ஶ்ரீமத் பாகவதம் - 333

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தேழாவது அத்தியாயம்

(உத்தவர் கர்ம யோகத்தைப்பற்றி வினவுதலும், ஸ்ரீக்ருஷ்ண பகவான் அதை நிரூபித்துச் சொல்லுதலும்)

உத்தவர் சொல்லுகிறார்:- ப்ரபூ! உன்னுடைய ஆராதன (பூஜா) ரூபமான கர்மயோகத்தைச் சொல்வாயாக. புருஷ ச்ரேஷ்டனே (புருஷர்களில் சிறந்தவனே)! உன் பக்தர்கள் உன்னை எந்த உபகரணங்களால் (கருவிகளால்), எந்த அதிகரணங்களில், எந்தவிதமாக ஆராதிக்கிறார்களோ, அதையும் சொல்வாயாக. 

நாரதர், மஹானுபாவரான வ்யாஸர், என்னுடைய ஆசார்யராகிய ப்ருஹஸ்பதி இவர்களும், மற்றும் பல முனிவர்களும் விடாமல் அனுஷ்டித்துக் கொண்டு வருகிற இந்தக் கர்மயோகமே மோக்ஷ ஸாதனங்களில் சிறந்தது என்று சொல்லுகிறார்கள். மற்றும், மஹானுபாவனாகிய ப்ரஹ்மதேவன், உன்னுடைய முகார விந்தத்தினின்றும் வெளிவந்த இந்தக் கர்மயோகத்தைத் தான் கேட்டுத் தரித்து, ப்ருகு முதலிய தன் புதல்வர்களுக்கு உபதேசித்தான். மற்றும், மஹானுபாவனாகிய ருத்ரன், உன்னிடத்தினின்றும் கேட்ட இந்தக் கர்மயோகத்தைத் தன் பார்யையாகிய (மனைவியாகிய) பார்வதிக்கு மொழிந்தான். 

பற்றினார்க்கு வெகுமதி அளிப்பவனே! பற்றாதார்களுடைய அபிமானத்தை வேரோடு அறுப்பவனே! ஆகையால், ஸம்ப்ரதாய உபதேச அனுஷ்டான (வழிவழியாக உபதேசிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்த) பரம்பரைகளால் ப்ராப்தமான (கிடைக்கப்பெற்ற) உன்னுடைய இந்த ஆராதனமே (பூஜையே) ஸமஸ்த வர்ணங்களுக்கும், ஸமஸ்த ஆச்ரமங்களுக்கும், ஆயிரம் சொல்லியென்? ஸ்த்ரீ (பெண்கள்), சூத்ரர்களுக்கும் புருஷார்த்த ஸாதனங்களுக்குள் சிறந்ததென்று எனக்குத் தோற்றுகிறது. 

தாமரையிதழ் போன்ற கண்கள் உடையவனே! உன்னுடைய ஆராதன (பூஜா) ரூபமான இந்தக் கர்மயோகம், ஸம்ஸாரத்திற்குக் காரணமான புண்ய, பாப கர்மபந்தத்தை அடியோடு போக்கி விடும். இதை உன்னுடைய பக்தனும் நண்பனுமாகிய எனக்கு மொழிவாயாக. “இது ப்ரஹ்மாதிகளின் உபதேச பரம்பரையால் ப்ராப்தமாய் (கிடைக்கப்பெற்று) இருக்கின்றதே. என்னை ஏன் கேட்கிறாய்?” என்கிறாயோ? சொல்லுகிறேன். கேள். நீ ஜகதீச்வரர்களான (உலகை ஆளுபவர்களான) ப்ரஹ்மாதிகளுக்கும் ஈச்வரன். ஆகையால், நீயே ஸர்வஜ்ஞன் (எல்லாம் அறிந்தவன்). நீயே அதை எனக்கு மொழிவாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உத்தவரே! என்னுடைய ஆராதன (பூஜா) ரூபமான கர்மத்தை அறிவிக்கும் சாஸ்த்ரத்திற்குக் கரை (எல்லை) கிடையாது. ஆகையால், அந்த சாஸ்த்ரத்தை முழுவதும் அப்யஸிக்கவாவது (கற்பதாவது), அதில் சொன்ன கர்மயோகத்தை முழுவதும் அனுஷ்டிக்கவாவது (செயல்படுத்துவதாவது) முடியாது. ஆகையால், அதைச் சுருக்கி உள்ளபடி முறையே உமக்குச் சொல்லுகிறேன்; கேட்பீராக. 

உத்தவரே! என்னுடைய ஆராதனம் (பூஜா), வைதிகம் (வேதங்களில் சொல்லப்பட்டது) என்றும், தாந்த்ரிகம் (பாஞ்சராத்ர ஆகமங்களில் சொல்லப்பட்ட, முத்ரைகளுடன் – கை சைகைகளுடன் கூடியது) என்றும், மிச்ரம் (இரண்டும் கலந்தது) என்றும் (வைதிக-தாந்தரிகம் என்றும்) மூன்று வகைப்பட்டிருக்கும். (அவற்றில் தாந்திரிகமாவது, பாஞ்சராத்ர ஆகமங்களில் சொல்லப்பட்ட கர்மம். ஆனால், அது ஏகாயன சாகையைத் தொடர்ந்ததாகையால் பரம வைதிகமாயிருக்க அதைக் கேவல தாந்தரிகம் என்று எப்படி சொல்லலாமென்றால், இவ்விடத்தில் வைதிகம் என்கிறது த்ரயி (ரிக், யஜுர், சாம) என்று சொல்லப்படுகிற மூன்று வேதங்களில் ஏற்பட்ட கர்மத்தை மாத்ரமே ஆகையால் அதற்கு வெளியான பாஞ்சராத்ர கர்மத்தைத் தாந்திரிகம் என்பது விருத்தம் (முரணானது) அன்று என்று உணர்க.) இம்மூன்றில், அவரவர்க்கு இஷ்டமான ஏதேனும் ஒரு விதியினால் (முறையினால்) என்னை ஆராதிக்கலாம். 

புருஷன், கர்ப்ப அஷ்டமம் (கருவறையிலிருந்து எட்டாவது வருடம்), கர்ப்ப ஏகாதசம் (கருவறையிலிருந்து பதினோராவது வருடம்), கர்ப்ப த்வாதசம் (கருவறையிலிருந்து பன்னிரண்டாவது வருடம்) என்னும் காலங்களில் தந்தனக்கு ஏற்பட்ட வேதத்தில் சொல்லியபடி உபநயன ஸம்ஸ்காரஞ் செய்யப் பெற்று, அதனால் ப்ராஹ்மணத் தன்மையை அடைந்த பின்பு, என்னை ச்ரத்தையுடன் எப்படி ஆராதிக்க (பூஜிக்க) வேண்டுமோ, அவ்விதத்தைச் சொல்லுகிறேன்; கேட்டுணர்வீராக. 

புருஷன், ப்ரதிமை (பொம்மை), சக்ராப்ஜ மண்டலம் (சக்கரம்) முதலிய ஸ்தண்டிலம் (தரையில் எழுதிய வடிவம்), அக்னி, ஸூர்யன், ஜலம், ஹ்ருதயம், ப்ராஹ்மணன் ஆகிய இவற்றுள் ஏதேனும் ஓரிடத்தில் தன் குருவாகிய என்னைக் கபடமின்றி (சூது, ஏமாற்று இன்றி)  பக்தியுடன் புஷ்பம், சந்தனம் முதலிய த்ரவ்யங்களால் ஆராதிக்க வேண்டும். ஆராதிக்க முயன்றவன், முதலில் தந்த தாவனம் செய்து (பல் துலக்கி), சரீர சுத்திக்காக ஸ்னானம் செய்ய வேண்டும். மீளவும், மண், கோமயம் (பசுவின் சாணம்) முதலியவற்றை உடம்பில் பூசி, வைதிகங்களும், தாந்திரிகங்களுமான இருவகை வருண மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு, ஸ்னானம் செய்ய வேண்டும்.

நான் வேதத்தின் மூலமாய் நியமித்திருக்கிற ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும். பிறகு, ஒரு பலனையும் எதிர்பாராத சுத்த ஸங்கல்பமுடையவனாகி, மோக்ஷ விரோதியான (மோட்சம் அடைவதற்கு எதிரான) கர்மங்கள் (புண்ய, பாபங்கள்) எல்லாம் தீரும்படியான என்னுடைய ஆராதனத்தை நடத்த வேண்டும். சிலை, தாரு (மரம்), பொன், வெள்ளி, செம்பு முதலிய லோஹம், மண், சந்தனம் முதலிய லேபன (பூசும்) த்ரவ்யம், மணல், ரத்னம் இவைகளால் செய்யப்பட்டதும் சித்ரத்தில் எழுதப்பட்டதும் ஹ்ருதய ஆராதனத்தில் மனோமயமுமாகி (மனதிற்குள் இருப்பது) ப்ரதிமை (பொம்மை, உருவச்சிலை) எட்டு விதமாயிருக்கும். மற்றும், பகவானுக்கு வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) அந்த ப்ரதிமை, சலையென்றும் அசலையென்றும் இருவகைப்பட்டிருக்கும். அது மந்த்ர ந்யாஸாதிரூபமான ப்ரதிஷ்டையினால் (அதற்குரிய மந்த்ரங்களின் மூலம் பகவானை அங்கு நிலைப்படுத்துவதால்) பகவானுக்கு வாஸஸ்தானமாகின்றது. 

  1. சலையாவது, அவ்வப்பொழுது ஆராதனத்திற்காக ஏற்படுத்திக் கொள்ளும் ப்ரதிமையாம்.

  2. அசலையாவது நிலையான ஆராதனத்திற்காக ஏற்படுத்திக் கொள்ளும் ப்ரதிமையாம். 

உத்தவரே! அசல ப்ரதிமையில் பகவானை ஆராதிக்கும் பொழுது, ஆவாஹன (பகவானை அழைத்து இருக்கச் செய்தல்), விஸர்ஜனங்கள் (அனுப்புதல், விடை கொடுத்தல்) கிடையாது. சல ப்ரதிமையில் ஆவாஹன விஸர்ஜனங்கள் செய்யவும் செய்யலாம்; செய்யாமலும் இருக்கலாம். (ஒருவன் வெளியில் சென்று, நான்கு நாள் தங்கி, அங்கு ஆராதனத்திற்காக ஏதேனும் ஒரு ப்ரதிமையை ஏற்படுத்திக் கொள்வானாயின், அதில் அவ்வப்பொழுது ஆவாஹன- விஸர்ஜனங்கள் செய்தாலும் செய்யலாம். அல்லது, முதலில் ஆவாஹனம் செய்து, அவ்வளவோடு மற்ற நாட்களும் ஆராதனத்தை முடித்து, கடைசியில் விஸர்ஜனம் செய்து விடலாம்.

நித்ய (தினப்படி) ஆராதனத்திற்காக (பூஜைக்காக) ஏற்பட்ட ஸ்திர ப்ரதிமையில் (நிலையான உருவச்சிலையில்) தினந்தோறும் ஆவாஹனம் செய்ய வேண்டியதில்லை. ஆவாஹனம் இல்லாமையால் விஸர்ஜனத்திற்கு ப்ரஸக்தியே இல்லை). ஸ்தண்டிலத்தில் (தரையில் எழுதிய வடிவத்தில்) ஆவாஹன- விஸர்ஜனங்களிரண்டும் அவ்வப்பொழுது பண்ணியே ஆகவேண்டும். சந்தனம் முதலிய பூச்சுக்களால் செய்ததும், சித்ரத்தில் எழுதினதும், மணலால் செய்ததும், ஆகிய இம்மூன்று ப்ரதிமைகள் தவிர, மற்ற ப்ரதிமைகளில் தான் பகவானுக்கு ஸ்னானம் செய்விக்கலாம். மற்ற ப்ரதிமைகளில் ஜலத்தை ஸ்பர்சித்து (தொட்டு), ஸ்னானம் செய்விப்பதாக அபிநயமாத்ரம் (சைகை) செய்யலாமன்றி, நேரே ஸ்னானம் செய்விக்கலாகாது.

ஒரு பலனை உத்தேசித்து ஆராதிக்கிறவன், ஆராதனத்தை விதிக்கிற சாஸ்த்ரங்களில் ப்ரஸித்தங்களான எல்லா த்ரவ்யங்களையும் கொண்டே என்னை ஆராதிக்க வேண்டும். பல அபிஸந்தி (பலத்தில் விருப்பம்) இல்லாத என் பக்தன் எவ்வளவு கிடைக்குமோ, அவ்வளவைக் கொண்டே என்னை ஆராதிக்கலாம். கிடைக்காத வஸ்துக்களை மனத்தினால் ஸங்கல்பித்து, ஸமர்ப்பிக்கலாம். ஹ்ருதயத்தில் ஆராதிக்கும் பொழுது, உபசாரங்களை (மரியாதையுடன் செய்யும் பணிவிடைகள், அளிக்கப்படும் பொருட்கள்) எல்லாம் மானஸீகமாக (மனதால்) ஸமர்ப்பிக்க வேண்டும். ப்ரதிமையில் ஆராதிக்கும் பொழுது, ஸ்னானமும், அலங்காரமும், எனக்கு மிகவும் ப்ரியமாய் இருக்கும். ஆகையால், அவ்விரண்டு உபசாரங்களையும், அவச்யம் செய்யவேண்டும். 

ஸ்தண்டிலத்தில் (தரையில் எழுதிய வடிவத்தில்) ஆராதிக்கும் பொழுது, தத்வ ந்யாஸஞ் செய்ய வேண்டும். (தத்வந்யாஸமாவது, அந்தந்த ஸ்தானங்களில் அங்க தேவதைகளையும், ப்ரதான தேவதைகளையும் ந்யாஸம் செய்தல். அல்லது ககரம் முதல் மகரம் வரையிலுள்ள அக்ஷரங்களால் அறிவிக்கப்படும் இருபத்தைந்து தத்வங்களையும், அந்தந்த அக்ஷரங்களை உச்சரித்துக்கொண்டு ந்யாஸஞ் செய்கை) ஸ்தண்டில ஆராதனத்தில் இவ்வாறு ந்யாஸம் செய்வது எனக்கு மிகவும் ப்ரியமாயிருக்கும். அக்னியில் ஆராதிக்கும் பொழுது, நெய்யில் நனைந்த ஹவிஸ்ஸை (ஹோமத்தில் அக்னியில்  கொடுக்கப்படும் நெய்யுடன் சேர்ந்த அன்னம்) ஹோமம் செய்வது எனக்கு மிகவும் ப்ரியமாயிருக்கும். ஸூர்ய மண்டலத்தில் என்னை ஆராதிக்கும் பொழுது, ஸ்தோத்ரங்களால் ஆராதிப்பது மிகவும் சிறந்ததாம். ஜலத்தில் ஆராதிக்கும் பொழுது, ஜலம் முதலியவைகளால் ஆராதிக்க வேண்டும். 

பக்தியுடையவன் ச்ரத்தையுடன் எனக்கு ஜலத்தை ஸமர்ப்பிக்கினும், அது எனக்கு மிகவும் ப்ரியமாயிருக்கும். அவன், சந்தனம், தூபம், புஷ்பம், தீபம், அன்னம், மற்றுமுள்ள பக்ஷ்யம் (கடித்து உண்ணும் பொருட்கள்), தாம்பூலம் முதலியவை ஆகிய இவைகளில் ஏதேனுமொன்றை ஸமர்ப்பிப்பானாயின், அது எனக்கு மிகவும் ப்ரியமாயிருக்கும் என்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? 

என்னிடத்தில் பக்தியில்லாதவன், பற்பல உபசாரங்கள் (பணிவிடைகள், அளிக்கப்படும் பொருட்கள்) செய்யினும், அவை எனக்கு ஸந்தோஷத்தின் பொருட்டு ஆகமாட்டாது. ஸ்னானாதி நித்ய கர்மங்களை முடித்துப் பரிசுத்தனாகி, ஆராதனத்திற்கு வேண்டிய உபகரணங்களை எல்லாம் ஸித்தப்படுத்திக் கொண்டு, கிழக்கு நுனியாக தர்ப்பங்களைப் பரப்பி, ஆஸனம் கல்பித்து, கிழக்கு முகமாகவாவது, வடக்கு முகமாகவாவது, அல்லது ப்ரதிமைக்கு எதிர் முகமாகவாவது உட்கார்ந்து (அடிக்கடி எழுந்திராமல்) ஆராதிக்க வேண்டும். 

முதலில், ஆராதகன் (பூஜை செய்பவன்) தன்னுடைய அங்கங்களில் மாத்ருகா (மூல எழுத்து), ப்ரணவ மூலமந்தரங்களால் ந்யாஸம் செய்து கொண்டு, அவ்வாறே ந்யாஸம் செய்யப் பெற்ற என் ப்ரதிமையைக் கையினால் துடைக்க வேண்டும். ப்ரோக்ஷண கலசத்தை விதிப்படி தனது இடப்பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த ப்ரோக்ஷண கலசத்திலுள்ள ஜலத்தினால், யாக பூமியையும், பூஜா த்ரவ்யங்களையும் தன்னுடைய தேஹத்தையும் பாத்யம் முதலிய மூன்று பாத்ரங்களையும் ப்ரோக்ஷித்து, அந்தந்த பாத்ரங்களுக்கு ஏற்பட்ட துளஸி, அருகன் முளை முதலிய அந்தந்த வஸ்துக்களைச் சேர்த்து, அவற்றால் ப்ரதிமையில் (உருவச்சிலையில்) ஸந்நிதானம் செய்திருக்கிற (இருக்கின்ற) என்னை ஆராதிக்க வேண்டும். 

ஆராதனம் செய்கிறவன், பாத்யத்திற்காகவும், அர்க்யத்திற்காகவும், ஆசமனீயத்திற்காகவும் ஏற்பட்ட மூன்று பாத்ரங்களையும், ஹ்ருதய மந்த்ரம், பரோமந்த்ரம், சிகாமந்த்ரம் இவைகளாலும் ஸ்ரீவிஷ்ணு காயத்ரியாலும், அபிமந்த்ரணம் செய்யவேண்டும். சரீரத்தை (உடலை) வாயு, அக்னி, ஜலம் இவைகளால் சோஷண (உலர்த்துவது), தாஹன (எரிப்பது), ப்லாவனங்கள் (குளிர்விப்பது) செய்து சோதித்து, அச்சரீரத்தில் ஹ்ருதய கமலத்திலிருப்பதும், என்னுடைய அம்சமும், தேஹ (உடல்), இந்த்ரியாதிகளைக் (புலன்கள்) காட்டிலும் விலக்ஷணமாய் (வேறாய்) இருப்பதும், அணுஸ்வரூபமும் (மிகச்சிறிய வடிவு), நாதமென்று கூறப்படுகிற ப்ரணவத்தின் கடைசி அக்ஷரமான மகாரத்தில் யோகஸித்தர்களால் அதற்குப் பொருளாக பாவிக்கப்படுவதும், ஜ்ஞானமயமுமாகிய ஜீவ ஸ்வரூபத்தை த்யானிக்க வேண்டும். 

தீபத்தின் ஒளியால் க்ருஹம் முழுவதும் வியாபிக்கப்பட்டிருப்பது போல், அந்த ஆத்ம ஸ்வரூபத்தின் தர்மமான ஜ்ஞானத்தினால் சரீரம் முழுவதும் வியாபிக்கப்பட்டிருப்பதாக த்யானித்து இவ்வாறு ஸம்ஸ்காரம் செய்யப் பெற்ற சரீரத்தின் ஹ்ருதய பத்மத்தில் (இருதய தாமரையில்) என்னை மானஸ (மனதால் செய்யும்) உபசாரங்களால் (பணிவிடைகளால்) ஆராதித்து, அதனால் என்னிடத்தில் நிலைநின்ற மனமுடையவனாகி, ப்ரதிமை முதலிய இடங்களில் என்னை ஆவாஹனம் செய்து ஸ்தாபித்து, அங்க ந்யாஸாதிகள் செய்து ஆராதிக்க வேண்டும். 

தர்மம், ஜ்ஞானம், வைராக்யம், ஐச்வர்யம், அதர்மம், அஜ்ஞானம், அவைராக்யம், அனைச்வர்யம் என்னும் இவ்வெட்டுகளை எட்டுக் கால்களாகவுடைய பீடத்தில் விமலை, உத்கர்ஷிணி, ஜ்ஞானை, க்ரியை, போகை, ஹ்ரஸ்வை, ஸத்யை, ஈசரனை, அனுக்ரஹை என்னும் ஒன்பது மூர்த்திகளோடு கூடியதும், இடையில் கர்ணிகையும், அதைச் சுற்றிக் கேஸரங்களும், அதைச் சுற்றி எட்டு தளங்களும் அமைந்த பத்மத்தை (தாமரையை) எனக்கு ஆஸனமாகக் கற்பித்து, ஸ்வர்க்கம், அபவர்க்கம் (மோட்சம்) ஆகிய இரண்டு பலன்களும் ஸித்திக்கும் பொருட்டு, வேதமந்திரங்களாலும் பாஞ்சராத்ர தந்த்ர மந்த்ரங்களாலும், பாத்யம், ஆசமனீயம், அர்க்யம் முதலிய உபசாரங்களைச் செய்யவேண்டும். 

அனந்தரம் ஸுதர்சனம் என்னும் சக்ரம், பாஞ்சஜன்யமென்னும் சங்கம், கௌமோதகியென்னும் கதை, நந்தகமென்னும் கத்தி, பாணம், சார்ங்கமென்னும் தனுஸ்ஸு, கலப்பை, உலக்கை இவைகளையும் கௌஸ்துப மணி, வனமாலை, ஸ்ரீவத்ஸம் இவைகளையும் ஆராதிக்க வேண்டும். அனந்தரம், நந்தன், ஸுந்தன், கருடன், ப்ரசண்டன், சண்டன், மஹாபலன், குமுதன், குமுதேக்ஷணன் இவர்களையும், துர்க்கை, விநாயகன், வ்யாஸர், விஷ்வக்ஸேனர் இவர்களையும், ஆசார்யர்களையும், இந்திரன் முதலிய தேவதைகளையும், அவரவர்க்கு ஏற்பட்ட இடங்களில் எனக்கு எதிர்முகமாயிருப்பதாகப் பாவித்து, ப்ரோக்ஷணம் முதலிய உபசாரங்களால் ஆராதிக்கவேண்டும். (ஸுதர்சனாதி ஆயுதங்களைக் கிழக்கு முதலிய எட்டுத் திசைகளிலும் , கௌஸ்துபம், வனமாலை, ஸ்ரீவத்ஸம் இவைகளைத் திருமார்பிலும், நந்தாதிகளை எட்டுத் திசைகளிலும், கருடனை எதிரிலும், துர்க்காதிகளைக் கோணங்களிலும், ஆசார்யர்களைப் பகவானுடைய வலப்பக்கத்திலும், இந்த்ராதி தேவதைகளைக் கிழக்கு முதலிய எட்டுத்திசைகளிலும் ஆராதிக்க வேண்டும்). 

(துர்க்கை, பகவானுடைய மாயைக்கு (ஆச்சர்ய சக்திக்கு) அபிமானி தேவதையாகையாலும், வினாயகன் விஷ்வக்ஸேனருடைய பாரிஷதன் (பணியாள்) ஆகையாலும் , வ்யாஸர் வேதங்களைச் சாகை சாகையாகப் பிரித்து அவற்றை வெளிப்படுத்தினாரென்கிற உபகார ஸ்ம்ருதியாலும் (பேருதவியை நினைவுகூர்வதாலும்), தேவதைகள் பகவானுடைய விபூதியாகையாலும், பரிவாரங்களில் சேர்த்து அவர்களைப் பூஜிக்கும்படி விதிக்கிறது). 

பிறகு, சந்தனம், வெட்டிவேர், கற்பூரம், குங்குமம், அகில் இவைகளின் வாஸனை இடப்பெற்ற ஜலங்களால் மந்த்ரங்களைப் படித்துக் கொண்டு ஸ்னானம் செய்விக்க வேண்டும். விபவம் (வசதி) உளதாயின், இவ்வாறே தினந்தோறும் ஸ்னானம் செய்விக்க வேண்டும். இல்லையாயின், கிடைத்தவளவு நடத்த வேண்டும். ஸ்னான ஸமயத்தில், ஸ்வர்ண- கர்மானுவாகத்தையும், (ஸ்வர்ணகர்மானுவாகமாவது ஸுவர்ண வயர்மம், பரிவேஷவேநம் என்னும் இது முதலிய அனுவாகம்.) ஜிதந்தை என்கிற மஹாபுருஷ வித்யையும், புருஷ ஸூக்தத்தையும், ஸாம ஸ்வரம் ஏறிப் பெற்ற நீராஜன மந்த்ரங்களையும், மற்றும் ரௌஹிணாதி மந்த்ரங்களையும் படிக்க வேண்டும். 

வஸ்த்ரம், யஜ்ஞோபவீதம், ஆபரணம், துளஸி தளம், பூமாலை, சந்தனம், குங்குமம், கஸ்தூரி முதலிய பூச்சுக்கள் இவைகளால் என்னிடத்தில் பக்தியுடையவன் என்னை ப்ரீதியுடன் உரியபடி அலங்கரிக்க வேண்டும். அனந்தரம், அர்ச்சகன் எனக்கு ச்ரத்தையுடன் பாத்யம், ஆசமனீயம் இவைகளைக் கொடுத்து, சந்தனம், புஷ்பம், அக்ஷதை, தூபம், தீபம் இவைகளையும் நைவேத்யத்தையும் ஸமர்ப்பிக்க வேண்டும். விபவம் (வசதி) உளதாயின், வெல்லம், பாயஸம், நெய், முருக்கு, வடை, அப்பம், குழக்கட்டை, கோதுமையப்பம், தயிர், பருப்பு இவை முதலியவற்றை நிவேதனம் செய்யவேண்டும். ஏகாதசி முதலிய பர்வகாலத்தில் எண்ணெய் தேய்த்தல், உடம்பைப் பிடித்தல், கண்ணாடி காண்பித்தல், தந்ததாவனம் (பல் துலக்குதல்) செய்வித்தல், பஞ்சாம்ருதங்களால் ஸ்னானஞ் செய்வித்தல், அன்னம் முதலியவற்றை நிவேதனம்  செய்தல், பாட்டு, கூத்து நடப்பித்தல், செய்யவேண்டும். விபவம் உளதாயின், இவையெல்லாம் தினந்தோறும் நடத்த வேண்டும். (இனி அக்னியில் பூஜிக்கும் விதத்தைச் சொல்லுகிறேன்). 

தந்திரங்களில் சொல்லிய விதியின் படி உயரமும், அகலமும் ஒத்திருக்கிற நான்கு அங்குலமுள்ள மூன்று மேகலைகளும், ஒரு முழம் ஆழமுள்ள பள்ளமும் அருகில் திண்ணையும் அமைக்கப் பெற்ற ஹோம குண்டத்தில் அக்னியைச் சேர்த்துப் பற்றவைத்து, நாற்புறத்திலும் சிதறி எரிகின்ற அவ்வக்னியைக் கையால் ஒன்று சேர்க்க வேண்டும். பிறகு அவ்வக்னி குண்டத்திற்கு நாற்புறத்திலும் தர்ப்பங்களைச் சேர்த்து, ஜலத்தினால் வளையக் கட்ட வேண்டும். அனந்தரம் விதிப்படி அக்னியில் ஸமித்துக்களைச் சேர்ப்பது முதலான அன்வாதரனம் என்னும் கர்மத்தை முடித்து, ஆஜ்ய ஸ்தாலி முதலிய உபகரணங்களை அக்னிக்கு வடபாகத்தில் வைத்து, ப்ரோக்ஷண பாத்ரத்திலுள்ள ஜலத்தினால் ப்ரோக்ஷித்து, அக்னியில் என்னை த்யானிக்க வேண்டும்.

உருக்கி அழுக்கெடுத்த பொன்னின் வர்ணமுடையவனும், சங்கு, சக்ரம், கதை, தாமரைமலர் இவைகளால் திகழ்கின்ற நான்கு புஜங்களுடையவனும், உக்ரமாய் (பயங்கரமாய்) இராமல் சாந்த ஸ்வரூபனும், தாமரைத்தாது போன்ற பீதாம்பரம் தரித்தவனும், கிரீடம், கைவளை, அரைநாண்மாலை, மேன்மையுள்ள தோள்வளை முதலிய திருவாபரணங்கள் விளங்கப் பெற்றவனும், திருமார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் திருமறுவும், கௌஸ்துப மணியும், வனமாலையும் அமைந்து விளங்குகின்ற என்னை அக்னியில் த்யானித்துக் கொண்டே எனக்கு அர்க்யம், பாத்யம் முதலிய உபசாரங்கள் ஸமர்ப்பித்துப் பூஜித்து, ஸமித்துக்களையும், நெய்யில் நனைத்த ஹவிஸ்ஸுக்களையும் அக்னியில் சேர்த்து, ஆகாரமென்னும் இரண்டு ஆஜ்ய (நெய்)  ஹோமங்களைச் செய்து, கடைசியில் ஸ்வாஹா சப்தம் சேர்க்கப் பெற்ற திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தினாலும், புருஷ ஸூக்தத்தினுடைய பதினாறு ருக்குக்களாலும், தனித்தனியே நெய்யில் நனைந்த ஹவிஸ்ஸை எடுத்து ஹோமம் செய்யவேண்டும். 

பிறகு, விதிப்படி தர்மம் முதலிய அங்க தேவதைகளுக்கும், ஆவரண தேவதைகளுக்கும், அஸ்த்ரங்களுக்கும், பூஷணங்களுக்கும், பாரிஷதர்களுக்கும் (சேவகர்கள்), அந்தந்த நாம மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்யவேண்டும். அப்பால், ஸ்விஷ்டக்ருத்து ஹோமம் செய்யவேண்டும். பிறகு, அக்னியில் ஆவாஹனம் செய்த பகவானைப் பூஜித்து, நமஸ்கரித்து, நந்தன் முதலிய பாரிஷதர்களுக்கு எட்டுத்திசைகளிலும் பலி கொடுக்க வேண்டும். நாராயணனான என்னை நிரூபித்துச் சொல்லுகிறதாகையால் நாராயண ஸ்வரூபமான பெருமையுள்ள மூல மந்த்ரத்தை என்னை த்யானித்துக் கொண்டே ஜபிக்க வேண்டும். பிறகு விஷ்வக்ஸேனருக்கு ஆசமனீயம் ஸமர்ப்பித்து, பகவானுக்கு அமுது செய்யப் பண்ணின ப்ரஸாதத்தில் மிகுந்த பாகத்தை ஸமர்ப்பிவிக்க வேண்டும்.

அனந்தரம், பச்சைக்கற்பூரம் முதலிய வாஸனைகள் சேர்க்கப் பெற்ற தாம்பூலம் முதலிய முகவாஸங்கள் (வாசனைப் பொருட்கள்) ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு புஷ்பாஞ்சலியால் பூஜிக்க வேண்டும். பிறகு, மனவூக்கத்துடன் என்னுடைய செயல்களைப் பாடுவதும், சொல்லுவதும், நர்த்தனம் செய்வதும், அபிநயிப்பதும், என் கதைகளைப் பிறர்க்குக் கேட்பிப்பதும், பிறரைச் சொல்லவிட்டுத் தான் கேட்பதுமாகி, ஒரு முஹூர்த்த காலம் இப்படி மஹோத்ஸவமாய்ப் பொழுது போக்க வேண்டும். 

நானாவிதமான வைதிக ஸ்தோத்ரங்களாலும், புராண ஸ்தோத்ரங்களாலும், தமிழ் முதலிய ப்ராக்ருத பாஷா ஸ்தோத்ரங்களாலும் என்னைத் துதித்து “பகவானே! அருள்புரிவாயாக” என்று மொழிந்து கொண்டு, தண்டம் போல் ஸாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும். சிரஸ்ஸை எனது பாதங்களில் சாய்த்து, வலக்கையினால் எனது வலப்பாதத்தையும், இடக்கையினால் இடப்பாதத்தையும் பிடித்துக்கொண்டு, (அவ்வாறு பாவித்து) ம்ருத்யு (மரணம்) போலும், பிசாசம் போலும், கடக்கமுடியாமல் பயங்கரமாயிருக்கின்ற ஸம்ஸாரத்தினின்று பயந்து, உன் திருவடிகளைச் சரணம் அடைந்த என்னை, ஜகதீசனே! காத்தருள்வாயாக என்று மொழியவேண்டும். 

பிறகு நான் கொடுத்த பாவனையாக எனக்குச் சாற்றின துளஸி முதலியவற்றை ப்ரஸாதமாக எடுத்துக் கொண்டு, பெரிய ஆதரத்துடன் சென்னியில் (தலையில்) சூடி, உத்வாஸனம் (எடுத்து வேறிடத்தில் வைத்தல்) செய்ய வேண்டியதாய் இருக்குமாயின், ஆவாஹனம் செய்யப்பட்ட பரஞ்சோதியாகிய என்னை அந்தராத்மாவின் இடத்தில் உத்வாஸனம் செய்யவேண்டும். 

அர்ச்சை முதலிய இடங்களில் எதில் ச்ரத்தை (ஈடுபாடு) உண்டாகிறதோ, அவ்வவ்விடங்களில் என்னை ஆராதிக்க வேண்டும். “எல்லாவற்றையும் சரீரமாகவுடைய நான், ஸமஸ்த பூதங்களிலும், தன்னிடத்திலும் உட்புகுந்து தரித்துக்கொண்டிருக்கிறேன்” என்று இவ்வாறு பாவிக்க வேண்டும். புருஷன் வேதங்களிலும், பாஞ்சராத்ர தந்த்ரங்களிலும் சொல்லப்பட்ட கர்ம யோக மார்க்கங்களால் இவ்வாறு என்னை ஆராதிப்பானாயின், இஹ (இந்த) லோக, பர  (வேறு) லோகங்கள் இரண்டிலும் தனக்கிஷ்டமான பலனை என்னிடத்தினின்றும் பெறுவான். 

சக்தியுள்ளவன், என்னுடைய ப்ரதிமையை ப்ரதிஷ்டிப்பித்து, திடமான கோவிலைக் கட்டுவிக்க வேண்டும். மற்றும், அழகிய பூந்தோட்டங்களையும் ஏற்படுத்த வேண்டும். நித்ய பூஜைகளும், மஹாபர்வோத்ஸங்களும், யாத்ரோத்ஸவங்களும், வஸந்தாதி மஹோத்ஸவங்களும், குறைவற நீடித்து நடக்குமாறு க்ஷேத்ரங்களையும், கடைகளையும், பட்டணங்களையும், க்ராமங்களையும், எனக்காவது, என்னை ஆதரிக்கிறவர்களுக்காவது, தானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்வானாயின், என்னோடு ஒத்த ஐச்வர்யத்தை அடைவான்.

என்னுடைய ப்ரதிமையை ப்ரதிஷ்டிப்பானாயின், ஸமஸ்த பூமண்டலத்திற்கும் ப்ரபுவாயிருக்கும் தன்மையைப் பெறுவான். எனக்குக் கோவில் கட்டுவிப்பானாயின், மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவாயிருக்கும் பதவியைப் பெறுவான். எனக்குக் குறைவறப் பூஜாதிகளை நடத்துவானாயின், ப்ரஹ்ம லோகத்தைப் பெறுவான். இம்மூன்றையும் ஒருவன் நடத்துவானாயின், அவன் என்னுடைய ஸாரூப்யத்தைப் (ஒத்த உருவத்தைப்) பெறுவான். 

பல அபிஸந்தி (பலனில் விருப்பம்) இல்லாமல் எவன் இவ்வாறு என்னைப் பூஜிக்கிறானோ, அவன் என்னிடத்தில் பக்தி யோகம் உண்டாகப் பெறுவான். அவன், அந்தப் பக்தியோகத்தினால் கடைசியில் என்னையே பெறுவான். தேவதைகளுக்காவது, ப்ராஹ்மணர்களுக்காவது, தானாவது, பிறராவது கொடுத்த வ்ருத்தியை (சொத்தை) எவன் பறிக்கிறானோ, அவன் பற்பல பதினாயிர வர்ஷங்கள் அமேத்யத்தில் (மலத்தில்) பிறந்து, அமேத்யத்தையே புசிக்கும் க்ரிமியாய்ப் (புழுவாய்) பிறப்பான். 

செய்கிறவனுக்கும், உதவியாயிருப்பவனுக்கும், தூண்டுகிறவனுக்கும் நன்று செய்தானென்று அனுமோதனம் செய்கிறவனுக்கும் (ஆமோதிப்பவனுக்கும்), தான பலனும், அதைப் பறிக்கும் பலனும் துல்யமாகவே (சமமாகவே) விளையும். ஏனென்றால், தான கர்மத்திலும், அதைப் பறிக்கும் கர்மத்திலும், அவர்களெல்லோரும் பாகஸ்தர்களே (பக்கு உள்ளவர்களே) அல்லவா? ஆகையால், அவற்றின் பலத்திலும் பாகஸ்தர்களே ஆவார்கள். அந்த தானபலனும், அபஹார (பறிக்கும்) பலனும், பரலோகத்தில் மேன்மேலும் வளர்ந்துவரும். தானம் செய்தவர்களும், அதற்கு உதவினர்களும், ஸ்வர்க்காதி புண்ய லோகங்களில் சென்று, நெடுங்காலம் ஸுகித்திருப்பார்கள். அதை அபஹரித்தவர்களும், அதற்கு உதவினவர்களும், நரகங்களில் சென்று, நெடுங்காலம் துக்கங்களை அனுபவிப்பார்கள். 

இருபத்தேழாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை