செவ்வாய், 7 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 336

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – முப்பதாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் மெளஸல (உலக்கை) வியாஜத்தினால் (சிறு காரணத்தைக்கொண்டு) தன் குலத்தை ஸம்ஹரித்தல்.)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- பிறகு, மஹா பாகவதரான உத்தவர் பதரிவனம் போகையில் ஜகத்காரணனான பகவான் என்ன செய்தான்? அப்பகவான், தன்குலம் ப்ராஹ்மண சாபத்தினால் வருத்த முற்றிருக்கையில் ஸமஸ்த ப்ராணிகளுடைய நேத்ரங்களுக்கும் (கண்களுக்கும்) மிகவும் ப்ரியமான தன் சரீரத்தை எப்படி துறந்தான்? (தன் சரீரத்தைத் துறந்து சென்றானா, அல்லது அந்தச் சரீரத்தோடு கூடவே தன் பதவிக்குச் சென்றானா?) ஸ்த்ரீகள் (பெண்கள்) இப்பகவானுடைய திருமேனியில் படிந்த தன் கண்களை இழுக்க முடியாதிருந்தார்கள் அல்லவா? மற்றும், இத்திருமேனி ஸத்புருஷர்களின் காது வழியாய் நுழைந்து, ஹ்ருதயத்தில் சித்ரம் எழுதினாற் போல் படிந்து, அதினின்று பேராமல் (விலகாமல்) திகழ்ந்து கொண்டிருக்கும் அல்லவா? மற்றும், இத்திருமேனியின் சோபை தன்னைப் புகழ்கின்ற கவிகளின் வாக்குக்களுக்குப் பிறர் விரும்பும்படியான அழகை விளைத்துக் கொண்டிருக்கும் அல்லவா? அர்ஜுனனுடைய திருத்தேர் முன் வீற்றிருந்த இத்திருமேனியைக் கண்டு யுத்தத்தில் அடியுண்டவர்கள் அனைவரும் இப்பகவானுடைய ஸாம்யத்தை (ஒத்த நிலையை) அடைந்தார்களல்லவா? (அத்தகைய திருமேனியை அப்பகவான் துறந்து போனானா? அல்லது அத்திருமேனியோடு கூடவே போனானா? அதையும் விவரித்துச் சொல்வீராக).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஆகாசத்திலும், பூமியிலும், அந்தரிக்ஷத்திலும் (வாயு மண்டலம்) மஹத்தான உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) பலவும் உண்டாவதைக் கண்டு, ஸுதர்மை என்னும் தன் ஸபையில் உட்கார்ந்திருக்கின்ற யதுக்களைக் குறித்து ஸ்ரீக்ருஷ்ணன் மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- த்வாரகையில் பயங்கரமான பெரிய உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) பலவும் புலப்படுகின்றன. இவை நம் குலத்தின் விநாசத்திற்கு (அழிவிற்குக்) ஹேதுக்களாய் (காரணங்களாய்) இருக்கின்றன. ஓ! யதுகுலகுமாரர்களே! இனி ஒரு முஹூர்த்த காலமும் நாம் இங்கிருக்கலாகாது. கிழவிகளும், குமரிகளுமான பெண்டிர்கள் அனைவரும் சங்கோத்தாரம் என்னும் க்ஷேத்ரத்திற்குப் போவார்களாக. நாமோ என்றால், ஸரஸ்வதி நதி மேற்கு முகமாகப் பெருகி, ஸமுத்ரத்தில் போய் விழும்படியான ப்ரபாஸ தீர்த்தத்திற்குப் போவோம். அங்கு ஸ்னானம் செய்து, பரிசுத்தர்களாகி, உபவாஸமிருந்து, ஸ்னானம் செய்விப்பது, சந்தனம் ஸமர்ப்பிப்பது, புஷ்பம் அக்ஷதை முதலிய மற்றும் பூஜா உபகரணங்களைக் கொடுப்பது, இவைகளால் தேவதைகளை ஆராதிப்போம். 

பிறகு, மிகுந்த பாக்யமுடைய அந்தணர்களால் சாந்தி கர்மம் செய்விக்கப் பெற்று, அவர்களுக்குப் பசுக்கள், பூமி, ஸுவர்ணம், வஸ்த்ரம் இவைகளையும், யானை, குதிரை, தேர், வீடு இவைகளையும் கொடுத்துப் பூஜிப்போம். இவ்வாறு செய்வது மிகவும் நன்மையான கார்யம்; மங்களத்தை விளைவிக்கும். தேவதைகளுக்கும், ப்ராஹ்மணர்களுக்கும், கோக்களுக்கும் செய்யும் பூஜை, ப்ராணிகளுக்கு மிகுந்த நன்மையை விளைக்கும். ஆகையால், நாம் இவ்வாறு செய்வது நலம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- யது வ்ருத்தர்கள் அனைவரும் இவ்வாறு பகவான் மொழிந்த வசனத்தைக் கேட்டு,  “நல்லது. அப்படியே செய்யலாம்” என்று அதை அபிநந்தித்து (மகிழ்ச்சியுடன் வரவேற்று), ஓடங்களால் ஸமுத்ரத்தைத் தாண்டி, ரதங்களின் மேல் ஏறி, ப்ரபாஸ தீர்த்தத்திற்குப் போனார்கள். அந்த யாதவர்கள், அந்த ப்ரபாஸ தீர்த்தம் சேர்ந்து, யது தேவனாகிய ஸ்ரீக்ருஷ்ணபகவான் மொழிந்த வசனம் ஸமஸ்த நன்மைகளுக்கும் இடமாயிருக்கையால், மிகுந்த பக்தியுடன் அவ்வாறே நடத்தினார்கள். 

அந்த யாதவர்கள், தெய்வாதீனமாய் மதி மயங்கி, தன் ரஸம் பட்ட மாத்ரத்தில் மதியை அழிக்கும்படியான மிகுந்த ருசியுள்ள மைரேயம் என்னும் மத்யத்தை (கள்ளை) பானம் செய்தார்கள். வீரர்களாயினும் ஸ்ரீக்ருஷ்ணனுடைய மாயையினால் மதிமயங்கி, நிரம்பவும் மத்யத்தைப் (கள்ளைப்) பருகி, மிகவும் மதித்து (மயக்கமுற்று), கர்வம் நிறைந்த மனமுடைய அந்த யாதவர்களுக்குப் பெரிய கலஹம் (சண்டை) உண்டாயிற்று. பிறகு கோபத்தினால் பரபரப்புற்று, ஒருவரையொருவர் வதிக்க விரும்பி, தனுஸ்ஸுக்களாலும், கத்திகளாலும், பல்ல பாணங்களாலும் (அம்புகளாலும்), கதைகளாலும், தோமரங்களாலும் (ஈட்டி), ஸமுத்ரக்கரையில் யுத்தம் செய்தார்கள். 

அவர்கள் அசைகின்ற பதாகைகளை (தோரணங்களை) உடைய தேர்களிலும், யானை முதலியவற்றிலும், கழுதை, ஒட்டகம், பசு இவைகள் மேலும், கிடாக்கள் மேலும், மனுஷ்யர் மேலும், கோவேறு கழுதைகைள் மேலும் ஏறிக்கொண்டு, ஒருவரோடொருவர் கலந்து, கொடிய மதமுடையவர்களாகி, யானைகள் தந்தங்களால் வனத்தை அழிப்பது போல், ஒருவரை ஒருவர் பாணங்களால் அடித்தார்கள். 

ப்ரத்யும்னன்-ஸாம்பன், இவ்விருவரும், அக்ரூரன்-போஜன் இவ்விருவரும், அநிருத்தன்-ஸாத்யகி இவ்விருவரும், ஸுபத்ரன்-ஸங்க்ராமஜித்து இவ்விருவரும், ஸுசாரு-கதன் இவ்விருவரும், ஸுமித்ரன்-ஸுரதன் இவ்விருவரும், ஒருவர் மேல் ஒருவர் த்வேஷம் உண்டாகி வளரப் பெற்று, ஒருவரை ஒருவர் எதிர்த்து வதித்தார்கள். மற்றுமுள்ள நிசடன்- உல்முகன் முதலியவர்களும், ஸஹஸ்ரஜித்து-சதஜித்து-பானு முதலியவர்களும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய மாயையினால் மதிமயங்கி, மதம் (கர்வம்) என்னும் இருள் மூடப்பெற்று, ஒருவரோடொருவர் கலந்து, சண்டை செய்தார்கள். தாசார்ஹர், வ்ருஷ்ணிகள், அந்தகர், போஜர், ஸாத்வதர், மதுக்கள், அர்ப்புதர், மாதுரர், சூரஸேனர், விதர்ஜனர், குகுரர், குந்திகள் என்று பலவாறாகப் பிரிந்திருக்கிற யாதவர்கள், அனைவரும் ஸ்னேஹத்தை விட்டு, ஒருவரையொருவர் அடித்தார்கள். 

பிள்ளைகள் தந்தைகளோடும், உடன் பிறந்தவர்களோடும், பகினிகளின் (சகோதரிகளின்) பிள்ளைகளோடும், பெண் வயிற்றுப் பிள்ளைகளோடும், தந்தையின் உடன் பிறந்தவர்களோடும், மாதுலர்களோடும் (தாய் மாமன்கள்), மித்ரர்கள் (நண்பர்கள்) மித்ரர்களோடும், ஸுஹ்ருத்துக்கள் ஸுஹ்ருத்துக்களோடும், சண்டை செய்தார்கள். அவ்வாறே ஜ்ஞாதிகள் (பங்காளிகள்) ஜ்ஞாதிகளை வதித்தார்கள். அவர்கள் மத்யபானத்தினால் (கள் அருந்தியதால்) மதி கெட்டிருந்தார்களாகையால், “இது செய்யலாம். இது செய்யலாகாது” என்னும் விவேகமில்லாமல், இவ்வாறு வதித்தார்கள். 

பாணங்களெல்லாம் முடிந்து, தனுஸ்ஸுக்களும் முறிந்து, ஆயுதங்களும் க்ஷீணிக்கையில், அவர்கள் ஆயுதமில்லாமையால், ஸமுத்ரக்கரையில் முளைத்திருக்கிற (முன்பு ப்ராஹ்மண சாபத்தினால் உண்டான இரும்பு உலக்கையின் சூர்ணங்களின் பரிணாமங்களான) கோரைகளை முட்டிகளால் பிடுங்கிக் கொண்டார்கள். அவர்கள், கையால் பிடுங்கின மாத்ரத்தில், அந்தக் கோரைகள் வஜ்ரங்கள் போன்ற இரும்புத்தடிகளாயின. பிறகு, அந்த யாதவர்கள், ஸ்ரீக்ருஷ்ணன் “வேண்டாம் வேண்டாம்” என்று தடுத்துக் கொண்டிருப்பினும், அதைப் பொருள் செய்யாமல், அந்தக் கோரைகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது மாத்ரமே அல்லாமல், அந்த ஸ்ரீக்ருஷ்ணனையும் அடித்தார்கள். அவர்கள் மத்யபானத்தினால் (கள் அருந்தியதால்) மதி கெட்டிருப்பது பற்றிப் பலராமனையும், ஸ்ரீக்ருஷ்ணனையும் சத்ருவாக நினைத்து, அவர்களை வதிக்க வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டு, அடிக்க எதிர்த்தோடி வந்தார்கள். 

கௌரவ குலத்தைக் களிக்கச் செய்பவனே! அப்பால் அந்த ராம, க்ருஷ்ணர்களும் கோபித்து, இரும்புத்தடிகள் போன்ற கோரைகளை முட்டியில் பிடித்துக் கொண்டு, யுத்தத்தில் திரிந்து வதித்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணனுடைய மாயையினால் மனம் பறியுண்டவர்களும், ப்ராஹ்மண சாபத்தினால் பீடிக்கப்பட்டவர்களுமாகிய அந்த யாதவர்களுக்கு, ஒருவர் மேல் ஒருவர்க்கு பொறாமையினால் உண்டான கோபமானது, மூங்கிற் புதரில் ஒன்றோடொன்று உறைவதனாலுண்டான அக்னி வனத்தை அழிப்பது போல், வம்சத்தையெல்லாம் அழித்து விட்டது. 

இவ்வாறு தன் குலத்திலுள்ளவர்கள் அனைவரும் பாழாகையில், ஸ்ரீக்ருஷ்ணன் தானொருவன் மாத்ரமே மிகுந்து, “பூமியின் பாரத்தையெல்லாம் இறக்கியாய் விட்டது” என்று நினைத்தான். பலராமனோ என்றால், ஸமுத்ரக்கரையில் பரமபுருஷ த்யானமாகிற யோகத்தை அனுஷ்டித்து, தான் எவனுடைய அம்சமோ, அத்தகையனான ஸங்கர்ஷணனிடத்தில் தன்னை ஒருமித்ததாக த்யானித்து மானிட உருவத்தைத் துறந்தான். பலராமன் அவ்வாறு நிர்யாணமானதை (தன்னுடைய அஸாதாரணமான உருவத்தில் ஒருமித்ததைக்) கண்டு, தேவகியின் குமாரனாகப் பிறந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், ஒரு அரசமரத்தின் கீழ்ச் சென்று, பேசாமல் தரையில் உட்கார்ந்தான். 

நான்கு புஜங்கள் அமைந்ததும், தன் காந்தியால் விளங்குவதுமான உருவத்தைத் தரித்து, அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், புகையில்லாத அக்னி போல் திசைகளை எல்லாம் இருளற்று விளங்கும்படி செய்து கொண்டிருந்தான். மற்றும், அவன் ஸ்ரீவத்ஸமென்னும் மறுவுடன் (மச்சம், அடையாளம்) கூடி, மேகம் போல் கறுத்து உருக்கின பொன் போல் விளங்குகின்ற இரண்டு பட்டு வஸ்த்ரங்களை அரையிலும் மேலும் தரித்து, மிகவும் மங்களனாயிருந்தான்; மற்றும், அழகிய புன்னகை அமைந்த முகாரவிந்தமும், ஆபரணம் போன்ற கறுத்தழுகிய குந்தலங்களும், புண்டரீகம் போல் ரமணீயமான திருக்கண்களும், ஜ்வலிக்கின்ற மகர குண்டலங்களும் விளங்கப் பெற்று, அரைநாண் மாலை, யஜ்ஞோபவீதம், கிரீடம், கைவளை, தோள்வளை, முத்துமாலை, சிலம்பு, தண்டை, மோதிரம், கௌஸ்துபமணி, வனமாலை இவைகளை அணிந்து, ப்ரகாசித்துக் கொண்டிருந்தான். 

அவனுடைய ஆயுதங்கள் மூர்த்தீகரித்து (உருவம் பெற்று) அவனைச் சூழ்ந்து கொண்டிருந்தன. அவன், வலத்துடையில் தாமரை மலர்போன்ற இடக்காலை வைத்து உட்கார்ந்திருந்தான். அங்கு ஜரையென்னும் பெயருடைய ஒரு வேடன் கோரைகளாய் முளைத்து மிகுந்த இரும்புலக்கையின் துணுக்கைகளால் செய்த தனுஸ்ஸை (வில்லை) ஏந்திக்கொண்டு வந்து, அத்தகைய உருவத்துடன் வீற்றிருக்கின்ற பகவானுடைய மிருகம் போல் தோற்றுகிற பாதத்தைக் கண்டு, மிருகமென்னும் ப்ரமத்தினால் (கலக்கத்தினால்) அந்த தனுஸ்ஸில் பாணத்தைத் தொடுத்து, பாதத்தில் அடித்தான். அப்பால், அந்த வேடன் சதுர்ப்புஜனான அப்புருஷனைக் கண்டு, “இவன் பரமபுருஷன்” என்றறிந்து அவனிடத்தில் தான் அபராதப்பட்டதைப் பற்றி பயந்து, அஸுர த்வேஷியான (அஸுரர்களுக்கு எதிரியான) அந்தப் பகவானுடைய பாதங்களில் தலை சாய்த்து விழுந்தான்.

வேடன் சொல்லுகிறான்:- மதுசூதனனே! பாபிஷ்டனாகிய (பாபியாகிய) நான் தெரியாமல் இந்தக் கார்யம் செய்தனன். தோஷமற்றவனே! உத்தமச்லோகனே! பாபிஷ்டனான என்னுடைய அபராதத்தைப் பொறுத்தருள வேணும். எவனை நினைத்த மாத்ரத்தில் அஜ்ஞானமாகிற இருளெல்லாம் அழிந்து போகுமென்று பெரியோர் சொல்லுகிறார்களோ, விஷ்ணுவே! ப்ரபூ! அத்தகையனான உன் விஷயத்தில் நான் அபராதம் செய்தேன். வைகுண்டனே! ஆகையால் ம்ருகங்களை வஞ்சித்து, அவற்றை வதிக்கும் தன்மையுள்ள பாபிஷ்டனான (பாபியாகிய) என்னை வதிப்பாயாக. அப்படியாயின், நான்  பெரியோர்களிடத்தில் மர்யாதையைக் கடந்த கார்யத்தை மீளவும் இப்படி செய்யாதிருப்பேனல்லவா? ப்ரஹ்ம, ருத்ராதிகளும், வேதார்த்தங்களை உணர்ந்த அவரது புதல்வர்களான ஸனக, ஸனந்தனாதிகளும், உன்னுடைய மாயையினால் மறைக்கப்பட்ட அறிவுடையவராகையால், உன் ஸங்கல்பத்தினால் ஏற்றுக்கொண்ட இவ்வுருவத்தின் உண்மையை அறிய வல்லரல்லர். பாபிஷ்ட (பாப) நடத்தையையுடைய நாங்கள், இத்தகைய உன்னுருவத்தை உள்ளபடி எவ்வாறு வர்ணிப்போம்?

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஜரையென்னும் வேடனே! நீ பயப்பட வேண்டாம். எழுந்திரு. நீ இவ்வாறு என்னைப் பாணத்தினால் அடித்தது, என் ஸங்கல்பத்தினால் ஏற்பட்டதே அன்றி வேறன்று. நீ என்னால் அனுமதி கொடுக்கப்பெற்று, ஸுக்ருதிகள் (நற்செயல்களைச் செய்தவர்) பெறும்படியான ஸ்வர்க்கத்தைப் பெறுவாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அவ்வேடன், தன் ஸங்கல்பத்தினால் மானிட உருவத்தை ஏற்றுக்கொண்ட மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனால் இவ்வாறு ஆஜ்ஞை செய்யப் பெற்று, அந்த ஸ்ரீக்ருஷ்ணனை மூன்று தரம் ப்ரதக்ஷிணம் பண்ணி நமஸ்கரித்து, அப்பொழுதே தேவதைகளால் அனுப்பப்பட்ட விமானத்தில் ஏறிக்கொண்டு ஸ்வர்க்க லோகம் போய்ச் சேர்ந்தான். 

தாருகன், ஸ்ரீக்ருஷ்ணன் போனவிடம் தேடிப்பிடிக்க முயன்று, துளஸியின் பரிமளத்தை ஏற்றுக் கொண்டு, வருகிற காற்றை மோந்து, அதனால் அவனிருக்குமிடம் தெரிந்து கொண்டு, அவனை எதிர்த்துச் சென்றான். அன்னவன் தீக்ஷ்ணமான (மிகவும் பிரகாசிக்கிற) ஒளியுடன் கூடி, ஆயுதங்களால் சூழப்பட்டு, அரசமரத்தடியில் வீற்றிருக்கின்ற தன் ப்ரபுவான ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, ஸ்னேஹத்தினால் மனம் நிரம்பக் கண்ணும் கண்ணீருமாய் ரதத்தினின்றும் இறங்கி, அவனுடைய பாதங்களில் விழுந்து மொழிந்தான்.

தாருகன் சொல்லுகிறான்:- ப்ரபூ! உன் பாதார விந்தங்களைக் காணப்பெறாமையால் என் கண் இருள் மூடப் பெற்றது போன்று மிகவும் பாழாய்விட்டது. எனக்குத் திசைகள் எவையும் தெரியவில்லை. என் மனமும் தெளிவற்றிருக்கின்றது. ராத்ரியில் ப்ரகாசித்துக் கொண்டிருந்த சந்த்ரன் திடீரென்று மறைகையில் எவ்விதமாயிருக்குமோ, அவ்விதமாயிருக்கின்றது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸாரதியான தாருகன் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கையில், ராஜச்ரேஷ்டனே! கருடக்கொடியுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய ரதம், குதிரைகளோடும், த்வஜத்தோடும், கூட அவன் பார்த்துக்கொண்டேயிருக்கையில் ஆகாயத்தில் கிளம்பிச் சென்றது. அவ்விஷ்ணுவின் அஸ்த்ரங்களும், ஆயுதங்களும் அந்த ரதத்தைப் பின் தொடர்ந்தன. ஸ்ரீக்ருஷ்ணன், அதைக் கண்டு வியப்புற்று நிற்கின்ற ஸாரதியைப் பார்த்து இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஸாரதி! நீ த்வாரகைக்குப் போய், ஜ்ஞாதிகளான (பங்காளிகளான) யதுக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மாண்டதையும், ஸங்கர்ஷணன் நிர்யாணமானதையும் (தன்னுடைய அஸாதாரணமான உருவத்தில் ஒருமித்ததையும்), என்னுடைய நிலைமையையும், பந்துக்களுக்குத் தெரிவிப்பாயாக. இனி நீங்கள் பந்துக்களுடன் த்வாரகையில் இருக்கலாகாது. என்னால் துறக்கப்பட்ட அந்த யதுபுரியான த்வாரகையை, ஸமுத்ரம் தன் ப்ரவாஹத்தில் அமுழ்த்தி விடப் போகின்றது. நீங்கள் எல்லாரும் தங்கள் தங்கள் தேஹானுபந்திகளையும் (உடலோடு தொடர்பு உடையவர்களையும்), நம் தாய், தந்தைகளையும், அழைத்துக் கொண்டு அர்ஜுனனால் பாதுகாக்கப் பெற்று, இந்த்ரப்ரஸ்தத்திற்குப் போவீர்களாக. நீயோவென்றால், எனக்கிஷ்டமான பாகவத தர்மத்தை அனுஷ்டிப்பவனாகி, பக்தியோகத்தில் நிலை நின்று, சப்தாதி விஷயங்களை (உலகியல் விஷயங்களை) உபேக்ஷித்து (ஒதுக்கி) இந்த ஜகத்தெல்லாம் என்னுடைய மாயையினால் செய்யப்பட்டதென்று அறிந்து, ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்கள் தீண்டப்பெறாமையாகிற சாந்தியை அடைவாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தாருகன் இவ்வாறு மொழியப் பெற்று, அந்த ஸ்ரீக்ருஷ்ணனை அடிக்கடி ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து, அவ்வாறே அடிக்கடி அவனுடைய பாதங்களைச் சிரஸில் தரித்து, மனவருத்தத்துடன் த்வாரகைக்குச் சென்றான். 

முப்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

--

குறிப்பு:-

ஸ்ரீகிருஷ்ணரின் அவதார நிறைவுக்கும் மூல காரணம் என்ன ?

விஸ்வகர்மா நிர்மாணித்த ஸ்ரீகிருஷ்ணரின் துவாரகாபுரி மாளிகை, காலை வெயிலில் தகதகத்துக் கொண்டிருந்தது. அனுஷ்டானங்கள் முடிந்து, தன் எட்டு மனைவிகள் (ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, மித்ரவிந்தை, சக்தி, பத்திரை, லட்சுமணை, ஜாம்பவதி) புடைசூழ அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

அப்போது துவராடை, ஜடாமுடி, கையில் தண்டு- கமண்டலம் ஏந்தி, தவக் கனல் ஒளிரும் முனிவர் ஒருவர் அரண்மனைக்குள் நுழைந்தார்.

ஸ்ரீகிருஷ்ணர் எழுந்து, மேலாடையை இடுப்பில் கட்டிக் கொண்டு கூப்பிய கரங்களுடன், ''ஐயனே! வரவேண்டும். வரவேண்டும்! தர்மாத்மாவான தங்களது பாத தூளியால் இந்த அரண்மனை புனிதம் அடைந்தது!'' என்று அவரை வரவேற்றார். கண்ணனின் மனைவியரும் முனிவரை வணங்கி ஆசி பெற்றனர்.

முனிவர், ''கேசவா, அடியேனுக்கு இன்று தங்களது அரண்மனையில்தான் பிக்ஷ. பசி மிகுதியாக உள்ளதால், தாமதமின்றி அன்னம் படைத்தால் பரம திருப்தி அடைவேன். தயாராகட்டும். அதற்குள் அடியேன் சென்று நீராடி வருகிறேன்!'' என்று கூறிச் சென்றார்.

அந்த முனிவர் சாதாரணமானவர் அல்லர். துர்வாச மாமுனி. அத்திரி மகரிஷியின் புதல்வர். ருத்ரனின் அம்சம். சிறு பிழையையும் பொறுக்க மாட்டார். சினமும் சாபமும் பொத்துக் கொண்டு வரும்.

இப்படிப்பட்ட துர்வாசர் தங்களது அரண்மனையில் உணவு உண்ண விருப்பம் தெரிவித்ததால், கண்ணனின் தேவியர் சற்றே பயப்பட்டனர்.

ஸ்ரீகிருஷ்ணரும், ''துர்வாசரின் கோபத்துக்கு ஆளாகாமல் விருந்து இருக்க வேண்டும்!'' என்று கூறியது அவர்களை மேலும் சங்கடப்படுத்தியது.

இருந்தாலும், 'எல்லாவற்றுக்கும் மூல கர்த்தாவான கிருஷ்ணன் இருக்கும்போது நாம் ஏன் வீணாகச் சஞ்சலப்பட வேண்டும்? அவர் பார்த்துக் கொள்வார்!' என்று திடமான நம்பிக்கையுடன் உணவு சமைக்க முனைந்தனர்.

என்ன ஆச்சரியம்! அடுப்பு பற்ற வைத்தது தெரியவில்லை. வேலைகள் மளமளவென நடந்தன. அன்னம், விதவிதமான சித்ரான்னங்கள், நாவுக்கு இதமான பொரியல், கூட்டு வகைகள், தினுசு தினுசான பச்சடிகள் மற்றும் வறுவல் வகையறாக்களுடன் விருந்து தயாரானது.

அந்த உணவை மோப்பம் பிடித்தபடி அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர், ''ஆஹா! என்ன மணம். என்ன மணம்! காத தூரத்துக்கு அப்பாலும் வீசும் போலுள்ளதே. உங்கள் கைப்பக்குவமே தனி. துர்வாசரைவிட எனக்குத்தான் இப்போது பசி அதிகம். தேவியரே, நீங்கள் சமைத்துள்ள அமுதை உடனே புசிக்க என் மனம் தூண்டுகிறது!'' என்று கூறி மனைவியர் எட்டுப் பேரையும் ஏறிட்டு நோக்கினார்.

பட்ட மகிஷிகள் எவரும் பதில் பேசவில்லை. ஆனால், அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் திருவடிகளில் விழுந்து, ''பிரபு! கண்ணிமைப்பதற்குள் இவ்வளவு உணவு வகைகளை நாங்களா சமைத்தோம்? யாவும் தங்கள் அருளால் உண்டானவை!'' என்று சொல்லிக் கண்ணீர் விட்டார்கள்.

அவர்களை எழுப்பி, கண்ணீரைத் துடைத்த கிருஷ்ணர், ''அன்புக்குரியவர்களே! சஞ்சலம் வேண்டாம். உங்கள் உணர்வைப் புரிந்து கொண்ட நான் மாயாசக்தியால் இவற்றை உண்டாக்கினேன். யாவும் நலமாகவே முடியும்!'' என்று தேற்றினார். அப்போது துர்வாச முனிவர் மந்திரம் ஜபித்தபடி உள்ளே வந்தார்.

அவரை பொற்பீடத்தில் அமரச் செய்து, பெரிய வாழையிலை பரப்பி உணவு பரிமாறத் தொடங்கினர் கண்ணனின் தேவியர். அவற்றை ருசித்து, ரசித்துச் சாப்பிட்டார் துர்வாசர். சூடான உணவானதால் முனிவருக்கு வியர்க்காதிருக்க அருகில் நின்று மயில் விசிறியால் விசிறினார் கிருஷ்ணர். துர்வாசர் எந்த வகையிலும் குற்றம் காண முடியாதபடி விருந்து சிறப்பாக அமைந்தது.

இறுதியில் பாயசத்தை ருசி பார்த்த துர்வாசர், கிருஷ்ணரை அருகே வருமாறு ஜாடையால் அழைத்தார். அவர் வந்ததும், தன்னிடம் மீதம் இருந்த பாயசத்தை ஒரு பாத்திரத்தில் வடித்து, கிருஷ்ணரிடம் கொடுத்து, ''இதை என் எதிரிலேயே தேகம் முழுக்கப் பூசிக் கொள்ளுங்கள்!'' என்றார். கிருஷ்ணரும் சற்றும் தயங்காமல் பாயசத்தைத் தேகம் முழுவதும் பூசிக் கொண்டார். பாயசத்தின் புனிதத்தாலோ அல்லது கால வித்தியாசத்தினாலோ தன் பாதங்களில் தடவவில்லை.

துர்வாசர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். ''கேசவா! தாங்கள் பூசிக்கொண்டது பாயசம் மட்டுமன்று; அது ருத்ர கவசம்! எனவே, இனி தங்கள் தேகத்தை எவராலும் எந்த ஆயுதத்தாலும் தாக்க இயலாது. இந்த சிவ கவசம் தங்களைப் பாதுகாக்கட்டும். நான் வருகிறேன்!'' என்று கூறிவிட்டு துவாரகையை விட்டுக் கிளம்பினார்.

பின்னாளில் கிருஷ்ணாவதாரம் முடிவுறும் காலத்தில் முனிவர்களின் சாபத்தால் யாதவ குலத்தினர் பிரபாச தீர்த்தத்தில் ஒன்று கூடி சவட்டைக் கோரை வடிவங்கொண்ட வச்சிராயுதங்களால் ஒருவரையருவர் தாக்கி மாண்டனர். ஆதிசேஷன் அவதாரமான பலராமர் யோக சக்தியால் தன் உடலைத் துறந்து, ஆயிரம் தலைகள் கொண்ட சர்ப்ப வடிவுடன் கடலினுள் சென்று மறைந்தார்.

தான், வைகுண்டம் செல்லும் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா, அரச மரத்தடியில் வலது தொடை மீது இடது பாதத்தை வைத்து தியான நிலையில் அமர்ந்திருந்தார்.

அப்போது ஜரை (ஜரன்) என்ற வேடன் அங்கு வந்தான். விதியினால் தூண்டப்பட்ட நிலையில், அவன் பார்வைக்கு பகவானின் பாதம் ஒரு மான் போலத் தோற்றமளித்தது. எனவே, அவன் பாணம் தொடுத்தான். அது பகவானின் பாதத்தைத் தாக்கித் துளைத்தது. “ருத்ர கவசம்” படாத பகுதியானதால் வேடனின் அம்பு இலகுவாகத் தாக்கித் துளைத்தது. பரமபுருஷனின் ஓர் அவதார நிறைவுக்கும் அதுவே மூல காரணமாக அமைந்தது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக