சனி, 14 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 327

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தொன்றாவது அத்தியாயம்

(கர்ம, ஜ்ஞான, பக்திகளில் அதிகாரமில்லாத ஸம்ஸாரிகளுக்கு த்ரவ்ய, தேசாதி குணதோஷங்களை நிரூபித்தல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஜீவாத்மாக்கள், கர்ப்ப (கருவறை), ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸாம்ஸாரிக (உலகியல்) துக்க ஸாகரத்தில் முழுகிக் கிடப்பதைக் கண்டு, இவர்களை அனுக்ரஹிக்க வேண்டும் என்னும் விருப்பத்தினால் என்னை ஆராதிப்பதற்குரியவையான கரண (இந்த்ரியங்கள்), களேபரங்களையும் (உடல்), சாஸ்த்ராதிகளையும் கொடுத்து, இவர்கள் நம்மைப் பெற வேண்டுமே என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிற நான், என்னைப் பெறுதற்கு உபாயங்களான (வழி, மார்க்கம்) கர்ம யோக, ஜ்ஞான யோக, பக்தி யோகங்களை வெளியிட்டேன். 

எவர்கள் இந்த உபாயங்களை (வழிகளை) உபேக்ஷித்து (ஒதுக்கி) சஞ்சலமான (நிலையற்ற)  இந்த்ரியங்களுக்கு உட்பட்டு, அற்பமான சப்தாதி விஷயங்களை (உலக விஷயங்களை) அனுபவிக்கப் பார்க்கிறார்களோ, அவர்கள் மேன்மேலும் கர்ப்ப (கருவறை), ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தையே அனுபவிப்பார்களன்றி, அதினின்று மீள மாட்டார்கள். எவனெவனுக்கு எந்தெந்த தர்மத்தில் அதிகாரம் ஏற்பட்டிருக்கிறதோ, அவனவன் தன் தனக்கு ஏற்பட்ட அந்தந்த அதிகாரத்தில் நிலை நின்றிருக்கை அவனவனுக்கு குணமாகும். அதினின்று மாறுகை தோஷமாகும். (சூத்ரனுக்கு, ப்ராஹ்மண தர்மம் குணமாகாது. ஸம்ஸாரத்தில் விரக்தி உண்டாகப் பெறாதவனுக்கு, ஸந்நியாஸ தர்மம் குணமாகாது. விரக்தி உண்டாகப் பெற்றவனுக்கு, அதுவே குணமாகும்). குண தோஷங்களைப் பற்றிய நிர்ணயம் இதுவே என்று கண்டு கொள்வாயாக. (ஆகையால், மனுஷ்ய ஜாதியில் பிறந்தவர் அனைவர்க்கும் க்ஷூத்ரமான (தாழ்ந்ததான) சப்தாதி விஷயங்களில் அபிநிவேசம் (ஈடுபாடு) கொள்ளுகை மேன்மேலும் ஸம்ஸாரத்தை வளர்க்குமாகையால், தோஷமேயாம்). 

வஸ்துக்களெல்லாம் பஞ்ச பூதாதி ஸ்வரூபங்களாகையால் ஒத்திருப்பினும், “இது யோக்யமா? அன்றா” என்கிற ஸந்தேஹத்தை உண்டாக்கி, அதன் மூலமாய் அவற்றில் ஸ்வாபாவிகமான (இயற்கையான) ப்ரவ்ருத்தியை (செயலைத்)  தடுக்கும் பொருட்டுச் சுத்தியும் (தூய்மை), அசுத்தியும் (தூய்மையின்மை) விதிக்கப்படுகின்றன. அவைகளால் இதில் தனக்கு அதிகாரம் உண்டென்பதும் இல்லை என்பதுமாகிய குண தோஷங்கள் நன்கு தெரிவிக்கப்படுகின்றன. உலகத்தில் மனுஷ்யர்களுக்கு அவரவர்க்கு இஷ்டமானவற்றில் ப்ரவ்ருத்தி (செயல்) உண்டாவது ஸஹஜம் (இயற்கை). ஆனால் சாஸ்த்ர மர்யாதைக்கு நாம் உட்பட்டு நடக்க வேண்டுமாகையால், ஒரு வஸ்துவில் நமக்கு விருப்பம் உண்டாயினும், சாஸ்த்ரம் இதை நமக்குச் சுத்தம் என்கிறதோ, அசுத்தமென்கிறதோ என்று ஸந்தேஹித்து, அதில் நாம் ப்ரவர்த்திக்கல் (செயலில் இறங்குதல்) ஆகாது. சாஸ்த்ரத்தை ஆராய்ந்து சுத்தமென்று ஏற்படுமாயின், “இதில் நமக்கு அதிகாரம் உண்டு. இது நமக்கு குணமா” என்று நிச்சயித்துக் கொண்டு, ப்ரவர்த்திக்க (செயலில் இறங்க) வேண்டும். இதற்காகவே சாஸ்த்ரங்களில் வஸ்துக்களுக்குச் சுத்தியும், அசுத்தியும் அவரவர்க்குத் தகுந்தபடி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. 

பாபமற்றவரே! தந்தம் அதிகாரத்தில் நிலை நின்றிருக்கும் தர்மமாகிற பாரத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள், அனுஷ்டிக்க வேண்டிய ஆசாரம் இதுவே. (அதாவது சுத்தியும் (தூய்மை), அசுத்தியும் (தூய்மையின்மை) இன்னவை என்று தெரிந்துகொண்டு, ப்ரவ்ருத்தி (செயலில் இறங்குதல்), நிவ்ருத்திகளைச் (விலகுதல்) செய்கையே). தர்மத்திற்காகவும், “இது பற்றத்தக்கது. இது பற்றத்தக்கதன்று,” என்கிற வியவஹாரத்திற்காகவும், தர்மத்திற்கு விரோதமில்லாமல் தேஹ யாத்ரை (உடல் நீடிப்பு) நடப்பதற்காகவும், இந்த ஆசாரத்தை நான் நிரூபித்துச் சொன்னேன். 

பூமி, ஜலம், அக்னி, அனிலம் (காற்று), ஆகாசம் என்னும் பஞ்ச பூதங்கள் தாவரம் முதல் ப்ரஹ்மதேவன் வரையிலுள்ள ஸமஸ்த தேஹங்களுக்கும் (உடல்களுக்கும்) காரணங்கள், அவை அந்தராத்மாவான என்னோடு ஸர்வ காலமும் கூடிக் கொண்டிருப்பவை. அவை எப்பொழுதும் என்னை விட்டுப் பிரிந்திருக்க மாட்டாது (ஸமஸ்த பதார்த்தங்களும் சித்து, அசித்து, ஈச்வரன் என்னும் தத்வத்ரய ரூபங்களாயிருக்கும். ஆகையால், ஸமஸ்த வஸ்துக்களும் ஒன்றோடொன்று ஒத்திருப்பவை என்பது வெளிச்சமே.) இவ்வாறு ப்ரஹ்மதேவன் முதல் ஸ்தாவரம் (மரம், செடி) வரையிலுள்ள ஸமஸ்த பதார்த்தங்களும் ஒத்திருப்பவையாயினும், அவற்றின் சரீரங்களுக்குக் காரணமான பஞ்சபூதங்களில் பற்பல விதமான நாமங்களையும் (பெயர்களையும்), ரூபங்களையும் (உருவங்களையும்) ப்ரஹ்மதேவன் வேதத்தின் மூலமாய்த் தெரிந்து கொண்டு ஸ்ருஷ்டிக்கிறான். அவ்வாறு ஸ்ருஷ்டிப்பது, இந்த ஸம்ஸாரி ஜீவாத்மாக்களுக்கு அவரவர் விரும்பும் ப்ரயோஜனம் (பலன்) ஸித்திப்பதற்குரிய அதிகாரங்களின் நிலைமைக்காகவே. 

பெரியோர்களில் சிறந்தவரே! தேச காலாதி ரூபமான வஸ்துக்களுக்கு, யோக்யத்வம் (தகுதி) என்றும், சுத்தி (தூய்மை) என்றும் சொல்லப்படுகிற குணமும், அயோக்யத்வம் (தகுதியின்மை) என்றும், அசுத்தி (தூய்மையின்மை) என்றும் சொல்லப்படுகிற தோஷமும், தேச, காலாதி நிஷ்டமான (இந்த இடத்தில், இந்த நேரத்தில் செய்யப்பட வேண்டியவை என்று வரையறுக்கப்பட்ட) கர்மங்களின் நியமத்திற்காக விதிக்கப்படுகின்றன. (இன்ன தேசத்தில், இன்ன காலத்தில், இன்ன வஸ்துவைக் கொண்டு, இன்ன கர்மத்தை, இன்னவன் அனுஷ்டிக்க வேண்டும். இன்னவன் அனுஷ்டிக்கலாகாது என்கிற நியமத்திற்காக இன்னவனுக்கு இன்னது சுத்தம். இன்னது அசுத்தம் என்று தேச, காலாதி வஸ்துக்களின் குண, தோஷங்களை நான் நிரூபித்துச் சொல்லுகிறேன்). 

க்ருஷ்ண ஸாரம்ருகம் (கறுப்புப் புள்ளிமான்) திரியாத இடமும், ப்ராஹ்மணர்களிடத்தில் மற்றவர் பக்தி செய்யாத இடமும், தேசங்களுக்குள் அசுத்தமான தேசமாம். (க்ருஷ்ண ஸாரம்ருகம் (கறுப்புப் புள்ளிமான்) திரியப்பெற்ற இடமும், ப்ராஹ்மணர்களிடத்தில் மற்றவர் பக்தி செய்கிற இடமும் சுத்தமான தேசம் என்றறிக). அதிலும் க்ருஷ்ண ஸாரம்ருகம் (கறுப்புப் புள்ளிமான்) திரிகிற இடமெல்லாம் சுத்தமாக மாட்டாது. பின்னையோ என்றால், ஸௌராஷ்ட்ரம் என்கிற ஸௌவீர தேசம், மகதம், களிங்கம் முதலிய கீகடதேசம், ம்லேச்சர் (பாரதப் பண்பாடு இல்லாதவர்) நிறைந்த அஸமஸ்க்ருதமான (பண்படுத்தப்படாத) தேசம், கிளர்நிலம் (பாலைவனம்) இவை தவிர, மற்ற தேசங்களே க்ருஷ்ண ஸாரமருகம் (கறுப்புப் புள்ளிமான்) திரியப் பெறுமாயின், சுத்தமாம். இல்லையாயின், சுத்தமாக மாட்டாது.  

ஸௌவீராதி தேசங்கள் க்ருஷண ஸாரம்ருகம் (கறுப்புப் புள்ளிமான்) திரியப் பெறுமாயினும், சுத்தமாக மாட்டாது. கார்யத்திற்கு வேண்டிய த்ரவ்யங்கள் நிறைந்திருக்கையாலும், பூர்வாஹ்ணத்வம் (பகலின் முன்பாகமாயிருக்கை) முதலியவைகளாலும், குணமுள்ள காலம் கர்மத்திற்குரியதாகையால், சுத்தமென்று கூறப்படும். எந்த காலத்தில் த்ரவ்யம் அகப்படாமையாலாவது, தேச க்ஷோபத்தினாலாவது (தீங்கு, தொந்தரவு) கர்மம் நிறைவேறமாட்டாதோ, அத்தகைய காலமும், ஸூதகாதி (பிறப்புத் தீட்டு) காலமும் கர்மத்திற்கு உரியதன்றாகையால், அசுத்தமென்று கூறப்படும் (காலத்திற்குச் சொன்ன இந்த சுத்தி, அசுத்திகளை தேசத்திலும் கண்டு கொள்க).

தேச, காலங்களிரண்டும் இயற்கையாலாவது, த்ரவ்யாந்தர (வேறு பொருட்களின்) ஸம்பந்தத்தினாலாவது (தொடர்பினாலாவது), கர்மத்திற்குரியனவாகின்றன. மதுரை முதலிய தேசமும், ஜயந்தி முதலிய காலமும், பகவானுடைய ஸம்பந்தத்தினால் குணமுள்ளவை ஆகின்றன). வஸ்த்ரம் முதலிய த்ரவ்யத்திற்கு, மண், ஜலம், வெய்யில், அக்னி முதலியவற்றாலும், சாஸ்த்ர பலத்தினாலும் “இது, சுத்தமோ? அசுத்தமோ?” என்னும் ஸந்தேஹத்தில் “இது சுத்தமே” என்னும் ப்ராஹ்மண வசனத்தினாலும், சுத்தி ஏற்படும். மூத்ராதிகளால் அசுத்தி ஏற்படும். புஷ்பம் முதலியவற்றிற்கு ப்ரோக்ஷணம் (நீர் தெளித்தல்) முதலியவற்றால் சுத்தி (தூய்மை) உண்டாகும். (பழைய அன்னம் முதலியவற்றிற்கு அது சுத்தியாகாது) புஷ்பம் முதலியவற்றிற்கு முகர்வது முதலியவற்றால் அசுத்தி உண்டாகும். சில த்ரவ்யங்களுக்குக் காலத்தினால் சுத்தி உண்டாகும். (புதிய ஜலத்திற்குப் பத்து நாள் கழிந்தால், சுத்தி உண்டாகின்றது). பெருமை சிறுமைகளாலும், சுத்தி அசுத்திகள் உண்டாகின்றன. (நதீ ஜலம் அதிகமாயிருக்கையால், சுத்தமாகின்றது. தெரு ஜலம் அல்பமாய் (குறைவாய்) இருக்கையால் அசுத்தமாகின்றது). சக்தியும், அசக்தியும் சுத்திக்குக் காரணமாகின்றன.

ஸூர்ய, சந்த்ர உபராகம் (க்ரஹணம்) முதலிய காலங்களில் ஸ்னானம் செய்வதற்குரிய சக்தியுடையவனுக்கு, ஸ்னானாதிகளால் தான் சுத்தி உண்டாகும். வியாதி க்ரஸ்தனாய் (உடையவனாய்) இருப்பானாயின், அவனுக்கு ஸ்னானம் செய்ய முடியாதாகையால், அவன் ஸ்னானம் செய்யாதிருப்பினும், சுத்தியேயன்றி அசுத்தி உண்டாகிறதில்லை. புத்தியும் கூட சுத்தி அசுத்திகளுக்குக் காரணமாகின்றது. புத்ர ஜன்மாதிகளில் பத்து நாள் கழித்துத் தெரியுமாயின், சுத்தியே. பத்து நாளுக்குள் தெரியுமாயின் அசுத்தியே. உத்ஸவமும் சுத்திக்குக் காரணமாகின்றது. பகவத் உத்ஸவாதிகளில் தொடத் தகாதவனைத் தொட்ட போதிலும், சுத்தியேயன்றி அசுத்தி கிடையாது. அதற்குக் காரணம் உத்ஸவமே. மற்றும், தேசத்தையும் (இடத்தையும்), அவஸ்தையையும் (இருக்கும் நிலையையும்) அனுஸரித்து, நன்கு சுத்தி செய்கிறார்கள்.

நிர்ப்பயமான (பயமற்ற) தேசத்தில்தான் விதிப்படி சுத்தியை நடத்துவார்கள். திருடர் முதலிய உபத்ரவத்திற்கு (தொந்தரவுக்கு) இடமான தேசங்களில் அவ்வாறு சுத்தி செய்யமாட்டார்கள். அப்படி செய்யாமற் போயினும், அந்த த்ரவ்யங்கள் அத்தேசத்தைப் பற்றிச் சுத்தங்களேயாமன்றி, அசுத்தங்களாக மாட்டாது. வியாதியற்ற அவஸ்தையில் தான் விதிப்படி சுத்தியை நடத்துவார்களன்றி, வியாதி உள்ள நிலையில் நடத்த மாட்டார்கள். அப்படி நடத்தாமற் போயினும், அந்த வியாதி உள்ள நிலையில் அவற்றிற்குச் சுத்தியேயன்றி அசுத்தி கிடையாது. யௌவன (இளம்) வயதில் போல் பால்ய (குழந்தை), வார்த்தகங்களில் (கிழத்தன்மையில்) சுத்தியைத் தேட வேண்டியதில்லை. ஸம்ருத்தியும் (செழிப்பும்) கூடச் சுத்தி, அசுத்திகளுக்குக் காரணமாகின்றது. 

கிழிந்த துணி, அழுக்குத் துணி, தைய்த்த துணி முதலியவை ஸம்ருத்தி (செல்வச் செழிப்பு) உள்ளவனுக்கு, அசுத்தியை விளைக்கும். தரித்ரனுக்குச் சுத்தியையே விளைக்குமன்றி, அசுத்தியை விளைக்காது. தான்யத்திற்குக் காலம், காற்று, வெய்யில் முதலியவற்றாலும், மரத்தில் செய்த பாத்ரம் முதலியவற்றிற்கு, மண், ஜலம் இவைகளாலும், யானை தந்தம் முதலியவற்றிற்குக் காற்று, வெய்யில் முதலியவற்றில் உலற்றுவதனாலும், நூலுக்கு ஜலத்தினாலும், பால் முதலிய ரஸ த்ரவ்யங்களுக்குக் (திரவப் பொருட்களுக்கு) காய்ச்சுவதனாலும், வெண்கலம் முதலிய தைஜஸ (ஒளிரும்) பதார்த்தங்களுக்கு அக்னியினாலும், தோல்களுக்கு எண்ணெயினாலும், பார்த்திவ (பூமி தொடர்புடைய) பதார்த்தங்களுக்குச் சில ஸம்பந்தங்களை விளைப்பதனாலும், சில ஸம்பந்தங்களை நீக்குவதனாலும் சுத்தி ஏற்படுகின்றது. 

பார்த்திவமான (பூமி தொடர்புடைய) அன்னத்திற்குக் கேசம் (முடி) முதலியவற்றின் ஸம்பந்தத்தை நீக்குவதனாலும், நெய் முதலியவற்றின் ஸம்பந்தத்தை விளைப்பதனாலும், சுத்தி உண்டாகின்றது. தாம்ரம், வஸ்த்ரம் முதலியவை அசுத்த ஸம்பந்தம் பெறுமாயின், அதனாலுண்டான அழுக்கும், துர்க்கந்தமும் (துர்நாற்றமும்) எந்த வஸ்துவினால் போகுமோ, அந்த வஸ்துவினால் அந்த அழுக்கு நீங்கி, தன் ஸ்வரூபத்தை அடையும் வரையில், அவைகளுக்குச் சுத்தியை நடத்த வேண்டும். ஸ்னானம், தானம், தவம், கார்யம் செய்வதற்குரிய வயது, சக்தி, உபநயனாதி ஸம்ஸ்காரம், ஸந்த்ய உபாஸனாதி கர்மம், என்னை த்யானம் செய்கை இவைகளால் தனக்குச் சுத்தி ஏற்படுகின்றது. இவ்வாறு சுத்தனாகித் தன்னதிகாரத்திற்குரிய கர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஆசார்ய முகமாய் உள்ளபடி அறிகையும், அதன் ப்ரயோகங்களை (வழிமுறைகளை) அறிகையும், மந்த்ரத்திற்குச் சுத்தி. கர்மங்களுக்கு என்னிடத்தில் அர்ப்பணம் செய்கையே சுத்தியாம். (அர்ப்பணமாவது பகவானை பூஜித்தல் என்று எண்ணுதல்). தேசம், காலம், த்ரவ்யம், கர்த்தா, மந்த்ரம், கர்மம் இவை ஆறும் சுத்தமாயிருந்தால் தான், தன்னுடைய அதிகார ரூபமான தர்மம் கைகூடும். இவை அசுத்தமாய் இருக்குமாயின், அதர்மமே கைகூடும்.

சில இடத்தில் குணமென்று சொல்லப்படுகிற சுத்தியும், விசேஷ விதியைப்பற்றித் தோஷமேயாம். (எப்படி என்றால், வியாதி உடையவன் ஸ்னானம் செய்யலாகாதென்று சாஸ்த்ரம் நிஷேதிக்கிற தாகையால் (விலக்குகிறதாகையால்), அவனுக்கு ஸ்னானம் தோஷமேயாம் அன்றி குணமாகாது). அவ்வாறு சில இடத்தில் தோஷமும், விசேஷ விதியைப்பற்றிக் குணமாகும். (அது எப்படி என்றால், ப்ராணி ஹிம்ஸை செய்யலாகாதென்று சாஸ்த்ரம் நிஷேதிக்கிறதாகையால் (விலக்குகிறதாகையால்), ஹிம்ஸை தோஷமே ஆயினும், யாகம் செய்ய விரும்புகிறவனுக்கு, அது குணமேயாகின்றது). ஆகையால், விசேஷ (குறிப்பிட்ட) சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட குண தோஷங்களைப் பற்றிய நியமம், ஸாமான்ய சாஸ்த்ரத்தினால் ஏற்பட்ட குண தோஷ விபாகத்தைத் (பிரிவைத்) தடுக்குமேயன்றி, வேறில்லை. (விசேஷ (சிறப்பு) விதி விஷயத்தில் ஸாமான்ய சாஸ்த்ரத்திற்கு ஸங்கோச (குறைவு) மாத்ரமேயன்றி, அதற்கு முதலே பாதை (முற்றிலும் விலக்கு) இல்லை. யாகத்தில் பசு ஹிம்ஸை செய்யலாமென்று சாஸ்த்ரத்தில் விசேஷ (சிறப்பு) விதி உண்டாகையால், ப்ராணி ஹிம்ஸை செய்யலாகாதென்கிற ஸாமான்ய சாஸ்த்ரம், அந்த யாக விஷயம் தவிர மற்ற விஷயங்களில் பொருத்தம் உடையதே; அது முற்றிலும் விலக்கப்பட்டதாகாது). 

பதிதர்கள் (தன் நிலையிலிருந்து வீழ்ந்தவர்கள்) ஒருவர்க்கொருவர் ஸம்பாஷணம் (பேசுவது) முதலியன செய்யில், அது தோஷமாகாது. பதிதன் அல்லாதவன் பதிதர்களோடு ஸம்பாஷணாதிகள் செய்யில், அது தோஷமேயாம். க்ருஹஸ்தனுக்குச் சப்தாதி விஷயங்களில் பற்று ஸ்வாபாவிகம் (இயற்கை) ஆகையால் அது அவர்களுக்குத் தோஷமன்று. அதுவே ஸந்நியாஸிக்குத் தோஷமாம். நடக்கிறவனுக்குக் கால் தடுக்கிக் கீழ் விழ யோக்யதை உண்டேயன்றி, முன்னமே படுத்துக் கொண்டிருக்கிறவனுக்கு விழ ப்ரஸக்தியே (வாய்ப்பே) இல்லை அல்லவா? தனக்கு எந்தெந்த விஷயத்தினின்று பிரிவு நேரிடுகிறதோ, அந்தந்த விஷயத்தை மீளவும் நெஞ்சிலும் நினையாதபடி, துறக்க வேண்டும். இவ்வாறு விஷயங்களில் பற்றற்றிருக்கையாகிற இது மனுஷ்யர்களுக்கு மிகவும் மேலான தர்மமாம். இது அவர்களுக்கு மிகவும் ஸுகத்தை விளைக்கும்; சோகம், மோஹம், பயம் இவை முதலிய அனர்த்தங்களையும் போக்கும். 

சப்தாதி விஷயங்களில் (உலகியல் விஷயங்களில்), “இது நல்ல குணமுடையது. இது நமக்கு வேணும்” என்னும் அபிநிவேசம் (ஈடுபாடு) உண்டாகுமாயின், அதனால் அவ்விஷயங்களில் மனப்பற்று உண்டாகும். அதனால் “இவற்றை நாம் அனுபவியாது இருக்க முடியாது” என்னும்படியான காமம் (தீவிர ஆசை) என்கிற மனவிகாரம் உண்டாகும். அதனால் ப்ராணிகளுக்கு ஒருவரோடொருவர்க்குக் கலஹம் (சண்டை) உண்டாகும். அதனால் பொறுக்க முடியாத கோபம் உண்டாகும். அதனால் “இதைச் செய்யலாம். இதைச் செய்யலாகாது” என்கிற விவேகமற்றிருக்கையாகிற தமோ குணம் உண்டாகும். அந்தத் தமோ குணம் எங்கும் பரந்து, எல்லாவற்றையும் அறிய வல்லதான புருஷனுடைய ஜ்ஞானத்தைச் சீக்ரத்தில் விழுங்கிவிடும். 

நல்லியற்கையுடையவரே! அந்த ஜ்ஞானம் அழியப் பெற்ற ஜீவன், ஸ்தாவராதி (மரம் முதலிய) ஜன்மத்தை அடைந்து, அஸத்ப்ராயனாய் (ஜடப்பொருள் போல் ஆகி) விடுவான். மூர்ச்சித்தாற் போலவும், மரணம் அடைந்தாற் போலவும், அறிவற்றிருக்கிற இந்த ஜீவனுக்கு, புருஷார்த்தம் நழுவிப்போகும். (சப்தாதி விஷயங்களில் (உலகியல் விஷயங்களில்) அபிநிவேசம் (ஈடுபாடு) கொள்வானாயின், இவ்வாறு அனர்த்த பரம்பரைகள் (தீங்குகளின் தொடர்ச்சி) வருமாகையால், அதைக் கொள்ளலாகாது) சப்தாதி விஷயங்களில் (உலகியல் விஷயங்களில்) அபிநிவேசம் (ஈடுபாடு) கொள்வானாயின், அவன் தன் ஸ்வரூபத்தையாவது, பிறன் ஸ்வரூபத்தையாவது ஒன்றையும் அறிய மாட்டான். இவ்வறிவின்மையே புருஷார்த்த (பலன்) ப்ரம்சமாம் (நழுவுதல்). 

இவ்வாறு புருஷார்த்த ப்ரம்சத்திற்கு (நழுவுவதற்கு) முயன்று, வ்ருக்ஷம் (மரம்) போல் ஸ்வ (தன்னைப்பற்றியும்), பர (பிறரைப்பற்றியும்) விவேகமில்லாத பிழைப்புப் பிழைக்கின்றவன், தோல்பை போல் வெறுமனே மூச்சு விடுகிறவனாவானன்றி, பிழைக்கிறவர்களில் சேரமாட்டான். (இவ்வாறு சப்தாதி விஷயங்களில் பற்று அனர்த்தத்தை (தீங்கை) விளைக்குமாயின், பலவாயிரம் மாதா பிதாக்களைக் காட்டிலும், மிகுந்த அன்புடைய வேதம் ஸ்வர்க்காதி விஷய ஸுகங்களுக்கு ஸாதனமான யஜ்ஞாதி கர்மங்களைச் செய்யவேண்டும் என்று ஏன் விதிக்கிறதென்று சங்கிக்கக் (ஸந்தேஹப்படக்) கூடும். அதற்குச் சொல்லுகிறேன்; கேட்பீராக). 

“ஸ்வர்க்கத்தை விரும்புகிறவன் யாகம் செய்யவேண்டும்” என்று வேதம் யாகாதி கர்மங்களுக்கு ஸ்வர்க்காதி பலன்களைச் சொல்லுகிறது என்பது வாஸ்தவமே (உண்மையே). ஆயினும் ஸ்வர்க்காதிகள் புருஷார்த்தம் என்கிற எண்ணத்துடன் சொல்லுகிறதில்லை. பின்னையோவென்றால், கேட்கிறவர்களுக்கு யஜ்ஞாதி கர்மங்களில் ருசியை விளைக்கும் பொருட்டுச் சொன்னதேயன்றி, வேறன்று. இஹ (இந்த) லோக ஸுகங்களைக்காட்டிலும் ஸ்வர்க்காதி பர (வேறு) லோக ஸுகம் மேற்பட்டது. அதைக் காட்டிலும் மோக்ஷ ஸுகம் மேற்பட்டதென்று படிப்படியாக மோக்ஷமே புருஷார்த்தமென்று தெரிவிக்கும் பொருட்டு ஸ்வர்க்காதிகளைப் பலமாகச் சொல்லுகிறது.

பிள்ளைகளுக்குக் கடுமையான மருந்துகளைக் கொடுக்கும் பொழுது, “பிள்ளாய்! இந்த மருந்தைச் சாப்பிடுவாயாயின் உனக்கு வெல்லம் கொடுப்பேன்” என்றும், “சர்க்கரை கொடுப்பேன்” என்றும், “பக்ஷணம் கொடுப்பேன்” என்றும் சொல்லிக் கொடுப்பது வழக்கம். அவ்வளவில் அந்த மருந்துக்கு வெல்லம் முதலிய அவையே பலனென்று சொல்ல முடியாதல்லவா. ஆரோக்யமன்றோ அதற்குப் பலனாம். வெல்லம் முதலியன கொடுக்கிறேனென்று சொல்லுவது மருந்தில் அவர்களுக்கு ருசி விளைகைக்காகவே. அவ்வாறே இங்கும் மோக்ஷமே புருஷார்த்தமன்றி (இறுதிப் பலனன்றி) ஸ்வர்க்காதிகள் புருஷார்த்தமாக மாட்டாது.

ஸ்வர்க்காதிகளைப் பலனாகச் சொல்லுவது அவர்களுக்கு யஜ்ஞாதி கர்மங்களில் ருசி விளைகைக்காகவே. தமக்கு ஸம்ஸார பந்தமாகிற அனர்த்தத்தையே விளைவிப்பவைகளான சப்தாதி விஷயங்களிலும் ப்ராணன்களிலும் (ஆயுள் இந்த்ரிய பலம் முதலியவைகளிலும்) பந்துக்களிடத்திலும் ஜன்மம் முதல் இயற்கையாகவே மனம் பற்றி அவற்றில் கால் தாழ்ந்திருப்பவர்களும் உண்மையான தங்கள் ப்ரயோஜனத்தை (பலனை) அறியாமல் அவற்றையே முக்ய ப்ரயோஜனமாக (பலனாக) ப்ரமித்து (புத்தி மயங்கி) இருப்பவர்களும் துக்கங்களுக்கிடமான ஸம்ஸார மார்க்கத்தில் சுழன்று கொண்டு கடைசியில் ஸ்தாவர (மரம்,  செடி) ஜன்மத்தை அடையப் போகிறவர்களுமான மனுஷ்யர்களை ஹிதம் (நன்மை) சொல்ல முயன்ற வேதம் மீளவும் அனர்த்தங்களுக்கு (தீங்குகளுக்கு) இடமான அந்தக் கர்மாதிகளில் எவ்வாறு மூட்டுவிக்கும்? 

(ஜனங்கள் வேதத்தில் சொன்னதெல்லாம் ஹிதம் (நன்மை) என்று நம்பியிருப்பவர். வேதமோவென்றால் மிகுந்த அன்புடன் ப்ராணிகளுக்கு ஹிதத்தையே அறிவிக்கும் தன்மையுடையது. அத்தகைய வேதம் ப்ராணிகளுக்கு அஹிதத்தை (தீங்கை) அனுஷ்டிக்கும்படி சொல்லுமோ? சொல்லாது. ஆகையால், யாகாதி கர்மங்களுக்கு ஸ்வர்க்காதிகளைப் பலனாகச் சொன்னது, ருசியை விளைக்கும் பொருட்டேயன்றி அதுவே புருஷார்த்தம் (இறுதிப் பயன்) என்கிற எண்ணத்தினாலன்று). 

ஆனது பற்றியே வேத தாத்பர்யங்களை (உட்கருத்தை) அறிந்த பெரியோர்கள் காயில்லாத கேவலம் பூ போன்று காதுக்கு மாத்ரம் ப்ரீதியை விளைத்து, ஆபாத (மேலெழுந்தவாரியாக) ரமணீயமாய் (இன்பமாய்) இருப்பதுமான ஸ்வர்க்காதி பலச்ருதியை முக்ய பலச்ருதியாக உபதேசிக்கமாட்டார்கள். (காதுக்கினிதாக ஸ்வர்க்க ஸுகம் அழியாததென்று சொல்லுகிறதே ஒழிய, அனுபவத்தில் நச்வரம் (அழியக்கூடியது) ஆகையாலும் முன்னும், பின்னும், நடுவிலும், துக்கமிச்ரம் (துன்ப கலப்பு) ஆகையாலும், அது காயில்லாத பூ போன்றதேயாம். யஜ்ஞாதி கர்மங்களை அனுஷ்டித்துப் பெற வேண்டுமாகையால், அவை மிகவும் ச்ரம ஸாத்யங்கள் (கஷ்டப்பட்டு அடையப்படவேண்டியவை) ஆகையால், முன்பு துக்க ரூபமாயிருக்கும் என்பது வெளிச்சமாம். அனுபவ தசையில் “இன்னும் நான்கு நாளன்றோ நாம் இந்த ஸுகம் அனுபவிக்கப் போகிறோம். அதன்பிறகு விழவேண்டுமே” என்று அதன் முடிவு நெஞ்சில் தோற்றிக்கொண்டே, இருக்குமாகையால், இடையில் துக்க ரூபமாயிருக்கையும் வெளிச்சமாம். அதினின்று நழுவின பின்பு, இந்த லோகத்தில் பிறந்து, முன் போலவே ஸம்ஸார துக்கங்களை அனுபவிக்க வேண்டுமாகையால், பின்னும் துக்க ரூபமாயிருக்குமென்பதைப் பற்றி விவரித்துச் சொல்ல வேண்டிய அவச்யமே இல்லை. 

இவ்வாறு பலவிதத்திலும் துக்க ரூபமான ஸ்வர்க்காதி ஸுகத்தைப் புருஷார்த்தமென்று வேதத்தின் கருத்தறிந்த பெரியோர்கள் எவ்வாறு சொல்லுவார்கள்?) வேதங்களின் கருத்தை அறியாத மூடர்களே இத்தகைய ஸ்வர்க்காதி பல ச்ருதியை முக்யமென்று கருதுவார்கள். ஏனென்றால், அவர்கள் சப்தாதி விஷய ஸுகங்களையே விரும்புந்தன்மையர்; அவற்றில் பேராசையால் மன வியாகுலம் (கவலை) உற்றிருப்பவர்; ஆனது பற்றியே “ஐயோ! இப்படியும் சில மூடர்கள் இருப்பதோ” என்று பெரியோர்களால் மன இரக்கம் செய்யத் தக்கவர்; புஷ்பம் போன்ற ஸ்வர்க்காதி ஸுகங்களில் பலனென்னும் புத்தியுடையவர்; அக்னி ஸாத்யமான கர்மங்களில் அபிநிவேசத்தினால் (அதீத ஈடுபாட்டால்) விவேகம் அழியப் பெற்றவர்கள்; இடை வீடின்றி ஹோம தூமத்தினால் (புகையால்) வாட்டமுற்றிருப்பவர். ஆகையால் அவர்கள் ஆத்ம ஸ்வரூபத்தையும் கூட அறிந்தவர்களல்லர். 

ஓ, உத்தவரே! எவன் இந்த ஜகத்திற்கு நிமித்த காரணமும் (மண் குடத்திற்கு குயவன் போல் efficient cause), உபாதான காரணமுமாய் (மண் குடத்திற்கு மண் போல் material cause) இருக்கிறானோ, ஆனது பற்றியே இது எவனைக் காட்டிலும் வேறுபட்டதாகாமல் அவனே இது என்று சொல்லக் கூடியதாய் இருக்கின்றதோ, அத்தகையனும் ஹ்ருதயத்தில் நிலை நின்றிருப்பவனுமாகிய என்னையும் அவர்கள் அறியார்கள். ஏனென்றால், அவர்கள் கர்ம விதிகளால் தூண்டப்பட்டவர்கள்; இந்திரியங்களுக்கு திருப்தியை விளைத்துக்கொள்வதில் ஊக்கம் உற்றவர்கள். ஆகையால், இருட்டில் கண் பார்வை தடைபடப் பெற்றவர்கள் ஸமீபத்திலுள்ள வஸ்துவையும் எவ்வாறு அறியமாட்டார்களோ, அவ்வாறே இந்த மூடர்கள் ஹ்ருதயத்தில் தம்மோடு கூடவே இருக்கின்ற என்னை அறியமாட்டார்கள். மற்றும், அவர்கள் ஸுக்ஷ்ம (நுட்பமான) புத்தியினால் ஆராய்ந்து வருந்தியறியக் கூடியதான என்னுடைய அபிப்ராயத்தை அறியாமல், சப்தாதி விஷயங்களில் தாழ்ந்த மனமுடையவர்களாகி, யாகமென்னும் வியாஜத்தினால் (காரணத்தினால்) மாம்ஸ பக்ஷணத்திற்காகப் (உணவிற்காக) பசுக்களை வீணுக்கு ஹிம்ஸிக்கிறார்கள். 

(ஆகையால் அவர்கள் நாஸ்திகர்களே அன்றி ஆஸ்திகர்களல்லர்.) மற்றும், அவர்கள் மரணம் அடைந்து, பரலோகம் சென்று, அங்கு ஸாலாவ்ருகம் (ஓனாய்) முதலிய க்ரூர (கொடிய) ஜந்துக்களாயிருக்கின்ற அந்தப் பசுக்களால் ஹிம்ஸிக்கப்படுகிறார்கள். பசுக்களைக் கொன்று மாம்ஸ பக்ஷணம் செய்யவேண்டுமென்னும் அபேக்ஷை (விருப்பம்) உண்டாகும் பொழுது, யாகத்தில் தான் விதியென்று சொல்லிக் கொண்டு பசுக்களை ஹிம்ஸிக்கிறார்கள். (அதன் பலனையும் பரலோகத்தில் அனுபவிக்கிறார்கள்.) அவர்களுக்குப் பசு ஹிம்ஸை விளையாட்டாயிருக்கிறதே அன்றி, ஹிம்ஸையாகத் தோற்றுகிறதில்லை. ஆகையால், தங்களுடைய ஸுகத்திற்காக (மாம்ஸ பக்ஷண ஸுகத்திற்காகப்) பசுக்களைக் கொன்று, செய்கிற யாகங்களால் பித்ருக்கள் பூதபதிகள் முதலிய தேவதைகளை ஆராதிக்கிறார்கள். தங்கள் ஸுகத்திற்காக யாகத்தை வியாஜமாக (சாக்காக) எடுத்துக் கொள்கிறார்களாகையால், அவர்கள் துஷ்டர்களே (கொடியவர்களே) அன்றி நல்லியற்கை உடையவர்களாக மாட்டார்கள். 

ஸ்வர்க்காதி பரலோகங்களும் ப்ரக்ருதியின் பரிணாமங்கள் (மாறுபாடுகள்) ஆகையால் நிலையற்றவைகளே, நிலையாயிருப்பவைகளன்று; ஆனது பற்றியே ஸ்வப்னம் (கனவு) போன்றவை. காதில் கேட்பதற்கு மாத்ரம் ப்ரியமாயிருக்குமே அன்றி, அனுபவத்தில் துக்க ரூபமாகவேயிருக்கும். இத்தகையதான பரலோகத்தையும், இஹலோகத்தில் சில விருப்பங்களையும், மனத்தில் ஸங்கல்பித்துக்கொண்டு வர்த்தகனைப்போல் பணத்தைச் செலவழிக்கிறார்கள். ப்ராணிகள் ரஜஸ்ஸு, தமஸ்ஸு, மிச்ரஸத்வம் (ரஜஸ், தமஸோடு கூடிய ஸத்வம்) இவையடியாகவுள்ள கர்மங்களில் நிலை நின்று, ரஜஸ்ஸு, தமஸ்ஸு, மிச்ரஸத்வம் இக்குணங்களை வளர்க்கும்படியான ஆஹாரங்களை உட்கொள்ளுபவர்களாகி, ரஜஸ்ஸு முதலிய தங்கள் குணங்களுக்கு அனுரூபர்களான (ஏற்ற) இந்த்ரன் முதலிய தேவதைகளை உபாஸிக்கிறார்கள். அதையும் உள்ளபடி நடத்துகிறதில்லை.

(இந்த்ராதிகளை உள்ளபடி உபாஸிக்கையாவது, “இவர்கள் எல்லோரும் பகவத் ஸ்வரூபர்களே” என்னும் புத்தியுடன் உபாஸிக்கை). நேரே என்னையும் உள்ளபடி உபாஸிக்கிறதில்லை. “இஹ லோகத்தில் யஜ்ஞங்களால் தேவதைகளை ஆராதித்து, ஸ்வர்க்கலோகம் சென்று, அங்கு விளையாடிக்கொண்டிருக்கப் போகிறோம். அந்த ஸ்வர்க்க லோகம் முடிந்த பின்பு, மீளவும் இஹ லோகத்தில் பெரிய க்ருஹஸ்தர்களும், மஹா குலமுடையவர்களுமாகப் பிறக்கப் போகிறோம்” என்று புஷ்பம் போல் மனோஹரமான (மனதைக் கவரும்) வேதத்தின் பூர்வ பாக வாக்யங்களால் மனம் கலங்கப் பெற்று, துரஹங்காரமுற்று (வீண் பெருமை கொண்டு), தங்களை மிகவும் நிறைவாளர்களாக நினைத்துக் கொண்டு திரிகிறவர்களுக்கு, என்னுடைய ப்ரஸ்தாவமும் (என்னைப் பற்றிய பேச்சும்) கூட ருசிக்காது. (ஆகையால் அவர்கள் நித்ய ஸம்ஸாரிகளாவார்களே அன்றி, ஒரு காலும் இந்த ஸம்ஸாரத்தினின்று மீள மாட்டார்கள்). (இவ்வாறு வேத தாத்பர்யத்தை அறியாத மூடர்களின் முயற்சியையும், அதன் பலனையும் சொன்னேன். இனி வேத தாத்பர்யம் என்ன என்றால் அதை நிரூபித்துச் சொல்லுகிறேன்; கேட்பீராக). 

வேதங்களெல்லாம் கர்ம காண்டமென்றும், தேவதா காண்டமென்றும், ஜ்ஞான காண்டமென்றும் மூன்று வகையாகப் பிரிந்திருக்கின்றன. அவையெல்லாம் ஸர்வாந்தராத்மாவான பரப்ரஹ்மத்தையே முக்யமாகச் சொல்லுகின்றன. (வேதங்களில் சில பரமாத்ம ஸ்வரூபத்தையும், சில அவன் குணங்களையும், சில அவன் விபூதிகளையும், சில அவனைப் பெறுதற்குரிய உபாயங்களையும், சில அவனுடைய ப்ராப்ய (அடையப்பட வேண்டிய) வேஷத்தையும், சில ப்ராப்தாவான (அடைபவனான) ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும் நிரூபித்துச் சொல்லுகின்றன. ஆனால், இந்த வேததாத்பர்யம் எல்லார்க்கும் ஏன் தெரிகிறதில்லை என்றால் சொல்லுகிறேன்.) 

வேதங்கள் தமது அபிப்ராயத்தை மறைத்துச் சொல்லும் தன்மையுடையவைகளே அன்றி, ஸ்பஷ்டமாகச் சொல்லமாட்டாது. ஆகையால், அவ்வேதங்களின் தாத்பர்யத்தை (உட் கருத்தை) எல்லாரும் எளிதில் அறிய முடியாது. (“லோகோஜ் ஜீவனத்திற்காக (உலகை நல்வழிப்படுத்த) அன்றோ நீ வேதங்களை வெளியிட்டது. அப்படியிருக்க அவற்றின் தாத்பர்யத்தை (உட் கருத்தை) நீ ஏன் ஸ்பஷ்டமாக வெளியிடலாகாது?” என்றால் சொல்லுகிறேன்). 

அவ்வாறு மறைத்துச் சொல்லுவதே எனக்கும் ப்ரியமாயிருக்கும். (தெளிந்த மனமுடையவர்களே இதன் கருத்தை அறிய வேண்டுமன்றி, அவ்வாறில்லாத அனதிகாரிகள் (தகுதி அற்றவர்கள்) அறியலாகாது. ஏனென்றால், அனதிகாரிகள் (தகுதி அற்றவர்கள்) வீணாகக் கர்மங்களைத் துறந்து, ப்ரஷ்டராய் (நழுவி) விடுவார்கள்) மற்றும், பெரிய விஸ்தரமுள்ள (பரந்த) வேதம், மிகவும் வருந்தி அறியக் கூடியது; ப்ராண வாயுவால் உதவி செய்யப் பெற்ற வாக் இந்த்ரியத்தினால் உச்சரிக்கத் தக்கது; கேவலம் மனத்தினால் தரிக்கத் தக்கது. இதன் முடிவை அறிய முடியாது. ஸமுத்ரம் தாண்ட முடியாமல் ஆழமுமாயிருப்பது போல், இதுவும் பொருளறிய முடியாமல் யுக்திகளால் நிரூபிக்க முடியாததுமாய் இருக்கும். ஜ்ஞான வீர்யாதியான அளவற்ற சக்திகளை உடையவனும், பரப்ரஹ்ம மென்று கூறப்படுபவனும், அளவற்ற மஹிமையுடையவனுமாகிய என்னால் விஸ்தரிக்கப்பட்ட வேதம், தாமரைத் தண்டுகளில் நூல் போல், மனுஷ்யர்களிடத்தில் ப்ராண கோஷ (மூச்சுக் காற்றின் சப்த) ரூபமாயிருக்கின்றது. 

காதுகளை மூடிக்கொண்டால் கேட்கும் கோஷமே ப்ராணகோஷமென்று கூறப்படும்.) நூல் பூச்சி ஹ்ருதயத்தினின்று வாய் வழியாய் நூலைக் கக்குவது போல், கோஷத்தையுடைய ப்ராணவாயு, நாபி முதல் மார்பு வரையிலுள்ள த்வாரத்தின் வழியாய் (ஸ்பர்ச ரூபியான - தன்னோடு ஸம்பந்தப்பட்ட அல்லது - ஹ்ருதயம் மார்பு முதலிய இடங்களின் தொடர்பு உடைய), ஸ்பர்ச ரூபியான மனத்தின் உதவியைக் கொண்டு, வேதத்தை வெளியிடுகின்றது. சந்தஸ் என்று கூறப்படுகிற வேதத்தை வெளியிடுகிறதாகையால் சந்தோமயமென்று கூறப்படுவதும், நிலை நின்றிருப்பதும், தேஹம், இந்திரியம் முதலியவற்றைத் தரிக்க வல்லதுமாகிய ப்ராணவாயு, ஓங்காரத்தினின்று வெளியான ஸ்பர்சம் ஸ்வரம், ஊஷ்மம், அந்தஸ்தம் என்னும் அக்ஷரங்களால் அலங்கரிக்கப்பட்டது. 

விசித்ரமான (ஆச்சர்யமான) பலவகையுள்ள சப்தங்களால் விரிந்திருப்பதும் எல்லை இல்லாததும், ஒன்றைவிட ஒன்று நான்கு நான்கு அக்ஷரங்கள் (எழுத்துக்கள்) அதிகமாயிருக்கப்பெற்ற காயத்ரி, உஷ்ணிக்கு, அனுஷ்டுப்பு, ப்ருஹதி, பங்க்தி, த்ரிஷ்டுப்பு, ஜகதி, அதிச்சந்தஸ்ஸு, அத்யஷ்டி, அதிஜகதி, விராட்டு என்னுமிவை முதலிய சந்தஸுக்களோடு கூடியதும், அநேகமாயிரம் பதவிகளையுடையதும், விரிந்திருப்பதுமாகிய வேத ரூபமான வாக்கை வாக் இந்த்ரியத்தின் (வாய்) மூலமாய் வெளியிடுவதும், உள்ளடக்குவதும் செய்கின்றது. “எதை விதிக்கிறது? எந்த தத்வத்தைச் சொல்லுகிறது? எதை அனுவதித்து எதை விகல்பிக்கிறது? இதுவும் அதுவும் இரண்டு. இவற்றில் இதையாவது செய்யலாம். அதையாவது செய்யலாம்” என்று விகல்பித்துச் சொல்லுகிறதா? “இதையும் செய்யலாம். அதையும் செய்யலாம்” என்று ஸமுச்சயித்து (சேர்த்து)ச் “சொல்லுகிறதா? ஸாமான்யமாய் (ஸாதாரணமாய்) விதிக்கிறதா? விசேஷித்து (சிறப்பித்து) விதிக்கிறதா?” என்று இவ்வேதத்தின் தாத்பர்யத்தை (உட்கருத்தை) என்னைத் தவிர மற்ற எவன் தான் அறியவல்லனாவான்? ஆனால், அந்த வேதத்தின் கருத்தை, நீயே வெளியிடுவாயாக என்றால் சொல்லுகிறேன்.

என்னுடைய ஆராதன ரூபமான தர்மத்தையே விதிக்கின்றது. ஸர்வத்தையும் சரீரமாகவுடைய என்னையே முக்யமாக நிரூபித்துச் சொல்லுகின்றது. “இதையாவது செய்யலாம். அதையாவது செய்யலாம்” என்று விகல்பித்துச் சொல்லப்படும் பொருள்களும் நானே. “இது கூடாது. அதையே செய்யவேண்டும்” என்று அனுவதித்துச் சொல்லப்படும் பொருளும் நானே. ஸமஸ்த வேதங்களின் கருத்தும் இவ்வளவே. அதாவது, வேதமென்னும் சப்தம் என்னையே முக்யமாகக் கருதி, தேவ, மனுஷ்யாதி பேதம் ப்ரக்ருதியினிடத்தில் மாத்ரமே உள்ளதென்று நிரூபித்து, அது ஜீவாத்ம ஸ்வரூபத்தில் இல்லையென்றும், அந்த ஜீவாத்மாக்களுக்குள்ள ஆகாரம் எல்லையான என்னிடத்தில் இல்லையென்றும் நிஷேதித்து (விலக்கி), எல்லாத் தத்வங்களைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறான) என்னை நிரூபித்துச் சொல்லுவதில் முடிகின்றது என்னுமிவ்வளவே. 

இருபத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக