ஶ்ரீமத் பாகவதம் - 165

ஏழாவது ஸ்கந்தம் - பன்னிரண்டாவது அத்தியாயம்

(ப்ரஹ்மசாரி, வானப்ரஸ்தன் இவர்களுக்குள்ள விசேஷ தர்மங்களையும், ப்ரஹ்மசாரி முதலிய நான்கு ஆச்ரமத்தவர்களுக்குரிய ஸாதாரண தர்மங்களையும் கூறுதல்)

ஸ்ரீ நாரதர் சொல்லுகிறார்:- ப்ரஹ்மசாரி மனத்தையும், மற்ற இந்த்ரியங்களையும் அடக்கி, தாஸன் போல வணக்கமுற்று, குருவுக்கு ஹிதம் (நன்மை) செய்துகொண்டு, அவனிடத்தில் மிகுந்த ப்ரேமத்துடன் (அன்புடன்) அக்குருவின் க்ருஹத்தில் வாஸம் செய்யவேண்டும். மற்றும், அவன் இரண்டு ஸந்திகளிலும் மெளனத்துடன் மனவூக்கமுற்று, காயத்ரியை ஜபித்து, காலை - மாலைகளில் 

(குறிப்பு: காலை, மாலை என்பதோடு “ச” என்கிற இணைப்பெழுத்து இருப்பதால், நடுப்பகலில் செய்யவேண்டிய மாத்தியான்னிகமும் செய்ய வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும்)

குரு, அக்னி, ஸூர்யன், பகவான் இவர்களை உபாஸிக்க வேண்டும். குரு அழைக்கும் பொழுது ஸித்தமாயிருந்து, மனவூக்கத்துடன் அவரிடத்தில் வேதங்களை ஓதவேண்டும். தினந்தோறும், வேதமோதத் தொடங்கும் பொழுதும், முடிக்கும்பொழுதும் குருவின் பாதங்களைத் தலையால் வணங்க வேண்டும். கையில் பவித்ரம் அணிந்து, மேகலை (தர்ப்ப புல்லாலான இடுப்புக் கயிறு - முஜ்ஞை), அஜினம் (மான் தோல்), வஸ்த்ரம், ஜடை (சிகை – குடுமி), தண்டம் (பலாச மரத்தின் குச்சி), கமண்டலு (தீர்த்தம் வைத்திருக்கும் பாத்ரம்), உபவீதம் (பூணூல்) இவற்றைச் சாஸ்த்ரங்களில் சொல்லியபடி தரிக்க வேண்டும். காலை - மாலைகளில் பிக்ஷையெடுக்க வேண்டும். அந்தப் பிக்ஷையில் கிடைத்த அன்னத்தை, குருவின் எதிரில் கொண்டு வந்து வைக்க வேண்டும். குரு அனுமதி கொடுப்பாராயின், அவ்வன்னத்தைப் புசிக்கலாம். ஒருகால் அனுமதி கொடாது இருப்பாராயின், உபவாஸமிருக்க வேண்டும். அவர், மனத்தைப் பரீக்ஷிக்கும் பொருட்டு, ஒருகால் அனுமதி கொடாது இருப்பதும் இருக்கலாம். மிதமாகப் புசித்து, நல்லியற்கையும், நல்லொழுக்கமும் அமைந்து சோம்பலின்றிக் குரு உபதேசித்த அர்த்தங்களில் விச்வாஸமுற்று, இந்திரியங்களை வென்றிருக்க வேண்டும். 

ஸ்த்ரீகளிடத்திலாவது, ஸ்த்ரீகளுக்குட்பட்ட புருஷர்களிடத்திலாவது, தனக்கு அவச்யமான கார்யம் எவ்வளவோ அவ்வளவு மாத்ரம் பேசலாமேயன்றி அதிகமாய்ப் பேசலாகாது. ஸ்த்ரீ விஷயமான பேச்சைத் துறக்க வேண்டும். க்ருஹஸ்தனுக்கே அது கூடுமன்றி, க்ருஹஸ்தனாகாமல் வேதமோதுகையாகிற பெரிய வ்ரதத்தில் இழிந்து, ஸ்த்ரீ ஸம்போகம் (பெண்ணுடன் புணருதல்) முதலியவற்றைத் துறந்திருக்க வேண்டியவனாகிய ப்ரஹ்மசாரிக்கு அது கூடாது. வாயால் பேசுவது மாத்ரத்தில் என்ன தோஷமென்று நினைக்கலாகாது. இந்த்ரியங்கள் மிகுந்த பலமுடையவை. அவை மனவூக்கமுடைய ஸன்யாஸியின் மனத்தையும் பறித்துக் கொண்டு போய் விடும். ஆகையால், ஸ்த்ரீ விஷயமான வார்த்தையை எப்பொழுதும் நினைக்கலாகாது. யௌவன வயதுடையவன், குருபத்னிகளைக் கொண்டாவது, யௌவன வயதுடைய மற்ற ஸ்த்ரீகளைக் கொண்டாவது தனக்குத் தலை வாருதல், உடம்பு தேய்த்தல், ஸ்நானம் செய்தல், எண்ணெய் தேய்த்தல் முதலிய கார்யங்களைச் செய்வித்துக் கொள்ளலாகாது. மடந்தைகள் அக்னியைப் போன்றவர்கள். புருஷன் நெய்க்குடம் போன்றவன். ஆகையால், புருஷன் தன் வயிற்றிற் பிறந்த பெண்ணையும் கூட ஏகாந்தத்தில் துறக்க வேண்டும். மற்ற காலங்களில், அவர்கள் இட்ட கார்யத்தை மாத்ரம் செய்ய வேண்டும். தன்னையே ஆத்மாவாக நினைக்கும்படி செய்வதாகிய இச்சரீரத்தை, ஈச்வரன் எதுவரையில் கார்யங்களைச் செய்யுந்திறமை அமைந்திருக்கும்படி செய்கிறானோ, அதுவரையில்  “நான் தேவன், மனுஷ்யன்” என்னும் பேத புத்தி தொடர்ந்து வரும். ஜீவனுக்கு அதனால் புருஷார்த்தமான மோக்ஷம் கைகூடாது. ஆகையால், அந்தப் பேத புத்தி மாறாதிருக்கும் வரையில், தனக்கு ஏற்பட்ட வர்ணாச்ரம தர்மங்களினின்று மீளலாகாது. 

வர்ணாச்ரம தர்மங்களைத் தவறாமல் அனுஷ்டித்துக்கொண்டு வருவானாயின், அதனால் பேத புத்திக்கிடமான அஜ்ஞானம் நீங்கி, ஆத்ம - பரமாத்ம விவேகாதிகள் (பகுத்தறிவு) உண்டாகப் பெற்றுக் கடைசியில் மோக்ஷத்தை அடைவான். ஆகையால், தேஹத்தில் திறமையுள்ள வரையில் வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும். ப்ரஹ்மசாரிக்குச் சொன்ன நல்லியற்கை, நல்லொழுக்கம் முதலிய இவற்றையெல்லாம் பரப்ரஹ்ம உபாஸனமாகிற வ்ரதத்திலிருக்கிற ஸன்யாஸியும், க்ருஹஸ்தனும் அவச்யம் அனுஷ்டிக்க வேண்டும். க்ருஹஸ்தனுக்கு, ஸத்ரீ ஸம்போகம் (பெண்ணுடன் சேர்க்கை) இல்லாமையாகிற ப்ரஹ்மசர்யம் ஒரு காலத்தில் உண்டு; ஒரு காலத்தில் இல்லை. க்ருஹஸ்தன், ருதுகாலத்தில் (மாதவிடாயிலிருந்து 16 இரவுகள் ருது காலம்; அது கர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்) ஸ்த்ரீ ஸம்போகம் (மனைவியுடன் சேர்க்கை) செய்யலாமாகையால், அக்காலத்தில் அவனுக்கு அந்த ப்ரஹ்மசர்யம் கிடையாது. 

இந்த ப்ரஹ்மசர்யம், அனுஷ்டிக்க முடியாதாகையால் இதைக் குரு வ்ருத்தி (கடினமான செயல்) என்று சொல்லுவார்கள். வ்ரதத்தை அனுஷ்டிக்கும் க்ருஹஸ்தர்கள், கண்ணுக்கு மையிடுவது, எண்ணெய் தேய்த்துக்கொள்வது, உடம்புக்கு எண்ணெய் தடவிப் பிடித்துக்கொள்வது, சுவர் முதலிய இடங்களில் ஸ்த்ரீ சித்ரம் எழுதுவது, மாம்ஸ (அசைவ உணவு), மத்யங்களை (கள் முதலியவற்றை) உபயோகப்படுத்துவது, பூச்சூடுவது, சந்தனம் பூசுவது, ஆடை ஆபரணம் முதலியவற்றால் அலங்கரித்துக் கொள்வது ஆகிய இவற்றையெல்லாம் துறக்க வேண்டும். ப்ராஹ்மண, க்ஷத்ரிய வைச்யர்களென்கிற மூன்று வர்ணத்தவர்களும் இவ்வாறு குருகுல வாஸம் செய்து அங்கங்களோடும் (சிக்ஷா – வேதத்தின் பதங்களின் வரிசையையும், ஸ்வரத்தையும் நிர்ணயிக்கும் சாஸ்த்ரம், வ்யாகரணம் – வேதத்தின் பதங்கள் எந்த அடிப்படை வினைச்சொல்லிலிருந்து ஏற்பட்டது என்பதை நிர்ணயிக்கும் சாஸ்த்ரம், சந்தஸ் – ஒவ்வொரு வேத மந்த்ரத்திலும் இருக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் சாஸ்த்ரம், நிருக்தம் – வேதங்களில் இருக்கும் பதங்களின் அர்த்தத்தை நிரூபிக்கும் சாஸ்த்ரம், ஜ்யோதிஷம் – வேதத்தில் சொல்லப்பட்ட யாகம் முதலிய கர்மங்களைச் செய்வதற்குத் தகுந்ததும் சுபமானதுமான காலங்களை நிர்ணயிக்கும் சாஸ்த்ரம், கல்பம் – யாகங்களைச் செய்யக்கூடிய முறைகளைச் சொல்லக்கூடிய சாஸ்த்ரம் என்று ஆறு அங்கங்கள்) உபநிஷத்துக்களோடு கூடின வேதங்களைத் தன் புத்தி பலம் உள்ள வரையில் அத்யயனம் செய்து, அவற்றின் பொருள்களையும் அறிந்து, விரதத்தை முடித்துக்கொண்டு, சக்தி உள்ள வரையில் குருவுக்கு இஷ்டமானவற்றைக் கொடுத்து, குருவினால் அனுமதி செய்யப் பெற்று, க்ருஹஸ்த ஆச்ரமத்தையாவது, ஸன்யாஸ ஆச்ரமத்தையாவது கைப்பற்ற வேண்டும். 

க்ருஹஸ்தாச்ரமம் பெற்றவன், அதினின்று ஸன்யாஸ ஆச்ரமத்தையாவது, வானப்ரஸ்த ஆச்ரமத்தையாவது கைப்பற்றலாம். அல்லது, அந்த க்ருஹஸ்த ஆச்ரமத்திலேயாவது ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலேயாவது இருக்கலாம். ஈச்வரன், அக்னியினிடத்திலும் குருவினிடத்திலும், தன்னிடத்திலும், ஸமஸ்த பூதங்களிடத்திலும் உட்புகுந்து நியமித்துக் கொண்டிருக்கிறானென்றும், ஸமஸ்த பூதங்களும் அவனிடத்தில் இருக்கின்றனவென்றும், ஆயினும் அவன் அவற்றின் தோஷங்கள் தீண்டப்பெறாத பரிசுத்தனென்றும், அவனுடைய உண்மையை ஆராய்ந்தறிய வேண்டும். ப்ரஹ்மசாரியாவது, க்ருஹஸ்தனாவது, ஸன்யாஸியாவது, வானப்ரஸ்தனாவது இவ்வாறு ஈச்வரனுடைய உண்மையை அறிந்து தனக்கு ஏற்பட்ட ஆச்ரம தர்மங்களை அனுஷ்டித்து வருவானாயின், தத்வத்ரய (ஜீவாத்மா, அசேதனம், ஈச்வரன் என்கிற மூன்று தத்வங்களின்) ஜ்ஞானம் உண்டாகப் பெற்று, பரப்ரஹ்மத்தை அடைவான். 

முனிவர்களால் புகழப்பட்ட வானப்ரஸ்தனுடைய தர்மங்களைச் சொல்லுகிறேன். இவ்வுலகத்தில் இந்த தர்மங்களை அனுஷ்டிக்கின்ற முனிவன், ரிஷிகள், அடையத்தகுந்த ஸ்ரீவிஷ்ணுலோகத்தைப் பெறுவார்கள். பயிர் செய்து விளைந்த சம்பா தான்யம் முதலியவற்றின் அன்னத்தையாவது, பக்வமாகாத காய், கிழங்கு முதலியவற்றையாவது, அக்னியில் பக்வஞ்செய்த பச்சைக்காய் முதலியவற்றையாவது புசிக்கலாகாது. தானே முதிர்ந்து, உதிர்ந்து, ஸூர்ய கிரணங்களால் உலர்ந்த பழம் முதலியவற்றையே கொண்டு வந்து புசிக்கலாம். காட்டில் விளையும் செந்நெல் முதலிய தான்யங்களைக் கொண்டு வந்து, சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட காலங்களில் சரு (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற த்ரவ்யம்), புரோடாசங்களைப் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் மாவினால் ஆன பண்டம்) பக்வஞ்செய்து, ஹோமம் செய்யவேண்டும். புதிய அன்னம் முதலியவை கிடைக்குமாயின், பழைய அன்னாதிகளைத் துறக்க வேண்டும். அக்னிகளைப் பாதுகாக்கும் பொருட்டே பர்ணசாலை ஏற்படுத்திக் கொள்ளலாம். அல்லது, பர்வத (மலை) குஹையையாவது பற்றவேண்டும். தான் பனி, காற்று, அக்னி, மழை, வெயில் இவற்றைப் பொறுத்துக்கொண்டு வெளியிலேயே இருக்க வேண்டும், ஜடை (சடை முடி) தரித்து, தலைமயிர், உடம்பு மயிர், நகம், தாடி, மீசை இவற்றையும் உடம்பழுக்கையும் கழிக்காமல் கமண்டலு, மான் தோல், தண்டம், மரவுரி முதலியவற்றையும், ஸ்ருக்கு, ஸ்ருவம் (அக்னியில் ஹோமம் செய்யப் பயன்படும் மரத்தால் ஆன கரண்டி போன்ற கருவிகள்) முதலிய கருவிகளையும் தரித்துக்கொண்டிருக்க வேண்டும். 

வருத்தங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு, இந்த நியமத்தினின்று புத்தி மாறாதபடி, ஊக்கத்துடன் பன்னிரண்டு வர்ஷங்களாவது, எட்டு வர்ஷங்களாவது, நான்கு வர்ஷங்களாவது, இரண்டு வர்ஷங்களாவது, ஒரு வர்ஷமாவது இந்நியமங்களை அனுஷ்டித்த பின்பு, வ்யாதிகளாலாவது, கிழத்தனத்தினாலாவது, தன் தர்மங்களை அனுஷ்டிக்கவும், வேதாந்த விசாரம் செய்யவும், ஸன்யாஸாச்ரமத்தைக் கைப்பற்றி நடத்தவும் சக்தியற்றிருப்பானாயின், அப்பொழுது உபவாஸம் முதலிய வ்ரதங்களை அநுஷ்டிக்க வேண்டும். அக்னிகளை ஆத்மஸமாரோபணம் (தன்னில் அர்ப்பணம்) செய்து அஹங்கார (நான்) மமகாரங்களைத் (எனது என்ற எண்ணங்களைத்) துறந்து, பஞ்ச பூதங்களின் ஸமுதாய ரூபமான சரீரம், இந்திரியங்கள் முதலியவற்றை அவ்வவற்றின் காரணத்தில் மறைந்ததாக அனுஸந்திக்க வேண்டும். சரீரத்திலுள்ள ரந்த்ரங்கள் (த்வாரங்கள்) எல்லாம் ஆகாயத்திலும், ச்வாஸம் (மூச்சுக்காற்று) முதலிய ப்ராணன்கள் வாயுவிலும், உஷ்ணம் தேஜஸ்ஸிலும், ரக்தம், ச்லேஷ்மம் (சளி), மூத்ரம் முதலியவை ஜலத்திலும், எலும்பு, மாம்ஸம் முதலியவை பூமியிலும், மறைந்தனவாக பாவிக்க வேண்டும். 

எது எதினின்று உண்டாயிற்றோ, அது அதன் காரணமான அதில் மறைந்ததென்று பாவிக்கவேண்டும். வாகிந்தரியமும் (நாக்கு), அதன் கார்யமான பேச்சும், அக்னி தேவனிடத்திலும், பாணீந்த்ரியமும் (கை) அதன் வியாபாரமும் இந்த்ரனிடத்திலும், பாதேந்த்ரியமும் (கால்) அதன் வ்யாபாரமான கதியும் கால ஸ்வரூபனான விஷ்ணுவினிடத்திலும், உபஸ்தேந்த்ரியமும் (பிறப்பு உறுப்பு) அதன் வ்யாபாரமான ஸம்போகமும் ப்ரஜாபதியிடத்திலும், பாயுவென்கிற (ஆசன வாய்) இந்திரியம் தன் வியாபாரமான மலவிஸர்க்கத்துடன் ம்ருத்யுவிடத்திலும், ச்ரோத்ரேந்தரியம் (காது) தன் விஷயமான சப்தத்துடன் திக்கிலும், த்வகிந்தரியம் (தோல்) தன் விஷயமான ஸ்பர்சத்துடன் வாயுவிடத்திலும், சக்ஷுரிந்தரியம் (கண்) தன் விஷயமான ரூபத்துடன் ஸூர்யனிடத்திலும், ரஸனேந்த்ரியம் (சுவை – நாக்கு) தன் விஷயமான ரஸத்துடன் வருணனிடத்திலும், க்ராணேந்திரியம் (மூக்கு) தன் விஷயமான கந்தத்துடன் அச்வி தேவதைகளிடத்திலும், மனம் தன் விஷயமான மனோரதங்களுடன் சந்த்ரனிடத்திலும், புத்தி தன் விஷயங்களோடு ப்ரஹ்மதேவனிடத்திலும், அஹங்காரம் தன் கார்யமான தேஹாத்மாபிமானாதிகளுடன் ருத்ரனிடத்திலும், சித்தம் ஸத்வமென்கிற தன் வியாபாரத்துடன் க்ஷேத்ரஜ்ஞனிடத்திலும் (ஜீவனிடத்திலும்), ஸாத்விக அஹங்காரம் தன் கார்யமான இந்திரியங்களுடன் தன் காரணமான மஹத் தத்வத்திலும், பூமி ஜலத்திலும், ஜலம் தேஜஸ்ஸிலும், தேஜஸ்ஸு வாயுவிலும், வாயு ஆகாசத்திலும், ஆகாசம் தாமஸ அஹங்காரத்திலும், தாமஸ அஹங்காரம் மஹத்தத்வத்திலும், மஹத்தத்வம் அவ்யக்தமென்கிற ப்ரதானத்திலும் (மூலப்ரக்ருதியிலும்), அந்த ப்ரதானம் பரமாத்ம ஸ்வரூபனான ஜீவாத்மாவினிடத்திலும் ஸம்பந்தித்தனவாகப் பாவிக்க வேண்டும். இவ்வாறு  மிகுந்திருக்கிற ஜீவன், கேவல ஜ்ஞான ஸ்வரூபனென்றும், பரமாத்மாவுக்குச் சரீரமாகி, அவனால் நியமிக்கப்பட்டிருப்பவனாகையால் பரமாத்ம ஸ்வரூபனென்றும் அறிந்து தன்னிடத்தில் ஜாதி, குணம் முதலிய அபிமானமற்றுக் கட்டைகளையெல்லாம் எரித்த பின்பு அக்னி ஓய்வது போல, ஓயந்திருக்க வேண்டும். 

பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை