ஶ்ரீமத் பாகவதம் - 334

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தெட்டாவது அத்தியாயம்

(முன்பு விஸ்தரித்துச் சொன்ன ஜ்ஞான யோகத்தைச் சுருக்கிக் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- பிறனுடைய ஸ்வபாவங்களையும் (இயற்கை குணம்), அந்த ஸ்வபாவங்களுக்கு அனுகுணமான தானாதி கர்மங்களையும் புகழ்தலும், அபஹாராதி (கெடுதல்) கர்மங்களைப் பழித்தலும் செய்யலாகாது. சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்தெல்லரம் என்னை அந்தராத்மாவாக உடையதாகையால், ஒருவாறாயிருப்பதே என்று பாவிக்க வேண்டும். பிறருடைய ஸ்வபாவங்களையும், கர்மங்களையும், எவன் புகழ்தலும், பழித்தலும் செய்கிறானோ, அவன் அசேதனமான தேஹத்தில் ஆத்மாபிமானம் (ஆத்மா என்கிற எண்ணம்) வளரப் பெற்று, தான் அதிகரித்த ஜ்ஞான யோகமாகிற தன் ப்ரயோஜனத்தினின்று சீக்ரத்தில் நழுவப் பெறுவான். 

ராஜஸ அஹங்கார கார்யமான இந்திரியங்கள் நித்ரையினால் மழுங்கி, தங்கள் வியாபாரம் ஓயப் பெற்றிருக்கையில், தேஹத்திலிருக்கும் ஜீவன் அறிவற்று, ம்ருத்யுவை (மரணத்தைப்) போன்ற ஸ்வப்னம் (கனவு) என்னும் ஸூக்ஷ்ம ப்ரக்ருதியை அடைகின்றான்; ஜாக்ரத (விழிப்பு) அவஸ்தையில் (நிலையில்) உள்ள அனுபவங்களெல்லாம் மறையப் பெறுகின்றான். அவ்வாறே தேஹாத்ம அபிமானமுடையவன் (இந்த உடலே ஆத்மா என்கிற எண்னம் உடையவன்), விழித்துக் கொண்டிருந்த போதிலும், தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணமான (வேறான) ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறியாமையால், உறங்குகிறவன் போலவே ஆவான். 

ஆத்மா தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானது) என்று தெரியாமையால், தேஹமே ஆத்மாவென்னும் ப்ரமம் உண்டாகின்றது. அப்போழுது, தேஹத்திலிருக்கும் ஜீவன், அறிவு கெட்டு, ம்ருத்யுவைப் (மரணத்தைப்) போன்ற ஸூக்ஷ்ம ப்ரக்ருதியால் மறைக்கப்படுகின்றான். அவ்வாறே நானாவித (பலவித) தேஹங்களைப் பார்த்து, அவற்றையே ஆத்மாக்களென்று ப்ரமிக்கும் புருஷன், தத்வ-ஜ்ஞானம் (ஜீவாத்மா, பரமாத்மா பற்றிய அறிவு) இல்லாமையால், உறங்குகிறவனோடு ஒத்தவனே ஆவான். 

“தேஹ தர்மங்களை ஆத்மாவினிடத்தில் ஏறிட்டுப் புகழ்தலும், பழித்தலும் இவ்வாறு அனர்த்த (கெடுதிக்கு) ஹேதுவாம் (காரணமாம்) என்பது உண்மையே. அந்த தேஹ தர்மங்களெல்லாம், அத்தேஹங்களைச் சேர்ந்தவைகளே என்று அறிந்து புகழ்வதும், பழிப்பதும் செய்வானாயின், அவனுக்கு ஒரு கெடுதியும் இல்லையே” என்றால் சொல்லுகிறேன். 

தேவ மனுஷ்யாதி தேஹங்களும், க்ரிமி முதலிய தேஹங்களும், அசேதனமான ப்ரக்ருதியின் (அறிவற்ற ஜடப்பொருட்களின் மூலமான மூலப்ரக்ருதியின்) பரிணாமங்களே (மாறுபாடுகளே) ஆகையால், ஒரு நிலையில் நிற்காமல் பற்பல அவஸ்தைகளை (நிலைகளை) அடைந்து கொண்டே இருப்பவை; ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவை. அவற்றில் எது நல்லது? எது கெட்டது? ஒன்று நல்லது என்றும், ஒன்று கெட்டது என்றும் சொல்ல இடமில்லை. தேவாதி தேஹங்களைக் காட்டிலும் மனுஷ்யாதி தேஹங்களும், மனுஷ்யாதி தேஹங்களைக் காட்டிலும் க்ரிமி கீடாதி (புழு, பூச்சி) தேஹங்களும் தாழ்வாயிருக்கின்றன.

க்ரிமி-கீடாதி தேஹங்களைக் காட்டிலும், மனுஷ்யாதி தேஹங்களும், மனுஷ்யாதி தேஹங்களைக் காட்டிலும் தேவாதி தேஹங்களும் மேன்மையாயிருக்கின்றன. இவ்வாறு மேன்மையும், தாழ்மையும் ப்ரத்யக்ஷமாயிருக்க (தெளிவாய் இருக்க), எல்லாம் ஒருவகையே அன்றி பேதமே (மாறுபாடே) இல்லை என்று எவ்வாறு சொல்லலாம் என்றால், மேற்பார்வையில் பேதம் உளதாகத் தெரியினும், எல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமங்களே ஆகையாலும், நிஷேகம் (விந்துவைச் சேர்த்தல்), கர்ப்பம் (கரு தரித்தல்) முதலிய அவஸ்தைகள் துல்யம் (சமம்) ஆகையாலும், உண்மையில் பேதமில்லை. ஆகையால், நல்லதென்றும், கெட்டதென்றும் ஆராய்வதில் ப்ரயோஜனம் இல்லை. 

தேவாதி சப்தங்களால் சொல்லப்படுவதும், மனத்தினால் நானென்று அபிமானிக்கப்படுவதுமாகிய தேவாதி சரீரம், உண்மையன்று. தேஹங்களிலுள்ள தேவாதி தர்மங்கள் ஆத்மாவினிடத்தில் கிடையாது. ஆகையால், தேஹத்தைப் பற்றியும் ஸ்துதி (புகழ்ச்சி), நிந்தைகள் (இகழ்ச்சி) செய்வது யுக்தமன்று. ஆனால், ஆத்மாவினிடத்தில் தேவாதி தர்மங்கள் உண்மையன்றாயின், அவை உளவென்னும் நினைவு மாத்ரத்தினால், எப்படி அனர்த்தம் (கெடுதி) உண்டாகுமென்றால், சொல்லுகிறேன். 

ஒருவன் ஒரு நிழலைப் பார்த்து, “இது ராக்ஷஸனுடைய நிழலே என்று நினைப்பானாயின், அந்த நிழல், ராக்ஷஸனுடையது அன்றதாயினும், அவனுக்குப் பயத்தை விளைக்கும். அதுவே தன்னுடைய நிழலென்று தோன்றுமாயின், பயத்தை விளைக்காது. ஒரு ப்ரதித்வனியைக் (எதிரொலியைக்) கேட்டுப் பர்வத குஹையிலிருக்கும் ஸிம்ஹாதி க்ரூர (சிங்கம் முதலிய கொடிய) ஜந்துவின் (விலங்கின்) த்வனி (ஒலி) என்று நினைப்பானாயின், அது உண்மையில் ஸிம்ஹாதி க்ரூர ஜந்துக்களின் த்வனி (ஒலி) அன்றாயினும், பயத்தை விளைக்கும். அதுவே தன்னுடைய ப்ரதித்வனி (எதிரொலி) என்று தெரியுமாயின், பயத்தை விளைக்காது. 

ஸ்வப்னத்தில் (கனவில்) பாம்பு, புலி முதலிய பாதக வர்க்கங்களைக் (தீமை செய்பவற்றைக்) கண்டு அது ஸ்வப்னம் (கனவு) என்று நினையானாயின், அவை பயத்தை விளைக்கின்றன. ஸ்வப்னம் (கனவு) காண்கிறோம் என்று தெரியுமாயின், அவை பயத்தை விளைக்க மாட்டாது. இவ்வாறு இவை பொய்யாயினும், பொய்யென்று தெரிந்து கொள்ளானாயின், தங்கள் கார்யத்தை விளைக்கின்றன. இவ்வாறே தேஹாதிகள் (உடல்) உண்மையில் ஆத்மாவன்றாயினும், அவற்றையே ஆத்மா என்று ப்ரமிப்பானாயின், அவை ப்ரளயம் (ஊழி காலம்) வரையில் ஸம்ஸார (உலகியல் வாழ்வின்) பயத்தை விளைத்துக் கொண்டேயிருக்கும். ஆத்மாவினிடத்தில் தேவத்வாதி (தேவன், மனிதன் முதலிய) தர்மங்கள் உண்மையில் இல்லையாயினும், அவை ஆத்மாவினிடத்தில் உளதென்று நினைத்த மாத்ரத்தினாலேயே அனர்த்தத்தை (கெடுதியை) விளைக்கும் என்பதைப் பற்றி ஸந்தேஹிக்க வேண்டாம். அனர்த்தத்தை (கெடுதியை) விளைத்தே தீரும். 

சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இந்த ஜகத்தெல்லாம் பரமாத்மாவே அன்றி, அவனைக் காட்டிலும் வேறுபட்டது அன்று. அவன் தானே சேதனாசேதனங்களைச் சரீரமாகவுடைய ஆகாரத்தினால் (உருவத்தினால்) ஸ்ருஷ்டிக்க (படைக்கப்) படுகிறான். திறமையுள்ள அவனே ஸ்ருஷ்டிக்கிறான் (படைக்கிறான்). ரக்ஷிக்கப்படுவதும் (காப்பாற்றப்படுவதும்), ரக்ஷிப்பதும் (காப்பதும்) அவனே. அவன் இந்த ப்ரபஞ்சத்தை எல்லாம் சரீரமாக உடையவன். கடைசியில் ஸம்ஹரிக்கப்படுவதும் (அழிக்கப்படுவதும்), ஸம்ஹரிப்பதும் (அழிப்பதும்) அவனே. அவன் ஸர்வேச்வரன். அவனுக்கு மேல் நியாமகன் (நியமிப்பவன்) ஒருவனும் இல்லை. அவனை விட்டுப்பிரிந்த ஸ்வதந்தர (தன்னிச்சையாகச் செயல்படும்) வஸ்து (பொருள்) எதுவுமே இல்லை. 

இந்த ப்ரபஞ்சத்திற்கு எல்லாம் அவனே உபாதான காரணம் (மண் குடத்திற்கு மண் போல் material cause). ஸூக்ஷ்ம (கண்ணுக்குப் புலப்படாத, பெயர், உருவம் அற்ற, நுட்பமான) சேதனாசேதனங்களைச் சரீரமாகவுடைய அவனே, ஸ்தூல (கண்ணுக்குப் புலப்படும், பெயர் உருவம் உடைய) சேதனாசேதன ரூபமான இந்த ப்ரபஞ்சமாய் விரிகின்றான். ஆகையால், தனியே இருக்கின்ற பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டுத் தனியே இருப்பதான வஸ்து எதுவுமே இல்லை. “இந்த வஸ்துவை விட்டு ஈச்வரன் தனியே இருக்கின்றான். இந்த வஸ்து ஈச்வரனை விட்டுத் தனியே இருக்கின்றது” என்று நிரூபித்துச் சொல்ல முடியாது. 

உலகத்தில் குடம் முதலியவைகளின் உத்பத்தியில் நிமித்த காரணம் (மண் குடத்திற்கு குயவன் போல் efficient cause), உபாதான காரணம் (மண் குடத்திற்கு மண் போல் material cause), ஸஹகாரி காரணம் (மண் குடம் செய்வதற்குத் தேவையான சக்கரம், தடி முதலிய கருவிகள் போல்) ஆகிய மூன்று காரணங்களும் வெவ்வேறாய் இருப்பதைக் கண்டு சிலர், “பரமபுருஷன் ப்ரபஞ்சத்தைப் படைக்கிற விஷயத்திலும் அம்மூன்று காரணங்களும் வெவ்வேறாகவே இருக்க வேண்டும். பரமபுருஷன், ப்ரபஞ்ச (உலக) ஸ்ருஷ்டிக்கு (படைப்பிற்கு) நிமித்த காரணமே அன்றி மற்ற காரணங்கள் அவனாக மாட்டான். அவை வேறே” என்று சொல்லுகிறார்கள். அவ்வாறு சொல்லுவதற்கு ப்ரமாணம் (நிரூபிக்கப்பட்ட சான்று) இல்லையாகையால், அவர்களுடைய நினைவு நிர்மூலமே (ஆதாரமற்றது). 

மற்றும் சிலர், உலகத்தில் சில புகழத் தகுந்தவை என்றும், சில பழிக்கத் தகுந்தவை என்றும், சில இரண்டுக்கும் இடமாகாமல் உபேக்ஷிக்க (ஒதுக்கத்) தகுந்தவை என்றும் சொல்லுகிறார்கள். பரமபுருஷ ஸ்வரூபமில்லாத ஸ்வதந்த்ர வஸ்து (தன்னிச்சையாகச் செயல்படும் பொருள்) எதுவுமே இல்லையாகையால், “சில புகழத் தகுந்தவை, சில பழிக்கத் தகுந்தவை, சில உபேக்ஷிக்கத் தகுந்தவை என்று நினைப்பது ப்ரமமே (மனக்கலக்கமே)”. இது நிச்சயம். “ப்ரபஞ்சத்திற்குப் பரமபுருஷனே உபாதான காரணமாவானாயின், அவன் விகாரங்களுக்கு (மாறுபாடுகளுக்கு) இடமாக வேண்டியதாய் வருமே. நிர்விகாரனான (மாறுபாடற்ற) அப்பரம புருஷனுக்கு அது கூடாதே” என்றால், சொல்லுகிறேன். 

“பழி, புகழ், உபேக்ஷை (பொருட்படுத்தாமை) இவற்றிற்கு விஷயமாகி மூன்று விதமாகத் தோற்றுகிற இந்த ப்ரபஞ்சம் எல்லாம், ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களின் பரிணாமமென்று உணர்வாயாக. ஆகையால், விகாரங்கள் (மாறுபாடுகள்) எல்லாம் ஸத்வாதி குணங்களைச் சேர்ந்தவைகளேயன்றி, பரமபுருஷனைச் சேர்ந்தவைகள் அன்று. ஆனால், குணங்களே ப்ரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக வேண்டுமன்றி, பரமபுருஷன் உபாதான காரணமாகக் கூடாதே” என்றால், அப்படி இல்லை. பரமபுருஷன், தன் ஸங்கல்ப ஜ்ஞானத்தினால் (எண்ணத்தினால்) ஸத்வாதி குணங்களில் ப்ரவேசித்து, ப்ரபஞ்சத்தைப் படைக்கின்றான். ஆகையால், பரமபுருஷனே உபாதான காரணம் என்பதற்குத் தடையில்லை. 

ஒன்றுக்கொன்று விலக்ஷணமான (வேறான) ப்ரக்ருதி, புருஷர்களின் ஸ்வரூபத்தையும், அவ்விரண்டிலும் விலக்ஷணமான (வேறான) பரமபுருஷனுடைய ஸ்வரூபத்தையும் உள்ளபடி அறிந்து, பரோபதேசாதிகளுக்குப் (பிறருக்கு போதிப்பதற்கு) போதுமான திறமையுமுடைய அறிஞன் பழித்தலாவது, புகழ்தலாவது ஒன்றும் செய்யமாட்டான். பின்னையோவென்றால், ஸூர்யன் ப்ரபஞ்சத்தின் மேன்மை, தாழ்மைகளையும், குண, தோஷங்களையும் (நன்மை, தீமைகள்)  பாராமல், எல்லா இடங்களிலும் தன் கிரணங்களைப் பரப்பிக் கொண்டு திரிவதுபோல், குண தோஷங்களில் அபிநிவேசமின்றி (ஈடுபாடின்றி) திரிந்து கொண்டிருப்பான். 

ப்ரத்யக்ஷம் (நேராகப் பார்த்து அறிதல்), அனுமானம் (ஊஹித்து அறிதல்), சப்தம் (வேதம் முதலியன), தன்னுடைய அனுபவம் இவைகளால், ப்ரஹ்ம தேவன் முதல் பூச்சி, புழு வரையிலும் உள்ள சரீரங்களெல்லாம், உத்பத்தி, மரணங்களை உடையவைகள் என்றும், என்றும் ஒருவாறாயிருக்கும் தன்மையனான ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவையென்றும் தெரிந்து கொண்டு, எங்கும் பற்றின்றி, இவ்வுலகில் திரிய வேண்டும்.

உத்தவர் சொல்லுகிறார்:- ஜகதீசனே! ஸம்ஸாரம் ஆத்மாவுக்கும் அன்று; தேஹத்திற்கும் (உடலுக்கும்) அன்று. (ஸம்ஸாரமாவது ஜன்ம, மரணாதி ஸுக, துக்க அனுபவம்). ஆத்மா, ஜ்ஞான ஸ்வரூபன் (அறிவு வடிவானவன்); எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்கும் (அறியும்) தன்மையன். ஸம்ஸாரம், அஜ்ஞானத்தினால் (அறியாமையினால்) விளையக் கூடியது. ஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மாவுக்கு, அத்தகைய ஸம்ஸாரம் எவ்வாறு கூடும்? தேஹம், அசேதனமாகையால், அதற்கு ஸுக, துக்கானுபவம் சேராதாகையால், அதற்கும் ஸம்ஸாரம் இல்லை. ஆகையால், யாருக்கு ஸம்ஸாரம்? ஒருவர்க்கும் வேண்டியதில்லையே என்று சொல்லமுடியாது. ஸுக, துக்கானுபவம், ப்ரத்யக்ஷ ஸித்தமாயிருக்க (நேராகப் பார்த்து அறிவதாய் இருக்க), அதை எப்படி இல்லை என கூற முடியும்? ஆகையால், இந்த ஸம்ஸாரம் யாரைச் சேர்ந்ததோ, அதை எனக்கு விவரித்துச் சொல்லவேண்டும். 

ஆத்மா, இயற்கையில் பரிசுத்தன். ஸ்வயம் ப்ரகாசன் (தானே தோன்றுபவன்); தனக்குத் தானே தோற்றும் தன்மையன். புண்ய, பாப ரூப கர்மங்களாகிற மறைவு அற்றவன்; ஸத்வாதி குணங்களுக்கு இடமாகாதவன்; ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி விகாரங்கள் (மாறுபாடுகள்) தீண்டப்பெறாதவன். தேஹமோ என்றால், அசேதனம் (அறிவற்றது). அவ்வாறு ஒன்றுக்கொன்று விலக்ஷணங்களான (வேறான) ஆத்மா, தேஹம் இவையிரண்டும், அக்னியும், கட்டையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரித்தறிய முடியாமல் கலந்திருப்பது போல், ஒன்றோடொன்று கலந்திருக்கின்றன. இவற்றில் ஸம்ஸாரம் எதைச் சேர்ந்தது? தேஹத்தைச் சேர்ந்ததென்றாவது, ஆத்மாவைச் சேர்ந்ததென்றாவது நிரூபிக்க முடியாது இருக்கின்றதே. ஜ்ஞான ஸ்வரூபனான (அறிவு வடிவான) ஆத்மாவுக்கு, ஸுக, துக்க அனுபவ யோக்யதை (தகுதி) உளதாயினும், அவன் இயற்கையில் பரிசுத்தனாகையால், அவனுக்கு அது கூடாது. தேஹம் அசுத்தமாயினும், அசேதனமாகையால், ஸுக, துக்க அனுபவ ரூபமான ஸம்ஸாரம் அதற்கும் கூடாது. ஆகையால், இதை நிரூபித்துச் சொல்வாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஆத்மாவுக்கு, தேஹ (உடல்), இந்த்ரியாதிகளின் (புலன்களின்) ஸம்பந்தம் (தொடர்பு) எதுவரையில் மாறாதிருக்குமோ, அதுவரையில் ஆத்மாவினிடத்தில் ஸம்ஸாரம் உண்மையில் இல்லையாயினும், உள்ளது போலவேயாம். (ஸுக, துக்கங்களை விளைத்துக்கொண்டே இருக்கும்.) ஏனென்றால், ஜீவன் தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணமான (வேறான) ஆத்ம ஸ்வரூபத்தை அறியாமல், தேஹமே ஆத்மாவென்று ப்ரமிக்கிறானல்லவா! அதனால் அவனுக்கு தேஹாதி ஸம்பந்தம் (உடல் தொடர்பு) மாறுகிறதில்லை. அதனாலேயே அவனுக்கு அசுத்தி (தூய்மையின்மை) உண்டாகின்றது. ஆத்மாவினிடத்தில் தேவ, மனுஷ்யாதி ஆகாரங்கள் (உருவங்கள்) உண்மையில் இல்லையாயினும், “நான் பருத்திருக்கிறேன். இளைத்திருக்கிறேன். இவர்கள் என்னுடைய களத்ராதிகள் (மனைவிகள்). இவை எனக்கு ப்ரதிகூல (எதிரான) விஷயங்கள். இவை அனுகூல (ஸாதகமான) விஷயங்கள்” என்று விஷயங்களையே த்யானித்துக் கொண்டிருக்கும் புருஷனுக்கு, ஸம்ஸாரம் ஒருகாலும் நீங்காது. அவ்வாறு அவன் விஷயங்களையே த்யானிக்கைக்குக் காரணம், ஆத்மாவினிடத்தில் இல்லாத தேவ, மனுஷ்யாதி ஆகாரங்களை (உருவங்களை) உள்ளனவாக நினைத்தலே. 

ஸ்வப்னம் (கனவு) காண்கிறவன், தேஹத்தையே (உடலையே) ஆத்மாவாக ப்ரமித்து, தலை வெட்டப்படுவது முதலிய துக்கங்களை அனுபவிக்கிறானல்லவா? அவ்வாறே, விழித்துக்கொண்டிருக்கும் பொழுதும் தேஹாத்ம ப்ரமத்தினால் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்தினால்) ஜீவன், பற்பல துக்கங்களை அனுபவிக்கின்றான். ஸ்வப்னம் (கனவு) காண்கிறவன், விழித்துக் கொள்ளாதிருக்கும் வரையில், அந்த ஸ்வப்னம் (கனவு) அவனுக்கு தேஹாத்மாபிமானத்தை விளைத்து, அதன் மூலமாய்ப் பல அனர்த்தங்களுக்கு (கெடுதிகளுக்குக்) காரணமாகின்றது. அவன் தூக்கத்தை விட்டு விழித்துக் கொள்வானாயின், அந்த ஸ்வப்னமே (கனவே) அவனுக்கு அந்த ஸ்வப்ன (கனவு) தேஹத்தில் ஆத்மாபிமானமாகிற (ஆத்மா என்கிற எண்ணமாகிற) மோஹத்தையும், அதன் மூலமாய் விளையும் துக்கங்களையும், விளைவிக்க வல்லதாகிறது இல்லை. அவ்வாறே, சோகம், ஹர்ஷம் (மகிழ்ச்சி), பயம், கோபம், லோபம் (பேராசை), மோஹம் (மயக்கம்), ஆசை இவை முதலியவைகளும், ஜன்ம, மரணங்களும், தேஹாத்மாபிமானத்தை விளைப்பதாகிய அஹங்காரம் என்னும் ப்ரக்ருதி பரிணாம (ப்ரக்ருதியின் மாறுபாடான) விசேஷத்தின் ஸம்பந்தமுடைய ஜீவனுக்கு விளைகின்றனவன்றி, அதன் ஸம்பந்தம் அற்றவனுக்கு அவை உண்டாகிறதில்லை. ஆகையால், அவை ஆத்மாவுக்கு இயற்கையில் ஏற்பட்டவையன்று; அஹங்கார ஸம்பந்தத்தினால் (தொடர்பினால்) ஏற்பட்டவை. ஸம்ஸார (உலகியல் ஸுக துக்கங்களுக்கு) ஹேதுக்கள் (காரணங்கள்) பலவற்றில் அஹங்காரம் (நான்) முக்யமானது. ஸம்ஸார ஹேதுக்களான மற்றவைகளையும் சொல்லுகிறேன். கேட்பீராக. 

தேஹம் (உடல்), இந்திரியங்கள் (புலன்கள்), ப்ராணன்கள், மனம், ஆத்மாவல்லாத தேஹத்தில் ஆத்மாவென்னும் புத்தியாகிற அபிமானம் (எண்ணம்), ஜீவன், குணங்களும் கர்மங்களும் சரீரம் போல் தனக்கு ஸ்வாதீனமாயிருக்கப் பெற்றவனும், அந்தராத்மாவுமாகிய பரமபுருஷன், ஸத்வாதி குணங்கள், புண்ய, பாப கர்மங்கள், தேவத்வ, மனுஷ்யத்வாதி ஜாதிகள், அஹங்காரம் முதலிய கார்ய தத்வங்களுக்கு ஆதாரமான மஹத் தத்வம் ஆகிய இப்பலவித காரணங்களினின்று ஸம்ஸாரம் உண்டாகி, காலமும் காரணமாகப் பெற்று, முழுவதும் சூழ்ந்து வருகின்றது. ஜீவன், புண்ய, பாப கர்மங்களை அனுஷ்டிக்கையால், ஸம்ஸாரத்திற்கு ஹேதுவாகிறான். பரமபுருஷன், கர்மங்களுக்குப் பலன் கொடுக்கையால், ஸம்ஸாரத்திற்கு ஹேதுவாகிறான். ஆனால், இந்த ஸம்ஸாரம் நீங்குவதற்கு உபாயம் என்னவென்றால், சொல்லுகிறேன்; கேட்பீராக. 

தேஹம் (உடல்) முதலிய பல காரணங்களால் நிரூபிக்கப்படுவதும், மனம், வாக்கு, ப்ராணன், சரீரம் இவைகளால் செய்யப்படுவதுமாகிய புண்ய, பாப கர்மமாகிற ஸம்ஸார மூலத்தை (உலகியல் ஸுக, துக்கங்களுக்கான காரணத்தை) என்னுடைய உபாஸனத்தினால் (த்யானத்தினால்) எப்பொழுதும் இடைவீடின்றித் தொடர்ந்து வருகின்ற ஜ்ஞானமாகிற கூரான கத்தியினால் மறுபடியும் வேரூன்ற ஒட்டாதபடி அறுக்க முயன்று, சப்தாதி விஷயங்களில் விருப்பமின்றி, என்னுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையே மனனம் செய்யும் (எண்ணிக்கொண்டிருக்கும்) தன்மையனாகி, ஓரிடத்தில் தங்காமல் பூமியில் திரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த ஜ்ஞான ஸ்வரூபத்தையும், அதன் ஸாதனங்களையும் (வழிகளையும்) சொல்லுகிறேன்; கேட்பீராக. 

விவேகம், நிகமம், தவம், ப்ரத்யக்ஷம், ஐதிஹ்யம், அனுமானம் இவைகளே அந்த ஜ்ஞானத்திற்கு ஸாதனங்கள். அவற்றில் விவேகமாவது, “தேஹம் அநித்யம். ஆத்மா நித்யன்” இவை முதலிய காரணங்களால் ஆத்மாவுக்கும் தேஹத்திற்கும் உள்ள விலக்ஷண (வேறான) தர்மங்களால், தேஹத்தைக் காட்டிலும் ஆத்மா விலக்ஷணன் (வேறு) என்று நிரூபித்தல். 

நிகமமாவது, சாஸ்த்ர அத்யயனத்தினால் (கற்றலால்) விளையும் ஜ்ஞானம். 

தவமாவது, கர்மயோகம். ஆத்மா நான் என்று தோற்றுகிறது என்றும், 

ப்ரத்யக்ஷமாவது தேஹம் இதுவென்று தோற்றுகிறது என்றும் இவ்வனுபவமே

ஐதிஹ்யமாவது, உபதேசம். 

அனுமானமாவது, க்ருஷி (உழைப்பு, பயிர் செய்தல்) முதலிய த்ருஷ்டாந்தத்தினால் (உதாரணங்களால்) கர்மபலன்கள் அநித்யங்கள் (நிலையற்றவை) என்று ஊஹித்தல். 

இனி, இந்த ஜ்ஞானத்தின் ஸ்வரூபத்தைச் சொல்லுகிறேன். கேட்பீராக. “இந்த தேஹ (உடல்) ஸம்பந்தம் (தொடார்பு) உண்டாவதற்கு முன்பும், அது கழிந்த பின்பும், தேஹ ஸம்பந்தம் அற்ற யாதொரு ஆத்ம ஸ்வரூபம் உளதோ, அந்த ஆத்ம ஸ்வரூபமே தேஹ ஸம்பந்தம் உள்ள மத்ய தசையிலும் (இடைப்பட்ட நிலையிலும்) உளது. தேஹமே ஆத்மா என்பதில்லை என்னும் இவ்வளவே அந்த ஜ்ஞானத்தின் ஸ்வரூபம். இத்தகையனான ஆத்மாவின் தேஹ ஸம்பந்தத்திற்குக் காரணம், ஜகத் ஸ்ருஷ்டி செய்ய வேண்டும் (உலகைப் படைக்க வேண்டும்) என்னும் பகவானுடைய ஸங்கல்ப காலமே. 

அக்னியில் உருக்கி அழுக்கெடுத்த பரிசுத்தமான பொன்னைக் கொண்டு கைவளை, தோள்வளை, கிரீடம் முதலிய ஆபரணங்கள் செய்யும் பொழுது, வெள்ளி முதலியவற்றை அத்துடன் சேர்த்துச் செய்கிறார்கள். அவ்வாறு வெள்ளி முதலியவை சேர்க்கப்பட்ட கைவளை, முதலிய அவ்வாபரணங்களையும் பொன்னென்றே சொல்லுகிறார்கள். அதில் வெள்ளி முதலியவைகளும் கலந்திருக்கின்றன ஆகையால் முழுவதும் பொன்னென்று நினைப்பது ப்ரமமே (மனக்கலக்கமே) அல்லவா? 

நிரூபகர்களோவென்றால் (ஆராய்ந்து முடிவு செய்தவர்கள்), வெள்ளி முதலியவைகளைக் கலப்பதற்கு முன்னும், அக்னியில் உருக்கி அவற்றைச் சோதித்த பின்பும், யாதொரு பரிசுத்தமான பொன்னுண்டோ, அவ்வளவு மாத்ரமே ஆபரணமாயிருக்கின்ற மத்ய தசையிலும் (இடைப்பட்ட நிலையிலும்), பொன்னென்று கூறப்படுமன்றி, வெள்ளி முதலியவை பொன்னாக மாட்டாது என்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையே அன்றி, ப்ராந்தி (மனக்கலக்கம்) அன்று. அவ்வாறே நானென்று தோற்றுகிற ஆத்மாவும், தேஹ ஸம்பந்தத்திற்கு முன்னும், பின்னும், தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனாய் (வேறாய்) இருப்பதுபோல், தேஹ ஸம்பந்தமுள்ள மத்யகாலத்திலும், தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானது) என்றே கொள்ள வேண்டும். 

தேஹத்தையும் சேர்த்து ஸமுதாயத்தை ஆத்மாவென்று நினைப்பது ப்ராந்தியேயாம். இந்த்ரிய வர்க்கம் என்றும், சரீரம் என்றும், மஹத்தத்வத்தின் கார்யமும் தேஹாத்மாபிமானத்தை (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்தை) விளைப்பதுமாகிய அஹங்கார தத்வம் என்றும் மூன்று வகைப்பட்டிருப்பதும், உத்பத்தி, ஸ்திதி (நீடிப்பு), நிதனங்கள் (அழிவு) என்கிற மூன்று அவஸ்தைகளை (நிலைகளை) உடையதும், ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்கள் என்கிற மூன்று குணங்களின் பரிணாமமுமாகிய (மாற்றமுமாகிய) அசேதனம், மூன்று அவஸ்தைகளையும் கடந்த எந்த தத்வத்தின் தொடர்ச்சியால் விளங்குவதும், அது இல்லையாயின் விளங்காததுமாய் இருக்கின்றதோ, அதுவே ஆத்ம தத்வமாம். அது என்றும் மாறாமல் ஒருவாறாகவே இருக்கும் என்னுமிதுவும் அந்த ஜ்ஞானத்தின் ஸ்வரூபமேயாம். 

எது உற்பத்திக்கு முன்பும், அழிந்த பின்பும், ஆத்மாவாகிறதில்லையோ. அத்தகைய சரீரம் மத்யாவஸ்தையிலும் ஆத்மாவாக மாட்டாது. ஆனால், “நான் பருத்திருக்கிறேன். நான் இளைத்திருக்கிறேன்” என்று உலகத்தவர் வழங்குகிறார்களே, அந்தப் பருமன் முதலியவை தேஹ (உடல்) தர்மங்களே அல்லவா? 

தேஹம் ஆத்மாவல்லாத பக்ஷத்தில், அவை ஸூக்ஷ்ம ஸ்வரூபனென்று சொல்லுகிற ஆத்மாவுக்கு எவ்வாறு பொருந்துமென்றால், உலகத்தவர் வழங்குவது ப்ராந்தியே அன்றி, அது உண்மையன்று. தேஹத்திற்கு முன்னும், பின்னும் எது இருக்கின்றதோ, அதுவே ஆத்ம தத்வமாம்; மேலான ப்ரமாணத்தினால் ப்ரஸித்தமாயிருப்பதும் அதுவே. அது என்றும் ஒருவாறாகவேயிருக்கும் தன்மையது. இவ்வாறு அறிகையே அந்த ஜ்ஞானத்தின் ஸ்வரூபமாம். இதுவே என்னுடைய மதம் (கொள்கை). அன்றியும், ப்ரக்ருதியின் விகாரமும் (மாற்றமும்), ரஜோகுணம் தலையெடுத்து இருக்கையால், முயற்சியையே இயற்கையாக உடையதுமாகிய தேவ, மனுஷ்யாதி சரீரரூபமான ஸ்ருஷ்டி (படைப்பு) வர்க்கம், ஆத்மாவினிடத்தில் உண்மையில் இல்லையாயினும், இருப்பது போல் தோற்றுகின்றது. ஆத்ம ஸ்வரூபமோ என்றால் பரிசுத்தமாயிருப்பது; இந்த சரீர (உடல்) ஸ்ருஷ்டியைக் (படைப்பைக்) கடந்து, மீளவும் திரும்பாமல் ஸ்வயம் ப்ரகாசமாயிருக்கும். ப்ரக்ருதியோ என்றால் இந்த்ரியங்களும், சப்தாதி விஷயங்களுமாகிற விகாரங்களால் பலவாறாயிருக்கும் என்னும் இவ்வுணர்வும் அந்த ஜ்ஞானத்தின் வடிவே. (சரீர ஸம்பந்தமுடையவன், சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டுத் தோற்ற மாட்டானேயாகிலும், சரீர ஸம்பந்தமற்ற முக்த (மோட்சத்தை அடைந்த) ஜீவன், தனியே தோற்றுவானாகையால், சரீரமே ஆத்மாவென்று நினைக்கலாகாது. ஆத்மா சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டவனே என்று இவ்வாறு அறிகையே கீழ்ச்சொன்ன ஜ்ஞானமாம்). 

பரமபுருஷன், இத்தகையரான ப்ரக்ருதி (அசேதனம்), புருஷர்களைக் (ஜீவாத்மாக்கள்) காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) என்று ஸ்பஷ்டமாக (தெளிவாகத்) தெரிவிக்கிற விசாரங்களாலும் (விவாதங்களாலும்) “தேஹம், இந்திரியம், ப்ராணன் இவைகளில் எதுவும் ஆத்மாவாகமாட்டாது. ஆத்மா இவற்றைக்காட்டிலும் விலக்ஷணனே (வேறானவனே)” என்னும் திறமையுள்ள ஆராய்ச்சியாலும், தேஹமே ஆத்மாவென்னும் ப்ரமத்தையும் (மனக்கலக்கத்தையும்), ஆத்மா ஸ்வதந்தரன் (பகவானுக்கு உட்படாது, தன்னிச்சையாக செயல்படும் வல்லமை உடையவன்) என்னும் ப்ரமத்தையும் (மனக்கலக்கத்தையும்) வேருடன் அறுத்து, பரமாத்மாவுக்கு ஸர்வ (எல்லா) ப்ரகாரத்தாலும் (வழியாலும்) சேஷமான (அடிமையான) ஆத்மாவின் ஸ்வரூபத்தை அனுபவிக்கையாகிற ஆனந்தத்தினால் திருப்தி அடைந்து, கர்ம வாஸனையில் அழுந்தின மற்ற எவரோடும் ஸஹவாஸம் (தொடர்பு) செய்யாமல் மீளவேண்டும். 

தேவனென்றும், மனுஷ்யனென்றும் பலவாறு சொல்லப்படுவதும், ப்ரக்ருதியின் பரிணாமமுமான (மாறுபாடான) தேஹம் ஆத்மாவன்று, தேவமென்று சொல்லப்படுகிற இந்திரியங்களும் ஆத்மாவன்று. ப்ராணன், வாயு, ஜலம் இவைகளும் ஆத்மாவன்று. அன்னத்தினால் திருப்தி அடைந்து அன்னமயமென்று சொல்லப்படுகிற மனமும், ஆத்வாவன்று. புத்தியும் ஆத்மாவன்று. அந்தக்கரணமும் (மனதும்) ஆத்மாவன்று. ஆத்மாவல்லாத தேஹாதிகளில் (உடலில்) ஆத்மாபிமானத்தை (ஆத்மா என்கிற எண்ணத்தை) விளைக்கிற அஹங்காரமும் (நான்) ஆத்மாவன்று. ஆகாசமும் ஆத்மாவன்று. ஏனென்றால், இவையெல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமங்கள் (மாறுபாடுகள்) ஆகையால், துல்யமாயிருப்பவை. ப்ரக்ருதியைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவனென்று பலவாறு நிரூபிக்கப்பட்டதாகையால், ப்ரக்ருதியின் பரிணாமங்களான தேஹாதிகள் ஆத்மாவன்று என்பதைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை அல்லவா? 

என்னுடைய ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவானாயின், அவனுக்கு ஸத்வாதி குணங்களின் பரிணாமமான இந்த்ரியங்களை அடக்குவதனால் என்ன குணம் ஸாதிக்க வேண்டும்? அவ்விந்திரியங்களை அடக்காமல் அவை போனவழியே விட்டிருப்பினும், என்ன தோஷம் உண்டாகும்? 

பரப்ரஹ்மத்தை ஸாக்ஷாத்கரித்தவனுக்கு (த்யானத்தில் அறிந்தவனுக்கு) இந்த்ரிய நிக்ரஹத்தினால் (புலனடக்கத்தால்) ஆகவேண்டியது ஒன்றுமில்லை. அதில்லாமையால் ஒரு தோஷமும் உண்டாகாது. ஸூர்யனை மேகங்கள் மூடினும், மூடாமல் விட்டிருப்பினும், அவற்றால் அவனுக்கு ஒரு தோஷமாவது, குணமாவது கிடையாதல்லவா? ஸூர்யனுக்கும் மேகங்களுக்கும் உண்மையில் ஒரு ஸம்பந்தமும் இல்லையாகையால், அவைகளால் அவனுக்கு ஒரு தோஷமும் உண்டாகாது. ஆத்மாவுக்கும், இந்த்ரியங்களுக்கும் அப்படியன்றே. ஆத்மாவுக்கு இந்திரிய நிக்ரஹத்தினால் (புலனடக்கத்தால்) குணமும், அதில்லாமையால் தோஷமும் உண்டே” என்கிறீரா? சொல்லுகிறேன்; கேட்பீராக. 

ஆகாயத்திற்கு, காற்று, அக்னி, ஜலம், பூமி இவற்றின் குணங்களால் எவ்விதமான மாறுபாடும் உண்டாகிறதில்லை. ஆகாயம், காற்றினால் உலர்கிறதில்லை; அக்னியால் எரிகிறதில்லை; ஜலத்தினால் நனைகிறதில்லை; பூமியின் துகள்களால் அழுக்கடைவதுமில்லை. மற்றும், போவதும் வருவதுமான குளிர், வெப்பம் முதலிய ருது (பருவ) குணங்களாலும், அதற்கு ஒரு விகாரமும் (வேறுபாடு) உண்டாகிறதில்லை. அவ்வாறே ப்ரக்ருதியைக் காட்டிலும் விலக்ஷணமும் (வேறானதும்), என்றும் ஒருவாறாயிருப்பதும் அஹம் (நான்) என்று கூறப்படுவதுமாகிய ஆத்மஸ்வரூபமும், ஸம்ஸார ஹேதுக்கள் (காரணங்கள்) என்று சொல்லப்படுகிற ஸத்வாதி குணங்களாலாவது, அவற்றின் கார்யங்களாலாவது, எவ்விதமான மாறுபாட்டையும் அடைகிறதில்லை. ஆகையால், பரப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் உடையவனுக்கு (த்யானத்தில் அறிந்தவனுக்கு), கர்ம வாஸனை உள்ளவர்களுடைய ஸஹவாஸம் (தொடர்பு) எத்தகைய கெடுதியையும் விளைக்கவல்லதன்று. 

ஆயினும், ரஜோ குணத்தின் கார்யமான காம, க்ரோதாதிகள் கஷாயராகம்போல் (காவிச்சாயம் போல்) வருந்தியும் போக்க முடியாதவை. அவை, பக்தியோகம் நிறைவேறினால், ஸுகமாகக் கழியும். ஆகையால், அந்த பக்தியோகம் நிறைவேறும் வரையில், அதைத் தடுக்கிற ரஜோகுணத்தை அழிக்கும் பொருட்டு, ப்ரக்ருதியின் பரிணாமங்களான சப்தாதி (உலகியல்) விஷயங்களில் மனப்பற்றுச் செய்யலாகாது. மனுஷ்யர்களுக்கு வியாதி வரும் பொழுது, அதற்கு நன்கு சிகித்ஸை (மருத்துவம்) செய்யாது விடுவார்களாயின், அது அடிக்கடி மேலெழுந்து தேஹங்களை வருத்துமல்லவா? அவ்வாறே கஷாயராகம் போல் (காவிச்சாயம் போல்) போக்க முடியாத புண்ய, பாப கர்மம் க்ஷீணிக்கப் (அழியப்) பெறாத குயோகி மனத்தை (கெட்ட வழியில் திரியும் மனதை) அது போனவழியெல்லாம் போக விடுவானாயின், அது சப்தாதி (உலகியல்) விஷயங்களில் பற்றுடையதாகி, அந்த யோகியை யோகத்தினின்று நழுவச்செய்யும்.  

தேவதைகள் பிறர் பெருமையைப் பொறுக்க மாட்டார்களாகையால், சப்தாதி விஷயங்களில் விருப்பமுற்று, அவற்றிற்காகப் பற்பல உபாயங்களில் (வழிகளில்) இழிந்து, முயற்சி செய்யும் காமுகர்களிடத்தில் (பற்று உள்ளவர்களிடத்தில்) ஆவேசித்து, பக்தி யோகத்தில் நுழைந்து, அது கைகூடப் பெறாமல் முயற்சி செய்யும் குயோகிகளுக்கு (கெட்ட வழியில் திரிபவர்க்கு) அவர்களுடன் ஸஹவாஸத்தை மூட்டிக் கலைப்பார்கள். அத்தகைய காமுகர்களோடு ஸஹவாஸம் (தொடர்பு) செய்வாராயின், யோகாப்யாஸத்தில் (யோகப் பயிற்சியில்) முயன்றவர் விக்னங்கள் (இடையூறுகள்) நேரிடப்பெற்று, பழைய அப்யாஸ (பழக்க) பலத்தினால் (தீவிரத்தினால்) விஷய வாஸனை மேலிட்டு, மீளவும் பக்தி யோகத்தை அனுஷ்டிக்க வல்லராக மாட்டார்கள்; கர்ம மார்க்கத்திலேயே விழுந்து கெட்டுப் போவார்கள். ஆகையால், அவர்களோடு ஸஹவாஸம்ம் (தொடர்பு) செய்யலாகாது. 

ஜந்து, சரீர பாதம் (உடல் விழும்) வரையில் ஸ்வயமாகவும், புண்ய பாபரூபமான ஏதேனுமொரு கர்மத்தைச் செய்கின்றது; வேறொரு ஜந்துவால் தூண்டப்பட்டும் செய்கின்றது. (ஸமஸ்த ஜந்துவும் ஸ்வ இச்சையாலாவது (தன் விருப்பத்தாலாவது), பர இச்சையாலாவது (பிறர் விருப்பத்தாலாவது), ஏதேனுமொரு கர்மத்தைச் செய்து கொண்டேயிருக்கும் அன்றிச் செய்யாதிருக்காது). “ஆனால், கர்மத்திலிழிந்தவர்களுடைய ஸஹவாஸத்தை (தொடர்பை) துறந்த போதிலும், ஏதேனுமொரு கர்மத்தில் ப்ரவேசம் நேருமேயன்றி நேராமற்போகாதே. அதனால் ஸம்ஸாரமும் உண்டாகுமே” என்றால், சொல்லுகிறேன், கேட்பீராக. 

ஏதேனுமொரு கர்மத்தைச் செய்வது தவறாதென்பது உண்மையே. ஆயினும், கர்மத்தில் இழிந்தவர்களுடைய ஸஹவாஸம் அனர்த்தங்களுக்கு இடமென்பதை அறிந்து, ஜ்ஞான ஆநந்த ஸ்வரூபனான (அறிவு, இன்ப வடிவான) ஆத்மாவின் அனுபவத்தினால் சப்தாதி (உலக) விஷயங்களில் பற்றையும் துறந்து, ப்ரக்ருதியின் பரிணாமமான தேஹத்தில் இருப்பினும் அதில் இராதவன் போலவே இருக்க வேண்டும். (ஏதேனுமொரு கர்மத்தைச் செய்யினும் செய்யாதவன் போலவே இருக்க வேண்டும். “படுத்தல் இருத்தல் முதலிய கர்மங்களைச் செய்து கொண்டிருப்பினும் எப்படி அவற்றைச் செய்யாதவனாவான்?” என்றால், சொல்லுகிறேன், கேளும். 

ஆத்ம ஸ்வரூபத்தை ஆராய்ந்தறிந்து, அதில் நிலைநின்ற மதியுடையவன் நிற்றல், இருத்தல், பின்தொடர்ந்து செல்லுதல், படுத்தல், ஸ்த்ரீ ஸம்போகம் செய்தல் (மனைவியைப் புணருதல்), அன்னத்தைப் புசித்தல் இவைகளைச் செய்யினும், மற்றும் ப்ரக்ருதி ஸ்வபாவத்தினால் விளைகிற பார்த்தல், தொடுதல் முதலிய செயல்களைச் செய்யினும், அதை அறிய மாட்டான். தேஹத்திலுண்டாகிற நிற்றல், இருத்தல் முதலிய இச்செயல்களை ஆத்மாவினிடத்தில் இருப்பதாக நினைக்க மாட்டான். அவ்வாறு நினையாமையே அவற்றைச் செய்யாமையாம். 

அறிவுடையவன், ப்ரதிகூலமான சப்தாதி விஷயங்களையும், அனுகூலமான சப்தாதி விஷயங்களையும், சரீரத்தையும் வெவ்வேறாகக் காண்பானாயினும், இவை எல்லாம் அநித்யம் (நிலையற்றவை) என்று ஊஹித்துத் தெரிந்து கொண்டிருப்பவனாகையால், அவற்றை நித்யம் (நிலையானவை) என்று நினைக்கமாட்டான். ஸ்வப்னத்தினின்றும் (கனவிலிருந்து) எழுந்தவன், ஸ்வப்னத்தில் கண்ட வஸ்துக்கள் நிலை நின்றவையென்று நினைப்பானோ? நினைக்கமாட்டானல்லவா? 

ஸத்வாதி குணங்களுக்கு அனுகுணமான புண்ய பாபகர்மங்களால் பலவாறாயிருக்கின்ற தேவ, மனுஷ்யாதி சரீரமும், தேஹாத்மாபிமானாதி (இந்த உடலே ஆத்மா முதலிய) அஜ்ஞானமும் (அறியாமையும்), ஜ்ஞான உத்பத்திக்கு (அறிவு ஏற்படுவதற்கு) முன்பு ஆத்மாவினிடத்தில் இருப்பதாகத் தோற்றும்; ஜ்ஞானோத்பத்திக்குப் பின்பு அந்த ஜ்ஞானத்தினால் அதெல்லாம் நிவர்த்திக்கின்றது. அந்த ஜ்ஞானம் உண்டான ஆத்மா, “நான் பருத்திருக்கிறேன்” என்று பருமன் முதலிய தேஹ தர்மங்களுக்கிடமாக முன்போல் தோற்றமாட்டான்; மோக்ஷத்தை அடைந்து, மீளவும் ஸம்ஸாரத்திற்குத் திரும்பமாட்டானாகையால், ஸம்ஹாராதிகளுக்கும் இடமாக மாட்டான். 

ஸூர்யன் உதிப்பானாயின், மனுஷ்யர்களுடைய கண்பார்வைக்குத் தடையான அந்தகாரத்தைப் (இருட்டைப்) போக்குவானன்றி, அதை விளைவிக்க மாட்டானல்லவா? இவ்வாறே என் ஸ்வரூபத்தைப் பற்றின அறிவு நன்கு விளையுமாயின், அது “நான் பருத்திருக்கிறேன். இளைத்திருக்கிறேன்” என்னுமிவை முதலிய எண்ணங்களுக்கிடமான புருஷ புத்தியின் அந்தகாரத்தையும் (இருட்டையும்), அதனால் விளையும் ஸம்ஸார பந்தத்தையும் (உலகியல் கட்டையும்) போக்கிவிடும். அஜ்ஞானம் (அறியாமை) தொலைந்து, பரிசுத்தனான ஜீவாத்மா ஸ்வயம் ப்ரகாசன் (தானே தோன்றுபவன்); ஜன்மாதி (பிறப்பு முதலிய) விகாரங்கள் (மாறுபாடுகள்) அற்றவன்; ப்ரத்யக்ஷாதி ப்ரமாணங்களால் அறிய முடியாதவன்; அளவிட முடியாத ஜ்ஞானமுடையவன்; எல்லாவற்றையும் அறியும்படியான அறிவுடையவன்; என்றும் ஒருவாறாயிருப்பவன்; ப்ராக்ருத (ப்ரக்ருதி தொடர்புடைய) தேஹம் (உடல்) அற்றவன்; ஆனது பற்றியே தேவ, மனுஷ்யாதி சப்தங்களுக்கு விஷயமாகாமல், தன்னிடத்தில் அவற்றின் ஸம்பந்தம் முடியப் பெற்றிருப்பவன். 

வாக்கும், ப்ராணன்களும் இவனால் தூண்டப் பட்டவைகளாகியே தத்தம் கார்யங்களைச் செய்ய வல்லவைகளாகின்றன: ப்ரக்ருதியைப் பற்றி வருவதான தேவ, மனுஷ்யாதி ஆகார (உருவ) பேதம் (வேறுபாடு) அற்ற ஆத்ம ஸ்வரூபத்தை மறந்து, “நான் தேவன். நான் மனுஷ்யன். நான் பருத்திருக்கிறேன். நான் இளைத்திருக்கிறேன்” என்னும் இவை முதலான தேஹ தர்மங்களை, கேவல ஜ்ஞான ஸ்வரூபனான அந்த ஆத்மாவினிடத்தில் இருப்பதாக அபிமானிக்கையாகிற (நினைப்பதாகிற), இவ்வளவே ஸம்ஸாரத்திற்கு ஹேதுவான (காரணமான) ஆத்ம ஸம்மோஹமாம் (மயக்கமாம்). இதையே ஆத்ம ஜ்ஞானத்தினால் போக்க வேண்டுமென்று பலவாறு கூறப்பட்டது. 

நாம-ரூபங்களால் அறியத் தக்கதும், பஞ்ச பூதங்களால் உண்டானதாகையால் பஞ்சவிதமாயிருப்பதுமாகிய சரீரமும், ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களும், நித்யமென்றும், “நான் தேவன். நான் மனுஷ்யன். நான் இளைத்திருக்கிறேன். நான் பருத்திருக்கிறேன்” என்றும் நினைக்கையாகிற இவ்விரண்டு நினைவுகளும், தம்மைப் பண்டிதர்களாக நினைத்துக் கொண்டிருக்கிற மூடர்களின் அர்த்தவாதமே அன்றி (இல்லாத பொருளை ஏறிட்டுச் சொல்லும் வார்த்தையே அன்றி) உண்மையன்று. இவ்விரண்டு நினைவுகளும், ஆத்ம ஸம்மோஹமேயாம். (ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறியாமையால் விளைந்த பெரிய மயக்கமேயாம்.) 

யோகத்தில் இழிந்து, அது கைகூடப் பெறாத யோகி, அதை நிறைவேற்றும் பொருட்டு, மேன்மேலும் யோகத்தை அப்யஸித்துக் (பயிற்சி செய்து) கொண்டிருக்கையில், தேஹம் (உடல்), ரோகம் (வியாதி) முதலிய உபத்ரவங்களால் (தொந்தரவுகளால்) யோகாப்யாஸத்திற்கு (யோகப் பயிற்சிக்கு) உபயோகப் படாதபடி தடைபடுமாயின், அவ்விஷயத்தில் இவ்வாறு சிகித்ஸை (தீர்வு) ஏற்பட்டிருக்கின்றது. ஸோம தாரணை, ஸூர்யதாரணை, அக்னிதாரணை முதலிய யோக தாரணையால் (சந்திரன், ஸூர்யன், நெருப்பு முதலியவற்றை த்யானம் செய்தல்) வெப்பம், குளிர் முதலிய சில உபத்ரவங்களையும் (தொந்தரவுகளையும்), வாயுதாரணையோடு கூடிய ஆஸவங்களால் வாதரோகம் (பக்கவாதம் முதலிய நோய்) முதலிய சில உபத்ரவங்களையும், தவம், மந்த்ரம், ஓஷதி (மூலிகை) முதலிய உபாயங்களால் (வழிகளால்) பாபக்ரஹம், ஸர்ப்பம் முதலியவற்றால் விளையும் சில உபத்ரவங்களையும், என்னுடைய த்யானத்தினாலும் என்னுடைய நாம ஸங்கீர்த்தனாதிகளாலும் காமம் (ஆசை), க்ரோதம் (சினம்) முதலிய சில உபத்ரவங்களையும், யோக நிஷ்டனான (யோகத்தில் நிலையுடைய) ஆசார்யனுடைய அனுவர்த்தனத்தினால் (கீழ்ப்படிதலால்) ஜம்பம் (வீண் பெருமை) முதலிய சில உபத்ரவங்களையும் போக்க வேண்டும். 

இவ்வாறு சுபமான உபாயங்களால் (வழிகளால்) அசுபங்களை (தீமைகளை) விளைக்குபவைகளான உபத்ரவங்களையெல்லாம் தொலைத்து, யோகத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். வேறு சில அறிஞர்கள், வயது முதிர்ந்த சரீரத்தையும், மந்தரம், ஒளஷதம் (மூலிகை) முதலிய பல உபாயங்களால் திடமாக்கிக் கொண்டு, குளிர், வெப்பம் முதலிய த்வந்த்வம் (இரட்டை) அற்றிருக்கை, பரகாய ப்ரவேசம் (வேறு உடலில் நுழைதல்) முதலிய ஸித்தியின் பொருட்டு ப்ரயத்னம் (முயற்சி) செய்கிறார்கள். அதைப் பெரியோர்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஏனென்றால், சரீரத்தின் உறுதிக்காகப்படும் ப்ரயத்னம் (முயற்சி) எல்லாம் நிஷ்ப்பலம் (பயனற்றவை) அல்லவா? அச்சரீரம், வ்ருக்ஷத்தின் (மரத்தின்) பலன் போல் அநித்யமே (நிலையற்றதே)அன்றி நித்யமன்றல்லவா? 

மந்த்ர, ஒளஷதாதிகளால் இந்த்ரியங்களுக்குத் திறமையை விளைத்துக் கொள்ளினும், ஆயுளை வளர்த்திக் கொள்ள முடியாதல்லவா? ஆகையால், தேஹத்தின் உறுதிக்காகப் பொழுது போக்குவதைத் துறந்து, அக்காலத்திலும் யோகாப்யாஸம் (யோகப் பயிற்சி) செய்வதே நலம். இடைவிடாமல் யோகாப்யாஸம் செய்து கொண்டுவரில் சரீரம் உறுதியுற்று வரும். மதி (புத்தி) உடையவன், யோகாப்யாஸத்தை விட்டு, “இனி இச்சரீரத்திற்கு அழிவில்லை. இது உறுதியாய் விட்டது. இதைக்கொண்டு போகங்களை அனுபவிப்போம்” என்று அவ்வுறுதியை நம்பலாகாது. இந்த யோகாப்யாஸத்தை விடாமல் அனுஷ்டிக்கும் யோகி, என்னையே அவலப்பமாக (பற்றுக்கொம்பாகப்) பற்றி, அணிமாதி ஸித்திகளில் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன- 

  1. அணிமா-சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

  2. மஹிமா-பெரிதாக்கிக்கொள்ளுதல் 

  3. லகிமா-லேசாகச் செய்தல் 

  4. கரிமா-கனமாக்கிக்கொள்ளுதல் 

  5. வசித்வம்-எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

  6. ஈசத்வம்-எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

  7. ப்ராப்தி-நினைத்த பொருளைப் பெறுதல் 

  8. ப்ராகாம்யம்-நினைத்தவிடம் செல்லும் வல்லமை

விருப்பம் அற்று, எனக்குச் சேஷமாய் (அடிமையாய்) இருக்கையையே முக்ய ரஸமாகவுடைய ஆத்மாவின் அனுபவத்தினால் த்ருப்தி அடைந்து, எத்தகைய விக்னங்களாலும் (இடையூறுகளாலும்) தடைபடாமல் கடைத்தேறுவான்.

இருபத்தெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை