம் (கனவு) காணுதல், ஒன்றுந்தெரியாமல் உறங்குதல் ஆகிய மூன்று வியாபாரங்கள் உண்டு. அவற்றை எவன் அனுபவிக்கிறானோ, அவனே தேஹம், இந்திரியம் முதலியவற்றைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மா. அவன் தேஹாதிகளைக் காண்கிறான், அவற்றிற்கு ஆதாரமாயிருக்கிறான். அவனே புருஷனென்றும் ப்ரத்யக் ஆத்மா (தனக்குத் தானே “நான்” “நான்” என்று தோன்றும் ஜீவாத்மா) என்றும் கூறப்படுகிறான். ஜாக்ர (விழித்திருக்கும் நிலை), ஸ்வப்ன (கனவு காணும் நிலை), ஸூஷுப்தி (ஆழ்ந்த உறக்க நிலை) என்கிற மூன்று வகையான புத்தியின் வியாபாரங்கள் ஆத்மாவுக்கு இயற்கையில் ஏற்பட்டவையன்று; நிலையற்றவை: ஸத்வ, ரஜஸ், தமோகுணங்களால் உண்டாகின்றன. ஜீவனுடைய புண்ய, பாப, ரூப கர்மங்களே அவற்றிற்குக் காரணம். காற்று, புஷ்பம் முதலியவற்றில் பட்டு வீசும்பொழுது, அவற்றின் மணத்தோடு வீசுகின்றது. அவற்றில் படாது வரும்பொழுது, மணமில்லாமலே வீசுகின்றது. ஆகையால், அந்த மணம் காற்றுக்கு இயற்கையில் ஏற்பட்டதன்றல்லவா? அவ்வாறே ஜீவாத்மாவுக்கு இவை கர்மாதீனமாய் விளைந்த புத்தி ஸம்பந்தத்தினால் ஏற்பட்டவை, இவ்வாறு ஆத்மாவின் ஸ்வரூபத்தை ஆராய்ந்தறிய வேண்டும். இந்தப் புத்தி ஸம்பந்தமே ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸாரத்திற்குக் காரணம். இந்த ஸம்ஸாரம், ஸ்வப்னம் (கனவு) போல நிலையற்றது; புருஷார்த்தமுமன்று (மனிதனால் விரும்பி அடையப்பட வேண்டியதும் அன்று). இத்தகைய ஸம்ஸாரம், ஜீவனுக்கு அஜ்ஞானத்தினால் உண்டாகின்றது. ஆத்மா, சுத்த ஜ்ஞான ஸ்வபரூபனாயினும், ஸத்வாதி குணங்களின் பரிணாமத்திற்குரியதாக (மாறுபாட்டுக்கு உட்பட்டதாக) விளைகின்ற புண்யபாப கர்மங்களின் பரிபாகத்தினால் (விளைவினால்), அவ்வஜ்ஞானம் உண்டாகின்றது. ஆகையால், ஸத்வாதி குணங்களின் பரிணாமத்தினால் (மாறுபாட்டினால்) விளைகின்ற புண்யபாப கர்மங்களுக்கு மூலமான தேஹாத்ம ப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அஜ்ஞானத்தை அடியோடு அறுத்தொழிப்பதும், புத்தியின் ப்ரவாஹமான சப்தாதி விஷய ஜ்ஞானத்தை அழிப்பதுமாகிய, யோகத்தை நீங்கள் அனுஷ்டிக்க வேண்டும். அஜ்ஞானத்தைப் போக்குவதற்குப் பலவாயிரம் உபாயங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் இவ்வுபாயமே மேலானது. இது பகவானால் கூறப்பட்டது. அது யாதெனில், உபாயங்களால் ஸர்வேச்வரனான, பகவானிடத்தில் அனாயாஸமாக ப்ரீதி (ப்ரியம், அன்பு, நட்பு) உண்டாகப் பெறுவதுதான். இதையே பக்தியோகமென்பார்கள். இப்பக்தியோகம் உண்டாவதற்கு உபாயங்களைச் சொல்லுகிறேன், கேட்பீர்களாக.
குருக்களுக்குப் பணிவிடை செய்கை, அவர்கள் மொழியும் தத்வத்தைக் கேட்கவேண்டுமென்னும் விருப்பம், அவர்களைப் பக்தியுடன் உபாஸித்தல், தன் சக்திக்குரியபடி அவர்களுக்கு வேண்டியவற்றை நிறைவேற்றிக்கொடுத்தல், ஸாதுக்களான பகவத் பக்தர்களோடு ஸஹவாஸம் செய்தல் (தொடர்பில் இருத்தல்), ஹ்ருதயத்திலிருக்கிற ஈச்வரனை மானசீகமாக (மனதால்) ஆராதித்தல், அவன் கதையைக் கேட்க வேண்டுமென்னும் விருப்பம் (ச்ரவணம்), அவன் குணங்களையும் செயல்களையும் வாயாரப் பேசுவது (கீர்த்தனம்), அவனை நெஞ்சார நினைப்பது (ஸ்மரணம்), அவன் பாதங்களைப் பணிவது (பாதஸேவனம்), அவனைப் பூஜிப்பது (அர்ச்சனம்), அவனை நமஸ்கரிப்பது (வந்தனம்), அவனுக்குத் தாஸனாயிருப்பது (தாஸ்யம்), அவனிடத்தில் நட்பு செய்வது (ஸக்யம்), அவனிடத்தில் ஆத்ம ஸமர்ப்பணம் செய்வது (ஆத்ம நிவேதனம்) ஆகிய ஒன்பது லக்ஷணங்கள் அமைந்த பக்தியோகத்தை ஷாட்குண்ய பூர்ணானாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனாகிய) ஸர்வேச்வரன் ஸமஸ்த பூதங்களிலும் அந்தராத்மாவாய் இருக்கிறானாகையால், ஸமஸ்த பூதங்களும் பகவத் ஸ்வரூபங்களே என்னும் பாவனையுடன் அவ்வவற்றிற்கு வேண்டிய விருப்பங்களைக் கொடுத்து, உரியபடி வெகுமதித்தல் ஆகிய இவ்வுபாயங்களால் காமம் (காதல், ஆசை, விருப்பம்), கோபம் (சினம்), லோபம் (பேராசை), மதம் (கர்வம்), மோஹம் (மயக்கம், மனக்கலக்கம்), மாத்ஸர்யம் (பொறாமை) என்கிற அறுவகைச் சத்ருக்களையும் வென்று, தினந்தோறும் ப்ரீதியுடன் பகவானை த்யானிக்க வேண்டும். அதனால், சீக்ரத்தில் பகவானிடத்தில் பக்தியோகம் உண்டாகும். இப்பக்தியோகம் வளர்ந்து வருமானால், பகவானுடைய திவ்ய குணங்களையும், அவன் லீலையால் கொண்ட ராம, க்ருஷ்ணாதி உருவங்களால் செய்த செயல்களையும் கேட்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்து உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் நிறைந்து கண்களில் ஆநந்த நீர் தளும்பப் பெற்றுத் தழதழத்த குரலுடன் உரக்கப் பாடுவான்; சப்தம் செய்வான்; கூத்தாடுவான்; க்ரஹத்தினால் பிடியுண்டவன் போல, ஒருகால் சிரிப்பான்; ஒரு கால் அழுவான்; ஒருகால் த்யானித்துக் கொண்டிருப்பான்; ஒருகால், கண்ணில் படும் ஜனங்களைப் பகவத் ஸ்வரூபமாக நினைத்து நமஸ்கரிப்பான்; ஒருகால், அடிக்கடி மூச்செறிந்து கொண்டு வெட்கமின்றி “ஓ நாராயணா! ஜகந்நாதா! ஹரீ!” என்று பகவானை அழைப்பான். பரமாத்ம தியானத்தினால் பெரும்பாலும் ஸந்தோஷமுற்றிருப்பான். இத்தன்மை எப்பொழுது உண்டாகுமோ, அப்பொழுது பக்தியோகம் கைகூடிற்றென்று நினைக்கலாம்.
இந்நிலைமை உண்டாகப்பெற்ற புருஷன், எல்லாவற்றிலும் சிறந்த பக்தியோகத்தினால் புண்ய, பாபங்களாகிற பந்தங்களெல்லாம் (கட்டுக்கள்) தீர்ந்து, ஸம்ஸாரத்திற்கு மூலமான கர்மவாஸனையும் (முன் பிறவிகளில் செய்த புண்ய பாப வினைகளின் ஆழ்ந்த மனப்பதிவும்) அடியோடு கழிந்து, பகவானோடொத்த உருவமுடையவனாகி அப்பகவானைப் பெறுவான். இவ்வுலகத்தில் ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) முதலிய தாபங்களால் (துன்பங்களால்) மனவருத்தமுற்ற ஜீவனுக்குப் பகவத் ப்ராப்தி உண்டாகுமானால், அது சக்ரம் போலச் சுழன்று கொண்டு அனர்த்தங்களை விளைக்கின்ற ஸம்ஸாரத்தை மீளவும் உண்டாகாதபடி அடியோடு அழிக்குமென்றும், அதுவே ப்ரஹ்மானந்தமென்றும் பண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
ஆகையால், ஓ, அஸுரகுமாரர்களே! ஹ்ருதயத்திலிருக்கிற ஜீவாத்மாவுக்கு அந்தர்யாமியாய் அவனை நியமித்துக் கொண்டிருக்கிற அந்தப் பகவானை நீங்களும் ஹ்ருதய கமலத்தில் த்யானிப்பீர்களாக. உங்கள் ஹ்ருதய கமலத்தில் ஆகாசம் போலிருக்கின்றவனும், ஸத்யகாமத்வம் (அனுபவிக்கும் வஸ்துக்கள் (போக்ய), அனுபவிப்பதற்கு உதவியாய் இருப்பவை (போக உபகரண), அனுபவிப்பதற்கான இடம் (போகஸ்தான) ஆகிய இந்த விருப்பங்கள் நித்யமாய் இருக்கும் நித்ய விபூதியை உடைத்தாய் இருத்தல்) முதலிய குணங்கள் நிறைந்தவனும், ஸாதாரணமாய் ஸமஸ்த ப்ராணிகளுக்கும் நண்பனும், தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையுடையவனுமாகிய பகவானை உபாஸிப்பதனால் உங்களுக்கு வருத்தம் என்ன? ஒரு வருத்தமும் இல்லையே.
சப்தாதி விஷயங்களைச் சம்பாதிப்பதனால் என்ன ப்ரயோஜனம்? பணங்கள், மனைவிகள், பசுக்கள், பிள்ளை முதலியவர்கள், வீடு, பூமி, யானைசாலை மற்றுமுள்ள ஐச்வர்யங்கள் என்று ஜனங்கள் ஆசைப்படுகிற விஷயங்களெல்லாம் க்ஷணத்தில் அழிந்து போகுந்தன்மையுடையவை; நிலையற்றவை. மரணம் அடையுந்தன்மையுடைய புருஷனுக்கு அவை என்ன ஸுகத்தை விளைக்கும்? இவ்வாறே யாகாதி கர்மங்களால் சம்பாதிக்கப்பட்ட ஸ்வர்க்காதி லோகங்களும் அழியும் தன்மையுடையவைகளே; தங்களுக்கு மேற்பட்டது எதுவுமே இல்லை என்னும்படியான மேன்மைக்கு இடமாகாதவை. அவ்விடத்திலும் துக்கத்தின் கலப்பில்லாமல், கேவல ஸுகத்தையே அனுபவிக்கிறோம் என்கின்றதில்லை. துக்கமும் கூடத் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆகையால், நீங்கள் ஸத்தைப் (அழியாத நன்மையைப்) பெறவேண்டுமாயின், ச்ருதி, ஸ்ம்ருதிகளால் புகழப்படும் பெருமையுடையவனும் பக்தியாகிற ஒரு உபாயத்தினால் மாத்ரமே அடையத்தகுந்தவனுமாகிய, பரமபுருஷனைப் பணிவீர்களாக. இல்லையாயின், ஸம்ஸரித்துக் கொண்டேயிருந்து, கடைசியில் ஸ்தாவர, ஜன்மங்களைப் பெற்று அழியப்பெறுவீர்கள்.
யஜ்ஞாதி கர்மங்களை அறிவிக்கிற வேதத்தின் பூர்வபாகத்தில் பயின்று, அவ்வளவில், தன்னை எல்லாம் தெரிந்தவனாகப் பாவித்திருக்கும் மனிதன் சப்தாதி விஷய ஸுகங்களை விரும்பி, அவற்றைப் பெறுதற்காக இவ்வுலகத்தில் அடிக்கடி யாகாதி கர்மங்களைச் செய்வானாயின், அவன் அதனால் தான் ஆசைப்பட்டதை அடையாமல், அதற்கு நேர் விபரீதமான துக்கத்தை அவச்யம் பெறுவான். சப்தாதி விஷய ஸுகங்களைப் பெறுதற்காக யாகாதி கர்மங்களைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பு, கர்மானுஷ்டான (யாகம் போன்ற கர்மங்களைச் செய்யும்) ப்ரயாஸமின்றி (ச்ரமமின்றி, கஷ்டமின்றி) ஸுகமாயிருந்தவன், கர்மத்தைச் செய்யத் தொடங்கின பின்பு, அதைச் செய்து முடிக்க வேண்டிய வருத்தத்தை அனுபவித்தே தீரவேண்டும். ஸ்வர்க்காதி ஸுகங்களை அனுபவிக்கும் பொழுதும், துக்கம் தொடராமல் இருக்காது. அப்புண்யம் கழிந்த பிறகு, நரகத்தை அனுபவிக்கவேண்டும். சப்தாதி விஷயங்களில் விருப்பமின்றிப் பகவானை அடைய விரும்பிப் பக்தி யோகத்தை அனுஷ்டிப்பானாயின், ஆரம்பம் முதற்கொண்டு பகவானை அனுபவிக்கையாகிற ஆனந்தத்தைப் பெறுவான். அப்பக்தியோகம் கைகூடின பின்பு, இணையெதிரில்லாத ப்ரஹ்மானந்தமாகிற அம்ருத மஹா ஸமுத்ரத்தில் அமிழ்ந்திருப்பான். மற்றும், ஜீவன் இல்வுலகத்தில் தேஹத்தின் ப்ரயோஜனத்திற்காக வேண்டிய உபாயங்களைச் செய்து, சப்தாதி விஷயங்களைப் பெற விரும்புகிறான். அத்தேஹம், நாய், நரி முதலியவற்றால் பக்ஷிக்கத்தக்கது (உண்ணத்தக்கது). அது, ஒருகால் ஆத்மாவை அணைக்கின்றது; ஒருகால் துறக்கின்றது. ஆகையால் அத்தேஹம் ஆத்மாவுக்கு நிலை நின்றிருப்பதன்று; அழியும் தன்மையுள்ளது. அத்தகைய தேஹத்திற்காக விவேகமுடையவன் எவன்தான் சப்தாதி விஷயங்களைத் தேடி வருந்துவான்? ஆத்மாவை அணைத்துக்கொண்டிருக்கிற தேஹத்தின் கதையே இதுவானால், அந்தத் தேஹத்தின் மூலமாய் ஆத்மாவோடு ஸம்பந்தம் உடையவர்களாகையால் தேஹத்தைக்காட்டிலும் ஒதுங்கினவர்களான பிள்ளை, பெண்டிர், வீடு, பணம் முதலியவைகளும் ராஜ்யம், கருவூலம், ஸைன்யம், மந்திரிகள், வேலைக்காரர்கள், நண்பர்கள் இவர்களும் என்னுடையது என்னும் அபிமானத்திற்கிடமாகி, நிலையின்றி வருவதும் போவதுமாய் இருப்பார்கள் என்பதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?
நித்யாநந்த ஸ்வரூபனான ஆத்மாவுக்கு தேஹத்துடன் அழிபவைகளும், அற்பங்களும், அனர்த்தங்களும் அர்த்தம் போலத் தோற்றுகின்றவைகளுமான சப்தாதி விஷயங்களால் என்ன ப்ரயோஜனம்? ஸமுத்ரத்தில் திவலை போன்ற இவற்றால் ஆத்மாவுக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லை. தேஹ ஸெளக்யத்திற்காகவே அவற்றை அபேக்ஷிக்க (விரும்ப) வேண்டும். தேஹத்தின் நிலைமையைப் பற்றி முன்னமே சொன்னேன். ஆகையால், நிலையற்ற தேஹத்தின் ஸெளக்யத்திற்காகச் சப்தாதி விஷயங்களைத் தேடியோடி வருந்தும் தன்மையைத் துறந்து, ஆத்ம ஸ்வரூப ஸத்தைப் பெறுமாறு (ஆத்மாவின் இயற்கையான, பகவானுக்கு அடியவன் என்கிற, நிலையை அடையுமாறு) பக்தியோகத்தினால் மஹாநந்தஸ்வரூபனான பரமபுருஷனைப் பெறுகையே நலம்.
ஓ, அஸுரர்களே! இவ்வுலகத்தில் ஜன்மாந்தர (முன் பிறவிகளில் செய்த) கர்மங்களால் வருந்துகிற ஜீவனுக்கு ஸ்த்ரீ ஸம்போகாதி (பெண்களுடன் அனுபவித்தல் முதலிய) ஸமயங்களில் விளையும் ஸுகம் எவ்வளவென்பதை நிரூபித்துப் பார்ப்பீர்களாக. அந்த ஸ்த்ரீயை மணம் புரிந்து, அவளைப் போஷிப்பது (காப்பாற்றுவது) முதலியவற்றிற்காகப் படும் ப்ரயாஸத்தைக் (கஷ்டத்தைக்) காட்டிலும், அவளால் அனுபவிக்கும் ஸுகம் அற்பமாயிருக்குமேயன்றி, அதைவிட மேற்பட்டிருக்கமாட்டாது என்பது திண்ணம் (உறுதி). மற்றும், பிதாவின் ரேதஸ்ஸு (ஆண் விந்து) மூலமாய் மாதாவின் கர்ப்பத்தில் ப்ரவேசிப்பது முதல் மரணம் வரையிலுள்ள அவஸ்தைகளில் பூர்வ ஜன்ம கர்மங்களால் வருந்தும் ஜீவனுக்கு, இவ்வுலகத்தில் என்ன ஸுகம் இருக்கிறது? விவேகிகள் இதை ஒரு ஸுகமாக நினைப்பார்களோ? ஜீவன் தன்னை அணைத்துக் கொண்டிருக்கிற தேஹத்தினால், வேறு தேஹத்தை விளைத்தே தீரும்படியான புண்ய, பாப கர்மங்களைச் செய்கிறான். அக்கர்மங்களால், தேஹாந்தரத்தைப் பெறுகிறான். மீளவும், அத்தேஹத்தினால் வேறு தேஹத்தை விளைக்கும்படியான கர்மங்களைச் செய்கிறான். ஆகையால், ஜீவனுக்கு ஒருகாலும் கர்மங்கள் தீருகிறதில்லை. தேஹத்தினால் கர்மங்களைச் செய்கையும் கர்மத்தினால் தேஹத்தைப் பெறுகையுமாகிற இவ்விரண்டும் தேஹாத்மப்ரமம் (இவ்வுடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம், மனக்கலக்கம்) முதலிய அஜ்ஞானத்தினால் (அறியாமையினல்) உண்டாகின்றது. ஆகையால், ஸம்ஸார பந்தத்திற்கு ஹேதுவான அவ்வஜ்ஞானம் (அறியாமை) நீங்கும் பொருட்டு, ஸர்வர்க்கும் அந்தராத்மாவாய் நியமித்துக்கொண்டிருக்கிற ஸர்வேச்வரனைப் பணிவீர்களாக.
அவன் தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) என்கிற மூன்று புருஷார்த்தங்களையும் (மனிதர்கள் விரும்பி அடைய முயற்சிப்பவை) விரும்புகின்றவர்களுக்குக் கொடுக்க வல்லவன். ஆயினும், நீங்கள் ஒரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமல் பணிகையே நலம். அவன், அவாப்த ஸமஸ்தகாமன் (எல்லா விருப்பங்களும் நிறைவேறப்பெற்றவன்). ஆகையால், தன் ப்ரயோஜனத்திற்காக ஒரு முயற்சியும் செய்பவனல்லன். அவனது செயல்களெல்லாம் தன் பக்தர்களின் க்ஷேமத்திற்காகவேயிருக்கும். அவனை நீங்கள் நிஸ்ஸந்தேஹமாகப் (ஐயமறப்) பணிந்து ஜீவிப்பீர்களாக.
அஸுர ஜாதியில் பிறந்த நமக்குப் பகவானைப் பணிவதில் அதிகாரம் உண்டோவென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். அவன், பூமி முதலிய மஹா பூதங்களைப் படைத்து அவற்றால் தேவ மனுஷ்யாதி தேஹங்களைப் படைத்தவனாகையால், ஸமஸ்த பூதங்களுக்கும் அவனே ஆதிகாரணன் (முதல் காரணம்); அந்தராத்மாவாயிருக்கிறான். ப்ராணிகளுக்கு ப்ரீதிக்கிடமான வஸ்து அவனைக் காட்டிலும் மற்றொன்றும் இல்லை. அவன் உட்புகுந்து ஸமஸ்த ப்ராணிகளையும் நியமித்துக் கொண்டிருப்பவன். ஆகையால், அவன் அனைவர்க்கும் பொதுவானவன். தேவன், அஸுரன் மனுஷ்யன், யக்ஷன், கந்தர்வன் இவர்களில் எவனாயினும், அம்முகுந்தனுடைய சரணார விந்தங்களைப் பணிவானாயின், அவன் அனிஷ்டங்களெல்லாம் (கெடுதியெல்லாம்) தொலைந்து, இஷ்டங்களெல்லாம் (விருப்பங்களெல்லாம்) கைகூடப் பெறுவான். நான் அஸுரஜாதியில் பிறந்தவனாயினும், பகவானுடைய பாதார விந்தங்களைப் பணிந்து, க்ஷேமம் பெற்றேனல்லவா? இவ்வாறே எல்லோரும் க்ஷேமம் பெறலாம். அவனைப் பணிவதற்குத் தேவாதி, ஜாதி நியமமில்லை.
ஓ, அஸுரகுமாரர்களே! ப்ராஹ்மணனாயிருக்கை, நல்லொழுக்கம் அமைந்திருக்கை, பலரிடத்தில் பல விஷயங்களைப் பலவாறு கேட்டுணர்ந்திருக்கை; தானம், தவம், யாகம், ஸ்நானாதி கர்மங்களால் வரும் சுத்தி, வ்ரதங்கள் இவையெல்லாம் பரமபுருஷனுக்கு ப்ரீதியை விளைக்க வல்லவையாகமாட்டாது. ஒரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமல் செய்கிற பக்தியினால் மாத்ரமே அவன் ஸந்தோஷம் அடைவான். மற்ற உபாயங்களெல்லாம் அபிநய (நாடக) மாத்ரமே. அஸுர குமாரர்களே! ஆகையால், ஸமஸ்த ப்ராணிகளும் நம்மைப் போலவே பகவானுக்குச் சரீரமாயிருப்பவைகளென்று பாவித்து, அவற்றில் தயையுடையவர்களாகி, ஸம்ஸாரபந்தத்தைப் போக்கும் தன்மையனும், ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவும், நியாமகனுமாகிய, பகவானிடத்தில் ஒரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமல் பக்தியைச் செய்வீர்களாக.
பகன், கேசி முதலிய ராக்ஷஸர்களும், யமலார்ஜுனர்களாயிருந்த யக்ஷர்களும், ஹிரண்யாக்ஷன் முதலிய அஸுரர்களும் பூதனை முதலிய ஸ்த்ரீகளும், சாணூரன் முதலிய சூத்ரர்களும், ஜடாயு முதலிய பக்ஷிகளும், மாரீசன் முதலிய ம்ருகங்களும், மற்றும் பல பாபிஷ்ட ஜீவர்களும் பகவானுடைய ஸம்பந்தத்தினால் அவனுடைய ஸாரூப்யத்தை அடைந்தார்களல்லவா? பகவானிடத்தில் ப்ரயோஜனங்களை எதிர்பாராத பக்தி உண்டாகப் பெறுகையும், ஸமஸ்த பூதங்களையும் பகவத் ஸ்வரூபமாகப் பார்க்கையுமாகிற இவ்வளவே இவ்வுலகத்தில் புருஷர்களுக்கு மேலான புருஷார்த்தமாம் (விரும்பி அடையப்பட வேண்டியதாம்).
ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.