திங்கள், 16 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 328

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்து இரண்டாவது அத்தியாயம்

(தத்வஸங்க்யைகளின் விரோத பரிஹாரமும், ப்ரக்ருதி புருஷர்களின் விசாரமும், ஜன்ம-மரணாதி ஸ்வரூப நிரூபணமும்)

உத்தவர் சொல்லுகிறார்:- ஜகதீசனே! ப்ரபூ! தத்வங்கள் எத்தனை? சில ரிஷிகள் தத்வங்கள் ஒன்பதென்றும், சிலர் பதினொன்றென்றும், சிலர் ஐந்தென்றும் கணக்கிடுகிறார்கள். நீயோவென்றால், மூன்று தத்வங்கள் என்று மொழிகின்றனை. இவ்விஷயத்தில் மற்றும் பலவாறு கேட்டிருக்கின்றோம். சிலர் இருபத்தாறென்றும், சிலர் இருபத்தைந்தென்றும், சிலர் ஏழென்றும், சிலர் ஒன்பதென்றும், சிலர் ஆறென்றும், சிலர் நான்கென்றும், சிலர் பதினொன்றென்றும், சிலர் பதினேழென்றும், சிலர் பதினாறென்றும், சிலர் பதின்மூன்றென்றும் சொல்லுகிறார்கள். வளர்ந்த ஆயுளை உடையவனே! ரிஷிகள் எந்த அபிப்ராயத்தைப் பற்றி வெவ்வேறாகக் கணக்கிடுகிறார்களோ, அதை நீ எமக்குச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ராஹ்மணர்கள் எந்தெந்த விதம் சொல்லுகிறார்களோ, அவையெல்லாவற்றிற்கும் யுக்திகள் (ஆராய்ச்சியின் அடிப்படையிலான காரணங்கள்) இருக்கின்றன. என்னுடைய மாயையைத் தத்வங்களுக்குக் காரணமாக அங்கீகரித்து, அவற்றைக் கணக்கிடுகிறவர்களுக்கு எதுதான் பொருந்தாது. (எல்லாம் பொருந்தும்). எந்தக் கணக்கு விருத்தமாய் (முரணாய்) இருக்கிறதென்று சொல்லினையோ, அது விருத்தம் (முரண்) அன்று. அந்தக் கணக்கு இவ்வாறு பார்த்தால் விரோதமில்லாமல் பொருந்தும். அதெல்லாம் விரோதமில்லாமல் பொருந்தும்படி நான் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

ரிஷிகள் இவ்வாறு பலவாறு சொல்லுவதற்குக் காரணம் என்னவென்றால், ஒருவராலும் இல்லை என்று சொல்லி அதிக்ரமிக்க (மீற) முடியாத ப்ரக்ருதி (அசேதனமான மூலப்ரக்ருதி), புருஷ (ஜீவாத்மா), மஹத்து, அஹங்காராதி ரூபமான என் சக்திகளே. ரிஷிகள் என் சக்திகளான இந்த ப்ரக்ருதி, புருஷாதிகளைத் தனித்தனியே பிரித்துச் சொல்லுவதும், ஒன்றில் ஒன்றை உள்ளடக்கிச் சொல்லுவதும் செய்கையால், தத்வங்களின் கணக்கில் ஏற்றக் குறைவுகள் உண்டாகின்றனவன்றி வேறில்லை. சம (மனதை அடக்குதல்), தமாதி (வெளி இந்த்ரியங்களை அடக்குதல்) குணங்கள் கைகூடுமாயின், சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்தெல்லாம் எனக்குச் சரீரமாகி, ஏக (ஒரே) ரூபமாகத் தோற்றும். அப்பொழுது தத்வங்களின் ஏற்றக் குறைவுகள் தோன்ற மாட்டாது. அவை தோன்றாமல் மறைந்தவுடனே, மூன்றென்றும், நான்கென்றும் சொல்லுகிற வாதமும் தொலைந்து போகும்.

புருஷ ச்ரேஷ்டனே! தத்வங்கள் ஒன்றில் ஒன்று உள்ளடங்கியிருப்பதைப் பற்றி அதை உள்ளபடி ஆராய்ந்து பார்க்கிறவர்கள் எவ்வாறு சொல்ல விரும்புகிறார்களோ அவ்வாறு தத்வங்களைக் குறைவாகவும் அதிகமாகவும் கணக்கிடுகிறார்கள். எல்லா தத்வங்களும் தமக்குக் காரணமான முற்பட்ட தத்வத்திலாவது, கார்யமான பிற்பட்ட தத்வத்திலாவது ஏதேனுமொரு தத்வத்தில் உள்ளடங்கி இருக்கின்றன. கடம் (குடம்)  முதலிய கார்ய வஸ்துக்கள் (உண்டாக்கப்பட்ட பொருட்கள்) தமக்குக் காரணமான மண்ணில் ஸூக்ஷ்ம  ரூபமாய் (நுட்பமாய்) உள்ளடங்கி இருக்கின்றன. கார்யமான கடாதி வஸ்துக்களில் மண் முதலிய காரண வஸ்துக்களும் தொடர்ந்திருக்கின்றன. 

உலகத்தில் ஒரு கட்டையில் அக்னி, ஜலம் முதலிய பல வஸ்துக்கள் அடங்கியிருப்பதைக் காண்கிறோமல்லவா? அவ்வாறே தத்வங்கள் தம்முடைய காரண தத்வத்திலாவது, கார்ய தத்வத்திலாவது உள்ளடங்கியிருப்பது யுக்தமே (ஸரியே). ஆகையால், இந்தத் தத்வங்களில் ஏற்றக் குறைவுகள் வருமாறு கணக்கிடுகிறவர்களுக்குள் எவனுடைய வாய் எவ்வாறு சொல்ல நினைத்து முயற்சி கொள்கிறதோ, அவனவன் சொல்லுகிற அவற்றையெல்லாம் நாம் ஒப்புக் கொள்வோம். ஏனென்றால், அவ்வாறு சொல்லுவதற்குத் தத்வங்கள் ஒன்றில் ஒன்று உள்ளடங்கியிருப்பது தனியே பிரிந்திருப்பதாகிய யுக்திகள் (ஆராய்ச்சியின் அடிப்படையிலான காரணங்கள்) ஸம்பவிக்கின்றன அல்லவா? ஆகையால் எவன் எப்படி சொல்லினும் அதையெல்லாம் நாம் நிச்சயமாகவே கொள்ள வேண்டும்.

தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்தராத்மப்ரமம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) முதலியவற்றிற்குக் காரணமாகிய அனாதியான அஜ்ஞானம் தொடரப் பெற்ற ஜீவனுக்கு, ஆத்ம, பரமாத்மாக்களைப் பற்றின அறிவு ஸ்வயமாக உண்டாகாது. பின்னையோ என்றால், இயற்கையாகவே எல்லாமறிந்த மற்றொருவனே இவனுக்கு ஆத்ம, பரமாத்மாக்களைப் பற்றின அறிவை விளைவிக்க வேண்டும். இருவர் வெவ்வேறாயிருப்பதற்குக் காரணம், ஒருவனிடத்திலுள்ள குணம் மற்றொருவனிடத்தில் இல்லாமையே. இவ்வாறே ஜீவ, பரமாத்மாக்களிருவரும் குண வைஷம்யத்தைப் பற்றி (வேறுபாட்டால்) வெவ்வேறாக இருப்பார்கள். அவ்விருவரில் ஜீவனுக்கு அனாதியான (ஆரம்பம் இல்லாது தொன்று தொட்டு வரும்) அவித்யா (அறிவின்மை, புண்ய, பாப வினை) ஸம்பந்தமும் (தொடர்பும்), அதைப்பற்றின ஸம்ஸாரமும் உள்ளவை. 

பரமாத்மாவுக்கோ என்றால் ஸ்வயமாகவே (இயற்கையாகவே, தானாகவே) எல்லாம் அறிந்திருக்கையும், பிறனுக்கு அவ்வறிவை விளைவிக்கையும் உள்ளவை. இவ்வாறு அவ்விருவரும் விலக்ஷணர் (வேறுபட்டவர்) ஆகையால், ஒரே தத்வமாக மாட்டார்கள். ப்ராக்ருதமான (மூலப்ரக்ருதியோடு தொடர்புடைய) தத்வங்கள் இருபத்து நான்கு. ஜீவாத்ம, பரமாத்மாக்கள் இரண்டு. ஆக தத்வங்கள் இருபத்தாறு. ஆனால் இருபத்தைந்து தத்வங்கள் என்கிற பக்ஷத்திற்கு (கொள்கைக்கு) என்ன யுக்தி என்றால், சொல்லுகிறேன்.

இவ்வாறு ஜீவாத்ம, பரமாத்மாக்கள் விலக்ஷண (வேறான) குணமுடையவர்களாயினும், அவர்களுக்கு ஸ்வரூபத்திலாவது, ஸ்வபாவத்திலாவது சிறிதும் பேதமில்லை. இருவரும் ஜ்ஞானத்தையே வடிவாக உடையவர்கள்; ஜ்ஞானத்தையே குணமாக உடையவர்கள். மற்றும், ஜீவாத்மாவுக்கு முக்தி (மோட்ச) தசையில் (நிலையில்) பரமாத்மாவோடு பரமஸாம்யம் (முழுவதும் ஒத்திருக்கை) விளைகிறதாகையாலும், ஜீவன் பரமாத்மாவின் அம்சமாகையால் (பகுதி) அவனை விட்டுப் பிரிந்திருக்க மாட்டானாகையாலும் அவ்விருவரும் ஒரே தத்வமென்னும் அபிப்ராயத்தைக் கொண்டு இருபத்தைந்து தத்துவங்களென்று கணக்கிடுகிறார்கள். ஆனால், ஜீவன் அஜ்ஞன் (அறிவு குறைந்தவன்) என்றும், ஈச்வரன் ஸர்வஜ்ஞன் (எல்லாம் அறிந்தவன்) என்றும் பேதம் கல்பித்துச் சொல்லுவதும், ஜீவாத்மாக்கள் ஸ்வதந்தரர்கள் (பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள்) என்று சொல்லுவதும் உண்மை அன்று. ஜீவன் அஜ்ஞனாயிருப்பது அவனுக்கு ஸ்வபாவம் அன்று. அவ்வஜ்ஞானம் ப்ரக்ருதி ஸம்பந்த ரூப காரணத்தினால் வந்தது. அந்த ப்ரக்ருதி ஸம்பந்தம் நிவர்த்திக்கையில் (தொலையும்போது), அவ்வஜ்ஞானமும் தானே நிவர்த்திக்கின்றது (தொலைகிறது). அஜ்ஞானம் நிவர்த்தித்து (தொலைந்து) ஜீவன் மோக்ஷத்தை அடைகையில், “ஜீவன் அஜ்ஞன், பரமாத்மா ஸர்வஜ்ஞன்” என்கிற வைஷம்யம் (வேற்றுமை) இல்லாமையாலும், ஜ்ஞானமே ஸ்வரூபமும் ஸ்வபாவமுமாயிருக்கை இருவர்க்கும் ஒத்திருக்கையாலும், இருவரும் ஒரே தத்வமென்னும் அபிப்ராயத்தினால் இருபத்தைந்து தத்வங்களென்பதுவும் யுக்தமே (ஸரியே) என்று உணர்க. ஆயினும் ஸத்வாதி குணங்களையும் கூட்டிக் கொண்டு கணக்கிட வேண்டாமோ? அப்பொழுது இருபத்தாறென்பதும், இருபத்தைந்தென்பதும் எவ்வாறு பொருந்துமென்றால், சொல்லுகிறேன். 

ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள் ஏற்றக் குறைவின்றி ஒருவாறாக இருக்கப் பெற்ற அசித்தே ப்ரக்ருதியென்று கூறப்படுகின்றது. ஆகையால், ஜகத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) காரணங்களான ஸத்வாதி குணங்கள், ப்ரக்ருதியின் குணங்களேயன்றி, ஆத்மாவின் குணங்களன்று. ஸத்வாதி குணங்கள் ப்ரக்ருதியில் அடங்கினவையாகையால், தத்வங்கள் இருபத்தைந்தென்றும், இருபத்தாறென்றும் சொல்லுவதில் யாதொரு விரோதமும் இல்லை. ஸத்வம் ஜ்ஞானத்தை (அறிவை) விளைக்கும். ரஜஸ்ஸு கர்மத்தை (வினையை) விளைக்கும். தமஸ்ஸு, அஜ்ஞானத்தை (அறிவின்மையை) விளைக்கும். 

ஸத்வாதி குணங்களின் மாறுபாட்டை விளைக்கும் தத்வம் காலமென்று கூறப்படும். அதையே ஸ்வபாவமென்றும், ஸூத்ரமென்றும் சொல்லுவார்கள். ஸமஸ்த பதார்த்தங்களுக்கும் கால ஸம்பந்தம் நியதம் (எப்பொழுதும் இருப்பது) ஆகையாலும், ஸ்திதி (நீடிப்புக்குக்) ஹேது (காரணம்) ஆகையாலும், அதை ஸ்வபாவம் என்பதும் ஸுத்ரமென்பதும் கூடும். (இந்தக் கால தத்வத்தையும் கூட்டிக்கொண்டு சிலர், இருபத்தேழு தத்வங்கள் என்று சொல்லுகிறார்கள்.)

புருஷன், ஸத்வாதி குணங்கள் ஏற்றக் குறைவுகளின்றி ஒருவாறாயிருக்கும் தன்மையதான ப்ரக்ருதி, வ்யக்தம் என்கிற மஹத்தத்வம், அஹங்காரம், ஆகாசம், காற்று, அக்னி, ஜலம், பூமி ஆகிய இவையே ஒன்பது தத்வங்களென்று கூறப்படுகின்றன. அஹங்கார தத்வத்தில், அதன் கார்யமான இந்திரியங்களையும், ஆகாசாதிகளில் சப்தாதி குணங்களையும் உள்ளடக்கி, ஜீவாத்ம, பரமாத்மாக்கள் இருவரையும் புருஷனென்று ஒரு தத்வமாகக் கொண்டு, ஒன்பது தத்வங்கள் என்று சொல்லுகிறார்கள் என்றுணர்க. கர்மேந்திரியங்களைந்தும், ஜ்ஞானேந்திரியங்களைந்தும், மன இந்த்ரியமொன்றும் ஆகப் பதினொரு இந்திரியங்களையும், சப்தாதி குணங்களையும் கூட்டிக்கொண்டால் இருபத்தைந்து தத்வங்களாகின்றன. ஜீவாத்ம, பரமாத்மாக்கள் இருவரையும் தனித்தனியே இரண்டு தத்வங்களாகக் கொண்டால், இருபத்தாறு தத்வங்களாகின்றன. 

காது, உடல், கண், மூக்கு, நாக்கு என்னும் இவை ஐந்தும் ஜ்ஞானேந்திரியங்கள். வாக்கு (வாய்), பாணி (கை), உபஸ்தம் (பிறப்புக்குறி), பாயு (ஆசன வாய்), பாதம் (கால்) என்னுமிவை கர்மேந்திரியங்கள். இவ்விரு வகை இந்தரியங்களுக்கும் உதவி செய்வது மன இந்திரியம். சப்தம் (ஒலி), ஸ்பர்சம் (தொடு உணர்ச்சி), ரஸம் (சுவை), கந்தம் (வாசனை), ரூபம் (ஒளி) ஆகிய இவை ஐந்தும் ஜ்ஞானேந்திரியங்களின் விஷயங்கள். கதி (நடத்தல்), உக்தி (பேச்சு), உத்ஸர்க்கம் (விடுதல்), சில்பம் (வேலை செய்கை) இவை நான்கும் கர்மேந்திரியங்களின் விஷயங்கள். 

காதுக்கு விஷயம் சப்தம் (ஒலி). உடலுக்கு, விஷயம், ஸ்பர்சம் (தொடு உணர்ச்சி), கண்ணுக்கு விஷயம் ரூபம் (ஒளி). மூக்குக்கு விஷயம் கந்தம் (வாசனை). நாக்குக்கு விஷயம் ரஸம் (சுவை). வாக்குக்கு விஷயம் உக்தி (பேச்சு). பாணிக்கு விஷயம் சில்பம் (வேலை செய்கை). உபஸ்தம் (பிறப்புக்குறி), பாயு (ஆசனவாய்) ஆகிய இரண்டு இந்திரியங்களுக்கும் உத்ஸர்க்கமே (விடுதல்) விஷயம். உத்ஸர்க்கமாவது விடுதல். உபஸ்தத்தின் (பிறப்புக்குறியின்) உத்ஸர்க்கமாவது (விடுதலாவது) ரேதஸ்ஸு, மூத்ரம், இவைகளை விடுதல். பாயுவின் (ஆசனவாயின்) உத்ஸர்க்கமாவது (விடுதலாவது) மலத்தை விடுதல், இந்த வ்யஷ்டி ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டிக்கு (படைப்புக்கு) முன்பு, ஆகாசம் முதல் மனம் வரையிலுள்ள கார்யங்களும், ப்ரக்ருதி, மஹத்து, அஹங்காரம், என்கிற காரணங்களும் ஆகிய இருவகையுமாய் இருக்கிற ப்ரக்ருதி, ஸத்வாதி குணங்களுடன் கூடி, ப்ரபஞ்சத்தைப் படைக்கின்றது. 

இந்த்ரியங்களுக்கு விஷயமாகாதவனும், கேவலம் வேதாந்தங்களால் அறியத் தகுந்தவனும், ஸர்வஜ்ஞத்வ (எல்லாவற்றையும் அறிதல்), ஸர்வ சக்தித்வாதி குணங்களுடையவனுமாகிய பரமபுருஷன் “ஸூக்ஷ்ம (பெயர், உருவம் இல்லாத, கண்ணுக்குப் புலப்படாத, நுட்பமான) சேதனாசேதனங்களை (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைச்) சரீரமாக உடைய நான், ஸ்தூல ( பெயர், உருவத்துடன் கூடிய, கண்ணுக்குப் புலப்படக்கூடிய) சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ப்ரபஞ்சமாய் விரியவேண்டும்” என்று ஸங்கல்பிக்கிறான். 

இவ்வாறு பரமபுருஷ ஸங்கல்பத்தினால் உண்டான மஹத்து முதலிய தத்வங்கள், அந்தப் பரமபுருஷனுடைய ஸங்கல்பத்தினாலேயே ஒன்றோடொன்று கலந்து, ஸ்ருஷ்டி ஸாமர்த்யமும் (படைப்புத் திறனும்) உண்டாகப் பெற்று, விகாரத்தை (மாறுபாடுகளை) அடைபவைகளாகி, தமக்குக் காரணமான ப்ரக்ருதியின் பலத்தினால், ப்ரஹ்மாண்டத்தைப் படைக்கின்றன. சிலர் தத்வங்கள் ஏழே உள்ளவை என்று சொல்லுகிறார்கள். அதுவும் யுக்தமே (ஸரியே). 

எப்படியென்றால், ஆகாசாதி பூதங்கள் ஐந்து. ஞானஸ்வரூபனான ஜீவன், அந்த ஆகாசாதி பூதங்களுக்கும், ஜீவனுக்கும் ஆதாரனான பரமாத்மா ஆகிய இவையே தத்வங்களென்று கொண்டு, ஏழே தத்வங்களென்று சொல்லுகிறார்கள். அவ்வேழு தத்வங்களினின்று தேஹம், இந்த்ரியங்கள், ப்ராணன்கள் ஆகிய இவை உண்டாகின்றன. இந்த்ரியங்களும், ப்ராணன்களும் தேஹத்தில் அடங்கினவை. தேஹம் தனக்குக் காரணமான பஞ்ச பூதங்களில் அடங்கினது. ப்ரக்ருதி முதலிய காரணங்களும் தமது கார்யங்களான ஆகாசாதி பூதங்களிலேயே அடங்கினவை என்னும் அபிப்ராயத்தினால் தத்வங்கள் ஏழென்று சொல்லுவதும் யுக்தமே (ஸரியே) என்று உணர்க. 

தேஹம் (உடல்), இந்த்ரியம் முதலிய தத்வங்களுக்குள் எதுவாயினும், ஆகாசாதி தத்வங்களுக்குள் எதையாயினும் விட்டுப் பிரிந்து புலப்படுகிறதில்லை. ஆகையால், தேஹாதிகளுக்கு ஆகாசாதிகளில் உள்ளடக்கம் சொல்லுவது யுக்தமேயாம். ஒன்றில் ஒன்று உள்ளடங்கினதாகக் கருத்தேயன்றி, மற்றவை இல்லவேயில்லை என்று கருத்தன்று. ஆறே தத்வங்கள் என்கிற பக்ஷத்திலும் பஞ்ச பூதங்களும், ஆறாமவன் பரமபுருஷனுமாம். ஜீவனுக்குப் பரமபுருஷனிடத்திலும், தேஹாதிகளுக்கு ஆகாசாதி பஞ்சபூதங்களிலும் உள்ளடக்கமென்னும் அபிப்ராயத்தினால், ஆறு தத்வங்களென்பதும் கூடும். அப்பரமபுருஷன், தன்னிடத்தினின்றும் உண்டான பூதங்களோடு கூடி, இந்த ப்ரபஞ்சத்தை எல்லாம் படைத்து, அதன் ஸ்திதிக்காக அதில் அந்தராத்மாவாய் நுழைந்து இருக்கின்றான். நான்கே தத்வங்கள் என்கிற பக்ஷத்திலும் யுக்தி சொல்லுகிறேன். 

பரமாத்மாவிடத்தினின்று அக்னி, ஜலம், பூமி என்னும் இம்மூன்று தத்வங்கள் உண்டாயின. பரமாத்மாவோடு கூட நான்கே தத்வங்கள் என்று உணர்க. பரமாத்மாவினால் உதவி செய்யப் பெற்ற அக்னி, ஜலம், பூமி ஆகிய இம்மூன்று தத்வங்களால் இந்த ப்ரபஞ்சமெல்லாம் உண்டாயிற்று. கண்ணுக்குப் புலப்படுகிற அவயவங்களையுடைய (பகுதிகளை உடைய) ஸ்தூல (கன்ணுக்குப் புலப்படுகிற) கார்ய வஸ்து (உண்டாக்கப்பட்ட பொருள்), ஸூக்ஷ்மத்தினின்று உண்டாயிருக்க வேண்டுமல்லவா? ஆகையால், மற்றவைகளுக்கு அவ்வக்னி முதலிய மூன்று பூதங்களிலும், ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவினிடத்திலும், அந்தர்பாவம் (உள் அடங்கியவை) என்று கருத்து. பதினொரு தத்வங்கள் என்கிற பக்ஷத்தில், இப்பரமபுருஷன் பஞ்சமஹா பூதங்கள், காது முதலிய ஜ்ஞானேந்திரியங்கள் ஆக இப்பதினொன்றை மாத்ரமே தத்வங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலும் முன் போலவே மற்றவை சொன்னவற்றில் உள்ளடங்கினவை என்று கருத்து. 

பதினேழு தத்வங்கள் என்கிற பக்ஷத்தில் ஆகாசாதி பூதங்களைந்தும் சப்தம் முதலிய தன்மாத்ரங்கள் (பஞ்ச பூதங்களின் நுட்பமான நிலை) ஐந்தும், ச்ரோத்ரம் முதலிய ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும், மனம் ஒன்றும் ஆக இப்பதினாறையும் பதினேழாவனான பரமாத்மாவையும் தத்வங்களாகக் கொள்ள வேண்டும். பதினாறு தத்வங்களென்கிற பக்ஷத்தில், பஞ்ச பூதங்கள் பஞ்ச தன்மாத்ரங்கள், பஞ்ச ஜ்ஞானேந்திரியங்கள், பரமாத்மா ஆக இப்பதினாறையும் தத்வங்களாகக் கொள்ள வேண்டும். இந்தப் பக்ஷத்தில் பரமாத்மாவே மனமென்று கூறப்படுகிறான். ஆகையால், மனத்திற்குப் பரமாத்மாவினிடத்தில் உள்ளடக்கமென்று கருத்து. பதின்மூன்று தத்வங்களென்கிற பக்ஷத்தில், பஞ்ச பூதங்கள், பஞ்ச ஜ்ஞானேந்திரியங்கள், ப்ராணன், மனம், பரமாத்மா ஆகிய இப்பதின்மூன்றையும் தத்வங்களாகக் கொள்ள வேண்டும். (இவ்வாறே மூன்று தத்வங்களென்கிற பக்ஷத்தையும், ஐந்து தத்வங்களென்கிற பக்ஷத்தையும் ஆராய்ந்தறிய வேண்டும். 

மூன்றென்கிற பக்ஷத்தில், ப்ரக்ருதி, புருஷன், ஈச்வரன் இம்மூன்று தத்வங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஐந்தென்கிற பக்ஷத்தில், நான்கு தத்வங்களென்கிற பக்ஷத்தில் சொல்லப்பட்ட தத்வங்கள் நான்கும், அவற்றோடு வாயுவையும் சேர்த்து ஐந்து தத்வங்களென்று கொள்ள வேண்டும்). இவ்வாறு ரிஷிகள் தத்வங்களைப் பலவாறு கணக்கிட்டு இருக்கிறார்கள். அவையெல்லாம் யுக்தி (காரணம்) அமைந்தவை ஆகையால் நியாயத்திற்கு இணங்கினவைகளே. அறிஞர்கள் சொல்லுவது எதுதான் அழகாயிராது? எல்லாம் அழகாகவேயிருக்கும்.

உத்தவர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணா! ப்ரக்ருதியும், புருஷனும், விலக்ஷண (மாறுபாடான) ஸ்வரூபமுடையவையாகையால், வெவ்வேறு தத்வங்களென்பது வாஸ்தவமே (உண்மையே). ஆயினும் ஒன்றை விட்டு மற்றொன்று பிரிந்து தோற்றாமையால், அவ்விரண்டுக்கும் பேதம் தெரிகிறதில்லை. ஜீவாத்மா, ப்ரக்ருதியின் பரிணாமமான தேஹத்தில் புலப்படுகிறான். ப்ரக்ருதியும் ஆத்மாவினிடத்தில் புலப்படுகின்றது. ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து தோற்றாமையாலும், “நான் தேவன், நான் மனுஷ்யன்” என்று அபேதமாய்த் (வேறுபாடு இன்றி) தோற்றுகையாலும், தேஹாத்மாக்களுக்கு பேதம் தெரிகிறதில்லை. இப்படியிருக்க, ப்ரக்ருதி, புருஷர்களை வெவ்வேறு தத்வங்களென்று எவ்வாறு நிச்சயிக்கக் கூடும் என்று என் மனத்தில் ஸந்தேஹமாய் இருக்கின்றது.

ஸர்வஜ்ஞனே (எல்லாம் அறிந்தவனே)! யுக்தியில் (ஆராய்ந்து அறிந்த காரணங்ளில்) தேர்ந்திருக்கிற உன் வசனங்களால் அந்த ஸம்சயத்தை (ஸந்தேஹத்தை) அறுக்க வேண்டும். ஜீவாத்மாக்களுக்கு அந்த வஸ்துக்களை உள்ளபடி அறிகையாகிற ஜ்ஞானம் உன்னுடைய அனுக்ரஹத்தினால் தான் உண்டாகின்றது. அந்த ஜ்ஞானத்தினுடைய மறைதலும், உன்னுடைய சக்தியாகிய அவித்யையினால் (அறிவின்மை) தான் உண்டாகின்றது. உன்னுடைய மாயையின் உண்மை, உனக்கே தெரியுமன்றி, மற்றெவருக்கும் தெரியாது. உன்னையொழிய மற்றவர்களெல்லாரும் உன் மாயையினால் மதி மயங்கினவர்களே. ஆகையால், நீயே இந்த ஸம்சயத்தைப் (ஸந்தேஹத்தைப்) போக்கவேண்டும்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- புருஷச்ரேஷ்டனே (புருஷர்களுள் சிறந்தவனே)! ப்ரக்ருதியும், புருஷனும் ஆகிய இவை இரண்டும் வெவ்வேறு தத்வங்களே. இந்த ப்ரபஞ்சம் முழுவதும் ப்ரக்ருதியின் பரிணாமமான அஹங்காரத்தினால் ஏற்பட்டது. ஆகையால், இதற்கு வைகாரிகமென்று பெயர். இது இச்சை (ஆசை), த்வேஷம் (பகைமை) முதலிய ஆத்ம குணங்களையும், பருமன், இளைப்பு முதலிய தேஹ குணங்களையும், ஒரே வஸ்துவில் இருப்பதாகத் தோற்றுவிக்கும் தன்மையுள்ளது. 

உத்தவரே! ஸத்வாதி குணமயமான என்னுடைய மாயை, தன் குணங்களால் தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்தராத்மப்ரமம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) முதலிய மற்றும் பல விபரீத புத்திகளை விளைக்கும் தன்மையுடையது. ப்ரக்ருதியின் விகாரமான (வேறுபாடான) அஹங்காரத்தின் கார்யமாகையால், வைகாரிகமென்று சொல்லப்படுகிற இந்த ப்ரபஞ்சம், மூன்று விதமாயிருக்கும். அவற்றில் ஒன்று, அத்யாத்மமென்றும், மற்றொன்று அதிதைவமென்றும், மற்றொன்று அதிபூதமென்றும் கூறப்படும். சக்ஷுரிந்த்ரியத்தை (கண்) அத்யாத்மமென்றும், அதனால் அறியப்படும் ரூபத்தை (உருவத்தை) அதிபூதமென்றும், நேத்ர த்வாரத்திலுள்ள ஸூர்ய சரீரத்தை அதிதைவமென்றும் சொல்லுகிறார்கள்.

அத்யாத்மம் முதலிய இம்மூன்றும் ஒன்றால் ஒன்று உதவி செய்யப் பெற்றே தங்கள் கார்யத்தை நடத்த வல்லவையாகின்றன. சக்ஷுரிந்த்ரியமும், அதன் விஷயமான ரூபமும், நேத்ரத்வாரத்திலுள்ள ஸூர்ய சரீரத்தின் தேஜஸ்ஸினால் (ஒளி, சக்தியினால்), அதிஷ்டானம் செய்யப் (நியமிக்கப்) பெற்றே ஒன்று தன் விஷயத்தை க்ரஹிப்பதும், ஒன்று தன்னிந்த்ரியத்திற்கு விஷயமாவதுமாகிய தங்கள் கார்யத்தைச் செய்கின்றன. ரூபமும் வெகுதூரத்திலாவது, வெகு ஸமீபத்திலாவது இல்லாமல், நடுத்தரமான நிலையில் இருந்தால் தான், சக்ஷுரிந்த்ரியத்திற்கு விஷயமாம். ஆகையால், ரூபம் சக்ஷுரிந்த்ரியத்திற்கு நடுத்தரமான நிலையில் இருந்து, உதவி செய்கின்றது. 

இவ்வாறு இம்மூன்றும் ஒன்றை விட்டு மற்றொன்று ஜ்ஞானத்தை உண்டாக்காதாகையால், இம்மூன்றும் ஒன்றுக்கொன்று உபகாரங்களாயிருக்கும் என்பதை உணர்க. இவ்வாறு அத்யாத்மாதிகளின் பரஸ்பர (ஒன்றுக்கொன்று) உபகாரத்தினால் (உதவியால்) ரூபாதி ப்ரகாசம் (உருவம் தெரிதல்) உண்டாகிறதாயின், ஆத்மா எதனால் ப்ரகாசிக்கிறானென்றால், சொல்லுகிறேன். 

ஆத்மா, ஹ்ருதயத்தில் இருக்கின்றான். அவன் தானே ப்ரகாசிக்கும் தன்மையனேயன்றி, மற்றொன்றின் உதவியை எதிர்பார்ப்பவன் அல்லன். ஏனென்றால், அவன் சக்ஷுரிந்த்ரியம் (கண்) முதலிய மூன்றுக்கும் முதன்மையானவன்; சக்ஷுரிந்த்ரியம் முதலியவை ஒழிந்த போதிலும், நிலை நின்றிருப்பவன். ஆனது பற்றியே அவன் இம்மூன்றைக் காட்டிலும் விலக்ஷணமாய் (வேறாய்) இருப்பவன். அவன் தனக்கு அஸாதாரணமான ஜ்ஞானத்தினால் ஸமஸ்த (எல்லா) ப்ரகார்ய வஸ்துக்களுக்கும் (அங்கங்களுக்கும்) ப்ரகாரகனாய் (உதவி செய்பவனாய்) இருப்பவன்.

சக்ஷுரிந்த்ரியம் போலவே த்வக்கு (தோல்) முதலிய மற்றை இந்திரியங்களும் பரஸ்பர உபகாரத்தினால்  தான் ஜ்ஞானத்தை விளைவிக்கின்றன. அத்யாத்மமான த்வக்கிந்த்ரியத்திற்கு ஸ்பர்சம் (தொடு உணர்ச்சி) அதிபூதம். வாயு அதிதைவம். ச்ரோத்ர இந்தரியத்திற்கு (காது), சப்தம் அதிபூதம்; திசைகள் அதிதைவம். சக்ஷுரிந்தரியமும் அப்படியே. 

ரஸனேந்தரியத்திற்கு (நாக்கு), ரஸம் (சுவை) அதிபூதம்; ப்ரசேதஸ்ஸு அதிதைவம். க்ராணேந்தரியத்திற்குக் (மூக்கு) கந்தம் (வாசனை) அதிபூதம்; அச்வினி தேவதைகள் அதிதைவம். சக்ஷஸ்ஸு முதலிய இவை எல்லாம் மனத்தினால் உதவி செய்யப் பெற்றே தங்கள் கார்யத்தை நடத்துகின்றன. (மனத்திற்கு நினைக்கப்படும் விஷயம் அதிபூதம், சந்த்ரன் அதிதைவம். ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களின் வைஷம்யத்தினால் (வேறுபாட்டினால்) உண்டான விகாரமும், ப்ரக்ருதியின் கார்யமான மஹத் தத்வத்தினின்று உண்டானதுமாகிய அஹங்கார தத்வம், வைகாரிகம் என்றும், தாமஸம் என்றும், ஐந்தரியம் என்றும் மூன்று வகைப்பட்டிருக்கும். அவ்வஹங்காரமே, தேஹத்திற்கும், ஆத்மாவுக்கும் பேதம் தெரியாமையாகிற மோஹத்தை விளைவிக்கின்றது. 

ஸாத்விக அஹங்காரத்திற்கு வைகாரிக அஹங்காரம் என்றும் பெயர். ராஜஸ அஹங்காரம் தைஜஸம் என்றும், இந்த்ரியோத்பத்திற்கு உதவி செய்கின்றதாகையால், ஐந்தரியமென்றும் கூறப்படுகின்றது.) ஆத்மா, முழுவதும் ஜ்ஞானத்தையே வடிவாக உடையவன்.  தேஹமோ என்றால், முழுவதும் ஜடமாயிருக்கும். ஆத்மா நானென்று தோற்றுகையால், எல்லார்க்கும் ஒப்புக் கொள்ளத் தகுந்தவனேயன்றி, அதெப்படியென்று ஆக்ஷேபிக்கத் தகுந்தவனன்று.  அவன், எப்பொழுதும் ஒருவாறாயிருப்பவனாகையால், உளனென்றே கூறப்படுபவன்.  தேஹமோவென்றால், எப்பொழுதும் மாறிக் கொண்டேயிருக்குமாகையால், இல்லை என்று கூறப்படுகின்றது.

தேஹமும், பால்யாதி அவஸ்தைகளைப் பற்றி உளதென்று கூறப்படுகிறதாயினும், ஆத்மாவைப்போல் எப்பொழுதும் ஒருவாறாயிருப்பதன்று. ஆகையால் உளதென்றே கூறப்படுவதன்று. தேவ, மனுஷ்யாதி பேதம் அவ்வாறு இல்லை என்று கூறப்படுகிற தேஹத்தைப் பற்றினதே அன்றி, ஆத்மாவைப் பற்றினது அன்று. உண்டு, இல்லை என்கிற இரண்டு வியவஹாரமும் (வழக்கும்), வெவ்வேறாகத் தோற்றுகிற தேவ, மனுஷ்யாதி தேஹங்களுக்கு உண்டு. ஆத்மாவுக்கு உண்டு என்கிற வியவஹாரமே (வழக்கே) ஒழிய இல்லை என்கிற வியவஹாரம் (வழக்கு) கிடையாது. தேவ, மனுஷ்யாதி பேதம், ஆத்மாவினிடத்தில் உண்மையாக இல்லையாயினும், தமக்கு ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை (நேராகப் பார்ப்பதை) விளைப்பவனாகிய என்னிடத்தினின்று மீண்ட (விலகிய) மதி (புத்தி) உடையவர்களுக்கு அந்த ப்ரமம் (மனக்கலக்கம்) நீங்காது. அவர்கள் தேவ, மனுஷ்யாதி பேதம் ஆத்மாவினிடத்தில் உள்ளது என்றே நினைப்பார்கள்.

உத்தவர் சொல்லுகிறார்:- ப்ரபூ! தாங்கள் செய்த பாப கர்மங்களால் உன்னிடத்தினின்று மீண்ட மதி (புத்தி) உடையவர்கள், மேன்மையும், தாழ்மையுமான பலவித தேஹங்களைப் பெறுவதும், விடுவதுமாக இருக்கிறார்களே. அவர்கள் தேஹங்களை விடும் பொழுது, அத்தேஹங்களிலுள்ள இந்த்ரியங்களையும் துறந்து, வேறு தேஹங்களைப் போல், வேறு இந்திரியங்களையும் பெறுகின்றார்களா? அல்லது அவ்விந்தரியங்களோடு கூடவே வேறு தேஹங்களைப் பெறுகின்றார்களா? இவ்விஷயத்தில் எது நிச்சயமோ, அதை எனக்குச் சொல்வாயாக. இவ்விஷயம் மந்த புத்தியர்களுக்கு (அறிவு குறைந்தவர்களுக்கு) நிச்சயிக்க முடியாது. கோவிந்தனே! மற்றும், இவ்விஷயத்தை அறிந்தவர்கள், இவ்வுலகத்தில் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், எல்லோரும் உன்னுடைய மாயையினால் வஞ்சிக்கப்பட்டவர்களே அல்லவா?

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:– கர்ம வாஸனை மிகுந்திருக்கப்பெற்ற மனம், ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தோடும், ஸூக்ஷ்மங்களோடும் கூடி, ஒரு சரீரத்தினின்று மற்றொரு சரீரத்தைத் தொடர்ந்து செல்கின்றது. அந்த மனத்தைக்காட்டிலும் வேறுபட்டவனான ஆத்மா, அம்மனத்தைத் தொடர்ந்து செல்கின்றான். (கர்மேந்திரியங்கள், அந்தந்த தேஹங்களிலேயே கிடைக்கின்றனவாகையால், அவை ஒரு தேஹத்தினின்று மற்றொரு தேஹத்தைத் தொடர்ந்து போகிறதில்லை.) பூர்வ தேஹத்திலுள்ள ஜ்ஞானேந்திரியங்களே, தேஹாந்தரத்தில் (மற்றொரு உடலில்) அனுவர்த்திக்கின்றனவாயின் (தொடருகின்றனவாயின்), ஜீவனுக்குப் பூர்வ ஜன்ம ஸ்மரணம் (நினைவு) ஏன் உண்டாகிறதில்லை என்றால், சொல்லுகிறேன். 

கர்ம வாஸனைக்கு உட்பட்டிருக்கின்ற மனம், கண்ணால் பார்த்தவைகளும், காதால் கேட்டவைகளுமான விஷயங்களை த்யானித்துக் கொண்டே இருக்கின்றது; பிறகு, அவ்விஷயங்கள் ஸமீபிக்கும் பொழுது (கிட்டும்போது) ஸந்தோஷிப்பதும், அவை மறையும் பொழுது வருந்துவதுமாக இருக்கின்றது. அதன் பிறகு, முன்புள்ள நினைவு மறந்து போகின்றது. ஒரு ஜன்மத்திலேயே இவ்வாறு மறப்பு உண்டாகிறதாயின், மிகவும் மறப்பிற்கிடமான தேஹ வியோகத்தில் (உடல் விழும்போது), பூர்வ ஜன்ம ஸ்மரணம் (நினைவு) எப்படி உண்டாகும்? 

எவனுடைய மனம், தேஹத்தைக்காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மாவைப் பற்றின நினைவு இல்லாதிருக்கின்றதோ, அவனுக்கு ஏதோ ஒரு காரணத்தினால் மரணம் அடையும் பொழுது மிகவும் மறப்பு (ஜ்ஞானலோபம்) உண்டாகிறது. மரண காலத்தில் அத்யந்த ஜ்ஞான லோபம் (அறிவு முழுவதுமாக அழிவது) உண்டாயினும், தேஹாந்தர (வேறு உடலின்) ஸம்பந்த (தொடர்பு) ரூபமான ஜன்மாந்தரத்தில் மனஸ்ஸும், ஜ்ஞானேந்திரியங்களும், முன் தேஹத்திலிருந்தவைகளே தொடர்ந்து வருகின்றன. ஆகையால் பூர்வ ஜன்மத்தைப் பற்றின நினைவு உண்டாகலாமே என்றால், சொல்லுகிறேன். 

பூரிதானம் (மிகுதியாக தானம்) செய்யும் தன்மையரே! புருஷன், ஸர்வவித மனோ பாவத்தினாலும், தேஹத்தை ஆத்மாவாக அபிமானிக்கையே (நினைப்பதையே) ஜன்மமென்று சொல்லுகிறார்கள் (ஜன்ம காலம் முதல் ஜீவனுக்கு தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்) உண்டாகின்றது). தேஹத்தையே ஆத்மாவாக அபிமானித்திருக்கும் ஜீவனுக்கு, தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), பூர்வ, உத்தர ஜன்மங்களை அனுஸந்திப்பவனுமாகிய (நினைப்பவனுமாகிய) ஆத்மாவின் ஸ்வரூபம் தோற்றுகிறதில்லையாகையால், தேஹவியோக ரூபமான (உடலை விடுவதான) மரணத்தைப் பற்றின நினைவாவது, தேஹாந்தர (வேறு உடலை) ஸ்வீகாரரூபமான (எடுத்துக்கொள்ளும்) ஜன்மாந்தரத்தைப் பற்றின நினைவாவது வருகிறதில்லை. “ஸ்வப்னத்தில் (கனவில்), தன்னை விழித்துக் கொண்டிருக்கிறதாக நினைப்பதும், மனோரதத்தில் அனுபவிக்கிற வஸ்துவும், தேஹாத்மாபிமானமும் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்) ப்ராந்தியே (மனக்கலக்கமே) அன்றி, உண்மையன்று. 

ஸ்வப்னம் (கனவு) காண்கிறவன், தனக்கு முன்புள்ள ஆகாரத்தை மறக்கின்றான். ஆசை வளர்க்கிறவன், தனக்குள்ள நிலைமையை மறந்து விடுகிறான். அவ்வாறே ஜன்மாந்தரத்தில் பூர்வ ஜன்மத்தை மறக்கின்றான். மற்றும், முன் ஜன்மத்திலுள்ள தன்னை முன்பில்லாமல் அப்பொழுது புதிதாகப் பிறந்தது போல் நினைத்துக் கொள்கின்றான். ஆத்மாவுக்கு தேஹ ஸம்பந்தம் உண்டாவதனால், அவ்வாத்மாவினிடத்தில் சரீரம், இந்த்ரியங்கள், அந்தக்கரணம் (மனம்) ஆகிய இம்மூன்று விதமாயிருக்கை தோற்றுகின்றது. 

ஒருவன் அனர்த்தங்களுக்கு (தீங்குக்கு) இடமான அஸத் (கெட்ட) புத்ரனைப் பெறுவது போல், அவை வெளித் தோற்றுகிற தேவ, மனுஷ்யாதி பேதங்களையும், பால்ய, யௌவனாதி பேதங்களையும், லோபம், பயம் முதலிய வெளித் தோற்றாத பேதங்களையும் விளைக்கின்றன. (ஆத்மாவுக்கு தேஹ ஸம்பந்தம் உண்டானவுடனே, தேஹமே ஆத்மாவென்றும், இந்த்ரியங்களே ஆத்மாவென்றும், அந்தக்கரணமே ஆத்மாவென்றும், பல ப்ரமங்கள் (மனக்கலக்கங்கள்) உண்டாகின்றன. அதனால் ஆத்மாவினிடத்தில், தேவ- மனுஷ்யாதி பேத புத்தியும், பால்ய (குழந்தை), யௌவனாதி (இளமை) அவஸ்தா (நிலை) பேதங்கள் (வேறுபாடுகள்) ஆத்மாவுக்குள்ளவை என்னும் புத்தியும், லோபம், பயம் முதலியவை ஆத்ம குணங்களென்னும் புத்தியும் உண்டாகின்றன. ஆகையால், தேஹ ஸம்பந்தம் பூர்வ ஜன்ம ஸ்மரணத்தைப் (நினைவைப்) போக்குவது மாத்ரமே அல்லாமல், மற்றும் பல அனர்த்தங்களையும் (தீங்குகளையும்) விளைக்கின்றது). 

உத்தவரே! பஞ்ச பூதங்களின் பரிணாம ரூபமான சரீரங்கள், ஸர்வகாலமும் மாறுபாட்டை அடைந்து கொண்டே இருக்கின்றன. காலம், ஸூக்ஷ்மம் ஆகையால் அம்மாறுபாடு தெரிகிறதில்லை. காலத்தின் வேகம் கண்டறிய முடியாது. எப்படி தீப ஜ்வாலைகள் (கொழுந்துகள்) க்ஷணந்தோறும் (ஒவ்வொரு நொடியும்) வெவ்வேறாயிருப்பினும், பேதம் தெரிகிறதில்லையோ, அது போலவும், எப்படி ப்ரவாஹத்தில், ஜலம் வெவ்வேறாயிருப்பினும், பேதம் தெரிகிறதில்லையோ, அது போலவும், எப்படி வ்ருக்ஷங்களின் (மரங்களின்) பலன்களில் க்ஷணந்தோறும் உள்ள பரிணாமம் தெரிகிறதில்லையோ, அது போலவும், காலத்தினால் உண்டாகிற தேஹ பரிணாமங்கள் தெரிகிறதில்லை. 

தீப ஜ்வாலை (கொழுந்துகள்) க்ஷணந்தோறும் மாறிக் கொண்டிருப்பினும், ஜனங்கள் அதை அதே ஜ்வாலை என்று நினைத்து, அவ்வாறே வழங்குகிறார்கள். ப்ரவாஹத்தில் (வெள்ளத்தில்) வெவ்வேறு ஜலம் வந்து கொண்டிருப்பினும், அதே ஜலமென்று நினைத்து அவ்வாறு வழங்குகிறார்கள். அது போலவே, தேஹங்கள் க்ஷணந்தோறும் மாறிக் கொண்டிருப்பினும், அது தெரியாமல், அவனே இவனென்று நினைத்து, அவ்வாறு சொல்லுகிறார்கள். நிலையற்ற ஆயுளையுடைய அம்மனிதர்கள், அவ்வாறு நினைப்பது ப்ரமமேயன்றி உண்மையன்று. 

தேஹாபிமானமுடைய (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம் உடைய) ஜீவன், தேஹ (உடல்) உத்பத்திக்குக் (உண்டாவதற்குக்) காரணமான கர்மத்தினால், தேஹத்தைப் போல் ஸர்வ காலமும் மாறும் தன்மையுடையவன் அல்லனாயினும், ப்ராந்தியினால் (மனக்கலக்கத்தினால்) பிறப்பதும், சாவதுமாய்த் தோற்றுகிறானன்றி வேறில்லை. அவன் பிறவியற்றவன் ஆகையால் பிறப்பதும் இல்லை; மரணமற்றவனாகையால், மரணம் அடைவதும் இல்லை. கட்டையில் மறைந்திருக்கிற அக்னி, கடைவதனால் வெளித் தோற்றுகிறது. அவ்வளவு மாத்ரத்தினால், அவ்வக்னிக்குக் கட்டையோடு கூடவே உத்பத்தியும், விநாசமும் (அழிவும்) உண்டாகின்றன என்று சொல்லக் கூடுமோ? அவ்வாறே ஜீவனும் தேஹ ஸம்பந்த வியோகங்களைப் (விடுவிப்பை) நீ பெறுவது மாத்ரத்தினால், அவனுக்கு ஜன்ம (பிறப்பு), மரணங்கள் (இறப்பு) உண்டு என்று சொல்ல முடியாது. ஆனால், அவ்வாறு தோற்றுவது ப்ராந்தியே (மனக்கலக்கமே) அன்றி உண்மை அன்று. 

ஜீவன், ரேதஸ்ஸின் மூலமாக யோனி த்வாரத்தில் (பிறப்பு உறுப்பில்) ப்ரவேசிக்கை, கர்ப்பத்தில் வளருகை, யோனி த்வாரத்தினால் வெளி வருகையாகிற ஜன்மம், பால்யம், (ஐந்து வயது வரையிலுள்ள நிலைமை), கௌமாரம் (பதினாறு வயது வரையிலுமுள்ள நிலைமை), யௌவனம் (அது முதல் இருபத்து நான்கு வயது வரையிலுமுள்ள நிலைமை), வயோமத்யம் (அதுமுதல் அறுபது வயது வரையிலுமுள்ள நிலைமை), கிழத்தனம், மரணம் ஆகிய இவ்வொன்பது அவஸ்தைகளும் சரீரத்திற்கே உள்ளவை; மனோரதத்தினால் விளைகின்ற பலவகையான இச்சரீரங்களையும், மற்றும் பல சரீரங்களையும், அவற்றைத் தொடர்ந்திருக்கின்ற பலவித அவஸ்தைகளையும் (நிலைகளையும்), பசி, தாஹம் முதலிய மற்றும் பல அவஸ்தைகளையும் (நிலைகலையும்), ஸத்வாதி குண பரிணாமங்களான சப்தாதி விஷயங்களின் (உலகியல் விஷயங்களின்) ஸங்கத்தினால் ஒருகால் ஏற்றுக் கொள்வதும், ஒருகால் விடுவதுமாயிருக்கின்றான். 

(ஜீவன் சரீரத்தை விடும் பொழுது, எந்த அபிப்ராயத்தோடு அதை விடுகிறானோ, அந்த அபிப்ராயமே அவனுக்கு மேன் மேலும் தொடர்ந்து வருகின்றது. அவ்வபிப்ராயத்திற்கு அனுகுணமாகவே (ஏற்றதாகவே) மற்றொரு சரீரத்தையும் ஏற்றுக் கொள்கின்றான். ஜீவன் சரீரங்களை விடுவதும், ஏற்றுக் கொள்வதுமாயிருக்கிறானே அன்றி, அவற்றை இவன் ஸாக்ஷாத்கரிக்கிறதில்லை (நேரில் பார்ப்பதில்லை). ஆனால், விவேகமுடையவன் தனக்குப் பிள்ளை பிறப்பதையும், தன் தந்தை மரணம் அடைவதையும் கண்டு, தனக்கும் தேஹ ஸம்பந்த ( உடல் தொடர்பு) தேஹ வியோகங்களாகிற (உடல் விலகுகை) ஜன்ம, மரணங்களை ஊஹிக்கின்றான் (அனுமானிக்கிறான்). 

ஜன்ம காலத்திலும், மரண காலத்திலும், ஜீவன் மோஹித்துக் கிடக்கிறான் ஆகையால் அவற்றை அறிகிறதில்லை. ஆயினும், அந்த ஜன்ம மரணங்கள் தேஹத்திற்கே அன்றி, ஜீவனுக்குக் கிடையாது. விதையினால் மரம் முளைப்பதையும், கால பரிணாமத்தினால் அது நசிப்பதையும் காண்கிற புருஷன், அந்த மரத்தைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) என்பது நமக்குத் தெரிந்த விஷயமே. இவ்வாறே தேஹம், பஞ்ச பூத ஸமுதாய ரூபமான காரணத்தினால் உண்டாவதையும், கால பரிணாமத்தினால் நசிப்பதையும் காண்கிற ஜீவன், அந்த தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டவனே. 

இவ்வாறு ஆத்மா, ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டவன் என்று உள்ளபடி பிரித்தறியாதவன், சப்தாதி விஷய அனுபவத்தினால் தேஹம், ஆத்மா இரண்டும் ஒன்றே என்னும் மோஹத்தில் அழுந்தி, ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி (இறப்பு) ரூபமான ஸம்ஸாரத்தை மேன்மேலும் அனுபவிக்கின்றான். ஸத்வ குணத்தின் கார்யமான சம, தமாதிகளில் அபிநிவேசம் (ஈடுபாடு) உளதாயின், அவற்றிற்குரிய கர்மங்களைச் செய்து, தேவ யோனியிலும் (பிறப்பிலும்), ரிஷி யோனியிலும், பிறக்கின்றான். ரஜோ குணத்தின் கார்யமான காமாதிகளில் அபிநிவேசம் (ஈடுபாடு) உளதாயின், அவற்றிற்குரிய கர்மங்களைச் செய்து, அஸுர யோனியிலும், மனுஷ்ய யோனியிலும் பிறக்கின்றான். தமோ குணத்தின் கார்யமான சோக மோஹாதிகளால் அவற்றிற்குரிய கர்மங்களைச் செய்து பூத, ப்ரேத, பிசாசாதி யோனிகளிலும், பசு, பக்ஷ்யாதி யோனிகளிலும் பிறக்கின்றான். இவ்வாறு கர்மங்களால் பலவாறு சுழல்கிறான். 

ஒரு புருஷன் கூத்தாடுகிறவர்களையும், பாட்டுப் பாடுகிறவர்களையும் பார்த்து, தானும் புத்தியினால் கூத்தாடுவது போலும், பாட்டுப் பாடுவது போலும் இருப்பது போல், ஆத்மா இயற்கையில் செயலற்றவனாயினும், ப்ரக்ருதியின் குணங்களான சேஷ்டை முதலிய தர்மங்களைப் புத்தியினால் தன்னிடத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அந்தச் சேஷ்டாதி தர்மங்களைத் தான் செய்வது போல் தோற்றுகிறான். ப்ரவாஹத்தில் ஜலம் அசையும் பொழுது, அதில் ப்ரதிபலிக்கிற வ்ருக்ஷங்களும் அசைவது போல் தோற்றுகின்றன. கண் சுழலும் பொழுது, பூமியும் சுழலுவது போல் தோற்றுகிறது. அவ்வாறே தேஹாத்மாக்கள் இரண்டும் ஒன்றே என்று ப்ரமிக்கின்ற புத்தியினால், தேஹ தர்மங்கள் ஆத்மாவினிடத்தில் இருப்பது போல் தோற்றுகின்றன. 

தாசார்ஹனே! மனோரதத்தில் அனுபவிக்கும் பதார்த்தங்களும், ஸ்வப்னத்தில் (கனவில்) அனுபவிக்கும் பதார்த்தங்களும் போல், ஆத்மாவினிடத்தில் தேஹ தர்மங்களை இருப்பதாக நினைப்பது, ப்ரமமே (மனக்கலக்கமே) அன்றி, உண்மையன்று. சப்தாதி விஷயங்கள் கிட்டியிராமற் போயினும், அவ்விஷயங்களை நினைத்துக் கொண்டிருக்கும் ஜீவனுக்கு, ஸம்ஸாரம் நிவர்த்திக்கிறது (முடிவது) இல்லை. (விஷயங்களை த்யானித்துக் கொண்டிருந்தால், ஸம்ஸாரம் மேன்மேலும் வளர்ந்து வரும்.) ஸ்வப்னம் (கனவு) தொடர்ந்து வருமளவும், தேசாந்தரம் போதல், தலையறுப்புண்ணுதல் முதலிய அனர்த்த (தீங்கு) அனுபவங்களும் தொடர்ந்து வருமேயன்றி, நிவர்த்திக்காது (நீங்காது). ஸ்வப்னம் (கனவு) நிவர்த்தித்தவுடனே (முடிந்ததும்) அந்த அனுபவங்களும் நிவர்த்திக்கின்றன (முடிகின்றன). அவ்வாறே சப்தாதி விஷயங்களின் நினைவு மாறாதிருக்கும் வரையில், ஸம்ஸாரமும் மாறாது. 

உத்தவரே! இவ்வாறு சப்தாதி விஷயங்களின் நினைவு ஸம்ஸாரத்தை வளர்க்குமாகையால், அனர்த்த ஹேதுவான (தீமைக்குக் காரணமான) விஷயங்களில் தாழும் தன்மையுள்ள இந்திரியங்களால் சப்தாதி விஷயங்களை அனுபவிக்க வேண்டாம். அவற்றை அனுபவித்தால், அவற்றின் நினைவு மாறாமல் தொடர்ந்து கொண்டே வரும். நினைவு மாறாதிருக்குமாயின், ஸம்ஸாரம் நிவர்த்திக்காது (நீங்காது). தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணர்களான (வேறான) ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை அறியாமையால், தேஹமே ஆத்மாவென்னும் ப்ரமம் (மனக்கலக்கம்) உண்டாகிறதென்றும், அந்த ப்ரமமே ஜன்ம (பிறப்பு), மரணாதி (இறப்பு) அவஸ்தைகள் ஆத்மாவினிடத்தில் இருப்பதாக நினைப்பதற்குக் காரணமாகிறதென்றும் நிச்சயிப்பாயாக. 

ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மை தெரியுமாயின், இந்த ப்ரமம் உண்டாகிறதில்லை. எவர் என்ன ஆக்ஷேபம் செய்யிலும், நிந்திக்கிலும், அஸத்துக்கள் (நன்னடத்தை இல்லாதோர்) பரிஹாஸம் (கேலி) செய்யிலும், குணங்களில் தோஷத்தை ஆரோபிக்கிலும் (ஏற்றினாலும்), அடிக்கிலும், பிடித்திழுத்துத் தடை செய்யிலும், ஜீவனத்திற்கு விக்னம் (தடை) செய்யிலும், தன்மேல் காரி எச்சில் உமிழிலும், மூத்ரம் பெய்யிலும், இவ்வாறு தெரியாத மூடர்கள் பலவாறு நழுவச் செய்யிலும், நன்மையில் விருப்பம் உளதாயின், இத்தகைய ஆபத்தை அடைந்தும், ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மையை ஆராய்ந்தறிவதற்குக் காரணமான தன்னால் தன்னைக் கரையேற்ற வேண்டும்.

உத்தவர் சொல்லுகிறார்:- பேசுகிறவர்களில் சிறந்தவனே! பிறர் செய்யும் ஆக்ஷேபம் (எதிர்ப்பு) முதலியவைகளைப் பொறுத்துக் கொண்டு, ஆத்ம, பரமாத்ம ஸ்வரூபங்களை உள்ளபடி எவ்வாறு அறிவேனோ, அவ்விதத்தை எனக்குச் சொல்ல வேண்டும். தன் மேல் அஸத்துக்கள் (அறிவிலிகள், நன்னடத்தை அற்றோர்) செய்கிற ஆக்ஷேபம் (எதிர்ப்பு) முதலிய அதிக்ரமங்களைப் (எல்லை மீறிய செயல்களைப்) பொறுப்பது மிகவும் அஸாத்யம் (செய்ய முடியாதது) என்று எனக்குத் தோற்றுகிறது. ஏனென்றால், வைஷ்ணவ தர்மங்களில் நிலை நின்று, தத்தம் தர்மங்களைத் தவறாமல் அனுஷ்டித்துக் கொண்டு வருபவர்களும், உன் பாதார விந்தங்களையே பற்றினவர்களும், அந்தக்கரணத்தை வென்றவர்களுமான சில பெரியோர்களைத் தவிர, மற்ற எத்தகைய அறிஞர்களுக்கும் ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் வருகிற தேஹாத்ம ப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ராக (விருப்பு) த்வேஷாதிகள் (வெறுப்பு) முதலியவைகளைக் கடக்க முடியாது. ஸர்வாந்தராத்மனே (எல்லோரையும் உள் இருந்து நியமிப்பவனே)! இவ்விஷயம் உனக்குத் தெரியாததோ? நான் சொல்ல வேண்டுமோ? 

இருபத்திரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக