ஏழாவது ஸ்கந்தம் – பதினொன்றாவது அத்தியாயம்
(சாதாரணமான வர்ண தர்மங்களையும், மனுஷ்ய தர்மங்களையும், பிராஹ்மணாதி வர்ண தர்மங்களையும், ஸ்த்ரீ தர்மங்களையும் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- “ஹே பரீக்ஷித்! மூன்று அடி அளந்தோனான பகவான் ஸ்ரீமந் நாராயணனிடமே அனன்ய பக்தி கொண்ட அசுரகுல திலகமான பிரகலாதனது பாவனமான திவ்ய சரித்திரத்தைச் சான்றோர்கள் மாபெரும் அவைகளில் பேசி மகிழ்வர். ஏனெனில், அவன் அறிஞரின் அறிஞன்; தூயரென்பார் யாரினும், மறையினும் தூயான். அந்த பக்தனது சரித்திரத்தைக் கேட்டு மகிழ்ந்த தர்மபுத்திரர், பிரும்மதேவரது புத்திரரான நாரதரிடம் மீண்டும் கேட்கலானார்.
யுதிஷ்டிரர் கேட்கிறார்:- “மகரிஷியே! தொன்மை காலம் முதல் மனிதர்கள் மேற்கொண்டு ஒழுகும் பண்டைய தர்மமான வர்ணாச்ரம தர்மங்களையும், ஆசார - அனுஷ்டானங்களையும் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஏனெனில், அந்த ஸனாதன தர்மத்தினால், மனிதர்கள் சிறந்த ஞானத்தையும், பக்தியையும் பெறுகிறார்கள். அதனால், சாட்சாத் பகவானையே பெற்று விடுகின்றனர். பிரும்ம தத்துவத்தை அறிந்த பெரியோரே! படைப்புக் கடவுளான பிரும்மதேவரது தவப்புதல்வர் தாங்கள். அவர் தனது மற்ற புதல்வர்களை விடத் தங்களிடம் அதிக அன்பு வைத்துள்ளதற்கு காரணம் என்னவென்றால், தவம், யோகம், சமாதிகளில் அவர்களை விடத் தாங்கள் முன் நிற்பது தான். பகவானிடம் இணையற்ற பக்தி, பிறரிடம் கருணை, தம் வர்ணத்திற்கேற்ற ஆசார அனுஷ்டானங்கள் மற்றும் “யான், எனது” என்னும் செருக்கற்ற தங்களைப் போன்ற அந்தணர்கள்தான், தர்மத்தின் மர்மம் அறிந்தவர்கள். மற்றவர்கள், அவ்வாறு உள்ளது உள்ளபடி அறியமாட்டார்கள்”.
நாரதர் கூறுகிறார்:- “தர்ம நந்தனா! பிறப்பற்ற பகவான் ஸ்ரீமந் நாராயணனே தர்மங்கள் அனைத்திற்கும் மூலகாரணம். அந்த பகவான்தான் தக்ஷன் மகளான மூர்த்திக்கும், தர்ம தேவதைக்கும் தன் (பதினாறு கலைகளில்) ஓர் அம்சத்தை மட்டும் ஏற்று, திருவவதாரம் செய்து, பதரிகாச்ரமத்தில் உலக நன்மைக்காகத் தவம் செய்து கொண்டு இருக்கிறார். தர்மத்தைக் காக்கும் அணை போன்ற பகவானை வணங்கி, அவர் திருவாய் மலர்ந்தருளிய ஸநாதன தர்மத்தை உலகம் நன்மை அடையும் பொருட்டு இப்பொழுது சொல்கிறேன். (கேள்).
மன்னனே! பகவான் ஸ்ரீமந் நாராயணனே ஸகல வேத ஸ்வரூபன். அந்த வேதங்களை உணர்ந்த முனிவர்களின் ஸ்ம்ருதியும், பெரியோர்களின் ஆசாரமும், தர்மத்திற்கு மூலம். தர்மமாவது அந்தப் பகவானுடைய ஆராதனமே. எதனால் அந்தப் பகவான் அருள் புரிவானோ, அதுவே தர்மமாம். அத்தகைய தர்மத்தைக் கேட்டுணர்வதும், அதை அனுஷ்டிப்பதும் அவச்யம் செய்யவேண்டியதே. ப்ராணிகளுக்கு ஹிதம் செய்கையாகிற ஸத்யம், பிறர் துக்கம் பொறாமையாகிற தயை, உபவாஸம் முதலிய தவம், விவேகம், உள்ளிந்த்ரியமான மனத்தை அடக்குகை, வெளியிந்திரியங்களை அடக்குகை, மனோ (மனது), வாக் (சொல்), காயங்கள் (உடல்) மூன்றாலும் பிறர்க்கு உபத்ரவம் ( துன்பம், தொந்தரவு) செய்யாமை, தகாத காலங்களில் ஸ்த்ரீ ஸம்போகம் செய்யாமை, லோபம் (பேராசை) இல்லாமை, உரியபடி மந்த்ரஜபம் செய்தல், மனோ (மனது), வாக் (சொல்), காயங்கள் (உடல்) ஒத்திருக்கை, தெய்வாதீனமாய் நேரிட்ட அன்னாதிகளால் ஸந்தோஷ முற்றிருக்கை, எல்லாவற்றையும் பரப்ரஹ்ம ஸ்வரூபமென்று ஸமமாகப்பார்க்குந் தன்மையுடைய பெரியோர்களைப் பணிகை, ப்ரவ்ருத்தி கர்மங்களினின்று (ஸம்ஸாரத்தை வளர்க்கும் கர்மங்களிலிருந்து) மீளுகை, பயனற்ற கார்யங்களைச் செய்யலாகாதென்று நிரூபித்து நிர்ணயிக்கை, வீண்பேச்சுப் பேசாமல் மிதமாகப்பேசுகை, தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மாவின் ஸ்வரூபத்தை ஆராய்கை, ப்ராணிகளுக்கு உரியபடி அன்னாதிகளைக் கொடுக்கை, ஸமஸ்த பூதங்களிலும் ஆத்மாவும் பரமாத்மாவும் அமைந்திருக்கிறார்களென்கிற நினைவு, ஸமஸ்த பூதங்களும் தன்னைப்போன்றவையென்றும், பரப்ரஹ்ம ஸ்வரூபங்களென்றும் பாவிக்கை, மனுஷ்யர்களிடத்தில் அந்நினைவு எப்பொழுதும் மாறாமல் நிறைந்திருக்கை, பெரியோர்கள் நமக்கு “இவனே கதி” என்று பாவித்து வணங்குகிற பகவானுடைய குணங்களைக் கேட்கை, அவன் நாமங்களைக் கீர்த்தனம் செய்கை, அவன் ஸ்வரூப, ரூப, குண விபூதிகளை நினைக்கை, அவன் பாதங்களைப் பணிகை, அர்க்யம் - பாத்யம் முதலியன கொடுத்து அவனை ஆராதிக்கை, அவனை வணங்குகை, அவனுக்கு எல்லாவிதத்திலும் அனுகூலனாயிருக்கை. அவனிடத்தில் ஆத்ம ஸமர்ப்பணம் செய்கை, ஆகிய இம்முப்பதும் மனுஷ்யர்கள் அனைவரும் ஸாதாரணமாய் அனுஷ்டிக்கவேண்டிய மேலான தர்மமென்று கூறுகிறார்கள். இதனால், அனைவர்க்கும் அந்தராத்மாவான பகவான் ஸந்தோஷம் அடைவான். கர்ப்பாதானம் (கர்ப்பம் தரிப்பதற்காக செய்யப்படும் ஸம்ஸ்காரம் – சுத்தி செய்யும் கர்ம) முதலிய பதினாறு ஸம்ஸ்காரங்களும் (சுத்தி செய்யும் கர்ம) எவனுக்குத் தவறாமல் நடக்கின்றனவோ, அவன் த்விஜனென்று (பிறப்பினால் ஒரு பிறவியும் உபநயனம் என்கிற சடங்கினால் இரண்டாவது பிறவியும் பெறுவதால் அவன் இருபிறப்பாளன் – த்விஜன் – எனப்படுகிறான்) கூறப்படுவான். ப்ரஹ்மதேவன் ச்ருதி, ஸ்ம்ருதிகள் மூலமாய் இந்தப் பதினாறு ஸம்ஸ்காரங்கள் (சுத்தி செய்யும் கர்ம) எவனுக்கு உண்டென்று சொன்னானோ, அவனே த்விஜனாவான். மற்றவன், தானே அந்த ஸம்ஸ்காரங்களைப் பண்ணிக்கொள்ளினும், அவன் த்விஜனாகமாட்டான். குலத்தினாலும், கர்மத்தினாலும், பரிசுத்தர்களும் த்விஜர்களென்று வழங்கி வருகிறவர்களுமான ப்ராஹ்மணர் முதலிய மூன்று வர்ணத்தவர்களுக்கு யாகம், அத்யயனம், தானம் என்கிற இம்மூன்று கர்மங்கள் ஆச்ரமங்களுக்குரியபடி (ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ ஆச்ரமங்கள்) சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை அனுஷ்டிக்காத பக்ஷத்தில் அவர்கள் பதிதர்களாவார்கள் (தனது நிலையிலிருந்து தாழ்ந்தவன்). அக்னியுள்ளவர்களுக்கு, மூன்று கர்மங்களும் உண்டு. அதில்லாதவர்களுக்கு, இரண்டு கர்மங்களே. ப்ராஹ்மணனுக்கு, அத்யாபனம் (வேதம் கற்பித்தல்), யாஜனம் (யாகம் செய்வித்தல்), ப்ரதிக்ரஹம் (தானம் பெறுதல்) என்று மூன்று கர்மங்கள் ஜீவனார்த்தமாக (வாழ்க்கை நடத்துவதற்காக) ஏற்பட்டிருக்கின்றன. முன் சொன்ன மூன்று கர்மங்களை (யாகம், அத்யயனம், தானம்), அவச்யம் அனுஷ்டித்தேயாக வேண்டும். மற்றவை (வேதம் கற்பித்தல், யாகம் செய்வித்தல், தானம் பெறுதல்) ஜீவனத்திற்காக; ஆகையால், அவற்றில் நிர்ப்பந்தமில்லை (கட்டாயம் இல்லை). ஆகையால், ப்ராஹ்மணனுக்கு ஆறு கர்மங்கள். மற்றவர்களுக்கு ப்ரதிக்ரஹம், யாஜனம், அத்யாபனம் (வேதம் கற்பித்தல், யாகம் செய்வித்தல், தானம் பெறுதல்) என்கிற இம்மூன்று கர்மங்களும் கிடையாது.
ப்ராஹ்மணனுக்குப் பயிர் செய்கை, கோரக்ஷணம் (பசுக்களைக் காத்தல்) முதலியதும், யாசிக்காமல் கிடைப்பதும், தேசாந்தரங்களிற் (வேறு இடங்களில்) சென்று யாசித்துப் பெறுகையும், சிந்தின நெல்லுகளையும், நெற்கதிர்களையும் பொறுக்குகையும் ஆகிய இந்நான்கும் ஜீவனங்களாம். இவற்றில் முதலிலிருந்து ஒன்றைவிட ஒன்று மேற்பட்டிருக்கும். பயிர் செய்கை, கோரக்ஷணம் (பசுக்களைக் காத்தல்) முதலியவற்றைக் காட்டிலும், தேசாந்தரங்களிற் (வேறு இடங்களில்) சென்று யாசித்து, ஜீவிப்பது மேல். அதைக்காட்டிலும், யாசிக்காமல் கிடைப்பதைக் கொண்டு ஜீவிப்பது மேல். அதைக்காட்டிலும், சிந்தின நெல்லுகளையும், நெற்கதிர்களையும் பொறுக்கி, ஜீவிப்பதுமேல். கீழ்வர்ணத்திலுள்ளவன், ஆபத்தில்லாத காலத்தில் மேல் வர்ணத்திற்கு ஏற்பட்ட ஜீவனத்தைப் பற்றலாகாது. ஆபத்காலங்களில், க்ஷத்ரியனைத் தவிர மற்றவர் அனைவரும், நேர்ந்தபடி எல்லா ஜீவனங்களையும் கைப்பற்றலாம். ப்ராஹ்மண, க்ஷத்ரியர்களிருவரும் எப்படிப்பட்ட ஆபத்திலும் ருதம், அம்ருதம், ம்ருதம், ப்ரம்ருதம், ஸத்யாந்ருதம் இந்த ஜீவனங்களில் ஏதேனுமொன்றால் ஜீவிக்கலாமேயன்றி, எப்படிப்பட்ட கஷ்டத்திலும் ச்வ வ்ருத்தியால் (நாய் போன்று) ஜீவிக்கலாகாது. ருதமாவது, சிந்தின தான்யங்களைப் பொறுக்குகை. அம்ருதமாவது, தெய்வாதீனமாய் கிடைக்கும் த்ரவ்யம். ம்ருதமாவது, தினந்தோறும் யாசித்துப் பெறும் த்ரவ்யம். ப்ரம்ருதமாவது, பயிர் செய்கை. ஸத்யாந்ருதமாவது, வர்த்தகம் செய்கை. ச்வவ்ருத்தியாவது, நீச (தாழ்ந்த) ஸேவை. ப்ராஹ்மண, க்ஷத்ரியர்களிருவரும் நிந்தைக்கிடமான அந்த நீச ஸேவையை, ஸர்வ காலத்திலும் துறக்க வேண்டும். அந்த ப்ராஹ்மண, க்ஷத்ரியர்களிருவரும், ஸமஸ்த தேவதா ஸ்வரூபர்கள். ஆகையால், அவர்கள் அனைவர்க்கும் பூஜிக்கத்தகுந்தவர்கள்.
ஆதலால், அவர்கள் தமக்குக் கீழ்ப்பட்ட வர்ணங்களைப் பணிந்து, ஜீவிப்பது, நிந்தைக்கிடமாகையால், எப்பொழுதும் அவர்கள் அதைச் செய்யலாகாது. மன அடக்கமாகிற சமம், வெளியிந்த்ரியங்களின் அடக்கமாகிற தமம், உபவாஸம் முதலிய தவம், ஸ்நானாதி கர்மங்களால் உண்டாகும் சுத்தி, தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷித்திருக்கை, குளிர், வெப்பம் முதலியவற்றைப் பொறுக்குந்தன்மை, மனோ (மனது), வாக் (சொல்), காயங்கள் (உடல்) என்கிற மூன்று கரணங்களும் ஒத்திருக்கை, ஆத்ம - பரமாத்மாக்களின் உண்மையை ஆராய்ந்தறிகை, பிறர் துக்கம் பொறாமை, தன்னைப்பற்றினவர்களைக் கைவிடாத பகவானிடத்தில் மனவூக்கமுற்றிருக்கை, ஸமஸ்த பூதங்களுக்கும் ஹிதம் (நன்மை) செய்கை ஆகிய இவையெல்லாம் ப்ராஹ்மண குலம் என்பதை அறிவிக்கும் அடையாளங்கள். தன் வீட்டில் நுழைவதுபோல யுத்த பூமியில் நுழையும் திறமை, பிறரால் அவமதிக்கக் கூடாதிருக்கை, எப்படிப்பட்ட ஆபத்திலும் துக்கிக்காமை, பிறரை வெல்லுந்திறமை, லோபம் (பேராசை) இல்லாமை, தேஹ தர்மங்களான பசி, தாஹம், பிணி முதலியவற்றால் வருந்தாமை, பொறுமை, ப்ராஹ்மண குலத்தை அனுஸரித்திருக்கை, அனுக்ரஹம் செய்கை, ப்ரஜைகளைப் பாதுகாக்கை ஆகிய இவையெல்லாம் க்ஷத்ரியகுலம் என்பதை அறிவிக்கும் அடையாளங்கள்.
தேவதைகள், குருக்கள், பெரியோர்கள், பசுக்கள் இவர்களிடத்தில் பக்தி; தர்மம், அர்த்தம், காமம் இவற்றால் ஸந்தோஷமுற்றிருக்கை, பரலோகம் உண்டென்கிற நம்பிக்கை, பணம் ஸம்பாதிப்பதில் என்றும் மாறாமல் முயற்சி செய்கை, அதில் திறமை அமைந்திருக்கை ஆகிய இவையெல்லாம் வைச்ய குலமென்பதை அறிவிக்கும் அடையாளங்கள்.
தனக்கு மேற்பட்ட வர்ணத்தவர்களிடத்தில் வணக்கம், ஸ்நானாதிகளால் வரும் சுத்தி, தன் ஸ்வாமிக்குக் கபடமில்லாமல் பணி செய்கை, மந்தரமில்லாமல் கேவல நமஸ்காரத்தினால் யஜ்ஞங்களை (யாகங்களை) அனுஷ்டிக்கை, திருடாமை, பொய் பேசாமை, பசுக்களையும், ப்ராஹ்மணர்களையும் பாதுகாக்கை இவை நான்காவது வர்ணத்தவனுக்கான அடையாளங்கள்.
ஸ்த்ரீ தர்மம்:
பர்த்தாவுக்குச் (கணவனுக்கு) சுச்ரூஷை (பணிவிடை) செய்கை, அவன் மனத்திற்கு இனியளாயிருக்கை, அவனுடைய தந்தை, உடன் தோன்றல் முதலிய பந்துக்களிடத்தில் ப்ரீதியோடிருக்கை, அவனுக்காக நியமங்களை அனுஷ்டிக்கை ஆகிய இந்நான்கும் பதிவ்ரதைகளான பெண்கள் அவச்யமாய் அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்கள். இவையே அவர்களுக்கு அடையாளமாம். மற்றும், அவர்கள் வீட்டை மெழுகி, விளக்கிக் கோலமிட்டு, வீட்டை விட்டு வெளியில் எங்கும் போகாதிருந்து, பாத்ரங்கள், ஆடை ஆபரணங்கள் முதலியவற்றைச் சுத்தம் செய்து வைத்து, மற்றும் வீட்டிலுள்ள கருவிகளையும் சீர்திருத்தி, தாமும் ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து கொண்டு, கணவனுக்கு இஷ்டமான பலவகை இனிய பண்டங்களாலும் வணக்கத்தினாலும் மனம் முதலிய இந்திரியங்களின் அடக்கத்தினாலும், உண்மையும் ப்ரியமுமான பேச்சுக்களாலும், ப்ரீதியினாலும் உரிய காலங்களில் கணவனைப் பணிய வேண்டும். கிடைத்த அளவில் ஸந்தோஷமுற்று, அதை அனுபவிப்பதிலும் பேராசையின்றி, வேலைகளில் சோம்பாமல் பர்த்தாவுக்குச் சுச்ரூஷை (பணிவிடை) செய்கையே பெரிய தர்மமென்றுணர்ந்து எக்காலத்திலும் எல்லாரிடத்திலும் ப்ரியமும், உண்மையுமான பேச்சையே பேசுகின்றவர்களாகி எல்லாவற்றிலும் ஊக்கமுற்று, மஹாபாதகத்திற்கு (ப்ராஹ்மனனைக் கொல்லுதல், சுராபானம் செய்தல், திருடுதல், குரு பத்னியைப் புணர்தல், மேற்சொன்ன பாபங்கள் செய்தவனுடன் சேர்க்கை ஆகிய ஐந்தும் மஹாபாதகங்கள்) இடமில்லாத கணவனைப் பணிய வேண்டும். மஹாபாதகம் செய்திருப்பானாயின், அத்தகைய கணவனைப் பெண்டிர்கள் பணியலாகாது. அவன் சுத்தனாகும் வரையில் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஸ்ரீமஹாலஷ்மி பரமபுருஷனைப் பணிவது போலப் பர்த்தாவையே (கணவனையே) தெய்வமாகப் பாவித்து, அவனைப் பணிந்து வருவாளாயின், அவள் அப்பரம புருஷனோடொத்த உருவமுடைய கணவனுடன், ஸ்ரீமஹாலஷ்மி பரமபுருஷனோடு இருப்பது போல, ஸ்ரீவிஷ்ணுலோகத்தில் ஸந்தோஷமுற்றிருப்பாள்; மெல்ல மெல்ல, கணவனுடன் மோக்ஷத்தையும் பெறுவாள்.
அனுலோமஜமென்றும், ப்ரதிலோமஜமென்றும், ஸங்கரஜாதி (கலப்பு ஜாதி) இருவகையாயிருக்கும். கீழ் வர்ணத்தவனுக்கு, மேல் வர்ணத்தவளிடத்தில் பிறந்தவர்கள் ப்ரதிலோமஜர். மேல் வர்ணத்தவனுக்குக் கீழ்வர்ணத்தவளிடத்தில் பிறந்தவர்கள் அனுலோமஜர். ராஜனே! ப்ராஹ்மணர், க்ஷத்ரியர் முதலிய மனுஷ்யர்கள் அனைவர்க்கும், யுகங்கள் தோறும் பெரும்பாலும் அவரவர்கள் ஸ்வபாவங்களுக்குத் தகுந்தபடி தர்மங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அந்தத் தர்மமே, அவர்களுக்கு இவ்வுலகத்திலும், பரலோகத்திலும் ஸுகத்தை விளைக்குமென்று வேத வித்துக்களான மனு முதலிய ரிஷிகள் நிர்ணயித்திருக்கிறார்கள். தங்கள் தங்கள் வர்ண, ஆச்ரமங்களுக்கு உரியபடி ஏற்பட்ட அத்யாபனம் முதலிய வ்ருத்திகளால் ஜீவித்துக்கொண்டு, யாகம் முதலிய தங்கள் கர்மத்தை அனுஷ்டித்து வருவார்களாயின், ஸத்வாதி குணங்களால் ஏற்பட்ட புண்ய, பாப, ரூப கர்மபந்தத்தைத் துறந்து, க்ரமத்தில் ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்றிருக்கையாகிற மோக்ஷத்தைப் பெறுவார்கள்.
ஒரு நிலத்தில் அடிக்கடி விதைத்துப் பயிரிட்டுக் கொண்டிருப்பானாயின், அந்நிலம் வீர்யமற்று, மீளவும் பயிர் செய்ய உபயோகப்படாது. அதில் விதைத்த விதையும், முளைக்காமல் மண்ணோடு மண்ணாக மக்கி, மணங்குலைந்து போகும். அவ்வாறே காமங்களுக்கிடமான மனம், அடிக்கடி காமங்களை வேண்டிய மட்டும் அனுபவிக்கையால், அவற்றில் விருப்பம் அற்றுப்போமே அன்றி, நெய்த்துளிகளால் அக்னி மேன்மேலும் வளர்ந்தெரிவது போல, அவற்றில் மேன்மேலும் விருப்பம் வளரப்பெறாது. மற்றும், எரிகிற அக்னி, நெய்யை வெள்ளம் வெள்ளமாகக் கொட்டினால் அணையுமேயன்றி, நெய்யைத் துளித்துளியாகச் சொட்டவிட்டால் எவ்வாறு அணையாதோ, அவ்வாறே மனம் காமங்களைச் சிறுச்சிறிது அனுபவித்தால் அவற்றில் விருப்பம் தீரப்பெறாது. வேண்டிய அளவாக அடிக்கடி அனுபவித்தால், அவ்விருப்பம் தீரப்பெறும்.
“இவன் இன்ன வர்ணத்தவன்” என்று அறியுமாறு எவனுக்கு எந்த லக்ஷணம் (அடையாளம்) சொல்லப்பட்டதோ, அந்த லக்ஷணம் (அடையாளம்) வேறு வர்ணத்தவனிடத்தில் புலப்படுமாயின், அவனை அந்த அடையாளத்தைக் கொண்டு அந்த வர்ணத்தவனாகவே நிரூபிக்கலாம். ப்ராம்ஹண வர்ணத்திற்குச் சொன்ன சம (மனதை அடக்குதல்) - தம (இந்த்ரியங்களை அடக்குதல்) முதலிய அடையாளங்கள் மற்ற வர்ணத்தவர்களில் எவர்க்கேனும் இருக்குமாயினும், அவர்களை ப்ராஹ்மண வர்ணத்தவர்களாக நிரூபிக்கலாம்.
பதினொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.