சனி, 25 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 163

ஏழாவது ஸ்கந்தம் – பத்தாவது அத்தியாயம்

(பகவான் ப்ரஹ்லாதனை அனுக்ரஹித்து அந்தர்த்தானம் அடைதலும் (மறைதலும்), ருத்ரன் – த்ரிபுர ஸம்ஹாரம் செய்த (த்ரிபுரங்களை எரித்த) வ்ருத்தாந்தமும்)

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- சிறுவனாகிய ப்ரஹ்லாதன், பகவான் கொடுக்கிறேனென்ற அந்த வரங்களெல்லாம் பக்தியோகத்திற்கு விக்னமென்று (தடை என்று) நினைத்து “எனக்கு அந்தராத்மாவாயிருந்து என் அபிப்ராயத்தை அறிந்தும் என்னை இவ்வாறு வஞ்சிக்கிறானே (ஏமாற்றுகிறானே)” என்று சிரித்துக்கொண்டு அந்தப் பகவானைப் பார்த்து இவ்வாறு மொழிந்தான்.

ப்ரஹ்லாதன் சொல்லுகிறான்:- நாதனே! நான் இயற்கையாகவே பிறந்தநாள் முதல் காமங்களில் (உலக இன்பங்களில்) விருப்பம் அற்று இருக்கிறேன், அப்படிப்பட்ட என்னை அவ்வரங்களைக் கொடுக்கிறேனென்று மேன்மேலும் அவற்றில் ஆசைமூட்டி வஞ்சிக்க வேண்டாம். நான், அவற்றில் மனப்பற்று செய்தால் அநர்த்தம் (கெடுதி) வருமென்று பயந்து அவற்றில் வெறுப்புற்று ஸம்ஸார பந்தத்தினின்று விடுபட விரும்பி உன்னைச் சரணம் அடைந்தேன். வேறு ப்ரயோஜனங்களை விரும்பாமையாகிற பக்த லக்ஷணம் என்னிடத்தில் இருக்கிறதா என்பதை என் வாயால் பரீக்ஷிக்க விரும்பி ஸம்ஸாரமாகிற வ்ருக்ஷத்திற்கு (மரத்திற்கு) விதை போன்றவைகளும், ஹ்ருதயத்தின் முடிச்சு போல அறுக்க முடியாமல் தொடர்ந்திருப்பவைகளுமான காமங்களில் (உலக இன்பங்களில்) என்னைத் தூண்டுகின்றாய். இப்படியில்லையாயின், காருண்ய மூர்த்தியும் ஸமஸ்த லோகங்களுக்கும் ஹிதம் உபதேசிப்பவனுமாகிய நீ என்னை அநர்த்தங்களுக்கு (கெடுதிகளுக்கு) இடமான காமங்களில் தூண்டுவது நன்றாயிராது. ஸம்ஸாரமாகிற இருள் மூடின பெரிய நரகத்தில் கண்கெட்டு ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறியாமல் உழல்கின்ற ஜீவாத்மாவுக்கு நீயொருவனே அந்நரகத்தினின்று கரையேறும் உபாயத்தை அறிவிப்பவன். ஆகையால் நீ அந்நரகத்தில் மேன்மேலும் அழுத்தவல்ல காமங்களில் (உலக இன்பங்களில்) என்னைத் தூண்டுவது எவ்வாறு பொருந்தும்? 

பரம புருஷார்த்த ஸ்வரூபனான உன்னைப் பணிந்து உன்னிடத்தினின்று எவன் காமங்களை (உலக இன்பங்களை) விரும்புகிறானோ, அவன் ப்ருத்யனே (பக்தனே, சேவகனே) அல்லன்; வர்த்தகனே (வியாபாரி). வர்த்தகர்கள் (வியாபாரிகள்) தங்கள் ப்ரயோஜனம் (பயன், குறிக்கோள்) நிறைவேறும் வரையில் பிறரை அனுஸரித்திருப்பார்கள்; அதன் பிறகு அனுஸரிக்கமாட்டார்கள். அவ்வாறே ப்ரயோஜனத்தை விரும்பி அது நிறைவேறும் வரையில் உன்னைப் பணிகிறவன் வர்த்தகனே (வியாபாரியே) அன்றி ப்ருத்யன் (பக்தன், சேவகன்) ஆகமாட்டான். ஸ்வாமியினிடத்தில் ப்ரயோஜனத்திற்காக அனுஸரிக்கிறவன் ப்ருத்யன் (பக்தன், சேவகன்) ஆகமாட்டாதது போல, ப்ருத்யனிடத்தினின்று (பக்தன், சேவகனிடத்திலிருந்து) தன் ப்ரயோஜனத்தை விரும்பி அவன் விருப்பங்களைக் கொடுக்கிறவனும் ஸ்வாமியாக மாட்டான். எவர்கள் வேறு ப்ரயோஜனங்களை எதிர்பாராமல் ஒருவர்க்கொருவர் குணங்களைக் கண்டு ப்ரீதி செய்கின்றார்களோ, அவர்களே ஸ்வாமியும் ப்ருத்யனுமாவார்கள். மற்றவர்கள் எப்படியேனும் இருக்கட்டும். நானோவென்றால் வேறு ப்ரயோஜனங்களை விரும்பாத உன் பக்தனாயிருக்கின்றேன். நீயும் ஒரு ப்ரயோஜனத்தை எதிர்பாராத ஸ்வாமியாய் இருக்கின்றாய். நீ ஸ்வாமியாய் இருக்கையும் நான் உனக்கு ப்ருத்யனாய் (சேவகனாய்) இருக்கையுமாகிற இந்த ஸம்பந்தம் நமக்கு அனாதியாக இயற்கையில் ஏற்பட்டிருக்கின்றது.

உலகத்தில் மன்னவன் தன் கார்யங்களுக்காக ப்ருத்யனிடத்தில் (சேவகனிடத்தில்) ப்ரீதி செய்கிறான். ப்ருத்யனும் (சேவகனும்) தன் ப்ரயோஜனத்திற்காக மன்னவனைப் பணிந்து வருகிறான். நம்மிருவர்க்குமுள்ள ஸம்பந்தத்தில் அவ்விதமாக வேறொரு ப்ரயோஜனம் கிடையாது. இதெல்லாம் ஸர்வஜ்ஞனாகிய உனக்குத் தெரிந்த விஷயமே. ஜகதீச! வரங்கொடுப்பவர்களில் சிறந்த நீ எனக்கிஷ்டமான வரங்களைக் கொடுக்க விரும்புவாயாயின், என் மனத்தில் எவ்வகை விருப்பங்களும் உண்டாகாதிருக்கையாகிற இவ்வரத்தையே உன்னிடத்தில் வேண்டுகிறேன். காமங்களை (உலக இன்பங்களை) விரும்புகிறவன் அதற்காகப் பலவகைப் புண்ய, பாபகர்மங்களைச் செய்து மேன்மேலும் பல ஜன்மங்களை எடுத்துக் கடைசியில் ஸ்தாவர (மரம் போன்ற அசையாதவை) ஜன்மத்தை அடைந்து இந்திரியங்கள், மனம், ப்ராணன்கள், ஜீவன், தர்மம், தைர்யம், ஆத்ம, பரமாத்ம ஜ்ஞானம், பாபங்களில் வெட்கம், ஐச்வர்யம், தேஜஸ்ஸு, நினைவு, ஸத்யம் இவை முதலியனவெல்லாம் அழியப்பெற்று வருந்துகிறான். 

புண்டரீகாக்ஷ! மனுஷ்யன் எப்பொழுது தன் மனத்திலுள்ள விருப்பங்களையெல்லாம் துறக்கிறானோ, அப்பொழுதுதான் ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) உன்னுடைய ஸாயுஜ்யத்தை (சேர்த்தியை, அனுபவிக்கும் வஸ்துவான ப்ரஹ்மானந்தம் முக்தனுக்கும் பரமாத்மாவிற்கும் ஒன்றே; அதில் ஏற்றத்தாழ்வு கிடையாது; இதுவே ஸாயுஜ்யம் எனப்படும்) அடைகிறான். நீ ஷாட்குண்ய பூர்ணன்; பரமபுருஷன், அனைவர்க்கும் அந்தராத்மா; பக்தர்களை அனுக்ரஹிக்கும் திறமையுடையவன்; உன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்குவதே உனக்கு இயற்கை. அற்புதமான சிங்க உருவங்கொண்டு எனக்குத் தோற்றினையல்லவா? இதனாலேயே உன் இயற்கை வெளியாகின்றது. நீ ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும் அளவிடமுடியாதவன்; மூன்று லோகங்களுக்கும் உட்புகுந்து தரித்துக் கொண்டிருக்கின்றாய். ப்ரணவத்தின் பொருள் நீயே. இத்தகைய உனக்கு நமஸ்காரம். எனக்கு வைராக்யத்தையொழிய மற்ற வரங்கள் எவற்றையும் கொடுக்க வேண்டாம்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உன்னைப்போல என்னிடத்தில் மிகுந்த பக்தியுடையவர்கள் என்னிடமிருந்து ஒருகாலும் இஹலோக (இந்த உலகத்து) போகங்களையாவது பரலோக (ஸ்வர்க்கம் போன்ற வேறு உலக) போகங்களையாவது விரும்பமாட்டார்கள். ஆயினும் இந்த மன்வந்தரம் வரையில் இவ்வுலகத்திலேயே தைத்யேச்வரர்களுக்கு (அசுரர்களுக்குப்) ப்ரபுவாகி (தலைவனாகி) போகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பாயாக. எனக்கு மிகவும் அன்பனாகிய நீ இனியவைகளான என் கதைகளை அனுபவித்துக் கொண்டிருப்பாயாயின், உனக்கு மேன்மேலும் ஸம்ஸார பந்தம் உண்டாகாது. ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் அந்தராத்மாவாயிருப்பவனும், யஜ்ஞங்களுக்கு ப்ரபுவும் ஸர்வேச்வரனுமாகிய என்னைப் பக்தியோகத்தினால் ஆராதித்துக்கொண்டே என்னை அடைவதற்குத் தடையான புண்ய, பாப கர்மங்களை அனுபவித்துக் கழிப்பாயாக. மோக்ஷத்தில் விருப்பமுடையவனும் கூட ப்ராரப்த கர்மத்தின் (பலனைத் தர ஆரம்பித்த கர்மத்தின்) பலனான ஸுகதுக்கங்களை அவசியம் அனுபவித்தே தீர வேண்டுமாகையால், நீ விரும்பாதிருப்பினும் உன்னைக் காமங்களில் (விருப்பங்களில்) தூண்டுகிறேன். புண்ய கர்மத்தை அதன் பலனான ஸுகானுபவத்தினால் கழிப்பது போலப் பாபகர்மத்தின் பலனான துக்கத்தையும் மனத்தில் விகாரமின்றித் திறமையுடன் அனுபவித்துக் காலக்ரமத்தில் சரீரத்தைத் துறந்து தேவலோகத்திலும் பாடும்படியான கீர்த்தியைப் பரப்பி ஸம்ஸார பந்தத்தினின்று விடுபட்டு என்னைப் பெறுவாய். நீ என் விஷயமாகப் பாடின இந்த ஸ்தோத்ரத்தை எவன் பாடுகிறானோ, அவன் தேஹ அவஸான (சரீரம் முடியும்) காலத்தில் புண்ய பாப ரூபமான கர்ம பந்தத்தினின்று விடுபடுவான்.

ப்ரஹ்லாதன் சொல்லுகிறான்:- தங்களை ஈச்வரர்களென்று அபிமானித்திருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் மேலான ஈச்வரனே! வரங்கொடுப்பவர்களில் சிறந்த உன்னிடத்தினின்று நான் இந்த வரம் வேண்டுகிறேன். அஃது யாதென்றால், என் தந்தை ஸர்வேச்வரனான உன் ப்ரபாவத்தை அறியாமல் “இவன் என் ப்ராதாவைக் கொன்றவன்” என்று உன்னிடத்தில் கெட்ட எண்ணங்கொண்டு மனத்தில் பெருங்கோபம் வளரப்பெற்று, ஸர்வலோகங்களுக்கும் ஹிதம் (நன்மை) உபதேசிப்பவனும் ப்ரபுவுமாகிய உன்னைப் பழித்தானல்லவா? மற்றும், உன் பக்தனாகிய என்னிடத்தில் த்ரோஹம் (கெடுதல்) செய்தானல்லவா? எவ்விதத்திலும் கடக்கமுடியாத அவ்விருவகைப் பாபத்தினின்றும் என் தந்தை விடுபட்டுப் பரிசுத்தனாவானாக. இதுவே நான் வேண்டும் வரம். உன் கடைக் கண்களால் பார்க்கப்பட்ட என் தந்தை அப்பாபத்தினின்றும் விடுபட்டிருப்பானென்பதில் ஸந்தேகமில்லை. தீனவத்ஸலனே! ஆயினும் நான் மன இரக்கத்தினால் வேண்டுகிறேன்.

பகவான் சொல்லுகிறான்:- நல்லியற்கையுடையவனே! உன் தந்தை மாத்ரம் பரிசுத்தனானான் என்பதில்லை. முன்னேழு, பின்னேழு, நடுவேழு ஆக இருபத்தோரு பித்ருக்களுடன் உன் தந்தை பரிசுத்தனானான். ஏனென்றால், குலத்தைப் புனிதம் செய்யவல்ல மஹாபக்தனாகிய நீ இவனது க்ருஹத்தில் பிறந்தாயல்லவா? ஆதலால் உன் குலம் புனிதமாயிற்று. ஜகத்தெல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமே என்று எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்குந் தன்மையரும் ஜிதேந்த்ரியர்களும் (இந்த்ரியங்களை வென்றவர்களும்) நல்லொழுக்கம் அமைந்தவர்களும் பிறர்க்கு உபகாரம் செய்பவர்களுமான என் பக்தர்கள் எவ்வெவ்விடங்களில் இருக்கின்றார்களோ, அத்தேசங்கள் ம்லேச்ச (பாரத தேச பண்பாடு இல்லாத) தேசங்களாயினும் பரிசுத்தமாகின்றன. ப்ரஹ்லாதனே! உலகத்தில் என் பக்தர்கள் அனைவரும் உன்னைப் போல் இருக்க வேண்டும் என்று உன்னொழுக்கத்தை அனுஸரிக்கிறார்கள். ஆகையால் என் பக்தர்கள் அனைவர்க்கும் நீ த்ருஷ்டாந்தமாய் (உதாரணமாய்) இருக்கின்றாய். தைத்ய ச்ரேஷ்டனே! என் பக்தர்கள் உன் ஒழுக்கத்தைக் கண்டு நாமும் இவ்வாறு இருக்க வேண்டுமென்று விரும்பி, மேன்மையும், தாழ்மையுமான தேவர், மனுஷ்யர் முதலிய ஸமஸ்த ப்ராணி ஸமூஹங்களுக்குள் மனோ வாக் காயங்களென்கிற மூன்று கரணங்களாலும் எதையும் ஹிம்ஸிக்கிறகில்லை. எல்லாவற்றையும் என்னுடைய சரீரங்களாகப் பாவித்து அவற்றை உரியபடி வெகுமதிக்கிறார்கள். என்னிடத்தில் பக்தியால் எதையும் விரும்புகிறதில்லை. இவ்வாறு உன்னொழுக்கங்களைக் கற்கின்றார்கள். ஆதலால் எல்லாவிதத்திலும் பரிசுத்தனாகிய உன் தந்தைக்கு ப்ரேத கார்யங்களைச் செய்வாயாக. 

ஓ ப்ரஹ்லாதனே! நற்புத்தியுள்ள உன்னைப் புதல்வனாகப் பெற்ற உன் தந்தை என் சரீர ஸம்பந்தத்தினால் புண்யலோகங்களை அடையப்போகிறான். நீ தந்தையின் ஸ்தானத்தைக் கைப்பற்றி ஆண்டு வருவாயாக. வேதங்களை ஓதியுணர்ந்த அந்தணர்களின் கட்டளைப்படி நடப்பவனாகி என்னிடத்தில் மனத்தை நிலைநிறுத்தி என்னையே பலனாகப் பாவித்து என்னுடைய ஆராதன ரூபமான கர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு வருவாயாக.

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- ஓ யுதிஷ்டிர மன்னவனே! இவ்வாறு பகவானால் மொழியப்பட்ட அந்த ப்ரஹ்லாதனும் அப்படியே தன் தந்தைக்கு ப்ரேதகார்யங்களை எல்லாம் செய்தான். பிறகு ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களால் அபிஷேகமும் செய்யப்பெற்றான். அனந்தரம் தேவதைகளால் சூழப்பட்ட ப்ரஹ்மதேவன், கோபம் தெளிந்து அனுக்ரஹத்தினால் திகழ்கின்ற முகமுடைய அந்த ஸ்ரீந்ருஸிம்ஹ பகவானைக் கண்டு, பரிசுத்தமான வாக்குக்களால் ஸ்தோத்ரம் செய்து இவ்வாறு மொழிந்தான்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- தேவர்களுக்கெல்லாம் தேவனே! ப்ராணிகளையெல்லாம் படைப்பவனே! எனக்கும் முன்னவனே! உலகங்களையெல்லாம் பீடித்துக் கொண்டிருந்த பாபிஷ்டனாகிய (பாபியான) இவ்வஸுரன் தெய்வாதீனமாய் இப்பொழுது உன்னால் முடிக்கப்பட்டான். இது பெரிய ஸந்தோஷம். இவ்வஸுரன் என்னிடத்தினின்று வரம்பெற்று என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட எவ்வகை ப்ராணிகளாலும் வதிக்க முடியாதவனாகித் தவ பலத்தினால் கர்வமுற்றுச் சாஸ்த்ரீய தர்மங்களையெல்லாம் அழித்துக் கொண்டிருந்தான். இவனைத் தெய்வாதீனமாய் நீ வதித்தாய். இது எங்கள் பாக்யம். இவ்வஸுரனுடைய பிள்ளையாகிய ப்ரஹ்லாதன் சிறுவனாயினும் உன்னிடத்தில் மிகுந்த பக்தியுடையவன். இவனை அவ்வஸுரன் பலவாறு வதிக்கப் பார்த்தான். கடைசியில் தானே கத்தியால் வெட்ட வந்தான். இவனை நீ அந்த ம்ருத்யுவினின்றும் (மரணத்தினின்றும்) விடுவித்தாய். அவ்வஸுரன் மேலுள்ள கோபத்தினால் நீ எவர்க்கும் அணுக முடியாதிருக்கையில் இந்த ப்ரஹ்லாதனே இப்பொழுது உன்னை நன்றாகக் கிட்டினான். இவையெல்லாம் எங்களுக்கு மிகுந்த ஸந்தோஷத்திற்கு இடமாயிருக்கின்றன. பகவானே! உன்னுடைய இந்த ந்ருஸிம்ஹ ரூபம், தன்னை மனவூக்கத்துடன் த்யானம் செய்யும் புருஷனை எல்லா பயங்களினின்றும் பாதுகாக்கும். ஆயிரம் சொல்லியென்ன? அவனை ம்ருத்யுவே (யமனே) நேரில் வதிக்க வேண்டுமென்று விருப்பங்கொண்டு வந்தாலும், அவனிடத்தினின்றும் பாதுகாக்கும். இந்த விஷயத்தை ப்ரஹ்லாதனிடத்தில் ஸ்பஷ்டமாகக் (தெளிவாகக்) கண்டோம்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அப்பா! ப்ரஹ்மதேவனே! இது முதலாக நீ அஸுரர்களுக்கு இவ்விதமாக வரங்கொடுக்க வேண்டாம். கொடுந்தன்மையுடைய ஸர்ப்பங்களுக்குப் (பாம்புகளுக்கு) பால் வார்த்து வளர்ப்பது போலக் கொடுந்தன்மையுடைய அஸுரர்களுக்கு இவ்வாறு வரங்கொடுப்பது உலகங்களுக்கு மிகவும் உபத்ரவத்திற்கு (தொந்தரவிற்கு) இடமாகும். ஆகையால் இனியாவது மன ஊக்கத்துடன் இருப்பாயாக.

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- மன்னவனே! அந்த ந்ருஸிம்ஹ பகவான் இவ்வாறு மொழிந்து ப்ரஹ்மதேவனால் பூஜிக்கப்பட்டு ஸமஸ்த பூதங்களும் பார்த்துக் கொண்டிருக்கையில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தான். பிறகு ப்ரஹ்லாதன் ப்ரஹ்ம தேவனையும், ருத்ரனையும், மரீசி முதலிய ப்ரஜாபதிகளையும் பகவானுடைய அம்சமென்னும் பாவனையுடன் பூஜித்துத் தலையால் வணங்கினான். அப்பால் காவ்யர் (சுக்ராசாரியார்) முதலிய முனிவர்களோடு கூடின ப்ரஹ்ம தேவன் ப்ரஹ்லாதனைத் தைத்யர்களுக்கும், தானவர்களுக்கும் ராஜனாகச் செய்தான். 

யுதிஷ்டிர மன்னவனே! பிறகு ப்ரஹ்மதேவன் முதலிய தேவர்கள் அனைவரும் ப்ரஹ்லாதனைப் புகழ்ந்து அவனால் பூஜிக்கப்பட்டுத் தத்தம் இடங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் த்வாரபாலகர்களாய் இருந்தவர்கள் ஸனகாதி அந்தணர்களின் சாபத்தினால் இவ்வாறு திதிக்குப் பிள்ளைகளாகப் பிறந்து பகவானை எப்பொழுதும் த்வேஷித்துக் கொண்டிருந்தார்களாகையால் அவர்களுடைய ஹ்ருதயத்தில் பகவான் மாறாமல் வஸித்துக்கொண்டிருந்து கடைசியில் ந்ருஸிம்ஹ ரூபியாய் வந்து வதித்தான். மீளவும் அவர்கள் கும்பகர்ணன், ராவணன் என்று இரண்டு ராக்ஷஸர்களாகப் பிறந்து தசரத சக்ரவர்த்தியின் குமாரனான ஸ்ரீராமனுடைய பராக்ரமங்களால் முடிந்தார்கள்.

அவர்கள் ஸ்ரீராமனுடைய பாணங்களால் ஹ்ருதயம் பிளவுண்டு யுத்தபூமியில் படுத்து அந்த ஸ்ரீராமனையே நினைத்துக்கொண்டு முன் ஜன்மத்திற் போலவே சரீரத்தைத் துறந்தார்கள். அவர்களே இங்கு சிசுபாலனும், தந்தவக்தரனுமாகப் பிறந்து மீளவும் விஷ்ணுவால் முடிக்கப்பட்டு மாறாத வைரத்தினால் நீ பார்த்துக்கொண்டிருக்கையில் அவ்விஷ்ணுவின் ஸாயுஜ்யத்தை அடைந்தார்கள். சிசுபால தந்தவக்த்ரர்கள் மாத்ரமேயன்று; மற்றும், ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மாறாத த்வேஷமுடைய மன்னவர்கள் அனைவரும், புழு குளவியினிடம் பயந்து அதையே நினைத்துக்கொண்டிருந்து தானும் அக்குளவியின் உருவம் பெறுவது போல, த்வேஷத்தினால் எப்பொழுதும் க்ருஷ்ணனையே நினைத்துக் கொண்டிருந்து முன்செய்த பாபங்களையெல்லாம் துறந்து அவனோடு ஸாரூப்யத்தை அடைந்தார்கள். 

குறிப்பு:- பகவானை அடைவதன் நான்கு நிலைகளாவன:- 

ஸாலோக்யம் – அவரது உலகை அடைவது.

ஸாமீப்யம் – அவர் அருகே இருக்கப் பெறுவது.

ஸாரூப்யம் – அவர் போன்ற திருமேனி பெறுதல்.

ஸாயுஜ்யம் – அனுபவிக்கும் வஸ்துவான ப்ரஹ்மானந்தம் முக்தனுக்கும் பரமாத்மாவிற்கும் ஒன்றே; அதில் ஏற்றத்தாழ்வு கிடையாது; இதுவே ஸாயுஜ்யம் எனப்படும். 

பகவானுடைய பக்தர்கள் வேறு ப்ரயோஜனங்களை விரும்பாத அந்தப் பக்தியின் மஹிமையால் அவனுடைய ஸாரூப்யத்தை அடைவது போல, சிசுபாலன் முதலிய மன்னவர்களும் த்வேஷத்துடன் மாறாமல் அந்தப் பகவானைச் சிந்தித்துக் கொண்டிருந்தமையால் அவனுடைய ஸாரூப்யத்தை அடைந்தார்கள். மன்னவனே! த்வேஷிகளான சிசுபாலாதிகளுக்குப் பகவானுடைய ஸாரூப்யம் எப்படி உண்டாகக் கூடுமென்று நீ என்னை வினவினாய். அதைப் பற்றிச் சொல்ல வேண்டியதெல்லாம் உனக்கு விஸ்தாரமாகச் சொன்னேன். 

ப்ராஹ்மண குலத்திற்கு வேண்டியவற்றை எல்லாம் செய்பவனும் தேவதேவனும் மூன்று லோகங்களையும் உள்ளே புகுந்து தரிப்பவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய இந்த அவதார கதை புண்யத்தை விளைக்கும். இதில் ஆதி தைத்யர்களான ஹிரண்யாக்ஷ, ஹிரண்ய கசிபுக்களின் வதம் கூறப்பட்டிருக்கின்றது. மற்றும், இதில் மஹாபாகவதனான ப்ரஹ்லாதனுடைய பக்தியும், ஜ்ஞானமும், விரக்தியும் வெளியாகின்றன. மற்றும், ஜகத்தின் (உலகத்தின்) ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்குக் (அழித்தல்) காரணனான பரமபுருஷனுடைய உண்மையும், ஸத்வாதி குணங்கள், புண்ய பாபகர்மங்கள் இவற்றின் ஸ்வரூபமும், மேன்மையும், தாழ்மையுமுள்ள தேவ, அஸுரர்களின் ஸ்தானங்களுக்குக் கால மஹிமையால் நேரிட்ட பெரிய மாறுபாடும் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த உபாக்யானத்தில் பகவானை அடைவதற்குரிய உபாயமாகிய பாகவதர்களின் தர்மமும் ஆத்மஸ்வரூபத்தைப் பற்றின விசாரமும் விரிவாக மொழியப்பட்டது. பகவானுடைய பராக்ரமம் முதலிய குண ஸமூஹங்களை (கூட்டங்களை)  வர்ணிக்கையால் வளர்ந்திருக்கிற புண்யமான இந்த உபாக்யானத்தை ச்ரத்தையுடன் படிக்கும் புருஷன் புண்யபாபரூபமான கர்மங்களாகிற பாசங்களினின்றும் விடுபடுவான். ஸத்புருஷர்களில் சிறந்த ப்ரஹ்லாதனுடைய பரிசுத்தமான ப்ரபாவத்தைக் கேட்டு, ஸிம்ஹம் யானையைக் கொல்லுவதுபோல, ஆதிபுருஷனாகிய பகவான் ஹிரண்ய கசிபுவை அவலீலையாகக் (விளையாட்டாகக்) கொன்ற வ்ருத்தாந்தத்தை வெளியிடுகிற இந்த உபாக்யானத்தை மனவூக்கத்துடன் படிக்கும் புருஷன் கர்மங்களினின்றும் விடுபட்டு எவ்விதத்திலும் பயமில்லாத வைகுண்ட லோகத்தைப் பெறுவான். 

யுதிஷ்டிர மஹாராஜனே! இந்த மனுஷ்ய லோகத்திற்குள் நீங்கள் மிகுந்த பாக்யசாலிகள். பரப்ரஹ்மமென்று ஓதப்படுகிற பரமபுருஷன் ஸ்ரீக்ருஷ்ண ரூபியாய் மானிட உருவம் கொண்டு மறைந்து உங்கள் க்ருஹத்தில் வஸிக்கிறான். அதைப் பற்றி, உலகங்களையெல்லாம் புனிதம் செய்யவல்ல முனிவர்கள் எல்லா இடங்களினின்றும் உங்கள் க்ருஹத்திற்குத் தேடிக்கொண்டு வருகின்றார்கள். “ஸ்ரீக்ருஷ்ணன் எங்கள் அம்மான் பிள்ளையல்லவா? அவன் எப்படிப் பரமபுருஷனாவான்?” என்று சங்கிக்க (ஸந்தேஹப்பட)  வேண்டாம். அந்த ஸ்ரீக்ருஷ்ணன் பெரியோர்களால் தேடத்தக்கதும் கேவல ஆநந்த ஜ்ஞான ஸ்வரூபமுமாகிய (ஆனந்தமும், ஜ்ஞானமும் தன் இயற்கை நிலையாக உடைய) பரப்ரஹ்மமே. இப்படிப்பட்ட ஸ்ரீக்ருஷ்ணன் உங்களுக்குக் கேவலம் அம்மான் பிள்ளை மாத்ரமேயல்லன்; ப்ரீதிக்கிடமுள்ள நண்பனும் அந்தராத்மாவும் பூஜிக்கத் தகுந்தவனும் கட்டளைப்படி நடக்கும் ப்ருத்யனும் (சேவகனும்) ஹிதோபதேசம் செய்யும் குருவுமாயிருக்கிறான். இவ்வாறு அவனோடு பலவாறு ஸம்பந்தமுடைய உங்கள் பாக்யத்திற்கு அளவுண்டோ? அந்தப் பகவானுடைய ஸ்வரூபத்தை ப்ரஹ்மதேவன், ருத்ரன் முதலியவர்களும் உள்ளபடி அறியவல்லரல்லர்; கேவலம் அவனுடைய திவ்யமங்கள விக்ரஹ (திருமேனி) த்யானத்தினாலும், பக்தியினாலும் இந்திரிய ஜயம் முதலியவைகளாலும் அவனை ஆராதிக்கிறார்கள். யோகேச்வரர்களுக்கு ப்ரபுவாகிய அந்தப் பகவான் நமக்கு அருள்புரிவானாக. மன்னவனே! இந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான் முன்பு பல மாயைகளை அறிந்த மயனால் தடுக்கப்பட்ட ருத்ரனுடைய புகழைப் பரவச்செய்தான்.

யுதிஷ்டிரன் சொல்லுகிறான்:- ஜகத்திற்கு ப்ரபுவும் தேவனுமாகிய ருத்ரனுடைய புகழை மயன் எந்தக் கார்யத்தில் தடுத்ததனால் இந்த ஸ்ரீக்ருஷ்ணன் அதைப் பரவச் செய்தான்? அதைச் சொல்வீராக.

ஸ்ரீ நாரதர் சொல்லுகிறார்:- ருத்ரனால் உதவி செய்யப்பெற்ற தேவர்கள் யுத்தத்தில் அஸுரர்களை ஜயிக்க, அவ்வஸுரர்கள் மாயைகளை உணர்ந்த ஆசார்யர்களுக்கும் ஆசார்யனாகிய மயனைச் சரணம் அடைந்தார்கள். ஸமர்த்தனாகிய அந்த மயன் பொன், வெள்ளி, இரும்பு இம்மூன்றுகளாலும் மூன்று பட்டணங்களை இயற்றி அவ்வஸுரர்களுக்குக் கொடுத்தான். அப்பட்டணங்கள் வருவதும், போவதும் ஒருவர்க்கும் புலப்படமாட்டாது. அவற்றிலுள்ள கருவிகள் இப்படிப்பட்டவைகளென்று எவர்க்கும் ஊஹிக்கமுடியாது. அவை விமானங்கள் போன்றிருந்தன. நினைத்த இடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவல்லவை. அஸுர ஸேனா நாயகர்கள் (படைத் தலைவர்கள்) அப்பட்டணங்களில் இருந்து தேவர்களுக்குப் புலப்படாமல், அவர்களிடத்தில் தமக்குள்ள முன் த்வேஷத்தை நினைத்து லோகபாலர்களோடு கூடின மூன்று லோகங்களையும் அழிக்கத் தொடங்கினார்கள். 

அப்பால் அந்த இந்த்ராதி லோகபாலர்களும் லோகங்களிலுள்ள ஜனங்களும் ருத்ரனிடம் வந்து வணங்கி “ப்ரபூ! அஸுரர்கள் மயன் இயற்றிக்கொடுத்த மூன்று பட்டணங்களை இருப்பிடமாகக் கொண்டு தாங்கள் வருவதும், போவதும் பிறர்க்குத் தெரியாமல் உன் ப்ரஜைகளான எங்களை அழிக்கின்றார்கள். தேவனே! எங்களைப் பாதுகாப்பாயாக” என்று முறையிட்டார்கள். பிறகு மஹானுபாவனாகிய ருத்ரன் “பயப்படவேண்டாம்” என்று தேவர்களை அனுக்ரஹித்துத் தனுஸ்ஸில் பாணத்தைத் தொடுத்து அதில் பாசுபதாஸ்த்ரத்தை அமைத்து அந்தப் பட்டணங்களின் மேல் ப்ரயோகித்தான். அப்பால் ஸூர்யமண்டலத்தினின்று கிரணங்கள் கிளம்புவது போல அந்தப் பாணத்தினின்றும் பலவகையான பாணங்கள் புறப்பட்டன. அவற்றால் அப்பட்டணங்கள் மூன்றும் மறைந்து கண்ணுக்குத் தெரியாதிருந்தன. அப்பட்டணங்களிலிருந்த அஸுரர்கள் அனைவரும் அந்தப்பாணங்களால் அடியுண்டு மாண்டு விழுந்தார்கள். மஹாயோகியாகிய மயன் அவர்களெல்லோரையும் கொண்டு வந்து செத்தவர்களைப் பிழைப்பிக்கும்படி தான் இயற்றின கிணற்றின் ஜலத்தில் போட்டான். அவர்கள் அக்கிணற்றிலுள்ள ஸித்தாம்ருத ரஸத்தினால் நனைந்து வஜ்ரம் போலத் திடமான அங்கங்களுடையவர்களும் மஹா பலிஷ்டர்களுமாகி (பலசாலிகளாகி), மேகங்களிலிருந்து மின்னல்கள்களாகிற அக்னிகள் கிளம்புவது போல மேலேறி வந்தார்கள். அப்பொழுது தன் நினைவு வீணாகப்பெற்று மன வருத்தமுற்றிருக்கின்ற ருத்ரனைப் பார்த்து, இந்த ஸ்ரீக்ருஷ்ணன் அந்த ஸித்தாம்ருத ரஸத்தை அழிப்பதற்கு உபாயம் செய்தான். இந்த ஸ்ரீக்ருஷ்ண ரூபியான பகவான் தான் பசுவானான். ப்ரஹ்மதேவன் கன்றானான். பிறகு பசுவின் உருவம் தரித்த பகவான் கன்றின் உருவம் தரித்த ப்ரஹ்மதேவனுடன், அந்த த்ரிபுரத்தின் மேல் ஏறி மத்யாஹ்னகாலத்தில் அங்குள்ள கிணற்றில் இருக்கும் ஸித்த அம்ருத ரஸத்தைப் பானம் செய்தான் (பருகினன்). 

அந்த அம்ருதத்தைப் பாதுகாத்துக் கொண்டிருந்த அஸுரர்கள் அவ்வாறு அம்ருத ரஸத்தைப் பருகும் பசுவைப் பார்த்தும் பகவானுடைய மாயையால் மதிமயங்கப் பெற்று அதைத் தடுக்கவில்லை. மஹாயோகியான மயன் அவ்வாறு பசு அம்ருதத்தைப் பருகினதை அறிந்து இது தெய்வச்செயலென்று நினைத்து வருத்தமின்றி அக்கிணற்றைப் பாதுகாக்கும் அஸுரர்கள் சோகிக்க (வருத்தப்பட), அவர்களை நோக்கிப் புன்னகை செய்து “தனக்காவது பிறர்க்காவது ஈச்வரன் ஏற்படுத்தின ஸுகத்தையாவது துக்கத்தையாவது மாற்றுவதற்கு இவ்வுலகத்திலுள்ள தேவன், அஸுரன், மனுஷ்யன் ஆகிய எவனாலும் முடிவதில்லை. ஆகையால் நீங்கள் இதைப் பற்றி வருந்த வேண்டாம்” என்றான். 

பிறகு இந்த ஸ்ரீக்ருஷ்ணன் அம்ருத ரஸத்தையெல்லாம் பருகி ஸாதுக்களை ரக்ஷிக்குந் திறமையாகிற தர்மம், ஜ்ஞானம், வைராக்யம், ஐச்வர்யம், தவம், வித்யை, சேராதவற்றையும் சேர்ப்பிக்கையாகிற செயல் முதலிய தன் சக்திகளால் ருத்ரனுக்கு யுத்தத்திற்கு வேண்டிய தேர், தேர்ப்பாகன், த்வஜம் (கொடி), குதிரை, தனுஸ்ஸு (வில்), கவசம், பாணம் (அம்பு) முதலிய கருவிகளையெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தான். 

மன்னவனே! பிறகு ருத்ரன் பகவானுடைய தர்மசக்தி ரூபமான ரதத்தில் ஏறிக்கொண்டு கவசம் அணிந்து தனுஸ்ஸையும் பாணத்தையும் (வில்லையும், அம்பையும்) எடுத்துக்கொண்டான். அப்பால் தனுஸ்ஸில் பாணத்தைத் தொடுத்து அபிஜித்தென்னும் முஹூர்த்தத்தில் ஸ்ரீக்ருஷ்ணனுடைய தேஜஸ்ஸுடன் கூடிப் பாண ப்ரயோகம் செய்து (அம்பு எய்து) த்ரிபுரத்தைத் தஹித்தான். அரசே! அப்பொழுது விண்ணில் துந்துபி வாத்யங்கள் முழங்கின; விமானங்களில் ஏறிவந்த தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், பித்ருதேவதைகள் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி பொங்க, “வெற்றி! வெற்றி!” என்று வெற்றி முழக்கமிட்டுப் பூமாரி பெய்தனர்; அப்ஸசரஸ் பெண்டிர்கள் பாடியாடி மகிழ்ந்தனர். 

மன்னனே தர்மநந்தனா! இவ்வாறு த்ரிபுரங்களை தஹித்த பகவான் பரமசிவன், “புரமெரித்தோன்” என்ற திருப்பெயர் பெற்று, பிரும்ஹ தேவன் முதலிய தேவர்கள் துதிக்கப்பெற்று தன்னிருப்பிடமான கைலாயம் சென்றார். உலகங்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனான பகவான் ஹரி, தன் மாயையால் மறைந்து, மனிதத் திருமேனி தாங்கி, மானிடன்போல் செய்த பற்பலத் திருவிளையாடல்களை, முனிவர்கள் போற்றிப் புகழ்கின்றார்கள். அந்தத் திருவிளையாடல்கள் எல்லாம் உலகத்தைத் தூய்மையாக்குபவை அல்லவா? சரி. இனி என்ன சொல்ல வேண்டும்? (கேள்)

பத்தாவது அத்தியாயம் முற்றிற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக