செவ்வாய், 7 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 335

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தொன்பதாவது அத்தியாயம்

(பகவான் உத்தவருக்கு மீளவும் பக்தியோகத்தைக் காட்டிலும் ஸுகரமான (எளிதான) உபாயத்தை உபதேசித்தல்.)

உத்தவர் சொல்லுகிறார்:- அச்சுதனே! (பற்றினவர்களைக் கைவிடாது பாதுகாக்கும் தன்மையனே!) இந்திரியங்களை (புலன்களை) வெல்ல முடியாதவனுக்கு இந்த யோகாப்யாஸம் (யோகப் பயிற்சி) அனுஷ்டிக்க (செய்வது) நிரம்ப வருத்தமாயிருக்கும் என்று எனக்குத் தோற்றுகிறது. புருஷன் அனாயாஸமாக (எளிதாக) எப்படி ஸித்தியைப் பெறுவானோ, அப்படி ஒரு உபாயத்தை ஸ்பஷ்டமாக (தெளிவாகச்) சொல்லவேண்டும். 

செந்தாமரைக் கண்ணனே! மனத்தை வசப்படுத்த முயன்ற யோகிகள், அதற்காகச் செய்யும் உபவாஸாதிகளால் (உண்ணா நோன்பு) இளைத்து, அவ்வளவிலும் மனம் குதிரப்பெறாமையால் (நிலை பெறாமையால்) பெரும்பாலும் வருந்துகிறார்கள். ஆகையால், “இது நன்று. இது தீது” என்னும் விவேகமுடையவர்கள் ஆநந்தத்தைக் கறக்கின்ற உன் பாதார விந்தத்தையே உபாயமாகப் பற்றுகிறார்கள். 

ஜகதீசனே! இவர்கள் உன்னுடைய மாயையில் அகப்பட்டு ஏமாறுகிறதில்லை. ஏனென்றால், “நாம் பக்தி யோகம் செய்கிறோம்” என்னும் கர்வமாவது, “நாம் கர்மயோகம் செய்கிறோம்” என்னும் கர்வமாவது அவர்களுக்குக் கிடையாதல்லவா? மற்றவர்களோ என்றால் அவ்வாறு கர்வப்படுவதற்கு இடமுண்டாகப் பெற்று, அந்த துரபிமானத்தினால் (வீண் கர்வத்தால்) உன்னுடைய மாயையில் அகப்பட்டு, ஏமாறுகிறார்கள். 

அச்சுதனே! (ஆச்ரிதர்களைக் கைவிடாதவனே!) இன்னவன் இனையவனென்று தரம் பாராமல் அனைவர்க்கும் பந்துவாயிருப்பவனே! உன்னைப் பற்றின மாத்ரத்தினால் உன்னுடைய மாயையைத் தாண்டுவதென்னும் இதுவும், நீ உன்னை ஒழிய வேறொரு சரணமறியாத உன் பக்தர்களிடத்தில் இட்ட வழக்காயிருப்பதுவும், உன் தன்மையை உணர்ந்தவர்களுக்கு ஓர் ஆச்சர்யமன்று. ஜகதீச்வரர்களான ப்ரஹ்மாதிகளுடைய அழகிய கிரீடங்கள் உறையும்படியான பாத பீடத்தை (கழல்களை) உடையவனாயினும் நீ ப்ருந்தாவனத்தில் பசுக்களை வேணுகானத்தினால் களிப்புறச் செய்துகொண்டு, அவைகளுடன் கலந்திருத்தலைப் பெறாப்பேறாக விரும்பினாய் அல்லவா? மற்றும், ராமாவதாரத்தில் வானரங்களின் ஸ்னேஹத்தை (நட்பை) விரும்பி, அவைகளுடன் கலந்திருந்தாய் அல்லவா? அத்தகைய பரத்வ (மேன்மை), ஸௌலப்ய (எளிமை), வாத்ஸல்ய (பரிவு), ஸௌசீல்யாதி (பெரியவராய் இருந்தும், தாழ்ந்தோரிடம் இரண்டறக் கலந்து பறிமாறுதல்) குணங்களுடையவனானது பற்றியே ஸமஸ்த ஆத்மாக்களுக்கும் அன்பனும், ஸ்வாமியும், ஆச்ரிதர்களுடைய (அடியவர்களுடைய) விருப்பங்களையெல்லாம் ஈடேற்றிக் கொடுப்பவனுமாகிய உன்னை, நீ செய்யும் உபகாரங்களை அறிந்தவன் எவன் தான் கைவிடுவான். 

க்ருதஜ்ஞர்களுக்கு (செய்நன்றி அறிந்தவர்களுக்கு) நீயே பற்றத் தகுந்தவன். ஆத்ம ஸ்வரூபத்தை மறக்கடிக்கும் படியான ஐச்வர்யத்திற்காக எவன் தான் உன்னைத் தவிர வேறொரு தெய்வத்தைப் பணிவான்? ஆரோக்யம், பாக்யம் முதலியவற்றிற்காக ஸூர்யன், அக்னி முதலிய தேவதாந்தரத்தைப் (பிற தேவதைகளைப்) பணிய வேண்டாமோ என்றால், வேண்டியதே இல்லை. உன்னுடைய பாததூளியைப் பணிகிற எங்களுக்கு, எந்த நன்மைதான் ஸித்திக்காது. நாங்கள் விரும்ப மாட்டோமே ஒழிய, விரும்பினால் எல்லாம் ஸுலபமே ஆம். ஜகதீசனே! அறிவுடையவர்கள் நீ செய்த உபகாரத்தை நினைத்து மிகுந்த ஸந்தோஷம் அடைந்து, ப்ரஹ்மாவின் ஆயுஸ்ஸினாலும் நீ செய்யும் உபகாரத்திற்கு ப்ரத்யுபகாரம் (பதில் உதவி) செய்ய முடியாதிருக்கிறார்கள். அவ்வுபகாரந்தான் யாதெனில், சொல்லுகிறேன்.

நீ அறியாதன அறிவிக்கும் ஆசார்ய உருவத்தினாலும், த்யானிக்குமவர்களுடைய சிந்தையில் திகழும் உருவத்தினாலும், ப்ராணிகளின் அசுபத்தை (தீமையைப்) போக்கிக்கொண்டு உன்னுடைய உண்மையை வெளியிடுகிறாயே, இதைக் காட்டிலும் வேறு உபகாரம் யாது வேண்டும்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஜகத்தை விளையாட்டுக் கருவியாக உடையவனும், தனக்கு அஸாதாரணமான ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹார (அழித்தல்) ஸாமர்த்யங்களாகிற சக்திகளால் ப்ரஹ்ம, விஷ்ணு, சிவர்களென்கிற மூன்று உருவங்களை ஏற்றுக் கொள்பவனும், ஜகதீச்வரர்களென்று ப்ரஸித்தர்களான (பிரபலமான) ப்ரஹ்மாதிகளுக்கும் ஈச்வரனுமாகிய பகவான் மிகவும் அனுராகம் (அன்பு) நிறைந்த மனமுடைய உத்தவரால் இவ்வாறு வினவப் பெற்று, ப்ரேம (பக்தி) வெள்ளம் நிறைந்த அழகிய புன்னகையுடையவனாகி, மேல் வருமாறு கூறினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஓ உத்தவரே! மிகவும் மங்கலமான என்னுடைய தர்மங்களை உமக்குச் சொல்லுகிறேன்; கேட்பீராக. இந்த தர்மங்களை ச்ரத்தையுடன் அனுஷ்டிப்பானாயின், ஜயிக்க முடியாத ஸம்ஸாரத்தை ஜயித்து விடுவான். 

ஸங்கல்ப விகல்ப (மாறி மாறி எண்ணும்) ரூபமான மனத்தையும், நிர்மலமாய் (அழுக்கற்று) இருக்கை, விகாரம் (மாறுபாடு) அற்றிருக்கை, சாந்தமாய் (அமைதியாய்) இருக்கை இத்தன்மைகளையுடைய சித்தத்தையும் என்னிடத்தில் நிறுத்தி, என்னுடைய தர்மங்களை அனுஷ்டிப்பதில் ஸங்கல்ப விகல்பரூபமான மனோவ்ருத்தி (எண்ணம்) உடையவனாகி, என்னுடைய ஆராதனங்களென்னும் எண்ணத்துடன் வர்ணாச்ரம கர்மங்களை எல்லாம் மெல்ல மெல்ல அனுஷ்டிக்க வேண்டும். மற்றும், என்னிடத்தில் பக்தி செய்யும் பற்றற்ற ஸாதுக்கள் சுற்றி வாழும் புண்ய தேசங்களைப் பூஜிக்க வேண்டும். தேவதைகளிலும், அஸுரர்களிலும், மனுஷ்யர்களிலும் என்னிடத்தில் பக்தியுடைய பெரியோர்களின் நன்னடத்தைகளை மனத்தாலும், வாயாலும் வெகுமதித்து, காயத்தாலும் கூடுமானவரையில் அனுஷ்டிக்க வேண்டும். தான் தனியாகவாவது, பலருடன் கலந்தாவது, ந்ருத்தம் (நடனம்), கீதம் (பாட்டு) முதலிய மஹாராஜ உபசாரங்களுடன் ஸமஸ்த விதமான யாத்ரா மஹோத்ஸவங்களையும் நடத்த வேண்டும். மனத் தூய்மை உடையவனாகி, ஆகாசம் போல் ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும், தன்னிடத்திலும், உள்ளும், வெளியும் மறைவின்றி நிறைந்திருப்பவனும், உள்ளே புகுந்து நியமித்துத் தரித்துக் கொண்டிருப்பவனுமாகிய என்னை ஆராய்ந்தறிய வேண்டும். 

பேரொளி உடையவரே! நான் இப்படி ஸர்வாந்தராத்மாவாய் (எல்லாவற்றிற்கும் உள் இருக்கும் ஆத்மாவாய்) வியாபித்திருப்பவனாகையால், ஸமஸ்த பூதங்களும் என்னை விட்டுப் பிரிந்திருப்பவை அன்று என்றும், எனக்குச் சரீரமாயிருப்பவை என்றும் நினைத்து, அந்நினைவுடன் எல்லாவற்றையும் வெகுமதித்துக் கொண்டு, வைஷம்யமில்லாத (வேறுபாடு அற்ற) அறிவுடையவனாயிருக்க வேண்டும். ப்ராஹ்மணன், புலையன், ப்ராஹ்மணர் ஸொத்தைத் திருடினவன், ப்ராஹ்மணரிடத்தில் பக்தி கொண்டு அவர்களுக்கு வேண்டுவன செய்பவன், ஸூர்யன், நெருப்புத் துணுக்கையின் கொடுந்தன்மை இல்லாதவன், கொடுத்தன்மை உடையவன் ஆகிய இவை எல்லா இடத்திலும் தாரதம்யம் (ஏற்றத்தாழ்வு) இல்லாமல் எல்லாவற்றையும் ஸமமாகப் பார்ப்பவன், பண்டிதனாவான். 

ப்ராஹ்மணாதிகள் அனைவரிடத்திலும் சரீரங்கள் (உடல்கள்) ப்ரக்ருதி பரிணாமங்கள் (ப்ரக்ருதியின் மாறுபாடுகள்) ஆகையால், ஒரு படிப்பட்டவைகளே. ஆத்மாக்கள், ஜ்ஞானத்தையே வடிவாக உடையவராகையால், ஒரு படிப்பட்டவர்களே. இவ்விரண்டும் பரமபுருஷனுக்குச் சரீரமாகையால் ஒருபடிப்பட்டவைகளே என்று எல்லாவற்றையும் ஸமமாகப் பார்ப்பவனே, பண்டிதனாவான். இந்த ஸமதர்சனத்தினால் (ஸமமாகப் பார்ப்பதால்) என்ன உபயோகமென்றால், சொல்லுகிறேன்; கேட்பீராக. 

ஸமஸ்த வஸ்துக்களிலும் என்னுடைய பாவனையை மாறாமல் நடத்திக்கொண்டு வருவானாயின், (எல்லா வஸ்துக்களும் பகவானுக்குச் சரீரங்களாகையால் அவனைக் காட்டிலும் வேறுபட்டவை அல்ல. அவனே என்னும் பாவனையோடிருப்பானாயின்) அப்புருஷனுக்கு அஹங்காரமும், ஸ்பர்த்தை, அஸுயை, திரஸ்காரம் இவைகளும் விரைவில் மறைந்து போகின்றன. (அஹங்காரமாவது தேஹாத்மாபிமானம். ஸ்பர்த்தையாவது கலஹம். அஸூயையாவது குணங்கள் இருப்பினும் தோஷத்தையே வெளியிடுந்தன்மையாம். குணங்களையே தோஷமாக நிரூபிக்கும் தன்மை அஸூயை என்றும் சொல்லுவதுண்டு. திரஸ்காரமாவது அவமானம். தன் விஷயத்திலும், பிறர் விஷயத்திலும் உள்ள இவை எல்லாம் கீழ்ச்சொன்ன பாவனையுடையவனுக்கு மறைந்து போகும்) 

“ஜகதீசனே! உன்னுடைய பாவனை திடமாயிருக்குமாயின், ஸ்பர்த்தை முதலியவை மறைந்து போகும். அந்த பாவனை துர்லபமாய் (கிடைத்தர்கு அரிதாய்) இருக்கின்றதே” என்றால் அதற்கு உபாயம் (வழி) சொல்லுகிறேன். மிருகங்களில் நாய் வரையிலும், மனுஷ்யர்களில் சண்டாளன் வரையிலும், பசுக்களில் கழுதை வரையிலுமுள்ள ஸமஸ்த ஜந்துக்களிடத்திலும் நிஹீன (தாழ்ந்த) புத்தியில்லாமல், “இவையெல்லாம் ஈச்வரனுடைய சரீரங்களே” என்னும் பாவனையுடன் அவற்றை வணங்க வேண்டும். “இவன் என்ன இப்படி செய்கிறானே, இவனுக்குப் பித்தம் பிடித்ததோ!” என்று தன் பந்துக்கள் பரிஹஸிக்கினும் (கேலி செய்யினும்), அவர்களைப் பொருள் செய்யலாகாது. மற்றும், “நான் மேம்பட்டவன். இவை தாழ்ந்தவை” என்னும் கர்வத்தையும், தேஹங்களில் தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வுகள்) பற்றி வரும் வெட்கத்தையும் துறக்க வேண்டும். (ஜனங்களுடைய பரிஹாஸத்தையும் (கேலியையும்), தன்னுடைய மேன்மையையும், தேஹ தாரதம்யத்தைப் பற்றின லஜ்ஜையையும் (வெட்கத்தையும்) பார்த்தால், இந்த பாவனை நிறைவேறாது. ஆகையால் அவற்றை எல்லாம் துறக்க வேண்டும்.) 

ஸமஸ்த பூதங்களிலும் என்னுடைய பாவனை எதுவரையில் உண்டாகாதிருக்குமோ, அதுவரையில் வாக்கு, மனம், சரீரம் என்கிற மூன்று கரணங்களின் வ்யாபாரங்களாலும், இவ்வாறு அப்யஸிக்க (பயிற்சி செய்ய) வேண்டும். வாக்கின் வ்யாபாரமாவது எந்த வஸ்துவைப் பார்க்கினும், “பகவானுக்கு நமஸ்காரம்” என்று மொழிகை. மனதின் வ்யாபாரமாவது, “இது பகவானுடைய சரீரம்” என்று நினைக்கை. சரீரத்தின் வியாபாரமாவது, தண்டம் போல் விழுந்து நமஸ்கரிக்கை. இப்படி உபாஸித்துக்கொண்டு வருவானாயின், அவனுக்கு எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமாகவே (பகவானின் வடிவாகவே) தோன்றும்.

எல்லாம் பரமாத்ம ஸ்வரூபமே என்னும் பாவனையாகிற வித்யையால் எல்லாவற்றையும் அவ்வாறே ஸாக்ஷாத்கரிக்கும் (பார்க்கும்) புருஷன், “தேஹமே ஆத்மாவா? அல்லது தேஹத்தைக் காட்டிலும் வேறு பட்டவனா? அவன் ஸ்வதந்த்ரனா? அல்லது பரமாத்மாவுக்குப் பரதந்த்ரனா” என்னும் இத்தகைய ஸம்சயங்கள் (ஸந்தேஹங்கள்) எல்லாம் தொலைந்து, ஸமஸ்த விதமான ஸம்ஸார நிமித்தத்தினின்றும் (உலகியல் துன்பங்களுக்குக் காரணங்களிடமிருந்து) விடுபடுவான். மனம், வாக்கு, சரீரம் ஆகிய இம்மூன்று கரணங்களாலும், ஸமஸ்த பூதங்களும் பரமாத்ம ஸ்வரூபங்களேயென்று பாவிக்கையாகிற இதுவே, மோக்ஷ உபாயங்களெல்லாவற்றிலும் சிறந்த உபாயமென்பது என்னுடைய அபிப்ராயம். 

உத்தவரே! எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமேயென்னும் பாவனையாகிற இந்த என் தர்மத்தை அனுஷ்டிக்கத் தொடங்குகையில், இது பலனைக் கொடாமல் வீணாகாது. இது நான் நிச்சயித்த விஷயம். வேறொரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமற் செய்கிற என்னுடைய தர்மம், ஸத்வாதி குண மூலமான ஸம்ஸார பந்தத்திற்கு (உலகியல் கட்டிற்கு) ஹேதுவாகாது (காரணமாகாது) ஆகையால், அப்பொழுதாயினும், காலாந்தரத்திலாயினும் (பின்போ) பலித்தே தீரும். (இதை ஆரம்பித்துவிடினும் பலிக்குமென்றால், இதைப் பூர்ணமாக அனுஷ்டிக்கில் இது வீணாகாது என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?). 

உலகத்தில் சிந்தித்தல், கண் சிமிட்டல் முதலிய நிஷ்ப்ரயோஜன (பயனற்ற) வ்யாபாரங்கள் எவ்வெவை உண்டு; மற்றும், கேவலம் ஆயாஸ (சிரம) ரூபமான வ்யாபாரங்கள் எவ்வெவை உண்டு; அவை எல்லாவற்றையும் பரமபுருஷனாகிய என்னிடத்தில் அனன்ய ப்ரயோஜனமாக (வேறு பலனை விரும்பாது) அர்ப்பணம் செய்வானாயின், அதுவும் தர்மமேயாம். கம்ஸாதிகளுடைய பயம் முதலியவையே தர்மமாயின அல்லவா? (கம்ஸாதிகள் பரமபுருஷனுடைய ஸாரூப்யம் (ஒத்த உருவம்) பெற்றதற்கு அவர்களுடைய பயம் முதலியவையே காரணமாயின. அநித்யமாகிய (நிலையற்ற) மனுஷ்ய சரீரத்தினால் நித்யனும் (அழிவற்றவனும்), நிர்விகாரனுமாகிய (மாறுபாடு அற்றவனுமான) என்னைப் பெறுகையே புத்திமான்களுடைய புத்திக்கும், மனீஷிகளுடைய மனீஷைக்கும் பலன். (புத்தியாவது அத்யவஸாயம் (உறுதி). மனீஷையாவது ஹிதாஹிதங்களை (நன்மை, தீமைகளைப்) பிரித்தறிகை) வேதாந்த ஸித்தமான பொருளை எல்லாம் இவ்வாறு ஸங்க்ரஹமாகவும் (சுருக்கமாகவும்), விஸ்தாரமாகவும் (விரிவாகவும்) உமக்கு மொழிந்தேன். இது தேவதைகளுக்கும் கிடைக்க அரிது.

சேதன, அசேதன, ஈச்வரர்களுடைய ஸ்வரூப ஜ்ஞானத்தையும் ஈச்வர உபாஸன (த்யான) ரூபமான ஜ்ஞானத்தையும், ஸ்பஷ்ட (தெளிவான) யுக்திகளுடன் உமக்குப் பலவாறு மொழிந்தேன். இதை அறிவானாயின், அப்புருஷன் ஸந்தேஹம் தீர்ந்து, ஸம்ஸாரத்தினின்று விடுபடுவான். நீ கேட்ட விஷயத்தை நன்கு விவரித்து நிரூபித்துச் சொன்னேன். இதை அறிந்து மறவாதிருப்பவன், வேதாந்த ரஹஸ்யமும், ஸனாதனமுமான பரப்ரஹ்மத்தை அடைவான். நான் விவரித்துச் சொன்ன இந்த ஜ்ஞானத்தை எவன் என் பக்தர்களுக்கு உபதேசிக்கிறானோ, ப்ரஹ்மோபதேசம் செய்த அப்புருஷனுக்கு, ஆத்மாவுக்கும் அந்தராத்மாவான என்னைக் கொடுப்பேன். (அவனுக்கு நான் இஷ்டப்படி வரியனாயிருப்பேன்). சொல்லுகிறவர்களுக்கும், கேட்கிறவர்களுக்கும் சுத்தியை விளைப்பதான இந்த ஜ்ஞானத்தை எவன் கற்கிறானோ, அவன் ஜ்ஞானமாகிற தீபம் நாள்தோறும் வளர்ந்து வரப்பெற்று, அந்த ஜ்ஞான தீபத்தினால் என்னை ஸாக்ஷாத்கரித்து (நேராகப் பார்த்து அறிந்து), என்னைப் பெறுதற்குத் தடையான பாபங்கள் தீர்ந்து, பரிசுத்தனாவான். இதை எவன் மனவூக்கமுற்று ச்ரத்தையுடன் தினந்தோறும் கேட்கிறானோ, அவன் என்னிடத்தில் மிகுந்த பக்தி விளையப்பெற்று, என்னைப் பெறுதற்குத் தடையான பாபங்களால் தீண்டப்படமாட்டான். 

உத்தவரே ! நண்பரே! நான் மொழிந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தையும், அதன் ஸாதனாதி (வழியான) ஜ்ஞானத்தையும் நன்றாகக் கேட்டுத் தெரிந்து கொண்டீரா? (தெரியாத பக்ஷத்தில் மீளவும் உபதேசிக்கிறேன்). தேஹாத்ம ப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்த்ராத்ம ப்ரமம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) முதலிய மோஹமும் (மயக்கமும்), அதனாலுண்டாகும் மனவருத்தமும், உமக்குத் தீர்ந்ததா? இதை நீர் டாம்பிகனுக்கும் (வீண் பெருமை கொண்டவனுக்கும்), சாஸ்த்ரார்த்தங்களில் விச்வாஸம் (நம்பிக்கை) இல்லாதவனுக்கும், மூர்க்கனுக்கும் (முட்டாளுக்கும்), சுஷ்ரூஷை (பணிவிடை) செய்யாதவனுக்கும், பக்தியில்லாதவனுக்கும், வணக்கமில்லாதவனுக்கும் உபதேசிக்கலாகாது. 

இந்த தோஷங்களெல்லாம் தீண்டப்பெறாதவனும், ப்ராஹ்மணர்களிடத்தில் நன்மையுடையவனும், ப்ரீதியுடையவனும், பரோபகாரம் (பிறர்க்கு உதவி) செய்யும் தன்மையனுமாகிய ஸாதுவுக்கு, இதை உபதேசிக்க வேண்டும். கீழ்குலத்தோருக்கும், ஸ்த்ரீகளுக்கும் (பெண்களுக்கும்) இதில் ச்ரத்தை (ஈடுபாடு) உளதாயின், அவர்களுக்கும் இதை உபதேசிக்கலாம். தத்வத்தை அறிய வேண்டும் என்னும் விருப்பமுடையவனுக்கு, இதை அறிந்த பின்பு அறியவேண்டிய விஷயம் மற்றொன்று கிடையாது. 

அம்ருத பானம் செய்தவனுக்கு, பானம் செய்ய வேண்டியது மற்றொன்று கிடையாதல்லவா? ஜ்ஞானம், கர்மம், யோகம், க்ருஷி (விவசாயம்), தண்ட நீதி இவைகளை நடத்தும் பொழுது, மனுஷ்யர்கள் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களையே (மனிதனால் விரும்பி அடையப்பட வேண்டியவை) உத்தேசித்து நடத்துகிறார்கள். உன்னைப் போன்ற பக்தனுக்கு, அவையெல்லாம் நானேயன்றி வேறில்லை. (ஜ்ஞானத்திற்குப் பலன் மோக்ஷம். கர்மத்திற்குப் பலன் தர்மம். யோகத்திற்குப் பலன் அணிமாதி ஸித்திகள் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன

  1. அணிமா-சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

  2. மஹிமா-பெரிதாக்கிக்கொள்ளுதல் 

  3. லகிமா-லேசாகச் செய்தல் 

  4. கரிமா-கனமாக்கிக்கொள்ளுதல் 

  5. வசித்வம்-எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

  6. ஈசத்வம்-எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

  7. ப்ராப்தி-நினைத்த பொருளைப் பெறுதல் 

  8. ப்ராகாம்யம்-நினைத்தவிடம் செல்லும் வல்லமை

க்ருஷி, தண்டநீதி இவைகளுக்குப் பலன் அர்த்தம் (பணம்). அந்த அர்த்தத்திற்குப் பலன் காமம். அணிமாதிகளும் காமத்தில் (ஆசையில்) அடங்கினவைகளே. 

என்னிடத்தில் பக்தியுடையவர்கள், இப்புருஷார்த்தங்களில் எதையும் விரும்பாமல் என்னையே விரும்புவார்கள். என்னை ஒழிய மற்றெதையும் விரும்பமாட்டார்கள். அனுக்ரஹிக்க விரும்புகின்ற என்னிடத்தில் ஆத்ம ஸமர்ப்பணம் செய்து, என்னுடைய ஆராதந ரூபமான கர்மங்களைத் தவிர மற்ற கர்மங்களை எல்லாம் துறந்திருப்பானாயின், அப்பொழுது என்னுடைய அனுக்ரஹத்தினால் ஸம்ஸாரத்தினின்று (உலகியல் துன்பங்களிலிருந்து) விடுபட்டு, இயற்கையில் ஏற்பட்டிருக்கிற அபஹதபாப்மத்வம் (பாபமின்மை) முதலிய குணங்கள் அமைந்த ஸ்வரூபம் தோன்றப் பெற்று, என்னுடைய ஸாரூப்யத்தை (ஒத்த உருவத்தைப்) பெறுவான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அவ்வுத்தவர் இவ்வாறு பகவானால் ஜ்ஞான யோக மார்க்கம் உபதேசிக்கப் பெற்று, உத்தமச்லோகனான அந்த பகவான் மீளவும் மொழிந்த வசனங்களையும் கேட்டு, ப்ரீதியினால் கண்டத்தில் (தொண்டையில்) கண்ணீர் வந்தடைக்கப் பெற்று, ஆநந்த நீர் நிறைந்த கண்களுடையவருமாகி, அப்பொழுது ஒன்றும் பேசாதிருந்தார். 

மன்னவனே! பிறகு ப்ரணயத்தினால் (அன்பினால்) கலங்கின மனத்தை மெல்ல மெல்ல தைர்யத்தினால் வசப்படுத்திக் கொண்டு, தன்னை அப்பரம புருஷனுடைய அனுக்ரஹத்தினால் க்ருதக்ருத்யனாக (ப்ரயோஜனங்களெல்லாம் கைகூடப்பெற்றவனாக) நினைத்து, யதுகுல மஹாவீரனான அன்னவனுடைய பாதார விந்தங்களைச் சிரத்தினால் (தலையினால்) பரிசித்து (தொட்டு) கைகுவித்துக்கொண்டு, மேல்வருமாறு கூறினார்.

உத்தவர் சொல்லுகிறார்:- நான் கைப்பற்றியிருந்த மோஹமாகிற (மயக்கமாகிற) பேரிருள் உன்னுடைய ஸந்நிதானத்தினாலேயே ஓடிப் போயிற்று. ப்ரஹ்ம தேவனுக்கும் ஆதியாகிய மஹாதேவனே! ஸூர்யனுடைய அருகாமையில் சென்றவனுக்குக் குளிரும், இருட்டும், அவற்றைப்பற்றின பயமும், தலையெடுக்குமோ? தலையெடுக்க மாட்டாவல்லவா? அவ்வாறே உன்னுடைய ஸந்நிதான (அருகாமை) மாத்ரத்தினால் என்னுடைய அஜ்ஞானம் பறந்தோடிப் போய் விட்டது. ஆயினும், கருணாநிதியாகிய நீ, உன் ப்ருத்யனாகிய (சேவகனான) எனக்கு விஜ்ஞான மயமான தீபத்தைக் கொடுத்தாய். இவ்வாறு நீ செய்த உபகாரத்தை அறிந்தவன் எவன்தான் உன்னுடைய பாத மூலத்தை விட்டு மற்றொன்றைச் சரணமடைவான்? 

பந்துக்களாகிய தாசார்ஹர், வ்ருஷ்ணிகள், அந்தகர், ஸாத்வதர் இவர்களிடத்தில் ஸம்ஸார வ்ருத்திக்காக (ஸம்ஸாரம் வளர்வதற்காக) உன் மாயையால் எனக்கு ஸ்னேஹ பாசத்தைப் பரப்பி வைத்தாய். அதை நீயே இப்பொழுது ஆத்ம ஜ்ஞானோபதேசமாகிற ஆயுதத்தினால் அறுத்து விட்டாய். அளவிறந்த ஆச்சர்ய சக்திகள் அமைந்தவனே! உனக்கு நமஸ்காரம். நான் உன் திருவடிகளையே சரணம் அடைந்தவன். ஆகையால், உன் திருவடித் தாமரைகளில் எனக்கு அழியாத அனுராகம் (அன்பு) உண்டாகும்படி அனுக்ரஹிப்பாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உத்தவரே! உமக்கு நான் அனுமதி கொடுக்கிறேன். நீர் பதரியென்று ப்ரஸித்தமான எனது ஆச்ரமத்திற்குப் போவீராக. அவ்விடத்தில் எனது பாதத்தினின்றும் உண்டான கங்கையென்னும் புண்ய தீர்த்தத்தில் ஸ்னானங்களாலும், ஆசமனங்களாலும் பரிசுத்தராகி, அலகநந்தை என்னும் பெயருடைய அக்கங்கையைக் காண்பதனால் பாபங்களையெல்லாம் உதறி, மரவுரிகளை உடுத்து, வனத்தில் உண்டாகிற காய், கிழங்கு முதலியவற்றைப் புசித்துக் கொண்டு, ஆத்ம அனுபவ ஸுகத்தினால் மற்ற விஷயங்களில் விருப்பமற்று, குளிர், வெப்பம் முதலிய த்வந்தவங்களைப் (இரட்டைகளைப்) பொறுத்து, நல்லொழுக்கம் உடையவராகி, இந்திரியங்களை அடக்கி, வெளியிந்திரியங்களையும் உள்ளிந்திரியத்தையும் வென்று, தத்வ த்ரயத்தின் (சித்து, அசித்து, ஈச்வரன் என்னும் மூன்று தத்வங்களின்) உண்மையைப் பற்றின ஜ்ஞானமும், ப்ரஹ்ம உபாஸன (த்யான) ரூபமான விஜ்ஞானமும் (அறிவும்) அமையப்பெற்று, நீர் என்னிடத்தினின்றும் கேட்ட விஷயங்களை நன்கு ஆராய்ந்து, அனுபவித்துக் கொண்டு, வாக்கையும், மனத்தையும் என்னிடத்தில் நிலைநிறுத்தி, சரீரத்தினால் என்னுடைய ஆராதன ரூபமான என் தர்மத்தை அனுஷ்டிப்பவராகி, ஊர்த்வகதி (மேல் நோக்கு), மத்யகதி (இடை நோக்கு), அதோகதி (கீழ் நோக்கு) என்கிற மூன்று கதிகளையும் கடந்து, அவற்றிற்கிடமான ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்புறத்திலிருக்கின்ற என்னைப் பெறுவீர்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தன்னை நினைப்பவர்களின் ஸம்ஸார பந்தத்தை (உலகியல் கட்டைப்) போக்கும் தன்மையனான பகவானால் இவ்வாறு சொல்லப்பட்ட அவ்வுத்தவர், அந்தப் பகவானை ப்ரதக்ஷிணம் செய்து (வலம் வந்து), அவனுடைய பாதங்களில் தலையைச் சாய்த்து நமஸ்கரித்து, இஷ்ட வஸ்துக்களின் (விரும்பிய பொருட்களின்) ஸம்பந்தத்தினால் விளையும் களிப்பு, அவற்றைப் பிரிகையால் விளையும் வருத்தம் இவை முதலிய த்வந்த்வங்கள் (இரட்டைகள்) அற்றவராயினும் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மிகுந்த அன்புடையவராகையால் அவனை விட்டுப் பிரியும் பொழுது அதைப் பொறுக்க முடியாமல் மனமுருகி, வருந்திக் கண்ணீர் பெருக்கினார். அவ்வுத்தவர் அழியாத அன்புள்ள அப்பகவானைப் பிரிய நேருகையால் மனம் தளர்ந்து வருந்தி, அவனை விட்டுப் பிரிய முடியாமல் ஸங்கடம் (வருத்தம்) அடைந்தார். அப்பால் அப்பகவானுடைய பாதுகைகளை அடிக்கடி தலையில் தரித்து, நமஸ்கரித்து, புறப்பட்டுப் போனார்.

பிறகு, மஹா பாகவதராகிய (பகவத் பக்தர்களில் சிறந்த) அவ்வுத்தவர் அப்பகவானை மனத்தில் தேக்கிக்கொண்டு, பதரிகாச்ரமத்திற்குச் சென்றார். அங்கு ஜகத்திற்கெல்லாம் முக்ய பந்துவாகிய பகவான் உபதேசித்தபடி தவம் செலுத்தி, தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனான பகவானுடைய கதியைப் பெற்றார். (என்னைப் பெறுவீர் என்ற பகவானுடைய ஸங்கல்பத்தின் உறுதியைப்பற்ற “கதியைப் பெற்றார்” என்று இறந்த காலமாய்ச் சொல்லுவர்) யோகேஸ்வரர்களால் பணியப்பட்ட பாதார விந்தங்களை உடைய பகவானால் மஹாநந்தமயமான பரப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை அறிவிக்கிற வேதாந்தமாகிற ஸமுத்ரத்தினின்று கடைந்தெடுக்கப்பட்டதும், பகவத்பக்தரான உத்தவருக்கு உபதேசித்ததுமாகிய இந்த ஞானமாகிற அம்ருதத்தை எவன் உபயோகப்படுத்துகிறானோ, அவனோடு ஸம்பந்தப்பட்ட ஜகத்தெல்லாம் ஸம்ஸாரத்தினின்று விடுபடும். இனி அவன் ஸம்ஸாரத்தினின்று விடுபடுவானென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

வேதங்களை வெளியிடுபவனாகிய எந்த மஹானுபாவன், ஜ்ஞான விஜ்ஞானங்களை முக்யமாக உட்கொண்டிருப்பதும், வேதஸாரமுமாகிய தத்வ ஜ்ஞானமாகிற அம்ருதத்தை வேதாந்தமாகிற ஸமுத்ரத்தினின்று கடைந்தெடுத்துத் தன் ப்ருத்ய (சேவக) வர்க்கங்கள் பருகி வாழும்படி செய்தானோ, அத்தகைய ஜகத்காரணனான (உலகிற்குக் காரணமான)  விஷ்ணு என்னும் பரமபுருஷனை வணங்குகிறேன்.

இருபத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக