ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்
(பக்தியோகத்தை அனுஷ்டிக்க முடியாதவனுக்கு, ந்யாஸமென்றும், ப்ரபத்தியென்றும் வழங்கிவரும் உபாயத்தை உபதேசிக்கை)
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- சாஸ்த்ர அப்யாஸத்தினால் (கற்றதால்) உண்டாகும் ஜ்ஞானமாவது, கேவலம் பெரியோர்களைப் பணிந்து அவர்களுடைய உபதேசத்தினால் உண்டாகும் ஜ்ஞானமாவது அமைந்தவனும், சாஸ்த்ரங்களுக்கு விருத்தம் (எதிரிடையானது) அல்லாத தர்க்கங்களை அறிந்தவனும், க்ருஷி (விவசாயம்) முதலிய லௌகிக (உலகியல்) கர்மங்களால் (செயல்களால்) விளையும் பலன்களைப் போல் வைதிகமான யாகாதி கர்மங்களால் விளையும் ஸ்வர்க்காதி பலன்களும் அநித்யங்களே (நிலையற்றவையே) என்னும் ஊஹம் (அனுமானம்) உடையவனும், மனவூக்கம் உற்றவனுமாகிய புருஷன், பகவானுக்குச் சேஷமாய் (அடிமையாய்) இருக்கையையே முக்ய ரஸமாகவுடைய ஆத்மாவுக்கு இச்சரீரம் பகவானுடைய மாயையினால் விளைந்ததென்று தெரிந்து கொண்டு, ஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மா, ஸர்வ சேஷியும் (எல்லோருக்கும் ஸ்வாமியும்), ஸர்வ அந்தராத்மாவும் (எல்லாவற்றையும் உள் இருந்து நியமிப்பவனும்) உபாய உபேய பூதனும் (அடையப்பட வேண்டியவனும், அடைவதற்கு வழியும்), ஸத்ய ஸங்கல்பனும் (நினைத்ததை முடிக்க வல்லவனும்), பரமகாருணிகனும் (மிகுந்த கருணை உடையவனும்), ஒரு விசேஷங்களையும் எதிர்பாராமல் ஸர்வலோக ஸம்ரக்ஷகனுமாகிய (காப்பவனுமாகிய) என்னிடத்தில் அதீனமாய் (உட்பட்டு) இருப்பதென்று அனுஸந்திக்க வேண்டும்.
பகவானுக்குக் சேஷமாய் (அடிமையாய்) இருக்கையையே முக்ய ரஸமாகவுடையவனும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தினின்று (உலகியல் தொடர்பிலிருந்து) விடுபட்ட ஆத்மாவினுடைய அனுபவத்தில் கால் தாழாமல் பகவத் ப்ராப்தியை விரும்புகின்றவனுமாகிய ஜ்ஞானி, தனக்குப் பெறவேண்டிய ப்ரயோஜனமாக என்னையே விரும்புவானன்றி, மற்றொன்றையும் விரும்ப மாட்டான். அவன் என்னைப் பெறுதற்கு என்னையே உபாயமாகப் பற்றியிருப்பவனன்றி மற்றொன்றை உபாயமாக (சாதனமாக, வழியாக) நினைக்கமாட்டான். அவனுக்கு என்னையொழிய ஸ்வர்க்கமாவது, மோக்ஷமாவது, மற்ற எந்தப் பொருளும் ப்ரியமன்று.
சரீரம் (உடல்) பகவானுடைய மாயையினால் விளைந்தது என்றும், ப்ரக்ருதியைக் (அசேதனத்தைக்) காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மா பகவானுக்குச் சேஷமாய் (அடிமையாய்) இருக்கையையே முக்ய ரஸமாகவுடையவனென்றும், பகவானே உபாயமும் (அடைவதற்கு வழியும்), உபேயமும் (அடையப்பட வேண்டியவனும்), என்றும் இவ்வறிவுகள் அமைந்தவர்களே ப்ரக்ருதி (அசேதனம்) புருஷர்களை (ஜீவாத்மாவைக்) காட்டிலும் விலக்ஷணமாய் (வேறாய்) இருப்பதும், எல்லாவற்றிலும் மேன்மையுற்றிருப்பதுமாகிய என் ஸ்வரூபத்தை அறிகிறார்கள்.
ஜ்ஞானி, எனக்கு மிகவும் ப்ரியமானவன். இந்த ஜ்ஞானி என்னை ஒழிய ஆத்ம தாரணம் (உயிர் தரித்து இருத்தல்) ஸம்பவிக்காதென்னும் ஜ்ஞானத்தினால் என்னைத் தரிப்பிக்கிறான் (உயிர்ப்பிக்கிறான்). (நான் தரித்திருப்பது அவனாலேயே. ஏனென்றால், அவன் என்னை ஒழியத் தனக்குத் தாரணம் (உயிர் தரித்து இருத்தல்) ஸம்பவிக்காதென்று என்னையே சிறந்த ப்ரயோஜனமாகப் (பலனாகப்) பற்றியிருக்கிறான். என்னை எவர்கள் எப்படி அடைகிறார்களோ, அவர்களை நான் அப்படியே அடையும் தன்மை உடையவனாகையால், எனக்கும் அவனை ஒழிய ஆத்ம தாரணம் (உயிர் தரித்து இருத்தல்) ஸம்பவிக்கிறது இல்லை).
(“சரீரம் ப்ரக்ருதியின் பரிணாமம் (மாறுபாடு); அநித்யம் (நிலையற்றது). இதை ஆத்மாவென்று நினைப்பது ப்ரமமே (மனக்கலக்கமே). ஆகையால் இதன் போஷணத்திற்காக (வளர்ப்பதற்காக) நாம் வருந்துவது அஜ்ஞானமே (அறிவின்மையே). இது பகவானுடைய ஸங்கல்பத்தினால் ஏற்பட்டது” என்னும் ஜ்ஞானத்தை முன்னிட்டுக் கொண்டே, பகவானிடத்தில் ஆத்ம ஸமர்ப்பணம் (சரணாகதி) செய்யவேண்டும்.) ஏனென்றால், கீழ்ச் சொன்ன ஜ்ஞான லேசத்தினால் (சிறு அறிவினால்) உண்டாகும் சுத்தியை (தூய்மையை), தவம், புண்ய தீர்த்தம், ஜபம், தானம் இவைகளாவது, பரிசுத்தங்களான சௌசம் (தூய்மை), ஆசமனம் முதலிய மற்றவைகளாவது விளைக்க வல்லவையாக மாட்டாது.
உத்தவரே! ஆகையால், அத்தகைய ஜ்ஞானத்தை முன்னிட்டுக் கொண்டு, அந்தராத்மாவான என்னையே ப்ராப்யனாகவும் (அடையப்பட வேண்டியவனாயும்), ப்ராபகனாகவும் (அவனை அடைவதற்கு வழியாகவும்) அறிந்து, சரீரம் (உடல்), ப்ரக்ருதி பரிணாமம் (அசேதனமான மூலப்ரக்ருதியின் மாறுபாடு) என்றும், பகவானுடைய ஸங்கல்பத்தினால் விளைந்ததென்றும், ஆத்மா ப்ரக்ருதியை விட விலக்ஷணன் (வேறானவன்) என்றும், பகவானுக்குச் சேஷமாய் (அடிமையாய்) இருக்கையையே முக்ய ரஸமாகவுடையவனென்றும் அறிகையாகிற ஜ்ஞானமும், பகவானே உபாயமும் (அடைவதற்கு வழியும்), உபேயமும் (அடையப்பட வேண்டியவனும்) என்னும் அத்யவஸாயமாகிற (உறுதி) விஜ்ஞானமும் (சிறந்த அறிவும்) அமைந்து, என்னிடத்தில் பக்தியினால் மனம் தெளியப் பெற்று, என்னைப் பணிவீராக.
பல முனிவர்கள் இத்தகைய ஜ்ஞான விஜ்ஞானங்களாகிற யஜ்ஞத்தினால் (அறிவாகிற யாகத்தினால்), ஜீவாத்மாவுக்கு அந்தராத்மாவாயிருப்பவனும், ஸர்வ யஜ்ஞ (யாக) நிர்வாஹகனுமாகிய (நியமிப்பவனுமான) என்னை ஆராதித்து, என்னை அனுபவிக்கையாகிற சிறந்த ஸித்தியைப் பெற்றார்கள். (முக்தியை அடைந்தார்கள்).
உத்தவரே! ப்ரக்ருதியின் பரிணாமமான சரீரத்திற்குள் (உடலுள்) இருக்கிற ஸம்ஸாரியாகிற உமக்கு ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ப்ரளயங்கள் (அழிவு) என்னும் இவை உண்டாகின்றனவே. இவை வந்தேறியே (வெளியிலிருந்து வந்தவையே) அன்றி இயற்கையில் ஏற்பட்டவையன்று. ஏனென்றால், சரீர ஸம்பந்தத்திற்கு (உடல் தொடர்புக்கு) முன் காலத்திலும், சரீர ஸம்பந்தம் கழிந்த பின்பும், அவை இல்லையல்லவா? மற்றும், இந்த ஜன்மாதிகள் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ப்ரளயங்கள்) இந்தச் சரீரத்திற்கே அன்றி உமக்குக் கிடையாது. சரீர ஸம்பந்தம் (உடல் தொடர்பு) உண்டாவதற்கு முன்னமும், அது கழிந்ததற்குப் பின்னும், யாதொரு ஆத்ம ஸ்வரூபம் (ஜீவாத்மா) இருக்கின்றதோ, அத்தகைய ஆத்ம ஸ்வரூபம் இடையிலும் இருக்கவே இருக்கின்றது. அதற்கு வ்ருத்தி (வளர்ச்சி) க்ஷயாதிகள் (தளர்ச்சி) கிடையாது. தேஹம், அசேதனமான ப்ரக்ருதியின் பரிணாமம் (மாறுபாடு); ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி விகாரங்களுக்கு இடமாயிருக்கும்; அநித்யம் (நிலையற்றவை). ஆத்மாவோ என்றால், இவையொன்றும் இன்றி நித்யனாய் (நிலையாய்) இருப்பவன். இவ்வாறு அறிகையே ஜ்ஞானமென்று கூறப்படுகின்றது.
உத்தவர் சொல்லுகிறார்:- பெரியோர்களுடைய உபதேசப் பரம்பரையால் ப்ராப்தமாய் (அடையக்கூடியதாய்) இருப்பதும், நல்ல சுத்தியை விளைப்பதுமாகிய ஜ்ஞானத்தையும், ஜ்ஞானத்தின் கார்யமான வைராக்யத்தையும், அதனால் விளையக் கூடிய விஜ்ஞானத்தையும் (பகவானே உபாயமும் (அடைவதற்கு வழியும்), உபேயமும் (அடையப்பட வேண்டியவனும்) என்னும் அத்யவஸாய ஜ்ஞானத்தையும்), பெரியோர்களும் தேடும்படி பரம கோப்யமான (ரஹஸ்யமான) உன்னுடைய பக்தி யோகத்தையும், எனக்கு விரிவாகச் சொல்லவேண்டும்.
ஈசனே! பொறுக்க முடியாத ஸம்ஸார (உலகியல்) மார்க்கத்தில் (வழியில்) ஆத்யாத்மிகம் முதலிய மூன்று தாபங்களால்
ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன)
ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்),
ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்)
என்ற மூன்று வகையான துன்பங்களால் பீடிக்கப்பட்டுப் பரிதபித்துக் கொண்டிருக்கும் புருஷனுக்கு, மோக்ஷ ஸுகத்தைப் பெய்பவைகளும், குடை போல் நிழலைக் கொடுத்து ரக்ஷிப்பவைகளுமாகிய உன்னுடைய திருவடிகளை ஒழிய வேறொரு ஸாதனம் இருப்பதாக எனக்குத் தோற்றவில்லை. (இத்தகைய அத்யவஸாயம் (உறுதி) உடைய நீ இதை ஏன் கேட்கிறாயென்றால், சொல்லுகிறேன்.
ஸம்ஸாரமாகிற பாழியில் (பெரும் பள்ளத்தில்) விழுந்து, காலமாகிற ஸர்ப்பத்தினால் கடியுண்டு, அற்பமான சப்தாதி விஷய ஸுகங்களில் பேராவல் உற்றிருக்கிற இந்த ஜனத்தை (மக்களை) உன் கருணையால் கரையேற்றுவாயாக. மஹானுபாவ! கரையேற்றுவது எப்படி என்றால், மோக்ஷத்தை வெளியிடுகிற உன் வாய் அமுதங்களால் நன்கு நனைப்பாயாக. அவ்வளவில் இந்த ஜனம் (மக்கள்) கரையேறும்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- முன்பு ராஜனான யுதிஷ்டிரர், நாங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கையில், இந்த விஷயத்தைக் குறித்து இவ்வாறே பகவத் பக்தியென்னும் தர்மத்தை அனுஷ்டிப்பவர்களில் சிறந்தவராகிய பீஷ்மரை வினவினார். அவர் வினவுவதற்கு என்ன ப்ரஸக்தி (காரணம்) என்றால் சொல்லுகிறேன்.
பாரத யுத்தம் முடிந்த பின்பு, நண்பர்களுடைய மரணத்தினால் மனம் கலங்கப்பெற்ற யுதிஷ்டிரர், அந்த மனக் கலக்கம் தீரும் பொருட்டு, பல தர்மங்களைக் கேட்டு, அனந்தரம் (பிறகு) மோக்ஷ தர்மங்களை வினவினார். நீர் யாது வினவினீரோ, இதையே அவரும் அந்த ப்ரஸங்கத்தில் (ஸந்திப்பில்) பீஷ்மரை இவ்வாறே வினவினார். அப்பொழுது பீஷ்மருடைய முகத்தினின்றும் கேட்ட அந்த மோக்ஷ தர்மங்களையும், ஜ்ஞானம், விஜ்ஞானம், வைராக்யம், ச்ரத்தை, பக்தி இவைகளையும் சொல்லுகிறேன்; கேட்பீராக.
உத்தவரே! இதோ புலப்படுகின்ற தேவ, மனுஷ்யாதி சரீரங்களில், சப்தம் (ஒலி), ஸ்பர்சம் (ஊறு), ரூபம் (ஒளி), ரஸம் (சுவை), கந்தம் (நாற்றம்), மல, மூத்ரங்களை விடுதல், வேலை செய்தல், நடை, பேச்சு இவ்வொன்பது பதார்த்தங்களையும், செவி, வாய், கண், மூக்கு, உடல், வாக்கு (நாக்கு), பாணி (கை), பாத (கால்), பாயு (ஆசனவாய்), உபஸ்தங்கள் (பிறப்புக்குறி), மனம் ஆகிய பதினொரு இந்திரியங்களையும், பஞ்ச பூதங்களையும், ஸத்வம், ரஜஸ்ஸு, தமஸ்ஸு என்கிற மூன்று குணங்களையும் ஜ்ஞானத்தையே வடிவாகவுடைய ஆத்மாவையும், உள்ளபடி அறிகையே ஜ்ஞானமென்று நான் நிச்சயித்திருக்கிறேன்.
ப்ரக்ருதி (அசேதனமான மூலப்ரக்ருதி), புருஷர்களை (ஜீவாத்மாக்களைக்) காட்டிலும் விலக்ஷணனான (வேறான) என்னையே உபாயமாயும் (அடைவதற்கு வழியாயும்), உபேயமாயும் (அடையப்பட வேண்டியவனாயும்) திடமாக நினைத்திருக்கையே விஜ்ஞானமாம். ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) மூன்றும் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களின் பரிணாமங்களான தேஹங்களுக்கே உள்ளவையன்றி, அவை ஆத்மாக்களுக்குக் கிடையாவென்றும், ஆகையால் ஆத்மாக்கள் தேஹங்களைக் காட்டிலும் வேறுபட்டவர்களென்றும், பகவானுக்கே சேஷப் (அடிமைப்) பட்டவர்களென்றும் தெளிவாக அறிந்து, இவ்வறிவுடன் பகவானையே உபாயமாயும் (அடைவதற்கு வழியாயும்), உபேயமாயும் (அடையப்பட வேண்டியவனாயும்) அத்யவஸிக்கை (உறுதி) விஜ்ஞானமாமன்றி, இவ்வறிவின்றிக் கேவலம் பகவானை நினைக்கை விஜ்ஞானமாகமாட்டாது.
சரீரம் (உடல்), பால்ய (குழந்தை), யௌவன (இளமை), வார்த்தகாதிகளான (கிழத்தனம்) பல தசைகளை அடைகின்றதாகி, வெவ்வேறாக மாறிக் கொண்டேயிருக்கின்றது. அத்தகைய சரீரத்தில் (உடலில்) ஜீவாத்மா ஒருவாறாகவே தொடர்ந்து கொண்டு வருகின்றான். பால்ய தசையை (குழந்தை நிலையை) அடைந்த சரீரத்திலிருந்த ஜீவாத்மாவே, யௌவன தசையை (இளமை நிலையை) அடைந்த சரீரத்திலும் தொடர்ந்திருக்கின்றான். அச்சரீரத்திலுள்ள ஜீவனே வார்த்தக தசையை (கிழத்தன நிலையை) அடைந்த சரீரத்திலும் தொடர்ந்து வருகின்றான். அன்றியும், அச்சரீரம் அழியும் பொழுதும், ஜீவாத்மா அழியாமல், அவ்வாறே மிகுந்திருக்கின்றான். இவ்வாறு எவ்வகை விகாரங்களும் (மாற்றங்களும்) இன்றி ஒருவாறாயிருக்கின்ற ஆத்ம ஸ்வரூபமே, ஸத்தென்று கூறப்படும் என்று உணர்கையும், ஜ்ஞானமாம்.
ச்ருதி (வேதம்) என்றும், ப்ரத்யக்ஷமென்றும் (நேரில் பார்த்து அறிதல்), ஐதிஹ்யாதிகள் (பரம்பரையாக வந்த செய்தி) என்றும், அனுமானம் (ஊஹித்து அறிதல்) என்றும் ப்ரமாணங்கள் நான்கு வகைப்பட்டிருக்கின்றன. அவற்றில், ச்ருதி (வேதம்) ஸ்வர்க்காதி பலன்களை விரும்புவோர்கள் யஜ்ஞாதி கர்மங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கின்றது. க்ருஷி (விவசாயம்) முதலிய கர்மங்களால் அன்னாதி பலன்களை நாம் ப்ரத்யக்ஷமாகவே அனுபவித்துக் கொண்டு வருகிறோம். ஐதிஹ்யாதிகளும் ச்ருதியைப் போலவே அந்தந்த பலன்களை விரும்புகிறவர்களுக்கு அவ்வவற்றிற்குரிய கர்மங்களை விதிக்கின்றன. ஒளஷதாதிகள் (மூலிகைகள்), ஆரோக்யாதிகளை விளைக்கின்றன என்று ஊஹிக்கை அனுமானம்.
இவ்வாறு ச்ருதி முதலிய ப்ரமாணங்களால் விதிக்கப்பட்ட யஜ்ஞாதி கர்மங்களால் விளைகின்ற ஸ்வர்க்காதி பலன்களெல்லாம் ஒருவகையாய் இல்லாமையையும், தாரதம்யமாய் (ஏற்றத்தாழ்வுடன்) இருப்பதையும், நச்வரமாய் (அழியக்கூடியதாய்) இருப்பதையும் ஆராய்ந்து, “ப்ரத்யக்ஷத்தில் ஸித்தமான அன்னாதி பலன்களைப்போல் அப்ரத்யக்ஷமான (நேரில் பார்க்க முடியாத) ப்ரஹ்மாதிபத்யம் (ப்ரஹ்மாவின் பதவி) வரையிலுள்ள எல்லாப் பலன்களும் நச்வரங்களே (அழியக்கூடியவையே); மற்றும், துக்கத்தை உட்கொண்டிருப்பவைகளே” என்று நிச்சயித்துக் கொண்டு, ஜ்ஞானியாயிருப்பவன் அவற்றில் வைராக்யத்தை அடைய வேண்டும்.
உத்தவரே, என்னிடத்தில் மிகவும் ப்ரீதியுள்ள நீர், பக்தி யோகத்தைப்பற்றி வினவுகையில் முன்னமே அதை உமக்கு விரிவாக மொழிந்தேன். தோஷமற்றவரே! அதன் காரணங்களையும் அப்பொழுதே உமக்குக் கூறினேன். இப்பொழுது அந்த பக்தியோக காரணங்களில் அந்தரங்கமாய்ச் சிறந்த காரணம் எதுவோ, அதை மறுபடியும் சொல்லுகிறேன்; கேட்பீராக.
அம்ருதம் போன்ற என்னுடைய கதையைக் கேட்கை முதலியவற்றில் ச்ரத்தையும் (ஈடுபாடும்), ஸர்வகாலமும் (எல்லாக்காலத்திலும்) என் குணங்களைப் பேசுகையும், என்னைப் பூஜிப்பதில் ஆஸக்தியும் (பற்றும்), என்னுடைய ஜன்ம கர்மங்களை வெளியிடுகிற வசனங்களால் என்னைத் துதிக்கையும், என்னுடைய ஆலயங்களை விளக்குவது, மெழுகுவது முதலிய என் பரிசர்யையில் (பணிவிடையில்) ஆதரமும் (மரியாதையும்), கை, கால், தலை முதலிய அங்கங்களெல்லாம் பூமியில் படும்படி விழுந்து என்னை நமஸ்காரம் செய்கையும், என்னுடைய பக்தர்களை விசேஷமாகப் பூஜிக்கையும், ஸமஸ்த பூதங்களும் பரமாத்ம ஸ்வரூபங்களே என்று பாவிக்கையும், சரீர வியாபாரங்களை எல்லாம் என்னுடைய ஆராதனத்திற்கு (பூஜைக்கு) வேண்டிய துளஸி, புஷ்பம், முதலியவைகளைச் சேகரிப்பதில் உபயோகப்படுத்துகையும், லௌகிக வியவஹாரங்களிலும் என் குணங்களைச் சொல்லுகையும், மனத்தை என்னிடத்தில் நிலை பெறச் செய்கையும், ப்ரயோஜனாந்தரங்களில் (வேறு பலன்கள்) எதையும் விரும்பாமையும், என்னுடைய முகோல்லாஸத்திற்காக (திருவுள்ள உகப்புக்காக) பணம் செலவழிக்கையும், போகஸாதனமான சந்தனாதிகள், பிள்ளையைச் சீராட்டுதல், முதலிய ஸுகங்கள் இவைகளைத் துறக்கையும், யாகம், காலம், ஹோமம், அதிதிகளைப் புசிப்பிக்கை, ஏகாதச உபவாஸம் முதலிய விரதம் மற்றும் சாஸ்த்ரங்களில் சொல்லிய தவம் ஆகிய இவையெல்லாவற்றையும் என்னுடைய ப்ரீதிக்காகச் செய்கையும், தானும் தன்னுடையவைகளும் பகவானுக்கே அதீனங்கள் (உட்பட்டவை) என்று அனுஸந்திக்கையும் (எண்ணுவதும்) ஆகிய இத்தர்மங்களெல்லாம் மனுஷ்யர்கள் அனைவரும் ஸாதாரணமாய் அனுஷ்டிக்க வேண்டியவை. இந்த தர்மங்களால் என்னிடத்தில் பக்தி உண்டாகின்றது. இவ்வாறு தர்மானுஷ்டானத்தினால் பக்தி உண்டாகப்பெற்ற புருஷனுக்கு, எந்தப் புருஷார்த்தந்தான் (விருப்பம் தான்) கிடைக்க அரிது?
ஸத்வகுணம் தலையெடுத்து, ரஜஸ், தமோகுணங்கள் தலை சாய்ந்து, ராகாதி தோஷங்களும் கழிந்து, நிர்மலமாகிய (அழுக்கற்ற) மனத்தை அந்தராத்மாவாகிய என்னிடத்தில் எப்பொழுது அர்ப்பணம் செய்கிறானோ, அப்பொழுதே அப்புருஷன் தர்மம், ஜ்ஞானம், வைராக்யம், ஐச்வர்யம் இவையெல்லாவற்றையும் அடைகின்றான்.
மனம், ரஜஸ், தமோ குணங்களுக்குட்பட்டு, தேஹத்தில் ஆஸக்தி (பற்று) உற்று, இந்திரியங்களால் இழுக்கப்பட்டு, சப்தாதி விஷயங்களைத் தொடர்ந்தோடுமாயின், அப்பொழுது அப்புருஷனுக்கு அதர்மம் (அறமின்மை), அஜ்ஞானம் (அறிவின்மை), அவைராக்யம் (பற்று), அனைச்வர்யம் (ஆளுமையின்மை) இவையெல்லாம் ஸம்ருத்தமாய் (நிறைந்து) இருக்கும். என்னிடத்தில் ப்ரீதியை விளைக்குமதுவே பக்தியென்றும் , ஸமஸ்த ஆத்மாக்களும் பரமாத்மைக ஸ்வரூபர்களே (பகவானுக்கு சரீரம்) என்று பாவிக்கையே ஜ்ஞானம் என்றும், சப்தாதி விஷயங்கள் அனர்த்த ஹேதுக்களென்று பாவித்து அவற்றில் மனப்பற்று செய்யாமையே வைராக்யமென்றும், அணிமாதி ஸித்திகளே (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன-
அணிமா-சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல்
மஹிமா-பெரிதாக்கிக்கொள்ளுதல்
லகிமா-லேசாகச் செய்தல்
கரிமா-கனமாக்கிக்கொள்ளுதல்
வசித்வம்-எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல்
ஈசத்வம்-எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல்
ப்ராப்தி-நினைத்த பொருளைப் பெறுதல்
ப்ராகாம்யம்-நிணைத்தவிடம் செல்லும் வல்லமை- ஐச்வர்யமென்றும் கூறப்படும்.
உத்தவர் சொல்லுகிறார்:- சத்ருக்களை அழிப்பவனே! யமம், நியமம் இவையிரண்டும் எத்தனை வகைப்பட்டிருக்கும். ப்ரபூ! க்ருஷ்ணா “சமம், தமம், திதிக்ஷா, த்ருதி இவை யாவை? தானமாவது யாது? தவம் எத்தகையது? சௌர்யம், ஸத்யம் இவை யாவை? ருதமென்கிறார்களே; அது யாது? த்யாகம், தனம் இவை யாவை? இஷ்டமான தனம் எது? யஜ்ஞம் எது? தக்ஷிணை எது? ஸ்ரீவல்லப! புருஷனுக்கு பலம் எது? கேசவனே, தயை எது? லாபம் எது? வித்யை எது? லஜ்ஜை எது? செல்வம் எது? ஸுக, துக்கங்களென்பவை யாவை? பண்டிதன் எவன்? மூர்க்கன் எவன்? நல்வழி எது? தீவழி எது? ஸ்வர்க்கம் எது? பந்து எவன்? க்ருஹம் எது? நிறைவாளன் எவன்? ஏழை எவன்? க்ருபணன் எவன்? ப்ரபு எவன்? ஸத்புருஷர்களுக்கு ப்ரபுவே! நான் கேட்ட இந்த குணங்களையும், இவற்றிற்கு விபரீதமான துர்க்குணங்களையும் எனக்கு விவரித்துச் சொல்வாயாக.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ராணிகளுக்கு த்ரோஹம் செய்ய நினையாமை, ப்ராணிகளுக்கு ஹிதமாகப் பேசுகை, பிறர் சொத்தை மனத்தினாலும் எடுக்காமை, எங்கும் மனப்பற்று செய்யாமை, வெட்கம் , த்ரவ்யம் (சொத்து) சேர்த்து வைத்துக் கொள்ளாமை, சாஸ்த்ரார்த்தங்களில் விச்வாஸம் (நம்பிக்கை), ஸ்த்ரீ ஸங்கம் (பெண்களுடன் கலந்திருத்தல்) அற்றிருக்கை , வீண் பேச்சு பேசாமை, ஸ்திரமாய் (உறுதியாய்) இருக்கை, பொறுமை, பாபத்தினின்று பயப்படுகை இப்பன்னிரண்டும் யமங்களாம்.
சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களை அனுஷ்டிப்பதற்குரிய சுத்தியாகிய சௌசம் (தூய்மை), ஜபம், தவம், ஹோமம், ச்ரத்தை, அதிதி ஸத்காரம் (விருந்தோம்பல்) செய்கை , என்னை ஆராதிக்கை, தீர்த்த யாத்ரை செய்கை, பரோபகாரம் (பிறர்க்கு உதவி) செய்கை, தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு ஸ்தோஷமுற்றிருக்கை, ஆசார்ய ஸேவை ஆகிய இவை பன்னிரண்டும் நியமங்களாம்.
இந்த யம, நியமங்கள் இரண்டையும் அனுஷ்டிப்பார்களாயின், அவை அவர்கள் விரும்பும் பலன்களை எல்லாம் கறக்கும் (தரும்).
சமமாவது புத்தி என்னிடத்தில் நிலை நிறுத்துகை. தமமாவது வெளி இந்திரியங்களை அடக்குகை. திதிக்ஷையாவது துக்கங்களைப் பொறுக்கை. த்ருதியாவது நாக்கு, உபஸ்தம் (பிறப்புக்குறி) இவைகளை அடக்குகை. ப்ராணிகளுக்கு த்ரோஹம் செய்யாமையே தானங்களில் சிறந்த தானமாம். போகங்களில் விருப்பமில்லாமையே சிறந்த தவமாம். பசி, தாஹம் முதலியவைகளால் வருந்தாமையே, சௌர்யமாம். எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபங்களே என்று எல்லாவற்றையும் தாரதம்யம் (ஏற்றத்தாழ்வு) இல்லாமல் பார்க்கையே ஸத்யமாம். ருதமாவது உள்ளதை உள்ளபடியே பேசுகையென்று தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.
கர்மங்களில் “நான் செய்கிறேன்” என்னும் அபிமானம் இல்லாமையே சௌசமாம். (கேவலம் ஸ்னானாதிகளால் விளையும் சுத்தி மாத்ரம் சௌசமாகாது.) கர்மங்களை அவற்றின் பலனை உத்தேசியாமல் (நோக்காமல்) செய்கையே த்யாகமென்று கூறப்படும். மனுஷ்யர்களுக்கு என்னிடத்தில் பக்தியை விளைக்கும் தர்மமே இஷ்டமான தனமாம். பகம் என்று கூறப்படுகிற ஜ்ஞானம், சக்தி முதலிய குணங்கள் மிகவும் அமைந்திருக்கிற நானே ஸ்வர்க்காதிகளுக்கு ஸாதனமான (வழியான) யஜ்ஞம் (யாகம்) ஆவேன். பெரியோர்கள் அருள் புரிந்து, ஜ்ஞான உபதேசம் செய்வதற்கு ஹேதுவான வணக்கம் பணிவிடை முதலியவைகளே தக்ஷிணையாம் அன்றி ஸ்வர்ணாதிகளைக் கொடுக்கை தக்ஷிணையாக மாட்டாது. ப்ராணாயாமமே சிறந்த பலமாம் அன்றி, தேஹ பலம் பலமாக மாட்டாது. என்னுடைய ஐச்வர்ய வீர்யாதிகள் பகம் என்று கூறப்படும். என்னிடத்தில் சிறந்த பக்தி உண்டாகப் பெறுகையே லாபமாம் அன்றி, பிள்ளை முதலியவை லாபமாக மாட்டாது. ஆத்மாக்களிடத்தில் தேவ, மனுஷ்யாதி பேதம் இல்லை என்னும் ஜ்ஞானமே வித்யையாம் அன்றி கேவல ஜ்ஞானம் வித்யை ஆகமாட்டாது.
நிஷித்த (விலக்கப்பட்ட) கர்மங்களில் “சீ! இவற்றைச் செய்யலாகாது” என்னும் ஜுகுபுப்ஸையே (வெறுப்பே) லஜ்ஜையாம் (வெட்கம்) அன்றி வெறும் லஜ்ஜை லஜ்ஜையாகாது. பகவானைத் தவிர மற்ற எதையும் விரும்பாமை முதலிய குணங்களே அலங்காரமாமன்றி, கிரீடம் முதலியவை அலங்காரம் ஆக மாட்டாது. துக்கம் கலந்த ஸுகம் நீங்கப்பெறுகையே ஸுகமாமன்றி, போகங்களை அனுபவிக்கை ஸுகமாக மாட்டாது. சப்தாதி விஷய ஸுகங்களை அபேக்ஷிக்கையே (விரும்புவதே) துக்கமாம். ஸம்ஸார பந்த மோக்ஷங்களின் காரணங்களை அறிந்தவனே பண்டிதனாவான்.
தேஹத்தில் அஹம் புத்தியும் (ஆத்மாபிமானமும் – இந்த உடலே ஆத்மா என்ற எண்ணமும்), தேஹானுபந்திகளிடத்தில் (உடலோடு தொடர்பு உடையவைகளிடத்தில்) மமதாபுத்தியும் (என்னுடையது என்னும் அபிமானமும் ) உடையவன் மூர்க்கனாவான். என்னைப் பெறுதற்கு ஹேதுவான ஜ்ஞானமே ஸன்மார்க்கமாமன்றி, முள், கல் முதலியவையில்லாத வழி மார்க்கமாக மாட்டாது. சித்தம் (மனது) சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) செல்லுகையே கெட்ட வழியாமன்றி, திருடர் முதலிய உபத்ரவம் (தீங்கு) உள்ள வழி கெட்ட வழி ஆகாது. ஸத்வ குணம் தலையெடுக்கையே ஸ்வர்க்கமாமன்றி இந்த்ராதிகளுடைய லோகம் ஸ்வர்க்கமாகமாட்டாது. தமோகுணம் தலையெடுக்கையே நரகமாமன்றித் தாமிஸ்ராதிகள் நரகமாக மாட்டாது. அஜ்ஞானத்தைப் போக்கும் ஆசார்ய ரூபியான நானே பந்து (சுற்றம்) ஆவேன் அன்றித் தந்தை முதலியவர் பந்துக்களாக மாட்டார்கள்.
மனுஷ்ய சரீரமே க்ருஹமாமன்றி உப்பரிகை (மேல் மாடம்) முதலிய போக ஸ்தானங்கள் க்ருஹமாக மாட்டாது. குணங்கள் அமைந்தவன் பணக்காரனாவானன்றி, கேவலம் பணமுள்ளவன் பணக்காரனாக மாட்டான். தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷம் அடையாதவன் எவனோ, அவனே தரித்ரனாவான் (ஏழை). இந்திரியங்களை வெல்ல முடியாமல் அவற்றின் வழியே போகிறவன் மன இரக்கத்திற்கிடமான க்ருபணன் (தாழ்ந்தவன்) ஆவான். சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) பற்றற்ற மதியுடையவன் ஈச்வரனாவான். அவற்றில் பற்றுடையவன், அனீச்வரனாவான்.
உத்தவரே! நீர் கேட்ட விஷயங்களுக்கெல்லாம் இவ்வாறு நன்கு நிரூபித்து மறுமொழி கூறினேன். “இவ்வாறு மோக்ஷத்திற்கு வேண்டிய யம, நியமாதிகளை மொழிந்தாய். இவ்வாறே மோக்ஷ விரோதிகளையும் விவரித்துச் சொல்லவேண்டும்” என்று வினவக் கூடும். அவற்றையெல்லாம் தனித் தனியே பலவாறு நிரூபித்துச் சொல்லுவதனால் என்ன ப்ரயோஜனம்? மோக்ஷத்திற்கு வேண்டியவை இன்னவை என்றும், விரோதிகள் இன்னவை என்றும் அவற்றைச் சுருக்கிச் சொல்லுகிறேன், கேளும்.
ஸம்ஸாரிகள், இஹத்திலும் (இந்த உலகத்திலும்) பரத்திலும் (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலகங்களிலும்) உள்ள சப்தாதி விஷய ஸுகங்களையும், அவற்றின் ஸாதனங்களையும் அனுகூலம் (ஸாதகம்) என்று நினைத்திருப்பார்கள்; ஸாம்ஸாரிக (உலக வாழ்வின்) துக்கங்களையும், அவற்றின் ஸாதனங்களையும் ப்ரதிகூலம் (பாதகம்) என்று நினைத்திருப்பார்கள். இவ்விரண்டு நினைவுகளும், மோக்ஷ விரோதியாகையால் (மோட்சத்திற்கு எதிரியாகையால்) முமுக்ஷுவுக்கு (மோட்சத்தை விரும்புபவனுக்கு) தோஷமேயாம். ஸம்ஸாரிகள் குணமாக நினைக்கிற ஸுகங்கள், அவர்கள் தோஷமாக நினைக்கிற துக்கங்கள் ஆகிய இரண்டையும் தோஷமென்று நினைத்துத் துறந்திருக்கையே, முமுக்ஷுவுக்குக் குணமாம்.
பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.