கண்ணன் கதைகள் - 22 - திருப்பூர் கிருஷ்ணன்

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்

பாரதப் போர் உக்கிரமடைந்திருந்த தருணம். மாலை மங்கிய நேரம். கண்ணன் குந்தி தேவியுடனும் பாஞ்சாலியுடனும் பேசியவாறு அமர்ந்திருந்தான். அவன் சொல்வதை அமுதம்போல் பருகிக் கொண்டிருந்தார்கள் இருவரும். கண்ணனை விட்டால் அவர்கள் இருவருக்கும் வேறு யார் தான் கதி?

போரில் எத்தனை இறப்புகள்! எத்தனை உயிர்கள் பலியாகிவிட்டன! மனிதர்கள் மட்டுமல்ல, யானைகள், குதிரைகள்… இன்னும் எத்தனை நாட்கள் போர் தொடரப் போகிறதோ? இன்னும் என்னென்ன இழப்புகளையெல்லாம் தாங்க வேண்டியிருக்குமோ? குந்திதேவியிடமிருந்து ஒரு பெருமூச்சு புறப்பட்டது.

"கண்ணா! இதெல்லாம் ஏன் நடக்கிறது?'' அங்கலாய்த்தவாறே கேட்டாள் அவள்.

கண்ணன் நகைத்தான். பேசாதிருந்தான்.

பாஞ்சாலி சலிப்புடன் சொன்னாள்:

"தெய்வமான நீயே எங்கள் பக்கம் துணையிருக்கிறாய். அப்படியிருந்தும் ஏன் இத்தனை இழப்புகள்?''

கண்ணன் பாஞ்சாலியை சற்றுநேரம் கனிவோடு பார்த்தான். பின் சொன்னான்:

"பாஞ்சாலி! ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்ச்செயல் விளையும். அந்த எதிர்ச்செயலிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது. இது பிரபஞ்ச விதி. கல்லை மேலே தூக்கிப் போட்டால் கீழே விழும். மரத்திலிருந்து கனி ஒருநாளும் மேலே பறந்துபோகாது. தண்ணீர் என்றால் பள்ளத்தை நோக்கித்தான் பாயும். மேட்டை நோக்கிப் பாயாது. நெருப்பு என்றால் சுடத்தான் செய்யும். இப்படி உலக இயக்கத்திற்காக எத்தனையோ விதிகள் இருக்கின்றன. கர்மவினை என்பதும் இவற்றைப் போன்ற ஒரு விதிதான். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அவனறியாமல் செயல்படும் விதி இது. அதை அறிந்துகொண்டு நல்லதையே நினைத்து நல்லதையே பேசி நல்லதையே செய்து வாழ்பவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்கு நல்லதே நடக்கும்.''

"அல்லாதவர்களுக்கு என்ன நடக்கும்?'' பாஞ்சாலி யோசனையுடன் கேட்டாள்.

"அல்லாதவர்கள் கர்மவினையால் விளையும் துயரத்தை அனுபவிக்கத்தான் செய்வார்கள். இந்தப் போரில் இறக்கும் ஒவ்வோர் உயிரும் அதனதன் கர்மவினையை அனுபவித்து அதன் முடிவில்தான் இறக்கிறது. கடவுளின் திட்டப்படி நடக்கும் எதையும் நாம் ஏற்கத்தான் வேண்டும். விமர்சிக்கலாகாது. விமர்சித்துப் பயன் இல்லை''.

குந்திதேவி திகைப்புடன் கேட்டாள். 

"கர்மவினையிலிருந்து யாரும் தப்பமுடியாதா கண்ணா?''

"ஒருபோதும் தப்பமுடியாது. மனிதர்கள் மட்டுமல்ல. கடவுளே கர்ம வினையிலிருந்து தப்ப முடியாது. தப்பக் கூடாது. அப்போது தான் பிரபஞ்சம் சரிவர இயங்கும்!''

பாஞ்சாலி குறுக்கிட்டாள்:

"கடவுளே தப்பமுடியாது என்றால்? நீ கூடக் கர்ம வினையிலிருந்து தப்ப முடியாதா?''

"தப்ப முடியாது என்பதல்ல. தப்ப மாட்டேன். தப்ப விரும்ப மாட்டேன். நானே ஒரு விதியை வகுத்துவிட்டு, அதிலிருந்து நானே மீறினால் விதி எப்படி நியாயமாகச் செயல்பட்டதாக ஆகும்?''

குந்திதேவி கண்ணன் பேச்சில் சந்தேகம் கேட்டாள்:

"கர்மவினை என்றால் போன ஜன்மத்தில் செய்த செயல்களின் விளைவா?''

"இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். இந்த ஜன்மத்தில் செய்த செயல்களுக்கு இந்த ஜன்மத்திலேயே கூட எதிர்விளைவு நேரலாம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுதான் கர்ம வினை. முற்பகல் என்பது போன ஜன்மமாகவும் இருக்கலாம். இந்த ஜன்மத்தில் நம் ஆயுளின் முற்பகுதியாகவும் இருக்கலாம்''.

குந்திதேவி ஆவலுடன் கேட்டாள்:

"இந்த ஜன்மத்தில் செய்வதற்கு இந்த ஜன்மத்திலேயே பலன் உண்டா? அப்படியானால் இந்தப் பிறவியில் செய்த நல்லவற்றிற்கு இந்தப் பிறவியிலேயே நற்பலன் கிடைக்கும் அல்லவா?''

"கட்டாயம் கிட்டும். நீங்களெல்லாம் மிக நல்லவர்கள். அதனால் தான் என் துணை உங்களுக்குக் கிட்டியிருக்கிறது. கடவுள் துணை நல்லவர்களுக்குத்தான் உண்டு. ஆனால் ஒன்று. ஒரு தாய், தான் பெற்ற குழந்தையைப் பொறுப்பில்லாமல் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டாலோ, தண்ணீரிலேயே விட்டு விட்டாலோ, அதற்கான தண்டனையை அவள் அடையத்தான் செய்வாள். அதிலிருந்து அவள் தப்பிக்க இயலாது. தண்ணீரில் விட்ட செயலை எண்ணி அவள் கண்களிலிருந்து இரவும் பகலும் கண்ணீர் வழிந்துகொண்டே தான் இருக்கும். இப்படி நிகழ்வதெல்லாம் தான் கர்மவினை என்கிறேன்''

பாஞ்சாலி கண்ணன் சொன்னதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், கண்ணனின் வாசகங்களைக் கேட்ட குந்தியின் விழிகளில் நீர் திரையிட்டது. அதைப் பாஞ்சாலி அறியாதவாறு முந்தானையால் துடைத்துக் கொண்ட அவள் மெல்லக் கண்ணனிடம் கேட்டாள்:

"தவறு செய்தவர்கள் கண்ணீர் விட்டுக் கரைந்தால் தண்டனையிலிருந்து தப்பிக்க இயலுமா?''

தண்டனையின் வேகம் குறைக்கப்படலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர் நிலைமையில் இந்தக் கண்ணீர் என்ன மாற்றத்தைச் செய்யப் போகிறது? உதாரணமாக ஒரு தாய் தன் மகனைத் துறந்து விட்டாள் என்றால் அந்தத் தாயின் அழுகையால் மகனுக்கென்ன பயன்? அவனுக்குத் தாய்ப்பாசம் கிட்டாமல் போனது போனதுதானே?'' குந்தியிடமிருந்து ஒரு ரகசிய விம்மல் எழுந்தது. அதைப் பாஞ்சாலி அறியாமல் இருக்க அவள் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். பின் பொதுக் கேள்வியாகக் கேட்பதைப் போல் தன் தனித்த கேள்வியைக் கேட்டாள்.

"கண்ணா! அப்படிக் குழந்தையைத் துறந்த தாய், கடவுளான உன்னைப் பிரார்த்தித்தால் அந்தக் குழந்தையும் தாயும் மீண்டும் இணைய வாய்ப்புண்டா?''

"அந்தக் குழந்தை எப்படி இனி தாயோடு இணையும்? ஏனென்றால் அது குழந்தை என்ற பருவத்தைத் தாண்டி இப்போது வாலிபனாக ஆகியிருக்குமே!''

"கண்ணா! நீ அனைத்தும் அறிந்தவன். வாதம் செய்வதில் வல்லவன். பெண்ணானவள் அபலை. அவள் உலக அபவாதத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக மனத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் தான் தாய்ப்பாசத்தைக் கூடத் துறக்கும் முடிவை எடுப்பாள். போகட்டும். அந்தக் குழந்தை இப்போது வாலிபனாகவே இருக்கட்டும். கர்மவினை என்று சொன்னாயே! அந்தத் தாய், மனம் கசிந்து, செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினால், எதிர்காலத்தில் அந்தத் தாயும் மகனும் சேர வாய்ப்பிருக்கிறதா?''

"சொல்ல முடியாது. வாய்ப்பிருக்கலாம். ஆனால், பகிரங்கமாக அவனைத் தன் மகன் என அந்தத் தாய் ஒப்புக்கொள்ள முன்வந்தால் கர்மவினையின் விதி தண்டனையைச் சற்றுக் குறைக்கலாம். மகனின் இறுதி நாட்களிலாவது தாய் சற்று அந்த மகனுடன் பேசவும் பாசத்தைப் பொழியவும் ஓரிரு சந்தர்ப்பங்கள் கிட்டலாம். எப்படியானாலும் மகன் மனத்தில் தாயன்பை இழந்த துயரம் இருக்கத்தானே இருக்கும்! அந்தத் துயரத்தின் தீவிரம் தாயைத் தண்டிக்கத்தானே செய்யும்!''

இப்போது பாஞ்சாலி குறுக்கிட்டாள்:

"கர்ம வினை என்று சொல்கிறாயே! சபை நடுவே பலர் பார்த்திருக்க துச்சாதனன் என் துகிலை உரிய முற்பட்டானே! அதற்கு நான் என்ன பாவம் செய்தேன்!"

"பாஞ்சாலி! உன் இல்லப் புதுமனை புகுவிழாவுக்கு முன்னொரு நாள் துரியோதனன் வந்தானே! உனக்கு ஞாபகமிருக்கிறதா! தண்ணீர் எது தரை எது என்று தெரியாமல் அங்குமிங்கும் கால்வைத்துத் தடுமாறினான். அதைப் பார்த்து நீ சிரித்தாய். உன் வாய்த்துடுக்கு சிரிப்பதோடு உன்னை நிறுத்தவில்லை. உன் தந்தை திருதராஷ்டிரர் தான் பார்வையற்றவர் என்று நினைத்தேன், நீயுமா என்று வேறு கேட்டாய். எந்த ஆண்மகன் ஓர் இளம்பெண்ணால் இளக்காரம் செய்யப்படுவதை சகிப்பான்? உன் ஏளனச் சிரிப்பும் கேலிப் பேச்சும் துரியோதனன் மனத்தைப் பெரிதும் பாதித்தன. அவனது மனத்தின் உணர்வலைகள் காற்றில் நெடுங்காலம் மிதந்து கொண்டிருந்தன. ஒரு சந்தர்ப்பம் கிட்டியபோது அந்த உணர்வலைகள் சடாரென்று துச்சாதனன் கரங்களில் ஊடுருவின. இதுதான் உனக்கு நேர்ந்த துயரத்தின் காரணம். ஆனாலும், கடவுளைச் சரணடைந்ததால் உன் தண்டனை குறைக்கப்பட்டு நீ காப்பாற்றப்பட்டாய்''.

பாஞ்சாலி திடுக்கிட்டவாறு கண்ணன் சொன்ன விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

பின் பெருமூச்சோடு சொன்னாள்:

"குழந்தை நடக்கத் தெரியாமல் தடுமாறி விழுவதைப் பார்த்துத் தாய் கூடச் சிரிப்பதுண்டு. என் அறியாச் செயலுக்கு இத்தனை பெரிய தண்டனையா?''

கண்ணன் நகைத்தான். 

"அது அறியாச் செயல் என்பதால் தான் உனக்குத் தண்டனை கிட்டவில்லை. ஓர் எச்சரிக்கை மட்டும்தான் உன் தரப்பில் செய்யப்பட்டது. உன் மானம் காக்கப்பட்டது. ஒரு பெண்ணைப் பலரறிய மானபங்கப் படுத்துவது என்பது மகாபாவம் தான். துரியோதனன் அதைச் செய்ய முனைந்தான்! அதன் பொருட்டுத்தான் இந்தப் போர். இறுதியில் அவனுக்கான தண்டனையைக் கர்மவினை என்கிற விதி வழங்கும்!''

பாஞ்சாலி, குந்தி இருவரும் பரிதவிப்போடு கேட்டார்கள். 

"கண்ணா! கர்ம வினையிலிருந்து யாருமே தப்ப முடியாதா? உன் பக்தர்களுக்குக் கூட விதிவிலக்குக் கிடையாதா?'' 

கண்ணன் வலக்கரத்தில் ஏந்திய புல்லாங்குழலால் இடக்கரத்தைத் தட்டிக் கொண்டு எழுந்தான். புறப்பட எத்தனித்த அவன் சொன்னான்:

"கடவுளுக்குக் கூடக் கர்மவினையை அனுபவிப்பதிலிருந்து விதிவிலக்கு கிடையாது என்று சொன்னேனே! என் பக்தர்கள் என்னை பக்தி செய்வதால் கர்ம வினையின் பாதிப்பைக் குறைத்து அவர்களைக் காக்கும் பொறுப்பை நான் ஏற்பேன் என்பது நிச்சயம்''.

இப்படிச் சொன்ன கண்ணன் சொல்லாமல் ஒரு செய்தியை மறைத்தான். "முந்தைய ராமாவதாரத்தில் வாலியை ராமனாக மறைந்து நின்று கொன்றது சரியல்லவே! அதனால் இப்போதைய கிருஷ்ணாவதாரத்தில் ஒரு வேடனால் மறைந்து நின்று தான் கொல்லப்படப் போவது உண்மை தானே! எந்தச் செயலுக்கும் எதிர்ச்செயல் உண்டு என்ற விதியில் கடவுளுக்கும் விதிவிலக்கில்லையே!''

கண்ணன் நகைத்தவாறே விடைபெற்றபோது, குந்தியும் பாஞ்சாலியும் அவனை வணங்கி வழியனுப்பினார்கள்.

நன்றி - தினமலர் அக்டோபர் 2012

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை