கல்வியா பக்தியா?
''உண்மை தானா? பண்டிதர் ராமேஷ்வர் அப்படியா சொன்னார்?'' ராமேஷ்வர் சொன்னதாகத் தன் மனைவி சொன்னவற்றைக் கேட்டு விக்கித்து உட்கார்ந்து விட்டார் துக்காராம்.
துக்காராமின் மனைவி முந்தானையால் விழிகளைத் துடைத்துக் கொண்டாள். அவளுக்கு விம்மல் வந்தது.
"உண்மைதான் சுவாமி. பலர் இதைப் பற்றி என்னிடம் ஏற்கனவே பலமுறை சொல்லி விட்டார்கள். அது நிஜம்தானா என்று அறியத்தான் இன்று நானே ராமேஷ்வர் சொற்பொழிவு செய்யும் இடத்திற்குப் போனேன். கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. அவரது சொற்பொழிவையும் அவர் எழுதிய இலக்கண சுத்தமான பாடல்களையும் கேட்பதற்காகப் பலர் திரண்டு வந்திருந்தார்கள். நான் யார் என்று தெரியக் கூடாது என்பதற்காக முக்காட்டை இழுத்துப் போட்டுக் கொண்டு ஓர் ஓரத்தில் உட்கார்ந்தேன்! அப்போதுதான்...''
"அப்போதுதான்...சொல். மறுபடியும் சொல். அந்த ராமேஷ்வர் என்ன சொன்னார்?''
துக்காராம் துயரத்துடன் பரபரப்பாகக் கேட்டார். மனைவி கண்ணீர் வழிய வழியத் தொடர்ந்தாள்:
"மேடையிலேயே பலர் அறிய அவர் அறிவித்தார் சுவாமி. இதே ஊரில் இருக்கும் துக்காராம் என்பவர் எழுதிய அபங்கக் கீர்த்தனைகளை நீங்களெல்லாம் பாடுகிறீர்கள். அந்தத் தப்பை இனிமேல் செய்யாதீர்கள். பாண்டுரங்கனைப் பற்றிப் பாடும் பாடல் இலக்கண சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இலக்கணப் புலமையே சிறிதுமற்றவன் துக்காராம். அவன் பாடல்கள் சொற்குற்றம், பொருள் குற்றம் என்று பலவகைக் குற்றங்களை உடையவை. அவற்றை அவன் வேண்டுமானால் பாடட்டும். ஆனால், அவை நன்றாக இருப்பதாகக் கருதி நீங்கள் யாரும் பாடிவிடாதீர்கள். அப்படிப் பாடுவதன் மூலம் பகவானுக்கு அபசாரம் செய்யாதீர்கள் என்று சொன்னார் சுவாமி!''
"என் தெய்வமே! கிருஷ்ணா! பாண்டுரங்கா!'' மனத்தில் எழுந்த சோகத்தின் கனத்தைத் தாங்க இயலாதவராய் அப்படியே சரிந்தார் துக்காராம். சற்றுநேரம் கழித்து மெல்லக் கேட்டார்.
"கூட்டத்தினர் அவர் கருத்தை ஆமோதித்தார்களா?''
"அதுபற்றி ஒன்றும் சொல்லத் தெரியவில்லை சுவாமி. கூட்டத்தினர் ஆமோதித்தார்களோ இல்லையோ, ஆனால் யாரும் எதிர்க்கவில்லை. அமைதி காத்தார்கள்''.
"மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று சொல்வதுண்டே?''
"அது அப்படிப்பட்ட மவுனமாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்த எதிர்ப்பை அவர்கள் வார்த்தையால் அல்லாமல் மவுனத்தால் தெரிவித்தார்களோ என்னவோ?''
"நீ என்மேல் கொண்ட பரிவால், என் சமாதானத்திற்காகச் சொல்கிறாய். அப்படியே வைத்துக் கொண்டாலும், இந்த தெகு கிராமத்தில் (புனே அருகில்) உள்ள அனைவரை விடவும் மெத்தப் படித்தவர் ராமேஷ்வர் தானே? நான் படிக்காத பாமரன் தானே? மெத்தப் படித்தவர் ஒரு கருத்தைச் சொன்னால் அது சரியாகத் தானே இருக்கும்? என் பாடல்களைக் கண்ணன் ஏற்கமாட்டான் என்றால் பின் நான் இருந்து என்ன பயன்?'' அவரது துக்கம் அவர் மனைவிக்குப் புரிந்தது.
"எத்தனை ஆண்டுகளாகப் பாண்டுரங்கன் மேல் கீர்த்தனைகள் எழுதுகிறார்! வீட்டின் அலமாரிகளில் கட்டுக்கட்டாக எத்தனை ஓலைச் சுவடிகள்! அந்தக் கீர்த்தனைகளில் இலக்கணம் இல்லாமலிருக்கலாம். ஆனால் பக்தி இருந்ததே? இல்லாவிட்டால் மக்களிடையே அவை இத்தனை செல்வாக்கோடு இருக்குமா? தெருவெல்லாம் அவரது அபங்கங்கள் தானே முழங்குகின்றன?
ராமேஷ்வர் எதனால் அப்படிச் சொன்னாரோ? ஒருவேளை தன் பாடல்கள் இவர் பாடல்கள் போல் பிரபலமாகவில்லை என்ற பொறாமை காரணமா?'' யோசித்தவாறே துக்காராமின் மனைவி சமையல் வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
துக்காராம் மெல்ல எழுந்தார். கட்டுக்கட்டாகத் தான் எழுதியிருந்த கீர்த்தனைகள் அடங்கிய ஓலைச்சுவடிகளைக் கழிவிரக்கத்தோடு பார்த்தார். பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும் அபங்கங்களாகப் பாடியிருக்கிறாரே? அந்த ஓலைச் சுவடிகளைப் பிரியமாகத் தடவிக் கொடுத்தார். பின் திட சித்தத்தோடு ஒரு முடிவு செய்தவராய், அனைத்தையும் ஒரு பழைய வேட்டியில் கட்டினார். இருள் கவியத் தொடங்கியிருந்த அந்த மாலைப் பொழுதில் கண்ணீர் வழிய வழிய, தமது தெகு கிராமத்தில் வற்றாது ஓடும் இந்த்ரயானி நதிக்கரை நோக்கி நடந்தார்.
"என் பாடல்களைக் கண்ணன் ஏற்க மாட்டான் என்றால் இவை இனி இருந்தென்ன பயன்?''
மனதுக்குள் கதறியவாறே சுவடிக்கட்டை நதி நீரில் தொப்பென்று போட்டார். அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்தார். பல்லாண்டுகளாக அவர் உழைத்த உழைப்பு! அவரது பக்திப் பரவசத்தின் வெளிப்பாடு! இதோ சுழலில் மூழ்கி இழுத்துச் செல்லப்படுகிறது!
"என் தெய்வமே! என் கவிதைகளை நீ ஏற்க மாட்டாய் என்றால் பிறகு என் மனத்தில் ஏன் இந்தக் கவிதைகளைத் தோற்றுவித்தாய்?''
தன் வாழ்க்கை முழுவதையுமே பறிகொடுத்தது போன்ற துக்கத்துடன் அருகேயிருந்த மரத்தடியில் கால் ஓய்ந்து உட்கார்ந்தார். அவர் மனம் விரக்தியிலும் தாளாத துயரிலும் உழன்றது. இரவு உணவு உண்ணாததால் ஏற்பட்ட பசி மயக்கம் வேறு.
அப்படியே மரத்தடியில் மயங்கிச் சரிந்தார். நள்ளிருள் ஒரு போர்வை போல் அவர் மேல் படர்ந்தது.
மனைவி அவர் எங்கே போனார் என்று அங்குமிங்கும் தேடிப் பரபரத்தாள். அவரின் தாளாத துக்கத்தை அவள் உணர்ந்திருந்தாள். அதன் விளைவாக ஏதேனும் தவறான முடிவுக்கு அவர் போகாமல் இருக்க வேண்டுமே என அவள் உள்ளம் தவித்தது.
"பாண்டுரங்கா! பாண்டுரங்கா!'' என்று ஜபித்தவாறே இரவுப் பொழுதை உறங்காமலே கழித்த அவள், சூரியன் உதயமானதும், அந்த வெளிச்சத்தில் கணவரைத் தேடிக்கொண்டு ஒவ்வோர் இடமாகப் பார்த்தவாறே நதிக்கரை வந்து சேர்ந்தாள். மரத்தடியில் பேச்சு மூச்சற்றுக் கணவர் கிடப்பதைப் பார்த்துப் பதைபதைத்தாள். ஓடோடிப் போய் அவரது தலையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டு, "பிராண நாதா பிராண நாதா'' என அழுதவாறே அழைக்கலானாள்.
பண்டிதர் ராமேஷ்வர் நிர்மால்ய தரிசனம் காண்பதற்காகப் பாண்டுரங்கன் கோயிலுக்கு அதிகாலையில் போய்க் காத்திருந்தார். அர்ச்சகர் சந்நிதியின் கதவைத் திறந்ததும், கண்ணனைக் காணவேண்டும் என அவர் விழிகள் வழக்கம்போல் பேராவல் கொண்டிருந்தன. அவரும் கிருஷ்ண பக்தர் தானே?
அவருக்கும் துக்காராமுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். இவர் படித்த பக்தர், அவர் படிக்காத பக்தர், அவ்வளவே!
கடவுளது சந்நிதானத்தில் படிப்பு வெல்லுமா? பக்தி வெல்லுமா? கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்ற மூன்று யோகங்களில், ஞான யோகத்தை விட பக்தி யோகம் ஒரு படி மேல் தானோ! படித்த பக்தன், படிக்காத பக்தன் இந்த இருவரில் யார் பக்தி மேலானது! துலாபாரத்தில் இரண்டு தட்டுகளில் இவ்விருவர் பக்தியையும் தனித்தனியே வைத்தால் எந்தத் தட்டு தாழும்!
சந்நிதிக் கதவைத் திறந்த அர்ச்சகரும் சந்நிதிக்கு வெளியே நின்ற ராமேஷ்வரும் பரவசத்தோடு பண்டரிநாதனைப் பாதாதி கேசமாகத் தரிசிக்கலானார்கள். பாதம், இடுப்பு, கழுத்து எனப் பார்த்துக் கொண்டே வந்த அவர்கள் பாண்டுரங்கனின் தலைப்பகுதி வந்ததும் விக்கித்து நின்றார்கள்.
"பூட்டிய கோயிலின் உள்ளே கண்ணனின் தலையில் இதென்ன சுமை? யார் இதை இங்கே எப்படிக் கொண்டு வந்து வைத்தார்கள்? கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வாழ்க்கை நடத்து என்று சொல்வதை இப்படியா புரிந்து கொள்வது? பூட்டிய சந்நிதியில் எப்படி இப்படிச் செய்ய முடியும்?''
அர்ச்சகர் பதற்றத்தோடு அந்தச் சுமையைக் கீழே இறக்கினார். ராமேஷ்வர் முன்னிலையில் சுமையைப் பிரித்தார். அது ஈரமான வேட்டியால் கட்டப்பட்ட சுமை. உள்ளே இருந்ததெல்லாம் ஓலைச் சுவடிகள். ராமேஷ்வர் ஓலைச் சுவடிகளை ஒவ்வொன்றாகப் பார்த்தார். எல்லாம் பக்தர் துக்காராம் எழுதிய பாடல்கள். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
நேற்று மாலை தன் சொற்பொழிவுக்கு துக்காராமின் மனைவி வந்திருப்பதை அவர் தொலைவிலிருந்தே பார்த்துவிட்டார். "அவள் முந்தானையால் மூடிக் கொள்ள முயன்றாலும் தூய்மையே வடிவான அந்தப் பெண்ணின் புனித ஒளியை வெறும் துணி முக்காட்டால் மறைக்க முடியுமா என்ன? துக்காராமின் மனைவி அல்லவா அவள்? புனிதவதியாக அல்லாமல் வேறு எப்படி இருப்பாள்? ஆனால், அவள் வந்ததை அறிந்தல்லவா ஆத்திரத்தோடு நேற்று இலக்கணமில்லாத துக்காராமின் பாடல்களைப் பாண்டுரங்கன் ஏற்கமாட்டான் என்று ஏதோ அறிவிப்பதுபோல் அறிவிலித்தனமாக முழங்கினேன்? மனைவி மூலம் என் கருத்தை அறிந்து அவர் இத்தனை ஓலைச் சுவடிகளையும் நதியில் போட்டிருக்க வேண்டும். ஆனால், இதோ! என்னப்பன் பாண்டுரங்கன் அவர் பாடல்களையல்லவா தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறான்?"
"அர்ச்சகரே! உடனடியாக நாம் இந்தச் சுமையோடு நதிக்கரைக்குப் போகவேண்டும்! துக்காராம் அங்கேதான் இருப்பார்!''
ராமேஷ்வர் கண்ணன் தன் தலையில் சுமந்த அந்தச் சுமையைத் தன் தலையில் தான் சுமந்து ஓடினார். அர்ச்சகர் அவர் பின்னே ஓடினார்.
நதிக்கரையில் தன் மனைவியின் அழைப்பைக் கேட்டு துக்காராம் கண்விழித்தபோது ராமேஷ்வரும் அர்ச்சகரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். நடந்ததைச் சொல்லித் தன் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்ட ராமேஷ்வர் துக்காராமின் காலில் விழுந்து பணிந்தார். அவரை அள்ளி அணைத்துக் கொண்ட துக்காராம், "என் பாடல்களைத் தன் தலையில் வைத்துக் கண்ணன் கொண்டாடியது, உங்கள் பேச்சால் தான் அல்லவா?'' என்று கண்ணீர் வழிய நெகிழ்ந்தபோது ராமேஷ்வரின் கரம் அவரது விழிநீரைத் துடைத்தது.
நன்றி - தினமலர் அக்டோபர் 2012