சனி, 25 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 26 - திருப்பூர் கிருஷ்ணன்

என்றும் நம் நினைவில்

அஸ்தினாபுர அரண்மனை உப்பரிகையில் தர்மபுத்திரர் அங்குமிங்குமாக உலவிக் கொண்டிருந்தார். இனம்தெரியாத பதற்றம் அவர் மனத்தைப் பீடித்திருந்தது.

"ஏன் இப்படி நிலைகொள்ளாமல் நடக்கிறீர்கள்?'' - பாஞ்சாலி பரிவோடு கேட்டாள். 

என்னவெனத் தெரியவில்லை. ஏதோ கெட்ட சேதி வரப்போகிறது என்று உள்ளுணர்வு சொல்கிறது. சகுனங்கள் எதுவும் சரியில்லை!

பாஞ்சாலி அதற்குமேல் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் அவள் மன நிலையும் அப்படித்தான் இருந்தது. "துன்பம் வரும் சூழல் நேர்ந்தால் என்ன? கண்ணனைப் பிரார்த்தித்தால் அவன் துன்பத்தை மாற்றி விடப் போகிறான், அவ்வளவுதானே!" என்று அவள் தன்னையே தேற்றிக் கொண்டாள். 

வயோதிகத்தால் தளர்ந்திருந்த தன் மாமியார் குந்திதேவியின் பாதங்களைப் பிடித்து பணிவிடை செய்ய வேண்டி அவளது அறை நோக்கி நடந்தாள்.

பாரதப்போர் முடிந்து கண்ணன் அருளால் வெற்றி கிட்டி அவர்கள் ஆனந்தமாக அஸ்தினாபுரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் அது. இப்போது துர்ச்சகுனங்கள் தோன்ற வேண்டிய அவசியமென்ன? பஞ்ச பாண்டவர்களில் நால்வர் இங்கே தான் அரண்மனையில் இருக்கிறார்கள். அர்ஜுனன் மட்டும் கண்ணனைப் பார்த்து வருவதாகக் கூறி துவாரகை சென்றிருக்கிறான். அவனுக்கு எதுவும் நேராதிருக்க வேண்டுமே? தர்மபுத்திரர் மனம் தத்தளித்தது.

நேற்று மாலை தர்மபுத்திரர் அஸ்தினாபுர வீதியில் தேரோட்டிச் சென்றபோது விந்தையான ஒரு காட்சியைக் கண்டார். ஓர் உழவன் தோளில் கலப்பையைச் சுமந்து வந்துகொண்டிருந்தான். அவர் திகைப்போடு அவனிடம் கேட்டார்:

"நாளை மீண்டும் இதே கலப்பையைச் சுமந்துகொண்டு வயலுக்குத் தானே அப்பா போகப் போகிறாய்? அப்படியிருக்க அதை இன்று வீடுவரை சுமந்து வருவானேன்? வயலிலேயே வைத்துவிட்டு வரவேண்டியது தானே?" 

அவன் பெருமூச்சோடு பதில் சொன்னான்:

"பிரபோ! நாடு முன்புபோல் இல்லை. இரண்டு நாட்கள் முன்பு வயலில் நான் விட்டுவந்த கலப்பையை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள்!''

தர்மபுத்திரருக்குத் தூக்கிவாரிப் போட்டது. 

"தேசத்தில் திருட்டு தொடங்கிவிட்டதா? துவாபரயுகம் முடிந்து கலியுகம் ஆரம்பமாகப் போகிறதா என்ன? இதுவரை திருட்டைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லையே?" 

அவர் மேலும் தேரோட்டிச் சென்றபோது ஒரு வீட்டின் வெளிக்கதவில் பூட்டு தொங்குவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

"அஸ்தினாபுரத்தில் வீடுகளைப் பூட்டும் வழக்கமில்லையே! ஏன் இவர்கள் பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்?" என்று அக்கம் பக்கத்தினரை விசாரித்தார். 

"வீடு பூட்டாதிருந்தால் திருடர்கள் வீட்டில் புகுந்து திருடிச் செல்கிறார்கள். இரண்டு மூன்று நாட்களாக இந்தத் திருட்டுப் பழக்கம் சிலரிடம் தோன்றியிருக்கிறது!'' என்று பதில் வந்தது. 

தர்மபுத்திரர் கவலையோடு அரண்மனை வந்தார். துவாபரயுகத்தில் கண்ணனின் அருளாட்சி அல்லவா எங்கும் நடந்து கொண்டிருக்கிறது? தர்மத்தைக் காக்கவென்றே கண்ணன் இருக்கும்போது இப்படியெல்லாம் இப்போது நடப்பானேன்? 

சிந்தித்தவாறே அவர் அரண்மனை உப்பரிகையில் நடக்கையில், படபடவென அவரது இடக்கண் துடித்தது. இடக்கண் துடிப்பது நல்ல சகுனம் அல்லவே? 

"கண்ணா! அர்ஜுனனைக் காப்பாற்று,'' அவர் பிரார்த்தித்துக் கொண்டார். 

அர்ஜுனன் பெரும் கிருஷ்ண பக்தன். அவனைக் காப்பாற்றாமல் கண்ணன் யாரைக் காப்பாற்றப் போகிறான்? 

அவனது கிருஷ்ண பக்தியைப் பற்றி நினைத்தபோது சில மாதங்கள் முன்பு கண்ணன் துவாரகையிலிருந்து இங்கே வந்த தருணத்தில் யார் சிறந்த கிருஷ்ண பக்தர் என்பது பற்றி நடந்த உரையாடல் தர்மபுத்திரர் மனத்திரையில் ஓடியது.

குந்தியும் பாஞ்சாலியும் பாண்டவர்களுமாக கூடத்தில் அமர்ந்திருக்க அன்று கண்ணன் அவர்களை மகிழ்விக்கக் குழலூதினான். என்ன இசை அது! உள்ளத்தையும் உடலையும் மட்டுமல்ல. உயிரையே உருக்கும் இசை! 

அவன் குழலிசையை முடித்தபோது, பாஞ்சாலி கண்களில் தளும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனை வணங்கி எழுந்தாள். குந்தி ஆடாமல் அசையாமல் சிலைபோல் அமர்ந்திருந்தாள். இசையால் விளைந்த ஆனந்த மவுனம் அவர்களைக் கட்டிப் போட்டிருந்தது. நகுலன் மவுனத்தைக் கலைத்தான்:

பாஞ்சாலியை மிஞ்சிய கிருஷ்ண பக்தர் யாரும் இருக்க முடியாது! கண்ணன் குழலிசை கேட்டு அவள் கண்களில் கண்ணீர்! 

நகுலனின் பேச்சை சகாதேவன் ஆமோதித்தான். அர்ஜுனன் நகைத்தவாறே சொன்னான்:

"என் பக்தியை விடவுமா அவள் பக்தி பெரிது?"

கண்ணன், சிலைபோல் மெய்மறந்து அமர்ந்திருந்த குந்திதேவியின் தோளைப் புல்லாங்குழலால் தட்டி, அவளை இக உலகிற்குக் கொண்டுவந்து பின் கேட்டான்:

"இங்கே யார் உயர்ந்த கிருஷ்ண பக்தர் என்பது பற்றி விவாதம் தொடங்கியிருக்கிறது. குந்திதேவியின் கருத்து என்னவோ?''

"மற்றவர்களின் பக்தியை விட என் பக்தி உயர்ந்ததா தாழ்ந்ததா என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு அக்கறையில்லை! ஆனால் எனக்கு நீதான் எல்லாம்!''

கண்ணன் குந்தியைப் பாசத்தோடு பார்த்தான். பின் ஆசனத்தை விட்டு எழுந்தவாறே சொன்னான்:

"யார் உயர்ந்த கிருஷ்ண பக்தர் என்பது நான் போனால் தெரியும்!'' சொல்லிவிட்டுக் கண்ணன் தேரிலேறிச் சென்றுவிட்டான். 

கண்ணன் சொன்ன வாக்கியத்தைப் பற்றி விவாதம் தொடர்ந்தது. அர்ஜுனன் கேட்டான்:

"யார் சிறந்த கிருஷ்ண பக்தர் என்பது நான் போனால் தெரியும் என்றானே கண்ணன்? இப்போது அவன் போய்விட்டான். யார் சிறந்த கிருஷ்ண பக்தர் என்பதை அது எப்படிப் புலப்படுத்துகிறது?''

பீமன் சிரித்தவாறே சொன்னான்: 

"நான் போனால் தெரியும் என்று கண்ணன் சொன்னது "நான்" என்ற அகங்காரம் போனால் தெரியும் என்ற அர்த்தத்தில் தான் இருக்க வேண்டும்!''

தர்மபுத்திரர் அர்ஜுனனைக் கூர்மையாகப் பார்த்தவாறு சொன்னார்:

"அகங்காரம் என்றைக்கு நம்மை விட்டுப் போகப்போகிறது? போரில் வெற்றி பெற்ற பிறகு நம் அகங்காரமும் அதிகமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. கண்ணன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணத்தாலேயே மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்ற அகங்காரம் தோன்றத் தொடங்கிவிட்டது. இல்லாவிட்டால் யார் சிறந்த கிருஷ்ண பக்தர் என்பதைப் பற்றி விவாதம் நிகழ்த்துவோமா என்ன?'' 

இப்படிச் சொன்ன அவர், "நீ என்னம்மா சொல்கிறாய்?'' என்று குந்திதேவியிடம் பாசத்தோடு கேட்டார். 

குந்திதேவி, "குழந்தைகளே! கிருஷ்ண பக்தி காரணமாகவே உங்கள் மனத்தில் நாம்தான் உயர்ந்த கிருஷ்ண பக்தர்கள் என்று அகங்காரம் தோன்றுமானால், அந்த அகங்காரம் போகவும் கிருஷ்ணனையே பிரார்த்தியுங்கள்!'' என்றாள். பின் கனத்த யோசனையோடும் தளர்ந்த நடையோடும் உள்ளே சென்றாள்.

அரண்மனை வாயிலில் தலைகுனிந்தவாறு அர்ஜுனன் தேரிலிருந்து இறங்குவதைப் பார்த்து உப்பரிகையிலிருந்து தர்மபுத்திரர் ஓட்டமாக ஓடிவந்தார். பீமன், நகுலன், சகாதேவன் இவர்களோடு பாஞ்சாலியும் வாயிலை நோக்கி விரைந்தாள். உள்ளே குந்திதேவி மட்டும் அவன் வந்ததை அறியாதவளாய் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். 

அர்ஜுனன் விழிகளிலிருந்து கண்ணீர் வழிவதைப் பார்த்து, தர்மபுத்திரர் பதட்டத்தோடு வினவினார்:

"அர்ஜுனா! துவாரகையில் என்ன நடந்தது? ஏன் உன்னிடம் இந்தக் கடும் துயரம்?'' 

அவன் கதறியவாறே சொன்னான்:

"அண்ணா! நடக்கக் கூடாதது நடந்து விட்டது. கானகத்தில் மரத்தில் அமர்ந்து கண்ணன் குழலூதிக் கொண்டிருந்தபோது, ஒரு வேடன் கண்ணனின் அழகிய பாதங்களைப் பார்த்துப் புறாவென்று தவறாகக் கருதி அம்பெய்துவிட்டான். அம்பு பட்டு நம் தெய்வம் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டது!''

"என்னது! கண்ணன் பரமபதம் சென்று விட்டானா? என் தெய்வமே? எங்களை விட்டுச் செல்லலாமா நீ?''

பாஞ்சாலியின் கதறல் அரண்மனைச் சுவர்களில் எதிரொலித்தது. பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அவளைத் தேற்றும் வகையறியாது விக்கித்து நின்றிருந்தார்கள். தர்மபுத்திரர் விண்ணை நோக்கி வணங்கினார். பின் மெல்லச் சொன்னார்:

"நேரிலிருந்து நம்மை வழி நடத்திய அவன் இனி விண்ணிலிருந்து வழிநடத்துவான். துவாபரயுகம் முடிந்து கலியுகம் தோன்றுவதற்கான சகுனங்கள் எனக்குச் சில நாட்களாகவே தென்படத் தொடங்கிவிட்டன. கலியுகத்தில் கண்ணன் கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி சிலையாய் வாழ்ந்து அருள்வானே அன்றி மக்களோடு மக்களில் ஒருவராய் வாழமாட்டான் என்பதை நான் அறிவேன். ஆனால், அதெல்லாம் இவ்வளவு விரைவில் தொடங்கும் என்பதைத்தான் நான் அறியவில்லை. வாருங்கள். நம் தாயிடம் கண்ணன் பரமபதம் சென்றதைத் தெரிவிப்போம்!'' 

பாஞ்சாலியோடு பாண்டவர்கள் அனைவரும் குந்திதேவியின் அறை நோக்கி நடந்தார்கள். அர்ஜுனனைப் பார்த்த குந்திதேவி பரபரப்போடு கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்:

"மகனே! துவாரகையில் கண்ணனைப் பார்த்தாயா? என் கண்ணன் நலமாக இருக்கிறானா? இரண்டு நாட்களாகவே என் மனம் சரியில்லை. உன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!'' பாண்டவர்கள் தலைகுனிந்து நின்றார்கள். 

அர்ஜுனன் ஒரு விம்மலோடு சொன்னான்: "அம்மா! நம் கண்ணன் நம்மையெல்லாம் விட்டுப் பரமபதம் சென்றுவிட்டான்! உலகே துயரக்கடலில் மூழ்கியுள்ளது!''

"ஹா! கண்ணா! எங்களை விட்டுச் சென்றுவிட்டாயா நீ?'' குந்தியிடமிருந்து ஒரு கதறல் கேட்டது. மறுகணம் அவளின் உயிரற்ற உடல் கட்டிலில் சரிந்தது. ஓடிச்சென்று அந்த உடலைத் தாங்கிக் கொண்டார் தர்மபுத்திரர். 

பாஞ்சாலியும் மற்ற பாண்டவர்களும் திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

கண்ணன் போனபின்னும் அவர்கள் வாழ்கிறார்களே? குந்திதேவியால் கண்ணன் இன்றி வாழ இயலவில்லையே? குந்திதேவி அல்லவோ சிறந்த கிருஷ்ண பக்தை!

"யார் உயர்ந்த கிருஷ்ண பக்தர் என்பது நான் போனால் தெரியும்!'' என்று அன்று கண்ணன் சொன்னானே! அந்த வாக்கியத்தின் அர்த்தம் அப்போது அர்ஜுனனுக்குப் புரிந்தது.

முற்றும்

நன்றி - தினமலர் நவம்பர் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக