அகிலம் எல்லாம் மதுரம் - ராஜேஸ்வரி ஐயர்

அகிலம் எல்லாம் மதுரம் - ராஜேஸ்வரி ஐயர்

கோவிந்தனின் சிறப்பைக் குலசேகர ஆழ்வார், திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிட்டுள்ளார். செடி போல கிளைத்துக் கிளம்பும் என் வினைகளை திருமாலே நீ தீர்த்து விடுகிறாய். நெடியவன் அவன் வேங்கடவன். அவனுடைய கோயில் வாசலில் வானுலகத்தினர் இங்கும் அங்கும் நடமாடித் திரிவார்கள். இப்படியாகத் திருமாலை புகழ்ந்து சொல்லிக்கொண்டே போகிறார் குலசேகர ஆழ்வார். குருவினை அறியும் உத்தியையும் சொல்லித் தருகிறார். இப்பாசுரத்தின் கடைவரியில் பவளவாய் காண்பதாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

திருமாலின் அவயத்தில் அகிலம் எல்லாம் மதுரம். கால் அழகு, விரல் அழகு, இடுப்பழகு, சங்கு, சக்கரம், கதை ஏந்திய கைகள் அழகு. தோள் அழகு, தொண்டையும் அழகு. இரு கன்னமும், கண்களும் அழகோ அழகு. நுதல் அழகு, சுருள் கேசமும் மகுடமும் அழகு. இவற்றையெல்லாம் இப்பாசுரத்தில் குறிப்பிடாமல், “ பவளவாய்” காண்பேனே என்று சொன்னதற்கு ஏதேனும் முக்கியக் காரணம் இருக்க வேண்டும். ஆழ்வார்கள் என்றாலே எம்பெருமானை ஆழ்ந்து சிந்திப்பவர்கள்.

பகவான் இவ்வுலகில் உள்ளவர்கள் எல்லோரும் உய்ய வேண்டும் என்பதற்காகக் கூறியது பகவத் கீதை. அதனை வெளிப்படுத்திய திருவாய் இதுதானே. எனவே பவள வாய் காண்பேனே என்றார். திருவாய் மலர்ந்து பகவான் சொன்னது:

சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாமேகம் சரணம் விரஜ
அகம்த்வா சர்வ பாபேப்யோ
மோஷயிஷ்யாமி மாசுக

இதில் ‘மாசுக’ என்றால் வருந்தாதே என்று பொருள். இதோ இந்தப் பவளவாயால்தானே இதனைச் சொன்னாய். அதனால் காண்பேனே! ஏதோ நாமெல்லாம் திருமலையில் பகவானைக் கண்டும் காணாமலும் தரிசித்து வெளியேறிவிடுகிறோம். நாம் என்னத்தைக் கண்டோம் பவள வாயையும், மணக்கும் பன்னீர் வாயையும். ஆனால் குலசேகர ஆழ்வார் படியாய் கிடக்கின்றேன் என்கிறார். இவர் 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும், ஆண்டின் 365 நாட்களும் அங்கேயே கிடக்கிறார். அவ்வளவு நேரமும் அங்கேயே கிடந்தாலும் பவள வாய் மட்டும்தான் காண்பதாகச் சொல்கிறார்.

அவரோ ஆச்சார்யன். ஸ்ரீஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்தானே! அவருக்கு பகவான், தன் திருவாய் மலர்ந்து பொன்னும் பொருளுமா அளிக்க வேண்டும்? சாதாரண மக்களோ வீடு வேண்டும், வாசல் வேண்டும் என்று கோரிக்கை மனுக்களை பகவானுக்கு அனுப்பி, பதிலுக்கு அவரது வாய் பார்த்து நிற்கின்றனர். அப்படியென்றால் குலசேகர ஆழ்வாருக்கு என்ன தேவை? குருவருள்தான் தேவை. ஜோதிடத்தில் பிரபலமாகக் கூறப்படுவது, குரு பார்க்க கோடி நன்மை. அப்படியென்றால் குரு யார்?

வசுதேவ சுதம்தேவம் கம்ச சானூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

எனவே ஜகத்குருவானவன் கிருஷ்ணன். அவனே அனைவருக்கும் குல குருவாகும் தகுதி உடையவன். குலத்தைக் காக்கும் தெய்வம் எனவே குல தெய்வம். எப்படி? சந்தியாவந்தன சுலோகத்தில் ஒன்று,

ஆகாசம் பதிதம் தோயம்
யதா கச்சதி சாகரம்
சர்வ தேவ நமஸ்காரம்
கேசவம் பரிகச்சதி

கடைசி வரியைக் கவனிக்க வேண்டும். இதன் பொருள் கேசவனையே சாரும். எது கேசவனைச் சாரும். சர்வ தேவ நமஸ்காரம் - அனைத்து தேவதைகளுக்கும் செய்யப்படும் பிரார்த்தனை கேசவனைப் போய்ச் சேரும்.
அது எப்படி சுவாமி கேசவனைப் போய் சேரும் என்றால், முதல் இரு வரிகளின் பொருளைப் பார்க்க வேண்டும். அவ்வரிகளின் பொருள், வானத்திலிருந்து பெய்யும் மழையானது, பூமியில் வீழ்ந்தாலும் இறுதியில் கடலில்தான் போய் கலக்கிறது. அதுபோல, சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பரிகச்சதி.

சிலருக்கு குல தெய்வம் எது என்று தெரியாது. இவர்கள் தங்கள் இல்லத்திலேயே வேங்கடவானுக்கு மாவிளக்குப் போட்டால் அவர்களுக்கே தெரியாத அவர்களின் குல தெய்வத்திற்கு அந்த வேண்டுதலை அனுப்பிவிடுவார் பெருமாள். இதனை செய்ய முறை உண்டு. இரு நுனி வாழை இலையிட்டு மாவிளக்குப் போடுவது போல வெண்பொங்கலை உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதில் இரு நெய் விளக்கு ஏற்றி சிறிது நேரத்திற்குப் பிறகு படைக்க வேண்டும். விளக்கொளியை மலையேற்றிய பின் குடும்பத்தில் உள்ள அனைவரும் வெண்பொங்கலை பிரசாதமாக உட்கொள்வார்கள். இவ்வழக்கம் கிராமப்புறங்களில் இப்போதும் காணப்படுகிறது.


நன்றி - தி இந்து
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை