ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபதாவது அத்தியாயம்
(ஜ்ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் இவைகளையும், இவற்றின் அதிகாரிகளையும் நிரூபித்தல்)
உத்தவர் சொல்லுகிறார்:- தாமரைக் கண்ணனே! ஸம்ஸாரிகள், குண தோஷங்கள் என்று நினைக்கிற ஸுக, துக்கங்கள் இரண்டையும் துறக்கையே முமுக்ஷுவுக்குக் (மோட்சத்தை விரும்புபவனுக்கு) குணமாம் என்று மொழிந்தனை. இஹலோக (இந்த உலக) ஸுகங்களும், அவற்றின் ஸாதனங்களும் ப்ரத்யக்ஷமாகையால், அவற்றை ஆராய்ந்தறிந்து துறக்கலாம்: பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகங்களும், அவற்றின் ஸாதனங்களும், கேவலம் வேத சாஸ்த்ரத்தினால் அறியக் கூடியவைகளாய் இருக்கின்றன. “இதைச் செய், இதைச் செய்யாதே” என்று விதி (செய்), நிஷேத (செய்யாதே) ஸ்வரூபமான அவ்வேத சாஸ்த்ரம், ஸர்வேச்வரனான உன்னுடைய ஆஜ்ஞையேயன்றி வேறன்று. அத்தகைய வேதம் “இதைச் செய்” என்று சிலவற்றைக் குணமாகவும், “இதைச் செய்யாதே” என்று சிலவற்றை தோஷமாகவும், நிரூபித்துச் சொல்லுகிறது. மற்றும், அது ப்ராஹ்மணாதி வர்ணங்களையும், அவற்றில் அனுலோமமாகவும் (உயர்ந்த ஜாதி ஆணுக்கும் தாழ்ந்த ஜாதி பெண்ணுக்கும்), ப்ரதிலோமமாகவும் (தாழ்ந்த ஜாதி ஆணுக்கும் உயர்ந்த ஜாதி பெண்ணுக்கும்) பிறக்கிற ஸங்கர வர்ணங்களையும் (கலப்பு ஜாதிகளையும்) குறித்து, “இன்னவன் இன்ன வயதில் இன்ன தேசத்தில் இன்ன காலத்தில் இன்ன த்ரவ்யத்தைக் கொண்டு இன்ன விதியை அனுஷ்டிக்க வேண்டுமென்றும், அவ்விதிகளை அனுஷ்டிக்கிறவர்களுக்குப் பலன் ஸ்வர்க்கமே என்றும் நிஷித்தங்களைச் (விலக்கியவற்றைச்) செய்கிறவர்களுக்குப் பலன் நரகமென்றும் நிரூபித்துச் சொல்லுகிறது. “இதைச் செய்யலாகாது” என்று நிஷேதரூபமாயும் “இதைச் செய்ய வேண்டும்” என்று விதி ரூபமாயுமிருக்கிற வேதரூபமான உன் வசனம் இது குணமென்றும், இது தோஷமென்றும் பேதபுத்தியை உண்டாக்காமல் புருஷர்களுக்கு எப்படி நன்மையை அறிவிக்கவல்லதாகும்? குண தோஷ பேத புத்தியையும், ப்ரவ்ருதி (செயலில் ஈடுபடுதல்), நிவ்ருத்திகளையும் (விலகுதல்) உண்டாக்கித்தான் புருஷார்த்தத்தை அறிவிக்கும்.
ஜகதீசனே! அலௌகிகமான (இந்த உலகில் பார்க்க முடியாத) ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும், யஜ்ஞாதிகளான அவற்றின் ஸாதனங்களையும், ப்ரத்யக்ஷத்தினால் (நேரில் பார்த்து) அறிய முடியாது. பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும், மனுஷ்யர்களுக்கும் அவற்றை அறிதற்கு வேதமே சிறந்த கண்ணாயிருக்கின்றது. ஆகையால், குண தோஷ பேதஜ்ஞானம் உனது ஆஜ்ஞாரூபமான அவ்வேதத்தினால் தான் உண்டாக வேண்டுமன்றி, ஸ்வயமாக (தானாக) உண்டாகாது. இப்படியிருக்க, இப்பொழுது இது குணமென்றும், இது தோஷமென்றும், பேத புத்தியைத் துறக்கையே முமுக்ஷுவுக்குக் (மோட்சத்தை விரும்புபவனுக்கு) குணமென்று அதற்கு விபரீதமாக (எதிராக) மொழிகின்றாய். ஆகையால் இதை நிர்ணயிக்க முடியாமல், மதி மயக்கமாய் இருக்கின்றது.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மனுஷ்யர்களுக்கு நன்மையை விளைக்கும் பொருட்டு, ஜ்ஞான யோகமென்றும், கர்மயோகமென்றும், பக்தியோகமென்றும் மூன்று உபாயங்களைச் சொன்னேன். இவைகளைத் தவிர, மற்றொரு உபாயம் எங்கும் கிடையாது. (ஸமஸ்த வேதங்களும், அவற்றைத் தொடர்ந்த ஸ்ம்ருதி, இதிஹாஸ, புராணாதிகளும் இவற்றையே நிரூபிக்கின்றன.) இவற்றுள் “கர்ம பலன்களெல்லாம் துக்க ரூபமாயிருக்கின்றன” என்று அவற்றில் வெறுப்புற்று, அவற்றிற்கு ஸாதனமான கர்மங்களைத் துறந்தவர்களுக்கு, ஜ்ஞான யோகத்தில் அதிகாரம். அவற்றில் மனவெறுப்பின்றி, அவற்றையே விரும்பி, அந்தக் கர்மங்களை அனுஷ்டிப்பதில் உத்ஸாஹம் உடையவர்களுக்கு, கர்ம யோகத்தில் அதிகாரம். எவன் தெய்வாதீனமாய் என்னுடைய கதையைக் கேட்பது முதலியவற்றில் ப்ரீதியுண்டாகப் பெற்று, கர்ம பலன்களில் அவ்வளவாக வெறுப்புறாமல் போயினும், தோஷம் தோன்றுகையால், அதிக ஆஸக்தி (பற்று) இல்லாது இருக்கிறானோ, அவன் பக்தி யோகத்தை அனுஷ்டிக்கத் தகுந்தவன். அவனுக்கு அது மோக்ஷ ஸித்தியைக் கொடுக்கும்.
(கர்ம பலன்களில் நன்கு வெறுப்புண்டாகாமல், அவற்றில் வாஸனை தொடர்ந்து கொண்டே இருக்குமாயின், கர்மங்களையே செய்ய முயற்சி கொள்வானன்றி, உன் கதையைக் கேட்பது முதலியவற்றில் இறங்க மாட்டானே என்றால், சொல்லுகிறேன்; கேள்).
எது வரையில் நன்றாக வெறுப்புண்டாகப் பெறாதிருக்கிறானோ, எதுவரையில் என் கதையைக் கேட்பது முதலியவற்றில் ச்ரத்தை நன்றாக விளையாதிருக்கின்றதோ அதுவரையில், கர்மங்களை அவற்றின் பலன்களை விரும்பாமல் அனுஷ்டித்துக் கொண்டு வரவேண்டும்.
உத்தவரே! இவ்வாறு ஸந்தியாவந்தனம் முதலிய ஆசாரங்களில் நிலை நின்று, பஞ்ச மஹாயஜ்ஞங்களால் {(ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்} என்னை ஆராதித்துக் கொண்டு, அவற்றின் பலன்களை விரும்பாதிருப்பானாயின், ஸ்வர்க்கத்தையாவது, நரகத்தையாவது அடைய மாட்டான். இவற்றைத் தவிர பலாபிஸந்திக்கு (பலனில் விருப்பத்திற்கு) இடமான வேறு கர்மங்களைச் செய்யலாகாது. (ஸ்வர்க்க நரகங்களை அடையானாயின், பின்னை எதை அடைவானென்றால்) இந்த தேஹத்துடன் இருக்கும் வரையில், நிஷித்த (விலக்கப்பட்ட) கர்மங்களினின்றும் மீண்டு, தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களில் நிலை நின்று, பரிசுத்தனாகி, பலாபிஸந்தியாகிற (பலனில் விருப்பமாகிற) அசுத்திக்கு இடமல்லாத நல்ல ஞான யோகத்தைப் பெறுவான்; அல்லது, ஏதோவொரு பாக்ய விசேஷத்தினால், என் விஷயமான பக்தி யோகத்தையே பெற்றாலும் பெறுவான்.
ஸ்வர்க்க லோகத்திலிருப்பவர்களும், நரகத்திலிருப்பவர்களும், “இது ஜ்ஞான யோக பக்தியோகங்களால் மோக்ஷத்தை நிறைவேற்றிக் கொடுக்கும்” என்று இந்த மனுஷ்ய தேஹத்தை விரும்புகிறார்கள். அந்த ஸ்வர்க்க சரீர, நரக சரீரங்கள் இரண்டும் அந்த மோக்ஷ புருஷார்த்தத்தை (பலனை) நிறைவேற்றிக்கொடுக்க வல்லவை ஆகமாட்டாது. (சாஸ்த்ரத்தில் மனுஷ்யர்களுக்கே அதிகாரம் உள்ளதாகையால், சாஸ்த்ரத்தில் விதித்தவைகளே புருஷார்த்த (புருஷனால் விரும்பி அடையப்பட வேண்டியவற்றிற்கு) ஸாதனங்களாகையால், அவற்றை அனுஷ்டிப்பதற்குரிய மனுஷ்ய சரீரமே புருஷார்த்தங்களை நிறைவேற்றிக் கொடுக்க வல்லதாம்).
திறமையுள்ளவன், ஸ்வர்க்க அனுபவத்தையாவது, நரக அனுபவத்தையாவது விரும்பலாகாது. நரகானுபவத்தை எவ்வாறு விரும்பமாட்டானோ, அவ்வாறே ஸ்வர்க்கானுபவத்தையும் விரும்பலாகாது. மீளவும் இஹ (இந்த), பர (வேறு) லோக ஸுகங்களுக்கு ஸாதனமான இந்த மனுஷ்ய தேஹத்தையும் விரும்பலாகாது. மீளவும் தேஹத்தை (உடலை) அபேக்ஷிக்கிறது (விரும்புவது) ஸுக அனுபவத்திற்கேயன்றி வேறன்று. அவ்வாறு தேஹ ஸுகத்தை அபேக்ஷிப்பானாயின் (விரும்புவானாயின்), மதி மயங்கி, கடைசியில் ஸ்தாவர (மரம், செடி) ஜன்மத்தைப் பெறுவான். ஆகையால், தேவாதிகளும் விரும்பும்படி மோக்ஷ ஸாதனமான மனுஷ்ய தேஹத்தை (மனித உடலை) ஸ்வர்க்காதிகளுக்கு உபயோகப்படுத்தி வீண் செய்யலாகாது.
எவன் இந்த மனுஷ்ய சரீரம் மரணம் அடைவதற்கு முன்னமே (திடமாயிருக்கும் பொழுதே) மரணம் அடையும் தன்மையதாயினும் இம்மனுஷ்ய சரீரம் சிறந்த புருஷார்த்தமான மோக்ஷத்தை நிறைவேற்றிக் கொடுப்பதென்று தெரிந்து கொண்டு, இஹ (இந்த), பர (வேறு) லோக ஸுகங்களில் கால் தாழ்கையாகிற மனவூக்கம் தவறுதலின்றி ஊக்கமுற்றிருக்கிறானோ, அவ்வறிஞன் மோக்ஷத்திற்கு உரியவனாவான்.
ஒரு பறவை, தான் கூடு கட்டிக் கொண்டிருக்கிற மரத்தை யமனைப்போல் மன இரக்கமில்லாத புருஷர்கள் வெட்டிப்போடுவதைக் கண்டு, தான் வாஸம் செய்யுமிடமாகிய கூடைத் துறந்து ஓடிப்போய் க்ஷேமப்படுவது (நன்மை அடைவது) போல், ஜீவன் ஹ்ருதயத்தில் தான் வாஸம் செய்து கொண்டிருக்கிற தேஹம், தின, பக்ஷ, மாஸாதி கால பரிணாமத்தினால் ஆயுள் காலம் முடிந்து, மரணம் அடைவதற்கு முன், தேஹ ஸுகங்களில் (உடல் இன்பங்களில்) கால் தாழாமல் (ஈடுபடாமல்), அத்தேஹத்தில் தன்னுடைய வாஸஸ்தானமாகிய ஹ்ருதயத்தினின்று தான் மீண்டு போவதற்குரிய பிரயத்னங்களைச் (முயற்சிகளைச்) செய்து, மோக்ஷமாகிற க்ஷேமத்தை அடைய வேண்டும்.
பகல், இரவு முதலிய கால அவயவங்களால் ஆயுள் க்ஷீணிப்பதை (குறைவதை) அறிந்து, பயந்து நடுங்கி, இஹ (இந்த), பர (வேறு) லோக ஸுகங்களில் மனப்பற்றைத் துறந்து, சப்தாதி விஷய ஸுகங்களைப் பெறுதற்குரிய வியாபாரங்களை எல்லாம் ஒழித்து, ப்ரக்ருதி (அசேதனமான மூலப்ரக்ருதி), புருஷர்களைக் (ஜீவாத்மாக்களைக்) காட்டிலும் விலக்ஷணனான (வேறான) என்னை அறிந்து, உபாஸித்து வருவானாயின், ப்ரக்ருதி பந்தத்தினின்று (உலக கட்டிலிருந்து) விடுபடுவான்.
மனுஷ்ய தேஹம் (மனித உடல்) ஸமஸ்த புருஷார்த்தங்களையும் (பலன்களையும்) பெறுதற்கு முக்ய காரணமாயிருப்பது. எவ்வளவு முயற்சி செய்யினும், இதைக் கிடைப்பது அரிது. இது ஸம்ஸார ஸாகரத்தைக் (உலக வாழ்வான கடலைக்) கடப்பதற்கு ஓடம் போன்றிருக்கும். இந்த ஓடத்திற்கு குருவே கர்ணதாரன் (படகோட்டி). நினைத்த பொழுது உடனிருந்து நடத்தும் தன்மையனான நானே, இதற்கு அனுகூலமான (ஏற்ற) காற்றாயிருந்து இதைத் தள்ளுவேன். கிடைக்க அரிதும், எல்லாவற்றையும் ஸாதித்துக் கொடுக்க வல்லதுமான மனுஷ்ய தேஹமாகிற இவ்வோடத்தை பாக்ய வசத்தினால் ஸுலபமாகப் பெற்றும், ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தை எவன் தாண்டாதிருக்கிறானோ, அவன் ஆத்மஹத்யை (தற்கொலை) செய்தவன் ஆவான்.
எப்பொழுது காம்ய (பலனில் விருப்பப்பட்டுச் செய்யும்) கர்மங்களெல்லாம் துக்கத்திற்கு இடமாயிருக்கின்றன என்று அவற்றில் வெறுப்புற்று, அவற்றின் பலன்களிலும் விருப்பம் அறப் பெறுகிறானோ, அப்பொழுதே அவன் இந்திரியங்களை எல்லாம் அடக்கி, அப்யாஸத்தினால் (பயிற்சியினால்) தன் மனத்தை வேறெங்கும் செல்லாதபடி என்னிடத்திலேயே நிலை நிறுத்த வேண்டும். மனத்தை என்னிடத்தில் நிலை நிறுத்தப் பார்க்கிலும், அது விஷயாந்தரங்களில் (மற்ற விஷயங்களில்) திரியத் தொடங்கி, சீக்ரத்தில் நிலைப்படாதாயின், அப்பொழுது சோம்பலின்றி ஊக்கத்துடன் அதைத் தொடர்ந்தாற் போலிருந்து, உபாயமாக (அதையே வழியாகக் கொண்டு) ஸ்வாதீன (தன் வசப்) படுத்திக் கொள்ள வேண்டும். மன அடக்கத்தை விடலாகாது. அதை அடக்கப் பார்க்கிலும், அது உட்படுகிறதில்லையே என்று வெறுமனே இருக்கலாகாது.
பின்னையோ என்றால், ப்ராணன்களையும், இந்திரியங்களையும் வென்று, ஸாத்விக ஆஹாரம் முதலியவற்றால் ஸத்வ குணம் தலையெடுக்கும்படி செய்து, அதனால் புத்தி பரிசுத்தமாகப் பெற்று, மனத்தை அடக்கி, மெல்ல மெல்ல ஸ்வாதீனப்படுத்த வேண்டும். அடக்க முடியாத குதிரையைத் தன் மன அபிப்ராயத்தின்படி நடத்த விரும்புகிறவன், அது போன வழியே விடுவது போல் விட்டு, மெல்ல மெல்ல ஸ்வாதீன (தன் வசப்) படுத்துவது போல், மனத்தையும் அது போகிற வழியே விடுவது போல் விட்டு, மெல்ல மெல்ல ஸ்வாதீன (தன் வசப்) படுத்த வேண்டும்.
இவ்வாறு மனத்தை ஸ்வாதீன (தன் வசப்) படுத்துகையே சிறந்த யோகமென்று பெரியோர்கள் நினைக்கிறார்கள். தத்வ விவேகத்தினால் (அசேதனமான மூலப்ரக்ருதி மற்றும் அதன் மாறுபாடுகள், ஜீவாத்மாக்கள், ஈச்வரன் என்கிற மூன்று தத்வங்களின் உண்மையை அறிவதால்) மஹத்து முதல் ப்ருதிவி வரையிலுமுள்ள ஸமஸ்த பதார்த்தங்களின் ஸ்ருஷ்டி (படைப்பு) க்ரமத்தை (வரிசையை) அனுலோமமாகவும் (முதலில் இருந்து கடைசி வரையிலும் ) ப்ரளய க்ரமத்தை ப்ரதிலோமமாகவும் (கடைசியிலிருந்து முதல் வரையிலும் ) ஆராய்ந்தறிந்து மனத் தெளிவு உண்டாகும் வரையிலும், இந்த ஸ்ருஷ்டி (படைப்பு), ப்ரளய (அழிவு) க்ரமங்களை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு தத்வ விசாரத்தினால் சிந்திக்கப்பட்ட ஸ்ருஷ்டி (படைப்பு), ப்ரளயாதிகளை (அழிவு) அடிக்கடி சிந்திப்பானாயின், ஸம்ஸாரத்தில் வெறுப்பும், விரக்தியும் உண்டாகும். மனத்தை அடக்க வேண்டிய வழியையும், தத்வ விசாரத்தையும் அறிந்து, ஸம்ஸாரத்தில் வெறுப்பும், விரக்தியும் உண்டாகப் பெறுவானாயின், அவனுடைய மனம் சப்தாதி விஷயங்களில் கால் தாழ்கையாகிற துஷ்ட (கெட்ட) ஸ்வபாவத்தைத் துறந்து, ஸ்வாதீனப்படும் (தன் வசப்படும்).
யம, நியமாதி ரூபமான யோக மார்க்கங்களாலும், தத்வ விசாரரூபமான வித்யையினாலும் மனத்தை ஸ்வாதீனப்படுத்த வேண்டும். அல்லது, என்னை அர்ச்சிப்பது, த்யானிப்பது முதலிய வழியினாலாவது ஸ்வாதீனப்படுத்த வேண்டும். இந்த உபாயங்களால் மனத்தை வசப்படுத்திக் கொண்டு என்னை த்யானிக்க வேண்டும். இவை தவிர வேறு என்ன உபாயங்கள் செய்யினும், மனத்தைச் சப்தாதி விஷயங்களினின்றும் என்னிடத்தில் நிலை நிறுத்த முடியாது.
யோக அப்யாஸத்தில் (பயிற்சியில்) இழிந்தவன், மனவூக்கம் தவறிச் சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப்பட்ட (விலக்கப்பட்ட) கார்யத்தை எதையேனும் செய்வானாயின், அந்தப் பாபத்தை யோகத்தினாலேயே போக்கடித்துக் கொள்ளலாம். அவன் அதற்காக வேறு ப்ராயச்சித்தாதிகள் (கழுவாய்) செய்ய வேண்டியதில்லை. எவனெவனுக்கு எந்தெந்த தர்மத்தில் அதிகாரம் ஏற்பட்டிருக்கிறதோ, அவனவன் தந்தனக்கு ஏற்பட்ட அந்தந்த அதிகாரத்தில் நிலை நின்றிருக்கை அவனவனுக்குக் குணமாகும். அதினின்று மாறுகை தோஷமாகும். (சூத்ரனுக்கு, ப்ராஹ்மண தர்மம் குணமாகாது. ஸம்ஸாரத்தில் விரக்தி உண்டாகப் பெறாதவனுக்கு, ஸந்நியாஸி தர்மம் குணமாகாது. விரக்தி உண்டாகப் பெற்றவனுக்கு, அதுவே குணமாம்.) குண தோஷங்களைப் பற்றிய நிர்ணயம் இதுவே என்று கண்டு கொள்வாயாக.
மோக்ஷத்தில் விருப்பமுடையவன், பலாபிஸத்தியினால் (பலனில் விருப்பத்தினால்) அசுத்தமான காம்ய கர்மங்களையும் (பலனைக்குறித்துச் செய்யும் செயல்களையும்), அசுத்திக்கிடமான (தூய்மை அற்ற) பற்றுக்களையும், துறக்க வேண்டும் என்று தெரிவிக்கும் பொருட்டு, உலகத்தவர் குணம் (நல்லது) என்றும், தோஷம் (கெட்டது) என்றும் நினைக்கிற ஸுக, துக்கங்களை அவ்வாறு நினைக்கை முமுக்ஷுவுக்கு (மோட்சத்தை விரும்புபவனுக்கு) தோஷமென்றும், அவையிரண்டும் மோக்ஷ விரோதியாகையால், தோஷமே என்று அவற்றைத் துறக்கை, அவனுக்குக் குணமென்றும் நியமித்துச் சொன்னேன்.
குண தோஷங்களை நினைக்கை தோஷமென்றும், அவையிரண்டையும் துறக்கை குணமென்றும் சொன்னது முமுக்ஷுவை (மோட்சத்தை விரும்புபவனைப்) பற்றியே அன்றிப் புபுக்ஷவைப்பற்றி (சப்தாதி விஷய போகங்களில் விருப்பமுடையவனைப் பற்றி) அன்று. ஆகையால், நான் சொன்னதற்கு விரோதமில்லை என்று கண்டு கொள்வாயாக.
ஆனது பற்றி மோக்ஷத்தில் விருப்பம் உடையவன் காம்ய கர்மங்களையும் (பலனில் விருப்பத்துடன் செய்யும் கர்மங்களையும்), அவற்றின் பலன்களையும், குணமென்றும், துக்கங்களைத் தோஷமென்றும் நினைத்து, அவற்றை நிவ்ருத்தி செய்யும் (விலக்கும்) உபாயங்களில் ப்ரவர்த்திக்கலாகாது. கீழ்ச் சொன்ன அந்தரங்க (உள் இந்த்ரியமான மனதைப்பற்றிய) ஸாதனங்களால் (வழிமுறைகளால்) என்னுடைய கதைகளில் ச்ரத்தை உண்டாகப் பெற்றவன், ஸமஸ்தமான காம்ய கர்மங்களிலும் (பலனில் விருப்பத்துடன் செய்யும் கர்மங்களிலும்) வெறுப்புற்று, கர்ம பலன்கள் துக்க ரூபங்கள் என்று நன்றாக அறிவானாயினும், அவற்றைத் துறக்க வல்லனாக மாட்டான்.
அனந்தரம் பக்தியாலேயே எல்லாம் நிறைவேறும் என்று திடமான நிச்சயமுடையவனாகி, அந்த நிச்சயத்தில் ச்ரத்தை உண்டாகப் பெற்று, ப்ரீதியுடன் என்னைப் பணிய வேண்டும். அந்தக் கர்ம பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பினும், அவை மேன்மேலும் துக்கத்தையே பலமாகவுடையவை என்று அறிந்தவனாகையால், அவற்றை நிந்தித்துக்கொண்டே, ப்ரீதியுடன் என்னைப் பணியவேண்டும். இவ்வாறு அங்க ஸாதனங்கள் (துணையான வழிமுறைகள்) எல்லாம் அமைந்த பக்தி யோகத்தினால் எப்பொழுதும் என்னைப் பணிபவனாகி, என் ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திவ்ய மங்கள விக்ரஹம்), குண, விபூதி (ஆளுமை, சொத்து) – இவைகளையே மனனம் செய்து கொண்டிருக்கும் தன்மையனுடைய ஹ்ருதயத்தில், நான் நிலை நின்றிருக்கையால், அவன் ஹ்ருதயத்திலுள்ள விஷய அபிலாஷைகள் (ஆசைகள்) எல்லாம் தானே நசித்துப்போகும். (அவன் நிச்சயித்திருந்தபடியே எல்லாம் நிறைவேறும்).
அவ்வாறு பக்தி மேன்மேலும் வளர்ந்து வரப்பெற்று, ஹ்ருதயத்தில் இருக்கின்றவனும், ஸர்வாந்தராத்மாவுமாகிய (எல்லோரையும் உள் இருந்து நியமிப்பவனுமாகிய) என்னை அந்த பக்தியின் மிகுதியால் ப்ரத்யக்ஷமாய் (நேராகக்) காண்பது போல் ஸாக்ஷாத்கரிப்பானாயின் (பார்ப்பானாயின்), அவனுடைய ஹ்ருதயத்திலுள்ள தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்), ஸ்வதந்த்ராத்மாபிமானம் (நாம் பகவானுக்கு உட்படாது தன்னிச்சையாக செயல்பட வல்லவர்கள் என்ற தவறான எண்ணம்) முதலிய அவிழ்க்க முடியாத முடுச்சுகளெல்லாம் தானே அவிழ்ந்து போகின்றன.
“நான் தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டவனா? அல்லது தேஹமே தானா? நான் பரதந்தரனா (பகவானுக்கு உட்பட்டவனா)? அல்லது ஸ்வதந்த்ரனா?” என்னும் இவை முதலிய ஸம்சயங்கள் (ஸந்தேஹங்கள்) எல்லாம் தானே அறுந்து, போகும். என்னைப் பெறுதற்கு ப்ரதிபந்தகங்களான (தடையான) இவனுடைய புண்ய, பாப கர்மங்கள் எல்லாம் நசித்துப் போகும்.
இவ்வாறு பக்தியோகம் ஸமஸ்த ஸித்திகளையும் விளைக்குமாகையால், என்னிடத்தில் பக்தி உண்டாகப்பெற்றவனும் நிரதிசயப்ரீதி விஷயனான (நிரதிசய ப்ரீதியாவது இதைக் காட்டிலும் வேறு உயர்வு இல்லை என்னும்படியான அன்பு, ப்ரீதி) என்னிடத்தில் நிலைநின்ற மனமுடையவனாகிய யோகிக்கு, ப்ரக்ருதியை (அசேதனத்தைக்) காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மாவை உபாஸிக்கையாகிற ஜ்ஞானமும், அதற்கு வேண்டிய வைராக்யமும், நமக்கு இவை வேண்டுமே என்று பெரும்பாலும் ஆசைப் படத் தக்கவைகளாய் இருக்கமாட்டாது. (தானே ஸித்தமாயிருப்பவைகளை ஏன் ஆசைப் படவேண்டும்?
இனி, அவன் கர்ம யோகாதிகளை விரும்ப மாட்டானென்று சொல்ல வேண்டுமோ? அவற்றால் அவனுக்கு ஆக வேண்டிய ப்ரயோஜனம் என்ன இருக்கிறது? அவனுக்கு எல்லாம் பக்தி யோகத்தினாலேயே நிறைவேறினவாகையால், அவன் மற்றொன்றையும் விரும்ப வேண்டிய அவச்யமில்லை.)
யஜ்ஞாதி (யாகம் முதலிய) ரூபமான கர்மங்களாலாவது, சாஸ்த்ர விதியின்படி சரீர சோஷணம் (உடலை வற்றச் செய்தல்) செய்கையாகிற தவத்தினாலாவது, ப்ரக்ருதியை (அசேதனத்தைக்) காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மாவை உபாஸிக்கையாகிற ஜ்ஞானத்தினாலாவது, அதற்கு வேண்டிய வைராக்யத்தினாலாவது, யோக ஸ்ம்ருதியில் சொன்ன யோகத்தினாலாவது, தானத்தினாலாவது, கிணறு, குளம் வெட்டுவிப்பது முதலிய தர்மத்தினாலாவது, தீர்த்த யாத்ரை, வ்ரதம் முதலிய மற்ற நன்மைகளாலாவது, ஸாதிக்கக்கூடிய ஸ்வர்க்காதிகள், கைவல்யம் (பகவானோடு ஒரு தொடர்பும் இல்லாததான ஜீவாத்மாவை அனுபவிப்பது) என்னும் மோக்ஷம், பகவானை அடைதல் என்னும் மோக்ஷம் ஆகிய ப்ரயோஜனம் எதுவெதுவுண்டோ, அது எல்லாம் என் பக்தனுக்கு அந்தப் பக்தி யோகத்தினாலேயே விரைவில் ஸித்திக்கும். அவன் என்னுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திவ்ய மங்கள விக்ரஹம்), குண, விபூதி (ஆளுமை, சொத்து) அனுபவிக்கையாகிற மஹாநந்தத்தில் மூழ்கியிருப்பவனாகையால், பரமபதத்தில் சேர்ந்து, என்னை அனுபவிக்கையாகிற மோக்ஷத்தையும் கூட விரும்ப மாட்டான்.
இனி ஸ்வர்க்காதி ஸுகங்களையாவது, கைவல்யம் (பகவானோடு ஒரு தொடர்பும் இல்லாததான ஜீவாத்மாவை அனுபவிப்பது) என்னும் மோக்ஷத்தையாவது விரும்பமாட்டான் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? ஒருகால் அவன் விரும்புவானாயினும், அவனுக்குக் கிடைக்கக்கூடாதது எதுவுமே இல்லை. என்னுடைய பக்தர்கள், ஸமஸ்த பாபங்களும் தொலைந்து, மீளவும் இந்த ஸம்ஸாரத்திற்குத் திரும்பிவராமல் பரமபதத்திலேயே இருந்து, என்னை அனுபவிக்கையாகிற மோக்ஷத்தை நான் வேண்டிக் கொடுப்பேனாயினும் விரும்பமாட்டார்கள்.
அவர்கள் என்னை அனுபவிக்கையாகிற ப்ரயோஜனத்திலேயே நிலை நின்றிருப்பவர்; சப்தாதி விஷயங்களில் (உலக இன்பங்களில்) கலங்காத மன உறுதியுடையவர். ஆகையால், என்னை அனுபவிக்கையாகிற ப்ரயோஜனம் இவ்விடத்திலேயே நிராபாதமாக (தடையின்றி) கைகூடுகின்றமையால், மோக்ஷத்தையும் கூட விரும்புகிறதில்லை இனி மற்ற புருஷார்த்தங்களைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? ஆனால், அவர்களுக்கு மோக்ஷம் உண்டாகாமலே போய்விடுமோ என்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம்.
மன உறுதியுடன் எதையும் விரும்பாதிருக்கையில், குறைவற்றிருக்கையே மோக்ஷம் பெறுதற்குச் சிறந்த ஸாதனமாம். (அதாவது - மற்றொன்றையும் விரும்பாமல், என்னிடத்தில் நிலைநின்ற பக்தி உண்டாகப் பெறுகையே, மோக்ஷத்திற்கு ஸாதனமாயிருப்பது. ஆகையால் அத்தகைய பக்தியோகம் உடையவர்கள் விரும்பாமற் போயினும், மோக்ஷம் அவர்களுடையதே அன்றி வேறில்லை) ஆனது பற்றி இஹ (இந்த உலக), பரலோக (வேறு உலக) பலன்கள் எல்லாவற்றிலும் விருப்பமின்றி மோக்ஷத்தையும் கூட விரும்பாதிருப்பவனுக்கே என்னிடத்தில் எவ்விதத்திலும் தடையின்றி நிலைநின்ற பக்தி உண்டாகும். ஒரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமல் என்னிடத்தில் பக்தி செய்ய நிர்விக்னமானவர்களும் (தடையற்றவர்களும்), குணமென்றும், தோஷமென்றும், உலகத்தவர் வழங்குகிற ஸுக, துக்கங்களுக்குச் சிறிதும் இடம் கொடாத மனமுடையவர்களும், இது குணமென்றும், இது தோஷமென்றும் நினைக்கும் நிலைமையைக் கடந்திருக்கையாகிற தர்மத்தை அனுஷ்டிப்பதில் நிலை நின்றிருப்பவர்களுமான ஸாதுக்களுக்கு, குண, தோஷ, ஜ்ஞான மாத்ரத்தினால் உண்டாகக்கூடிய ராக (விருப்பு), த்வேஷாதிகள் (வெறுப்புகள்) சிறிதும் உண்டாக மாட்டாது. ராக, த்வேஷாதிகள் பக்தியோகத்திற்கு விக்னம் (இடையூறு) செய்பவை. அவை அவர்களுக்குச் சிறிதேனும் உண்டாகிறதில்லை. இவ்வாறு நான் உபதேசித்த இம்மோக்ஷ தர்மங்களை எவர்கள் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் பரப்ரஹ்மமென்று கூறப்படுகிற என்னுடைய ஸ்தானத்தை அனாயாஸமாக (எளிதாக) அடைகின்றார்கள்.
இருபதாவது அத்தியாயம் முற்றிற்று.