கண்ணன் கதைகள் - 24 - திருப்பூர் கிருஷ்ணன்

நிஜமான ஆன்மிகம்

ஞானேஸ்வரருக்கு ஆச்சரியமாக இருந்தது.

"அப்படியா சொன்னான் சங்கதேவ்? ஞானேஸ்வரர் பாடும் பாடல்களைக் கேட்பவர்கள் பைத்தியக்காரர்கள் என்றானாமே!" 

இந்தச் செய்தியைத் தன்னிடம் வந்து சொன்னவனை அன்போடு பார்த்தார் ஞானேஸ்வரர். சொன்னவன் ஞானேஸ்வரரின் தீவிர அடியவன். தன் குரு பற்றிய அவதூறைக் கேட்க நேர்ந்ததை எண்ணி அவன் விழிகளில் கரகரவெனக் கண்ணீர் வழிந்தது. 

ஞானேஸ்வரர் அருகில் அமர்ந்திருந்தாள் அவருக்கிணையான பக்தையும், தங்கையுமான ஐந்தே வயதுச் சிறுமி முக்தாபாய். தன் அண்ணாவின் பக்தன் கண்ணீர் விடுவது அவள் நெஞ்சைச் சுட்டது.

"நான் போய் நம் அடியவர்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொன்ன அந்த சங்கதேவைப் பார்த்து வருகிறேன் அண்ணா!'' என்று புறப்பட்டாள் அவள். 

"சங்கதேவ் மனத்திலும் கண்ணன் தானே குடியிருக்கிறான்! அவனைச் சங்கடப்படுத்தினால் அவன் மனத்திலிருக்கும் கண்ணனைச் சங்கடப் படுத்துவதாக ஆகாதா! நீ சற்றுப் பேசாமல் இரு முக்தா!'' என்றார் ஞானேஸ்வரர். 

"நான் அவனைச் சங்கடப் படுத்துவதற்காகப்போகவில்லை அண்ணா! எல்லார் மனதிலும் இறைவன் தான் இருக்கிறான், எனவே யார் குறித்தும் அவதூறு பேசல் தகாது என்பதை அவனுக்கு உணர்த்தவே போகிறேன்!'' நகைத்துக்கொண்டே நடந்தாள் முக்தாபாய். 

"போ... போ… அங்கே அவன் வீட்டு வாசலில் வரிசை வரிசையாகச் சடலங்கள் அடுக்கப்பட்டிருக்கும். அந்த உயிரற்ற உடல்களின் உறவினர்கள் நிறையப் பேர் சடலங்களைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள். அதையெல்லாம் பார்த்து பயந்துவிடாதே!'' என்றார் ஞானேஸ்வரர். 

ஞானேஸ்வரர், முக்தாபாயின் பெற்றோர் காலமான பிறகு பக்தியில் மூழ்கினார்கள். மிகச்சிறிய வயதிலேயே ஆத்மஞானம் பெற்ற உயர்நிலை பக்தர்கள் அவர்கள். பண்டரீபுர விட்டலனை எப்போதும் நினைத்து நினைத்து உருகுபவர்கள். எந்த சித்துகளையும் அடைவதில் ஆர்வம் கொள்ளாமல் இறைவனை அடைவதையே நோக்கமாகக் கொண்டு தவநெறியில் வாழ்பவர்கள். 

ஞானேஸ்வரர் பகவத்கீதை குறித்து மராட்டிய மொழியில் "ஞானேஸ்வரி" என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். ஆன்மிக உலகில் பெரும் புகழ்பெற்ற நூல் அது. 

அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த சங்கதேவ் என்பவன் ஒரு யோகி. தன் வயது ஆயிரம் என்று சொல்லிக் கொள்வான். அவன் தன் யோகப் பயிற்சிகளால் பல சித்துகள் கைவரப் பெற்றிருந்தான். உண்மையான இறை நாட்டமல்ல, மக்களைக் கவர்வதே அவனது ஆன்மிக நெறியின் நோக்கம். நீர் மேல் நடப்பது, ஆகாயத்தில் பறப்பது, நெருப்பில் குதித்து பாதிப்பில்லாமல் வெளிவருவது எனப் பல்வேறு சித்துகளைக் காட்டி மக்களைக் கவர்ந்து வந்தான் அவன்.

அவனைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது ஞானேஸ்வரரை எட்டுவதுண்டு. அவன் அடைந்துள்ள சித்துகளைச் சிலர் அவரிடமே வந்து சிலாகிப்பதும் உண்டு. 

"இத்தகைய சித்துகளால் என்ன பயன்!" என்று நகைப்பார் ஞானேஸ்வரர். இவ்வித சித்துகள் பலவற்றை அவராலும் செய்ய முடியும். என்றாலும் அதை அவர் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. 

"சித்துகள் மாயையின் வேலைகள். சித்துகளில் சிக்குபவன் ஆன்மிகத்தின் அடுத்த படிநிலைக்குப் போய் இறைநிலை அடைவதில்லை. சித்துகளைப் புறக்கணித்து உண்மையான ஆன்மிக நெறியை அனுசரித்து வாழ்வதே நல்லது,'' என்று தம் பக்தர்களுக்கு அவர் அறிவுறுத்துவார்.

சங்கதேவ் சமீப காலமாக, செத்த பிணங்களுக்கு மீண்டும் உயிரூட்டும் ஒரு சித்தை வசப்படுத்தியிருந்தான். அதனால் அக்கம் பக்கமிருந்தவர்கள் எல்லாம் தங்கள் உறவினர்களில் யார் மரணமடைந்தாலும் உடலை அவனிடம் எடுத்துச் சென்று உயிரூட்டச் சொல்லி வேண்டுவது வழக்கம். இதனாலேயே எப்போதும் அவன் வீட்டு வாசலில் பிணங்கள் நிறைய அடுக்கப்பட்டிருக்கும். 

முக்தாபாய் அவனது இருப்பிடத்தை அடைந்தாள். அவன் இல்லத்தின் முற்றத்தில் பல சடலங்களைப் பார்த்தாள். சடலங்களின் உறவினர்கள் ஐந்து வயதுச் சிறுமியான முக்தாபாயிடம், "சடலங்களின் அருகே போகாதே! பயந்து விடுவாய்!'' என்றார்கள். 

முக்தாபாய் சிரித்துக் கொண்டாள். ஒவ்வொரு பிரேதத்தின் காதிலும் போய் "விட்டல் விட்டல்" என்று கிருஷ்ணனது திருநாமத்தை ஓதினாள். மறுகணம் நிகழ்ந்த செயல் அதிசயமாக இருந்தது. எல்லாச் சடலங்களும் உயிர்பெற்று எழுந்து ஆனந்தமாக "விட்டல் விட்டல்" என்று பரவசத்தோடு ஆடத் தொடங்கின! இவ்விதம் சடலங்களைப் பேசச் செய்த முக்தாபாய் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.

சடலங்கள் விட்டல நாமம் சொல்வதைக் கேட்டு அங்கிருந்த மக்கள் எல்லாம் படபடவெனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். முக்தாபாய் சென்ற திசை நோக்கிக் கீழே விழுந்து கும்பிட்டார்கள் சிலர். 

விட்டல நாம சப்தத்தைக் கேட்டு இல்லத்தை விட்டு வெளியே வந்தான் சங்கதேவ். என்ன நடந்தது என்று விசாரித்து அறிந்தான். அவன் மனம் உண்மையிலேயே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. 

"என்ன விந்தை! தான் பல்லாண்டுகளாக யோகம் செய்து கற்ற வித்தை சடலங்களுக்கு உயிரூட்டுவது. அப்படியிருக்க ஓர் அறியாச் சிறுமி அநாயாசமாக சடலங்களைப் பேச வைப்பதாவது! இது எப்படிச் சாத்தியம்? பண்டரிபுரக் கண்ணனைக் கீர்த்தனைகளின் மூலம் ஆராதிக்கும் ஒரு சராசரி மனிதரான ஞானேஸ்வரருக்கு இப்படி ஒரு தங்கையா?" அவன் ஒரு முடிவு செய்தான். அவர்களை நேரில் சந்தித்துத் தன் சாகசங்களால் அவர்களை மிரள வைக்க எண்ணினான். அப்படிச் செய்யாவிட்டால் தன்னை நோக்கி வரும் கூட்டம் முழுவதும் அவர்களை நோக்கிச் சென்று விடுமே! பிறகு தன் புகழ் என்னாவது! 

சரி. அவர்களை எப்படிச் சென்று சந்திப்பது! தன் முதல் சந்திப்பிலேயே அவர்கள் மிரள வேண்டாமா!

யோசித்த அவன், கானகத்தை நோக்கிக் கையைத் தட்டினான். மக்கள் திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு புலி காட்டிலிருந்து உறுமிக் கொண்டு பாய்ந்து வந்தது. அது சங்கதேவ் அருகே வந்து, வாலைக் குழைத்துக் கொண்டு நாய்போல் நின்றது. 

அதன் மேல் தாவி ஏறி அமர்ந்தான் சங்கதேவ். அவன் "போ" என்று உத்தரவு கொடுத்ததும் புலி ஞானேஸ்வரர் இருப்பிடம் நோக்கி கம்பீரமாக நடந்தது.

ஞானேஸ்வரர் மராட்டிய கீர்த்தனைகள் எழுதியவாறு எளிய வாழ்வு வாழ்பவர். அவர் இயற்கைக் காட்சிகளை ரசித்தவாறே தன் வீட்டின் வெளியே இருந்த ஒரு குட்டிச்சுவரின் மேல் அமர்ந்திருந்தார். அவர் அருகே தங்கை முக்தாபாயும் அமர்ந்திருந்தாள். இருவரும் கிருஷ்ண சிந்தனையில் தோய்ந்தவர்களாய் பக்திப் பெருக்கில் மெய் மறந்திருந்தார்கள். 

அந்நேரத்தில் தான் திடீரென மக்களின் கூச்சல் கேட்டது. அவர்கள் இருவரும் கண்திறந்து பார்த்தார்கள். அவர்களை நோக்கிப் புலிமேல் வந்து கொண்டிருந்தான் சங்கதேவ். 

குட்டிச்சுவரில் அமர்ந்திருந்த முக்தாபாய் கடகடவென நகைத்தாள். "அண்ணா! நாமும் அவனை எதிர்கொண்டு வரவேற்போமே!'' என்றாள். "சரிதான்" என்ற ஞானேஸ்வரர், குட்டிச் சுவரைத் தட்டிக் கொடுத்தவாறே "சரிசரி, அவனை வரவேற்போம் வா!" என்று குட்டிச்சுவரை அழைத்தார்! மறுகணம் அவர்கள் இருவரையும் சுமந்தவாறு குட்டிச்சுவர் ஆகாயத்தில் பறந்து புலிமேல் வந்துகொண்டிருந்த சங்கதேவ் முன் போய் நின்றது!

சங்கதேவ் பிரமித்துப் போனான். குட்டிச்சுவரை நகரச் செய்யும் இந்த அபூர்வ சித்து வித்தையை அவன் யாரிடமும் கற்றதில்லை. தன் அகந்தையையெல்லாம் விட்டொழித்து, "ஞானேஸ்வரரே! இனித் தாங்கள் தான் என் குரு!'' என்று அவரைப் பணிந்தான். அவன் ஏறிவந்த புலி, தனது வாலை அசைத்துக் கொண்டு முக்தாபாய் அருகில் பவ்யமாக நின்றது. புலியின் முதுகை அன்போடு தடவிக் கொடுத்தாள் அவள். பின் சங்கதேவிடம் சொல்லலானாள்:

"ஸ்ரீகிருஷ்ணனது திருநாமம் எந்த அற்புதத்தை வேண்டுமானாலும் நிகழ்த்தக் கூடியது. ஏன் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைசேர உதவி, முக்தியையே அளிக்கக்கூடியது. அப்படியிருக்க நீர்மேல் நடப்பது, வானில் பறப்பது போன்ற அற்பமான விஷயங்களை அற்புதங்களாக நிகழ்த்திக் காட்டவேண்டிய அவசியமென்ன? இந்த சித்துகள் தான் ஆன்மிகத்தின் எல்லை என்றால் நீரில் வாழும் மீன்போன்ற ஜந்துக்களும் வானில் பறக்கும் கொக்கு போன்ற பறவைகளும் முக்தி நிலையை அடைந்திருக்க வேண்டுமே! முக்தியடையும் பாதை நெடிய பாதை. அதில் நடுவே சாத்தியமாகும் இதுபோன்ற சித்துகள் பெரிய தடைக்கற்கள் அப்பா! ஏழைகளிடம் அன்பாக இருப்பது, எளிய வாழ்க்கை வாழ்வது, எப்போதும் கண்ணனையே எண்ணிக் கொண்டிருப்பது, எது வந்தாலும் இறைவன் சித்தமென ஏற்றுக் கொள்வது இதெல்லாம் தான் உயர்ந்த ஆன்மிகம்! உன் பகட்டுச் சித்து வேலைகளால் யாருக்கு என்ன பயன்?''

இனிய குரலில் தெளிவாக அறிவுறுத்தினாள் முக்தாபாய்.

"சித்து வேலைகளில் ஒன்றுமே இல்லை என்ற உண்மையை நீங்கள் குட்டிச்சுவரைக் கூட நடக்கவும் பறக்கவும் வைத்ததன் மூலம் உணர்ந்தேன். உண்மையான ஆன்மிக நெறியில் தோய்ந்து ஏழைகளுக்கு உதவியும் கண்ணனது நாமத்தை ஜபித்தவாறும் இனிமேல் வாழ்வேன். இனி நீங்கள் இருவருமே என் குருநாதர்கள்!'' என்ற சங்கதேவ், சடாரென ஞானேஸ்வரர், முக்தாபாய் கால்களில் விழுந்து பணிந்தான். 

அப்போது, "ஞானேஸ்வர் முக்தாபாய் வாழ்க!" என்று சுற்றியிருந்தவர்கள் முழங்கிய முழக்கத்தால் அந்தப் பிரதேசம் முழுவதும் நிறைந்தது. 

நன்றி - தினமலர் அக்டோபர் 2012

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை