ஶ்ரீமத் பாகவதம் - 161

ஏழாவது ஸ்கந்தம் - எட்டாவது அத்தியாயம்

(ந்ருஸிம்ஹாவதாரமும், ஹிரண்யகசிபுவின் ஸம்ஹாரமும்)

நாரதர் சொல்லுகிறார்:- பிறகு அவ்வஸுரகுமாரர்கள் அனைவரும் அந்த ப்ரஹ்லாதன் மொழிந்ததைக் கேட்டு, அது ஒரு தோஷமுமின்றி அழகாயிருந்தமையால், அதை அப்படியே அங்கீகரித்தார்கள். அவர்கள் அது முதல் அஸுர குருக்கள் கற்பிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பால், அவ்வஸுர குருவின் பிள்ளைகள், அந்த அஸுரகுமாரர்களின் புத்தி பகவத்தர்மத்தில் மாறாத ஊக்கமுற்றிருப்பதை அடையாளங்களால் கண்டறிந்து, பயந்து, விரைந்தோடி, ராஜனாகிய ஹிரண்யகசிபுவுக்கு உள்ளபடி அறிவித்தார்கள். பிறகு, குருபுத்ரன் மூலமாய்த் தன் புதல்வன் தன் வழியில் வராமல் தனக்கு அனிஷ்டமான (விருப்பம் இல்லாத) தப்பு வழியில் போகையாகிற அநீதியைக் கேட்டு, கோபாவேசத்தினால் உடம்பெல்லாம் நடுங்கப்பெற்று, ப்ரஹ்லாதனைக் கொல்ல மனங்கொண்டான். அவ்வஸுர ச்ரேஷ்டன், கொடுமையான வாக்கினால் அவமதிக்கத்தகாத ப்ரஹ்லாதனை அவமதித்து, விநயத்தினால் (பணிவினால்) வணங்கி, எவ்வளவு அவமதிக்கினும் கோபமற்றுக் கைகளைக் குவித்துக்கொண்டு, அருகாமையில் நிற்கிற அப்புதல்வனைக் கோபத்தினால் பாபிஷ்டமான (பாபம் உள்ள) கண்ணைக் குறுக்கே சாய்த்துப் பார்த்து, இயற்கையில் கொடியனாகிய அவ்வஸுரன், பாதத்தினால் மிதிக்கப்பட்ட ஸர்ப்பம் போலப் பெருமூச்செறிந்து இவ்வாறு மொழிந்தான்.

ஹிரண்யகசிபு சொல்லுகிறான்:- வீண் வணக்கமுற்றவனே! மந்த (குறைவான, மூடமான) புத்தியுடையவனே! பிடிவாதங்கொண்டு என் கட்டளையைக் கடக்கின்ற உன்னை நான் இப்பொழுது யமன் வீட்டிற்கு அனுப்பி விடுகிறேன். மூடா! நான் கோபமுறுவேனாயின், லோகபாலர்களோடு கூடின மூன்று லோகங்களும் நடுங்கும். அப்படிப்பட்ட என் கட்டளையை நீ என்ன பலங்கொண்டு பயமற்றவன் போலக் கடந்தாய்?

ப்ரஹ்லாதன் சொல்லுகிறான்:- ஓ, மன்னவனே! அவன் எனக்கு மாத்ரமே பலமல்லன். உனக்கும், பலிஷ்டர்களான (பலம் உள்ளவர்களான) மற்றவர்களுக்கும் அவனே பலம். ப்ரஹ்மதேவன் முதலிய ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான மேன்மையும் தாழ்மையுமுள்ள ஸமஸ்த ப்ராணிகளும் அவனுக்கு உட்பட்டவர்கள். அவன் ஸர்வேச்வரன். அவன், அனைவர்க்கும் பலம் கொடுப்பவன். இந்த்ரிய பலம், மனோபலம், தைர்யம், தேஹபலம், இந்த்ரியங்கள் இவற்றிற்கு ஆதாரமாயிருப்பவன்; இணையெதிரில்லாதவன்; தனது அம்சங்களாகிய ப்ரக்ருதி புருஷர்களாகிற சக்திகளால் ப்ரபஞ்சத்தையெல்லாம் படைப்பதும், காப்பதும், அழிப்பதுமாயிருப்பவன். அவன், ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு நியாமகன் (நியமிப்பவன்). “எனக்குச் சத்ருவாகிய அவன், எனக்கு எப்படி பலமாவான்?”என்று நினைக்க வேண்டாம். நீ உனக்குள்ள இந்த அஸுர ஸ்வபாவத்தைத் துறப்பாயாக. தன்னினம், பிற இனமென்றும், சத்ரு (எதிரி) மித்ரன் (நண்பன்) என்றும், பேதபுத்தி (வேறுபாடுகளைக் காணும் புத்தி) உண்டாகாதிருக்குமாறு உன் மனத்தை வழிப்படுத்திக்கொள்வாயாக. துர் (கெட்ட) விஷயங்களில் செல்லும் மனத்தைக்காட்டிலும், வேறு சத்ருக்கள் (எதிரிகள்) எவருமே இல்லை. அத்தகைய மனத்தை வெல்லுகையே நாம் பரமபுருஷனுக்குச் செய்யும் பெரிய ஸமாராதனமாம் (தொண்டு, மகிழ்வித்தல், திருப்தி செய்தல்). அதை வென்றவனுக்கு, எவரும் சத்ருக்களாகத் (எதிரிகளாகத்) தோன்றமாட்டார்கள். உன்னைப் போன்ற சிலர், முதலில் ஆத்மாவின் அபஹதபாப்மத்வம் (பாப ஸம்பந்தமே அற்று இருக்கை) முதலிய ஐச்வர்யத்தைப் பறிக்கின்ற இந்த்ரியங்களாகிற ஆறு சத்ருக்களை வெல்லாமல், பத்து திசைகளையும் தாம் வென்றதாக நினைக்கிறார்கள். அது துரபிமானம் (வீண் பெருமை). இந்திரியங்களை வென்று, ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை அறிந்து, எல்லாம் பரமாத்ம சரீரங்களேயென்று பாவித்து ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் ஸமனாயிருக்கும் ஸாதுவுக்குத் தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம், மனக்கலக்கம்) முதலிய அஜ்ஞானத்தினால் (அறியாமையினால்) விளையும் சத்ருக்கள் (எதிரிகள்) எவ்வாறு தலையெடுப்பார்கள்?

ஹிரண்யகசிபு சொல்லுகிறான்:- அட மந்தபுத்தீ! நீ நிச்சயமாய் மரணம் அடைய விரும்புகின்றாய். ஏனென்றால், நீ தலைக்குமேல் பிதற்றுகின்றனையல்லவா? இனி, நீ எவ்வாறு ஜீவித்திருக்க முடியும்? மரணகாலம் ஸமீபிக்கப் பெற்றவர்கள் விபரீதமான பேச்சுக்களைப் பேசுவார்களென்பது வழக்கம்? மந்தபாக்யனே! (அத்ருஷ்டம் இல்லாதவனே!) என்னைக்காட்டிலும் வேறொருவனை ஜகதீச்வரனென்று நீ சொல்லுகின்றாயே; அவன் எங்கே இருக்கிறான்? நீ நினைத்துக் கொண்டிருக்கிற ஜகதீச்வரன், எல்லா இடங்களிலும் அந்தராத்மாவாய் இருப்பானானால், இதோ எதிரிலிருக்கிற ஸ்தம்பத்தில் (தூணில்) ஏன் புலப்படவில்லை? ஸமஸ்த லோகங்களுக்கும் ப்ரபுவாகிய நான், இவ்வாறு பிதற்றுகிற உன் சரீரத்தினின்று உன் தலையை அறுத்து விடுகிறேன். ரக்ஷகனென்று (காப்பாற்றுபவன் என்று) உன்னால் பாவிக்கப்பட்ட அந்த ஸர்வேச்வரன் இப்பொழுது உன்னைப் பாதுகாப்பானாக.

நாரதர் சொல்லுகிறார்:- இவ்வாறு மஹத்தான கோபாவேசங்கொண்டு பரமபாகவதனான தன் புதல்வனை அடிக்கடி கொடிய சொற்களால் பீடித்துக்கொண்டிருக்கிற அவ்வஸுரப்ரபு கத்தியை எடுத்துக்கொண்டு மேன்மையையுடைய ஸிம்ஹாஸனத்தினின்று எழுந்து மிகுந்த பலமுடைய தன்முஷ்டியினால் (மூடிய உள்ளங்கையினால்) ஸ்தம்பத்தை (தூணை) அடித்தான். உடனே அந்த ஸ்தம்பத்தில் மிகவும் பயங்கரமான ஒரு த்வனி (ஒலி) உண்டாயிற்று. அதனால் ப்ரஹ்மாண்டம் முழுவதும் வெடித்தாற் போலாய்விட்டது. ஓ யுதிஷ்டிரா! தங்கள் தங்கள் இடங்களிலிருக்கின்ற ப்ரஹ்மாதிகள் அனைவரும் அந்த தவனியைக் (ஒலியைக்) கேட்டு ப்ரளயகாலம் வந்ததோவென்று ப்ரமித்துத் தங்கள் ஸ்தானங்களெல்லாம் அழிந்து போய் விடுமென்று நினைத்தார்கள். பிள்ளையை வதிக்க விரும்பித் தன் பலமுள்ளவளவும் முயற்சி செய்கின்ற அவ்வஸுர ராஜன் தான் ஒரு நாளும் கேளாததும் அற்புதமுமாகிய அந்த தவனியைக் (ஒலியைக்) கேட்டு அதற்குக் காரணமான வஸ்து எதுவென்று ஸபையின் இடையில் முழுவதும் எவ்வளவு உற்றுப்பார்த்தும் காணப்பெறாதிருந்தான். அந்தச் சப்தத்தினால் அங்குள்ள அஸுரக்கூட்டத் தலைவர்கள் அனைவரும் பெரும்பயம் அடைந்தார்கள். 

பகவான் ஸ்ரீநரசிம்மரது திருவவதாரம்

அப்பொழுது பகவான் தன் ப்ருத்யானாகிய (சேவகனான, பக்தனான) ப்ரஹ்லாதனுடைய வாக்கையும் ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான ஸமஸ்த பூதங்களிலும் தான் நிறைந்திருப்பதையும் ஸத்யம் செய்யவிரும்பி மிருகமுமன்றி (விலங்கும் அன்றி), மனுஷ்யனுமன்றி இரண்டு உருவங்களும் அமைந்த அற்புதமான ஓர் உருவத்தைக் கொண்டு (நரசிம்ம உருவமேற்று) அச்சபையிலுள்ள அதே ஸ்தம்பத்தில் (தூணில்) அவ்வஸுரனுக்குப் புலப்பட்டான். 

மெய்யாக்குவதற்காக:-

“உள்ளேயோ வெளியேயோ சாவில்லை; மனிதனாலோ விலங்காலோ சாவில்லை” என்று பிரும்மதேவர் அளித்த வரத்தை மெய்ப்பிக்கவும்,

“உன்னால் அவனை அழிக்க இயலாது; நாராயண பக்தனால் அவனுக்கு அழிவு வரும்” என்று நாரதர் இந்திரனுக்குக் கூறிய வார்த்தையை மெய்ப்பிக்கவும்,

“மூன்று பிறவிகளெடுத்தபின் சாபவிமோசனம் கிட்டும்” என்று ஸநகாதிகள் கொடுத்த சாபத்தை மெய்ப்பிக்கவும்,

“சராசரங்கள் அனைத்திலும் பகவான் நீக்கமற நிறைந்துள்ளான்” என்று பிரஹ்லாதன் கூறியதை மெய்ப்பிக்கவும்,

“என்னடியவன் என்றுமே துன்பமடையான்; மரண பயமான ஸம்ஸாரக் கடலிலிருந்து என் பக்தர்களைத் தாண்டச் செய்கிறேன்” என்று, தானே கூறிய தன் சொற்களை மெய்ப்பிக்கவும் அந்த ந்ருஸிம்ஹ பகவான் ஸ்தம்பத்தின் இடையினின்று (தூணின் நடுவிலிருந்து) வெளிப்பட்டார். இவ்வாறு வெளிக்கிளம்புகின்ற ஒரு ப்ராணி விசேஷத்தைக் கண்டு “ஆ! இஃதென்ன! மிருகமுமன்று. மனுஷ்யனுமன்று. மனுஷ்ய உருவமும் ஸிம்ஹத்தின் உருவமும் கலந்திருக்கின்றது. இஃதென்ன ஆச்சர்யம்?” என்று ஆலோசித்துக் கொண்டிருந்தான். 

அப்பொழுது ந்ருஸிம்ஹரூபியான பகவான் அவ்வாறு பயங்கரமான அவ்வுருவத்தைச் சிந்தித்துக் கொண்டிருக்கிற அவ்வஸுரனுடைய எதிரில் கிளம்பினான். அந்தப் பகவானுடைய கண்கள் உருக்கின பொன்னின் நிறம் அமைந்து மிகவும் பயங்கரமாயிருந்தன. அவனுடைய முகம் ஜ்வலிக்கின்ற ஜடைகள் (சடை முடி) தொங்கப்பெற்றுப் பெரிய ஆடம்பரம் அமைந்திருந்தது. கோரைப் பற்கள் பயங்கரமாயிருந்தன. நாக்கு பெரிய கத்திபோலச் சலித்துக்கொண்டு (ஆடிக்கொண்டு) சிறிய கத்தியின் நுனி போலக் கூராய் இருந்தது. அவ்வுருவம் புருவ நெரிப்போடு கூடின முகத்தினால் பயங்கரமாயிருந்தது. காதுகள் மேலே நெரித்துக் கொண்டிருந்தன. வாயும், மூக்கும் திறந்து பர்வத (மலை) குஹைபோலப் பரந்து அற்புதமாயிருந்தன. கன்னத்தின் ஓரங்கள் பிளந்திருந்தமையால் பயங்கரமாயிருந்தன. அவ்வுருவம் ஆகாயத்தை அளாவியிருந்தது (பரந்து இருந்தது). கழுத்து நீளமின்றிப் பருத்து மார்பு அகன்று இடை சிறுத்து இருந்தது. உடம்பெல்லாம் சந்தர கிரணம் போல வெளுத்த மயிர்கள் நிறைந்திருந்தன. புஜங்கள் நாற்புறத்திலும் நீண்டு ஸைன்யங்கள் (படை வீரர்) போலக் கூட்டம் கூட்டமாயிருந்தன. அப்பரமபுருஷன் நகங்களையே ஆயுதமாகக் கொண்டு எவர்க்கும் அணுக முடியாதவனாயிருந்தான். சக்ரம், வஜ்ரம், முதலிய மற்ற மேலான ஆயுதங்களையெல்லாம் தரித்துத் தைத்யர்களையும், தானவர்களையும் துரத்திக்கொண்டிருந்தான். அஸுரர்களுக்குள் யானை போன்ற அவ்வஸுரன் “மஹாமாயாவியாகிய விஷ்ணு பெரும்பாலும் என்னை வதிப்பதற்காக இவ்வாறு ஒரு உபாயம் சிந்தித்தான். ஆயினும் இந்த முயற்சியால் என்ன உபயோகம்? ஒன்றும் பலிக்காது” என்று மொழிந்து கதையை ஆயுதமாகத் தரித்துக் கர்ஜித்துக்கொண்டு ந்ருஸிம்ஹரூபியான பகவான் மேல் எதிர்த்தான். 

அப்பொழுது அவ்வஸுரன் “ந்ருஸிம்ஹனுடைய தேஜஸ்ஸில் (ஒளியில்) மறைந்து அக்னியில் விழுந்த விட்டில் போலப் புலப்படாமலேயிருந்தான். சுத்த ஸத்வ ரூபனாகிய (ரஜஸ், தமஸ் கலக்காத ஸத்வ குணத்தாலேயேயான திருமேனி உடைய) அந்தப் பகவானிடத்தில் விழுந்த தமோ குண ஸ்வபாவனான அவ்வஸுரன் மறைந்தது ஓர் ஆச்சர்யமன்று. அவன் முன்பு ஸ்ருஷ்டியின் ஆதியில் ப்ரளய காலத்திலுண்டான தமஸ்ஸை எல்லாம் தன் தேஜஸ்ஸினால் அப்படியே விழுங்கினானல்லவா? பிறகு, அம்மஹாஸுரன் எதிர்த்து ஓடிவந்து கோபத்தினால் பெருவேகமுள்ள கதையைச் சுழற்றி அதனால் ந்ருஸிம்ஹனை அடிக்க முயன்றான். அவ்வாறு முயன்ற தைத்யேந்த்ரனைக் (அஸுரர்களின் தலைவனை) கதையைத் தரித்த ந்ருஸிம்ஹ பகவான், கருடன் ஸர்ப்பத்தைப் (பாம்பைப்) பிடிப்பது போல, கதையோடு கூடின அவ்வஸுரனைப் பிடித்துக்கொண்டான். கருடன் அவலீலையாய் (சற்று விளையாட்டாக) இருக்கையில் பிடியுண்ட ஸர்ப்பம் மெல்ல மெல்லத் திமிர்த்துக் கொண்டு (விலகிக் கொண்டு) நழுவுவதுபோலப், பிடியுண்ட அவ்வஸுரன் விளையாடலுற்ற அந்த ந்ருஸிம்ஹனுடைய ஹஸ்தத்தினின்று (கையிலிருந்து) திமிர்த்துக்கொண்டு (விலகிக் கொண்டு) நழுவினான். அவ்வஸுரனால் தமது பதவிகள் பறிக்கப்பெற்ற இந்திரன் முதலிய ஸமஸ்த லோகபாலர்களும், மற்ற தேவதைகளும் அவனிடத்தில் பயந்து மேகத்தில் மறைந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அதைக் கண்டு பகவான் அவனை விளையாட்டிற்காக நழுவவிட்டதை அறியாமல் “பகவானைக் காட்டிலும் அவன் பலிஷ்டனாயிருக்கிறான் (பலஸாலியாய் இருக்கிறான்). அவனால் இப்பகவானுக்கு என்ன நேருமோ?” என்று விபரீதமாக நினைத்தார்கள். அம்மஹாஸுரன் அந்த ந்ருஸிம்ஹனுடைய ஹஸ்தத்னின்று (கையிலிருந்து) விடுபட்டு அந்தப் பகவானைத் தன் வீர்யத்திற்குப் பயந்திருப்பதாகத் தானே நினைத்துக் கொண்டு அவனைக் காட்டிலும் தன்னைப் பலிஷ்டனாக (பலசாலியாக) அபிமானித்து (நினைத்து) யுத்தத்தில் இளைப்பின்றிக் (சோர்வு இன்றி) கத்திகேடயங்களை ஏந்தி, மீளவும் அந்த ந்ருஸிம்ஹன்மேல் எதிர்த்தான். அவ்வஸுரன் பருந்தின் வேகமுடையவனாகிக் கத்தியையும், கேடயத்தையும் ஏந்திக் கீழும் மேலும் இடையீடின்றிப் பலவாறு சுழற்றிக்கொண்டு பல வழிகளில் ஸஞ்சரிக்கையில் ந்ருஸிம்ஹன் அட்டஹாஸமும் கடின (உரத்த) கர்ஜனையும் செய்து பயங்கரமான வேகத்தை ஏற்றுக்கொண்டு அட்டஹாஸத்தையும், கர்ஜனத்தையும் பொறுக்க முடியாமல் கண் மூடிக் கொண்டிருக்கிற அவ்வஸுரனைப் பிடித்துக் கொண்டான். அப்பால் பிடிக்கப்பெற்று ஸ்வாதீனமற்றுத் (தன் வசம் அற்று) தன்னை விடுவித்துக்கொள்ள நாற்புறத்திலும் திமிர்த்து (வளைந்து) அவயவங்களை அசைத்துத் துடிக்கின்றவனும் இந்த்ரனோடு யுத்தம் செய்யும் பொழுது அவனுடைய வஜ்ராயுதத்தினாலுங்கூட அழியாத தோலுடையவனுமாகிய அவ்வஸுரனை வாசற்படியில் இருந்துகொண்டு, மடியில் தள்ளி, ஸர்ப்பம் (பாம்பு) எலியைப் பிடிப்பது போலப் பிடித்துக் கருடன் ஸர்ப்பத்தைப் (பாம்பைப்) பிளப்பது போல நகங்களால் அவலீலையாகப் (விளையாட்டாகப்) பிளந்தான். கோபாவேசத்தினால் பார்க்கமுடியாமல் பயங்கரமான கண்களும் ரக்த பிந்துக்களால் (ரத்த துளிகளால்) நனைந்து சிவந்திருக்கிற ஜடைகளும், முகமும் அமைந்த அந்த ந்ருஸிம்ஹன் திறந்த வாயின் ஓரங்களை நாக்கினால் நக்கிக்கொண்டு அவ்வஸுரன் குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்து யானையைக் கொன்ற ஸிம்ஹம் போன்று நகங்களின் நுனிகளால் பிளக்கப்பட்ட ஹ்ருதயகமலத்தையுடைய அவ்வஸுரனது சரீரத்தை அப்புறம் எறிந்து, மேலான ஆயுதங்களை ஏந்தி அவனைத் தொடர்ந்து வந்த அவன் ப்ருத்யர்களை (சேவகர்களை) எதிர்த்தான். 

காடுகள் போல் அடர்ந்த பல புஜங்களையுடைய அந்த  பகவான் நகங்களை ஆயுதமாகப் பெற்ற தன்புஜங்களால் நாற்புறத்திலும் துரத்தி ஆயிரம் ஆயிரமாக வதித்தான். மேகங்கள் அந்த ந்ருஸிம்ஹ பகவானுடைய ஜடைகளால் அசைக்கப்பட்டுச் சிதறின. ஸூர்யன் முதலிய க்ரஹங்களெல்லாம் அவனுடைய கண்ணோக்கத்தினால் ஒளி பறிக்கப்பெற்றன. ஸமுத்ரங்கள் அவனுடைய மூச்சுக்காற்றினால் அடியுண்டு கலங்கின. திக்கஜங்கள் அவனுடைய கர்ஜனத்தைக் கேட்டுக் களிப்பற்று (மகிழ்ச்சி இன்றி) வீறிட்டன. ஆகாயத்தில் அடர்ந்த விமானங்களெல்லாம் அவனுடைய ஜடைகளால் தள்ளுண்டன. பூமி அவன் பாதங்களால் பீடிக்கப்பட்டு நடுங்கிற்று. பர்வதங்கள் (மலைகள்) அவனுடைய வேகத்தைப் பொறுக்க முடியாமல் கிளம்பின. ஆகாயமும், திசைகளும் அவனுடைய தேஜஸ்ஸினால் தோற்றாதிருந்தன. மிகுந்த கோபாவேசமுடையவனும் பயங்கரமான முகமுடையவனுமாகிய அந்த ந்ருஸிம்ஹரூபியான பகவான் தைத்யர்களை (அஸுரர்களை) எல்லாம் கொன்ற பின்பு எதிர்த்துச் சண்டை செய்யத் தகுந்த வீரனைக் காணாமல் பேரொளிப் பெருக்குடன் தானே ஸர்வேச்வரனென்பதை உலகத்தாருக்கு வெளியிட முயன்று அச்சபையில் அமைத்திருக்கின்ற மேன்மைபொருந்திய ராஜஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்தான். 

அப்பொழுது ப்ரபுவாகிய அம்மஹாபுருஷனை எவனும் பயத்தினால் அணுகவில்லை. மூன்று லோகங்களுக்கும் தலை நோய் (தலை வலி) போலப் பொறுக்க முடியாத ஆதி தைத்யானாகிய (அஸுரர் தலைவனான) அந்த ஹிரண்யகசியு ந்ருஸிம்ஹ பகவானால் யுத்தத்தில் முடிந்ததைக் கண்டு தெய்வ மடந்தையர்கள் ஸந்தோஷத்தின் மிகுதியால் முகம் மலரப்பெற்று அந்த ந்ருஸிம்ஹன் மேல் அடிக்கடி புஷ்ப வர்ஷங்களைப் (பூ மழை) பொழிந்தார்கள். அப்பொழுது அவ்வாச்சர்யத்தைப் பார்க்க வந்த தேவதைகளின் விமானங்கள் வரிசை வரிசையாக ஆகாயம் முழுவதும் நிறைந்திருந்தன. தேவதுந்துபி வாத்யங்களும், தம்பட்டங்களும் முழங்கின. கந்தர்வச்ரேஷ்டர்களும், அப்ஸரஸ்த்ரீகளும் ஆடல் பாடல்களைச் செய்தார்கள். அப்பா! யுதிஷ்டிரா! ப்ரஹ்மதேவன், ருத்ரன், இந்திரன் முதலிய தேவதைகளும், ரிஷிகளும், பித்ருக்களும், ஸித்தர்களும், வித்யாதரர்களும், உரகர்களும், மனுக்களும், ப்ரஜாபதிகளும், கந்தர்வர்களும், அப்ஸரஸ்த்ரீகளும், சாரணர்களும், யக்ஷர்களும், கிம்புருஷர்களும், வேதாளர்களும், கின்னரர்களும், ஸனந்தர், குமுதர் முதலிய விஷ்ணுவின் பரிசாரகர்களும் சிறிது ஸமீபத்தில் வந்து சிரஸ்ஸில் அஞ்சலித்துப் (கை கூப்பி), பேரொளியுடன் ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்திருக்கின்ற அந்த ந்ருஸிம்ஹ பகவானைத் தனித்தனியே ஸ்தோத்ரம் செய்தார்கள்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- ந்ருஸிம்ஹனே! உனக்கு நமஸ்காரம். நீ தேச, கால, வஸ்து பரிச்சேதமற்றவன். உன் சக்திக்கு எல்லையே கிடையாது. உன்னுடைய வீர்யம் அற்புதமாயிருக்கின்றது. உன் செயல்கள் பரிசுத்தமானவை. உன் செயல்களைக் கேட்பவர்களும் பாபங்களற்றுப் பரிசுத்தராவார்கள். ஜ்ஞானம், சக்தி முதலிய குணங்கள் அமைந்த நீ ஸத்வாதி குணங்களால் இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல்) லீலையாக (விளையாட்டாக) நடத்துகின்றாய். ஆயினும் நீ விகாரமற்றவன் (மாறுபாடுகள் அற்றவன்). அத்தகைய உனக்கு நமஸ்காரம்.

ருத்ரன் சொல்லுகிறான்:- நாதா! நீ கோபிக்குங் காலம் ப்ரளய காலமேயன்றி இதுவன்று. அல்பனாகிய (தாழ்ந்தவனான) இவ்வஸுரன் மாண்டான். இனிக் கோபத்திற்குக் கார்யம் இல்லை. பக்தவத்ஸலனே! இவ்வஸுரனுடைய புதல்வனும் உன் பக்தனுமாகிய ப்ரஹ்லாதன் உன்னருகாமையில் வர அவனைப் பாதுகாப்பாயாக.

இந்த்ரன் சொல்லுகிறான்:- பரமனே! நீ எங்களைப் பாதுகாக்க முயன்று இவ்வஸுரனால் பறிக்கப்பட்ட எங்கள் யஜ்ஞபாகங்களையெல்லாம் திருப்பிக் கொடுத்தாய். உனக்கு வாஸஸ்தானமும் (இருப்பிடமும்) நிர்மலமுமான எங்கள் ஹ்ருதயம் முன்பு அஸுர பயத்தினால் மூடிக்கொண்டிருந்தது. இப்பொழுது அந்தப் பயத்தைப் போக்கி அதை மலரச் செய்தாய். ஒ நாதனே! உன்னைப் பணிகின்றவர்களுக்குக் காலக்ரமத்தில் அழியுந்தன்மையதான இவ்வுலகத்திலுள்ள புருஷார்த்தங்கள் எவ்வளவு? அவர்கள் மோக்ஷத்தையுங்கூட வெகுமதிக்க மாட்டார்கள். ந்ருஸிம்ஹனே! அவர்கள் மிகவும் அற்பமான மற்ற புருஷார்த்தங்களை எவ்வாறு விரும்புவார்கள்?

ரிஷிகள் சொல்லுகிறார்கள்:- ஜகதீச! உன் த்யானமாகிற பெருமையுடைய தவத்தை எங்களுக்கு நீ உபதேசித்தாய். அந்த தவமே எங்களுக்கு உன் ஸ்வரூபத்தை வெளியிடுகின்றது. ஆதிபுருஷனாகிய ப்ரஹ்மதேவன் அந்தத் தவத்தினாலல்லவோ அந்தராத்மாவான உன்னால் வ்யாபிக்கப்பட்ட (பரவி நிரம்பப்பெற்ற) ப்ரபஞ்சத்தையெல்லாம் ஸ்ருஷ்டித்தான். அத்தகைய தவத்தை இவ்வஸுரன் அடியோடு பாழ்செய்தான். ரக்ஷிக்கவல்லவனே! எங்களைப் பாதுகாக்க வந்தவனே! ஸாதுக்களின் ரக்ஷணத்திற்காகக் கொண்ட இந்த நரசிங்க உருவத்தினால் மீளவும் நாங்கள் தவம் செய்யும்படி எங்களை அனுக்ரஹித்தாய்.

பித்ருக்கள் சொல்லுகிறார்கள்:- நாதா! எங்கள் பிள்ளை, பேரன் முதலியவர்களால் எங்களை உத்தேசித்துக் கொடுக்கப்பட்ட ச்ராத்த பிண்டங்களை (சோற்று உருண்டைகளை) இவ்வஸுரன் பலாத்காரமாகத் தடுத்து, தானே புஜித்துக் கொண்டு வந்தான். அவ்வாறே புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்யும் பொழுது அவர்கள் எங்களுக்காகக் கொடுக்கும் திலோதகத்தையும் (எள்ளுடன் கலந்த நீரையும்) தானே பலாத்காரமாகப் பருகிக்கொண்டு வந்தான். நீ நரசிங்க உருவங்கொண்டு இவ்வஸுரனுடைய குடலைப் பிடுங்கி இவன் உதரத்தினின்றும் அந்தப் பிண்டத்தையும் (சோற்று உருண்டையையும்), திலோதகத்தையும் (எள்ளுடன் கலந்த நீரையும்) எங்களுக்கு மீட்டுக்கொடுத்தனை. ஸமஸ்த தர்மங்களையும் பாதுகாப்பவனும் ந்ருஸிம்ஹரூபியுமான அத்தகைய உனக்கு நமஸ்காரம்.

ஸித்தர்கள் புகழ்கிறார்கள்:- ந்ருஸிம்ஹனே! துஷ்ட (கொடிய) ஸ்வபாவனான (தன்மையனான) இவ்வஸுரன் யோக ஸித்தமான எங்கள் கதியைத் தன் யோக பலத்தினாலும் தவ மஹிமையாலும் பறித்தான். பலவகைகளாலும் கொழுத்த அத்தகைய இவ்வஸுரனை நீ உனது நகங்களால் பிளந்தாய். இவ்வாறு மஹோபகாரம் (பேருதவி) செய்த உனக்கு நமஸ்காரம் செய்கிறோம்.

வித்யாதரர்கள் சொல்லுகிறார்கள்:- ஒன்றும் தெரியாத மூடனாகிய இவ்வஸுரன் பலத்தினாலும், வீர்யத்தினாலும் கர்வமுற்று, மனோ தாரணையால் (மனத்தை ஒருமுகப்படுத்துவதால்) ஏற்பட்ட அந்தர்த்தானம் (மறையும் தன்மை) முதலிய எங்கள் வித்யையைத் தடுத்துக்கொண்டிருந்தான். அப்படிப்பட்ட இவ்வஸுரனைப் பசுவைப் (விலங்கைப்) போல நீ யுத்தத்தில் அவலீலையாக (விளையாட்டாக) வதித்தாய். உன் ஸங்கல்பத்தினால் ந்ருஸிம்ஹ உருவங்கொண்ட உன்னை நாங்கள் எப்பொழுதும் வணங்குகிறோம்.

நாகர்கள் சொல்லுகிறார்கள்:- பாபிஷ்டனாகிய இவ்வஸுரன் எங்கள் ரத்னங்களையும் சிறப்புடைய மடந்தையர் மணிகளையும் பறித்துக்கொண்டு போனான். அவனுடைய மார்பைப் பிளந்து எங்கள் மடந்தையர்களுக்கு மனக்களிப்பை விளைவித்தாய்! உனக்கு நமஸ்காரம்.

மனுக்கள் சொல்லுகிறார்கள்:- மனுக்களென்று பெயர்பெற்ற நாங்கள் உன் கட்டளைப்படி நடக்கும் கிங்கரர்கள். உன்னால் ஏற்படுத்தப்பட்ட வர்ணாச்ரம மரியாதைகளை அனுஷ்டிக்க வொட்டாதபடி எங்களை எவன் அவமதித்துக் கொண்டிருந்தானோ, அப்படிப்பட்ட துஷ்டனான (கொடியனான) அஸுரனை நீ இப்பொழுது வதித்தாய். ப்ரபூ! நாங்கள் உன் கிங்கரர்கள். உனக்கு என்ன பணிவிடை செய்ய வேண்டுமோ அதை எங்களுக்கு நியமிப்பாயாக.

ப்ரஜாபதிகள் சொல்கிறார்கள்:- மேன்மையையுடைய ப்ரஹ்மாதி தேவதைகளுக்கும் மேலான பரமபுருஷனே! நாங்கள் வ்யஷ்டி ஸ்ருஷ்டியை (நாம் காணும் இவ்வுலகத்தின் படைப்பை) நடத்தும் பொருட்டு உன்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்; ப்ரஜாபதிகளென்று பெயர்பெற்றவர்கள். நாங்கள் இதுவரையில் இவ்வஸுரனால் தடுக்கப்பட்டு ப்ரஜைகளைப் படைக்காமலேயிருந்தோம். அப்படிப்பட்ட இவ்வஸுரன் உன்னால் மார்பு முறிக்கப்பட்டுப் படுத்திருக்கிறான். இனி நாங்கள் உன் கட்டளைப்படி ப்ரஜைகளைப் படைப்போம். ஸத்வமூர்த்தீ! உன்னுடைய அவதாரம் ஜகத்திற்கெல்லாம் மங்களத்தை விளைவிக்கின்றது.

கந்தர்வர்கள் சொல்கிறார்கள்:- ப்ரபூ! நாங்கள் உனக்கு ஆடல், பாடல்களைச் செய்பவர்கள். வீர்யத்தினாலும், பலத்தினாலும் பெருமை அமைந்த இவ்வஸுரன் எங்களை இதுவரையில் தன் வசமாக்கிக் கொண்டிருந்தான். அப்படிப்பட்ட மஹாதுஷ்டனாகிய (மிகக்கொடியனான) இவ்வஸுரன் உன்னால் மரணம் அடைந்து பூமியிற் புரளும்படியான இத்தசையை அடைந்தான். இது அவனுக்கு யுக்தமானதுதான் (ஏற்றதுதான்). தப்பு வழியில் செல்கின்ற எவன் தான் க்ஷேமம் பெறுவான்?

சாரணர்கள் சொல்கிறார்கள்:- தன்னைப் பற்றினவர்களுடைய மனவருத்தங்களைப் போக்கும் தன்மையுள்ளவனே! ஐஹிக (இவ்வுலக) ஸுகங்களையும் ஆமுஷ்மிக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகங்களையும் கொடுக்கவல்ல உன் பாதாரவிந்தங்களைப் பணியும் தொழிலையுடைய நாங்கள் இதுவரையில் இவ்வஸுரனால் தடைப்பட்டிருந்தோம். ஸாதுக்களுக்கு ஹ்ருதயரோகம் (நெஞ்சு நோய்) போன்ற இவ்வஸுரன் இப்பொழுது உன்னால் முடிக்கப்பட்டான்.

யக்ஷர்கள் சொல்கிறார்கள்:- நாதனே! உன் மனத்திற்கினிய பணிவிடைகளைச் செய்யும் பரிசாரகர்களில் முக்யர்களான நாங்கள் இதுவரையில் இவ்வஸுரனால் பல்லக்கு முதலியன தூக்கும்படி நியமிக்கப்பட்டிருந்தோம். ந்ருஸிம்ஹனே! உன் பக்தர்களுக்கு இவ்வஸுரன் மனவருத்தம் விளைத்ததை அறிந்த நீ அஸுரசரீரம் பெற்ற இந்த ஜீவனுக்குச் சரீர வியோகமாகிற (பிரிகிறதாகிற) மரணத்தை விளைத்தாய்.

கிம்புருஷர்கள் சொல்கிறார்கள்:- நாதா! நாங்கள் கிம்புருஷர்கள். அதாவது குத்ஸித புருஷர்கள். நீ மஹாபுருஷன்; பிறர்க்கு நேரமுடியாத மஹாகுணங்கள் அமைந்தவன்; அனைவர்க்கும் அந்தராத்மாவாய் நியமித்துக் கொண்டிருக்கும் ஸர்வேச்வரன். இவ்வஸுரன் எங்களுக்கு மேற்பட்டவனேயன்றி உனக்கு இவன் ஒரு சிறு துரும்புதான். இவன் எப்பொழுது ஸாதுக்களால் திரஸ்கரிக்கப்பட்டானோ (ஒதுக்கப்பட்டனோ), அப்பொழுதே நாசம் அடைந்தான். இவனை வதிப்பது உன் மஹிமைக்கு ஒரு பெருமையன்று.

வைதாளிகர்கள் (துதி பாடுபவர்கள்) சொல்கிறார்கள்:- நாங்கள் ஸபைகளிலும் ஸத்ரம் முதலிய யாகங்களிலும் நிர்மலமான உன் புகழைப் பாடிப் பெரிய பூஜையைப் பெற்றுக் கொண்டு வந்தோம். அப்படிப்பட்ட எங்களை துஷ்டனாகிய (கொடியவனாகிய) இவ்வஸுரன் தன் வசமாக்கி வைத்துக் கொண்டிருந்தான். பகவானே! அவ்வாறு துர்ப்புத்தியாகிய (கெட்ட புத்தியாகிற) இவ்வஸுரன் தலைநோய் முதலிய ரோகம் போல ஜகத்திற்கெல்லாம் வருத்தத்தை விளைத்துக் கொண்டிருந்தான். தெய்வாதீனமாய் இவன் இப்பொழுது உன்னால் முடிக்கப்பட்டான்.

கின்னரர்கள் சொல்கிறார்கள்:- ஓ ஜகதீச! நாங்கள் கின்னர கணங்களென்று ப்ரஸித்தி பெற்றவர்கள்; உன்னுடைய ப்ருத்யர்கள்  (சேவகர்கள்). இவ்வஸுரன் எங்களை இதுவரையில் வெட்டிக்கு வேலை செய்யும்படி ஓயாமல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான். பக்தர்களின் மனவருத்தத்தைப் போக்கும் தன்மையுள்ளவனே! பாபிஷ்டனாகிய (பாபியான) இவ்வஸுரன் உன்னால் மரணமடைந்தான். ந்ருஸிம்ஹநாதனே! எங்களுக்கு மேன்மேலும் க்ஷேமத்தை விளைப்பாயாக.

விஷ்ணுபரிசாரகர்கள் சொல்கிறார்கள்:- உன் பக்தர்களாகிய எங்களுக்குச் சரணம் கொடுப்பவனே! ஸமஸ்த லோகங்களுக்கும் ஸுகத்தை விளைப்பதும், அற்புதமுமாகிய இவ்வுருவத்தை நாங்கள் இப்பொழுதுதான் கண்டோம். இதுவரையில் கண்டதில்லை. ஜகதீசனே! இவ்வஸுரன் உன்னுடைய கட்டளைப்படி நடக்கத்தகுந்த உன் ப்ருத்யன்தான் (சேவகன் தான்). இவன் அந்தணர்களில் சிறந்த ஸனகாதிகளால் சபிக்கப்பட்டு இதுவரையில் உன் கைங்கர்யத்தை இழந்திருந்தான். அப்படிப்பட்ட இவ்வஸுரனை நீ வதித்தது அனுக்ரஹத்திற்காகவேயென்று நாங்கள் அறிகிறோம் என்று இவ்வாறு ஸ்தோத்ரம் செய்தார்கள். 

எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை