செவ்வாய், 21 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 23 - திருப்பூர் கிருஷ்ணன்

அந்த வரட்டிகள் அப்படித்தான்

பன்னிரண்டு வயதேயான சிறுமி ஜனாபாய் இடுப்பில் கைவைத்து நின்றிருந்தாள். பாண்டுரங்கனின் தீவிர பக்தை அவள். எப்போதும் பாண்டுரங்கனையே சிந்தனை செய்பவள். அதனால்தான் அவனைப் போலவே அடிக்கடி இடுப்பில் கைவைத்து நிற்கத் தொடங்கிவிட்டாளோ? 

ஆனால், இன்று அவள் அவ்விதம் வீட்டுக்கு வெளியே வந்து நின்றபோது அவள் முகத்தில் கடும் கோபம் தென்பட்டது. கோபம் வராதா பின்னே? அவள் வீட்டுச் சுவரில் அவள் தட்டிய வரட்டிகளையும் சேர்த்துப் பக்கத்து வீட்டுக்காரி கூடையில் அள்ளி வைத்திருந்தாளே!

"நான் தட்டிக் காயவைத்த என் வரட்டிகளை நீ அள்ள வேண்டிய அவசியமென்ன? காய்ந்த வரட்டிகள் என் வீட்டுச் சுவரில் தானே இருந்தன? என் கூடையில் நானே வந்து அள்ளிக் கொள்வேனே? அதற்குள் உனக்கென்ன அவசரம்?'' படபடவென்று ஜனாபாய் பொரிந்ததைக் கேட்டு அடுத்த வீட்டுக்காரி கன்னத்தில் கைவைத்து ஆச்சரியப்பட்டாள். 

"அடி அம்மாடீ! இப்போது என்ன செய்துவிட்டேன் என்று இந்தக் கத்துக் கத்துகிறாய்? மழை வரும்போல் இருந்தது. நீயோ உள்ளே மாவரைத்துக் கொண்டிருந்தாய். காய்ந்த வரட்டி நனையப் போகிறதே என்று என் கூடையில் என் வரட்டிகளோடு, உன் வரட்டிகளையும் சேர்த்து எடுத்துவைத்தேன். என் கூடையிலிருந்து பாதி வரட்டிகளை நீ எடுத்துக் கொள் என்று தானே சொல்கிறேன்? இதில் என்ன சிக்கல்?'' 

இதற்கு ஜனாபாய் ஒப்புக் கொள்ளவில்லை. மீண்டும் கத்தலானாள். 

"நல்ல நியாயமாக இருக்கிறதே? உன் வரட்டிகளும் என் வரட்டிகளும் இப்போது கலந்துவிட்டன. அதுதான் சிக்கல். நான் தட்டிய வரட்டிகளைத் தனியே பிரிக்க வேண்டும். அவைதான் எனக்குத் தேவை. உன் வரட்டிகளை நீயே வைத்துக் கொள். அவற்றில் எனக்கு அக்கறை இல்லை. என் வரட்டிகள் எதுவோ அவற்றைத் தனியே பிரித்துத்தா''.

அடுத்த வீட்டுக்காரி கவலையில் ஆழ்ந்தாள்.

"என்ன இந்தச் சிறுமி இப்படி வாதம் செய்கிறாள்? வரட்டி எதுவானால் என்ன? அடுப்பில் போட்டால் எரியப் போகிறது. எல்லா வரட்டிகளையும் கலந்துவிட்டோம். இவள் தட்டிய வரட்டி என்பதற்கு அந்த வரட்டிகளில் என்ன கையெழுத்தா போட்டிருக்கிறாள்? ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாள்? மழையில் இவள் வரட்டி நனைந்துவிடப் போகிறதே என்று இரக்கப்பட்டு உதவி செய்யப்போய் இப்போது அது உபத்திரமாக அல்லவா முடிந்திருக்கிறது!''

ஜனாபாயின் கடந்த கால வரலாறு அவளுக்குத் தெரியும். சுமார் ஐந்து வயதிருக்கும்போது அவள் பெற்றோரோடு பண்டரிபுரத்திற்கு வந்தாளாம். பண்டரிநாதனை தரிசித்த அவள் அங்கேயே தான் தங்குவேன் என்று பிடிவாதம் பிடித்தாளாம். பெற்றோர் அவளது ஆழ்ந்த பக்தியைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் அவளை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டார்களாம். பிறகு தீவிர பாண்டுரங்க பக்தரான நாமதேவர் பண்டரிபுரக் கோயிலுக்குப் போயிருக்கிறார். அவரைப் பார்த்ததும், "நீங்களே என் குருநாதர்,'' என்று வணங்கினாளாம். நாமதேவரின் சிஷ்யையாக அவர் குழுவில் சின்னஞ்சிறு வயதிலேயே இணைந்து கொண்டு விட்டாள். இப்போது நாமதேவருக்குப் பணிவிடை செய்துகொண்டு அவர் வீட்டிலேயே தான் வளர்ந்து வருகிறாள். 

கடினமாக உழைக்கும் பெண். "பாண்டுரங்கா! பாண்டுரங்கா!" என்று சொல்லிக்கொண்டே மளமளவென்று அவள் செய்துமுடிக்கும் வேலைகளைப் பார்த்தால் மனத்தில் மலைப்புத் தோன்றும். யாருடனும் அதிகப் பேச்சுவார்த்தை கிடையாது. சதா பாண்டுரங்க ஜபம்தான். 

பாண்டுரங்கனின் அடியவர்கள் யார் வந்தாலும் நிமிடத்தில் விருந்து செய்து பரிமாறி விடுவாள். இந்தப் பன்னிரண்டு வயதில் எட்டுப் பெண்கள் செய்யும் வேலைகளை இந்த ஒரே பெண் செய்கிறதே! அக்கம்பக்கத்தில் உள்ள பெண்மணிகள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போவார்கள். 

அதிகாலை வாசலைப் பெருக்கிக் கோலமிடுவதிலிருந்து பசுமாட்டின் சாணத்தால் சுவரில் வரட்டி தட்டுவது வரை யாரையும் எதற்கும் ஜனாபாய் உதவிக்கு அழைப்பதில்லை. வேலைகள் மளமளவென்று நடந்துவிடும். தானே நடந்து விடுகிறதா! இல்லை! பாண்டுரங்கன் வந்து யாருமறியாமல் உதவி செய்கிறானா! 

நாமதேவர் வெளியே சென்று அவள் மட்டும் வீட்டிலிருந்தாலும் பூட்டிய வீட்டுக்குள் யாருடனோ ஜனாபாய் பேசும் சப்தம் கேட்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவைத் தட்டினால் ஓடிவந்து ஜனாபாய் கதவைத் திறப்பாள். வந்தவர்கள் அங்குமிங்கும் பார்ப்பார்கள். வீட்டிற்குள் யாருமிருக்க மாட்டார்கள். "என்ன பார்க்கிறீர்கள்?" என்று சிரித்துக் கொண்டே குறும்பாகக் கேட்பாள் ஜனாபாய். "ஒன்றுமில்லை" என்றவாறு வந்தவர்கள் போய்விடுவார்கள். 

ஜனாபாய் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே சென்றால் மறுபடியும் பூட்டிய வீட்டுக்குள் பேச்சுச் சப்தம் ஆரம்பிக்கும். தான் மாவரைக்கும் போதும் துணியுலர்த்தும் போதும் இன்னும் எந்த வேலை செய்தாலும் பாண்டுரங்கன் தன் அருகில் அமர்ந்து சுவாரஸ்யமாகப் பல கதைகளைச் சொல்கிறான் என்ற ரகசியத்தையும் அதனால் தான் அவளுக்கு அலுப்பே தெரிவதில்லை என்ற உண்மையையும் அவள் யாரிடமும் வெளிப்படுத்தியதில்லை. 

அவளுக்கு எப்போதும் பாண்டுரங்கன் நினைவு மட்டும்தான். நாமதேவர் அழகழகாகப் பாண்டுரங்கன் மேல் கீர்த்தனைகள் எழுதுகிறாரே! அவற்றை எப்போதும் பக்தி பொங்கப் பாடிக் கொண்டே இருப்பாள். உலகியல் விஷயங்களில் அவளுக்கு எந்த நாட்டமும் இருந்ததில்லை. 

அப்படியிருக்க வரட்டிக்காக ஏன் இந்தக் கத்துக் கத்துகிறாள்? அடுத்த வீட்டுப் பெண்மணி இவள் தட்டிய வரட்டிகளை எப்படிப் பிரித்துப் பங்குபோடுவது என்றறியாமல் திகைத்து நின்றிருந்தாள். 

அப்போதுதான் நாமதேவரைத் தேடி அவரது நண்பர்களான ஞானதேவர், நிவ்ருதிநாதர், சோபானர், முக்தாபாய், ராமானந்த சுவாமி ஆகியோர் வந்தனர். அவர்கள் அடிக்கடி வருபவர்கள் தான்! நாமதேவரும் அவர்களுமாக மணிக்கணக்கில் பாண்டுரங்கன் புகழைப் பேசி மகிழ்வார்கள்.

அவர்கள் அனைவரையும் வரவேற்றாள் ஜனாபாய். 

நாமதேவர் அருகில் எங்கோ சென்றிருப்பதாகவும், அவர் வரும்வரை வீட்டில் பாண்டுரங்கக் கீர்த்தனைகளைப் பாடியவாறு காத்திருக்கலாம் என்றும் பிரியமாக அழைத்தாள். 

அதற்குள் ஞானதேவர் அங்கு நடந்த சண்டையைக் கவனித்துவிட்டார். 

"ஜனாபாய்? என்ன தகராறு இங்கே?'' என்று பாசத்தோடு வினவினார். 

ஓடோடி வந்த அடுத்த வீட்டுப் பெண், நடந்த சங்கதி முழுவதையும் தெரிவித்தாள். தான் பாதி வரட்டிகளைத் தருகிறேன் என்றால் தான் தட்டிய வரட்டிகள் தான் வேண்டும் என்று ஜனாபாய் பிடிவாதம் பிடிப்பதையும் தெரிவித்தாள். 

ஞானதேவர் நகைத்துக் கொண்டார். என்ன ஒரு புதுமையான வரட்டிச் சண்டை இது!

"ஜனாபாய்! வரட்டியில் என்ன வித்தியாசமிருக்கிறது? எல்லாம் பசுஞ்சாணத்தால் ஆனவை தானே? எந்த வரட்டியை உனக்குத் தந்தாலும் அதனால் என்ன? நீ தட்டிய வரட்டியோ பக்கத்து வீட்டு வரட்டியோ இரண்டுமே அடுப்பில் போட்டால் எரியப் போகிறது. அப்படியிருக்க நீ தட்டிய வரட்டிகள் தான் வேண்டும் என்று ஏன் இந்தப் பிடிவாதம்?''

ஜனாபாய் சற்று நேரம் மவுனம் காத்தாள். பின் மெல்லச் சொல்லலானாள்:

"அப்படியல்ல சுவாமி. இரண்டு வரட்டிகளிலும் வித்தியாசம் உண்டு. நான் வரட்டி தட்டும்போது பாண்டுரங்க நாமத்தை உளப்பூர்வமாகச் சொல்லிக்கொண்டே தட்டுவேன். என் வரட்டிகள் அடுப்பில் எரியும் போது "பாண்டுரங்கா! பாண்டுரங்கா!" என்று இனிமையாகக் குரல் கொடுத்துக் கொண்டே எரியும். அந்த ஒலியைக் கேட்டு நான் மகிழ்வேன். அதனால் தான் நான் தட்டிய வரட்டிகளே வேண்டும் என்கிறேன். என் வரட்டிகளைத் தனியே பிரித்தெடுப்பது ஒன்றும் சிரமமில்லை. நீங்கள் யார் வேண்டுமானாலும் பிரித்துத் தந்துவிடலாம். எந்த வரட்டிகளைக் காதருகே கொண்டுபோனால் பாண்டுரங்க நாமத்தின் ஒலி கேட்கிறதோ அதெல்லாம்தான் என் வரட்டிகள்! நான் தட்டும்போது அந்த வரட்டிகள் நான் சொல்லும் நாமத்தை உள்வாங்கிப் பதிவு செய்துகொண்டதை நான் அறிவேன்!

ஜனாபாயின் விளக்கத்தைக் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரி உள்பட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். அனைவரும் ஓடிப்போய் வரட்டிகள் அடுக்கப்பட்ட கூடையிலிருந்து வரட்டிகளை ஒவ்வொன்றாகக் காதருகே கொண்டு போனார்கள். 

பக்கத்து வீட்டுப் பெண்மணியும் ஒரு வரட்டியை எடுத்துத் தன் காதருகே கொண்டுபோனாள். எல்லார் காதுகளிலும் சாணியின் உள்ளே பதிவாகியிருந்த பாண்டுரங்க நாமம், ஜனாபாயின் இனிய குரலில் "பாண்டுரங்கா பாண்டுரங்கா" என கேட்கத் தொடங்கியது! 

இந்த அபூர்வ நிகழ்ச்சியால் மெய்சிலிர்த்தவாறே அவர்கள் ஜனாபாய் தட்டிய வரட்டிகளைப் பிரித்துக் கொடுத்தபோது, இயல்பாகத் தன் வரட்டிகளை எடுத்து வீட்டுக்குள் கொண்டு வைத்துக் கொண்டாள் ஜனாபாய். பிறகு அடுத்த வீட்டுப் பெண்மணியிடம், "நான் கோபித்துக் கொண்டதைப் பற்றித் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் அம்மா! நாளை பாண்டுரங்கன், என்னிடம் வந்து என் நாமம் பதிவான வரட்டிகள் எங்கே என்று கேட்டால் நான்தானே மாட்டிக் கொள்வேன். அதனால் தான் கொஞ்சம் கத்திவிட்டேன்!'' என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

அத்தனை பேரும் ஜனாபாயைக் கையெடுத்துக் கும்பிட்டபோது அதைப் பற்றி எந்தப் பெருமையும் கொள்ளாமல், "பாண்டுரங்கா! பாண்டுரங்கா!" என்றவாறே வீட்டுக்குள்ளே நடந்தன அவளது பாதங்கள். 

நன்றி - தினமலர் அக்டோபர் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக