வியாழன், 26 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 332

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தாறாவது அத்தியாயம்

(துஷ்ட (கெட்டவர்கள்) ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்) யோக நிஷ்டைக்கு விக்னம் (இடையூறு) வருமென்றும், சிஷ்ட (நல்லவர்கள்) ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்), அந்த யோக நிஷ்ட்டை வளர்ந்து வருமென்றும் நிரூபித்துக் கொண்டு, ஸங்கத்தினால் (தொடர்பினால்) யோக ப்ரஷ்டனாவான் (நழுவுவான்) என்பதற்கு உதாஹரணமாக ஐல வ்ருத்தாந்தத்தைக் (சரித்ரத்தைக்) கூறுதல்.) 

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- என்னைக் காண்பதற்குக் காரணமாகிய இம்மனுஷ்ய தேஹத்தைப் பெற்று, ப்ரவ்ருத்தி தர்மத்தை (உலக விஷயங்களில் ஈடுபடும் பாதையைத்) துறந்து, என்னுடைய ஆராதன ரூபமான நிவ்ருத்தி தர்மத்தை (உலக விஷயங்களிலிருந்து விலகும் பாதையை) அனுஷ்டித்துக் கொண்டு வருவானாயின், ஆநந்த மயனாகையால் நிரதிசய (சிறந்த) புருஷார்த்த ஸ்வரூபனும் (விரும்பி அடையப்பட வேண்டியவனும்), ஆத்மாவுக்கும் அந்தராத்மாவாகையால் பரமாத்மாவென்று ப்ரஸித்தி பெற்றவனுமாகிய என்னைப் பெறுவான். 

ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை ஆராய்ந்தறிகையாகிற ஜ்ஞான (அறிவு) நிஷ்ட்டையில் (ஊன்றி இருப்பதில்) இழிந்தவன், தேவாதி (தேவன், மனிதன், விலங்கு, தாவரம் என்கிற) தேஹங்களுக்கு (உடல்களுக்குக்) காரணமாயிருப்பதும், ஸத்வாதி குணங்களையே வடிவாக உடையதுமான ப்ரக்ருதியை (மூலப்ரக்ருதி மற்றும் அதன் மாறுபாடுகளை) விடுபட்டிருப்பானன்றி, அதற்கு உட்பட மாட்டான். (தேவ, மனுஷ்யாதி தேஹங்களிலிருப்பினும், அவற்றில் அஹங்கார ( நான்), மமகாரங்கள் (எனது) அற்றிருப்பான்) அத்தகையன், ப்ரக்ருதியின் கார்யமான சப்தாதி விஷயங்களை அனுபவிப்பினும், தேஹானுபந்தி (உடலோடு தொடர்புடைய) வஸ்துக்களில் என்னுடையவை என்னும் அபிமானம் (எண்ணம்) உண்டாகப் பெறினும், அவ்வஸ்துக்களாலாவது, அவ்விஷயங்களாலாவது, பந்தத்தை அடைய மாட்டான் (கட்டுப்பட மாட்டான்). (இத்தகையன் ஜீவதசையில் சப்தாதி விஷயங்களை அனுபவிப்பினும், அபிநிவேசம் (தீவிர ஈடுபாடு) உண்டாகப் பெறமாட்டானாகையால், அவை அவனுக்கு பந்தகங்களாக மாட்டாது.) 

சிச்னம் (விந்து), உதரம் (வயிறு) இவற்றின் ஸுகங்களையே விரும்பும் தன்மையர்களான அஸத் (அறிவற்ற) புருஷர்களோடு ஒருகாலும் ஸஹவாஸம் (தொடர்பு) செய்யலாகாது. அத்தன்மையுள்ள ஒருவனோடு ஸஹவாஸம் (தொடர்பு) செய்யினும், குருடனைத் தொடர்ந்து செல்கிற குருடன் பள்ளத்தில் விழுவதுபோல், நரகத்தில் விழுவான். ஆகையால் அத்தகையர்களுடைய ஸஹவாஸத்தைத் துறந்து, பகவத் தர்மத்தில் இழிந்து, மோக்ஷத்தை அடைய வேண்டும். 

பெரும் புகழுடைய ஐலன் என்னும் புரூரவ மன்னவன் ஊர்வசியால் இழுக்கப்பட்ட மதியுடையவனாகி, அவளுடன் கலந்திருக்கையில், பல வர்ஷங்களின் ராத்ரிகள் கடந்ததையும், மேல் வரப்போகிற பல ராத்ரிகளையும் அறியாமல், அற்பமான (மட்டமான) விஷயங்களையே அனுபவித்தும், அவற்றில் திருப்தி உண்டாகப் பெறாமல், மேன்மேலும் அவ்விஷயங்களையே அனுபவித்துக் கொண்டிருந்தான். இப்படியிருந்த அந்த ஐல மன்னன், ஒருகால் அவ்வூர்வசி தன்னைத் துறந்து போகையில், அவளைப் பிரிந்திருக்க முடியாமையால், பித்தம் பிடித்தவன் போன்று அரையில் ஆடையுமின்றி, “அடி! என் இன்பநாயகி! நில் நில் போகாதே” என்று புலம்பிக் கொண்டு, தழதழத்து, அவளைப் பின் தொடர்ந்து சென்றான். 

பிறகு, குரு க்ஷேத்ரத்தில் அவளுடைய ஸமாகமம் (சேர்த்தி) பெற்று, கந்தர்வன் கொடுத்த அக்னியினால் யாகம் செய்து, மீளவும் ஊர்வசி லோகம் சென்று, வெகுகாலம் அவளோடு ஸம்போகித்திருந்தான் (சேர்ந்து இன்புற்றிருந்தான்). பிறகு அவளைப் பிரிந்த சோகம் தீருகையில், விஷயங்கள் அனர்த்த (கெடுதலுக்கு) ஹேதுக்கள் (காரணம்) என்னும் ஆலோசனை உண்டாகி, அதனால் அவற்றில் வெறுப்புற்று, தனக்குள் மேல் வருமாறு மொழிந்து கொண்டான்.

ஐலன் சொல்லுகிறான்:- ஆ! என்னுடைய மோஹத்தின் (மயக்கத்தின்) பரப்பை என்னென்று சொல்லுவேன்? ஏனென்றால், நான் தேவ ஸ்த்ரீயாகிய (பெண்ணாகிய) ஊர்வசியால் கண்டாலிங்கனம் செய்யப் பெற்று (தழுவப் பெற்றுக்) காமத்தினால் மனம் கலங்கி, எனது ஆயுஸ்ஸின் (வாழ்நாளின்) கண்டங்கள் போன்ற பற்பல அஹோராத்ரங்கள் (பகல், இரவுகள் – நாட்கள்) இவ்வாறு கடந்ததையும் அறியாதிருக்கின்றேன். நான் இந்த ஊர்வசியால் விவேகம் பறியுண்டு, “இப்பொழுது ஸூர்யன் அஸ்தமித்தான்” என்றாவது, “இப்போழுது ஸூர்யன் உதயமானான்” என்றாவது ஒன்றையும் அறிந்திலேன். மற்றும், பற்பல வர்ஷங்களின் நாட்கள் கடந்ததையும் நான் அறிந்திலேன். ஆ! இதென்ன ஆச்சர்யம்! இதென்ன வருத்தம்! என்னுடைய மதி (புத்தி) மயக்கத்தை என்னென்று சொல்லுவேன்? இந்த மதி (புத்தி) மயக்கத்தினால் நான், என்னை ஸ்த்ரீகள் (பெண்கள்) க்ரீடா (விளையாட்டு) ம்ருகம் (விலங்கு) போல் உபயோகப்படுத்தும்படி அவர்களால் பறியுண்டேன். மன்னவர் சிகாமணியும் (சிறந்தவனும்), சக்ரவர்த்தியுமாகிய நான், என்னை இவ்வாறு அழிப்பது யுக்தமோ? 

போக்ய (அனுபவிக்கப்படும் பொருள்), போக உபகரண (அதற்கான கருவிகள்), போக ஸ்தானாதி (அனுபவிப்பதற்கான இடம்) ஸம்ருத்திகள் (வளங்கள், செழிப்புகள்)  அமைந்த ஸார்வ பௌமனாகிய (பேரரசனான) என்னை, த்ருணம் (புல்) போல் அனாதரித்து (ஒதுக்கி - என் பெருமையைச் சிறிதும் பாராட்டாமல்) போகின்ற பெண் பிள்ளையை நான் காம மோஹத்தினால் அரையில் ஆடையுமின்றி, பித்தம் பிடித்தவன் போல் புலம்பிக் கொண்டு, பின் தொடர்ந்தேன். 

ஆண் கழுதை, பின் கால்களால் உதைக்கின்ற பெண் கழுதையைக் காம மோஹத்தினால் விவேகமற்றுப் பின் தொடர்வது போல், தன்னைப் பொருள் செய்யாமல் போகின்ற பெண் பிள்ளையை எவன் தொடர்ந்து செல்கின்றானோ, அவனுக்கு ப்ரபாவமாவது (பெருமையாவது), தேஜஸ்ஸாவது (ஸாமர்த்யமாவது), ஈச்வரத்வமாவது (ஆளுமையாவது) எங்கிருந்து வரும்? 

எவனுடைய மனம் ஸ்த்ரீகளால் (பெண்களால்) பறியுண்டதோ, அவன் கற்ற கல்வியாலாவது, அவன் செலுத்தின தவத்தினாலாவது, அவன் செய்த யாகத்தினாலாவது, அவன் செய்த வேத அத்யயனத்தினாலாவது, அவன் செய்த ஏகாந்த வாஸத்தினாலாவது (தனிமை), அவனுடைய மௌனத்தினாலாவது அவனுக்கு என்ன ப்ரயோஜனம்? எனக்கு எது நன்மையோ அதை அறியாமல், எல்லாம் தெரிந்தவனாகப் பாவித்து மூர்க்கனாயிருக்கின்ற என்னைச் சுட வேண்டும். ஏனென்றால், நான் ஸமஸ்த பூமண்டலத்திற்கும் ப்ரபுவாயிருந்தும், எருது போலவும், கழுதை போலவும், பெண்ணாசையால் பறியுண்டேனல்லவா? நான் அனேக வர்ஷ ஸமூஹங்களாக ஊர்வசியின் கனிவாயமுதத்தைப் பருகிலும் என்னுடைய காமம் இன்னம் த்ருப்தி அடையவில்லை. அக்னி, ஹோமங்களால் த்ருப்தி அடையாமல் மேன்மேலும் வளர்வது போல், என்னுடைய காமம் மேன்மேலும் வளர்ந்து வருகின்றது. 

சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) விருப்பமின்றி, ஆத்ம ஸ்வரூபத்தில் இழிந்து அதன் ஆராய்ச்சியால் ஸந்தோஷமுற்றிருக்கும் தன்மையர்களான பெரியோர்களுக்கு அந்த ஆத்மானு ஸந்தானத்தை (ஆத்மாவைப் பற்றிய எண்ணத்தை) நிறைவேற்றிக் கொடுக்கும் ப்ரபுவும், இந்திரியங்களின் வியாபாரங்களை எதிர்பாராமல் எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்கும் (அறியும்) தன்மையனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப் பெற்றவனுமாகிய) பரம புருஷனைத் தவிர மற்ற எவன்தான் பர புருஷர்களைப் (கணவனைத் தவிர்த்த மற்ற ஆண்களை) புணர விரும்பும் தன்மையுள்ள மடந்தையர்களால் பறியுண்ட மனத்தை அவர்களிடத்தினின்று விடுவிக்க வல்லனாவான்? (அவனுடைய அனுக்ரஹம் இல்லாது போமாயின், எவனும் அவர்களால் பறியுண்ட மனத்தை விடுவிக்க வல்லனாக மாட்டான்).

“புரூரவ மன்னவனே! நீ என்னைப் பிரிந்திருக்கப் பொறாமல் மரணம் அடையாதே; பரிதாபத்தையும் ஏற்றுக் கொள்ளாதே. இந்திரியங்கள் செந்நாய்கள் போல் அமங்கள (நன்மையற்ற) ஸ்வபாவமுடையவை. அவை உன்னைப் பக்ஷிக்கும்படி (உண்ணும்படி) அவற்றிற்கு நீ இடம் கொடுக்க வேண்டாம். ஸ்த்ரீகளுடைய (பெண்களுடைய) நட்புகள் நிலை நின்றிருப்பவை அன்று. ஆகையால், அவர்களிடத்தில் விச்வாஸம் (நம்பிக்கை) செய்யலாகாது. இந்த ஸ்த்ரீகளின் (பெண்களின்) ஹ்ருதயங்கள் செந்நாய்களின் ஹ்ருதயங்கள் போல் புதிய புதியவைகளை விரும்பும் தன்மையுடையவை” என்று தெய்வ மடந்தையாகிய ஊர்வசி உண்மையான உரைகளை மொழிந்து, எனக்கு விவேகத்தை விளைவிக்கப் பார்த்தாள். அவள் எனக்குத் தெரியும்படி பற்பல சொல்லியும், இந்திரியங்களை வெல்ல முடியாமல், காமங்களில் மனம் அழுந்தப் பெற்ற துர்ப்புத்தியாகிய (கெட்ட புத்தியாகிய) என்னுடைய மதிமயக்கம் சிறிதும் தீரவில்லை; அப்படியே இருக்கின்றது. (காதலியிடத்தில் போக்யதா (அனுபவிக்கும்) புத்தி சிறிதும் மாறாதிருக்கின்றது.) இந்த ஊர்வசி எனக்கு என்ன அபகாரம் (தீங்கு) செய்தாள்? ஒரு அபகாரமும் செய்யவில்லை.

ஒருவன் கயிற்றைப் பார்த்து ஸர்ப்பம் (பாம்பு) என்று ப்ரமிப்பானாயின் (மயங்குவானாயின்), அந்தக் கயிறு அவனுக்கு என்ன அபகாரம் (தீங்கு) செய்ததாம்? கயிற்றைப் பார்க்கிறவன் அதன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறியானாயின், அவ்வறியாமை அறியாதவனுடைய குற்றமே அன்றிக் கயிற்றின் குற்றமாகாதல்லவா! அவ்வாறே நான் தேஹத்தையே (உடலையே) ஆத்மாவாக ப்ரமித்து, தேஹ (உடல்) ஸுகங்களை விரும்பி, இந்திரியங்களை வெல்ல முடியாமல், அவற்றைத் தொடர்ந்து, ஊர்வசியைக் கண்டு மோஹித்தமை என் குற்றமேயன்றி, ஊர்வசியின் குற்றமாக மாட்டாதல்லவா? மற்றும், அவள் உண்மையை அறிவித்தாளாகையால், எனக்கு உபகாரத்தையே செய்தாள். 

நான் இந்த்ரியங்களை அடக்கமுடியாமல், எனக்கே அபகாரம் (தீங்கு) செய்து கொண்டனன். மலங்கள் (அழுக்குகள்)  நிறைந்திருப்பதும் துர்க்கந்தம் (துர்நாற்றம்) முதலிய ஆபாஸங்களுடையதும், அசுத்தமுமாகிய இந்த தேஹம் எங்கே? ஸௌமனஸ்யம் (இனிய மனது) முதலிய குணங்கள் எங்கே? துர்க்கந்தங்களுக்கிடமான (துர்நாற்றங்களுக்கிடமான) தேஹத்தில் ஸுகந்தம் (நல்ல வாசனை) எங்கிருந்து வரும்? இதில் இக்குணங்களெல்லாம் அஜ்ஞானத்தினால் கற்பிக்கப்பட்டவைகளே அன்றி, உண்மையன்று.

இந்த தேஹம் தாய், தந்தைகளால் உண்டானதாகையால், இதை அவர்களுடைய ஸொத்தென்று சொல்லலாமா? பார்யைக்கு போக்யமாகையால், அவளுடையதென்று சொல்லலாமா? எவனுடைய அன்னத்தைப் புசித்து ஜீவிக்கிறானோ, அந்த ப்ரபுவினுடையது என்று சொல்லலாமா? கடைசியில், அக்னி ஸம்ஸ்காரம் (சடங்கு) செய்வார்களாயின், அது தஹிக்கிறதாகையால் (எரிக்கிறதாகையால்) அதனுடையதென்று சொல்லலாமா? அக்னி ஸம்ஸ்காரம் செய்யாமல் எறிந்து விடுவார்களாயின், அப்பொழுது நாயும், கழுகும் தின்னுமாகையால், அவைகளுடையதென்று சொல்லலாமா? தான் ஸுக, துக்கங்களை அனுபவிப்பதற்கு இடமாயிருக்கின்றதாகையால், தன்னுடையது என்று சொல்லலாமா? நண்பர்களிடம் உபகாரம் பெறுகையால் அவர்களுடையது என்று சொல்லலாமா? என்று தேஹத்தைப்பற்றி எவன் இவ்வாறு ஆராய்ந்து பார்க்கிறானோ, அவன் இதைப்பற்றிச் சிறிதும் வருந்த மாட்டான். 

இதன் ஸ்வரூபத்தை அறியாதவன் மதிமயங்கி, “ஆ !காதலியின் முகம் மிகவும் ஆநந்தத்தை விளைக்கின்றது; அழகிய மூக்குடையது; புன்னகையுடன் திகழ்கின்றது.என்ன ஆச்சர்யம்” என்று கீழ்ச் சொன்ன பல துர்க்குணங்களுடையதும், அசுத்தமும், ஆபாஸத்தில் முடிவதுமாகிய தேஹத்தில் அழுந்திவிடுகிறான். 

தோல், மாம்ஸம், ரக்தம், நரம்பு, மேதஸ்ஸு (சதை கொழுப்பு), மஜ்ஜை (எலும்பின் உள் கொழுப்பு), எலும்பு இவற்றின் ஸமுதாயமும், மல, மூத்ரங்களால் துர்க்கந்தமுமாகிய (துர்நாற்றமாகிய) தேஹத்தில் (உடலில்) ஸந்தோஷம் அடைகிறவர்களுக்கும், க்ருமிகளுக்கும் என்ன பேதம்? ஒரு பேதமும் இல்லை. ஆத்ம ஹிதத்தை அறிந்தவன், இதைப் பற்றியும் ஸ்த்ரீகளிடத்திலாவது, ஸ்த்ரீவச்யர்களிடத்திலாவது (பெண்களைக் கவர்பவர்கள்) ஸங்கம் (தொடர்பு) செய்யலாகாது. விஷயங்களுக்கும், இந்திரியங்களுக்கும் ஸம்பந்தம் உளதாயின், மனம் கலக்கமுறும். அது இல்லாது இருக்குமாயின், மனம் கலக்கமுறாது. ஆகையால், ஸ்த்ரீகளோடு (பெண்களோடு) ஸஹவாஸம் செய்யில், மனம் கலங்கி வருந்தும் என்று அதைச் செய்யலாகாது. மற்றும் , ஸ்த்ரீவச்யர்களோடு (பெண்களைக் கவர்பவர்கள்) ஸஹவாஸம் செய்யினும் ஸ்த்ரீ ஸஹவாஸத்தில் கொண்டு போய் மூட்டி விடுமாகையால், அதையும் செய்யலாகாது. 

கேளாததும் பாராததுமான விஷயத்தினால் மனக்கலக்கம் உண்டாகாது. (விஷயத்தைக் கேட்பினும், பார்ப்பினும் மனக்கலக்கம் உண்டாகும்) அவ்வாறே இந்த்ரியங்களை விஷயங்களில் செலுத்தாது இருப்பானாயின், அவனுடைய மனம் நிச்சலமாகி (உறுதி உடையதாகி) ராகம், முதலிய தோஷங்களால் கலக்கமுறாது இருக்கும். ஆகையால், ஸ்த்ரீகளிடத்திலும், ஸ்த்ரீவஸ்யர்களிடத்திலும் (பெண்களைக் கவர்பவர்கள்) இந்த்ரியங்களை விடுத்து ஸங்கம் (தொடர்பு) செய்யலாகாது. இந்த்ரிய வர்க்கம் அறிஞர்களுக்கும் நம்பத்தக்கது அன்று. (நமக்கு வசப்பட்ட இந்த்ரியவர்க்கம் நமக்கு என்ன அபராதம் செய்யப் போகிறது என்று இந்திரியங்களை விஷயங்களோடு ஸம்பந்திக்கச் செய்யலாகாது. அப்படி நம்பியிருப்பின், அறிஞர்களையும் விஷயங்களில் அழுந்தச் செய்து அனர்த்தத்தையே (கெடுதியையே) விளைக்கும்). அறிஞர்களின் கதையே இதுவாயின், அறிவற்ற மூடர்களான என்னைப் போன்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- இவ்வாறு மொழிந்த ராஜாதி ராஜனாகிய அப்புரூரவ மன்னவன், அனந்தரம் ஊர்வசீ லோகத்தைத் துறந்து, ஆத்மாவுக்கு அந்தராத்மாவான என்னை உபாஸனத்தினால் ஸாக்ஷாத்கரித்து (த்யானத்தால் பார்த்து), அந்த உபாஸன (த்யான) ஜ்ஞானத்தினால் (அறிவினால்) தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய மோஹத்தை எல்லாம் துறந்து, மோக்ஷத்தை அடைந்தான். 

ஆகையால், புத்தியுடையவன் துஷ்டர்களின் (கெட்டவர்களின்) ஸஹவாஸத்தைத் துறந்து, ஸத்புருஷர்களிடத்தில் ஸஹவாஸம் செய்ய வேண்டும். ஸத்புருஷர்கள் நன்மையை விரும்புகிற இப்புருஷனுக்கு, சப்தாதி விஷயங்களில் உண்டாகும் மனப்பற்றை விஷயங்கள் அனர்த்த (கெடுதிக்கு) ஹேதுக்கள் (காரணம்) என்று நிரூபித்துச் சொல்லி வேரோடறுத்து விடுவார்கள். ஸத்புருஷர்கள் யாவரென்றால், சொல்லுகிறேன். 

நிரதிசய (சிறந்த) புருஷார்த்த ரூபனான (விரும்பி அடையப்படக் கூடியவனான) என்னிடத்திலேயே நிலை நின்ற மனமுடையவர்களாகி, மற்றொன்றையும் விரும்பாமல், ராகம் முதலிய தோஷங்களால் கலங்காத மனமுடையவர்களும், சேதனாசேதன ரூபமான ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்தெல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபம் என்று அறிந்து, எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையரும், தேஹத்திலும் (உடலிலும்), தேஹானுபந்திகளிடத்திலும் (உடலோடு தொடர்பு உடையவர்களிடத்திலும்) அஹங்கார (நான்), மமகாரங்கள் (எனது) இன்றிச் சீத உஷ்ணம் (குளிர், சூடு) முதலிய த்வந்தங்களால் (இரட்டைகளால்) விகாரம் (மாறுபாடு) அற்றவர்களும், சப்தாதி விஷயங்களை (உலக விஷயங்களை) இவை நமக்கு அனுகூலங்களென்று அபிமானியாதவர்களும் (எண்ணாதவர்களும்) எவரோ, அவரே ஸத் புருஷர்களாவார்கள். “அத்தகைய ஸத்புருஷர்களின் உரைகளால் மனோ மோஹம் (மனக்கலக்கம்) அறுப்புண்ணுமாயினும், அதற்குக் காரணமான பாபம் அப்படியே இருக்கின்றதாகையால், அது மீளவும் முளைக்குமே” என்று சங்கிக்கவேண்டாம். 

மஹா பாக்யமுடையவனே! மிகுந்த மதியமைந்தவனே! உம்மைப் போன்ற மஹாபாக்யசாலிகளும், மஹாமதிகளுமான (சிறந்த புத்தி உடையவர்களுமான) அந்த ஸத்புருஷர்களிடத்தில் மனுஷ்யர்களுக்கு ஹிதத்தை விளைப்பவைகளான என் கதைகள் ஸம்பவித்துக் கொண்டேயிருக்கும். ஆகையால், அவை கேட்கிறவர்களுடைய மனோமோஹத்திற்கு (மனக்கலக்கத்திற்கு) ஹேதுவான பாபத்தை அடியோடு போக்கிவிடும். அதனால் அவர்களுக்கு மீளவும் மனோமோஹம் (மனக்கலக்கம்) தலையெடுப்பதற்கு இடமே இராது. அந்த என் கதைகளை எவர்கள் கேட்கிறார்களோ, எவர்கள் பாடுகிறார்களோ, எவர்கள் பாடுகிறவர்களை அனுமோதனம் செய்கிறார்களோ (ஆமோதிக்கிறார்களோ), எவர்கள் அவற்றைக் கேட்க ஆவலுறுகின்றார்களோ, அவர்கள் ச்ரத்தையுடன் என்னுடைய ஆராதனத்தையே முக்யமாகக் கொண்டு, சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) மனம் செல்வதற்குக் காரணமான பாபம் தீரப்பெற்று, என்னிடத்தில் பக்தியோகம் கைகூடப் பெறுவார்கள். 

அளவற்ற கல்யாண குணங்களுடையவனும், அளவிறந்த ஸ்வரூப (இயற்கைத் தன்மை) ஸ்வபாவங்கள் (குணங்கள்) உடையவன் ஆகையால் பரப்ரஹ்மமென்று கூறப்படுகின்றவனும், மஹாநந்த ஸ்வரூபனுமாகிய (உயர்ந்த இன்ப வடிவானவனுமான)  என்னிடத்தில் பக்தியோகம் கைகூடப்பெற்ற ஸாதுவுக்குப் பெறக்கூடியது எது தான் மிகுந்திருக்கின்றது? பக்தியோகம் கைகூடினவனுக்கு துர்லபமானது (அடைய முடியாதது) எதுவுமே இல்லை. 

ஆஹவனீயாதி ரூபனாகி (இல்லறத்தில் இருப்பவன் வேதத்தில் விதிக்கப்பட்ட ஹோமம் முதலிய அக்னி கார்யங்களைச் செய்வதற்கு மூன்று அக்னிகளை எப்பொழுதும் இல்லத்தில் வைத்து வளர்த்து பூஜிக்க வேண்டும். 

  1. கார்ஹபத்ய அக்னி என்பது மேற்கு திசையில் இருக்கும் அக்னி; ஹோமம் செய்யும் போது மனைவி கார்ஹபத்ய அக்னியின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்; 

  2. ஆஹவனீய அக்னி என்பது கார்ஹபத்ய அக்னியிலிருந்து எடுக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட, ப்ரதான ஹோமம் செய்வதற்கான, கிழக்கு திசையில் இருக்கும் அக்னி; 

  3. தக்ஷிணாக்னி என்பது தெற்கு திசையில் இருக்கும் அக்னி) 

பூஜிக்கத்தகுந்த அக்னியைப் பணியும் புருஷனுக்குக் குளிரும், இருட்டும், அவற்றால் விளையும் பயமும் பறந்து போவது போல், ஸர்வகாலமும் ஸத்புருஷர்களைப் பணியும் புருஷனுக்கு, அஜ்ஞானமும் (அறியாமையும்), அதனால் விளையும் ஸம்ஸார பயமும் பறந்து போய்விடும். 

ஜலத்தில் விழுந்து முழுகுபவர்களுக்கு ஓடம் ரக்ஷகமாயிருப்பது (காப்பாற்றுவது) போல், பயங்கரமான ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தில் முழுகி, அதினின்றும் கரையேற விரும்புகிறவர்களுக்குப் பரப்ரஹ்மத்தை உள்ளபடி நன்கறிந்தவர்களும், ராகம் முதலிய தோஷங்களால் மனங்கலங்கப் பெறாதவர்களுமான ஸத்புருஷர்களே மேலான சரணமாவார்கள். (ஸமுத்ரத்தில் விழுந்தவன், ஓடத்தைப் பெற்றுக் கரையேறுவது போல், ஸம்ஸார ஸமுத்ரத்தில் விழுந்தவன் ஸத்புருஷர்களைப் பணிவானாயின், கரையேறலாம். 

ஸம்ஸாரம் (பிறப்பு, இறப்பு என்கிற உலக வாழ்க்கை) அஜ்ஞானத்தினால் (அறியாமையால்) விளைகின்றதாகையால், அத்தகைய ஸத்புருஷர்கள் தம்மைப் பணிகிறவர்களின் அஜ்ஞானத்தைப் போக்கி, பகவத்பக்தியை விளைப்பார்கள்.) அதனால், மீளவும் ஸம்ஸாரத்திற்கு ஆளாகாமல் மோக்ஷத்தை அடையலாம். இவ்வுலகத்தில் ஜீவிக்க விரும்புகிறவர்களுக்கு, ப்ராண தாரணம் செய்து (உயிர்ப்பித்து) ரக்ஷிப்பது அன்னமேயாம். ஆத்யாத்மிகம் முதலிய {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன)  ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான துன்பங்களால்} ஸம்ஸார தாபங்களால் பீடிக்கப்பட்டு வெறுப்புற்றவர்களுக்கு, ரக்ஷகன் ஸர்வேச்வரனான நானே. 

பரலோகத்தில் ரக்ஷகம் (காப்பாற்றுவது) தர்மமேயாம். இஹலோக போகங்களை விரும்பும் மனிதர்களுக்கு, தனமே (பொருளே) ரக்ஷகமாம். அவ்வாறே இந்த ஸம்ஸாரத்தினின்றும் பயப்படுகிற புருஷனுக்கு, ஸத்புருஷர்களே ரக்ஷகராவார்கள். ஸத்புருஷர்கள், சித்து, அசித்து, ஈச்வரன் என்னும் தத்வங்களின் ஜ்ஞானங்களாகிற கண்களைக் கொடுக்கின்றார்கள். (தம்மைப் பணியும் ஸம்ஸாரிகளைத் தத்வ உபதேசத்தினால் பாதுகாக்கின்றார்கள்) ஸூர்யனோவென்றால், உதிக்கும் பொழுது வெளிக் கண்ணைக் கொடுக்கின்றான். ஆகையால், ஸத்புருஷர்களே தேவதைகளும், பந்துக்களுமாவார்கள். (தேவதைகளைப்போல் பூஜிக்கத் தகுந்தவர்களும், பந்துக்களைப் போல் உபகரிக்கத் தகுந்தவர்களுமாவார்கள்) பல படச் சொல்லி என்ன? ஸத்புருஷர்களே எனக்கு ஆத்மாவாயிருப்பவர். ஆகையால், நானே ஸத்புருஷர்கள். (பகவானே இவர்களென்னும் புத்தியோடு ஸத்புருஷர்களைப் பணிய வேண்டும்). 

ஸுத்யும்னனென்னும் பெயருடைய வீரஸேன மஹாராஜனது குமாரனாகிய புரூரவ மன்னவன், தானாகவே சிறந்த சப்தாதி விஷய போகங்களுக்கிடமான ஊர்வசி லோகத்தில் விருப்பமற்று, ஸ்த்ரீ (பெண்) ஸஹவாஸத்தினின்றும் (தொடர்பிலிருந்தும்), ஸ்த்ரீலோலர்களுடைய (பெண்ணாசை பிடித்தவர்கள்) ஸஹவாஸத்தினின்றும் விடுபட்டு, ஆத்மானுபவத்தினால் மனக்களிப்புற்று, இந்தப் பூமண்டலத்தில் திரிந்து கொண்டிருந்தான். (இவ்வாறு அதிஸங்கமுற்றவன் (மிகுந்த பற்றுடையவன்) ஸங்கமறப் (பற்றின்மைப்) பெறுகையும், அதனால் அவன் முக்தி அடைந்ததும் ஆச்சர்யம் ). 

இருபத்தாறாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக