புதன், 13 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 347

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - பத்தாவது அத்தியாயம்

(ருத்ரன் மார்க்கண்டேயருக்கு வரங்கொடுத்தல்)

ஸ்ரீஸூத புராணிகர் சொல்லுகிறார்:- அம்மார்க்கண்டேய முனிவர், நாராயணனென்று ப்ரஸித்தி பெற்ற பரமபுருஷன் காட்டின அவனுடைய யோகமாயையின் வைபவத்தை இவ்வாறு அனுபவித்து, அம்மாயையைத் தாண்டுவதற்கு அந்தப் பரமபுருஷனையே சரணம் அடைந்தார்.

மார்க்கண்டேயர் சொல்லுகிறார்:- ஸ்ரீஹரீ! (தன்னைப் பற்றினவர்களின் பாபங்களைப் போக்குகையால் ஹரியென்று பெயர் பெற்றவனே!) தன்னையே சரணமாகப் பற்றினவர்களுக்கு அபயம் கொடுப்பதாகிய உன் பாதமூலத்தை நான் சரணம் அடைந்தேன். தேவர்களும் கூட எவனுடைய மாயையினால் மதியை (புத்தியை) இழந்து, மனம் கலங்கி மோஹிக்கிறார்களோ (மயங்குகிறானோ), அத்தகையனான உன்னுடைய மாயையைக் கடப்பதற்கு, நான் உன்னையே சரணம் அடைகின்றேன்.

ஸ்ரீஸூத புராணிகர் சொல்லுகிறார்:– அப்பொழுது, தன்னுடைய ப்ரமதகணங்களால் (சேவகர்களால்) சூழப்பட்டு பார்வதியுடன் வ்ருஷப (காளை) வாஹனத்தின் மேல் ஏறி, ஆகாயத்தில் திரிகின்ற மஹானுபாவனான உருத்திரன், பரமபுருஷனிடத்தில் மனவூக்கம் உற்றிருக்கின்ற அம்முனிவரைக் கண்டான். பிறகு, பார்வதி அம்மஹர்ஷியைக் கண்டு, கிரீசனைக் குறித்து, “மஹானுபாவனே! இம்முனிவர் தேஹம் (உடல்), இந்த்ரியம் (புலன்), மனம் இவையெல்லாம் சிறிதும் சலியாதபடி அடக்கி, காற்றில்லாத பொழுது, ஜலமும், மீன்களின் கூட்டமும் அசையாதிருக்கப்பெற்ற மாஹாஸமுத்ரம் (பெரும் கடல்) போன்றிருக்கிறார். இவரைக் கிட்டிச் (அருகில்) சென்று காண்போம். நீ விரும்பி ஸித்திகளை (முழுமையான பலன்களை) எல்லாம் கொடுப்பவனல்லவா? ஆகையால், இம்முனிவர் எதை விரும்பித் தவம் செய்கிறாரோ, அந்த ஸித்தியை (பலனை) நீயே இவர்க்குக் கொடுப்பாயாக” என்று மொழிந்தாள். 

உருத்திரன் சொல்லுகிறான்:- இவர் ப்ரஹ்மரிஷி. இவர் இஹலோக (இந்த உலக) ஸுகங்களையாவது (இன்பங்களையாவது), பரலோக (பிற உலக) ஸுகங்களையாவது எவற்றையும் விரும்புகிறவரல்லர். ஆயிரம் சொல்லியென். இவர், அழிவற்ற பரமபுருஷனான பகவானிடத்தில் அனன்ய ப்ரயோஜனமான (பகவானைத் தவிர வேறு எந்த பலனையும் விரும்பாத) பக்தி கைகூடப் பெற்றவர். (ஒரு ப்ரயோஜனத்தையும் (பலனையும்) எதிர்பாராமல், பகவானிடத்தில் நிலை நின்ற பக்தியுடையவர்கள், எதையும் விரும்ப மாட்டார்கள்). 

பவானி! ஆயினும் ஸாதுவாகிய இம்முனிவருடன், ஸம்பாஷணம் (உரையாடல்) செய்வோம். (“அவ்வளவு மாத்ரத்தினால் என்ன ப்ரயோஜனம் (பலன்)? என்கிறாயோ?” சொல்லுகிறேன் கேள்.) ப்ராணிகளுக்கு, ஸத்புருஷர்களோடு ஸமாகமம் (தொடர்பு) நேருமாயின், இதுவே அவர்களுக்குப் பரம லாபமாம்.

ஸ்ரீஸூத புராணிகர்  சொல்லுகிறார்:- ஸத்புருஷர்களுக்குக் கதியும், ஸர்வ வித்யா நிர்வாஹகனும் (எல்லா வித்யைகளையும் நியமிப்பவனும்), ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஈச்வரனும், மஹானுபாவனுமாகிய அவ்வுருத்திரன் இவ்வாறு மொழிந்து, அம்மஹர்ஷியிடம் சென்றான். அம்முனிவர், அந்தக்கரண (மனதின்) வ்ருத்திகளை (எண்ணங்களை) எல்லாம் அடக்கி, பரமபுருஷனிடத்தில் மனத்தை நிலைநிறுத்தி, அவனையே த்யானித்துக் கொண்டிருக்கையால், ஒன்றான ஜகதீச்வரனும், ஸமஸ்த ஜகத்திற்கும் அந்தராத்மாவுமாகிய பரமபுருஷனுடைய அம்சமாகையால் அத்தன்மைகளெல்லாம் அமையப்பெற்ற பார்வதியும் பரமேச்வரனுமாகிய அவ்விருவரும் எதிரில் வந்து நின்றிருப்பதையும், தன் தேஹத்தையும் மற்றுமுள்ள ப்ரபஞ்சத்தையும் அறியாதிருந்தார். 

மஹானுபாவனாகிய கிரீசனும் அதை அறிந்து, பகவத் உபாஸனத்தினால் (பகவானை த்யானிப்பதால்) தனக்கு ஏற்பட்டிருக்கின்ற பரகாய ப்ரவேச ஸாமர்த்யமாகிற (வேறு ஒருவது உடலில் புகும் திறமையாகிற)  சக்தியினால் காற்று ரந்தரத்தில் (த்வாரத்தில்) ப்ரவேசிப்பது போல், அம்முனிவருடைய ஹ்ருதய ஆகாசத்தில் (இதயத்தில்) ப்ரவேசித்தான். 

அம்முனிவர், மின்னல் போல் பொன்னிறமான ஜடைகளைத் தரித்து, மூன்று கண்களும், பத்து புஜங்களும் (கைகளும்) அமைந்து, மிகவும் உயர்ந்து, அப்போது உதிக்கின்ற ஸூர்யன் போல் ஜ்வலித்துக்கொண்டு, புலித்தோல் உடுத்து, சூலம், தனுஸ்ஸு, பாணம், கத்தி, கேடயம், அக்ஷமாலை, டமருகம், கபாலம், கோடரி இவைகளை ஏந்திக் கொண்டு, திடீரென்று தன் ஹ்ருதயத்தில் வந்து தோன்றுகிற அப்பரமசிவனைக் கண்டு, “இதுவென்? எப்படி நேர்ந்தது?” என்று வியப்புற்று, பரமாத்ம த்யானத்தினின்று மீண்டார். 

பிறகு, அம்முனிவர் கண்ணைத் திறந்து, ப்ரமதகணங்களோடும் (சேவகர்களோடும்) பார்வதியோடும், எதிரில் இருக்கின்ற த்ரிலோகக் குருவான (மூவுலகுக்கும் குருவான) ருத்ரனைக் கண்டு, தலையால் வணங்கினார். அவர், ப்ரமதகணங்களோடும் பார்வதியோடும் கூடிய அந்த ருத்ரனுக்கு வரவேற்று, ஆஸனம் அளித்து, பாத்யம், அர்க்யம், கந்தம், பூமாலை, தூபம், தீபம் இவைகளையும் அளித்து, பூஜை செய்தார். மேல் வருமாறு மொழியவும் மொழிந்தார்.

மார்க்கண்டேயர் சொல்லுகிறார்:- ப்ரபூ! தனப்ரபாவத்தினால் (செல்வச் செழிப்பால்) விருப்பங்களெல்லாம் நிறைவேறப் பெற்ற உனக்கு, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ஈச்வரனே! எவனால் இந்த ஜகத்தெல்லாம் ஸுகித்திருக்கின்றதோ, அத்தகைய உனக்கு எங்களால் ஆக வேண்டியது என்ன இருக்கின்றது? ஒன்றும் இல்லை. உலகங்களுக்கு  எல்லாம் மங்களத்தை விளைப்பவனாகையால், சிவனென்று பெயர் பெற்றவனும் பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் (துன்ப அலைகள்) நீங்கப் பெற்றவனும், மிகுதியும் ஸுகத்தை விளைவிப்பவனும், சுத்த ஸத்வமயமான திருமேனியையுடைய ஸ்ரீமகாவிஷ்ணுவினுடைய அம்சமுமாகிய உனக்கு நமஸ்காரம். 

“எனக்கு அந்தராத்மாவான (உள்ளே ஆத்மாவாய் இருப்பவனான) பரமபுருஷனே ரஜோகுணம் தலையெடுத்த ப்ரஹ்மதேவனுக்கும், அந்தராத்மாவாய் இருந்து, ஸ்ருஷ்டி (படைப்புக்) கார்யத்தை நடத்துகிறானென்னும் பரமாத்மனுடைய உண்மையை அறிந்து, நானே ரஜோ குண ப்ரசுரனான (ரஜோ குணம் நிரம்பிய) ப்ரஹ்மதேவன் என்னும் பாவனையுடைய உனக்கு நமஸ்காரம். தமோகுணம் தலையெடுத்து ருத்ரனென்னும் பெயர் பூண்டு ஸம்ஹாரத்தை (அழிவை) நடத்துகின்றமையால், பயங்கரனான உனக்கு நமஸ்காரம்.

ஸ்ரீஸூத புராணிகர்  சொல்லுகிறார்:- ஆதிதேவனும் (முதன்மையான தேவனும்), ஸத்புருஷர்களுக்குக் கதியுமாகிய அச்சிவபகவான், இவ்வாறு அம்முனிவரால் துதிக்கப்பெற்று, ஸந்தோஷம் அடைந்து, மன இரக்கமுற்றுச் சிரித்துக் கொண்டே, அம்முனிவரைக் குறித்து மொழிந்தான்.

ஸ்ரீருத்ரன் சொல்லுகிறான்:- முனிவரே! என்னிடத்தினின்று உமக்கு இஷ்டமான வரத்தை வேண்டிக் கொள்வீராக. ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்களென்கிற நாங்கள் மூவரும் வரம் கொடுப்பவர்களில் சிறந்தவர்கள். எங்களுடைய காட்சி வீணாகாதது. எங்களிடத்தினின்றே மோக்ஷத்தைப் பெறுகின்றார்கள். (பரமபுருஷன் நேரே மோக்ஷம் கொடுக்கிறான். ப்ரஹ்மாவும், நானும், பகவத் உபாஸனத்திற்கு த்வாரமாயிருந்து (வழியாய் இருந்து) மோக்ஷம் கொடுக்கிறோம். ஆகையால், நாங்கள் மூவரும் மோக்ஷம் கொடுப்பவர்கள்). 

ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு)  முதலிய தோஷங்களால் மனம் கலங்கப் பெறாதவர்களும், சப்தாதி விஷயங்களில் (உலகியல் விஷயங்களில்) பற்றற்றவர்களும், பகவானிடத்தில் ஒரு ப்ரயோஜனத்தையும் (பலனையும்) விரும்பாமல் பக்தி செய்பவர்களும், ப்ரஹ்மதேவன், நான் ஆகிய எங்களிடத்தில் பகவத் விபூதி (பகவானது சரீரம், சொத்து) என்னும் பாவனையால் வைரம் (பகைமை) அற்றவர்களும், எல்லாம் பகவானுடைய சரீரமென்னும் பாவனையால் ஸர்வத்தையும் ஸமமாகப் பார்க்குந் தன்மையர்களும், ப்ரஹ்ம நிஷ்டை (பரப்ரஹ்மத்தில் நிலை) உடையவர்களுமான ப்ராஹ்மணர்கள் ஸாதுக்களென்று கூறப்படுவார்கள். 

ஸமஸ்த லோகங்களும், இந்த்ராதி லோகபாலர்களும், நானும், ஜ்ஞானாதி குணங்கள் அமைந்த ப்ரஹ்மதேவனும், தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனும் ஸகல ஜகந்நியாமகனுமான (உலகை நியமிப்பவனுமான) பரமபுருஷன் தானுமாகிய நாங்கள் அனைவரும் அத்தகைய அந்தணர்களை வணங்குவதும், பூஜிப்பதும், உபாஸிப்பதும், செய்கின்றோம். இந்த ப்ராஹ்மணர்கள், ப்ரஹ்ம தேவனிடத்திலும், என்னிடத்திலும், தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாமல் பாதுகாக்கும் தன்மையைப்பற்றி அச்யுதனென்னும் பெயர்பெற்ற பரமபுருஷனிடத்திலும், சிறிதும் பேதம் (வேற்றுமை) பார்க்க மாட்டார்கள். (இவர்கள் பரமபுருஷனுடைய சரீரங்களாகையால், அவனைக் காட்டிலும் வேறுபட்டவர்களன்று: இவர்கள், அவனே என்று பாவிப்பார்களன்றி, அவனைக்காட்டிலும் பேதம் பாராட்டமாட்டார்கள்). 

அவர்கள், தம்மையும், மற்ற ஜனங்களையும் பரமபுருஷ சரீரங்களென்றே நன்றாக உணர்ந்தவர்களாகையால், தம்மையும், பிறரையும், அப்பரமபுருஷனைக் காட்டிலும் வேறாக நினைக்கமாட்டார்கள். ஆகையால், நாங்களும் உங்களைப் பணிகின்றோம். ஜலமயமான புண்ய தீர்த்தங்கள், தர்சன மாத்ரத்தினால் பரிசுத்தம் செய்யமாட்டாது; பின்னையோ வென்றால், நெடுநாள் ஸ்னானாதிகள் செய்தால் தான் பரிசுத்தம் செய்யும். மற்றும், மண் சிலை முதலியவற்றால் இயற்றின தேவப்ரதிமைகளும் (தெய்வ விக்ரஹங்களும்) தர்சன மாத்ரத்தினால் பரிசுத்தம் செய்யமாட்டாது; நெடுநாள் ஆவாஹனாதி ஷோடசோபசார (16 வகையான உபசாரங்களுடன் கூடிய) பூஜாதிகளால் தான் பரிசுத்தம் செய்யும். 

நீங்களோவென்றால், தர்சன மாத்ரத்தினாலேயே பரிசுத்தம் செய்கிறீர்கள். ப்ராஹ்மணர்களுக்கு நமஸ்காரம். இவர்களுடைய உருவம் வேதமயமாயிருக்கும்; மற்றும், மன அடக்கம், தவம், ஸ்வாத்யாயம் (வேத மோதுதல்), இந்திரிய நிக்ரஹம் (புலனடக்கம்) இவைகளால் பரிசுத்தமானது. மஹாபாதகிகளும் (மிகப்பெரும் பாபம் செய்தவர்களும் - ப்ராஹ்மணனைக் கொல்லுதல், கள் குடித்தல், திருடுதல், ஆசர்யனின் மனைவியைப் புணர்தல், இப்பாபங்களைச் செய்தவர்களோடு சேருதல் என்கிற ஐந்தும் மஹாபாதகங்கள் – மிகப் பெரும் பாபங்கள்), அந்நிய ஜாதியில் பிறந்தவர்களும், கண்ணால் கண்ட மாத்ரத்திலும், காதால் கேட்ட மாத்ரத்திலும், பரிசுத்தராவார்கள்; இவர்களோடு ஸம்பாஷணாதிகள் (உரையாடல்) செய்யில், பரிசுத்தராவார்களென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?

ஸ்ரீஸுதர் சொல்லுகிறார்:- இவ்வாறு ஸத்புருஷ (சான்றோர்) ஸேவையாகிற தர்ம ரஹஸ்யத்தை உட்கொண்டிருப்பதும், அம்ருதம் போன்றதுமாகிய சந்திரசேகரனுடைய வசனத்தை மார்க்கண்டேய மஹர்ஷி காதுகளால் பானம் செய்து, த்ருப்தி அடையாதிருந்தார். விஷ்ணுவின் மாயையில் அகப்பட்டு, நெடுநாள் சுழலமிட்டு, மிகவும் வருத்தமுற்றிருக்கின்ற அம்முனிவர், சிவபெருமானுடைய வசனமாகிற அம்ருதத்தைப் பருகி வருத்தமெல்லாம் தீரப்பெற்று, அச்சிவபெருமானைக் குறித்து மேல்வருமாறு கூறினார்.

ரிஷி சொல்லுகிறார்:- ஈச்வரனுடைய விபூதிகளான (சொத்து, சரீரம்) உங்களைப்போன்ற பெரியோர்களுடைய சேஷ்டைகள் (செயல்கள்)  ப்ராணிகளுக்கு அறியமுடியாத அபிப்ராயமுடையவை. ஏனென்றால், நீங்கள் ஜகத்தில் சிறப்புடையவர்களாயிருந்தும், சிறுமையான ஜந்துக்களையும் (பிராணிகளையும்) வணங்குவதும், துதிப்பதும் செய்கின்றீர்கள். (பகவானிடத்தில் பக்தியுடைய பெரியோர்களின் நிலைமை இத்தகையதேயாம்). தர்மத்தைப் பிறர்க்கு உபதேசிக்குந் திறமை உடையவர்களாயிருந்தும் ப்ராணிகளுக்கு அதை அறிவிக்கும் பொருட்டுத் தாங்கள் தர்மத்தைப் பெரும்பாலும் அனுஷ்டிப்பதும், பிறர் அனுஷ்டிப்பதைப் பற்றி ஸந்தோஷிப்பதும், துதிப்பதும் செய்கின்றார்கள். 

இவ்வாறு பெரியோர்கள் தர்மத்தை அனுஷ்டிப்பதும், அனுஷ்டிக்கிறவர்களைப்பற்றி ஸந்தோஷிப்பதும், அவர்களைத் துதிப்பதுமாகிய இவை, அவர்களுடைய ஆச்சர்ய சேஷ்டைகளில் (செயல்களில்) சில. இவ்வளவு மாத்ரத்தினால் அவர்களுடைய ப்ரபாவம் (பெருமை) தடைபடாது. ஜகத்ப்ரஸித்த (உலகப் புகழ் பெற்ற) மாயாவியினுடைய கபட (சூது) வ்யாபாரங்களால் (செயல்களால்) அவனுடைய மாயா விச்வரூப ப்ரபாவம் (அவனே உலக வடிவு என்பது) வெளியாகுமேயன்றி, அவனுடைய ப்ரபாவம் (பெருமை) குறையாதல்லவா. அவ்வாறே  இதுவுமொன்று. பகவான், ஸங்கல்ப மாத்ரத்தினால் இந்த ஜகத்தையெல்லாம் படைத்து, தான் அதற்குள் புகுந்து, பூர்வ கர்ம வாஸனா அனுகுணமாகப் (முன் வினைகளின் ஆழ்ந்த மனப் பதிவுகளால்) பரிணமிக்கின்ற குணங்கள், உத்தரோத்தரமான (மேன்மேலும் வளரும்) புண்ய, பாப ரூப விஷம், ஸ்ருஷ்டியை (படைப்பை) நடத்துகின்றனவாயினும், தானே அந்த விஷம ஸ்ருஷ்டியை (ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த படைப்பை) நடத்துகிறவன் போல் தோற்றுகிறான்.

ஸ்வப்னத்தில் (கனவில்) புலப்படுகின்ற வஸ்துக்கள், ஸ்வப்னம் (கனவு) காண்கிறவனால் படைக்கப்பட்டவையல்ல. பகவானே அவரவர்களுடைய கர்மானுகுணமாகச் சில வஸ்துக்களைப் படைத்து, ஸ்வப்னத்தில் (கனவில்) அனுபவிப்பிக்கிறான். அவை ஸ்வப்னம் (கனவு) காண்கிறவனுக்குத் தவிர, மற்றவனுக்குத் தெரியமாட்டாது. அவனுக்கும், அந்த ஸ்வப்ன ஸமயம் தவிர அடுத்த க்ஷணத்திலும் கூடத் தெரிய மாட்டாது. ஈச்வரன் அக்காலத்தில் மாத்ரமே அவனவன் அனுபவிக்கும்படி படைத்து, உடனே மறைக்கின்றான். இவ்வுண்மையை அறியாதவர்கள், ஸ்வப்னத்தில் புலப்படுகிற வஸ்துக்களை, அந்தந்த ஜீவனே படைக்கிறானென்று ப்ரமிக்கின்றார்கள். அவ்வாறே  பரமபுருஷன் ஜீவாத்மாக்களுடைய புண்ய-பாப கர்மங்களுக்குத் தகுந்தபடி மேன்மையும், தாழ்மையுமான தேஹங்களைப் படைக்கிறானன்றி, அவன் தானே மன இரக்கமில்லாமல் விஷம ஸ்ருஷ்டியை (ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த படைப்பை) நடத்துகிறான் என்பதில்லை. 

ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களுக்கு நியாமகனும் (நியமிப்பவனும்), எங்கும் தடைபடாத ஸங்கல்பமுடையவனும், ஸமஸ்த தோஷங்களும் தீண்டப்பெறாதவனும், தன்னைப் பற்றினாருடைய தோஷங்களை எல்லாம் போக்கும் தன்மையனும், தன்னைப் போன்ற வேறொரு வஸ்துவில்லாதவனும், வேத நிர்வாஹகனும் (வேதத்தை நியமிப்பவனும்), அளவிட முடியாமல் எங்கும் நிறைந்த ஸ்வரூபமுடையவனும், குருவும், ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய)  அத்தகைய பரமபுருஷனுக்கு நமஸ்காரம். 

அளவிறந்த மஹிமை உடையவனே! வரம் கொடுப்பவர்களில் சிறந்தவனும், சிறந்த காட்சி உடையவனுமாகிய உன்னிடத்தினின்று இதைக் காட்டிலும் வேறு எந்த வரத்தை வேண்டுவேன்? புருஷன் புண்ய, பாப கர்மங்களுக்கு உட்படாமல், ஸ்வதந்தரனும் (தன் விருப்பப்படி செயல்பட வல்லவனும்), ஸத்யகாமனுமாகையே (நித்ய விபூதியான ஸ்ரீவைகுண்டத்தை உடையவனுமான) அவனுக்கு வேண்டிய வரமன்றி வேறுண்டோ? ஆயினும், விருப்பங்களை எல்லாம் குறைவற நிறைவேற்றும் திறமையுடைய உன்னிடத்தினின்று இந்த வரத்தை வேண்டுகின்றேன். தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாமல் காக்கும் தன்மையனான பகவானிடத்திலும், அவனுடைய பக்தர்களிடத்திலும், அவர்களில் சிறந்த உன்னிடத்திலும், எனக்கு அழியாத பக்தி உண்டாகும்படி அருள் புரிவாயாக.

ஸ்ரீஸுதர் சொல்லுகிறார்:- இவ்வாறு அம்முனிவர் இனிய உரைகளால் துதி செய்கையில், தன் பக்தர்களைக் கைவிடாத பரமபுருஷனிடத்தில் நிலைநின்ற மனமுடையவனாகையால் தன்மயனும், மஹானுபாவனுமாகிய ருத்ரன், பார்வதியாலும் அபிநந்தனம் செய்யப்பட்டு, அம்முனிவரைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

ருத்ரன் சொல்லுகிறான்:- மஹர்ஷீ! உமக்கு இவ்விருப்பம் நிறைவேறுமாக. இந்த்ரியங்களால் விளையும் அறிவுகளுக்கெட்டாத மஹானுபாவனான பரமபுருஷனிடத்தில் உமக்குச் சிறந்த பக்தி உண்டாகுமாக. உமக்குக் கல்பாந்தம் (கல்பம் முடியும்) வரையில் புண்யமான புகழ் உண்டாகுமாக. மற்றும், நீர் ஜரா (கிழத்தனம்), மரணங்கள் அற்று இருப்பீராக. 

ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! உமக்கு த்ரிகால  ஜ்ஞானம் உண்டாகுமாக. (வருங்காலம், நிகழ்காலம், கழிகாலமாகிய மூன்று காலங்களிலுள்ளவற்றையும் நீர் அறிவீராக.) ப்ரஹ்ம ஸ்வரூப, ரூபாதிகளைப் பற்றின அறிவும், விரக்தியும் உமக்கு விளையுமாக. ப்ரஹ்ம வர்ச்சஸம் (ப்ரஹ்ம தேஜஸ், காந்தி) மிகுந்திருக்கப் பெற்ற உமக்கு, புராண ஆசார்யத்வம் உண்டாகுமாக (நீர் ஏற்கனவே பரமபுருஷனிடத்தில் மிகுந்த பக்தி உடையவராகையால், உம்முடைய விருப்பங்கள் எல்லாம் தானே கை கூடியிருக்கின்றன. மேன்மேலும் அவை தானே வளர்ந்து வரும். நீர் இதைப்பற்றிச் சிறிதும் சிந்திக்க வேண்டியதில்லை.)

ஸ்ரீஸுதர் சொல்லுகிறார்:- முக்கண்ணனாகிய ருத்ரன் இவ்வாறு அம்முனிவர்க்கு வரங்களைக் கொடுத்து, அம்முனிவர் முன்பு பகவானுடைய மாயையைக் கண்டமையாகிற அற்புத வ்ருத்தாந்தத்தைத் தன் பத்னியாகிய பார்வதிக்குச் சொல்லிக் கொண்டே, புறப்பட்டுப் போனான். ப்ருகு வம்சத்தவர்களில் சிறந்தவரான அம் மார்க்கண்டேய முனிவர், மஹாயோக வைபவம் கைகூடப் பெற்று, பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனான பரமபுருஷனிடத்தில் ஒரு ப்ரயோஜனத்தையும் (பலனையும்) எதிர்பாராத ஏகாந்த (ஒரே) பக்தியுடையவராகி, இப்பொழுதும் திரிந்து கொண்டிருக்கிறார். இது நிச்சயம். (இவ்விஷயத்தில் ஸந்தேஹம் இல்லை).

சிறந்த மதியுடைய மார்க்கண்டேய முனிவர், பகவானுடைய அற்புதமான மாயா வைபவத்தை அனுபவித்த இந்த வ்ருத்தாந்தம் முழுவதும் உமக்கு வர்ணித்தேன். ஸம்ஸாரம் அனாதி என்பதை அறியாத சில மூடர்கள், ஜீவாத்மாக்களுக்கு பகவானுடைய மாயையினால் உண்டான இந்த ஸம்ஸாரத்தைக் காதாசித்கம் என்று (மார்க்கண்டேயருடைய மாயா அனுபவம் போல் ஒருகால் நேருவதென்று) சொல்லுகிறார்கள். பின்னையோ என்றால், இந்த ஸம்ஸாரம் (உலகியல் இன்ப துன்பங்கள்) அனாதியாகச் சக்ரம் போல் சுழன்று கொண்டு வருகின்றது. சக்கரக்கையனான பரமபுருஷனுடைய ப்ரபாவத்தை உட்கொண்டிருக்கிற மார்க்கண்டேய மஹர்ஷியின் வ்ருத்தாந்தத்தை விவரித்துச் சொன்னேன். இதை எவன் பிறரைக் கேட்பிக்கிறானோ, எவன் கேட்கிறானோ, அவ்விருவர்க்கும் புண்ய, பாப கர்ம மூலமான ஸம்ஸாரம் மீளவும் தொடராது. 

பத்தாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக