ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தைந்தாவது அத்தியாயம்
(ஸத்வாதிகுண வ்ருத்திகளையும் (செயல்களையும்), குண யுக்த (குணத்தோடு கூடிய) வஸ்துக்களையும், குணாதீத (குணங்களைக் கடந்த) வஸ்துக்களையும் நிரூபித்தல்.)
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தனித்தனியே இருப்பவைகளும், ஒன்றோடொன்று கலந்திருப்பவைகளுமான ஸத்வாதி குணங்களுக்குள் எந்தெந்த குணத்தினால் புருஷன் எந்தெந்த அபிநிவேசம் (ஈடுபாடு) உடையவனாக இருப்பானோ, அதையெல்லாம், புருஷ ச்ரேஷ்டரே! உமக்குச் சொல்லுகிறேன்; ஊக்கத்துடன் கேட்டு உணர்வீராக.
சமம், தமம், திதிக்ஷை , ஈக்ஷை , தவம், ஸத்யம், தயை, ஸ்ம்ருதி, துஷ்டி, த்யாகம், அஸ்ப்ருஹை, ச்ரத்தை, லஜ்ஜை, தானம், ஆர்ஜவம், விநயம் முதலியவைகளும், ஆத்மானுபவ ஸுகமும் ஸத்வ குணத்தின் வ்ருத்திகள். (ஸத்வ குணத்தின் கார்யங்கள்).
சமமாவது உள் இந்த்ரியத்தின் அடக்கம்.
தமமாவது வெளி இந்தரியங்களின் அடக்கம்.
திதிக்ஷையாவது ஸுகம், துக்கம் முதலிய த்வந்தவங்களைப் (இரட்டைகளைப்) பொறுத்தல்.
ஈக்ஷையாவது தத்வங்களை ஆராய்ந்தறிதல்.
ஸ்ம்ருதியாவது அனுபவித்த விஷயங்களை மறவாமை.
துஷ்டியாவது தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷம் உற்றிருக்கை .
த்யாகமாவது செலவழிக்கும் தன்மை.
அஸ்ப்ருஹையாவது விஷயங்களில் விருப்பமில்லாமை.
ச்ரத்தையாவது ஆஸ்திக்யம். அதாவது தெய்வம் உண்டென்னும் நினைவு.
ஆர்ஜவமாவது நேர்மை.
விநயமாவது வணக்கம்.
விஷயங்களை அனுபவியாதிருக்க முடியாமையாகிற காமம் (ஆசை, விருப்பம்), சேஷ்டை (செயல்), மதம் (கர்வம்), எவ்வளவு பெறினும் ஸந்தோஷம் உறாமை, கர்வம், பொருளாசை, வைஷம்யம் (வேறுபடுத்திப் பார்த்தல்), விஷயபோகம் (உலக விஷயங்களை அனுபவித்தல்), ஸாஹஸ (திறமைக்கு மீறிய) கார்யங்களில் அபிநிவேசம் (ஈடுபாடு), புகழில் ப்ரீதி (தன்னைப் பிறர் ஸ்தோத்ரம் செய்கையில் ஸந்தோஷம் அடையும் தன்மை), பரிஹாஸம் (கேலி) செய்கை, தன் ப்ரபாவத்தை வெளியிடுகை, பலம் உள்ளவளவும் முயற்சி செய்கை, ஆகிய இவை எல்லாம் ரஜோ குண வ்ருத்திகள். (ரஜோகுணத்தின் கார்யங்கள்).
பொறாமையாகிற க்ரோதம் (சினம்), சிலவு என்றால் மனம் செல்லாமையாகிற லோபம் (கஞ்சத்தனம்), அசாஸ்த்ரீயம் ஆனவற்றை (சாஸ்த்ரத்திற்கு ஒவ்வாதவற்றைப்) ப்ரமாணம் (ஒத்துக்கொள்ளக்கூடிய ஆதாரம்) என்று கூறுகையாகிற அன்ருதம் (உண்மையின்மை), பிறர்க்கு த்ரோஹம் (தீங்கு) செய்தல், யாசித்தல், வஞ்சித்தல், சோர்வுறுதல், கலஹம், சோகம் (வருத்தம்), மோஹம் (மயக்கம்), துக்கம், தைன்யம் (தாழ்ந்து நிற்கும் நிலை), ஆசை , பயம், முயற்சியற்று இருக்கை ஆகிய இவையெல்லாம் தமோகுண வ்ருத்திகள் (தமோ குணத்தின் கார்யங்கள்).
இவ்வாறு தனித்தனியே இருக்கின்ற ஸத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகிய மூன்று குணங்களின் வ்ருத்திகளை நிரூபித்துச் சொன்னேன். இனி ஒன்றோடொன்று கலந்திருக்கின்ற அக்குணங்களின் வ்ருத்திகளைச் சொல்லுகிறேன்; கேட்பீராக.
ஓ உத்தவரே! அஹங்கார, மமகாரங்கள் மிச்ர குண வ்ருத்திகள்.(ஒன்றோடொன்று கலந்த குணத்தின் கார்யங்கள்). அஹங்காரமாவது, ஆத்மாவல்லாத தேஹத்தில் ஆத்மாவென்னும் புத்தி. மமகாரமாவது, தன்னுடையது அல்லாத வஸ்துவில் தன்னுடையது என்னும் புத்தி. மற்றும், அஹங்கார, மமகார மூலமாய் விளைபவைகளும், மனம், தன்மாத்ரங்களின் (மஹா பூதங்களின் நுட்பமான நிலை) கார்யமான ஆகாசாதி பூதங்களின் பரிணாமமாகிய தேஹம், இந்திரியங்கள் இவற்றைக் காரணமாக உடையவைகளுமான வ்யவஹாரங்கள் (வழக்கு) எல்லாம் மிச்ர குண வ்ருத்திகளேயாம்.
இந்த ஜீவன் எப்பொழுது அர்த்தம் (பொருள்), தர்மம் (அறம்), காமம் (ஆசை, இன்பம்) இவைகளில் ஊக்கமுற்று இருக்கிறானோ, அப்பொழுது அவ்வர்த்த- தர்ம- காமங்களின் ஆர்ஜனத்திற்காக (ஈட்டுவதற்காகச்) செய்யும் வ்யாபாரம் எல்லாம் மிச்ர குண கார்யமேயாம். அது ச்ரத்தை, ப்ரீதி, தனம் இவைகளை விளைக்கும். ப்ரவ்ருத்தி ரூபமான தர்ம- அர்த்த- காமங்களைப் பெறுதற்குரிய செயலில் புருஷனுக்கு எப்பொழுது நிஷ்ட்டை (உறுதி) உண்டாகிறதோ, அப்பொழுது க்ருஹஸ்த ஆச்ரம தர்மத்திலும், தன்னுடைய வர்ண தர்மத்திலும், அவன் ஊக்கமுற்று இருப்பான். தர்ம, அர்த்த, காமங்களைப் பெறுதற்காகச் செய்யும் செயலாகிய அந்த ப்ரவ்ருத்தி (செயல்), லக்ஷண தர்மத்தில் நிஷ்ட்டை, மிச்ரகுண கார்யமாம்.
சமாதி குணங்களால் புருஷன் ஸத்வகுணம் தலையெடுத்தவன் என்றும், காமாதி குணங்களால் ரஜோகுணம் தலையெடுத்தவன் என்றும், க்ரோதாதி குணங்களால் தமோகுணம் தலையெடுத்தவன் என்றும் ஊஹிக்க வேண்டும். பலாபிஸந்தியின்றி (பலனில் விருப்பம் இன்றி) தன் வர்ணாச்ரம கர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு பக்தியுடன் புருஷனாவது, ஸ்த்ரீயாவது என்னைப் பணிவார்களாயின், அப்பொழுது அவர்கள் ஸத்வகுணம் தலையெடுத்தவர்கள் என்று ஊஹிக்கலாம். இஹலோகத்திலுள்ள (இந்த உலகத்திலுள்ள) பற்பல விருப்பங்களை விரும்பி, தன் வர்ணாச்ரம தர்மங்களைக் குறைவற அனுஷ்டித்துக் கொண்டு என்னைப் பணிகிறவன், ரஜோ குணம் தலை எடுத்தவன் என்று ஊஹிக்கலாம். பிறருடைய ஹிம்ஸையை உத்தேசித்து என்னைப் பணிவானாயின், அவன் தமோகுணம் தலையெடுத்தவன் என்று ஊஹிக்கலாம்.
“ஜீவாத்மாக்கள் ஸத்வாதி குணங்கள் தலையெடுத்து உன்னைப் பணிவதும், நீ அவர்களுக்குப் பலன் கொடுப்பதும் வாஸ்தவமே (உண்மையே). பலன்களை அனுபவிக்கிற ஜீவாத்மாக்களுக்கு ஸத்வாதி குண ஸம்பந்தம் உள்ளது போல் பலப்ரதானம் செய்கிற (பலனை அளிக்கிற) உனக்கும் ஸத்வாதிகுண ஸம்பந்தம் உண்டென்று கொள்ள வேண்டும். குணங்கள் உளவாயின் அவை பந்தத்தையும் விளைக்க வேண்டுமே”! என்றால், அதுவில்லை.
ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள் ஜீவனுக்கு பந்தங்களே (கட்டு) அன்றி, எனக்கு அவை பந்தங்களாக மாட்டாது. ஏனென்றால், அவை ஜீவனுடைய சித்தத்தில் (எண்ணத்தில்) தங்கள், தங்கள் கார்ய ரூபமாய் உண்டாகின்றன. ஆகையால், ஜீவனே பஞ்ச பூதங்களின் பரிணாமமான தேஹம், தேஹானுபந்திகள் (தேஹத்தோடு தொடர்பு உடையவர்கள்), விஷயங்கள் ஆகிய இவற்றுள் ஏதேனும் ஒன்றில் பற்று உற்று, பந்தத்தை (கட்டை) அடைகின்றான். ஸத்வாதி குணங்கள் எவனுடைய சித்தத்தில் உண்டாகின்றனவோ, அவனுக்கே அவை தங்கள் கார்யமான பந்தத்தை விளைக்கும். ஆகையால், அவை எனக்கு பந்தங்கள் ஆகமாட்டாது.
எப்பொழுது ஸத்வகுணம், ரஜஸ்,, தமஸ்ஸுக்களாகிற மற்ற குணங்களை அடக்கித் தலை எடுக்குமோ, அப்பொழுது மனம் நுண் பொருள்களை அறியுந் திறமை உடையதும், அவ்வறிவுக்கு ப்ரதிபந்தகமான (தடையான) மலங்களெல்லாம் (அழுக்கு) தீரப்பெற்றதும், ராகம் (விருப்பு) முதலிய தோஷங்களால் வரும் கலக்கமற்று, சாந்தமுமாயிருக்கும். அவ்வாறு ஸத்வகுணம் தலையெடுத்த புருஷன், ஆத்மானுபவ ஸுகம், ஸாத்விக தேவதாராதன (பகவானைப் பூஜித்தல்) ரூபமான தர்மம், ஸாத்விக தேவதா உபாஸன (த்யான) ரூபமான ஜ்ஞானம் இவையும், மற்றும் சமாதி குணங்களும் உண்டாகப் பெறுவான்.
எப்பொழுது ரஜோகுணம், ஸத்வ குணத்தையும் தமோகுணத்தையும் அடக்கித் தலை எடுக்குமோ, அப்பொழுது மனம் சப்தாதி விஷயங்களில் விருப்பமுற்று, பற்பலவான அவ்விஷயங்களைப் பெறுதற்கு முயற்சி உடையதுமாம். அவ்வாறு ரஜோ குணம் தலையெடுத்த புருஷன், துக்கம், ராஜஸ தேவதாராதன (பகவானைப் பூஜித்தல்) ரூபமான கர்மம், தனம் முதலிய ஸம்பத்து, அதன் மூலமாய் வரும் புகழ் இவைகளைப் பெறுவான்.
தமோ குணம், ஸத்வ குணத்தையும், ரஜோ குணத்தையும் அடக்கித் தலை எடுக்குமாயின், அப்பொழுது மனம் விவேகமின்றி, பரவுதலற்று முயற்சியையும் இழந்திருக்கும். அவ்வாறு தமோகுணம் தலையெடுத்த புருஷன், சோகம், மோஹம், நித்ரை (உறக்கம்), ஹிம்ஸை (பிறர்க்குத் தீங்கு), ஆசை ஆகிய இக்குணங்கள் உண்டாகப் பெறுவான்.
சோகமாவது புத்ராதி மரணம், முதலியவற்றை நினைக்கையால் உண்டாகும் வருத்தம்.
மோஹமாவது அதனால் மெய் மறந்திருக்கை.
ஆசையாவது சப்தாதி விஷயங்களில் விருப்பம்.
எப்பொழுது மனம் தெளிவுற்று இருக்குமோ, அப்பொழுது இந்த்ரியங்கள் விஷய அபிநிவேசம் (ஈடுபாடு) அற்று ஸுகமாயிருக்கும். மற்றும், ரோகாதி (வியாதி) பயமும் உண்டாகாது. பயத்திற்கிடமான ரோகாதிகளை (வியாதிகளை) விளைக்கவல்ல வஸ்துக்களில் மனவிருப்பமும் உண்டாகாது. எத்தகைய விஷயத்திலும் பற்று உண்டாகாது. இவைகளால் ஸத்வகுணம் தலையெடுத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அத்தகைய ஸத்வகுணம், என்னைக் கண்டறிவதற்குக் காரணமாயிருக்கும்.
எப்பொழுது நல்லதோ, கெட்டதோ ஆன ஏதேனுமொரு கார்யத்தைச் செய்து கொண்டு, அதன் பலனான ஹர்ஷ (மகிழ்ச்சி), சோகாதிகளை (வருத்தம்) அனுபவித்துக் கொண்டிருக்கிறானோ, அப்பொழுது சித்த விக்ஷேபமும் (மனதின் நிலையின்மையும்), ஜ்ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களுக்கு ஓச்சல் (ஓய்வு) இல்லாமையும், கைகால் முதலிய அங்கங்களுக்குப் பீடையும், மனோ ப்ராந்தியும், உண்டாகும். இவைகளால் ரஜோகுணம் தலையெடுத்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். சித்தம் (மனது), ஜ்ஞான இந்திரியத்திற்கு (கண், காது போன்ற அறிவை க்ரஹிக்கும் புலன்கள்) விஷயமான ரூபாதிகளை க்ரஹிப்பதில் வல்லமை அற்று இருக்குமாயின், அப்பொழுது ஸங்கல்ப விகல்ப ரூபமான (எண்ணம், எண்ணங்களின் மாறுபாடு) மனமும் மறைந்தாற் போலிருக்கும். மற்றும், அப்பொழுது அஜ்ஞானமும் (அறிவின்மை) வருத்தமும் உண்டாகும்.
இவ்வடையாளங்களால், தமோகுணம் தலையெடுத்து இருக்கிறது என்று நிச்சயிப்பீராக. ஸத்வகுணம் தலையெடுக்குமாயின், தேவதைகளுக்கு பலம் வளர்ந்து, வரும். ரஜோகுணம் தலையெடுக்குமாயின், அஸுரர்களுக்கு பலம் வளர்ந்து வரும். தமோகுணம் தலையெடுக்குமாயின் , ராக்ஷஸர்களுக்கு பலம் வளர்ந்து வரும்.
ஜனன, மரணாதிகளை ஸ்வபாவமாகவுடைய தேஹத்தோடு ஸம்பந்தித்திருக்கிற இந்த ஜீவனுக்கு, ஸத்வகுணம் தலை எடுத்திருக்கும் பொழுது, ஜாகரத் அவஸ்தை (விழித்திருக்கும் நிலை) உண்டாம். ரஜோகுணம் தலையெடுத்திருக்கும் பொழுது, ஸ்வப்ன அவஸ்தை (கனவு நிலை) உண்டாம். தமோகுணம் தலையெடுத்திருக்கும் பொழுது, ஸுஷப்தி அவஸ்தை (ஆழ்ந்த உறக்க நிலை) உண்டாம். ஜாகரம் முதலிய இம்மூன்று அவஸ்தைகளிலும் வியாபித்து, இம்மூன்று அவஸ்தைகளும் உடையது போல் தோற்றுகிற ஆத்ம ஸ்வரூபம், இயற்கையில் இம்மூன்று அவஸ்தைகளினின்றும் விடுபட்டிருக்கையாகிற நான்காவது அவஸ்தையிலிருப்பது. ஜீவனுக்கு இந்த ஜாகராதி அவஸ்தைகள் மூன்றும் ஸத்வாதி குண பரிணாமமான தேஹ ஸம்பந்தத்தினால் வந்ததேயன்றி, இயற்கையில் உண்டானது அன்று.
ஜனங்கள், ஸத்வகுணத்தின் தாரதம்யத்தினால் (ஏற்றத்தாழ்வுகளால்) ப்ரஹ்மலோகம் வரையிலுள்ள மேன் மேலுலகங்களுக்குப் போகின்றார்கள். தமோகுணத்தின் தாரதம்யத்தினால், அதி நிஹீனமான (மிகத் தாழ்ந்த) லோகம் வரையிலுள்ள கீழ் உலகங்களுக்குப் போகின்றார்கள். தமோகுணம் மிகவும் தலையெடுத்திருந்தால், ஸ்தாவர (மரம், செடி) ஜன்மத்தைப் பெறுகின்றார்கள். ரஜோகுணத்தின் தாரதம்யத்தினால், இடையிலுள்ள உலகங்களைப் பெறுகின்றார்கள். ஸத்வகுணம் தலை எடுத்திருக்கும் பொழுது மரணம் அடைகிறவர்கள், ஸ்வர்க்க லோகத்திற்குப் போகின்றார்கள். ரஜோ குணம் தலை எடுத்திருக்கும் பொழுது மரணம் அடைகிறவர்கள், மனுஷ்ய லோகத்திற்குப் போகின்றார்கள். தமோகுணம் தலை யெடுத்திருக்கும் பொழுது மரணம் அடைகிறவர்கள், நரகத்திற்குப் போகின்றார்கள். ரஜஸ், தமோகுணங்கள் சிறிதும் தீண்டப்பெறாத சுத்த ஸத்வ குணத்தில் தேஹவியோகம் (உடல் நீங்கப்) பெறுகிறவர்கள், என்னையே அடைவார்கள். என்னிடத்தில் அர்ப்பணம் செய்து, என்னுடைய ஆராதனமென்னும் புத்தியுடன் செய்த நிஜகர்மமும், பலாபிஸந்தி (பலனில் விருப்பம்) இல்லாத கர்மமும், ஸாத்விக கர்மமாம். (நிஜகர்மமாவது அவனவனுடைய வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்ட கர்மமாம்).
பலாபிஸந்தியோடு (பலனில் விருப்பத்தோடு) செய்யும் கர்மம், ராஜஸ கர்மமாம். சத்ருஹிம்ஸாதி (எதிரிகளைத் துன்பப்படுத்துதல் முதலிய) அபிஸந்தியோடு (எண்ணத்தோடு) செய்யும் கர்மம், தாமஸ கர்மமாம். உள்ள விஷயத்தை உள்ளபடி அறியும் ஜ்ஞானம், ஸாத்விக ஜ்ஞானமாம். உள்ள ஆகாரத்தை விட்டு, ஆரோபித (வேறொன்றை ஏறிட்ட) ஆகாரத்தைப் பற்றின ஜ்ஞானம், ராஜஸ ஜ்ஞானமாம். விஷய விபாகம் (பிரிவு) இல்லாத ஜ்ஞானம், தாமஸ ஜ்ஞானமாம். என்னை ஒழிய மற்றொன்றிலும் செல்லாமல் என்னையே விஷயீகரிக்கும் (அறியும்) ஞானம், சுத்த ஸாத்விக ஜ்ஞானமாம். வனத்தில் வஸிப்பது, ஸத்வகுண வ்ருத்திக்கு ஹேதுவாகையால், ஸாத்விக வாஸமாம். க்ராம வாஸம், ரஜோகுண வ்ருத்திக்கு ஹேதுவாகையால், ராஜஸ வாஸமாம். சூது, சதுரங்கம், மத்யபானம் முதலியவை நடக்குமிடம், தமோகுண வ்ருத்திக்கு ஹேதுவாகையால், தாமஸ வாஸமாம்.
என்னுடைய கோயில்கள் அமைந்த ஸ்ரீரங்காதி திவ்யக்ஷேத்ரமோ என்றால், மூன்று குணங்களையும் தடுத்து, சுத்த ஸத்வ குணத்தை மேன்மேலென வளரச் செய்யும் ஆகையால், நிர்குண (குணங்கள் அற்ற) ஸ்தானமாம் (இடமாம்). அர்த்த காமங்களில் விருப்பமில்லாமல் கர்மங்களை அனுஷ்டிக்கிறவன், ஸாத்விக காரகன் ஆவான். அர்த்த காமங்களில் மிகுந்த அபிநிவேசத்தோடு (ஈடுபாட்டோடு) கர்மங்களை அனுஷ்டிக்கிறவன், ராஜஸ காரகனாவான். விஷயங்கள் அனர்த்தங்களை விளைப்பவை என்று தெரிந்தும், அந்த நினைவேயில்லாமல் கேவலம் விஷய போகங்களை விரும்பிக் கர்மங்களை அனுஷ்டிக்கிறவன், தாமஸ காரகனாவான். (காரகன் கர்த்தா செய்கிறவன்).
ஸத்வாதி குணங்களுக்கு உட்படாமல் சுத்த ஸத்வகுணம் தலையெடுத்து என்னை த்யானிப்பதும், அர்ச்சிப்பதும் செய்துகொண்டு, கர்மங்களை அனுஷ்டிக்கிறவன், நிர்க்குண காரகனாவான். அத்யாத்ம (ஆத்மா, பரமாத்மா பற்றிய) சாஸ்த்ரங்களில் உண்டாகும் ச்ரத்தை (ஊற்றம்), ஸாத்விக ச்ரத்தையாம். கேவல கர்ம அனுஷ்டானத்தில் உண்டாகும் ச்ரத்தை, ராஜஸ ச்ரத்தையாம். அதர்மத்தில் உண்டாகும் ச்ரத்தை, தாமஸ ச்ரத்தையாம். கேவலம் என்னைப் பணிவதிலேயே உண்டாகும் ச்ரத்தை, இதர குணங்களின் ஸம்பந்தமற்ற சுத்தமான ஸத்வகுணத்தின் உத்ரேகத்தினால் (எழுச்சியால்) உண்டானது ஆகையால், நிர்க்குண ச்ரத்தையாம். ஹிதமாயிருப்பதும், ஜாதி, ஆச்ரயம், நிமித்தம் இவைகளைப் பற்றி வரும் தோஷங்கள் எவையும் தீண்டப் பெறாததுமான ஆஹாரம், ஸாத்விக ஆஹாரமாம். இந்த்ரிய ஸுகங்களை விளைப்பதும், ஆயாஸத்தினால் கிடைத்ததுமான ஆஹாரம், ராஜஸ ஆஹாரமாம். தேஹேந்த்ரியங்களுக்குப் பீடையை விளைப்பதும், சாஸ்த்ர நிஷித்தம் (விலக்கப்பட்டது) ஆகையால், அசுத்தமுமான ஆஹாரம், தாமஸ ஆஹாரமாம்.
ஆத்மானுபவத்தினால் உண்டாகும் ஸுகம், ஸாத்விக ஸுகமாம். சப்தாதி விஷயங்களால் (உலகியல் விஷயங்களால்) உண்டாகும் ஸுகம், ராஜஸ ஸுகமாம். மோஹம் (மயக்கம்), தைன்யம் (தாழ்ந்த, வலிமையற்ற நிலை) இவைகளால் உண்டாகும் ஸுகம், தாமஸ ஸுகமாம். மோஹமாவது, மோஹகமான வஸ்துக்களின் அனுபவத்தினால் உண்டான மதிமயக்கம். தைன்யத்தினால் உண்டாகும் ஸுகமாவது, புத்ர (பிள்ளை), களத்ராதிகளின் (மனைவி) உபலாலனத்தினால் (சீராட்டுதலால்) உண்டாகும் ஸுகம். என்னை த்யானிப்பது முதலியவைகளால் உண்டாகும் ஸுகம், நைர்க்குண்யத்தை (குணமற்ற நிலை) விளைக்கவல்ல ஸத்வகுண உத்ரேகத்தின் (எழுச்சியின்) மிகுதியால் உண்டானது ஆகையால், நிர்க்குண ஸுகமாம். ஆஹாரத்திற்குரிய த்ரவ்யம், வன, க்ராமாதி ரூபமான வாஸத்திற்குரிய தேசம், ஸுகாதி ரூபமான பலன், காலம், ஜ்ஞானம், கர்மம், காரணம், ச்ரத்தை, அவஸ்தை, ஆக்ருதி, நிஷ்டை இவையெல்லாம் ஸத்வம் முதலிய மூன்று வகைப்பட்ட குணங்களின் கார்யமாயிருப்பவை; மேன்மேலும் அக்குணங்களின் அபிவ்ருத்திக்கு (வளர்ச்சிக்குக்) காரணங்களுமாயிருப்பவை. (இவற்றில், காலம், காரணம், ஆக்ருதி இவை தவிர மற்றவையெல்லாம் கூறப்பட்டன).
நிஷ்டையாவது மரணம். அதுவும் கூறப்பட்டது. காலம் முதலியவை மூன்றில் ஒவ்வொன்றும் ஸாத்விகமென்றும், ராஜஸமென்றும், தாமஸமென்றும் மூன்று வகைப்பட்டிருக்கும். காலை, மாலைகளும், உச்சி வேளையும் ஆகிய மூன்று ஸந்திகளும், ஸாத்விக காலமாம். இவை தவிர ராத்ரியில் ஒரு யாமம் வரையிலுள்ள மற்ற காலம் ராஜஸ காலமாம். அர்த்த ராத்ரம் (நள் இரவு) முதலிய மற்றகாலம் தாமஸ காலமாம். காரணமாவது, இஷ்டம், அதன் ஸாதனம் ஆகிய இவற்றை நிறைவேற்றிக் கொடுக்கும் காரணம். மேலுலகங்களுக்குப் போகும் ஸாதனங்களை அறிவிக்கும் சாஸ்த்ரம், ஸாத்விக காரணமாம். தேஹ ஸுகங்களின் ஸாதனங்களை அறிவிக்கும் சாஸ்த்ரம், ராஜஸ காரணமாம். அபிசாரம் (பிறர்க்குத் தீங்கு செய்தல்) முதலியவற்றை அறிவிக்கும் சாஸ்த்ரம், தாமஸ காரணமாம். பகவத் ப்ராப்திக்குரிய (அடைவதற்குரிய) ஸாதனங்களை அறிவிக்கும் சாஸ்த்ரம், நிர்க்குண காரணமாம்.
ஆக்ருதியாவது ஆகாரம். அதாவது வேஷம் (தோற்றம்). வைதிகமான வேஷம் (தோற்றம்), ஸாத்விக வேஷமாம். அர்த்த, காமங்களை ஆர்ஜனம் செய்வதற்காக (ஸம்பாதிக்க) ஏற்றுக்கொண்ட வேஷம், ராஜஸ வேஷமாம். பாசுபதாதி ஆகமங்களில் சொல்லப்பட்ட வேஷம், தாமஸ வேஷமாம். பாஞ்சராத்ர சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட வேஷம், நிர்க்குண வேஷமாம். எல்லா வஸ்துக்களும் ஸத்வாதி குணங்களினின்று வந்தவைகளே; ஒன்றோடு ஒன்று ஸம்பந்தித்த (தொடர்புடைய) ப்ரக்ருதி, புருஷன் இவ்விரண்டோடு கூடினவை. இவ்வுலகத்திலுள்ளதும், பரலோகத்திலுள்ளதும், மனோரத (மனதின் விருப்பத்திற்கு) மாத்ரத்திற்கு விஷயமாயிருப்பதுமாகிய எந்தெந்த ஸுகம் உண்டோ, அவை எல்லாம் ஸத்வாதி குணங்களினின்று வந்ததேயன்றி வேறன்று.
ஸுகமெல்லாம் குணமயம் என்கையால், அதற்கிடமான தேசாதிகளும் (இடங்களும்), அந்தந்த குண ஸம்பந்தமுடைய புருஷர்களின் ருசிக்கு விஷயமாயிருக்கும் என்றுணர்க. இந்த த்ரவ்யாதி பதார்த்தங்களெல்லாம் ஸத்வாதி குணங்களுக்குட்பட்டு, பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ய, பாப கர்மங்களால் விளைகின்ற ருசிக்கு விஷயங்களாயிருக்கும்; மற்றும், ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தை மேன்மேலென வளர்ப்பவைகளாய் இருக்கும். எந்த ஜீவன் ரஜஸ், தமோ குணங்களும், அவை கலந்த ஸத்வ குணமும் தலை சாய்ந்து, சுத்தஸத்வம் தலையெடுக்கையாகிற நிர்க்குணமென்னும் ஸாதனத்தினால் மனத்தில் கிளம்புபவைகளாகிய ஸத்வாதி குணங்களை அடங்கச் செய்கிறானோ, அவன் அந்த நிர்க்குண ஸாதனத்தினால் மேன்மேலும் பக்தியோகம் வளர்ந்து வரப் பெற்று, அதனால் நிலைநின்ற மனமுடையவனாகி, என்னோடு ஸாரூப்யத்தை (ஒத்த உருவத்தை) அடைவான்.
ஆகையால், பண்டிதர்கள் சாஸ்த்ராப்யாஸம், யோகாப்யாஸம் (சாஸ்த்ரம், யோகம் கற்றல்) இவைகளால் உண்டாகும் ஜ்ஞானங்களுக்குக் காரணமாயிருக்கின்ற இம்மனுஷ்ய தேஹத்தைப் பெற்று, ஸத்வாதி குணங்களின் பரிணாமமான சப்தாதி விஷயங்களில் மனப்பற்றைத் துறந்து, என்னையே பணிகின்றார்கள். “சப்தாதி விஷயங்களில் மனப்பற்றைத் துறந்த மாத்ரத்தினால் அவற்றிற்கு மூலமான ஸத்வாதி குணங்களை எவ்வாறு வெல்ல முடியும் என்றால் சொல்லுகிறேன்; கேட்பீராக.
முதலில் சப்தாதி விஷயங்களினின்றும் இந்த்ரியங்களை இழுத்து வசப்படுத்திக் கொள்ள வேண்டும். அனந்தரமும் இந்திரியங்களை வசப்படுத்திக் கொண்டோமென்று அவற்றை நம்பியிருக்கலாகாது; ஊக்கத்துடன் அவற்றைக் காத்துக்கொண்டே இருக்க வேண்டும். இவை இனி விஷயாந்தரங்களில் செல்ல மாட்டாது என்று நம்பும்படி அவை படிந்திருப்பினும், மீளவும் அவை விஷயாந்தரங்களில் அபிநிவேசத்தை (ஈடுபாட்டை) உண்டாக்கி அவ்வழியால் அனர்த்தங்களை விளைக்கும் என்பதை அறிந்து, எப்பொழுதும் அவைகளை அடக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வளவு ஏற்பாட்டுடன் எவன் என்னைப் பணிகிறானோ, அவன் ஸத்வ உத்ரேகத்தை (எழுச்சியை) விளைக்கவல்ல த்ரவ்யாதிகளை உபயோகிப்பதினால் ரஜஸ், தமோகுணங்களை வெல்லுவான்; சிறந்த ஸத்வ உத்ரேகமும் (ஸத்வ குணத்தின் எழுச்சி) உண்டாகப் பெறுவான். அவன் என்னுடைய ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளை நன்குணர்ந்து, மனனம் செய்வானாகையால், அவனே முனிவனாவான். இவ்வளவு செய்யினும் ப்ராக்ருதமான ஸத்வோத்ரேகம் (ஸத்வ குணத்தின் எழுச்சி) தொடர்ந்து வருகின்றதாகையால் ப்ரக்ருதி ஸம்பந்தத்தினின்று எவ்வாறு விடுபட முடியும்?” என்றால், சொல்லுகிறேன்.
ஸத்வோத்ரேகத்தினால் (ஸத்வ குணத்தின் எழுச்சியால்) அனன்ய ப்ரயோஜனமான (வேறு பலனை விரும்பாத) உபாஸன (த்யான) ரூப ஜ்ஞானம் உண்டாகும். அப்பொழுது ராகாதிகளால் விளையும் மனக்கலக்கம் தீரப் பெறுவான். அந்த உபாஸன ஜ்ஞானத்தினால் ஸத்வகுணத்தையும் ஜயிக்கலாம் இவ்வாறு குணங்களால் விடுபட்ட ஜீவன் தேஹத்தைத் துறந்து என்னைப் பெறுவான். இவ்வாறு மனத்தில் தோற்றுபவைகளான ஸத்வாதி குணங்களாலும் தேஹத்தினாலும் விடுபட்ட ஜீவன், பரப்ரஹ்மமாகிய என்னால் வியாபிக்கப்பட்டு, (அந்தர்யாமியான என்னை ஸாக்ஷாத்கரித்தவனாகி) ஸம்ஸாரத்திற்கு ஹேதுவான கர்மத்தைச் செய்யமாட்டான்; மோக்ஷ ஸாதனமான ஜ்ஞான யோகத்தையும் அனுஷ்டிக்க மாட்டான். (மோட்ச நிலையில் சாஸ்த்ரத்திற்கு உட்பட்டவன் ஆகமாட்டான்).
இருபத்தைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.