ஶ்ரீமத் பாகவதம் - 330

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்து நான்காவது அத்தியாயம்

(ஸ்ருஷ்டி (படைப்பு) ஸம்ஹார (அழித்தல்) க்ரமங்களை நிரூபித்தல்.)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அப்பனே! முன்புள்ள முனிவர்களால் நிச்சயிக்கப்பட்ட ஸாங்க்ய தத்வத்தை உமக்குச் சொல்லுகிறேன்; கேட்பீராக. இதை கீழ்ச்சொன்ன வண்ணம் அறிந்தால், “நான் வேறு, இவன் வேறு” என்னும் பேத புத்தியை விளைக்கும்படியான தேஹாத்ம ப்ரமத்தையும் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்த்ராத்ம ப்ரமத்தையும் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) உடனே துறக்கலாம். ஸாங்கயமாவது, ப்ரக்ருதி (அறிவற்ற ஜடப்பொருட்களின் மூலமான மூலப்ரக்ருதி), ப்ராக்ருதம் (மூலப்ரக்ருதியிலிருந்து தோன்றியவை), புருஷன் (ஜீவாத்மா), ஈச்வரன் ஆகிய இத்தத்வங்களின் பிரிவினை. ஸ்ருஷ்டிக்கு (படைப்புக்கு) முன்பு பரமாத்ம ஸ்வரூபமொன்றே இருந்தது. ப்ரக்ருதியும் (மூலப்ரக்ருதி), புருஷனும் (ஜீவாத்மா) நாம (பெயர்), ரூபங்களுக்கு (உருவங்களுக்கு) இடமாகாமல் ஒன்றாகி, பரமாத்மாவினிடத்தில் மறைந்திருந்தன. 

முன்பு க்ருத யுகத்தில், ஸத்வ குணம் தலையெடுத்து, ப்ரக்ருதி, புருஷ, ஈச்வர தத்வங்களின் ஸ்வரூபங்களை உள்ளபடி அறிந்த பெரியோர்கள், நாம (பெயர்), ரூபங்கள் (உருவம்) இன்றி ஸூக்ஷ்ம தசையை (கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான நிலையை) அடைந்த சேதனாசேதனங்களை (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகவுடைய ஜகத் (உலகிற்குக்) காரணமான இந்தப் பரப்ரஹ்மத்தையே உபாஸித்துக் (த்யானித்துக்)  கொண்டிருந்தார்கள். ஆனது பற்றியே, அந்த க்ருதயுகம், யுகங்களில் முதன்மை பெற்று, நிகரற்றதாயிற்று. ஸத்வாதி குணங்களின் ஏற்றக் குறைவின்றி, ஜாதி, குண, க்ரியைகளென்கிற விகல்பங்கள் (வேறுபாடுகள்) அற்று, வாக்காலும், மனத்தாலும் அளவிடமுடியாத ஸ்வரூப, ஸ்வபாவங்களுடையதும், கால பரிச்சேதம் அற்றதும் (காலத்தினால் வரையறுக்க முடியாததும்), விகாரங்கள் (மாறுபாடுகள்) தீண்டப் பெறாததுமாகிய அந்தப் பரப்ரஹ்மம் ப்ரளய தசையிலும் (படைப்புக்கு முந்தய நிலை), மாயையென்றும், பலனென்றும் இரண்டு விதமாயிருந்தது. 

மாயை, பலன் என்னும் அவ்விரண்டு வஸ்துக்களில், மாயையாவது ப்ரக்ருதி. அது கார்யம் (உண்டாக்கப்பட்டது) என்றும், காரணம் என்றும் இரண்டு வகைப்பட்டிருக்கும். (ஸமஷ்டி (மொத்தம்) என்றும், வ்யஷ்டி (தனித்தனி) என்றும் இரண்டு வகைப்பட்டிருக்கும் என்றும் சொல்லுவார்கள். ஜீவாத்ம, பரமாத்மாக்களுக்கு யோக்யமான (ஏற்ற) ஸ்வருபமுடையதாகையால், இரண்டு விதமாயிருக்கும் என்றும் சொல்லுவார்கள்). 

பலனென்று சொல்லப்படுகிற மற்றொன்று, ஜ்ஞான ரூபமான ஜீவஸ்வரூபம். அந்த ஜீவனையே புருஷனென்றும், ப்ரத்யகாத்மா (ஜீவாத்மா) என்றும் சொல்லுவார்கள். விசித்ரமான கார்யங்களை விளைக்கின்றதாகையால், ப்ரக்ருதி மாயையென்று கூறப்படுகின்றது. ஜீவன், அனுகூல ஜ்ஞான (நன்மை பயக்கும் அறிவு) ரூபமான ஆநந்தத்தையே ஸ்வரூபமாக உடையவனாகையால், ஆநந்தமே புருஷார்த்தமாகையால், பலன் என்று கூறப்படுகிறான். 

என்னை ஆராதிப்பதற்கு வேண்டிய கரண (இந்த்ரியங்கள்), களேபராதிகளை (சரீரம்) கொடுத்து, ஜீவாத்மாக்களை அனுக்ரஹிக்க விரும்பி நான் கால ஸ்வரூபனாகி ப்ரக்ருதியைக் கலக்குகையில், ஏற்றக் குறைவின்றி ஸாம்ய தசையை (ஒரே நிலையை) அடைந்த அந்த ப்ரக்ருதியின் குணங்களாகிய ஸத்வ,  ரஜஸ், தமஸ்ஸுக்கள் ஏற்றக் குறைவுகளை அடைந்தன. அவ்வாறு கலக்கமுற்ற குணங்களினின்று ஸூத்ரம் (நூல்) உண்டாயிற்று. இதுவே மஹத் தத்வம் என்று கூறப்படுகின்றது.

ஸூத்ரம் பற்பல ரத்னங்களுக்கு ஆதாரமாயிருப்பது போல் பல கார்யங்களுக்கு ஆதாரமாயிருக்கையால், இது ஸூத்ரமென்னும் பேர் பெறுகின்றது. என்னுடைய ஸங்கல்பத்தினால் விகாரத்தை (மாறுபாட்டை) அடைகின்ற அந்த மஹத் தத்வத்தினின்று, தேஹாத்ம ப்ரமாதிகளுக்குக் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் - மனக்கலக்கம்; நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) காரணமான அஹங்கார தத்வம் உண்டாயிற்று. அது வைகாரிகம் என்றும், தைஜஸம் என்றும், தாமஸம் என்றும் மூன்று வகைப்பட்டிருக்கும். மற்றும், சப்த தன்மாத்ரம் முதலிய தன்மாத்ரங்கள், இந்த்ரியங்கள், மனஸ்ஸு இவற்றின் காரணமும், சேதன அசேதன ஸ்வரூபமுமாயிருக்கும். அசேதன தத்வங்களெல்லாம் திலதைல (எள்ளினுள் எண்ணை) ந்யாயத்தினால் சேதன கர்ப்பங்களே என்பதை அறிவிக்கும் பொருட்டு, அஹங்கார தத்வத்தைச் சேதன-அசேதன ஸ்வரூபம் என்று சொல்லிற்றேயன்றி, அத்தன்மை இதற்கு மாத்ரம் அஸாதாரணமன்று; எல்லா அசேதன தத்வங்களுக்கும் பொதுவான ஆகாரமே என்று உணர்க. 

சப்த தன்மாத்ரம் முதலிய தன்மாத்ரங்களுக்கு (மஹாபூதங்களின் முந்தய நுட்பமான நிலைக்குக்) காரணமான தாமஸ அஹங்காரத்தினின்று ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்கள் உண்டாயின. தேவதைகளின் அதிஷ்டானம் (ஆதாரம்) உடையவைகளாகையால் தேவதைகள்  என்று கூறப்படுகின்ற இந்திரியங்கள் பதினொன்றும், ராஜஸ அஹங்காரத்தினால் உதவி செய்யப் பெற்ற ஸாத்விக அஹங்காரத்தினின்று உண்டாயின. மஹத்து முதலிய தத்வங்களெல்லாம் அந்தராத்மாவாய்ப் புகுந்திருக்கிற என்னால் தூண்டப்பட்டு, ஒன்றோடொன்று கலந்து, கார்யங்களை விளைக்க வல்லவைகளாகி, எனக்குச் சிறந்த வாஸஸ்தானமாகிய அண்டத்தை (முட்டை வடிவான ப்ரபஞ்சம்) உண்டாக்கின. 

மஹா ஜலத்தின் மேல் மிதந்து கொண்டிருக்கிற அந்த அண்டத்தில், நான் சயனித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய நாபியில் (தொப்பூள்) ஜகத்தாகிற தாமரை மலர் தோற்றியது. அதில், ப்ரஹ்மதேவன் உண்டானான். அவன் ரஜோகுணம் தலையெடுக்கப் பெற்று, தவம்செய்து, என்னுடைய அனுக்ரஹம் பெற்று, அதனால் இவ்வுலகங்களையும், இவற்றிற்கு ரக்ஷகர்களையும் (காப்பாற்றுவோரையும்) படைத்தான். அவ்வுலகங்கள், பூர்லோகமென்றும், புவர்லோகமென்றும், ஸ்வர்லோகமென்றும் பெயர் உடையவைகளாகி, மூன்று வகையாயிருந்தன. அவற்றில், ஸ்வர்லோகம் தேவதைகளுக்கு வாஸஸ்தானமாயிற்று. புவர்லோகம் என்கிற அந்தரிக்ஷலோகம் (மேல் உலகம்) பூதங்களுக்கு வாஸஸ்தானமாயிற்று. பூர்லோகம் மனுஷ்யாதிகளுக்கு வாஸஸ்தானமாயிற்று. இம்மூன்று லோகங்களுக்கும் மேற்பட்ட மஹர்- ஜனாதி- லோகங்கள் ப்ருகு முதலிய ப்ரஹ்ம ரிஷிகளுக்கு வாஸஸ்தானமாயின. 

அஸுரர்களுக்கும், நாகர்களுக்கும் வாஸஸ்தானமாக பூமிக்குக் கீழ் அதல ஆதி லோகங்களைப் படைத்தான். அந்த அதல ஆதி லோகங்கள், பூலோகத்தினுடைய விவரங்களாகையால் (பள்ளங்கள்), அந்த பூலோகத்தில் அடங்கினவைகளே. மஹர் ஆதி லோகங்கள், ஸுகத்தையே முக்யமாக உடையவைகளாகையால், ஸ்வர்லோகத்தில் அடங்கினவைகளே. ஆனது பற்றியே மூன்று லோகங்களென்று சொல்லுகிறார்கள். அவாந்தர (இடைப்பட்ட) லோகங்களையும் சேர்த்துச் சொன்னால் பதினான்கு லோகங்களாகின்றன. ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களை ஸ்வபாவமாகவுடைய ஜீவாத்மாக்களின் கர்மங்களுக்குப் பலனான லோக ப்ராப்திகள் எல்லாம் மூன்று லோகங்களடங்கின ப்ரஹ்மாண்டத்திற்கு உட்பட்டவைகளே. 

ப்ராணாயாம ஆதி ரூபமான யோகம், தவம், ஸந்யாஸ ஆச்ரமம், ஆகிய இவற்றின் பலனான லோகங்கள் ஸத்வகுண மயங்களாகி, பரிசுத்தங்களாயிருக்கும். அவை மஹர் லோகம் என்றும், ஜனர் லோகம் என்றும், தபோ லோகம் என்றும், ஸத்ய லோகம் என்றும் பெயருடையவை. என்னிடத்தில் செய்யப்படும் பக்தி யோகத்திற்கு, என்னுடைய வாஸஸ்தானமாகிய பரமபதமே பலன். அந்தராத்மாவாய் உள் புகுந்து நியமித்துக் கொண்டிருப்பவனும், வெளியில் கால ஸ்வரூபனுமாகிய என்னால், புண்ய, பாப கர்மங்களோடு கூடிய இந்த ஜகத்தெல்லாம் ஸத்வாதி குண பரிணாமமான ப்ரக்ருதி மண்டலத்தில் பிறப்பதும், சாவதுமாயிருக்கின்றது. சிறியதும், பெரியதும், இளைத்தும், பருத்துமிருக்கிற வஸ்து, எதுவெது உண்டோ, அதுவெல்லாம் ப்ரக்ருதி, புருஷன், இவை இரண்டோடும் கூடியதே அன்றித் தனியே இருப்பதன்று. 

ஆதியிலும் (முதலிலும்), அந்தத்திலும் (முடிவிலும்) எந்த வஸ்து உள்ளதோ, அதுவே, மத்யத்திலும் (இடையிலும்) உள்ளது. ஸ்வர்ணத்தினால் செய்யப்பட்ட கைவளை, கிரீடம் முதலியவற்றையும், மண்ணால் செய்யப்பட்ட குடம், மடக்கு முதலியவற்றையும், இவ்விஷயத்தில் த்ருஷ்டாந்தமாக (உதாரணமாகக்) காணலாம். குடம், மடக்கு முதலியவை செய்வதற்கு முன்பும், அவை உடைந்த பின்பும், மண்ணே உள்ளது. குடம், மடக்கு முதலியவை இருக்கிற மத்ய அவஸ்தையிலும் (இடைப்பட்ட நிலையிலும்), அவை மண்ணேயன்றி வேறன்று. 

கைவளை, கிரீடம் முதலியவை செய்வதற்கு முன்பும், அவை அழிந்த பின்பும், ஸ்வர்ணமே உள்ளது. கைவளை, கிரீடம் முதலியவை இருக்கிற மத்ய அவஸ்தையிலும் (இடைப்பட்ட நிலையிலும்) ஸ்வர்ணமே உள்ளதன்றி, வேறன்று. குடம் முதலியவற்றிலும், கைவளை முதலியவற்றிலும், மண்ணும் ஸ்வர்ணமே உள்ளதாயின், குடம் முதலிய விகாரங்களும் (மாறுபாடுகளும்), பெயர்களும், கைவளை முதலிய விகாரங்களும் (மாறுபாடுகளும்), பெயர்களும், ஏதுக்காக என்றால், வ்யவஹாரத்திற்காகவும் (வழக்கிற்காகவும்), ஜலம் கொண்டு வருவது, கை முதலிய இடங்களில் ஆபரணமாக அணிவது முதலிய ப்ரயோஜனத்திற்காகவும். எந்த வஸ்து எந்த உபாதான (மண் குடத்திற்கு மண் போல் material cause) காரணத்தினின்றும் உண்டாயிற்றோ, அந்த வஸ்து அந்த உபாதான காரணத்தைக் காட்டிலும் வேறுபட்டதன்று. மற்றும், அவ்வஸ்து தன்னுருவம் அழிந்தபின்பு, அவ்வுபாதான காரணத்தின் தன்மையை அடையும். ஆகையால், ஒரு வஸ்துவில் எந்த உபாதான காரணத்தின் ஆதியும் (முதலும்), அந்தமும் (முடிவும்) புலப்படுகின்றனவோ, அவ்வுபாதான காரண வஸ்துவே நிலை நின்றதாம்.

குடத்திற்கு ஆதியும் (முதலும்), அந்தமும் (முடிவும்) மண்ணே அல்லவா? அம்மண்ணே, குடம் முதலிய வஸ்துக்களில் நிலை நின்றதாம். தேவ, மனுஷ்யாதி ரூபமான நானாவித (பல வகைப்பட்ட) சரீரங்களுக்கெல்லாம் ப்ரக்ருதியே உபாதான காரணம். ப்ரக்ருதியைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஜீவன், அவற்றிற்கு ஆதாரமாக இருக்கின்றான். (ஜீவன், தேவ, மனுஷ்யாதி சரீரங்களுக்குள் புகுந்து தரித்துக் கொண்டிருக்கிறான்). ஜீவன் ஸ்வரூபத்தினாலும், ஸ்வபாவத்தினாலும் என்றும் மாறாமல், ஒருவாறாயிருப்பவன். அவனுடைய ஜ்ஞானத்திற்கு, காலம் அபிவ்யஞ்சகமாக (வெளிக்காட்டுவதாக) இருக்கின்றது. ஸ்ருஷ்டி (படைப்பு) தசையில் அன்றோ ஜீவாத்மாக்களுக்கு ஜ்ஞான விகாஸம் (அறிவு மலர்ச்சி) உண்டாகின்றது. ப்ரளய (படைப்புக்கு முன்பு) தசையில், ஆத்மாக்கள் ப்ரக்ருதியில் அழுந்தி, ப்ரகாசம் அற்று இருப்பார்கள். 

பரப்ரஹ்மம், அந்த ப்ரக்ருதி (மூலப்ரக்ருதி), புருஷன் (ஜீவாத்மா), காலம் ஆகிய மூன்றையும் சரீரமாக உடையது. ஆகையால் அம்மூன்றும் பரப்ரஹ்மமே. அத்தகைய பரப்ரஹ்மம், நானேயன்றி வேறன்று. ஸத்வாதி குணங்களால் விளையும் ஸ்ருஷ்டியை (படைப்பை) உடைய சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) வஸ்துக்களின் ஸ்திதி (நீடிப்பு), ஸம்ஹாரங்களை (அழிவு) உடைய மஹத்து முதலிய ப்ரபஞ்சம் (உலகம்), பகவானுடைய ஸங்கல்பம் உள்ள வரையில் ஓயாமல் முன்னும் பின்னுமாய் நடந்து கொண்டே இருக்கும். ப்ருதிவி முதலிய லோகங்களின் பிரிவினைகளை உடையதும், ஜனங்களின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்கள் நடக்குமிடமும் ஆகிய ப்ரஹ்மாண்டத்தைக் கால ஸ்வரூபனாகிய நான் ஸம்ஹரிக்க (அழிக்க) நினைக்கையில், அது லோகங்களோடு நாசம் அடைகின்றது. 

சரீரங்கள் அன்னத்தில் மறைகின்றன. (அன்னமில்லாமையில், சரீரங்கள் நாசம் அடைகின்றன). அன்னம் தான்யங்களில் மறைகின்றது. (தான்யங்கள் மறைகின்றமையில், அன்னமும் மறைகின்றது.) தான்யங்கள் பூமியில் மறைகின்றன (பூமியில் விதைத்த தான்யங்கள்,முளைக்கிறது இல்லை). பூமி கந்த (வாசனை) தன்மாத்ரத்தில் (தன்மாத்ரம் என்பது மஹாபூதங்களின் நுட்பமான நிலை) மறைகின்றது. கந்த தன்மாத்ரம் ஜலத்தில் மறைகின்றது. ஜலம் தன்குணமான ரஸ (சுவை) தன்மாத்ரத்தில் மறைகின்றது. ரஸ தன்மாத்ரம் அக்னியில் மறைகின்றது. அக்னி ரூப (ஒளி) தன்மாத்ரத்தில் மறைகின்றது. ரூப தன்மாத்ரம் வாயுவில் மறைகின்றது.வாயு ஸ்பர்ச (தொடு உணர்ச்சி) தன்மாத்ரத்தில் மறைகின்றது. ஸ்பர்ச தன்மாத்ரம் ஆகாசத்தில் மறைகின்றது. ஆகாசம் சப்த  (ஒலி) தன்மாத்ரத்தில் மறைகின்றது. இந்தரியங்கள் தங்கள் காரணமான வைகாரிக அஹங்காரத்தின் அவயவங்களில் மறைகின்றன. 

ஸெளம்யரே! வைகாரிகத்தின் அவயவங்கள், மன இந்த்ரியத்துடன் காரணமான வைகாரிக அஹங்காரத்தில் மறைகின்றன. சப்த தன்மாத்ரம் தன் காரணமான தாமஸ அஹங்காரத்தில் மறைகின்றது. தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் - மனக்கலக்கம்; நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) முதலிய மோஹங்களை விளைக்க வல்லதாகிய மூன்று வகைப்பட்ட அஹங்கார தத்வம், மஹத் தத்வத்தில் மறைகின்றது. அத்யவஸாயத்திற்கு (உறுதியான எண்ணத்திற்குக்) காரணமாகையால், சிறந்த குணமுடைய மஹத்தத்வம், தன் காரணமாகிய ஸத்வாதி குணங்களில் மறைகின்றது. ஸத்வாதி குணங்கள், அவ்யக்தத்தில் (மூலப்ரக்ருதியின் நுட்பமான நிலை) மறைகின்றன. (மஹத்தத்வத்திற்கு குணங்களில் மறைகையாவது, குணங்கள் ஏற்றக் குறைவின்றி ஸாம்ய அவஸ்தையை (ஒரே நிலையை) அடைகையில் மஹத்தத்வம் மறைகையேயாம். ஸாம்ய அவஸ்தையை அடைந்த ஸத்வாதி குணங்கள், அவ்யக்தத்தில் இருக்கின்றன.) அவ்யக்தம் காலத்தில் மறைகின்றது. (காலத்தில் மறைகையாவது, காலத்தோடு ஸம்பந்தித்திருக்கையேயாம்.) 

காலம் என்றும் நித்யமாயிருப்பது. அதற்கு மற்றொன்றிலும் மறைதல் கிடையாது. காலம் ப்ரக்ருதியில் மழுங்கிக் கிடக்கிற ஜீவனோடு ஸம்பந்தித்திருக்கின்றது. ஜீவன், அந்தராத்மாவும் (உள் இருந்து நியமிப்பவனும்) கர்மத்தினால் விளையும் பிறவி அற்றவனுமாகிய என்னிடத்தில் மறைகின்றான். ஸர்வாந்தராத்மாவாகிய நான், என்னிடத்திலேயே இருப்பவனன்றி மற்றொன்றில் மறையும் தன்மையனல்லேன். தேவாதி சரீரங்களின் ஸம்பந்தமாகிற உத்பத்தியும், அவற்றின் வியோகமாகிற (விடுதலாகிற) விநாசமும் (அழிவும்) எனக்குக் கிடையாது.

இவ்வாறு ப்ரக்ருதி, புருஷன், ஈச்வரன், காலம் இவற்றின் உண்மையை ஆராய்ந்தறியும் புருஷனுடைய ஹ்ருதயத்தில், மனோ தோஷத்தினால் உண்டாவதும், “நான் இளைத்திருக்கிறேன்; பருத்திருக்கிறேன்” என்னும் இவை முதலிய விகல்பங்களுக்கு (எண்ணங்களுக்கு) இடமுமாகிய ப்ரமம் (மனக்கலக்கம்), எப்படி நிலை நிற்கும்? 

ஸூர்யோதயம் ஆனபின்பு, இருள் போகாதிருக்குமோ? ஸூர்யோதயம் ஆன பின்பு, இருள் நிலை நிற்க மாட்டாதது போல், இவ்வாறு தத்வங்களை ஆராய்ந்தறியும் புருஷனுக்கு, தேஹாத்ம ப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய ப்ரமங்கள் நிலைநிற்க மாட்டாது. 

ஸமஷ்டி (மொத்தம்), வ்யஷ்டி (தனித்தனி) தத்வங்களின் உண்மையை அறிந்த நான், தேஹ, ஆத்மாக்களுக்கும், ஜீவ, ஈச்வரர்களுக்கும் பேதம் (வேற்றுமை) உண்டா இல்லையா என்னும் ஸந்தேஹமாகிற முடிச்சை அவிழ்ப்பதாகிய ப்ரக்ருதி, புருஷ, கால, ஈச்வர தத்வங்களின் பிரிவினையாகிற ஸாங்கிய விதியை ஸ்ருஷ்டி க்ரமம் (படைப்பு முறை), ஸம்ஹார க்ரமம் (அழிவு முறை) ஆகிய இரண்டு க்ரமங்களாலும் உமக்கு விரிவாக மொழிந்தேன். 

இருபத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை