ஶ்ரீமத் பாகவதம் - 162

ஏழாவது ஸ்கந்தம் – ஒன்பதாவது அத்தியாயம்

(ப்ரஹ்லாதன் ந்ருஸிம்ஹனை ஸ்தோத்ரம் செய்தல்)

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- இவ்வாறு ப்ரஹ்மதேவன், ருத்ரன் முதலிய ஸமஸ்த தேவதைகளும் மற்றவர்களும் தனித்தனியே ஸ்தோத்ரம் செய்யினும் அந்த ந்ருஸிம்ஹ பகவான் கோபவேகம் அடங்கப் பெறாமல் ஒருவர்க்கும் அணுக முடியாதவனாயிருந்தான். ஆகையால் அவர்களில் ஒருவனாவது அவனைக் கிட்டுவதற்கு வல்லமையுடையவன் ஆகவில்லை. அவன் கோபம் தணியாதிருப்பதைக் கண்டு தேவதைகள் அவனுக்கு மிகவும் அன்பிற்கிடமான ஸ்ரீமஹாலக்ஷ்மியை அனுப்பினார்கள். அவளும் அற்புதமான அந்த ந்ருஸிம்ஹ உருவத்தைக் கண்டு “இது வரையில் நாம் இவ்வுருவத்தைக் கண்டதில்லை; கேட்டதுமில்லை. இதென்ன உருவம்?” என்று சங்கித்து (ஸந்தேஹப்பட்டு) அருகில் செல்ல முடியாமலேயிருந்தாள். இப்படியிருக்கையில், ப்ரஹ்மதேவன் அருகிலிருக்கின்ற ப்ரஹ்லாதனைப் பார்த்து “அப்பா ! உன் தந்தையின் மேல் கோபித்துக் கொண்டிருக்கிற பகவானை அருள்புரியச் செய்வாயாக. நீதான் அவனருகில் செல்லவேண்டும்” என்று சொல்லி அனுப்பினான். 

மன்னவனே! யுதிஷ்டிரா! பகவத் பக்தர்களில் சிறந்த குழந்தையாகிய ப்ரஹ்லாதன் அப்படியே செய்கிறேன் என்று ஒப்புக்கொண்டு அருகில் சென்று கைகளைக் குவித்துச் சரீரத்தைப் பூமியில் தண்டம் போலச் சாய்த்து நமஸ்கரித்தான். ந்ருஸிம்ஹபகவான் தன் பாதங்களின் அடியில் விழுந்திருக்கின்ற பாலனாகிய ப்ரஹ்லாதனைப் பார்த்துக் கருணை தலையெழப்பெற்று அவனை எழுந்திருக்கச் செய்து, காலமாகிற ஸர்ப்பத்தினின்றும் (பாம்பிடம்) பயந்த மதியுடையவர்களுக்கு அபயங்கொடுப்பதும் தாமரைமலர் போன்றதுமாகிய தன் கையை அவன் தலைமேல் வைத்தான். அவனும் அந்த ஸ்ரீந்ருஸிம்ஹ பகவானுடைய கரம் பட்ட மாத்திரத்தில் ஸமஸ்த பாபங்களும் தொலைந்து அந்த க்ஷணமே ஆத்ம பரமாத்மாக்களின் ஸ்வரூப ஸாக்ஷாத்காரம் உண்டாகப் பெற்று ஸந்தோஷம் அடைந்து உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் நிறைந்து ப்ரீதியினால் நெஞ்சுருகிக் கண்ணீர் தளும்ப நின்று அந்தப் பகவானுடைய பாதாரவிந்தங்களை மனத்தில் த்யானித்தான். பின்பு ப்ரஹ்லாதன் ப்ரீதியினால் வாய் தழதழக்கப்பெற்று மனத்தையும் கண்களையும் பகவானிடத்திலேயே நிலைநிறுத்தி மனவூக்கத்துடன் அவனை ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கினான்.

ப்ரஹலாதன் சொல்கிறான்:- கேவலம் ஸத்வகுணம் தலையெடுத்த மதி (புத்தி) உடையவர்களான ப்ரஹ்மாதி தேவகணங்களும், முனிவர்களும், ஸித்தர்களும் தங்கள் வாக்கு வெள்ளங்களால் (பெருக்கினால்) பலகுணங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் செய்தும் எவனை இன்னும் ஆராதிக்க வல்லவர் ஆகவில்லையோ அப்படிப்பட்ட ஸர்வேச்வரன் கொடுந்தன்மையுடைய அஸுர ஜாதியில் பிறந்த என் ஸ்தோத்ரத்தினால் எவ்வாறு ஸந்தோஷம் அடைவான். பணம், நற்குலப் பிறப்பு, தேஹ ஸௌந்தர்யம் (உடல் அழகு), தவம், பாண்டித்யம் (முதிர்ந்த கல்வி அறிவு), இந்த்ரிய பலம், தேஹகாந்தி (சரீரத்தின் ஒளி), ப்ரதாபம் (வலிமை, மேன்மை), தேஹ பலம், பௌருஷம் (ஆண்மை), புத்தி பலம், யோகம் (மனத்தை ஒருமுகப்படுத்துதல்) இவையெல்லாம் பரமபுருஷனுக்கு ஸந்தோஷத்தை விளைக்கும்படியான ஆராதனத்திற்கு உபயோகப்படமாட்டா என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் இவற்றில் எதுவுமில்லாத கஜேந்த்ரன் விஷயத்தில் பக்தியினால் மாத்ரமே ஸந்தோஷம் அடைந்தானல்லவா? ப்ராஹ்மணன் தர்மம், ஸத்யம், தமம் (இந்த்ரியங்களை வசப்படுத்துதல்), சாஸ்த்ர ஜ்ஞானம், பிறருடைய மேன்மையைக் கண்டு பொறாமையில்லாமை, வெட்கம், பொறுமை, அஸூயையில்லாமை (பொறாமை), தானம், யஜ்ஞம், ஸந்தோஷம், சமம் (மனதை அடக்குதல்) என்கிற இப்பன்னிரண்டு குணங்கள் அமைந்தவனாயினும் பத்மநாபனுடைய பாதாரவிந்தங்களில் பக்தியற்றிருப்பானாயின், பயன்படமாட்டான். மனம், வாக்கு, மற்ற இஷ்டமான பொருள்கள், ப்ராணன், ஆத்மஸ்வரூபம் ஆகிய இவற்றையெல்லாம் அந்தப் பத்மநாபனிடத்தில் அர்ப்பணம் செய்த சண்டாளனே (தாழ்ந்த குலத்தவனே) அவனைக் காட்டிலும் மேன்மையுடையவனென்று நான் நினைக்கிறேன். அச்சண்டாளன் தன் குலத்தைப் புனிதம் செய்வான். பகவானிடத்தில் பக்தியில்லாமல் “நாம் தவம் முதலிய குணங்கள் அமைந்திருக்கிறோம்” என்று பெரும் கர்வமுற்றிருக்கிற அவ்வந்தணன் தன்னையும் கூடப் புனிதம் செய்ய வல்லவன் ஆகமாட்டான். ஈச்வரன் இயற்கையாகவே அவாப்த ஸமஸ்தகாமன் (தான் விரும்பியது அனைத்தும் அடையப்பெற்றவன்). அவன் தன்னுடைய ஆராதனரூபமான கர்மத்தைத் தன் ப்ரயோஜனத்திற்காக உபதேசிக்கவில்லை. பின்னை ஏதுக்காகவென்றால், அவன் கருணை உடையவனாகையால் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஜந்துக்கள் (ஜீவாத்மாக்கள்) தன் ஸ்வரூபாதிகளை அறிந்து உஜ்ஜீவிக்க (மேன்மை அடைய) விரும்புவார்களாயின், “இவர்கள் நம்மை ஆராதித்து அதனால் பாபங்கள் தீர்ந்து நம் ஸ்வரூபாதிகளை அறிந்து உஜ்ஜீவிக்கட்டும் (மேன்மையை அடையட்டும்)” என்னும் கருணையால் அதை உபதேசித்தானேயன்றி வேறில்லை. ப்ரீதியுடன் ஆராதிப்பவர்களை அங்கீகரிப்பதற்காகவே அவன் அவர்களுடைய ஆராதனத்தைப் பெற்றுக்கொள்கிறான். ப்ராணிகள் பகவானுக்கு எந்தெந்த ஆராதனங்களைச் செய்கின்றார்களோ, அவையெல்லாம் அவர்களின் ப்ரயோஜனத்திற்காகவேயன்றி வேறில்லை. அவனைப் பூஜிக்கும் ப்ராணிகள் (ஜீவர்கள்) தாமும் பூஜிக்கத் தகுந்த மேன்மையைப் பெறுகின்றார்கள். முகத்தின் ப்ரதிபிம்பத்தில் அம்முகத்தின் காந்தி புலப்படுவது போல பகவானைப் பணிகிறவர்களுக்கு அவனுடைய மேன்மை உண்டாகின்றது. ஆகையால் அவனிடத்தில் பக்தியையுடைய நான் நீசனாயினும் (தாழ்ந்தவனாயினும்), மூன்று குணங்களும் ஒன்று சேரப்பெற்ற இந்த ஸம்ஸாரத்தில் விழுந்தவனாயினும், ஸர்வேச்வரனான அந்த பகவானுடைய மஹிமையை சங்கையின்றி (ஸந்தேஹமின்றி) என் புத்திக்கு எட்டின அளவு ஸ்தோத்ரம் செய்து, அதனால் பரிசுத்தன் ஆகிறேன். ப்ரக்ருதியினால் ஸத்வாதி குணங்களின் கார்யமான சரீரத்தில் புகுந்திருக்கும் ஜீவன் அந்த ஸர்வேச்வரனை ஸ்தோத்ரம் செய்வதனால் பரிசுத்தனாவான். ஜகதீசனே! என்னைப்போல இதோ இருக்கின்ற ப்ரஹ்மாதி தேவதைகளும் சுத்த ஸத்வ ஸ்வரூபனான உனக்குக் கிங்கரர்கள், இவர்கள் உன் கோபத்திற்குப் பயந்து உன்னை அணுகமுடியாமல் ஒதுங்கியிருக்கிறார்கள். ஆகையால் அவர்களிடத்தில் அருள்புரிந்து உன் கோபத்தை அடக்கிக் கொள்வாயாக. ஷாட்குண்யபூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) நீ இந்த ஜகத்தின் யோக க்ஷேமங்களுக்காகவும் உன் ஸ்வரூபத்தை அனுபவிக்கையால் உண்டாகும் மோக்ஷமாகிற மஹானந்தத்தை (உயர்ந்த ஆனந்தத்தை) விளைப்பதற்காகவும் அழகிய ந்ருஸிம்ஹாதி அவதாரங்களால் விளையாடுகின்றாய். ஆகையால் கோபத்தை அடக்குவாயாக. 

இப்பொழுது என் தந்தையாகிய இவ்வஸுரன் உன்னால் வதிக்கப்பட்டான். உலகங்களெல்லாம் ஸந்தோஷத்தை அடைந்தன. ஸாதுக்களும், உலகங்களுக்கு உபத்ரவம் (கெடுதல், தொந்தரவு) செய்கின்ற தேள், ஸர்ப்பம் (பாம்பு) முதலிய விஷ ஜந்துக்களைக் கொல்வதனால் ஸந்தோஷம் அடைவார்களல்லவா? அவ்வாறே உலகங்களுக்கெல்லாம் உபத்ரவத்தை (கெடுதலை, தொந்தரவை) விளைத்துக்கொண்டிருந்த என் தந்தையைக் கொன்றதனால் ஸாதுக்களும் ஸந்தோஷம் அடைந்தார்கள். இனி ப்ரஹ்மாதிகள் அனைவரும் பயமற்றுத் தத்தம் இடங்களுக்குப் போய்ச் சேருவார்களாக. ந்ருஸிம்ஹ! இனி இந்த உன்னுருவத்தை ஜனங்கள் அபயத்தின் பொருட்டு த்யானிப்பார்களாக. ஒருவராலும் வெல்லமுடியாதவனே! உன் வாயும், நாக்கும், கண்களும், புருவநெரிப்பும், கோரைப் பற்களும் பயங்கரமாயிருக்கின்றன. குடல்களை மாலையாகத் தரித்திருக்கின்றாய். உன் ஜடைகள் (சடாமுடி) ரக்தத்தினால் (ரத்தத்தினால்) நனைந்திருக்கின்றன. உன் காதுகள் ஆணிகள் போல உயர்ந்து நெரித்துக் கொண்டிருக்கின்றன. உன் கர்ஜனத்தைக் கேட்டுத் திக்கஜங்களும் (திசைகளைக் காக்கும் யானைகளும்) பயப்படுகின்றன. நகங்களின் நுனிகளாலேயே சத்ருக்களையெல்லாம் (எதிரிகளை எல்லாம்) பிளந்தனை. இத்தகையதான உன்னுருவத்தைக் கண்டு ப்ரஹ்மாதிகள் பயந்தார்களேயன்றி நான் பயப்படவில்லை. தீனவத்ஸலா! (புகலற்ற ஏழை, எளியவரிடத்தில் பரிவு உடையவனே!) அஹங்கார (நான்) மமகாராதிகளால் (எனது முதலிய எண்ணங்களால்) ஸம்ஸாரத்தில் தள்ளுண்டு புண்ய, பாப கர்மங்களால் கட்டுண்டிருக்கிற நான் பொறுக்கமுடியாத ஸம்ஸார துக்கத்திற்குப் பயப்படுகிறேன். அழகிய சிங்கனே! அங்கனம் பயப்படுகின்ற என்னை மோக்ஷத்தைக் கொடுக்கவல்ல உன் பாதமூலத்தில் எப்பொழுது சேர்க்கப்போகின்றனையோ? 

நான் என்னுடைய கர்மத்தினால் ஜன்மங்கள் தோறும் இஷ்டமான (விரும்பிய) விஷயங்கள் நேராமையாலும் அநிஷ்டமான (விரும்பாத) விஷயங்கள் பல நேருகையாலும் கிளர்ந்தெழுகின்ற சோகமாகிற அக்னியால் தஹிக்கப்பெற்றுச் சுழன்று கொண்டிருக்கிறேன். அந்த ஸம்ஸார துக்கத்தை ஒழிப்பதற்காக ஏற்பட்ட உபாயங்களெல்லாம் துக்க ரூபங்களாகவேயிருக்கின்றன. ஆகையால் அவை ஹிதமாகமாட்டாது. பெருமையுடையவனே! ஆகையால் நான் என்றும் உனக்கே தாஸனாயிருக்கும்படி அருள்புரிவாயாக. நீ ஜகத்திற்கெல்லாம் ஹிதம் (நன்மை) செய்பவன்; ப்ரீதிக்கிடமானவன். பிரும்மதேவர் தங்களது திருக்கல்யாண குணங்களையும், லீலைகளையும் பலவாறாக வர்ணித்துள்ளார். உனக்கு உட்பட்டிருக்கையே ஸ்வரூபமென்பதை அறிந்த நானும் அத்தகைய உன் கதைகளைச் சொல்லி ஸத்வாதி குணங்கள் மூலமாக ஏற்பட்ட கர்மபந்தங்களினின்று விடுபட்டு உன் பாதாரவிந்தங்களைப் பற்றின உன் பக்தர்களாகிற ஹம்ஸங்களோடு ஸஹவாஸம் (தொடர்பு, கூடியிருக்கை) நேரப்பெற்று ஸம்ஸார துக்கங்களையெல்லாம் கடப்பேனாக. ஓ ந்ருஸிம்ஹ! பாலனாயினும், நீ உபேக்ஷிப்பாயாயின் (பொருட்படுத்தாது ஒதுக்கி விடுவாயாயின்), அவனுக்குத் தாய், தந்தைகள் ரக்ஷகராகமாட்டார்கள். பாலனைத் தாய், தந்தைகள் மூலமாய் நீயே ரக்ஷிக்கின்றாய். ரோகத்தினால் (வியாதியினால்) பீடிக்கப்பட்டவன் உன்னால் உபேக்ஷிக்கப்பட்டிருப்பானாயின் (பொருட்படுத்தப்படாது ஒதுக்கப் படுவானாயின்), அவனுக்கு எப்படிப்பட்ட வீர்யமுடைய ஒளஷதமும் (மருந்தும்) பயன்பட மாட்டாது. ஸமுத்ரத்தில் மூழ்குகிறவன் உன்னால் உபேக்ஷிக்கப்பட்டிருப்பானாயின் (பொருட்படுத்தப்படாது ஒதுக்கப் படுவானாயின்), அவனுக்கு ஓடமும் பயன்படாது. 

ப்ரபூ! ஆகையால், துக்கித்தவர்களுடைய துக்கங்களைப் போக்குவதற்கு ஏற்பட்ட உபாயங்கள் எவை எவை உண்டோ அவையெல்லாம் அவர்களை நீ உபேக்ஷிப்பாயாயின் (பொருட்படுத்தாது ஒதுக்கி விடுவாயாயின்), உபயோகப்படமாட்டாது. தாய், தந்தைகள் பாலர்களின் துக்கத்தையுங்கூடப் போக்க வல்லராகமாட்டார்கள். விவேகமுடையவன் ஸம்ஸார துக்கத்தினின்று விடுபட வேண்டுமென்றால், அவனுடைய ஸம்ஸார துக்கத்தை அவர்கள் எவ்வாறு போக்க வல்லவராவார்கள். ஆகையால் இந்த ஸம்ஸார துக்கம் உன்னுடைய அனுக்ரஹத்தினால் தான் நிவ்ருத்தியாக (தீர) வேண்டுமேயன்றி வேறு கதியில்லை. ப்ரயோஜகன் (நியமிப்பவன்), ப்ரயோஜ்யன் (நியமிக்கப்படுபவன்) என்று இருவகையான கர்த்ருகாரகம் (செயலைச் செய்பவன் - அவன்), கர்மகாரகம் (செயப்படும் பொருள் - அவனை), கரணகாரகம் (அவனால்), ஸம்ப்ரதானகாரகம் (அவனுக்கு), அபாதானகாரகம் (அவனிடமிருந்து), அதிகரணகாரகம் (அவனிடத்தில்) ஆகிய காரகங்களென்று சொல்லப்பட்ட அறுவகைப் பொருள்களும் (செயலோடு ஸம்பந்தப்பட்டவை), ஸம்பந்தி வஸ்துக்கள் (உறவு, தொடர்பைக் குறிப்பவை - அவனுடைய) ஹேது (காரணம்), காலம் இவைகளும் வெவ்வேறான அவற்றின் ஸ்வபாவங்களும் பிறத்தல், அழிதல் இவற்றிற்கிடமான வஸ்துக்களும் உன் சரீரங்கள்தான். ஆகையால் அவற்றின் செயல்களெல்லாம் உன் செயல்களே. 

நீயே எனக்கு நாரதர் மூலமாய்த் தத்வோபதேசம் செய்து உன்னைச் சரணம் அடையும்படி செய்தாய். உன்னைப் பணியாதவன் எவன் தான் சக்ரம்போல் சுழல்கின்ற இந்த ஸம்ஸாரத்தைக் கடக்கவல்லனாவான்? இந்த ஸம்ஸாரமாகிற சக்ரத்திற்கு மனமே நாபி; பகவானுடைய மாயையால் ஏற்பட்ட ஜ்ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், பஞ்சப்ராணன்கள் (ப்ராண, அபான, வ்யான, உதான, ஸமான என்ற ஐந்து வகையான நம் உடலில் இயங்கும் (மூச்சுக்) காற்று, புத்தி ஆகிய பதினாறு தத்வங்களே பதினாறு இலைகள். இவை மனமாகிற நாபியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பகவானுடைய மாயையென்னும் ப்ரக்ருதி காலத்தையும் அதனால் கலக்கமுற்ற ஸத்வாதி குணங்களையும் உதவியாகக் கொண்டு புண்ய, பாப கர்மங்களில் இயற்கையாகச் செல்லுந்தன்மையுடையதும் தடுக்கமுடியாத வலிவுடையதுமான மனத்தைப் படைக்கின்றது. அந்த மனமே ஸத்வகுணம் தலையெடுத்துச் சாஸ்த்ர ஜ்ஞானத்திற்குக் காரணமாகின்றது. உன்னைப் பணியாதவன் அத்தகைய மனத்தின் தோஷத்தினால் ஸம்ஸாரத்தை மேன்மேலும் வளர்த்திக் கொள்வானேயன்றி அதினின்றும் கரையேற வல்லனாக மாட்டான். 

ப்ரபூ! உன் மாயையால் பதினாறு இலைகளையுடைய ஸம்ஸாரமாகிற சக்ரத்தில் தள்ளுண்டு மிகவும் பீடிக்கப்பட்டிருக்கிற நான் உன்னைச் சரணம் அடைந்தேன். நீ என்னை இந்த ஸம்ஸார சக்ரத்தினின்று வெளிப்படுத்துவாயாக. கட்டினவனன்றோ அவிழ்க்க வல்லனாவான்? உனக்குச் சரீரமாகிய ப்ரக்ருதியின் குணங்களை நீ என்றும் வென்றவன். ஜீவாத்மாக்களுக்குப் பலவகைச் சரீரங்களை விளைக்கின்ற அந்த ப்ரக்ருதியை நீ உன் ஸ்வரூபத்தினால் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றாய். நீ காலத்தைச் சரீரமாகவுடையவன். நீ ப்ரக்ருதியின் பரிணாமமாகிய ஸம்ஸாரத்தினின்றும் ஜீவாத்மாக்களை விடுவிக்கவல்லவன். 

விபூ! இந்த ஸாம்ஸாரிக ஜனங்கள் எவற்றை ஆசைப்படுகின்றார்களோ அப்படிப்பட்ட இந்திரன் முதலிய ஸமஸ்த லோகபாலர்களின் ஆயுள், ஸம்பத்து (செல்வம்), ஐச்வர்யம் ஆகிய இவையெல்லாவற்றையும் நான் நிரூபித்துப் பார்த்தேன். அவை அற்பங்கள். அவற்றை விவேகமுடையவன் எவன்தான் ஆசைப்படுவான்? அவ்விந்த்ராதிகளின் ஐச்வர்யங்களெல்லாம் என் தந்தை கோபத்தினால் சிரித்துப் புருவத்தை நெரிக்கும் பொழுது அழிந்து போனவைகள். அப்படிப்பட்ட என் தந்தையும் உன்னால் முடிக்கப்பட்டான். ஆகையால் ஸாம்ஸாரிக ஜனங்கள் விரும்புகிற ஆயுள், ஸம்பத்து (செல்வம்), ஐச்வர்யம் முதலிய விருப்பங்களையும் ப்ரஹ்மலோகம் வரையிலுள்ள மற்ற இந்த்ரிய ஸுகங்களையும் மிகுந்த வலிவுடைய, காலத்தினால் அழியத்தகுந்த அணிமாதி ஸித்திகளையும் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன - 

1. அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

2. மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 

3. லகிமா - லேசாகச் செய்தல் 

4. கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 

5. வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

6. ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

7. ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல் 

8. ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை)

நான் விரும்பவில்லை. ஆகையால் என்னை உன் ப்ருத்யர்களின் (சேவகர்களின்) பார்ச்வத்தில் சேர்த்துக்கொள்வாயாக. செவியில் படும்பொழுது ஸுகமாயிருப்பவைகளும் அனுபவிக்கும்பொழுது கானலோடு ஒத்தவைகளுமான (வெயிலில் தூரத்திலிருந்து பார்த்தால் தண்ணீர் இருப்பது போன்ற தோற்றம் அருகில் சென்றால் இருக்காது; அது போன்று) ஆயுள், ஸம்பத்து முதலிய விருப்பங்கள் எங்கே? ஸமஸ்த ரோகங்களுக்கும் (வியாதிகளுக்கும்) விளைநிலமான இந்த சரீரம் எங்கே? இச்சரீரத்தினால் ஸுகத்தை அனுபவிப்பது ஒருகாலும் முடியாது. “விஷயஸுகம் கானல் போன்றது. இதில் ப்ரயோஜனம் இல்லை” என்பதை அறிந்தவனும் வருந்தியும் பெறமுடியாத விஷய ஸுகங்களாகிற தேன் துளிகளால் காமமாகிற அக்னியை அணைக்க முயன்று அவற்றைப் பெறுவதற்கு உரிய ப்ரயத்னங்களைச் (முயற்சிகளைச்) செய்கின்றானன்றி அவற்றில் மனவெறுப்புங்கூட உண்டாகப் பெறுவதில்லை. 

ஜகதீசா! ரஜஸ்ஸும் தமஸ்ஸும் தலையெடுக்கப்பெற்ற அஸுர குலத்தில் பிறந்த எனக்கு உன் கருணை நேருவதற்கு ஒருகாலும் இடமில்லை. தாமரையிதழ்போல் தாபங்களைப் போக்கவல்ல உன் கரத்தை ப்ரஹ்மாவின் தலையிலாவது, ருத்ரன் தலையிலாவது, ஸ்ரீமஹாலக்ஷ்மியின் தலையிலாவது நீ வைக்கவில்லை. அதை என் தலையில் வைத்தாய். இது நீ என்னிடத்தில் கருணை கூர்ந்தாயென்பதற்கு அடையாளமல்லவா? 

எவ்விதத்திலும் நேரக்கூடாத இது எனக்கு நேர்ந்தபடியினால் நான் தன்யனானேன். “இவன் மேன்மையுடையவன். இவன் தாழ்மையுடையவன்” என்னும் புத்தி ப்ராக்ருத ஜனங்களுக்கு உண்டேயல்லாமல் உனக்குக் கிடையாது. நீ ஜகத்திற்கெல்லாம் அந்தராத்மாவாய் நண்பனுமாயிருப்பவன். ஆயினும் நீ உன்னைப் பணிகின்றவர்களின் மனோபாவத்தை அனுஸரித்து அவர்களை அனுக்ரஹிக்கின்றாய். அவரவர்கள் செய்யும் பணிவிடைக்குத் தகுந்தபடி தர்மாதி புருஷார்த்தங்களும் உண்டாகின்றன. கல்பவ்ருக்ஷம் தன்னை அடுத்து விரும்புகிறவர்களுக்கு விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கின்றது. பணியாதவர்களுக்குக் கொடுக்கிறதில்லை. பணிகிறவர்களிலும் அவரவர் செய்யும் பணிவிடையின் தாரதம்யங்களுக்குத் (ஏற்றத்தாழ்வுகளுக்குத்) தகுந்தபடி பலத்திலும் தாரதம்யம் (ஏற்றத்தாழ்வுகள்) உண்டாகின்றது. அவ்வளவால் அதற்குப் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) உண்டென்று சொல்லமுடியாதல்லவா? அவ்வாறே நீ உன்னைப் பணிகின்றவர்களின் பாவனைக்குத் தகுந்தபடி அருள் செய்கிறாயாகையால் உனக்குப் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) கிடையாது. மேன்மை தாழ்மையென்கிற புத்தியும் கிடையாது. 

பகவானே! ஸம்ஸாரமாகிற ஸர்ப்பங்கள் (பாம்புகள்) நிறைந்த பாழுங்கிணற்றில் விழுந்து சப்தாதி விஷயங்களை விரும்புவோர்களின் ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்) அக்கிணற்றில் விழுகின்ற என்னை நீ தேவரிஷியாகிய நாரதர் மூலமாய்த் தத்வோபதேசம் செய்து உன் வசமாக்கி அங்கீகரித்தாய். அப்படிப்பட்ட நான் இப்பொழுது உன் தாஸர்களுக்குத் தாஸனாயிருக்கையாகிற பெருமையை எவ்வாறு துறப்பேன்? 

அனந்தனே! என் ப்ராணன்களைப் பாதுகாத்ததும் என் தந்தையை வதித்ததும் உன் பக்தர்களாகிய ரிஷிகளின் வார்த்தையை ஸத்யம் செய்வதற்காகவும், என் தந்தை என்னை வதிக்கவிரும்பிக் கத்தியை ஏந்திக்கொண்டு “என்னைக்காட்டிலும் வேறொரு ஈச்வரன் இருப்பானாயின், அவன் இப்பொழுது உன்னைக் காப்பானாக. நான் உன் தலையை அறுக்கப்போகிறேன்” என்ற வார்த்தையைப் பொய்செய்வதற்காகவுமே என்று நான் நினைக்கிறேன். நாரதர் மூலமாய் எனக்குத் தத்வோபதேசம் செய்தது மாத்ரம் என்னை அனுக்ரஹிப்பதற்காகவே. இதோ புலப்படுகிற சேதனாசேதன ரூபமான ப்ரபஞ்சமெல்லாம் நீயொருவனே. இந்த ஜகத்தினுடைய ஸ்ருஷ்டிக்கு முன்பும் ப்ரளயத்திலும் நீயொருவனே மிகுந்திருக்கின்றாய். ஆகையால் இந்த ஜகத்தின் மத்ய அவஸ்தையிலும் (இடை நிலையிலும்) நீயொருவனே உள்ளவன். நீ ஸத்வாதி குணங்களின் பரிணாமமான இந்த ஜகத்தை உன் ஸங்கல்ப ஜ்ஞானத்தினால் படைத்து அதற்குள் அந்தராத்மாவாய் ப்ரவேசித்துச் சேதனாசேதன ரூபியான அந்தத் தேவமனுஷ்யாதி சரீரங்களால் வேறுவேறு போலத் தோற்றுகின்றாய். உண்மையில் இந்த ப்ரபஞ்சமெல்லாம் நீயேயன்றி வேறில்லை. ஜகதீசனே! ஜகத்திற்கெல்லாம் காரணனும் ஜகத்ஸ்வரூபனுமாகிய ஈச்வரன் நீயே. 

ஜீவாத்மாக்களில் ஒருவனை ஈச்வரனாக நினைப்பது பொய். அது அஜ்ஞானத்தின் கார்யம். தேஹத்தை ஆத்மாவாக நினைப்பது போல இதுவும் ப்ராந்திதான் (மயக்கம், மனக்கலக்கம் தான்). நீ ஜீவாத்மாக்களைக் காட்டிலும் வேறுபட்டவன். காம வச்யனான (இச்சைக்கு அடிமைப்பட்டவனான) ஜீவனுக்கு இத்தகைய ஜகத்தைப் படைக்கும் திறமை எவ்விதத்திலும் நேரமாட்டாது. ஆகையால் நீயே ஜகத்காரணன். ஜகத்தும் நீயே. எந்த வஸ்துவின் உத்பத்தி (தோற்றம்), ஸ்திதி (நீடிப்பு), நாசம் (அழிவு), ப்ரகாசம் (வெளிப்படுதல்) இவற்றிற்கு எந்தவஸ்து காரணமாயிருக்கின்றதோ, அந்தவஸ்து அதைக்காட்டிலும் வேறுபட்டதன்று. பூமியினின்று வ்ருக்ஷம் (மரம்) உண்டாகின்றது; அது பூமியிலேயே இருக்கின்றது; அதிலேயே வளர்ந்து ப்ரகாசிக்கின்றது; பின்பு அதிலேயே அழிந்து போகின்றது. ஆகையால் வ்ருக்ஷம் பூமியைக் காட்டிலும் வேறுபட்டதன்று. விடியற்காலம் முதலிய சிறிய காலங்கள் மஹாகாலத்தைக் காட்டிலும் வேறுபட்டவை அல்லாதது போல இந்த ப்ரபஞ்சத்திற்கும் உத்பத்தி (தோற்றம்) முதலியவை உன்னிடத்தினின்றே உண்டாகின்றனவாகையால் இந்த ப்ரபஞ்சம் உன்னைக் காட்டிலும் வேறுபட்டதன்று. இதோ புலப்படுகின்ற சேதனாசேதன ரூபமான ஜகத்தையெல்லாம் தன்னிடத்தில் மறையச் செய்து நிருபாதிக (வேறு எந்த காரணத்தையும் முன்னிட்டு அன்றி, இயற்கையாகவே) மஹானந்த ரூபனான தன்னைத் தானே அனுபவித்துக்கொண்டு வேறொரு விருப்பமுமின்றிச் செயலற்று அவ்வானந்தத்தினால் கண்களை மூடிக்கொண்டு உறக்கமின்றி ஜாகரம் (விழிப்பு நிலை), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) முதலிய மூன்று அவஸ்தைகளையும் (நிலைகளையும்) கடந்திருக்கின்ற தன்னையே ஆதாரமாகக் கொண்டு ஸூக்ஷ்ம தசையை அடைந்த ப்ரக்ருதியின் ஸம்பந்தமும் அதன் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களின் ஸம்பந்தமுமின்றி ப்ரளய ஜலத்தில் சயனித்துக் கொள்கின்றாய். அத்தகைய நீ உனது அம்சமாகிய கால சக்தியினால் உன்னிடத்தில் மறைந்திருக்கிற ப்ரக்ருதியின் குணங்களைக் கலக்கி அந்த ப்ரளய ஜலத்தின் மேல் பரந்திருக்கிற ஆதிசேஷனாகிற படுக்கையினின்றும் எழுந்து யோகநித்ரையைத் துறந்து ஸ்ருஷ்டிக்க முயன்றிருக்கையில், தன் விதையினின்று ஆலஞ்செடி உண்டாவது போல, உன்னுடைய நாபியினின்று உன் சரீரமும், உன்னிடத்தில் மறைந்து ஸூக்ஷ்ம தசையை அடைந்திருப்பதுமாகிய ஜகத்ரூபமான பெரிய தாமரை மலர் உண்டாயிற்று. அந்தத் தாமரை மலரினின்றும் ப்ரஹ்மதேவன் உண்டாயினான். அவன் தனக்கு உத்பத்தி ஸ்தானமாகிய (பிறப்பிடமாகிய) அந்தத் தாமரை மலரைத் தவிர மற்றொன்றையும் காணாமல், தனக்கு அந்தராத்மாவாகித் தன்னிடத்தில் நிறைந்திருப்பவனும் தனக்கு ஆதாரமான தாமரை மலருக்குக் காரணனுமாகிய உன்னைத் தனக்கு வெளியில் ஜலத்திற்குள் சென்று வெகுதூரம் தேடியும் கண்டு பிடிக்கவில்லை. 

ஒரு விதையைப் பூமியில் நட்டோமானால் அதினின்றும் முளை கிளம்பின பின்பு அவ்விதையை எவ்வளவு தூரம் தேடினும் காணமுடியாதல்லவா? அவ்வாறே, “என் கார்யமான ஜகத்தாகிற தாமரை என்னைக்காட்டிலும் வேறுபட்டதன்று” என்பதை அறிவிக்கும் பொருட்டு ப்ரஹ்மதேவன் உன்னைப் பலவாறு தேடினும் நீ அவனுக்குப் புலப்படவில்லை. அவ்வாறு தேடின ப்ரஹ்மதேவன் “இவ்வளவு தூரம் தேடியும் இந்தத் தாமரை மலருக்குக் காரணம் எதுவோ அவ்வஸ்து எனக்குப் புலப்படவில்லையே. இஃதென்ன ஆச்சர்யம்” என்று மிகவும் வியப்புற்று ஜலத்தினின்று திரும்பி மேலேறி வந்து அந்தத் தாமரை மலரைச் சேர்ந்து தீவரமான தவம்செய்து அதனால் தூயமனத்தனனாகிப் பூமியில் மணம்போலத் தன்னைக் காட்டிலும் பிரித்தறிய முடியாமல் தன்னிடத்தில் நிறைந்திருப்பவனும் மிகவும் ஸூக்ஷ்மமான ஆகாசம் முதலிய பஞ்சபூதங்களும் இந்த்ரியங்களும் மனமும் ஆகிய இவை அமையப் பெற்றவனுமாகிய உன்னைக் கண்டான். அப்பால் அந்த ப்ரஹ்மதேவன் பல முகங்களும், பல கால்களும், பல தலைகளும், பல கைகளும், பல துடைகளும், பல மூக்குகளும், பல வாய்களும், பல காதுகளும், பல கண்களும், பல ஆபரணங்களும், பல ஆயுதங்களும் அமைந்து ஆச்சர்யமான உருவமுடையவனும் அந்த அவயவங்களின் ஸந்நிவேசம் (அமைப்பு) என்றும் மாறாமல் நித்யமாயிருக்கப் பெற்றவனும் மஹாபுருஷனுமாகிய உன்னைக் கண்டு ஸந்தோஷம் அடைந்தான். 

அப்பொழுது நீ வேதங்களைப் பறித்துக் கொண்டு போன ரஜஸ், தம ஸ்வரூபர்களும் மஹாபலிஷ்டர்களுமான மது, கைடபர்களென்னும் அஸுரர்களை ஹயக்ரீவரூபியாய் அவதரித்துக் கொன்று வேதங்களைக் கொண்டு வந்து அந்த ப்ரஹ்மதேவனுக்குக் கொடுத்தாய். பெரியோர்கள் அந்த ஹயக்ரீவாவதாரத்தை உனக்கு மிகவும் பரியமானதென்றும் சுத்தஸத்வமயமென்றும் சொல்கிறார்கள். இவ்வாறு உரிய காலங்களில் மனுஷ்யர், திர்யக்கு, ரிஷிகள், மத்ஸ்யம் முதலிய ஜாதிகளில் கேவலம் தன்னுடைய ஸங்கல்பத்தினால் சுத்தஸத்வமயமான திருவுருவங்களைக் கொண்டு அவதரித்து நீ உலகங்களைப் பாதுகாக்கின்றாய். அவ்வுலகங்களுக்கு விரோதிகளான ராவணாதிகளை வதிக்கின்றாய். மஹாபுருஷனே! க்ருத யுகம் முதலிய யுகங்களில் தொடர்ந்து வருகின்ற வர்ணாச்ரம மரியாதை முதலிய தர்மங்களை அவற்றின் விரோதிகளை அழித்துப் பாதுகாக்கின்றாய். க்ருதம் முதலிய மூன்று யுகங்களில் மாத்ரம் அவதரித்துக் கண்ணுக்குப் புலப்படுகின்றாய்; கலியுகத்தில் கண்ணுக்குப்படாமல் மறைந்தேயிருக்கின்றாய். ஆகையால் உன்னை த்ரியுகன் (மூன்று யுகன்) என்று சொல்லுகிறார்கள். 

வைகுண்டநாதா! பாபங்களால் தோஷங்களுக்கிடமாகி நன்முயற்சியற்று விஷயங்களில் திரிந்து இஷ்டமான (விரும்பிய) விஷயங்கள் நேர்ந்தால் ஸந்தோஷிப்பதும் அநிஷ்ட (விரும்பாத) விஷயங்கள் நேர்ந்தால் வருந்துவதும் பயத்தினாலும், பிள்ளை, பெண்டிர் பணம் முதலியவற்றில் ஆசையாலும் ஆயாஸம் (மிகுந்த களைப்பு) உற்றிருப்பதுமாகிய என் மனம் உன் கதைகளைக் கேட்டுப் பொழுது போக்கும்படியான நிலைமையை அடையவில்லை. மனம் இவ்வாறு ப்ரதிகூலமாய் (எதிரியாய்) இருக்கையால் சப்தாதி விஷயங்களில் ஊக்கமுற்று வருந்துகிற நான் உனது உண்மையை எவ்வாறு ஆராய்ந்தறிவேன்? 

அச்சுதனே! நாக்கு மதுரம் முதலிய ரஸங்களை எவ்வளவு அனுபவிக்கினும் திருப்தியடையாமல் என்னை ஒரு மூலையில் இழுக்கின்றது. அவ்வாறே உபஸ்தேத்ரியமும் (பிறப்பு உறுப்பும்) த்ருப்தி அடையாமல் மற்றொரு மூலையில் இழுக்கின்றது. தவகிந்தரியம் (தோல்) ஒரு மூலைக்கும், வயிறு ஒரு மூலைக்கும், காது ஒரு மூலைக்கும், மூக்கு ஒரு மூலைக்கும், சபலமுடைய (திடமான நிலையில்லாத) கண்கள் ஒரு மூலைக்கும், கைகால்கள் ஒரு மூலைக்கும் இழுக்கின்றன. இல்லற வாழ்க்கையிலிருக்கின்ற ஒருவனைப் பல மடந்தையர்கள் வருத்துவதுபோல, இந்த்ரியங்கள் என்னை வருத்துகின்றன. ஸம்ஸாரத்திற்கு வெளியிலுள்ள பரமபதத்தில் ஸஞ்சரிப்பவனே! நான் மாத்ரமே இவ்வாறு ஸம்ஸாரத்தில் வருந்துகிறேனென்பதில்லை. என்னைச் சேர்ந்த மற்றவர்களும் தமது புண்ய, பாப கர்மங்களால் ஸம்ஸாரமாகிற வைதரணியில் (நரகத்தில் இருக்கும் நதி) விழுந்து ஒருவர்க்கொருவர் ஜன்ம மரணங்களைப் பற்றியும் தம்முடைய சொத்துக்களைப் பிறர் பறித்துப் புசிப்பதைப் பற்றியும் மிகவும் பயந்து தம்முடைய தேஹங்களில் ப்ரீதியும் சத்ருக்களின் (எதிரிகளின்) தேஹங்களில் த்வேஷமும் (வெறுப்பும்) கொண்டு இன்னமும் மதி (புத்தி) உண்டாகப் பெறாமல் வருந்துகிறார்கள். அவர்களைப் பார்த்துக்கொண்டு நீ வெறுமனேயிருப்பது யுக்தமன்று (ஸரியன்று). அவர்களை இந்த ஸம்ஸாரத்தினின்று கரையேற்றிப் பாதுகாப்பாயாக. ஸமஸ்த லோகங்களுக்கும் ஹிதம் (நன்மை) உபதேசிக்கும் குருவே! ஜ்ஞானம், சக்தி முதலிய ஷாட்குண்யம் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்) நிறைந்தவனே! என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் ஸம்ஸாரத்தினின்று கரையேற்றுகையாகிற இவ்விஷயத்தில் உனக்கு என்ன ப்ரயாஸம் (ச்ரமம்)? ஒரு ப்ரயாஸமும் (ச்ரமும்) இல்லை. நீ சேதனாசேதன ரூபமான இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (நீடிப்பு, காத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல்) அவலீலையாக (விளையாட்டாக) நடத்துகின்றாய். ஆகையால் உனக்கு இது ஒரு வருத்தமன்று. பெரியோர்கள் ஒன்றும் தெரியாத மூடர்களிடத்தில் அனுக்ரஹம் செய்வார்களல்லவா? வருந்தினவர்களுக்குப் பந்துவே (நெருங்கிய உறவே)! நாங்கள் உன்னைப் பணியாதிருப்பினும் நீ எங்களை அனுக்ரஹிக்க வேண்டும். இல்லாத பக்ஷத்தில் ஆர்த்தபந்து (துன்பத்தில் இருப்பவர்களைக் காப்பவன்) என்கிற உன் பெயர் நிறைவேறாது. மற்றும் நாங்கள் உன் பக்தர்களைப் பணிந்து வருகிறோம். ஆகையால் நீ எங்களுக்கு அருள்புரிய வேண்டும். 

பரமனே! எவர்க்கும் தாண்டமுடியாததாகிய ஸம்ஸாரமாகிற வைதரணிக்கு (நரகத்தில் இருக்கும் நதி) நான் பயப்படவில்லை. உன் வீர்யங்களை வெளியிடுகிற உனது நாமங்களைப் பாடுகையாகிற அம்ருத வெள்ளத்தில் ஆழ்ந்த மனமுடைய நான் என்னைப்பற்றியும் வருந்தவில்லை. அத்தகைய உன் வீர்யங்களைப் பாடுகையில் மனம் செல்லப்பெறாமல் சப்தாதி விஷயங்களால் விளையும் அற்ப ஸுகத்திற்காகக் குடும்பமாகிற பெரிய பாரத்தை ஏற்றுக்கொண்டு ஒன்றுமறியாத பெருமூடர்களாயிருக்கிற என்னுடையவர்களைப் பற்றியே நான் வருந்துகிறேன். தேவனே! முனிவர்கள் பெரும்பாலும் தமக்கு மோக்ஷத்தையே விரும்பி ஜன ஸஞ்சாரமற்ற (மக்கள் நடமாட்டம் இல்லாத) அரண்யம் (காடு) முதலிய இடங்களில் உன்னுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானம் செய்கிறார்கள். பிறர் ப்ரயோஜனத்தில் கண் வைக்கிறதில்லை. ஆகையால் என்னுடையவர்கள் அத்தகைய முனிவர்களின் அனுக்ரஹத்தினால் என்னைப்போல உன் குணங்களைப்பாடி ஸம்ஸார    துக்கங்களைக் கடக்கும் நிலைமையைப் பெறமுடியாது. அவர்களைவிட்டு நானொருவன் மாத்ரம் இந்த ஸம்ஸாரத்தினின்றும் மோக்ஷத்தைப் பெறுவது எனக்கு ஸம்மதமன்று. ஆகையால் அவர்களையும் நீயே உன் கருணையால் ஸம்ஸாரத்தினின்றும் விடுவிக்க வேண்டும். இந்த ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஜந்துவுக்கு (பிராணிக்கு) உன்னையொழிய வேறொரு ரக்ஷகன் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இல்லற வாழ்க்கையிலிருப்பவர்கள் அனுபவிக்கிற ஸ்த்ரீ ஸம்போகம் (மனைவியுடன் புணர்ச்சி) முதலிய ஸுகம் கைகளில் தினவெடுத்து (அரிப்பு ஏற்பட்டு) ஒன்றோடொன்றை உறைத்துத் தேய்த்துக் கொள்வதனால் உண்டாகும் துக்கம் போல தற்காலத்தில் துக்கமாயிருப்பது மாத்ரமேயன்றி மேன்மேலும் துக்கத்திற்கிடமாயிருக்கும். அதை ஸுகமாக ப்ரமித்தாலும் (நினைத்து மயங்கினாலும்) அது அற்பமே (மிகவும் சிறிய அளவானது). சப்தாதி விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் பேராசையுடையவர்கள் பல வருத்தங்களை அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும் இந்த இல்லற வாழ்க்கையினால் விளையும் ஸுகத்தில் த்ருப்தி உண்டாகப் பெறுகிறதில்லை. உலகத்தில் சிலர் புண்பட்ட கையில் தினவெடுத்தாலும் (அரிப்பு எடுத்தாலும்) சொரிந்தால் கெடுதியென்று அந்தத் தினவைப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறே இந்த்ரியங்களை வென்றவர்கள் சப்தாதி விஷயங்களின் கொடுமையை அறிந்து காமத்தைப் பொறுத்திருப்பார்களேயன்றி மற்றவர்கள் பொறுக்கமாட்டார்கள். 

ஓ பரமபுருஷா! பேசாது மௌனமாயிருத்தல், உபவாஸம் முதலிய வ்ரதங்களை அனுஷ்டித்தல், வேதசாஸ்த்ரங்களை ஓதுதல், தவம்புரிதல், வேதார்த்தங்களை ஆராய்ந்து பண்டிதனாயிருத்தல், தமது வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டித்தல், பிறர்க்கு வேதசாஸ்த்ரங்களை ஓதுவித்தல், ஜனஸஞ்சாரமில்லாத (மக்கள் நடமாட்டம் இல்லாத) ஏகாந்தமான (தனியான) இடத்தில் வாஸம் செய்தல், மந்திரங்களை ஜபித்தல், த்யானித்தல் ஆகிய இவையெல்லாம் மோக்ஷத்திற்கு உபாயங்களென்பது உண்மை. ஆயினும் அவை இந்த்ரியங்களை வென்றவனுக்கேயன்றி மற்றவனுக்குப் பயன்படமாட்டாது. உன்னுடைய அனுக்ரஹமில்லாமல் இந்திரியங்களை வெல்ல முடியாது. இந்த்ரியங்களை வெல்லாதவர்களுக்கு அவை கேவலம் ஜீவன உபாயங்களேயாம் (வாழ்க்கை நடத்துவதற்கான வழி மட்டுமே). டம்பத்தில் (வீண் பெருமையில்) ஆசையுள்ளவர்களுக்கு அவை ஜீவன உபாயங்களும் (வாழ்க்கை நடத்துவதற்கான வழியும்) ஆகமாட்டாவென்றால், மோக்ஷத்தை விளைக்கமாட்டாது என்பதைச் சொல்ல வேண்டுமோ? சேதனாசேதனங்களென்கிற இரண்டு வஸ்துக்களும் விதையும் முளையும் போன்றவை. அவையிரண்டும் உன் சரீரங்களென்றும், நீ காமத்தினால் விளையும் சரீரமற்றவனென்றும் வேதங்கள் அறிவிக்கின்றன. சேதன அசேதனங்கள் ஒருகால் காரண அவஸ்தையில் (காரண நிலையில், படைப்புக்கு முன்) விதைபோலும் ஒருகால் கார்யாவஸ்தையில் (கார்ய நிலையில், படைப்புக்குப் பின்) முளைபோலும் இருக்கும். இருவகையான அச்சேதன அசேதனங்களும் உன் சரீரங்கள்தான். அவ்வாறு அவற்றைச் சரீரமாகக் கொண்டிருப்பது. கர்மத்தினாலன்று. அதுவே உனக்கு இயற்கை. ஆகையால் சேதன அசேதன ரூபமான ப்ரபஞ்சமெல்லாம் நீயே. உன்னைக்காட்டிலும் வேறுபட்ட வஸ்து எதுவுமேயில்லை. உன்னை உபாஸிக்கிற முனிவர்கள் கட்டைகளில் அக்னியைக் கடைந்து காண்பது போலச் சேதன அசேதன ரூபமான அவ்விருவகைச் சரீரங்களிலும் உன்னைக் காண்கிறார்கள். அவ்வாறு காண்கைக்கு உன்னுடைய உபாஸனத்தையொழிய மற்றொரு உபாயமுமில்லை. காற்று, அக்னி, பூமி, ஆகாசம், ஜலம், தன்மாத்ரைகள், இந்த்ரியங்கள், ஜ்ஞானம் உண்டாவதற்குக் காரணமான மனம், புத்தி இவையெல்லாம் நீயே. பலபடச் சொல்லியென்ன? மஹானுபாவனே! ஸத்வாதி குணங்களுக்கிடமாகி ப்ரக்ருதியின் பரிணாமங்களான (மாறுபாடுகளான) ஸகலபதார்த்தங்களும், ஸத்வாதி குணங்களுக்கிடமாகாமல் ப்ரக்ருதியின் பரிணாமமல்லாத (மாறுபாடு அல்லாத) ஜீவவர்க்கங்களும் ஆகிய மனத்திற்கும் வாக்குக்கும் விஷயமானவை எல்லாம் நீயே; ஸத்வாதி குணங்களும் அக்குணங்களுக்கிடமாகி ப்ரக்ருதியின் பரிணாமங்களுமான (மாறுபாடுகளுமான) மஹத்து, அஹங்காரம், தன்மாத்ரங்கள், ஆகாயம் முதலிய பஞ்சபூதங்கள் இவைகளும், தேவதைகளும், மனுஷ்யர்களும், மனம் முதலிய ஸமஸ்த இந்த்ரியங்களும் ஸர்வாந்தராத்மாவான உன்னை அறியமாட்டார்கள். 

அவர்கள் அனைவரும் காமத்தினால் பிறப்பதும் சாவதுமாயிருப்பவர்கள். ஆகையால் அவர்களுடைய ஜ்ஞானம் (அறிவு) கர்மத்தினால் குறுகியிருக்கின்றது. ஆதலால் அவர்கள் அறியவல்லரல்லர். பெரும்புகழனே! ஸர்வர்க்கும் அந்தராத்மாவாகிய உன் ஸ்வரூபத்தை மனனம் செய்யும் தன்மையுடைய முனிவர்கள் பக்தியோகத்தினால் காமத்தை ஒழித்து உன்னை ஆராய்ந்தறிந்து சப்தாதி விஷயங்களினின்று மீளுகிறார்கள். தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தைப் போக்குந் தன்மையனே! உன்னை நமஸ்கரிப்பது, உன்னைத் துதிப்பது, அர்க்யம், பாத்யம், ஆசமனம் முதலியன கொடுத்து உன்னைப் பூஜிப்பது, உன் பாதங்களை த்யானிப்பது, உன் கதைகளைக் கேட்பது ஆகிய இவ்வாறு அங்கங்களோடு கூடிய உன் ஸேவையைத் தவிர மற்ற எதனாலும் ஜனங்கள் உன்னிடத்தில் பக்தி உண்டாகப் பெறமாட்டார்கள். பரமஹம்ஸர்கள் இவ்வாறே உன் ஸேவையால் உன்னிடத்தில் பக்தி உண்டாகப்பெற்று அந்தப் பக்தியால் உன்னைப் பெறுகிறார்கள். 

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- கெட்ட குணங்கள் எவையும் தீண்டப்பெறாத அந்த ஸ்ரீந்ருஸிம்ஹ பகவான் தன் பக்தனாகிய ப்ரஹ்லாதனால் பக்தியின் மிகுதியால் தன் குணங்கள் வர்ணிக்கப் பெற்று, கோபத்தை அடக்கிக் கொண்டு, ஸந்தோஷம் அடைந்து, வணங்கியிருக்கிற அந்த ப்ரஹலாதனை நோக்கி இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- குழந்தாய் / ப்ரஹ்லாதனே! உனக்கு நன்மை உண்டாகுக. அஸுரச்ரேஷ்டனே! நான் உன் விஷயத்தில் ஸந்தோஷம் அடைந்தேன். உனக்கு இஷ்டமான வரத்தை வேண்டுவாயாக. நான் ப்ராணிகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையுடையவன். நீண்ட வாழ்நாளை உடையவனே! என்னை ஸந்தோஷப்படுத்தாத புருஷனுக்கு என் காட்சி கிடைப்பது அரிது. எந்த ப்ராணியும் என்னைக் கண்ட பின்பு நம் விருப்பம் நிறைவேறவில்லையே என்று தன்னைப் பற்றிச் சோகிக்க (வருத்தப்பட) உரியவனல்லன். ஆகையால் மிகுந்த விவேகமுடைய ஸாதுக்கள் நன்மையை விரும்பி இந்திரியங்களை வென்று மனோ வாக் காயங்கள் என்கிற (மனது, சொல், செயல் என்கிற) மூன்று கரணங்களும் (இந்த்ரியங்களும்) ஒத்திருக்கப் பெற்று ஸமஸ்த புருஷார்த்தங்களையும் கொடுக்கும் திறமையுடைய என்னை ஸந்தோஷப்படுத்துகிறார்கள்.

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- பகவான் சப்தாதி விஷயங்களில் விருப்பமுடைய உலகங்களையெல்லாம் மதி மயக்கும்படியான பல வரங்களைக் காட்டி வஞ்சிக்கப் பார்க்கினும், அஸுரச்ரேஷ்டனான ப்ரஹ்லாதன் ப்ரயோஜனங்களை விரும்பாமல் பகவானிடத்தில் மிகுந்த பக்தியுடையவனாகையால் அவ்வரங்களைச் சிறிதும் விரும்பவில்லை. 

ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை