திங்கள், 20 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 159

ஏழாவது ஸ்கந்தம் - ஆறாவது அத்தியாயம்

(ப்ரஹ்லாதன் பிள்ளைகளுக்குத் தத்வோபதேசம் செய்தல்)

ப்ரஹ்லாதன் சொல்லுகிறான்:- அறிவுள்ள புருஷன், இந்த மனுஷ்ய ஜன்மத்திலேயே (பிறவியிலேயே), பால்யம் முதற்கொண்டு, பகவானை அடைவதற்குரிய தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும். ஜன்மாந்தரத்தில் (அடுத்த பிறவியில்) பார்த்துக்கொள்வோமென்று வெறுமனே இருக்கலாகாது. மனுஷ்ய ஜன்மம் (பிறவி) கிடைப்பது அரிது. மேல் மனுஷ்ய ஜன்மத்தையே (பிறவியே) பெறுவோமென்கிற நிச்சயமில்லை. ஆகையால், இப்பொழுது நேரிட்டிருக்கிற இம்மனுஷ்ய ஜன்மத்திலேயே (பிறவியிலேயே), பகவத் தர்மங்களை அனுஷ்டிப்பீர்களாக. சப்தாதி விஷயங்களை அனுபவித்து, கடைசியில் தர்மங்களை அனுஷ்டிக்கலாமேயென்று நினைக்க வேண்டாம். அதுவரையில், இந்தச் சரீரம் நிலை நின்றிருப்பது நிச்சயமில்லை. ஆகையால், பால்யம் முதற்கொண்டே, பகவானை அடைவதற்கு யத்னம் (முயற்சி) செய்யவேண்டும். நிலையற்றதாயினும், இந்த மனுஷ்ய ஜன்மமே (பிறவியே), புருஷார்த்தத்தை நிறைவேற்றிக் கொடுக்கும். பகவத் தர்மங்களைச் சிறிது செய்வானாயினும், அவன் மோக்ஷத்தை அடைவான். பகவத் தர்மங்களைச் செய்ய ஆரம்பித்து, நடுவில் சரீரம் அழிந்து போமாயினும், கெடுதி உண்டாகாது. இந்த மனுஷ்ய ஜன்மத்தில் (பிறவியில்), பகவானுடைய பாதங்களைப் பணிகையே உரியதாம். இப்பகவான், ஸமஸ்த ப்ராணிகளுக்கும் உள்ளே இருந்து, நியமித்துப் பாதுகாக்கிறான். ஆத்மாக்கள் அனைவர்க்கும், ப்ரீதிக்கிடமானவன் அவனே. மற்றும், அவன் ப்ராணிகளிடத்தில் நல்ல மன இரக்கமுடையவன். நாம் அவனை அனுஸரிப்போமாயின், அவன் நமக்கு ஹிதத்தையே (நன்மையையே) செய்வான். 

ஓ, அஸுர குமாரர்களே! ப்ராணிகளுக்கு தேஹ ஸம்பந்தம் நேர்ந்த மாத்ரத்தில், பசு (விலங்கு) ஜன்மம் (பிறவி) முதலிய எல்லா ஜன்மங்களிலும் (பிறவிகலிலும்) இந்த்ரிய ஸுகங்கள் அவரவர் ப்ரயத்னமில்லாமல் (முயற்சி இல்லாமல்) பூர்வ கர்மங்களுக்குத் (முன் வினைகளுக்குத்) தகுந்தபடி தாமே உண்டாகின்றன. துக்கம் வேண்டுமென்று ஒருவரும் ப்ரயத்னம் (முயற்சி) செய்கிறதில்லை. ஆயினும், கர்மானுகுணமாக (முன் வினைப்பயனாக), ப்ராணிகளுக்குத் துக்கங்கள் தாமே உண்டாகின்றனவல்லவா? அவ்வாறே, ஸுகங்களும், கர்மானுகுணமாகத் தாமே உண்டாகுமென்பதில் ஸந்தேஹமில்லை. அந்த ஸுகங்கள், மனுஷ்ய ஜன்மத்தில் போல், மற்ற பசு (விலங்கு), பக்ஷி (பறவை) முதலிய ஜன்மங்களிலும் உண்டாகும். பகவத் தர்மங்களோவென்றால், மனுஷ்ய ஜன்மத்திற்கே (பிறவிக்கே) அஸாதாரணமானவை. மற்ற ஜன்மங்களில் (பிறவிகளில்) அவை நேரமாட்டாது. ஆகையால், நாம் சப்தாதி விஷய ஸுகங்களுக்காக ப்ரயத்னம் (முயற்சி) செய்ய வேண்டியதில்லை. இதை அறியாமல் ப்ரயத்னம் (முயற்சி) செய்வோமானால், வாழ்நாளை வீணாக அழித்துக்கொள்ளது மாத்ரமேயன்றி, மற்றொரு ப்ரயோஜனமும் உண்டாகாது. ஜன்மாந்தரத்தில் (பின் வரும் பிறவிகளில்) ஸுகத்தை அனுபவிப்பதற்காக யத்னம் (முயற்சி) செய்ய வேண்டுமேயென்றால், வாஸ்தவமே (உண்மையே) ஆயினும், போக (ஸுக அனுபவ), மோக்ஷங்களைக் கொடுக்கவல்ல பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பணிவோமானால், ஜன்மாந்தரத்திற்கு (பின் எற்படும் பிறவிக்கு) அடியான (காரணமான) கர்மங்களற்றுத் துக்கங்களெல்லாம் அடியோடு தொலையப்பெற்று ப்ரஹ்மானந்தத்தை அனுபவிக்கையாகிற பெரிய  க்ஷேமத்தைப் பெறுவோம். விஷய ஸூகங்களுக்காக யத்னம் (முயற்சி) செய்பவன், அத்தகைய க்ஷேமத்தை அடையமாட்டான். ஆகையால், ஸம்ஸாரத்திலிருக்கும் புருஷன், நன்மை, தீமைகளை அறிந்து, தன் சரீரம் திறமையோடிருக்கும் பொழுதே மோக்ஷமாகிற க்ஷேமத்திற்காக, யத்னம் (முயற்சி) செய்யவேண்டும். 

மனுஷ்யனுக்கு வாழ்நாள் நூறு வர்ஷங்கள். இந்த்ரியங்களை வெல்ல முடியாத அம்மனுஷ்யனுடைய வாழ்நாளில் பாதி வீணாகவே போகின்றது. மனுஷ்யன், ராத்ரியில் உறக்கமாகிய இருட்டில் தள்ளுண்டு, வெறுமனே படுக்கின்றானல்லவா? பால்யத்தில் (குழந்தைப் பருவத்தில்), ஒன்றும் தெரியாத மூடனாகவே பத்து வர்ஷங்களைக் கழிக்கிறான். கௌமார (12 வயது வரையான இளம்) வயதில், விளையாடிக்கொண்டே பத்து வர்ஷங்களைக் கழிக்கிறான். இவ்வாறே, இருபது வர்ஷங்கள் வீணாகவே போகின்றன. கடைசியில், கிழத்தனம் வந்து, தேஹம் தளர்ந்து, ஒன்றும் செய்ய முடியாமல், இருபது வர்ஷங்கள் கழிகின்றன. இவ்வாறு, விழித்துக் கொண்டிருக்கிற ஐம்பது வர்ஷங்களில், நாற்பது வர்ஷங்கள் போயின. மிகுந்த பத்து வர்ஷங்களை வருந்தியும் நிறைக்க முடியாத காமத்தினாலும் (காதல், விருப்பம், ஆசையினாலும்), அதைத் தொடர்ந்த மோஹம் (மனக்கலக்கம், மயக்கம், அறியாமை) முதலியவைகளாலும், இல்லற வாழ்க்கையில் ஆழ்ந்து, ஹிதத்தை (நன்மையை) மறந்து, வீணாகவே கழிக்கின்றான். இந்த்ரியங்களை வென்றவன், பால்யம் முதற்கொண்டே பகவத் தர்மங்களை அனுஷ்டித்து, வாழ்நாளைப் பயன்பெறச் செய்கின்றான். ராத்ரியிலுங்கூட, நடுவில் இரண்டு யாமங்களை (ஒரு யாமம் = 3 மணி நேரம்) மாத்ரம் நித்ரைக்கு உபயோகப்படுத்தி, முன் பின், யாமங்களில் பகவத் தர்மங்களை அனுஷ்டிப்பான். 

இந்திரியங்களை வெல்ல முடியாத எவன்தான் க்ருஹத்தில் என்னுடையதென்னும் அபிமானத்துடன் (எண்ணத்துடன்), ஆழ்ந்து அறுக்க முடியாத ஸ்நேஹங்களாகிற (அன்பு, நட்பு முதலிய) பாசங்களால் கட்டுண்ட தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்வான்? ப்ராணனைக் காட்டிலும் மேற்பட்ட பணத்தாசையை எவன் துறக்கவல்லனாவான்? திருடன், ஸேவகன் (வேலைக்காரன்), வர்த்தகன் (வியாபாரி) இவர்கள் மிகவும் ப்ரீதிக்கிடமான ப்ராணனை இழந்தாயினும், பணத்தைத் தேடுகிறார்களல்லவா? மன இரக்கமுடைய காதலியின் ரஹஸ்யப் புணர்ச்சிகளையும், இனிய உரைகளையும், நண்பர்களின் ஸஹவாஸத்தையும் (தொடர்பையும்), அவர்களுடைய ஸ்நேஹத்தினால் கட்டுண்டவன் எவ்வாறு துறப்பான்? ஒவ்வொரு எழுத்தும் அம்ருதம் போல் இனிதாயிருக்கப்பெற்ற இளஞ்சொற்களைச் சொல்லும் சிசுக்களிடத்தில் (குழந்தைகளிடத்தில்) மனம் சுழிக்கப்பெற்றவன், அவற்றின் ஸஹவாஸத்தை (கூட வாழ்வதை, தொடர்பை) எவ்வாறு துறக்கவல்லவனாவான்? மனத்தில் இனிய பிள்ளைகளையும், பெண்களையும், ப்ராதாக்களையும் (உடன் பிறந்தவனையும்), பகினிகளையும் (உடன் பிறந்தவளையும்) மன இரக்கத்திற்கிடமான தாய், தந்தைகளையும் பலவகையான போகக் கருவிகளையும், அழகிய வீடுகளையும், குலபரம்பரையாக ஏற்பட்ட ஜீவனங்களையும், பசுக்களையும், வேலைக்காரர்களையும் நினைப்பானாயின், அவர்களை எவ்வாறு துறப்பான்? எப்படித்தான் அவற்றினின்று மனத்தை மீட்டுக்கொள்ள வல்லவனாவான்? கோசஸ்க்ருத் என்னும் புழுப்போல் (பட்டுப் புழு போல்) கர்மங்களைச் செய்து கொண்டு, காமங்களை (காதல், ஆசை, விருப்பங்களை) எவ்வளவு அனுபவிக்கினும், லோபத்தினால் (பேராசையால்) த்ருப்தி உண்டாகப் பெறாமல், உபஸ்தம் (ஆண்/பெண் பிறப்பு உறுப்பு), நாக்கு இவற்றின் ஸுகத்தை வெகுமதித்துப் பெரிய மோஹத்தில் ஆழ்ந்தவன், அதில் எவ்வாறு விரக்தி உண்டாகப் பெறுவான்? 

இவ்வாறு ஜீவர்கள் மதிமயங்கி, குடும்ப போஷணத்திற்காக (காப்பாற்ற, வளர்க்க) வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழித்துக்கொண்டு, தமக்கு ஹிதமான (நன்மையான) புருஷார்த்தத்தை (அடையப்பட வேண்டிய வஸ்துவை) அறிகிறதில்லை. ஸர்வதேச (எல்லா இடங்களிலும்), ஸர்வகாலங்களிலும் (எல்லா நேரங்களிலும்) மூன்று வகையான தாபங்களால் {ஆத்யாத்மிகம் - சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன; ஆதிதெய்விகம் - குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்; ஆதிபௌதிகம் - ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள் என்று மூன்று வகையான துன்பங்களால்} மன வருத்தமுற்றிருந்தும், குடும்பத்தில் மனம் தாழ்ந்து, ஸம்ஸாரத்தில் வெறுப்பு உண்டாகப் பெறுகிறதில்லை. பரத்ரவ்யத்தைப் (பிறர் சொத்தைப்) பறிக்கும் புருஷனுக்கு, பரலோகத்தில் (வேறு உலகத்தில்) வரும் நரக அனுபவ ரூபமான தோஷத்தையும், இஹலோகத்தில் (இந்த உலகத்தில்) ராஜதண்டனாதி ரூபமான தோஷத்தையும், அறிந்தவனாயினும் க்ஷணந்தோறும் பணத்தில் பேராசை வளரப்பெற்று இந்த்ரியங்களை வெல்லாமையால் காமம் அடங்கப்பெறாமல், பெருங் குடும்பியாகிப் (பெரிய குடும்பம் உடையவனாகிப்) பிறருடைய த்ரவ்யத்தைப் (சொத்தைப்) பறிக்கிறான். 

ஓ, தைத்ய குமாரர்களே! இவ்வாறு ஸம்ஸாரத்தின் தோஷத்தை அறிந்தும், குடும்பத்தைப் போஷிக்கமுயன்று, ஆத்ம ஸ்வரூபத்தை ஆராய்வதில் இழியாமல், இது நம்முடையது, இது பிறருடையது என்னும் பேத புத்தியைப் பாராட்டிக் கொண்டிருப்பவன் நரகத்தையே அடைவான். ப்ரக்ருதி, புருஷ, ஈச்வரர்களின் உண்மையை அறிந்தவனாயினும் தன்னுடையதென்றும், பிறனுடையதென்றும் பேதபுத்தி நீங்கப்பெறாமல், கேவலம் குடும்பத்தையே போஷித்துக் கொண்டிருப்பானாயின், ஒன்றும் தெரியாத மூடனைப்போல நரகத்தையே அடைவானன்றி மோக்ஷத்தை அடையமாட்டான். அறிந்தவன் கதியே இதுவானால், அறியாதவனுடைய கதியைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? 

எவனேனும் இல்லற வாழ்க்கையில் அபிநிவேசம் (ஆழ்ந்த ஈடுபாடு) உற்று இருப்பானாயின் அவன், சப்தாதி விஷயங்களில் பெரும் விருப்பங்கொண்டு மனக்களிப்பற்று (மகிழ்ச்சியின்றி), கண்ணழகிகளான மடந்தையர்களுக்கு விளையாட்டு மிருகம் போன்று மேன்மேலும் விலங்கு போன்ற ஸம்ஸார பந்தம் நீங்கப்பெறாமல், வருந்துவானேயன்றி எக்காலத்திலும், எவ்விடத்திலும், தன்னை அதினின்று விடுவித்துக் கொள்ள வல்லவனாகமாட்டான். 

தைத்யகுமாரர்களே! ஆகையால், கேவலம் சப்தாதி விஷயங்களில் மனம் செல்லப்பெற்ற அஸத்துக்களான (நல்லறிவு இல்லாத) தைத்யர்களின் (அசுரர்களின்) ஸஹவாஸத்தை (தொடர்பை, சேர்க்கையை, உடன் இருப்பதை) வெகுதூரத்தில் துறந்து, ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களே விளையாடலாகப் பெற்றவனும், தன் தேஜஸ்ஸினால் திகழ்கின்றவனும், ஸ்ரீமந்நாராயணனென்று பெயர் பெற்றவனுமாகிய, பகவானைச் சரணம் அடைவீர்களாக. பற்றற்றவர்கள், அந்தப் பரமபுருஷனையே பரம புருஷார்த்தமான மோக்ஷத்திற்குக் காரணமென்று சொல்லுகிறார்கள். 

ஓ, அஸுரகுமாரர்களே! தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாத அப்பரமபுருஷனை ஆராதிக்க விரும்புகிறவர்களுக்கு, அதிக வருத்தமில்லை. அவன், ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவாகையால், உங்கள் ஹ்ருதயத்திலும் நிறைந்திருக்கிறான். நீங்கள், அவனைத் தேடிக்கொண்டு போகவேண்டிய அவச்யமில்லை. ஸ்வர்க்காதி பலன்களைப்போல, அவனை நாம் ஸாதிக்க வேண்டியதில்லை. அனைவர்க்கும் அவன் ஸ்வயமாகவே (தானாகவே) ஸித்தமாய் (தொன்று தொட்டே தயாராக) இருக்கிறான். அவன் ஹ்ருதயத்திலிருப்பதையும், அவனுடைய ஸ்வாமித்வம் (தலைவன், ப்ரபு) சேஷித்வம் (உடையவன், சொந்தக்காரன்), முதலிய ஸம்பந்தங்களையும் அறிய வேண்டுமேயன்றி மற்றொன்றும் செய்யவேண்டியதில்லை. 

ஸ்தாவரம் (மரம், செடி) முதல் ப்ரஹ்மதேவன் வரையிலுள்ள மேன்மையும், தாழ்மையுமான ஸமஸ்த பூதங்களிலும், பூமி முதலிய பஞ்சபூதங்களிலும், பூமி முதலிய பஞ்சபூதங்களின் பரிணாமங்களான  கட (குடம்), பட (துணி) முதலிய வஸ்துக்களிலும், ஸத்வாதி குணங்களின் வைஷம்யத்திற்கிடமான  (ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்களின் ஏற்றத்தாழ்வினால் உண்டான) மஹத்து, அஹங்காரம் (மூலப்ரக்ருதியின் மாறுபாடுகள்) முதலியவற்றிலும், பரமபுருஷன் தானொருவனே சேதனர்களையும், அசேதனங்களையும் சரீரமாகக் கொண்டு நிறைந்திருக்கிறான். அவன் இணையெதிரில்லாதவன்; சேதனாசேதனங்களில் உள் புகுந்திருப்பினும், அவற்றின் தோஷங்கள் தன்மேல் தீண்டப் பெறாதவன்; ஷாட்குண்யபூர்ணன்; ஜீவாத்மாக்களை, அவரவர் கர்மங்களுக்குத் தகுந்தபடி நியமிப்பவன். வ்யாப்ய (இந்த பரமாத்மா பரவி இருக்கும்) வஸ்துக்களில், வ்யாபகனென்று (பரவி நிறைந்திருப்பவன் என்று) நிரூபிக்கத் தகுந்தவன். இவ்வளவென்று நிரூபிக்க முடியாதவன்; ஜாதி, குணம் முதலிய விகற்பங்களற்றவன் (வேறுபாடுகள் இல்லாதவன்); கேவலாநந்தஸ்வரூபன் (ஆனந்தமே தன் இயற்கை நிலையாய் உள்ளவன்); தன்னையொழிய வேறு ஈச்வரனில்லாதவன்; மோஹாதி (மயக்கம், மனக்கலக்கம், அறியாமை முதலிய) குணங்களை விளைக்கின்ற தன் மாயையால், ஸம்ஸாரிகளுக்கு வெளியாகாத மஹிமையுடையவன்; ஸதாசார்யர்களுடைய உபதேசத்தினால் அறியத்தகுந்தவன். இத்தகையனான அந்த பகவானுடைய ஸ்வரூபத்தை அறிந்து, அவனைப் பணிவார்களானால், அவன் அவர்களிடத்தில் ப்ரீதி செய்வான். ஆகையால், நீங்கள் ப்ராணிகளுக்கு த்ரோஹம் (கெடுதி) செய்கை முதலிய அஸுர ஸ்வபாவத்தை அடியோடு துறந்து, பரமாத்மாவின் சரீரங்களாகிய ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும், அவ்வவற்றின் மேன்மை தாழ்மைகளுக்குரிய படி தயையையும் (கருணையையும், இரக்கத்தையும்), ஸ்நேஹத்தையும் (அன்பு, நட்பையும்) செய்வீர்களாக. அதனால், பரமபுருஷன் ஸந்தோஷம் அடைவான். ஜகத்காரணனும், அளவற்றவனுமாகிய, அந்த பகவான் ஸந்தோஷம் அடைவானாயின், பிறகு எதுதான் துர்லபம் (கிடைத்தற்கு அரியது)? எதுவும் துர்லபமன்று (கிடைத்தற்கு அரியது அன்று). 

பகவானுடைய பாதாரவிந்தங்களின் ஸாரத்தை மனத்தினால் அனுபவித்துக் கொண்டு, அவன் குணங்களைப்பாடுகிற எங்களுக்கு, ஜன்மாந்தர (முன் பிறவி) கர்மானுகுணமாகப் பரிணமிக்கின்ற ஸத்வாதி குணங்களால் நம் ப்ரயத்னமில்லாமல் ஸ்வயமாகவே ஏற்படுகின்ற தர்மார்த்த காமங்களால் என்ன ப்ரயோஜனம்? அனைவரும் ஆசைப்படுவதும், ஸத்வாதி குணங்களின் ஸம்பந்தமற்றதுமான, கைவல்யமென்கிற (நம் ஆத்மாவையே அனுபவிப்பதாகிய) மோக்ஷத்தினாலாவது எங்களுக்கு என்ன ப்ரயோஜனம்?. அதுவும் எங்களுக்குப் புருஷார்த்தமன்று. நமது ஆசார்யர்கள் கூறுகிற தர்மம், அர்த்தம், காமம் என்னும் இம்மூன்று புருஷார்த்தங்களும் அவற்றைக் கூறுகிற தர்க்க வித்யை (ந்யாய சாஸ்த்ரம்), வேதத்தின் பூர்வபாகம், நீதி சாஸ்த்ரம், தண்டசாஸ்தரம், க்ருஷி முதலிய ஜீவனங்களை அறிவிக்கும் சாஸ்த்ரங்கள் ஆகிய இவையெல்லாம் எனக்குத் தெரியும். ஆயினும், ஸமஸ்த ப்ராணிகளுக்கும் நண்பனாகிய பரமபுருஷனுடைய பாதாரவிந்தங்களில் ஆத்ம ஸமர்ப்பணம் செய்கையே வேதாந்த பாகங்களில் கூறப்படும் பொருள். அதுவே அழிவில்லாத புருஷார்த்தமென்று நான் நினைக்கிறேன். இந்த ஜ்ஞானம் துர்லபம் (கிடைத்தற்கு அரியது). நரனுக்கு நண்பனும் பத்ரிகாச்ரம வாஸியுமான நாராயண பகவான், இந்த ஜ்ஞானத்தை நாரதருக்கு உபதேசித்தான். இப்படிப்பட்ட ஜ்ஞானத்தில் நமக்கு எப்படி அதிகாரமென்று நீங்கள் மயங்கவேண்டாம். 

ஒரு ப்ரயோஜனத்தையும் எதிர்பாராமல் பக்தி செய்பவர்களும், பகவானுடைய பாதாரவிந்தங்களில் படிந்த பராகத்தினால் (தூள்களால்) அபிஷேகம் பெற்றவர்களுமான ப்ராணிகள் அனைவர்க்கும் அந்த ஜ்ஞானம் உண்டாகக்கூடியது. நாரதரைப் போன்ற மஹான்களுக்கேயென்கிற நிர்ப்பந்தமில்லை. நான், இந்த ஜ்ஞானத்தையும், விவேகாதிகளால் விளையும் விஜ்ஞானத்தையும் பகவானுடைய உண்மையை அறிந்த நாரதரிடத்தில் கேட்டேன். இதுவே பகவத் தர்மமென்று கூறப்படுகின்றது. இது பரிசுத்தமானது.

தைத்யகுமாரர்கள் சொல்லுகிறார்கள்:- ஒ ப்ரஹ்லாதா! நீயும், நாங்களும் இந்தக் குருபுத்ரர்களைத் தவிர மற்றொரு குருவை அறியமாட்டோமல்லவா? பால்யம் முதற்கொண்டு இவர்களே நம்மை நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றும், நீ இதுவரையில் எங்களைவிட்டு வேறு எவ்விடத்திற்கும் போகவில்லை. நீ அந்தப்புரத்திலேயே இருக்கின்றாய். உனக்கு நாரதரோடு ஸஹவாஸம் (தொடர்பு) எப்படி நேர்ந்தது? நேருவதற்கு ப்ரஸக்தியே இல்லை. அவரிடத்தில் கேட்டேனென்கிறாயே. நல்லியற்கையுடையவனே! எங்களுக்குப் பெரிய ஸம்சயமாய் (ஸந்தேஹமாய்) இருக்கின்றது. இதைப் போக்குவாயாக. நாங்கள் அதை நம்பும்படியான காரணம் உளதாயின், அதை எங்களுக்குச் சொல். 

ஆறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக