ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்து மூன்றாவது அத்தியாயம்
(மனத்தை அடக்குவதற்கு உபாயம் சொல்ல முயன்று, அதற்கு நிதர்சனமாக (உதாரணமாக) பிக்ஷூ கீதத்தைக் கூறுதல்.)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவத் பக்தர்களில் முக்யராகிய உத்தவர் இவ்வாறு வினவுகையில், செவிக்கினிய வீரச் செயல்களையுடையவனும், மோக்ஷ பூமியைக் கொடுக்க வல்லவனாகையால் முகுந்தனென்று கூறப்படுகின்றவனும், தாசார்ஹர்களில் (யாதவர்களில்) சிறந்தவமனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், தன் பக்தராகிய உத்தவருடைய வசனத்தைக் கேட்டு, அவரை வெகுமதித்துக் கொண்டு, மேல்வருமாறு கூறினான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ருஹஸ்பதியின் சிஷ்யரே! எவன் துர்ஜனங்களுடைய (கெட்ட மனிதர்களின்) துர்ப்பாஷணங்களால் (கொடிய சொற்களால்) கலங்கின மனத்தை மீளவும் ஸமாதானப்படுத்திக் கொண்டு நிலைநின்றிருக்க வல்லவனோ, அத்தகைய அறிஞன் இவ்வுலகத்தில் எவனும் இல்லவே இல்லை. துர்ஜனங்களுடைய பருஷ வாக்யங்களாகிற (கெட்ட மனிதர்களின் கொடிய சொற்களாகிற) பாணங்கள் (அம்புகள்), மர்ம ஸ்தானங்களில் (உயிர் நிலைகளில்) நிலை நின்று வருத்துவது போல், மர்மஸ்தானங்களில் (உயிர் நிலைகளில்) பாயும்படி நாட்டின பாணங்களும் கூட வருத்த மாட்டாது. (ஆயினும், ஸுக துக்கங்களின் அஸாதாரண காரணத்தை ஆலோசிப்பானாயின், மனத்தை மெல்ல மெல்ல ஸமாதானப்படுத்திக் கொள்ளலாம்).
உத்தவரே! இவ்விஷயத்தில் ஒரு இதிஹாஸம் சொல்லுகிறார்கள். இந்த இதிஹாஸம் கேட்போர்களுக்கு மிகவும் புண்யத்தை விளைக்கும். இதுவே உம்முடைய கேள்விக்கும் உத்தரமாம். ஆகையால், இதைச் சொல்லுகிறேன். மிக்க மனவூக்கத்துடன் கேட்பீராக.
இந்த இதிஹாஸம் துர்ஜனங்களால் (கெட்ட மனிதர்களால்) அவமதிக்கப்பட்ட ஒரு ஸந்நியாஸியால் பாடப்பட்டது. அந்த ஸந்நியாஸி எத்தனை விக்னங்கள் (தடைகள்) நேரினும் நினைத்த கார்யத்தை நிறைவேற்றும் திறமையாகிற தைர்யமுடையவர்; தனக்கு வருகிற ஸுக துக்கங்களெல்லாம் தான் செய்த புண்ய, பாப கர்மங்களின் பரிபாகமே (விளைவே) என்று உறுதியாக நினைத்திருப்பவர்.
அவந்தி தேசத்தில் செல்வத்தினால் மிகவும் ஸம்ருத்தனான (செழிப்புற்ற) ஓர் அந்தணன் இருந்தான். அவன், பயிர், வர்த்தகம் முதலிய தொழில்களால் ஜீவிக்கும் தன்மையன்; தன்னுடைய உதர போஷணத்தையும் (வயிரை வளர்ப்பதையும்) கூட உரியபடி நடத்தும் தன்மையன் அல்லன்; பணத்தில் விருப்பமுடையவன்; அதை ஆர்ஜனம் செய்வதில் (ஸம்பாதிப்பதில்) பேராசை உற்றவன்; மிகவும் கோப ஸ்வபாவமுடையவன். அவன் ஜ்ஞாதிகளையாவது (பங்காளிகள்), அதிதிகளையாவது (விருந்தாளிகள்), வாக்கு மாத்ரத்தினாலும் (சொல்லாலும்) கூட ஆராதிக்க மாட்டான். ஆகையால், இவனுடைய க்ருஹம் நுழைபவர் ஒருவருமின்றி எப்பொழுதும் சூன்யமாய் (காலியாய், வெற்றிடமாய்) இருக்கும். தன் தேஹத்தையும் கூட உரிய காலத்தில் வேண்டிய போகங்களால் உபலாலனம் செய்வதில்லை (சீராட்டுவதில்லை).
துர்நடத்தை (கெட்ட நடத்தை) உடையவனும், தன் வயிற்றிற்கும் கூட உரிய உணவை உட்கொள்ளப் பொறாத லோபியுமான (பேராசைக்காரன், கஞ்சன்) அவ்வந்தணனுடைய பிள்ளைகளும், பந்துக்களும், அவனுக்கு த்ரோஹம் (கெடுதி) செய்தார்கள். பார்யையும், புதல்விகளும், ப்ருத்யர்களும் (வேலைக்காரர்களும்) வருந்தி அவனுக்குச் சிறிதும் ப்ரியம் செய்யவில்லை. அவன் யக்ஷாதிகளைப் (குபேரனின் சேவகர்களைப்) போல் பணத்தைக் காத்துக் கொண்டிருந்தானன்றி, அந்தப் பணத்தின் மேல் படிந்த தூசியையும் கூட அனுபவித்தறியான்.
ஆனது பற்றியே அவன் இஹலோக (இந்த உலக) ஸுகம், பரலோக (வேறு உலக) ஸுகம் ஆகிய இரண்டினின்றும் நழுவலுற்றிருந்தான். ஏனென்றால், அவன் தர்மம், காமம் ஆகிய இவையிரண்டையும் பாராட்டாமலே இருந்தான். ஸம்பாதித்த பணத்திற்குப் பஞ்ச மஹாயஜ்ஞங்களால் {(ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்} அவற்றின் தேவதைகளை ஆராதிக்கையன்றோ (பூஜை செய்வது) ப்ரயோஜனம் (பலன்). அவ்வந்தணன் அவற்றில் எதையும் செய்யாமையால், பணத்தின் பாகஸ்தர்களான (பங்குதாரர்களான) தேவதைகள், ரிஷிகள், பித்ருக்கள், மனுஷ்யர்கள், பூதங்கள் ஆகிய பஞ்ச மஹா யஜ்ஞ தேவதைகள் அவன் மேல் கோபமுற்றனர்.
பூரிதானம் (மிக அதிக அளவில் தானம்) செய்பவரே! அவ்வந்தணன், பாகஸ்தர்களான (பங்குதாரர்களான) அந்தப் பஞ்ச மஹா யஜ்ஞ தேவதைகளை அவமதித்தமையால், தன லாபத்திற்கு ஹேதுவான புண்யம் க்ஷீணிக்கப் (குறையப்) பெற்றான். ஆகையால் பல வருத்தங்களுக்கிடமான க்ருஷி (விவசாயம்) முதலிய வியாபாரங்களைச் செய்து, மிகவும் ச்ரமப்பட்டு ஸம்பாதித்த அவனுடைய பணமெல்லாம் தொலைந்து போயிற்று.
உத்தவரே! இவனுடைய பணத்தில், ஜ்ஞாதிகள் (பங்காளிகள்) சிலவற்றையும், திருடர்கள் சிலவற்றையும் கொண்டு போனார்கள். வீடு எரிந்து போவது முதலிய தெய்வச் செயலால் சில பணங்கள் பாழாயின. பூமியில் புதைத்து வைத்து நெடு நாளாகையில் இன்ன இடத்தில் புதைத்து வைத்தோமென்று தெரியாமையால், சில பணங்கள் பாழாயின. மற்றும், அவனைச் சார்ந்த மனுஷ்யர்கள், சில பணங்களைக் கொண்டு போனார்கள். அன்றியும், மன்னவர்கள் சில பணங்களைக் கொண்டு போனார்கள். இவ்வாறு ஜ்ஞாதிகள் (பங்காளிகள்), திருடர், தெய்வம், காலம், ஸம்பந்திகள் (உறவினர்), மன்னவர் ஆகிய பல வழிகளில் பணமெல்லாம் பாழாகையில், தர்ம காமங்களையும் கைவிட்டு பந்துக்களாலும் உபேக்ஷிக்கப்பட்ட அவ்வந்தணன், பணமெல்லாம் பாழாகையால் அளவற்ற சிந்தையில் அழுந்தினான். பணத்தையெல்லாம் இழந்து நெடும் சிந்தையில் அழுந்தி மனம் பரிதபித்துக் களிப்பற்று, கண்டத்தில் கண்ணீர் தடைபட்டு, பேசவும் முடியாதிருக்கின்ற அவ்வந்தணனுக்குப் பெரிய மன வெறுப்பு உண்டாயிற்று. அவ்வந்தணன் இவ்வாறு மொழிந்தான்.
“ஆ! எனக்கு இப்படிப்பட்ட கஷ்டம் நேர்ந்ததே! நான் என்னுடைய தேஹத்தை (உடலை) வீணுக்கு வருத்தினேன். ஏனென்றால், இவ்வாறு நான் பணம் ஸம்பாதிப்பதற்காகப் பட்ட ஆயாஸம் (முயற்சி) எல்லாம், தர்மத்திற்காகவாவது, காமத்திற்காகவாவது, உபயோகப்படாமல் போய்விட்டதே. பெரும்பாலும் என்னைப்போன்ற க்ருபணர்களுடைய (கஞ்சன்) பணம், ஒருகாலும் ஸுகத்தை விளைக்கிறதில்லை. பின்னையோவென்றால், இவ்வுலகத்தில் ஜீவித்திருக்கும் பொழுது, தேஹ ச்ரமத்தையும் (உடல் கஷ்டத்தையும்), மரணம் அடைந்த பின்பு பரலோகத்தில் நரகத்தையுமே விளைக்கின்றது. புகழ் உடையவர்களுடைய நிர்மலமான (அப்பழுக்கற்ற) புகழையும், குணமுடையவர்களுடைய சிறந்த குணங்களையும், லோபம் (பேராசை) என்னும் துர்க்குணம் (கெட்ட குணம்)சிறிதுளதாயினும், அது குஷ்ட்ட ரோகம் (தொழு நோய்) அழகான உருவத்தைப் பாழாக்குவது போல், பாழாக்கிவிடும். பணம் ஸம்பாதிக்கும் பொழுதும், ஸம்பாதித்த பின்பு அதை வட்டிக்குக் கொடுப்பது முதலிய உபாயங்களால் வளர்க்கும் பொழுதும், உள்ள ஆயாஸம் (முயற்சி, சிரமம்) அளவற்றது. பிறகு, அதைப் பாதுகாக்கும் பொழுது “இதை எவனேனும் திருடிக்கொண்டு போனால் என்ன செய்வோம்?” என்னும் பயம் ஓயாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
பணத்தைப் பிறர்க்கு உபயோகப் படுத்துவதனால் சிலவாகும் பொழுதும், பணத்தைத் தன்னுடைய போகத்திற்காக உபயோகப்படுத்தும் பொழுதும், “ஐயோ! பணம் குறைந்து போய் விடுகிறதே” என்னும் சிந்தை ஓயாதிருக்கும். பணம் அழிந்து போகும் பொழுது, அதை ப்ராணன்களைப் (உயிரைப்) போல் மேலாக நினைத்திருப்பானாகையால், “ஐயோ ப்ராணன் (உயிர்) போகின்றதே” என்னும் ப்ரமம் (மனக்கலக்கம்) உண்டாகும். இவ்வாறு பணம் எக்காலத்திலும் ப்ராணிகளுக்கு துக்கத்தையே விளைக்கும்.
திருட்டுத் தனம், பிறரை ஹிம்ஸித்தல், பொய் பேசுதல், தம்பம் (வீண் பெருமை), பிறர் ஸொத்தை எப்படியாயினும் பறித்துக் கொண்டு போக வேண்டும் என்னும் பேராசை, அதற்குத் தடை செய்பவரிடத்தில் கோபம் ஆகிய இவ்வாறு துர்க்குணங்களும் (கெட்ட குணங்களும்), பணம் ஸம்பாதிக்க முயலும் பொழுது நேரிடுகின்றன. பணம் கிடைத்த பின்பு, பெரியோர்களிடத்தில் அவர்கள் பெருமையைப் பாராட்டாமல் தாழ்வாக நினைப்பதற்குக் காரணமான கர்வம், சாஸ்த்ரங்களில் “இது விதிக்கப்பட்டது. இதைச் செய்யலாம். இது சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப் (விலக்கப்) பட்டது. இதைச் செய்யலாகாது” என்னும் விவேகமற்றிருக்கையாகிற மதம் (எண்ணம், கொள்கை), தேஹானுபந்திக்களுக்குங்கூட (உடன் இருப்பவர்களுக்கும்) அப்ரியம் (தீங்கு) செய்கை, அகாரண விரோதமாகிற வைரம் (காரணமற்ற பகைமை), கலஹம் (சண்டை), ஸ்த்ரீகள் (பெண்கள்), சூது, சதுரங்கம், மத்யபானம் (கள் குடித்தல்) இவைகளில் விருப்பம், ஆகிய இவ்வனர்த்தங்கள் (கேடுகள்) உண்டாகின்றன.
இவ்வனர்த்தங்கள் (தீங்குகள்) பதினைந்தும் பணத்திற்குக் காரணங்களும், பணத்தைக் காரணமாக உடையவைகளுமாயிருக்கும். இவ்வாறு அனர்த்தங்களுக்கிடம் ஆகையால் அனர்த்தம் (தீமை) என்னும் பேருடைய அர்த்தத்தை (பணத்தை) நன்மையில் விருப்பமுடையவன் தூரத்தில் துறக்க வேண்டும். ஒருவனுடைய ஆபத்து ஸம்பத்துக்களையே, தனக்கும் ஆபத்து ஸம்பத்துக்களாக நினைத்து, ஒருமித்து இருப்பவர்களும், ஒருவர்க்கொருவர் மிகுந்த ஸ்னேஹமுடையவர்களுமான உடன் பிறந்தவர்களும், பார்யைகளும், தந்தைகளும், மற்றவர்களும் ஒரு காகணிகை மாத்ரம் (காகணிகை மிகவும் அற்பமான ஓர் நாணயம்) வேறுபடுமாயின், அவ்வளவில் மனம் பேதித்து (மாறி), முன்புள்ள ஸ்னேஹமெல்லாம் பாழாகி, ஒருவர்க்கு ஒருவர் சத்ருக்களாய் (எதிரிகளாய்) விடுகிறார்கள்.
பணத்தில் மிகவும் அற்பமான அம்சத்தில் சிறிது வியத்யாஸம் (வேறுபாடு) நேரிடுகையால், இந்த உடன் பிறந்தவர் முதலியவர்கள் அனைவரும் கோபமுற்று, அந்தக் கோபம் ஆயுள்வரையிலும் தொடரப்பெற்று, பொறாமையும் வளர்ந்து, நெடு நாளாயிருந்த ஸ்னேஹத்தை எல்லாம் சீக்ரத்தில் துறந்து, ஒருவர்க்கொருவர் ப்ராணன்களை (உயிரை) விடுவதும், ஒருவரை ஒருவர் வதிப்பதும் செய்கிறார்கள்.
தேவர்களும் கூட ஆசைப்படும்படியான மனுஷ்ய ஜன்மத்தைப் பெற்று, அதிலும் ப்ராஹ்மணோத்தமனாகப் பிறந்தும், அவற்றால் ஸாதிக்கக்கூடிய நன்மையைச் சிறிதும் பாராட்டாமல் கேவலம் பணத்திலேயே விருப்பம் கொண்டு, தங்கள் ஹிதத்தைப் (நன்மையைப்) பாழ் செய்கிறவர்கள் அசுப கதியாகிய (கெட்ட இடமாகிய) நரகத்தையே அடைவார்கள். இந்த மனுஷ்ய தேஹம், ஸ்வர்க்கத்தையும், அபவர்க்கத்தையும் (மோக்ஷத்தையும்) ஸாதித்துக் கொடுக்க வல்லது. (ஆனது பற்றியே இதைத் தேவர்களும் விரும்புகிறார்கள்.) இத்தகைய மனுஷ்ய தேஹத்தைப் பெற்றும், விவேகமுடையவன் எவன்தான் அனர்த்தங்களுக்கு இடமான பணத்தில் மனப்பற்று செய்வான்?
பணத்திற்கு பாகஸ்தர்களான (பங்குதாரர்களான) தேவதைகள், ரிஷிகள், பித்ருக்கள், பூதங்கள், ஜ்ஞாதிகள் (பங்காளிகள்), பந்துக்கள், தன் தேஹம் ஆகிய இவற்றிற்குப் பணத்தைப் பங்கிட்டு உபயோகப்படுத்தாமல், எவன் அதைப் பூதம் போல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறானோ, அவன் நரகத்தில் விழுவானன்றி, நன்மையை அடையமாட்டான். (பணம் அனர்த்தங்களுக்கு இடம். ஆகையால், அதைத் தேடலாகாது. தேடினும், பஞ்ச மஹா யஜ்ஞாதி கர்மங்களுக்குப் போதுமான அளவு பெறலாமன்றி, அதற்கு மேல் அதைப் பெறலாகாது. மேன் மேலெனப் பெறினும், கீழ்ச் சொன்ன தேவாதிகளுக்கு உபயோகப்படுத்தினால் கெடுதியை அடைய மாட்டான். இல்லையாயின், கெடுதியை அடைவது நிச்சயம்).
நான் இவ்வாறு பணத்தாசையால் இழுக்கப்பட்டு நன்மையில் மனவூக்கம் அற்றிருக்கையில், தர்ம, காம, மோக்ஷங்களை நிறைவேற்றிக் கொடுக்க வல்லவைகளான என்னுடைய பணம், வயது, பலம் இவை எல்லாம் பாழாய்விட்டன. இப்பொழுது கிழத் தன்மையை அடைந்த நான், எதைச் சாதிப்பேன்?
இவ்வாறு அனர்த்தங்களுக்கு இடம் என்பதை அறிந்தும், இவ்வுலகத்திலுள்ள ஜனம் (மனிதர்கள்) வீணான அந்தப் பணத்தாசையால் இழுக்கப்பட்டு அடிக்கடி வருந்துகின்றது. ஆகையால், இவ்வுலகம் முழுவதும் ஒருவனுடைய மாயையினால் மதி மயங்கி இவ்வாறு பணத்தாசையால் இழுக்கப்படுகின்றது என்பது நிச்சயம். இல்லையாயின், அர்த்தம் அனர்த்தங்களுக்கு (தீமைகளுக்கு) இடம் என்பது தெரிந்தும், அதற்காக ஒருவன் முயற்சி செய்து, பணத்தைச் சம்பாதித்து, அதை உரியபடி உபயோகப்படுத்தானாயின், அது அனர்த்தங்களை (தீமைகளை) விளைக்கும் என்பது உண்மையேயாயினும், தான போகங்களுக்கு உபயோகப்படுமாயின், அது புருஷார்த்தமன்றோ என்றால், அதுவும் புருஷார்த்தமாக மாட்டாது.
தான போகங்களுக்காகவும் கூடப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டிய அவச்யமில்லை. ஏனென்றால், பிறர்க்கு தானம் செய்வானாயின், அவனுக்குப் பணம் அழியாமல், மேன் மேலும் வளர்ந்து வரும்; மற்றும், விரும்பின போகங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கும். ஆயினும், அந்தப் பணங்களாலாவது, அந்தக் காம போகங்களாலாவது, என்ன புருஷார்த்தம் கைகூடும்? காம போகமே புருஷார்த்தம். அவற்றை நிறைவேற்றுவதற்காகப் பணங்களும் வேண்டும் என்றால், அதுவும் சரியன்று.
அந்தக் காம போகங்கள் புருஷார்த்தமாகிலன்றோ அவற்றிற்காகப் பணம் வேண்டும். அவையே புருஷார்த்தமாக மாட்டாவாயின், அவற்றிற்காக ஒருவன் பணத்தை விரும்பலாகுமோ? புண்ய கர்மங்களை அனுஷ்டிப்பதற்காகப் பணம் வேண்டுமன்றோ என்றால், அவற்றிற்காகவும் அது வேண்டியதில்லை. பலன்களை விரும்பிச் செய்யும் புண்ய கர்மங்கள் மேன்மேலும் ஜன்மங்களை விளைக்குமேயன்றி, மோக்ஷத்தை விளைக்க மாட்டாது. அந்த ஜன்மங்களில் போகம் (விரும்பியதை அனுபவிப்பது) ஸித்திக்குமல்லவா என்றால், எந்த ஜன்மத்திலும் விரும்பின அளவு போகங்கள் ஸித்திக்கமாட்டாது.
போகங்களில் மனத்தைச் செலுத்துவானாயின், மேன் மேலும் அவற்றை அனுபவிக்க வேண்டுமென்று தோன்றுமே அன்றி, அனுபவித்தது போதும் என்று தோன்றாது. இன்னம் அனுபவிக்க வேண்டுமென்று இவன் விரும்பிக் கொண்டே இருக்கையில் திடீரென்று மரணம் அடைவான். மரணமென்பது தவறாமல் வந்தே தீரும் தர்மமன்றோ? எந்த ஜன்மத்திலும் போகங்களில் விருப்பமுடையவன் அனுபவித்தது போதும் என்னும் திருப்தி உண்டாகப் பெறமாட்டான். விரும்பிக் கொண்டே இருக்கையில், திடீரென்று மரணத்தையும் அடைவானாகையால், போகங்களை விரும்புகிறவனுக்கு எந்த ஜன்மத்திலும் விரும்பின அளவு போகம் உண்டாகாது. ஆகையால், ம்ருத்யுவினிடம் அகப்பட்டு, அதினின்று தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் வருந்தும் புருஷனுக்கு, தான போகங்களால் மேன்மேலும் பணத்தை வளர்ப்பவைகளும், காம போகங்களை நிறைவேற்றிக் கொடுப்பவைகளுமான பணங்களாலாவது, காம போகங்களாலாவது, மேன்மேலும் ஜன்மங்களை விளைக்கின்ற புண்ய கர்மங்களாலாவது, என்ன ப்ரயோஜனம்? ஒரு ப்ரயோஜனமும் இல்லை.
ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ஸமஸ்த தேவதா ஸ்வரூபனும் (எல்லா தேவதகளின் வடிவானவனும்) தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய ஸர்வேச்வரன், என் விஷயத்தில் அனுக்ரஹம் செய்தான். இது நிச்சயம். இல்லையாயின், எனக்கு இந்த அவஸ்தையும், ஸம்ஸார ஸாகரத்தினின்று என்னைக் கரையேற்றும் ஓடம் போன்ற இந்த மன வெறுப்பும் எப்படி உண்டாகும்? அந்த ஸர்வேச்வரனே என்னிடத்தில் அருள் புரிந்து, இந்த துரவஸ்தையையும் (கெட்ட நிலையையும்), இந்த மன வெறுப்பையும் எனக்கு விளைவித்தானன்றி வேறில்லை. இவ்வாறு மன வெறுப்பு உண்டாகப் பெற்ற நான், மேலுள்ள ஆயுள் முழுவதும் தவத்தினால் என் சரீரத்தை உலர்த்தப் போகிறேன்.
ஸமஸ்த ப்ராணிகளுக்கும் சிறந்த புருஷார்த்தமாக இருப்பவனும், அந்தராத்மாவும் ஆகிய பரமாத்மாவினிடத்தில் பக்தி உண்டாகப் பெற்று, மற்றொன்றிலும் மனம் செல்லாமல் அவனிடத்திலேயே ஊக்க முற்றிருப்பேனாயின், மோக்ஷமாகிற ஸித்தியைப் பெறுவேன். மற்றும், அவனிடத்தில் பக்தி உண்டாகப் பெறுவேனாயின், அப்பொழுது மூன்று லோகங்களுக்கும் ப்ரபுக்களாகிய தேவதைகள் அனைவரும் என்னிடத்தில் ஸந்தோஷம் அடைவார்கள். என்னுடைய துர் (கெட்ட) நடத்தையைக் கண்டு என்மனத்தில் இப்பொழுது உண்டாயிருக்கும் கருத்தை அறியப்பெறாத உலகத்தவர் ஸந்தோஷம் அடையார்களாயினும், தேவதைகளுக்கு என் மனக் கருத்து நன்றாகத் தெரியும் ஆகையால் அவர்கள் என் விஷயத்தில் ஸந்தோஷம் அடைவார்கள் என்பது நிச்சயம். நெடுநாள் துர்ப்புத்தியாயிருந்த (கெட்ட புத்தி கொண்ட) நீ மேலுள்ள அற்ப காலத்தில் எப்படி ஸித்தியைப் பெறுவாயென்று சங்கிக்க (ஸந்தேஹிக்க) இடமில்லை. கட்வாங்க மன்னவன், ஒரு முஹூர்த்த காலத்தில் பரப்ரஹ்மமென்று கூறப்படுகிற பரம புருஷனுடைய லோகத்தைப் பெறுகையாகிற மோக்ஷத்தை ஸாதித்துக் கொண்டானல்லவா? அவ்வாறே நானும் ஸாதிப்பேன்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அவந்தி தேசத்தில் பிறந்தவனாகிய அந்த ப்ராஹ்மணோத்தமன், இவ்வாறு நிச்சயித்துக் கொண்டு, ஹ்ருதய (மனதில் உள்ள) க்ரந்திகளான (முடிச்சுக்களான) ராக (விருப்பு), த்வேஷாதிகளைத் (வெறுப்புக்களைத்) துறந்து, தெளிந்த மனமுடையவனாகி, ஸந்நியாஸ ஆச்ரமத்தைக் கைப்பற்றினான். அவ்வந்தணன், மனத்தையும், இந்த்ரியங்களையும், ப்ராணன்களையும் அடக்கிக்கொண்டு, பூமியில் திரிந்து கொண்டிருந்தான். எங்கும் பற்றின்றி, இவன் இன்னவனென்று தெரியாதபடி பட்டணங்களிலும், க்ராமங்களிலும், பிக்ஷைக்காக நுழைந்து, கொண்டிருந்தான்.
மங்கள ஸ்வபாவமுடையவரே! வயது சென்றவனும், எண்ணெய் தேய்த்துக் கொள்வது, அழுக்கைத் தேய்த்துக் குளிப்பது முதலிய ஸம்ஸ்காரங்கள் எவையுமில்லாமையால் உடம்பெல்லாம் அழுக்கடைந்து பித்தம் பிடித்தவன் போன்றிருப்பவனுமாகிய அந்தத் துறவி அந்தணனைக் கண்டு, துஷ்ட ஜனங்கள் (கெட்ட மனிதர்கள்) இவன் இன்னவனென்று அடையாளங்களால் தெரிந்து கொண்டு, பலவாறு பரிபவம் (அவமானம்) செய்தார்கள். சிலர் அவனுடைய த்ரிதண்டத்தையும், சிலர் ஜல (தண்ணீர்) பாத்ரத்தையும், சிலர் கமண்டலுவையும், சிலர் பீடத்தையும் (மணை), சிலர் அக்ஷமாலையையும் (ஜபமாலை), சிலர் கந்தல் துணிகளையும் பிடுங்கிக் கொண்டார்கள்.
அவர்கள், அவற்றை அவனுக்குக் கொடுத்து விடுபவர் போல், “ஓ பிக்ஷூ (ஸன்யாஸி)! இதோ உன் ஸொத்துக்களை எடுத்துக் கொண்டு போ” என்று சொல்லிக் காட்டி, அபிநயம் செய்து (நடித்து), மீளவும் அவற்றை எடுத்துக் கொண்டார்கள். மற்றும், பாபிஷ்டர்களான (பாபிகளான) சிலர், அவன் பிக்ஷை (பிச்சை) எடுத்த அன்னத்தைப் புசித்துக் கொண்டிருக்கையில், அவ்வன்னத்தில் மூத்ரம் பெய்வதும், அவன் தலைமேல் எச்சில் உமிழ்வதும், செய்தார்கள். மற்றும், அவன் பேசாமல் மௌனமாயிருக்கையில், அவனைப் பேசும்படி தூண்டுவதும், தூண்டியும் பேசாதிருப்பானாயின், அடிப்பதும் செய்தார்கள்.
சிலர் “இவன் திருடன்” என்று சொல்லிக் கொண்டு வாக்குக்களால் விரட்டினார்கள். சிலர் “இவனைக் கொல்லுங்கள். கொல்லுங்கள்” என்று சொல்லிக் கொண்டு, கயிறுகளால் கட்டினார்கள். சிலர் சீயென்று நிந்தித்தார்கள். “இவன் உண்மையில் துஷ்ட ஸ்வபாவன் (கொடியவன்). மேலுக்கு தார்மிக வேஷம் (நல்லவன் போல் வேடம்) பூண்டு, ஸந்யாஸ ஆச்ரமத்திற்கு அடையாளமான த்ரிதண்டத்தை ஏந்திக் கொண்டிருக்கின்றான். ஆகையால், இவன் வஞ்சகனே (ஏமாற்றுபவனே) அன்றி, உண்மையில் தார்மிகன் (நல்லவன்) அல்லன். இவனுடைய பணமெல்லாம் பாழாய்விட்டது. ஆகையால், இவனுடைய பந்துக்கள் அனைவரும் இவனைக் கைவிட்டார்கள். அதனால் இவன் இந்த வ்ருத்தியை (விழைப்பை) ஏற்றுக் கொண்டான். இவன் மஹா பலமுடையவன். இவனுடைய ஹ்ருதயம் கல்லைக் காட்டிலும் உறுதியுள்ளது. இவன் பர்வத ராஜன் போல் மிகுந்த பொறுமையுடையவன். இவன் கொக்குப்போல் தன் மனோ நிச்சயத்தை இவ்வேஷத்தினால் மறைத்துக் கொண்டு, மௌனத்தினால் அன்னம் முதலிய தன் ப்ரயோஜனத்தை நிறைவேற்றிக் கொள்கிறான்” என்று, இவ்வாறு மொழிந்து கொண்டு, சிலர் அவனை அவமதித்துப் பரிஹாஸம் (கேலி) செய்தார்கள்.
சிலர், அவன் மேல் அபானவாயுவை (கீழ் வழியாகச் செல்லும் துர் நாற்றமுடைய வாயு) விட்டார்கள். சிலர் அவ்வந்தணனைக் கயிறு முதலியவற்றால் கட்டுவதும், சிலர் அவன் போகும் பொழுது அவனை வழி மடக்குவதும் செய்து, பொம்மையைப் போல் அவமதித்தார்கள். அவ்வந்தணன், இவ்வாறு துர்ஜனங்களால் (கெட்ட மனிதர்களால்) ஏற்படுகிற பௌதிகம், சீதம் (குளிர்), உஷ்ணம் (சூடு) முதலியவற்றால் உண்டாகிற தெய்விகம், கிழத்தனம் முதலியவற்றால் உண்டாகிற தைஹிகம் ஆகிய அவ்வப்பொழுது நேரிடுகிற துக்கங்களையெல்லாம், “இவையெல்லாம் நம்முடைய பூர்வகர்மத்தின் பலமாக ஏற்பட்டவை” என்றும் “இவற்றை நாம் அவச்யம் அனுபவித்தே தீரவேண்டும்” என்றும் நிச்சயித்துக்கொண்டு, அவற்றில் சிறிதும் மனவிகாரம் மன மாற்றம்) அற்றிருந்தான். அவ்வந்தணன் தம்மைப் படுகுழியில் விழச் செய்யும் பாபிஷ்ட்டர்களான (பாபிகளான) மனுஷ்யாதமர்களால் (தாழ்ந்த மனிதர்களால்) பரிபவிக்கப்பட்டும் (அவமதிக்கப்பட்டும்), ஸத்வ குணத்தினால் உண்டாகும் தைர்யத்தை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய தர்மத்தினின்றும் நழுவாது, நிலை நின்று தனக்குள் இவ்வாறு சொல்லிக் கொண்டான்.
பிக்ஷூ சொல்லுகிறான்:- இவ்வுலகத்திலுள்ள ஜனங்களில் சிலர் என்னை ஆதரித்து ஸுகத்தையும், சிலர் பரிபவித்து (அவமதித்து) துக்கத்தையும் விளைக்கின்றார்கள். ஆயினும், அவர்கள் என்னுடைய ஸுக, துக்கங்களுக்குக் காரணமல்லர். மற்றும், ஈச்வரன், ஆத்மா, ஸூர்யன் முதலிய க்ரஹங்கள், புண்ய, பாப கர்மங்கள், காலம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்று காரணமாகலாமோ என்றால், அதுவுமில்லை. பின்னையோ என்றால் ஸம்ஸார சக்ரத்தைச் சுழற்றுகிற மனமே காரணமென்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.
ஒருவராலும் அடக்க முடியாததாகிய மனம், ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலிய குணங்களை விளைக்கின்றது. அவற்றினின்று புண்ய கர்மங்களும், பாபகர்மங்களும், மிச்ர (கலப்பு) கர்மங்களும் உண்டாகின்றன. விலஷணமான (வேறு வேறான) அக்கர்மங்களால் அவ்வவற்றிற்கு உரிய தேவ, திர்யக்கு (விலங்கு), மனுஷ்யாதி ஜன்மங்கள் உண்டாகின்றன. (அவற்றில் ஸத்வ குண மூலமான புண்யகர்மங்களால் தேவாதி ஜன்மங்களும், தமோ குண மூலமான பாப கர்மங்களால் திர்யக்கு (விலங்கு) ஜன்மங்களும், ரஜோ குண மூலமான மிச்ர (கலப்பு) கர்மங்களால் மனுஷ்ய ஜன்மங்களும் உண்டாகின்றன என்று உணர்க). (ஆனால், ஜீவனுடைய ஸுக, துக்கங்களுக்கு மனம் காரணமாகிறது தேஹ மூலமாகவென்றே கொள்ள வேண்டும். அந்தத் தேஹ ஸம்பந்தம் ஈச்வரனுக்கும் உண்டாகையால், அவனுக்கும் அந்த சுக, துக்கங்கள் உண்டாக வேண்டுமே என்றால், அப்படியில்லை). ஏனென்றால், ஈச்வரன் ஸங்கல்ப விகல்பங்களுக்கு இடமான மனத்தினால் உண்டாகக் கூடிய அஹங்கார மமகாரங்களாகிற சேஷ்டை (செயல்) அற்றவன்; சேதன, அசேதனங்களுக்குள் நுழைந்து தரித்துக் கொண்டிருக்கும் தன்மையன்; ஸ்வர்ணம் போல் பளபள என்று ப்ரகாசித்துக் கொண்டிருப்பவன்; எப்பொழுதும் என்னை விட்டுப் பிரியாமல் என்னுடைய ஸுக, துக்கங்களைத் தன்னுடைய ஸுக, துக்கங்களாகப் பாவித்து என்னுடைய ஹிதத்தையே (நன்மையையே) நோக்கும் தன்மையன். அவன் மனத்தை ஸாக்ஷாத்கரிக்கிறான் (நேராகப் பார்க்கிறான்).
இந்த ஜீவனோ என்றால், தன்னுடைய தேஹத்தையே (உடலையே) ஆத்மாவாக அபிமானித்து (நினைத்து), சப்தாதி விஷயங்களை அனுபவித்துக் கொண்டு, மேன்மேலும் அவற்றில் பற்றுடையவனாகி, தேஹ பந்தத்தை (உடலாகிற கட்டை) அடைகின்றான். ஆகையால், ஸுக, துக்கங்கள் அந்த ஜீவாத்மாவுக்கே அன்றி, பரமாத்மாவுக்கு அவை கிடையாது. கேவல சரீர ஸம்பந்தமே ஸுக, துக்கங்களுக்குக் காரணமாகாது.
பின்னையோவென்றால், குண கர்மங்களுக்குட்பட்டு இருக்கையே அவற்றிற்குக் காரணமாம். குணங்களாவன ஸத்வாதி குணங்களின் பரிணாமங்களான சப்தாதி விஷயங்கள். கர்மங்களாவன அவற்றைப் பெறுதற்காகச் செய்யும் புண்ய, பாப கர்மங்கள். அவற்றிற்கு உட்பட்டிருக்கையாவது சப்தாதி விஷயங்களில் விருப்பமுற்று, அவற்றைப் பெறுதற்காகப் புண்ய, பாப கர்மங்களைச் செய்கை. பரமாத்மாவுக்கு அத்தன்மையில்லாமையால் அவ்வழியால் வரும் ஸுக, துக்கங்களும் கிடையாது.
ஜீவனோ என்றால், குண, கர்மங்களுக்கு உட்பட்டவனாகையால், அவனுக்கே அவை உள்ளவை. இவ்வாறு மனமே ஸுக, துக்கங்களுக்குக் காரணமாகையால், அதை அடக்கினால் தான் அந்த ஸுக, துக்கங்கள் நிவர்த்திக்கும் (நீங்கும்). தானம், தத்தமது வர்ணாச்ரமங்களுக்குரிய தர்மங்களை அனுஷ்டிக்கை, யம-நியமங்கள், அத்யயனம் செய்கை, மற்றுமுள்ள நற்செய்கைகள், ஏகாதசி உபவாஸம் முதலிய ஸாத்விக வ்ரதங்கள் ஆகிய இவையெல்லாம் மன அடக்கத்தையே முக்ய பலமாகவுடையவை. யஜ்ஞ, தானாதிகளெல்லாம் வேதனம் என்னும் பேருடைய யோகத்திற்கு அங்கமென்று சுருதிகளில் சொல்லியிருக்க, அவையெல்லாம் மனோநிக்ரஹத்திற்கே (மனதை அடக்கவே) அங்கங்களென்று சொல்லுவது எவ்வாறு சேருமென்றால், அந்த மனோநிக்ரஹமே (மனதை அடக்குவதே) சுருதிகளில் சொல்லப்படுகிற வேதனம் என்னும் பேருடைய மேலான யோகமாமன்றி, வேறொன்றும் அன்று.
யோகமாவது மனத்தை விஷயாந்தரங்களில் (வேறு விஷயங்களில்) போகவொட்டாமல் தடுத்து, பரமாத்மாவினிடத்திலேயே நிலை நிறுத்துகை. இதுவே மனோநிக்ரஹம் (மனதை அடக்குவது). ஆகையால், சுருதியில் சொன்னதோடு விரோதமில்லை என்று உணர்க.
எவனுடைய மனம் ராக (விருப்பு), த்வேஷாதிகள் (வெறுப்பு) தீண்டப்பெறாமல் சாந்தமாயிருக்கின்றதோ, அவனுக்கு தானாதிகளால் ஸாதிக்க வேண்டிய ப்ரயோஜனம் என்ன இருக்கின்றது? (பிறனுக்கு உபதேசிப்பது போல் தன்னைக்குறித்துத் தானே சொல்லிக்கொள்கிறான்.) நிரூபித்துப் பார்த்துச் சொல்லுவாயாக.
நிரூபித்துப் பார்க்கையில், ஒன்றுமே இல்லை என்று நன்றாகத் தெரியவரும். எவனுடைய மனம் கட்டுக்கடங்காமல் ராக (விருப்பு), த்வேஷாதிகளுக்கு (வெறுப்பு) உட்பட்டுச் சோம்பல் முதலியவைகளால் தெளிவற்று மழுங்கிக் கிடக்குமோ, அவனுக்கு இந்த தானாதிகளால் ஆக வேண்டிய வேறு ப்ரயோஜனம் என்ன இருக்கின்றது?
மோக்ஷத்தில் விருப்பமுடையவனுக்கு ஸமாதியென்றும், யோகமென்றும் சொல்லப்படுகிற மனோநிக்ரஹமே (மனதை அடக்குவதே) முக்ய ஸாதனமாகையால், அவன் செய்யும் தானாதிகளுக்குப் பலன் அந்த மனோநிக்ரஹமே (மனதை அடக்குவதே). தானாதிகளுக்குச் சொன்ன அந்தந்தப் பலன்கள் முமுக்ஷுவுக்கு (மோட்சத்தை விரும்புபவனுக்கு) அனிஷ்டங்கள் (விருப்பம் இல்லாதவை, தீமையானவை) ஆகையால், அவன் அந்தப் பலன்களைக் குறித்து அவற்றை அனுஷ்டிப்பவன் அல்லன். ஆகையால், முமுக்ஷு அனுஷ்டிக்கிற தானாதிகளுக்குப் பலன் மனோநிக்ரஹமே (மனதை அடக்குவதே) அன்றி மற்றொன்றும் அன்று.
ஆனால், முமுக்ஷு (மோட்சத்தை விரும்புபவன்) அனுஷ்டிக்கிற தானாதிகளுக்கு மனோநிக்ரஹம் (மனதை அடக்குவது) மாத்ரம் தான் பலனோ? மற்ற இந்திரியங்களின் நிக்ரஹமும் (அடக்குதலும்) பலனாக மாட்டாதோ என்றால், ஆகமாட்டாது. ஏனென்றால், மற்ற இந்திரியங்களும் அவற்றின் அதிஷ்ட்டான தேவதைகளும் (ஆதாரமான தேவதைகளும்) மனத்திற்கு உட்பட்டவை. மனமோ என்றால் ஒன்றுக்கும் உட்பட்டதன்று. அப்படியாயின், அம்மனம் தானாதிகளால் தான் எப்படி வசப்படுமென்றால், குண கர்மங்களுக்கு உட்படாமல் தன்னுடைய தேஜஸ்ஸினால் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் தன்மையனான பரமபுருஷன், தானாதிகளால் ஆராதிக்கப்பட்டு, ஸந்தோஷமுற்று, ஒன்றுக்கும் வசப்படாத அம்மனத்தையும் வசப்படுத்தி, தன்னிடத்தில் ஊக்கமுறச் செய்வான்.
அப்பரமபுருஷன், பலமுள்ள வஸ்துக்களைக் காட்டிலும் மிகுந்த பலமுடையவன்; மற்றும், மனம் முதலிய இந்த்ரியங்களை அதிஷ்ட்டானம் செய்யும் (நியமிக்கும்) தேவர்களுக்கும் தேவன்; அந்த தேவர்களும், நாம் நம்முடைய அதிகாரத்தைக் குறைவற நடத்தாது போவோமாயின், நமக்கு என்ன தண்டனை நேருமோ என்று பயமுறும் படி பயங்கரனாயிருப்பவன். ஆகையால், மனத்தை வசப்படுத்துவது, அவனுக்கு ஒரு பொருளன்று.
சிலர் பரமபுருஷனுடைய அனுக்ரஹம் தவிர மற்ற உபாயங்களால் வெல்ல முடியாததும், பொறுக்க முடியாத ராக (விருப்பு), த்வேஷாதி (வெறுப்பு) ரூபமான வேகமுடையதும், வருத்தங்களை விளைப்பதுமாகிய மனமாகிற சத்ருவை ஜயிக்காமல், மனுஷ்யர்களோடு வீண் வைரத்தை (பகைமையை) ஏற்றுக்கொண்டு, சிலரை உதாஸீனர்களாகவும் (ஒதுக்கப்படுபவர்களாகவும்), சிலரைச் சத்ருக்களாகவும் (எதிரிகளாகவும்) கற்பிக்கிறார்கள். மனத்தையே முக்ய காரணமாகவுடைய இந்த தேவ, மனுஷ்யாதி தேஹங்களில் ஏதேனுமொன்றைப் பெற்று, அத்தேஹத்தில் ஆத்மாபிமானமும் (இந்த உடலே ஆத்மா என்ற மனக்கலக்கமும்), தேஹானுபந்திகளிடத்தில் (உடனிருப்பவரிடத்தில்) என்னுடையவர்கள் என்னும் அபிமானமும் (எண்ணமும்) உண்டாகி, அவைகளால் மதி மயங்கி, “நான் இன்னவன், இவன் வேறுபட்டவன்” என்னும் இவை முதலிய ப்ரமங்களால் (மனக்கலக்கங்களால்) அபாரமான ஸம்ஸார ஸாகரத்தில் விழுந்து, சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
ஸுக, துக்கங்களுக்கு மனமே காரணமென்று கொள்ளாமல், ஒரு ப்ராணி மற்றொரு ப்ராணியின் ஸுக, துக்கங்களுக்குக் காரணமென்று கொள்ளும் பக்ஷத்தில், “ப்ராணி என்பது ஆத்மாவா? தேஹமா? இரண்டுமா?” என்று விசாரிக்க வேண்டும். ஆத்மாவென்கிற பக்ஷத்தை மேல் விசாரிப்போம்.
ப்ராணியென்பது தேஹம் (உடல்) என்றால், ஒரு தேஹம் மற்றொரு தேஹத்தின் ஸுக, துக்கங்களுக்குக் காரணம் என்பதாம். ஒரு தேஹம் ஸுக, துக்கங்களை விளைப்பதும், மற்றொரு தேஹம் அவற்றை அனுபவிப்பதுமாயிருந்தால், அதில் ஆத்மாவுக்கு என்ன ஸம்பந்தம் இருக்கிறது? ஒன்றும் இல்லை. ப்ருதிவி முதலிய பூதங்களின் பரிணாமமான தேஹங்களன்றோ ஸுகதுக்கங்களை விளைப்பதும், அனுபவிப்பதுமாக இருக்கின்றன? ஆகையால், அவை ஆத்மாவுக்கு ஸம்பந்தப்பட்டவையாக மாட்டாது. மற்றும், தேஹம் அசேதனமான ப்ருதிவி முதலிய பூதங்களின் பரிணாமமாகையால், அசேதனமே. ஸுக, துக்கங்களை விளைக்கைக்குரிய யத்னமும் (முயற்சியும்), ஸுக, துக்கங்களுக்கு இடமாகையும் ஆத்மாவின் தர்மங்களேயன்றி, தேஹத்தின் தர்மமன்று. ஆகையால், அப்படி நினைப்பதும் ஸரியன்று. அனைவரும் தம்முடைய ஸுகத்திற்காகவும், துக்கத்தைப் போக்குவதற்காகவும் ப்ரயத்னிக்கிறார்கள் (முயற்சிக்கிறார்கள்). ஆத்மாவுக்கு ஸுக, துக்கங்களின் ஸம்பந்தமில்லையாயின், பின் ஒருவரும் ப்ரயத்னிக்கவே (முயற்சிக்கவே) மாட்டார்கள். தேஹம், ஆத்மா இவ்விரண்டுமே காரணமென்று சொல்லுவதும் ஸரியன்று.
ஒருவன் தன் பற்களால் தன் நாக்கைக் கடித்துக் கொள்வானாயின், வேதனை உண்டாகிறது. அப்பொழுது, அவன் யார்மேல் கோபித்துக் கொள்ளலாம்? ஆத்மாவால் அதிஷ்டானம் (நியமனம்) செய்யப் பெற்ற ஒரு சரீரத்தின் அவயவங்களில் (அங்கங்களில்) ஒன்று துக்கத்தை விளைப்பதும், மற்றொன்று அதை அனுபவிப்பதுமாயிருக்கின்றது. ஆகையால், ஒரு ப்ராணி மற்றொரு ப்ராணியின் ஸுக, துக்கங்களுக்குக் காரணமென்று நியமித்துச் சொல்ல முடியாது. மனவூக்கமற்றுப் பல்லால் நாக்கைக் கடித்துக் கொள்கிறான் ஆகையால் அது ப்ரமாணமன்று என்றால். அப்படி சொல்லுவதை விட ஊக்கமற்ற மனமே ஸுக, துக்கங்களுக்குக் காரணமென்று ஒப்புக் கொண்டால், எல்லாம் பொருந்தி வரும்.
ஸுக, துக்கங்களுக்குக் காரணம் தேஹமும் அன்று; ஆத்மாவும் அன்று; அவ்விரண்டும் அன்று. பின்னையோ என்றால், அவ்விரண்டுக்கும் அந்தராத்மாவான ஈச்வரனே ஒரு தேஹத்திலுள்ள ஆத்மா மூலமாய் மற்றொரு தேஹத்திலுள்ள ஆத்மாவுக்கு ஸுக, துக்கங்களை விளைப்பதும், அவ்வாத்மா மூலமாய் அவற்றைத் தான் அனுபவிப்பதுமாயிருக்கிறான் என்று கொள்ளலாமே என்றால், அதுவும் ஸரியன்று. அவற்றில் அந்தராத்மாவுக்கு என்ன ஸம்பந்தம் உள்ளது? பக்ஷபாதம் (ஓரவஞ்சனை), கருணையற்றிருக்கை, ஸுக-துக்கங்களை அனுபவிக்கை முதலிய விகாரங்களுக்கிடமான வஸ்துக்களே, ஸுக, துக்கங்களுக்குக் காரணமாமன்றி, அத்தகைய விகாரங்கள் தீண்டப் பெறாத அந்தராத்மா, ஸுக, துக்கங்களுக்குக் காரணமாக மாட்டான்.
ஒரு தேஹத்திலுள்ள அந்தராத்மா, மற்றொரு தேஹத்திலுள்ள அந்தராத்மாவான தனக்கு ஸுக, துக்கங்களை விளைக்கிறானென்பது வேண்டாம். ஒரு தேஹத்திலுள்ள அந்தராத்மா தானே தனக்கு ஸுக, துக்கங்களை விளைத்துக் கொண்டு, அனுபவிக்கிறானென்று சொல்லலாமே என்றால், அதுவும் ஸரியன்று. ஒரு கால், ஈச்வரனால் தூண்டப்பட்ட ஒரு அங்கம், மற்றொரு அங்கத்தை அடிக்கின்றது. வேதனையும் உண்டாகின்றது. அப்பொழுது அவன் தனக்குட்பட்டவைகளான தன்னுடைய அங்கங்களில் எதன்மேல் கோபித்துக் கொள்ளலாம்? எதன் மேலும் கோபித்துக் கொள்ள முடியாது. தன்மேல் தான் கோபித்துக்கொள்ள வேண்டும். அது யுக்தமன்று (ஸரியன்று).
பித்தம் பிடிக்காதவன் எவனேனும் தனக்குத் தானே துக்கத்தை விளைத்துக்கொண்டு, தன் மேல் கோபித்துக் கொள்வானா? மற்றும், ஒருவகை விகாரமும் ஒருகாலும் தீண்டப்பெறாத ஈச்வரனுக்கு ஸுக, துக்காதி விகாரங்களுக்கிடமாகையும் ஸம்பவிக்காது. ஆகையால் ஈச்வரனே ஸுக, துக்கங்களுக்குக் காரணனென்று சொல்ல முடியாது. விகாரங்களுக்கு (மாறுபாடுகளுக்கு) இடமாகாத பரமாத்மா, ஸுக, துக்கங்களுக்குக் காரணமாகாமல் போயினும், விகாரங்களுக்கு இடமான ஜீவாத்மா காரணமாகட்டுமே என்றால், அதுவும் ஸரியன்று.
“ஒரு ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு ஸுக, துக்கங்களை விளைக்கிறான். மற்றொரு ஆத்மா அவற்றை அனுபவிக்கிறான்” என்றாவது, “ஒரு ஆத்மா தானே தனக்கு ஸுக, துக்கங்களை விளைத்துக் கொண்டு அனுபவிக்கிறான்” என்றாவது சொல்ல வேண்டும். ஒரு ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு ஸுக, துக்கங்களை விளைக்கிறான். மற்றொரு ஆத்மா அவற்றை அனுபவிக்கிறானென்று நினைப்பது வீண் ப்ரமமே (மனக்கலக்கமே) அன்றி, உண்மையன்று. ஏனென்றால், விகாரங்களுக்கு (மாறுபாடுகளுக்கு) இடமாயிருக்கை அவரவர்க்கு ஸ்வபாவமாக ஏற்பட்டதேயன்றி, மற்றொருவரால் வருகிறதன்று. ஸ்வபாவம் அத்தகையது ஆகையால், ஸுக, துக்கங்களும் அதைப்பற்றி வந்தவைகளே.
ஆகையால், இயற்கையில் ஏற்பட்ட ஒன்றைப் பற்றிப் பிறர் மேல் கோபித்துக் கொண்டு என்ன உபயோகம்? ஆத்மா தவிர மற்றொன்றும் காரணமன்று; ஆத்மாவே காரணமென்று சொல்லுவதும் உண்மையன்று. ஆத்மாவுக்கு இயற்கையில் ஸுக, துக்கங்களே கிடையாது. ஜீவாத்ம ஸ்வரூபம் கேவலம் ஜ்ஞான (அறிவு) ஆநந்த (இன்ப) ரஸமாயிருக்கும்; விகாரங்கள் (மாறுபாடுகள்) எவையும் தீண்டப் பெறாதது. அத்தகைய ஆத்மாவுக்கு விகாரங்களுக்கு இடமாயிருக்கை எவ்வாறு பொருந்தும்? பொருந்தாது.
ஸூர்யன் முதலிய நவக்ரஹங்கள் காரணமென்று சொல்லலாமே என்றால், அதுவும் ஸரியன்று. ஜனன (பிறக்கும்) காலத்தில் ஜன்ம ராசிக்குப் பன்னிரண்டு, எட்டு முதலிய இடங்களிலிருக்கிற ஸூர்யாதிகள் காரணமென்று சொல்ல வேண்டும். ஆத்மாவுக்கு ஜன்மமே கிடையாது ஆகையால் அவனுக்கு ஸுகமாவது, துக்கமாவது எதுதான் உண்டென்று சொல்ல முடியும்? எதுவும் உண்டென்று சொல்ல முடியாது. ஆத்மாவுக்கு, ஜன்மம் உண்டானால் அன்றோ ஜன்ம லக்னம் ஏற்படும்? ஜன்ம லக்னம் ஏற்பட்டாலன்றோ, அதற்கு எட்டு, பன்னிரண்டு முதலிய இடங்களில் இருக்கிற ஸூர்யாதி க்ரஹங்கள் ஆத்மாவுக்கு ஸுக, துக்கங்களை விளைக்க வல்லவையாம்? ஆகையால், ஸூர்யாதி க்ரஹங்கள், ஸுக, துக்கங்களுக்குக் காரணம் என்று சொல்லுவது யுக்தமன்று (ஸரியன்று).
ஜன்ம மரணாதிகள் தேஹத்திற்கே ஆகையால் அதன் ஜன்ம லக்னத்திற்கு எட்டு, பன்னிரண்டு முதலிய இடங்களிலிருக்கிற ஸூர்யாதி க்ரஹங்கள் ஸுக, துக்கங்களுக்குக் காரணமாக வேண்டும். அந்த க்ரஹங்களுக்குள்ளேயே சில க்ரஹங்கள், சில க்ரஹங்களுக்குப் பாதத்ருஷ்டி, அர்த்தத்ருஷ்டி முதலிய த்ருஷ்டி பேதங்களால் பீடையை (தீமையை) விளைக்கின்றன என்று ஜோதிஷ பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். அந்த க்ரஹங்களுடைய பார்வைக்கு விஷயமான தேஹங்களுக்கு அந்தப் பீடை (தீங்கு) உண்டாகிறது என்று சொல்லுகிறார்கள். அந்த க்ரஹங்களிலும், தேஹங்களிலும் வேறுபட்ட ஆத்மா யார் மேல் கோபிக்கலாம்? ஒருவர் மேலும் கோபிக்க இடமில்லை.
ஆனால், அவரவருடைய புண்ய பாப கர்மமே அவரவருடைய ஸுக-துக்கங்களுக்குக் காரணமென்று சொல்லலாமே என்றால், நிர்விகாரனும் (மாறுபாடு அற்றவனும்), ஸ்வயம்ப்ரகாசனுமான (தானே தோன்றுபவனுமான) ஆத்மாவுக்கு அவற்றில் என்ன ஸம்பந்தம்? ஆத்மாவுக்குப் புண்ய, பாப கர்மங்களாவது, அவற்றால் விளையும் ஸுக, துக்கங்களாவது எவையும் கிடையாவென்று முன்னமே நிரூபித்துச் சொன்னோமல்லவா?
அசேதனமான தேஹத்திற்குச் செயல் கூடாதாகையால், அதற்கும் ஸுக, துக்கங்களாவது, அவற்றிற்குக் காரணமான புண்ய, பாப கர்மங்களாவது எவையும் கிடையாது. ஜடமான தேஹத்திற்கு அஜடமான ஆத்மாவாயிருக்கும் தன்மை உண்டானாலன்றோ, அதற்கு ஸுக-துக்கங்கள் உண்டாகக்கூடும். ஜடமாயிருக்கையும், அஜடமாயிருக்கையும் ஒன்றோடொன்று பொருந்தாதவை. இப்படி விருத்த (எதிரிடையான) ஸ்வபாவமுடைய (குணங்களை உடைய) தேஹ, ஆத்மாக்களுக்கு அபேதம் (வேறுபாடு இன்மை) எப்படி உண்டாகும்? தேஹம், அசேதனம். ஆத்மா ஜ்ஞான ஸ்வரூபனாகையால், ஸ்வயம்ப்ரகாசன். இவ்விரண்டிற்கும் கர்ம ப்ரஸக்தி (வினையின் தொடர்பு) இல்லையாகையால், கர்மம் ஸுக, துக்கங்களுக்குக் காரணமென்று சொல்லுவது சேராது. ஆகையால், யார் மேல் கோபித்துக் கொள்ளலாம்?
ஆனால், காலம் ஸுக-துக்கங்களுக்குக் காரணமென்று சொல்லுவோம் என்றால், ஆயினும், இயற்கையில் ஸுக, துக்கங்கள் தீண்டப் பெறாதவனும், ஜ்ஞானத்தையே வடிவாக உடையவனுமாகிய ஆத்மாவுக்கு, ஸுக, துக்கங்களில் ஸம்பந்தமே இல்லை என்பதற்கு என்ன ஸமாதானம் வந்தது? அது ஒன்றுமில்லை ஆகையால், அதுவும் ஸரியன்று. ஆத்மா ஜ்ஞான ஸ்வரூபனென்றும், நிர்விகாரன் (மாறுபாடு அற்றவன்) என்றும், உத்பத்தி விநாசங்கள் (தோன்றுதல், அழிதல்) அற்றவன் என்றும், ஸ்வயம்ப்ரகாசன் (தானே தோன்றுபவன்) என்றும் முன்னமே மொழிந்தோம்.
அத்தகைய ஆத்மாவுக்கு, காலம் எப்படி ஸுக, துக்கங்களை விளைக்க வல்லதாம்? ஆத்மா இயற்கையில் ஸுக, துக்கங்கள் தீண்டப் பெறாதவனாயினும், காலவச்யன் (காலத்திற்கு வசப்பட்டவன்) ஆகையால் ஸுக, துக்க ஸம்பந்தம் உண்டாகிறது என்று சொல்லுகிறோம் என்றால், அதுவும் ஸரியன்று. கால வசத்தினால் வஸ்துக்களுக்கு இயற்கையில் ஏற்பட்ட குணங்கள் மாறக்கூடுமோ? அப்படி மாறுமாயின், கால வசத்தினால் அக்னிக்கு வெம்மை மாறிப் போய்க் குளிர்மை உண்டாக வேண்டும். பனிக்குக் குளிர்மை மாறிப்போய் வெம்மை உண்டாக வேண்டும். கால வசத்தினால் இப்படி ஒருகாலும் உண்டாக நாம் கண்டதில்லை. ஆகையால், காலம் ஸுக, துக்கங்களுக்குக் காரணமென்று சொல்லுவது யுக்தமன்று.
இவ்வாறு கீழ்ச் சொன்ன ஜனம் (மனிதர்) முதலிய ஆறு வஸ்துக்களில் எதுவும் ஒருவனுடைய ஸுக-துக்கங்களுக்குக் காரணமாக மாட்டாது. தேஹ விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவின் ஸுக, துக்கங்களுக்குக் கீழ்ச்சொன்னவற்றில் எதுவேனுமாவது, மற்ற எதுவேனுமாவது காரணமன்று என்று ஏற்பட்ட பின்பு மற்ற எதுதான் காரணமாமென்றால், ஊக்கமற்ற மனமே காரணம். அப்பொழுதும் ஆத்மாவுக்கு உள்ள ஸ்வபாவம் மாறி இல்லாத ஸ்வபாவம் வருகையாகிற கீழ்ச் சொன்ன தோஷம் அப்படியே ஸம்பவிக்குமல்லவா என்றால், ஸம்பவிக்காது.
ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தை விளைக்கின்ற மனம், ஜீவனுக்கு தேஹாத்மாபிமானத்தை (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்தை) விளைக்கின்றது. அதனால் தன்னியற்கை மறையப் பெற்று, ஸுக, துக்கங்களை அனுபவிக்கின்றான். அக்னி ஸ்தம்பன, ஜல ஸ்தம்பனாதிகளில் (மறைந்து இருப்பது, உள் இருப்பது) அவற்றின் சக்தி மறைந்திருப்பது போல், ஜீவனுடைய தன்மையும் தேஹாத்மாபிமானத்தினால் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்தால்) மறைகின்றது. ஆனால், அது வந்தேறியே (வெளியிலிருந்து வந்த ஒன்று) அன்றி இயற்கையாக மாட்டாதல்லவா? ஸங்கல்ப விகல்பரூபமான மனம், ஊக்கமற்று அஹங்கார, மமகாரங்களை விளைக்கின்றது. அஹங்காரமாவது ஆத்மாவல்லாத தேஹத்தை ஆத்மாவென்று அபிமானிக்கை. மமகாரமாவது தன்னுடையதல்லாத புத்ர (பிள்ளை), களத்ராதிகளைத் (மனைவி) தன்னுடையதென்று அபிமானிக்கை.
அவ்வஹங்கார, மமகாரங்களால் ராக, த்வேஷாதிகள் உண்டாகின்றன. அவற்றால் புண்ய-பாப கர்மங்களைச் செய்கின்றான். அவற்றால் தேஹ ஸம்பந்த ரூபமான ஜன்மங்களையும், தேஹ வியோக (விடுதல்) ரூபமான மரணங்களையும் பெறுகின்றான். அவற்றால் ஸுக-துக்கங்களை அனுபவிக்கின்றான். இவ்வுண்மையை அறிவானாயின், அவன் ப்ராணிகளால் பீடிக்கப்படினும், மனக் கலக்கம் உண்டாகப் பெறமாட்டான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அவ்வந்தணன் முதலில் பணம் அழியப்பெற்று, அதனால் மனவெறுப்புற்று ஸம்பந்தங்களை எல்லாம் துறந்து, வருத்தமின்றிப் பூமியில் ஸஞ்சரித்துக் கொண்டு, முன்புள்ள அறிஞர்கள் ஆதரித்த வண்ணமே ஸுக, துக்கங்களுக்குக் காரணம் இன்னதென்று நன்றாக நிச்சயித்து, பரமாத்மாவின் இடத்தில் நிலைநின்ற மனமுடையவனாகி, “நான் அஸத்துக்களால் (நன்னடத்தை இல்லாதோரால்) பரிபவிக்கப்படினும் (அவமதிக்கப்படினும்) என்னுடைய தர்மத்தினின்று சிறிதும் நழுவாமல், மோக்ஷ பூமியைக் கொடுக்க வல்லவனாகிய பரமபுருஷனுடைய பாதார விந்தங்களைப் பணிந்து தமோகுணத்தின் கார்யமும் கரை கண்டறிய முடியாததுமாகிய ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தைக் கடக்க வேண்டும்” என்னும் மனவுறுதி உடையவனாகி இவ்வண்ணம் மொழிந்தான்.
ஆகையால், ஜீவனுக்கு ஸுக, துக்கங்களை விளைக்கிறவன் மற்றொருவனும் அல்லன். தேஹாத்மாபிமானமே (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கமே) அதற்குக் காரணம். மற்றும், நண்பர்கள், உதாஸீனர்கள், சத்ருக்களென்னும் பிரிவினைக்கும், ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸாரத்திற்கும் அதுவே காரணம்.
அப்பனே! ஆகையால், என்னிடத்தில் புத்தியை நுழைத்து, அதனால் மனத்தை மற்றெல்லா விஷயங்களினின்றும் அடக்குவீராக. சாஸ்த்ரங்களில் நிரூபிக்கப்படுகிற யோகத்தின் சுருக்கம் மனத்தை மற்ற விஷயங்களினின்றும் இழுத்து, என்னிடத்தில் நிலை நிறுத்துகையாகிற இவ்வளவே. பிக்ஷூ மொழிந்த இந்த ப்ரஹ்ம நிஷ்ட்டையை (பகவானிடத்தில் நிலை நிற்கை) நெஞ்சில் தரிக்கிறவனும், பிறர்க்குக் கேட்பிக்கிறவனும், விஷயாந்தரங்களினின்று (மற்ற விஷயங்களிலிருந்து) மனம் மீளப்பெற்று, ப்ரஹ்ம நிஷ்ட்டனாகி (பகவானிடத்தில் நிலைநின்றவனாகி), ஸுக-துக்கங்களால் வரும் கலக்கங்களைக் கடந்து, மோக்ஷம் பெறுவான்.
இருபத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.