ஞாயிறு, 17 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 348

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - பதினோறாவது அத்தியாயம்

(மஹாபுருஷனுடைய அங்க உப அங்கங்களான அஸ்த்ர (ஆயுதங்கள்) பூஷணாதிகளை (ஆபரணங்கள்) நிரூபித்தலும், த்வாதச ஆதித்ய (12 ஆதித்யர்கள்) வ்யூஹ வர்ணனமும்) 

சௌனகர் சொல்லுகிறார்:- எல்லாம் அறிந்தவர்களில் சிறந்தவரான உம்மை, நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி வினவுகிறோம். புராணம், பஞ்சராத்ரம் முதலிய ஸமஸ்த சாஸ்த்ரங்களுடைய உண்மையும் உமக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், நீர் இந்த விஷயத்தை எங்களுக்குச் சொல்லவேண்டும். பகவதாராதன ரூபமான பாஞ்சராத்ராதி சாஸ்த்ரங்களின் உண்மையை அறிந்து, அவ்வாறே அனுஷ்டிக்கின்ற பெரியோர்கள், கேவல சுத்த ஸத்வமயமான திவ்யமங்கள விக்ரஹம் உடையவனும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனுமாகிய பகவானுடைய ஆராதனத்தில், பாணி (கை), பாதாதி (கால்) அங்கங்களையும், ஹ்ருதயம் முதலிய உப அங்கங்களையும், ஸுதர்சனம் முதலிய ஆயுதங்களையும், கிரீடம் முதலிய ஆபரணங்களையும், எந்தெந்த தத்வங்களுக்கு அபிமானி தேவதைகளாக எப்படி த்யானிக்கிறார்களோ, அதையெல்லாம் எங்களுக்கு நிரூபித்துச் சொல்வீராக. 

பகவதாராதன ரூபமான கர்ம யோகத்திற்கு இது வேண்டியதாகையால், நாங்கள் இதை அறிய விரும்புகிறோம். ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸார (உலகியல்) துக்கங்களை அனுபவிக்கின்ற ஜீவன், அங்க உப அங்காதி கல்பனையோடு கூடிய இக்கர்மயோகத்தில் திறமை உண்டாகப் பெறுவானாயின், ஜன்ம- ஜரா- மரணாதி ரூபமான ஸம்ஸார துக்கங்களைக் கடந்திருக்கையாகிற முக்தியைப் பெறுவான்.

ஸூத புராணிகர் சொல்லுகிறார்:- ஆசார்யர்களை நமஸ்கரித்து ஸ்ரீமஹாவிஷ்ணுவினுடைய அங்க, உப அங்கங்களால் அபிமானிக்கப்பெற்ற அவனுடைய விபூதிகளை (சொத்தை, பெருமையைச்) சொல்லுகிறேன். ப்ரஹ்மதேவன், நாரதர் முதலிய பூர்வாசார்யர்கள் இந்த விபூதிகளை (சொத்தை, பெருமையை) வேதத்தினின்றும், பஞ்சராத்ர சாஸ்த்ரத்தினின்றும் அறிந்து கொண்டார்கள். மாயை என்னும் பெயருடைய ப்ரக்ருதி, மஹத்து, அஹங்காரம், பஞ்சபூதங்கள், காலம் ஆகிய இவ்வொன்பது தத்வங்களாலும் இவற்றின் விகாரங்களான (மாறுபாடுகளான) பதினொரு இந்த்ரியங்கள் பஞ்ச தன்மாத்ரங்கள் (பஞ்ச பூதங்களின் நுட்பமான நிலை) இவைகளாலும், இந்த ப்ரஹ்மாண்டம் நிர்மிக்கப்பட்டதென்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. மற்றும், ஜீவாத்மாக்கள் நிறைந்த இந்த ப்ரஹ்மாண்டத்தில், மூன்று லோகங்களும் புலப்படுகின்றன. இத்தகையதான இந்த ப்ரஹ்மாண்டத்திற்குப் பரமபுருஷனுடைய திவ்யமங்கள விக்ரஹம் அபிமான தேவதையாகையால், இதை அவனுடைய திவ்யமங்கள விக்ரஹமாகச் சொல்லுகிறார்கள். 

பூமி முதல் கீழுள்ள ஏழு லோகங்களும், அந்த மஹாபுருஷனுடைய (விராட் புருஷனுடைய) பாதங்கள் த்யு லோகம் (தேவ லோகம்) அவனுடைய சிரஸ்ஸு (தலை). ஆகாசம் அவனுடைய கொப்பூழ். ஸூர்யன் அவனுடைய கண்கள். வாயு அவனுடைய மூக்கு. 

ப்ரபூ! திசைகள் அவனுடைய காது. ப்ரஜாபதி அவனுடைய ஆண் குறி. ம்ருத்யு எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்கும்  தன்மையனான அப்பரம புருஷனுடைய அபானம் (குதம்). லோகபாலர்கள் அவனுடைய புஜங்கள் (கைகள்). சந்த்ரன் அவனுடைய மனஸ்ஸு. யமன் அவனுடைய புருவங்கள். லஜ்ஜை (வெட்கம்) அவனுடைய மேலுதடு. லோபம் (பொறாமை) அவனுடைய கீழுதடு. நிலவு அவனுடைய பற்கள். ப்ரமம் (மயக்கம்) அவனுடைய புன்னகை. வ்ருக்ஷங்கள் (மரங்கள்) அப்பரமாத்மனுடைய ரோமங்கள். மேகங்கள் அப்பரம புருஷனுடைய கேசங்கள் (முடி). இந்த வ்யஷ்டி புருஷன் (நாம் காணும் புருஷன்) என்னென்ன அவயவங்களுடையவனோ, இம்மஹாபுருஷனும் (விராட் புருஷனும்), பூலோகாதி லோகங்களுக்கு அபிமானி தேவதைகளான அந்தந்த அவயவங்களெல்லாம் உடையவன். 

வ்யஷ்டி புருஷன் (நாம் காணும் புருஷன்) தன்னுடைய பரிமாணத்தினால் ஏழு விதஸ்தி (ஜான்) அளவு உடையவனாய் இருப்பதுபோல், இம்மஹாபுருஷனும், தன்னுடைய பரிமாணத்தினால் ஏழு விதஸ்தி அளவுடையவன் (இவனுடைய பரிமாணம், ஆராதகனுடைய புத்தியைப் பொருந்தினது). பிறவி முதலிய விகாரங்கள் (மாறுபாடுகள்) அற்ற பரமபுருஷன், கௌஸ்துபம் (பகவான் இதயத்தில் இருக்கும் மணி) என்னும் பெயரினால் தனக்கு சேஷபூதனும் (அடிமையும், உடைமையும்), ஜ்ஞானத்தை வடிவாகவுடையவனுமாகிய ஆத்ம ஸ்வரூபத்தைத் தரிக்கின்றான். (கௌஸ்துபம் ஜீவ வர்க்கத்திற்கு அபிமானி தேவதை). அந்த ஜீவனுடைய தர்மபூத ஜ்ஞானம் விபுவாயிருக்கும். (எங்கும் வியாபிக்கும் தன்மையுடையது). அந்த தர்மபூத ஜ்ஞானத்தையே ப்ரபுவாகிய பகவான் ஸ்ரீவத்ஸம் என்னும் அடையாளமாக மார்பினால் தரிக்கின்றான். 

விஷம அவஸ்தையை (ஏற்றத்தாழ்வுகளை) அடைந்த ஸத்வாதி குணங்களையுடைய ப்ரக்ருதியையே வனமாலையாகத் தரிக்கின்றான். (வனமாலை, ப்ரக்ருதிக்கு அபிமானி தேவதை). காயத்ரி முதலிய சந்தஸ்ஸுக்களைப் பீதாம்பரமாகத் தரிக்கின்றான். (பீதாம்பரம் சந்தஸ்ஸுக்களுக்கு அபிமானி தேவதை) மூன்று மாத்ரைகளை (உச்சரிக்கும் அளவு) உடையதும், அ, உ, ம என்கிற மூன்றெழுத்துக்கள் அடங்கியதுமாகிய ப்ரணவத்தை ப்ரஹ்ம ஸூத்ரமாக (பூணூல்) தரிக்கின்றான். (அவனுடைய ப்ரஹ்ம ஸுத்ரம் ப்ரணவத்திற்கு அபிமானி தேவதை).

ஜ்ஞானயோக கர்மயோகங்களை ஒரு மகர குண்டலமாகவும், வேதத்தை மற்றொரு மகரகுண்டலமாகவும், ஸமஸ்த லோகங்களுக்கும் மேலான ப்ரஹ்ம லோகத்தை ஸமஸ்த லோகங்களுக்கும் அபயம் கொடுப்பதாகிய கிரீடமாகவும் தரிக்கின்றான். அவ்யாக்ருதம் என்னும் பெயருடைய மூல ப்ரக்ருதியே பரம புருஷன் வீற்றிருக்கின்ற அனந்தனென்னும் பெயருடைய ஆஸனம். தர்மம், ஜ்ஞானம் முதலியவைகளோடு கூடிய சுத்த ஸத்வமே ஆஸன பத்மம் (தாமரை) என்று கூறப்படுகின்றது. 

இந்திரிய சக்தி, மன சக்தி, தேஹ சக்தி இவைகளோடு கூடிய முக்ய தத்வத்தையே கதையாகவும், ஜல (நீர்) தத்வத்தையே பாஞ்சஜன்யம் என்னும் சிறந்த சங்கமாகவும், தேஜஸ் (ஒளி) தத்வத்தையே ஸுதர்சனம் என்னும் சக்ரமாகவும், ஆகாசம் போல் நிர்மலனும் (அழுக்கு அற்றவனும்), கருநிறம் உடையவனுமாகிய பகவான், ஆகாசத்தையே நந்தகமென்னும் கத்தியாகவும், தமஸ்ஸையே (இருட்டு)  கேடயமாகவும், கால தத்வத்தையே சார்ங்கமென்னும் தனுஸ்ஸாகவும், கர்மத்தையே அம்புறாத் தூணியாகவும் தரிக்கின்றான். 

பரமபுருஷனுக்கு இந்திரியங்களைக் குதிரைகளாகச் சொல்லுகிறார்கள். ஆகூதியே (செயல் திறமை உடைய மனமே) இவனுடைய ரதம். தன்மாத்ரங்கள் (பஞ்ச பூதங்களின் நுட்பமான நிலை) இவனுடைய அர்ச்சாவதாரங்கள். இந்திரிய வ்யாபாரங்கள் இவனுடைய செயல்கள். யஜ்ஞ பூமி அவனுடைய ஆஸனத்திலுள்ள பத்மாகாரமான மண்டலம் (தாமரை போன்ற இருப்பிடம்). யஜமானனுடைய யாக தீக்ஷையும், ப்ரோக்ஷணம் (நீரைத் தெளித்துப் புனிதப்படுத்துதல்), அவகாஹம் (நீராடுதல்) முதலிய ஸம்ஸ்காரமும், பகவானுடைய பரிசர்யை (பூஜித்தல்). அது ஆத்மாவினுடைய பாபங்களை எல்லாம் போக்கும். பகவத் சப்தத்தில் அடங்கிய பக சப்தத்தின் பொருளான ஜ்ஞானம், பலம், முதலிய ஆறு குணங்களே அப்பரமபுருஷன் கையில் தரித்திருக்கின்ற லீலா கமலம் (தாமரை). தர்மம் அவனுடைய சாமரம். யசஸ்ஸு (புகழ்) அவனுடைய விசிறி. 

அந்தணர்களே! எவ்விதத்திலும் பயத்திற்கு இடமல்லாத வைகுண்டம் என்னும் திவ்யலோகமே அவனுடைய குடை. இப்பரம புருஷனுடைய வாஹனமான ஸுபர்ணன் என்னும் கருடன், ருக்கென்றும், யஜுஸ்ஸென்றும், ஸாமமென்னும், மூன்று வகையான வேதங்கள். அப்பகவானை விட்டுப் பிரியாத ஸ்ரீமஹாலக்ஷ்மியே அவனுடைய அழியாத சக்தி. அந்த ஸ்ரீமஹாலக்ஷ்மி அவனுக்கு ஜ்ஞானாதி குணங்களைப் போன்றவள். 

ஸூர்யனுடைய ஒளி அவனை விட்டுப் பிரியாதிருப்பது போல், இவளும் அவனை விட்டுப் பிரிபவளல்லள். பாரிஷதர்களில் (சேவகர்களில்) தலைவரும், அறிஞரும், ப்ரஸித்தருமான, விஷ்வக்ஸேனர், அவனுடைய மூர்த்தி விசேஷம். பகவானுடைய த்வார பாலகர்களான (வாயிற் காவலர்கள்) நந்தாதிகள், எண்மரும், அந்தணரே! அணிமாதி அஷ்ட ஐச்வர்யங்களுக்கு (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன- 1.

  1. அணிமா-சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

  2. மஹிமா-பெரிதாக்கிக்கொள்ளுதல் 

  3. லகிமா-லேசாகச் செய்தல் 

  4. கரிமா-கனமாக்கிக்கொள்ளுதல் 

  5. வசித்வம்-எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

  6. ஈசத்வம்-எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

  7. ப்ராப்தி-நினைத்த பொருளைப் பெறுதல் 

  8. ப்ராகாம்யம்-நினைத்தவிடம் செல்லும் வல்லமை) அபிமானி தேவதைகள். 

வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்கிற மூர்த்திகள் நான்கும் ஸாக்ஷாத் பரமபுருஷனே. அவ்வாஸுதேவாதி நான்கு மூர்த்திகளும், ஜாக்ர (விழிப்பு), ஸ்வப்ன (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்), முக்தி என்கிற நான்கு அவஸ்தைகளால் (நிலைகளால்) விச்வன் என்றும், தைஜஸன் என்றும், ப்ராஜ்ஞன் என்றும், துரீயன் என்றும் நான்கு வகைப்பட்ட ஜீவாத்மாக்களுக்கு அபிமானி தேவதைகள். (அவற்றில் முக்தி அவஸ்தையை அடைந்த ஜீவனுக்கு, அபிமானி தேவதை வாஸுதேவன். ஸ்வப்ன அவஸ்தையை அடைந்த ஜீவனுக்கு, அபிமானிதேவதை ஸங்கர்ஷணன். மற்ற இருவரும் மற்ற இரண்டு அவஸ்தைகளை அடைந்த ஜீவாத்மாக்களுக்கு அபிமானி தேவதைகள்). 

ஜாகரத் அவஸ்தை அர்த்தம் என்றும், ஸ்வப்ன அவஸ்தை இந்த்ரியம் என்றும், ஸுஷுப்தி அவஸ்தை ஆசயம் என்றும், முக்தி அவஸ்தை ஜ்ஞானமென்றும் கூறப்படுகின்றன. பாணி (கை), பாதாதி (கால்) அங்கங்களோடும், ஹ்ருதயம் முதலிய உப அங்கங்களோடும், ஸுதர்சனம் முதலிய ஆயுதங்களோடும், கிரீடம் முதலிய ஆபரணங்களோடும் கூடிய ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷன், வாஸுதேவாதியான நான்கு மூர்த்திகளை ஏற்றுக் கொண்டு, ப்ரஸித்தங்களான ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹார (அழித்தல்), மோக்ஷங்களென்கிற நான்கு வியாபாரங்களை நிறைவேற்றுகிறான். (அவர்களில் அநிருத்தன், ஸ்ருஷ்டியையும், ப்ரத்யும்னன் ஸ்திதி என்கிற ரக்ஷணத்தையும் (காத்தலையும்), ஸங்கர்ஷணன் ஸம்ஹாரத்தையும் (அழித்தலையும்), வாஸுதேவன் மோக்ஷத்தையும் நடத்துகிறார்கள்). 

 ஓ, ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல்) நடத்துகிறானாகையால் ப்ரஹ்ம, ருத்ராதி ஸமஜ்ஞையோடு (பெயர்களோடு) கூடிய இப்பகவான், ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும் அளவிறந்தவனாகையால், ப்ரஹ்மமென்று கூறப்படுகிறான். இவனே ஸர்வ காரணன்  (எல்லாவற்றிற்கும் காரணன்); ஒரே காலத்தில் எல்லாவற்றையும் தானே ஸாக்ஷாத்கரிக்கும் தன்மையன்; ஸ்வயம் ப்ரகாசன் (தானே தோன்றுபவன்); தன்னுடைய மஹிமையினால், அவாப்த ஸமஸ்தகாமன் (தன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப்பெற்றவன்). என்றும் குவியாத அறிவுடையவன், ஒருவர்க்கும் தெரியாமல் மறைந்திருப்பவன். இவ்வாறே சாஸ்த்ரங்கள் அவனைப் பற்றிக் கூறுகின்றன. எவர்கள் அவனை உபாஸிக்கிறார்களோ, அவர்களுக்குப் பரிசுத்தமான மனத்தினால் அடையத் தகுந்தவன். 

ஜகத்திற்கெல்லாம் (இவ்வாறு தத்வ ஸ்வரூபங்களான பகவானுடைய அங்க உப அங்கங்களை நிரூபித்து இந்த ப்ரபந்தத்தின் பொருள் முழுவதையும் தொகுத்துக் காட்ட முயன்று முதலில் தனது இஷ்ட தேவதையான ஸ்ரீக்ருஷ்ணனைப் பக்தரக்ஷணத்தின் பொருட்டு ப்ரார்த்திக்கிறார்.) ஸுகத்தைக் கொடுக்கையால் ஸ்ரீக்ருஷ்ணனென்னும் பெயர் பூண்டவனே! அர்ஜுனனுக்குத் தோழனே / வ்ருஷ்ணிகளில் (யாதவர்களில்) சிறந்தவனே! ஜகத்திற்கு (உலகிற்குக்) த்ரோஹம் (கெடுதல்) செய்கின்ற பாபிஷ்டர்களான (பாபிகளான) ராஜர்களின் (அரசர்களின்) வம்சங்களை எதிர்ப்பவனே! அபாரமான வீர்யமுடையவனே! கோவிந்தனே! கோக்கள், ப்ராஹ்மணர், தேவர் இவர்களின் வருத்தங்களைப் போக்குவதற்காக அவதரிப்பவனே / பரிசுத்தமான புகழுடையவனே! கேட்ட மாத்ரத்தினால் மங்களத்தை விளைப்பவனே! உன் ப்ருத்யர்களை (அடியார்களைப்) பாதுகாப்பாயாக. 

எவன் விடியற்காலத்தில் எழுந்திருந்து, மஹாபுருஷனுடைய அங்க உப அங்காதிகளை விவரிக்கின்ற இந்த ப்ரகரணத்தை (பகுதியை) அவனிடத்தில் மனவூக்கத்துடன் ஜபிக்கிறானோ, அவன் ஹ்ருதய குஹையில் இருக்கின்ற பரப்ரஹ்மத்தை உள்ளபடி அறிவான்.

சௌனகர் சொல்லுகிறார்:- பரீக்ஷித்து மன்னவன் வினவுகையில் ஸ்ரீசுகமுனிவர் ஸூர்ய மண்டலாந்தர வர்த்தியான பரமபுருஷனை ஆராதிக்கின்ற ஏழுவகையான ஆதித்ய கணங்கள், நானாவிதமான கர்மங்களைச் செய்கின்றனவென்று அவனுக்கு மொழிந்தார். ஸூர்யாந்தராத்மாவான பரமபுருஷனை உபாஸிக்கின்ற அந்த ஆதித்ய கணங்களுடைய வ்யூஹத்தையும், அவற்றின் நாமங்களையும் (பெயர்களையும்), அவர்கள் அந்தந்த மாஸங்களுக்கு அதிபதியான அந்தந்த ஸூர்யனால் நியமிக்கப்பட்டுச் செய்யும் கார்யங்களையும், ச்ரத்தையுடன் (ஈடுபாட்டுடன்) கேட்க விரும்புகிற எங்களுக்குச் சொல்வீராக.

ஸ்ரீஸூத புராணிகர் சொல்லுகிறார்:- ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவான ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு இஷ்டப்படி நியமிக்கத் தகுந்ததும், அனாதியும் (ஆரம்பம் இல்லாததும்), ஜ்ஞான விரோதியுமான ப்ரக்ருதியினால் இந்த ஸூர்யன் நிர்மிக்கப்பட்டவன். இவன் லோக யாத்ரையை (உலக நடப்பை) நடத்திக் கொண்டு, லோகங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறான். எவன் ஸமஸ்த லோகங்களுக்கும் ஸ்ருஷ்டி கர்த்தாவோ (படைப்பவனோ), எவன் தன்னைப்போன்ற வஸ்து வேறொன்றும் இல்லாதவனோ, எவன் ஸர்வாந்தராத்மாவோ, அத்தகையனான பரமபுருஷனே ஸூர்யனைச் சரீரமாகக் கொண்டு, காலங்களை அறிவித்து, வைதிகமான கர்மங்களுக்கு மூலமாயிருக்கின்றான். இந்த ஸூர்யனொருவனையே பராசராதி ரிஷிகள் பலவாறு (பன்னிரு வகையன் என்று) கூறுகிறார்கள். 

அந்தணரே! பரம புருஷனொருவனே காலம் (நேரம்), தேசம் (இடம்), க்ரியை (செயல்), கர்த்தா (செய்பவன்), கரணம் (கருவி), கார்யம் (செயப்படுவது), வேதம், த்ரவ்யம் (பொருள்), பலன் என்ற இவ்வொன்பது விதமாகக் கூறப்படுவது போல், இந்த ஸூர்யனும், தானொருவனேயாயினும், பலவாறு கூறப்படுகின்றான். 

காலத்தின் கூறுகளை அறிவிக்கின்ற உருவமுடைய மஹானுபாவனான ஸூர்யன், சைத்ரம் (சித்திரை) முதலிய பன்னிரண்டு மாதங்களிலும், லோக யாத்ரையை நிர்வஹிக்கும் பொருட்டு, தனித்தனியே பன்னிரண்டு கணங்களுடன் ஸஞ்சரிக்கின்றான். (ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு கணம். ஒவ்வொரு கணத்திலும் எவ்வேழு பேர்கள். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு ஆதித்யன், ஒரு அப்ஸரஸ்ஸு, ஒரு ராக்ஷஸன், ஒரு புஜங்கன், ஒரு யக்ஷன், ஒரு ரிஷி, ஒரு கந்தர்வன் ஆகிய இவ்வெழுவரும் சேர்ந்து லோகயாத்ரையை நடத்துகிறார்கள். எந்தெந்த மாதங்களில் எவரெவர் நடத்துகிறார்கள் என்பதை விசதமாக (விரிவாகச்) சொல்லுகிறேன்; கேட்பீர்களாக). 

மதுவென்று ப்ரஸித்தமான சைத்ர (சித்திரை) மாதம் முழுவதும், தாதா என்னும் ஆதித்யன், க்ருதஸ்தலி என்னும் அப்ஸரஸ்ஸு, ஹேதி என்னும் ராக்ஷஸன், வாஸுகி என்னும் புஜங்கன், ரதக்ருத் என்னும் யக்ஷன், புலஸ்த்யர் என்னும் ரிஷி, தும்புரு என்னும் கந்தர்வன் ஆகிய இவ்வெழுவரும் தத்தம் கர்மங்களால் லோக யாத்ரையை நடத்துகிறார்கள். மாதவம் என்று ப்ரஸித்தமான வைசாக (வைகாசி) மாதம் முழுவதும், அர்யமன் என்னும் ஆதித்யன், புலஹர் என்னும் ரிஷி, ரதௌஜஸ் என்னும் யக்ஷன், ப்ரஹேதி என்னும் ராக்ஷஸன், புஞ்சிகஸ்தலி என்னும் அப்ஸரஸ்ஸு, நாரதன் என்னும் கந்தர்வன், கச்சநீரன் என்னும் புஜங்கன் ஆகிய இவ்வெழுவரும் தத்தம் கர்மங்களால் லோகயாத்ரையை நடத்துகிறார்கள். 

சுக்ரம் என்னும் பெயருடைய ஜ்யேஷ்ட (ஆனி) மாதம் முழுவதும், மித்ரன் என்னும் ஆதித்யன், அத்ரி  என்னும் ரிஷி, பௌருஷேயன் என்னும் ராக்ஷஸன், தக்ஷகன் என்னும் புஜங்கன், மேனகை என்னும் அப்ஸரஸ்ஸு, ஹாஹா என்னும் கந்தர்வன், ரதஸ்வனன் என்னும் யக்ஷன் ஆகிய இவ்வெழுவரும் தத்தம் கர்மங்களால் லோக யாத்ரையை நடத்துகிறார்கள். 

சுசி என்னும் ஆஷாட (ஆடி) மாதம் முழுவதும், வஸிஷ்டர் என்னும் ரிஷி, வருணன் என்னும் ஆதித்யன், ரம்பை என்னும் அப்ஸரஸ்ஸு, ஸஹஜன்யன் என்னும் யக்ஷன், ஹுஹூ என்னும் கந்தர்வன், சுகன் என்னும் புஜங்கன், சித்ரஸ்வனன் என்னும் ராக்ஷஸன் ஆகிய இவ்வெழுவரும் தத் தம் கர்மங்களால் லோகயாத்ரையை நடத்துகிறார்கள். 

நபஸ் என்னும் பெயருடைய ச்ராவண (ஆவணி) மாதம் முழுவதும், இந்த்ரன் என்னும் ஆதித்யன், வியவாவஸு என்னும் கந்தர்வன், ரோதா என்னும் யக்ஷன், ஏலாபுத்ரன் என்னும் புஜங்கன், அங்கிரஸ் என்னும் ரிஷி, ப்ரம்லோசை என்னும் அப்ஸரஸ்ஸு, சர்யன் என்னும் ராக்ஷஸன் ஆகிய இவ்வெழுவரும் தத்தம் கர்மங்களால் லோக யாத்ரையை நடத்துகிறார்கள். 

நபஸ்யம் என்னும் பெயருடைய பாத்ரபத (புரட்டாசி) மாதம் முழுவதும், நபஸ்வான் என்னும் ஆதித்யன், உக்ரஸேனன் என்னும் கந்தர்வன், வ்யாக்ரன் என்னும் ராக்ஷஸன், ஆஸாரணன் என்னும் யக்ஷன், ப்ருகு என்னும் ரிஷி, அனும்லோசை என்னும் அப்ஸரஸ்ஸு, சங்கபாலன் என்னும் புஜங்கன் ஆகிய இவ்வெழுவரும் தத்தம் கர்மங்களால் லோகயாத்ரையை நடத்துகிறார்கள். 

இஷம் என்னும் பெயருடைய ஆச்வின (ஐப்பசி) மாதம் முழுவதும் த்வஷ்டா என்னும் ஆதித்யன், ஜமதக்னி  என்னும் ரிஷி, கம்பலாயவன் என்னும் புஜங்கன், திலோத்தமை என்னும் அப்ஸரஸ்ஸு, ப்ராஹ்மாபேதன் என்னும் ராக்ஷஸன், ருதஜித் என்னும் யக்ஷன், த்ருதராஷ்ட்ரன் என்னும் கந்தர்வன் ஆகிய இவ்வெழுவரும் தத்தம் கர்மங்களால் லோக யாத்ரையை நடத்துகிறார்கள். 

ஊர்ஜம் என்னும் பெயருடைய கார்த்திக (கார்த்திகை) மாதம் முழுவதும், விஷ்ணு என்னும் ஆதித்யன், அச்வதரன் என்னும் புஜங்கன், ரம்பை என்னும் அப்ஸரஸ்ஸு, ஸூர்யவர்ச்சஸ் என்னும் கந்தர்வன், ஸத்யஜித் என்னும் யக்ஷன், விச்வாமித்ரன் என்னும் ரிஷி, மகாபேதன் என்னும் ராக்ஷஸன் ஆகிய இவ்வெழுவரும் தத்தம் கர்மங்களால் லோக யாத்ரையை நடத்துகிறார்கள். 

ஸஹஸ் என்னும் பெயருடைய மார்க்கசீர்ஷ (மார்கழி) மாதம் முழுவதும், அம்சுமான் என்னும் ஆதித்யன், கச்யபர் என்னும் ரிஷி, தார்க்ஷயன் என்னும் யக்ஷன், ருதுஸேனன் என்னும் கந்தர்வன், ஊர்வசி என்னும் அப்ஸரஸ்ஸு, வித்யுச்சத்ரு என்னும் ராக்ஷஸன், மஹாயங்கன் என்னும் புஜங்கன் ஆகிய இவ்வெழுவரும் தத்தம் கர்மங்களால் லோக யாத்ரையை கடத்துகிறார்கள். 

ஸஹஸ்யம் என்னும் பெயருடைய பௌஷமாதம் (தை) முழுவதும், பகன் என்னும் ஆதித்யன், ஸ்பூர்ஜன் என்னும் ராக்ஷஸன், அரிஷ்டநேமி என்னும் கந்தர்வன், ஊர்ஜன் என்னும் யக்ஷன், ஆயுஸ் என்னும் ரிஷி, கர்க்கோடகன் என்னும் புஜங்கன், பூர்வ சித்தி என்னும் அப்ஸரஸ்ஸு ஆகிய இவ்வெழுவரும் தத்தம் கர்மங்களால் லோகயாத்ரையை நடத்துகிறார்கள்.

தபஸ் என்னும் பெயருடைய மாக (மாசி) மாதம் முழுவதும், பூஷா என்னும் ஆதித்யன், தனஞ்சயன் என்னும் புஜங்கன், வாதன் என்னும் ராக்ஷஸன், ஸஷேணன் என்னும் கந்தர்வன், ஸுருசி என்னும் யக்ஷன், க்ருதாசி என்னும் அப்ஸரஸ்ஸு, கௌதமர் என்னும் ரிஷி ஆகிய இவ்வெழுவரும் தத்தம் கர்மங்களால் லோக யாத்ரையை நடத்துகிறார்கள். 

தபஸ்யம் என்னும் பெயருடைய பால்குண (பங்குனி) மாதம் முழுவதும், ருதுவர்ச்சஸ் என்னும் ராக்ஷஸன், பரத்வாஜர் என்னும் ரிஷி, பர்ஜன்யன் என்னும் ஆதித்யன், ஸேனஜித் என்னும் அப்ஸரஸ்ஸு, விச்வன் என்னும் கந்தர்வன், ஐராவதன் என்னும் புஜங்கன் ஆகிய இவ்வெழுவரும் தத்தம் கர்மங்களால் லோக யாத்ரையை நடத்துகிறார்கள். 

அந்தணரே! மஹானுபாவனும் ஆதித்யனைச் சரீரமாகவுடையவனுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் விபூதிகளான இவர்கள் அனைவரும் தினந்தோறும் காலை, மாலை ஆகிய இரண்டு ஸந்த்யைகளிலும் (பகல் இரவு சந்திப்பு), தங்களை நினைக்கும் மனிதர்களுடைய பாபத்தைப் போக்குகிறார்கள். இந்த ஆதித்ய ஸ்வரூபியான பகவான், பன்னிரண்டு மாதங்களிலும் இவ்வறுவருடன் நாற்புறத்திலும் திரிந்து, இந்த ப்ராணிகளுக்கு இஹத்திலும், பரத்திலும் நன்மைக்கிடமான புத்தியை விளைக்கின்றான். 

புலஸ்த்யாதி ரிஷிகள், ஸூர்யனைச் சரீரமாகவுடைய பரமபுருஷனை வெளியிடுகின்ற ஸாமவேதங்களாலும், ருக்வேதங்களாலும், யஜுர்வேதங்களாலும், அந்த ஸூர்யனைத் துதிக்கின்றார்கள். கந்தர்வர்கள், அவனைப் பாடுகிறார்கள். அப்ஸர மடந்தையர் அவனெதிரில் ஆடுகிறார்கள். நாகர்கள், ரதத்தை உறுதியாகக் கட்டுகிறார்கள். யக்ஷர்கள், ரதத்தை ஓட்டுகிறார்கள். பலசாலிகளான ராக்ஷஸர்கள், ரதத்தைப் பின்புறத்தில் நடத்துகிறார்கள். 

வாலகில்யரென்று ப்ரஸித்தர்களும், பரிசுத்தர்களுமான அறுபதினாயிரம் ப்ரஹ்மரிஷிகள், எதிரில் சூழ்ந்து நின்று, அவனுடன் போகின்றார்கள். மற்றும் விபுவான ஸூர்யனை அவர்கள் ஸ்தோத்ரங்களால் புகழ்கின்றார்கள். ஆதி (முதல்), அந்தம் (முடிவு) அற்றவனும், ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி விகாரங்கள் (மாறுபாடுகள்) தீண்டப் பெறாதவனும், தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனும், ஸர்வ நியாமகனும் (எல்லாவற்றையும் நியமிப்பவனும்), ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷன், கல்பந்தோறும் ப்ரக்ருதி புருஷர்களைச் சரீரமாகவுடைய தன்னை இவ்வாறு  பன்னிரண்டு வ்யூஹங்களாகப் பிரித்து லோகங்களைத் தத்தம் கர்மங்களில் தூண்டிப் பாதுகாக்கின்றான்.

பதினொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக