புதன், 29 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 166

ஏழாவது ஸ்கந்தம் - பதிமூன்றாவது அத்தியாயம்

(ஸன்யாஸியின் தர்மங்களையும், ப்ரஹ்லாதனுக்கும் – அஜகர வ்ரதத்திலிருந்த (மலைப்பாம்பைப் போன்று கிடைத்ததைக் கொண்டு ஜீவிக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றும்) முனிவருக்கும் நேர்ந்த ஸம்வாதத்தையும் கூறுதல்)

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- வானப்ரஸ்தன், தனக்கு ஏற்பட்ட நியமங்களை அனுஷ்டித்தபின்பு, வேறு ஆச்ரம தர்மங்களை அனுஷ்டிக்க வல்லனாயிருப்பானாயின், இவ்வாறு அனுஸந்தித்துத் தேஹத்தை மாத்ரம் மிகுத்திக் கொண்டு, தேஹத்தைத் தொடர்ந்த மற்ற எல்லாவற்றையும் துறந்து, ஸன்யாஸ ஆச்ரமத்தைக் கைப்பற்றி, ஒரு க்ராமத்தில் ஒருநாளுக்கு மேல் தங்காமல், எதிலும் விருப்பின்றி, பூமியில் ஸஞ்சரிக்க வேண்டும். இந்த ஸன்யாஸி, துறக்கப்பட்டவைகளில் எதையேனுமொன்றைக் கைப்பற்றுவானாயின், கௌபீனம் (கோவணம்), அரையிலுடுக்கும் வஸ்த்ரம் (இடுப்பில் உடுத்திக்கொள்ளும் துணி) இவற்றை மாத்ரமே கைப்பற்றலாம். ஆபத்தில்லாத ஸமயத்தில், த்ரிதண்டம், கமண்டலு, உபவீதம், அரை ஞாண் இவை தவிர மற்ற எதையும் கைப்பற்றலாகாது. குளிர், காற்று முதலியவற்றைப் பொறுக்க முடியாத ஆபத்காலத்தில், போர்வை முதலியவற்றை மாத்ரமே அங்கீகரிக்கலாம். எங்கும் நியதமாக வாசம் செய்யாமல் பிக்ஷையெடுத்து (பிச்சை எடுத்து) ஜீவித்துக்கொண்டு ஆத்ம அனுபவத்தினால் (தனது ஆத்மா மற்றும் பரமாத்ம த்யானத்தினால்)  ஸந்தோஷமுற்றுத் தனியனாகவே திரிய வேண்டும். ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனாகி, கோபமின்றி, ஸ்ரீமந் நாராயணனே ப்ராப்யனும் (அடையப்பட வேண்டியவனும்), ப்ராபகனும் (அடைவதற்கு வழியும்), ஆதாரமும் (காப்பவனும்) என்னும் மனவுறுதியுற்று, சேதனா சேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), ஸ்வரூபத்தினாலும், ஸ்வபாவத்தினாலும் விகாரமற்றவனுமாகிய (மாறுபாடு இல்லாதவனும்), பரமாத்மாவினிடத்தில் இந்த ஜகத்தெல்லாம் இருப்பதாகவும், பரப்ரஹ்மமென்று ஓதப்படுகிற அந்த பரமாத்மா சேதனா சேதன ரூபமான இந்த ஜகத்தில் எங்கும் அந்தராத்மாவாய் இருப்பதாகவும் பாவிக்க வேண்டும். காலை, மாலைகளில் தேஹத்தைக்காட்டிலும் வேறுபட்ட ஆத்மஸ்வரூபத்தை உணர்ந்த ஸன்யாஸி, பரமாத்ம ஸ்வரூபத்தை ஆராயவேண்டும். ஸ்வப்ன அவஸ்தையில் (கனவு நிலையில்), தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவின் தோற்றத்தை ஆராய்ந்து, அப்பொழுது பகவானே விசித்ரமான மார்க்கங்களையும், தங்களையும் மற்றும் பலவகையான வஸ்துக்களையும் படைத்து, அனுபவிப்பிக்கிறான் என்பதையும் ஆராய்ந்தறிய வேண்டும். ஸம்ஸார பந்த, மோக்ஷங்கள் பகவானுடைய ஸங்கல்பத்தினால் ஏற்படுகின்றவைகளேயன்றி, அவை ஜீவனுக்கு இயற்கையிலே ஏற்பட்டவை அன்றென்றும் அனுஸந்திக்க வேண்டும். ஸம்ஸாரிகள், தப்பாமல் நேர வேண்டிய மரணத்தை எவ்வாறு விரும்பமாட்டார்களோ, அவ்வாறே ஸன்யாஸி நிலையற்றதான ஜீவிதத்தை அபிநந்திக்கலாகாது (விரும்பி மகிழ்ச்சி அடையக்கூடாது). ப்ராணிகளின் உத்பத்தி, விநாசங்களுக்குக் (அழிவுக்குக்) காரணமான காலத்தின் கதியையே எதிர்பார்க்கவேண்டும். கள்ளப் பொய் நூல்களில் (தவறான விஷயங்களைக் கூறும் புத்தகங்களில்) மனம் செலுத்தலாகாது. ஜீவனோபாயமாக எந்த வ்ருத்தியையும் அங்கீகரிக்கலாகாது. ஜல்பம் (இருவர் வாதம் செய்யும் போது, ஒவ்வொருவனும் தன் பக்ஷத்திற்கு ஸாதகமானவற்றையும், எதிரி பக்ஷத்தில் தோஷங்களையும் சொல்லி, வெற்றி அடைய வேண்டும் என்று செய்யப்படும் வாதம் ஜல்பம் எனப்படும்), விதண்டை (தன் பக்ஷத்தை ஸ்தாபிக்காமல், எதிரி பக்ஷத்தைக் கண்டனம் மாத்ரம் செய்யும் வாதத்திற்கு விதண்டை என்று பெயர்) முதலியவற்றிற்கிடமான தர்க்கங்களைத் துறக்க வேண்டும். ஆக்ரஹத்துடன் (பிடிவாதத்துடன்) ஒரு பக்ஷத்தையும் மனத்தில் ஏற்றுக் கொள்ளலாகாது. க்யாதி, லாபாதிகளை (புகழ், ப்ரயோஜனம் முதலியவற்றை) விரும்பி சிஷ்யர்களைச் சேர்த்துக் கொள்ளலாகாது. பல க்ரந்தங்களைப் படிக்கலாகாது. பிறர்க்குப் படிப்பிக்கையும் கூடாது. மடாதிபதியாயிருக்கை முதலிய ஆரம்பங்களைச் செய்யலாகாது. வெளியிந்திரியங்களையும், உள்ளிந்திரியத்தையும் அடக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஸன்யாஸாச்ரமம் பெரும்பாலும் தர்ம அனுஷ்டானத்திற்காக (கர்மங்களைச் செய்வதற்காக) ஏற்பட்டதன்று. அதில், ஜ்ஞானமே முக்யம். ஆகையால், தர்மங்களைச் செய்தாலும், செய்யலாம்; துறந்தாலும் துறக்கலாம். ஸன்யாஸ ஆச்ரமத்திலிருப்பவன், ஜ்ஞான ஹீனனாயிருப்பானாயின் (ஆத்ம பரமாத்ம விஷயங்களில் அறிவு அற்று இருப்பானேயாகில்), தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஜ்ஞானமுடையவன், அதைத் துறக்கலாம். ஜ்ஞானமுடையவனும், ஜ்ஞானயோகத்திற்குத் தடையாகாது இருக்குமாயின், அதை அனுஷ்டிக்கலாம். தடை செய்யுமாயின், அதைத் துறக்க வேண்டும். உபவாஸம் முதலிய வ்ரதங்களை அனுஷ்டிப்பானாயின், அவை தேஹத்திற்குத் தௌர்ப்பல்யத்தை (சக்தி குறைவை) விளைத்து, யோகத்தைக் கெடுக்குமாகையால், அத்தகைய தர்மங்களை ஜ்ஞானயோகத்தையே முக்யமாகக் கொண்ட ஸன்யாஸி அனுஷ்டிக்கலாகாது. மற்றும், ஸன்யாஸி தர்மங்களால் (கர்மங்களால்) ஸாதிக்க வேண்டிய இஹ (இவ்வுலக), பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகானுபவங்களில் விருப்பமற்றவன். அதர்மம் போல தர்மமும் இஹ (இவ்வுலக), பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகங்கள் மூலமாய் மோக்ஷத்தைத் தடுக்குமாகையால், அவன் பெரும்பாலும் தர்ம அதர்மங்களை ஸமமாக நினைத்திருக்க வேண்டும். தனக்கு ஜ்ஞானம் உண்டென்பதை அறிவிக்கும் அடையாளங்களையெல்லாம் மறைத்துக்கொண்டு, தன் ப்ரயோஜனத்தையும் பிறர்க்கு அறிவிக்காமல், பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தையே த்யானித்துக்கொண்டு பித்தம் பிடித்தவன்  போலும், ஒன்றும் அறியாத சிறுவனைப் போலவும் இருக்க வேண்டும். 

தான் நன்றாக பேசவல்ல பண்டிதன் ஆயினும், தன்னைப் பிறர் ஊமை என்று நினைக்கும்படி காண்பிக்கவேண்டும். தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவை ஆராய்ந்து, பரமாத்ம த்யானத்திலேயே ஊக்கமுற்றிருக்கவேண்டும். ஞானியாயிருப்பவன், தன் மாஹாத்ம்யத்தை வெளியிடாதிருக்க வேண்டுமென்கிற இவ்விஷயத்தில் த்ருஷ்டாந்தமாக (உதாரணமாக) ப்ரஹ்லாதனுக்கும் அஜகர வ்ரதத்திலிருந்த (மலைப்பாம்பைப் போன்று கிடைத்ததைக் கொண்டு ஜீவிக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றும்) ஒரு முனிவர்க்கும் நடந்த ஸம்வாதமாகிற (உரையாடலாகிற) பழையதான இவ்விதிஹாஸத்தைச் சொல்லுகிறார்கள். 

அஜகர வ்ரதத்திலிருக்கின்ற (மலைப்பாம்பைப் போன்று கிடைத்ததைக் கொண்டு ஜீவிக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றும்) அம்முனிவர், ஸஹ்ய பர்வதத்தின் (மலையின்) தாழ்வரையில், காவேரியின் கரையில், வெறுந்தரையில் படுத்து, உடம்பெல்லாம் புழுதி படிந்து, நிர்மலமான தேஹத்தின் ஒளி மறைந்திருக்கையில், சில மந்திரிகளோடு கூடி, உலகங்களின் உண்மையை அறிய விரும்பித் திரிகின்ற பகவத் பக்தனான ப்ரஹ்லாதன், அம்முனிவரைக் கண்டான். செயல், ஆகாரம் (உருவம்), வாக்கு, அடையாளங்கள், வர்ணாச்ரமங்கள் இவை முதலியவற்றால் இன்னவரென்றும் இன்னவரல்லவென்றும் ஜனங்கள் அவரை நிச்சயித்து அறிய முடியாது. மஹாபாகவதனான ப்ரஹ்லாதன், அவருடைய பாதங்களைத் தன் சிரத்தினால் ஸ்பர்சித்து, நமஸ்காரம் செய்து, விதிப்படி பூஜித்து அவரது உண்மையை அறிய விரும்பி, மேல் வருமாறு வினவினான்.

ப்ரஹலாதன் சொல்லுகிறான்:- ப்ரயத்னம் (முயற்சி) செய்து, போகங்களை அனுபவித்துக் கொண்டு, தேஹ போஷணம் (சரீரத்தை வளர்ப்பது) செய்பவனுடைய தேஹம்போல், உம்முடைய தேஹம் பருத்திருக்கின்றது. இவ்வுலகத்தில் முயற்சி செய்பவர்களுக்கே பணம் கிடைக்கும். பணமுள்ளவர்களுக்கே போகங்கள் (அனுபவங்கள்) நேரும். நீர் ஒரு முயற்சியில்லாதிருக்கின்றீர். உமக்குப் பணம் கிடைக்க ப்ரஸக்தியில்லை (வாய்ப்பே இல்லை). போகங்களுக்கு இடமில்லை. போகங்களை அனுபவிப்பவர்கள் சரீரமே பருத்திருக்கும். போகமில்லையாயின், சரீரம் இளைத்துப்போகும். உமக்குப் போகமில்லாமலே தேஹ புஷ்டி எப்படி உண்டாயிற்று? 

அந்தணரே! நீர் படுத்து ஒரு முயற்சியுமின்றி இருக்கிறீராகையால், போகங்களை விளக்கவல்ல பணம் உமக்கு இல்லையென்பது நிச்சயம். இது எல்லார்க்கும் தெரிந்த விஷயமே. ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! போகங்களை அனுபவியாதிருக்கிற உம்முடைய தேஹம், எந்தக் காரணத்தினால் பருத்திருக்கின்றதோ, அதை எனக்குச் சொல்லக் கூடுமாயின், சொல்வீராக. மற்றும், நீர் எல்லாம் அறிந்தவர்; காரியங்களைச் செய்யவல்ல சரீரமுடையவர்; சாதுர்யம் அமைந்தவர்; நீர் லோக ரஞ்சகமான பல கதைகளைச் சொல்ல வல்லவர். இத்தகையராயினும், உலகமெல்லாம் வ்யாபாரத்தைச் செய்து கொண்டிருக்கையில், அதைப் பார்த்துக்கொண்டு உதாஸீனராய் (எதையும் பொருட்படுத்தாது) வெறுமனே படுத்துக் கொண்டிருக்கிறீர். இதற்கென்ன காரணமோ? அதையும் நான் கேட்கக் கூடுமாயின் சொல்வீராக.

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- இவ்வாறு அஸுர ச்ரேஷ்டனான ப்ரஹ்லாதனால் வினவப்பெற்ற மஹானுபாவராகிய அம்முனிவர், அவனுடைய அம்ருதம் போன்ற வாக்கினால் தூண்டப்பட்டுப் புன்னகை செய்து அவனைக் குறித்து மொழிந்தார்.

ப்ராஹ்மணர் சொல்லுகிறார்:- ஓ! அஸுர ச்ரேஷ்டனே! ப்ராணிகளின் ப்ரவ்ருத்தி (செயல்களில் ஈடுபடுதல்), நிவ்ருத்திகளுக்குக் (செயல்களிலிருந்து விலகி இருத்தல்) காரணங்கள் இன்னவையென்கிற இவ்விஷயம் உனக்கே தெரியும். ஸமஸ்த லோகங்களின் மனக்கருத்தையும் அறியும் திறமை உனக்கு உண்டல்லவா? இந்த்ரியங்களுக்கு விஷயமாகாத வஸ்துக்களையும் காணவல்ல பெரியோர்களுக்குள் நீ மேலாயிருப்பவன். மற்றும், ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்) தன் தேஜஸ்ஸினால் ப்ரகாசிப்பவனுமாகிய ஸ்ரீமந்நாராயணன் அனன்யப்ரயோஜனமான (பகவானைத் தவிர்த்து வேறு எந்த பயனையும் எதிர்பார்க்காத) உன் பக்தியால் ஸந்தோஷம் அடைந்து, ஸர்வகாலமும் உன் ஹ்ருதயத்தில் இருந்து கொண்டு, அஜ்ஞானமாகிற அந்தகாரத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட உனக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. ராஜனே! ஆயினும் நான் பெரியோர்களிடத்தில் கேட்டபடி உன் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லுகிறேன் கேட்பாயாக. 

தனக்குச் சுத்தியை விரும்புகிறவன், உன்னோடு அவச்யம் ஸம்பாஷணம் (உரையாடல்) செய்ய வேண்டுமல்லவா? நான், வருத்தித் தேடிப் பெறக்கூடிய காமபோகங்களாலும், நிறைக்க முடியாததாகி மேன்மேலும் ஜன்ம பரம்பரைகளை விளைவிப்பதுமான சப்தாதி விஷயங்களைப் பற்றின விருப்பத்தினால் தூண்டப்பட்டு, புண்ய, பாப கர்மங்களைச் செய்து, முன்பு பல யோனிகளில் பிறந்தேன். அக்கர்மங்களால் திரிந்துகொண்டிருக்கிற நான், தெய்வாதீனமாய்த் தர்மத்தினால் ஸ்வர்க்கத்தையும், ஜ்ஞானத்தினால் மோக்ஷத்தையும், அதர்மத்தினால் பசு, பக்ஷி முதலிய ஜன்மங்களையும், மீளவும் மனுஷ்ய ஜன்மத்தையும், விளைவிக்கவல்ல இந்த மனுஷ்ய ஜன்மத்தைப் பெற்றேன். ஸ்வர்க்க மோக்ஷங்களை விளைவிப்பதான இந்த மனுஷ்ய ஜன்மத்திலும், மைதுனாதி (ஆண் பெண் சேர்க்கை முதலிய) ஸுகத்திற்காகவும், துக்கங்கள் நீங்குவதற்காகவும், கர்மங்களைச் செய்கிற ப்ராணிகளுக்கு விபரீத பலனே உண்டாவதைக் கண்டு, நான் கர்மங்களைச் செய்யும் முயற்சியினின்று மீண்டேன். ஞானாநந்த ஸ்வரூபனான ஜீவாத்மாவுக்கு ஸுகமும் இயற்கையில் ஏற்பட்டதுதான். ஆகையால், அதற்காக ப்ரயத்னம் (முயற்சி) செய்யவேண்டியதில்லை. ஆனால், ஜீவன் ஸுகரூபனாகத் (இன்ப வடிவாகவே) தோற்றவில்லையேயென்றால், எல்லாச் செயல்களுமற்ற ஸுகமே அந்த ஜீவனுக்கு ஸ்வரூபம். ஆகையால், எல்லா முயற்சிகளும் அடங்கப்பெற்று, ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மையை ஆராய்ந்தால், அப்பொழுதுதான் ஜீவன் ஸுகரூபனாகத் (இன்ப வடிவாகத்) தோற்றுவான். சப்தாதி விஷய போகங்களெல்லாம் மனோரத மாத்ரத்தினால் உண்டாகின்றவை என்பதையும்,  நிலையற்றவை என்பதையும் கண்டு, ஆத்மாவின் உண்மையை ஆராய்வதில் நுழைந்து ப்ராரப்த கர்மத்தை அனுபவத்தினால் கழிக்க விரும்பிப் படுத்திருக்கிறேன். இவ்வாறு, கேவல ஸுகரூபமாயிருப்பதும், புருஷார்த்தமும், வருந்தி விளைவிக்க வேண்டாமல் தானே ஸித்தமாயிருப்பதுமாகிய இந்த ஆத்ம ஸ்வரூபத்தை மறந்து, ஜீவாத்மாக்கள் தமக்கு இயற்கையில் ஏற்படாததும்  “நான் தேவன், நான் மனுஷ்யன்” என்கிற துரபிமான (வீண் பெருமை) ரூபமுமான பேதபுத்தியை ஏறிட்டுக்கொண்டு, அதனால் கர்ப்ப, ஜன்ம, ஜரா, மரணாதிகளால் விசித்ரமாயிருப்பதும், பயங்கரமுமான ஸம்ஸாரத்தை மேன்மேலும் வளர்த்திக் கொள்கிறார்கள். தெரியாதவன், ஜலமானது, அதிலுள்ள புல், பாசி முதலியவற்றால் மறைந்திருக்கையில் இங்கு ஜலம் இருக்கிறது என்பதை அறியாமல், அதைத் துறந்து, ஜலம் வேண்டுமென்னும் விருப்பத்தினால், ஜலம் போல் தோற்றுகின்ற கானலைக் (வெய்யிலில் நீர் போல் தோன்றும் மாயையைக்) கண்டு ஓடுவதுபோல, ப்ராணிகள் இயற்கையில் ஸுகரூபமான ஆத்மஸ்வரூபத்தை மறந்து, புருஷார்த்தமல்லாத சப்தாதி விஷயங்களைத் தேடி ஓடுகிறார்கள். 

கர்மத்திற்கு உட்பட்டவர்களாகையால் நினைத்தபடி செய்து, நிறைவேற்ற வல்லவர் அல்லாத ஜீவாத்மாக்கள், கர்மாதீனமாய் ஏற்பட்டிருக்கின்ற தேஹம், இந்த்ரியம் முதலியவற்றால் தங்களுக்கு ஸுகத்தையும், துக்கம் நீங்குவதையும் விரும்பி, அடிக்கடி தொடங்கும் செயல்களெல்லாம் அவர்கள் விரும்பின ஸுகத்தையாவது, துக்கத்தின் நீங்குதலையானது விளைக்காமல் வீணாயொழிகின்றன. ஜீவாத்மாக்கள். ஆத்யாத்மிகம் முதலிய {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன), ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்று மூன்று வகையான} துக்கங்களால் ஒருகாலும் விடுபடாமல், வருந்தி ப்ரயத்னம் (முயற்சி) செய்து ஸம்பாதித்த பணங்களாலாவது, அவற்றால் விளையும் சப்தாதி விஷயங்களாலாவது என்ன ஸுகம் உண்டாகும்?  

பணம் ஸம்பாதிக்கும் பொழுது நேரிடும் வருத்தத்தைச் சொல்லி முடியாது. ஸம்பாதித்த பின்பும், இன்னம் பணம் வேண்டுமென்கிற விருப்பம் தீராது. இந்திரியங்களை வெல்ல முடியாதவராகையால், அந்தப் பணத்தைக் கொண்டு காமங்களை எவ்வளவு அனுபவிக்கினும், மேன்மேலும் விருப்பம் வளர்ந்து, வருந்துவார்கள். திருடர், முதலியவர் வந்து பணத்தைப் பறித்துக்கொண்டு போனால் என் செய்வோமென்னும் பயத்தினால் உறங்கமாட்டார்கள். எல்லாரிடத்திலும் “இவர்கள் நம் பணத்தைப் பறிப்பார்களோ என்னவோ?” என்று சங்கிப்பார்கள் (ஸந்தேஹப்படுவார்கள்). ஆகையால், பணத்தைச் சம்பாதித்த பின்பும், வருத்தம் நீங்காது. ப்ராணன்களையும், பிராணன்களைப்போன்ற பணத்தையும், பாதுகாக்கும் ப்ராணிகளுக்கு, மன்னவன், திருடன், சத்ரு (எதிரி), பந்து (உறவினன்), பசு (விலங்கு), பக்ஷிகள் (பறவைகள்), யாசகர்கள் (பிச்சை எடுப்பவர்கள்), காலம், இவர்களிடத்தினின்றும், தன்னிடத்தினின்றும், தினந்தோறும் பயம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ப்ராணன்களிடத்திலும், பணத்திலும், ப்ரீதி மாறாதிருக்குமாயின், சோகம் (வருத்தம்), மோஹம் (மயக்கம்), பயம் (அச்சம்), கோபம் (சினம்), ராகம் (விருப்பு), அதைர்யம் (உறுதி, அமைதி பொறுமை இன்மை), ச்ரமம் (உழைப்பு, களைப்பு) இவை முதலிய வருத்தங்கள் ப்ராணிகளுக்கு ஓயமாட்டாது. ஆகையால், பண்டிதனாயிருப்பவன், ப்ராணன்களிலும், பணத்திலும் ப்ரீதியைத் துறக்கவேண்டும். நமக்கு இவ்வுலகத்தில் வண்டு, மலைப்பாம்பு இவ்விரண்டும் மேலான ஆசார்யர்கள். நான் அவற்றின் நடத்தையை ஆலோசித்தே வைராக்யத்தையும் தெய்வாதீனமாய்க் கிடைத்தவற்றில் ஸந்தோஷத்தையும் பெற்றேன். வண்டினிடத்தினின்று ஸமஸ்த காமங்களிலும் விருப்பமில்லாமையை அப்யஸித்தேன் (பயிற்சி பெற்றேன்). வண்டுகள் இங்குமங்கும் திரிந்து, புஷ்பங்களினின்று கொண்டுவந்து, கூடு கட்டி வைத்திருக்கும் தேனை அவ்வண்டுகளைக் கொன்று மற்றொருவன் பறித்துக்கொண்டு போகின்றான். அவ்வாறே ஒருவன் வருந்தி சம்பாதித்த பணத்தை, அவனைக் கொன்று மற்றொருவன் பறித்துக்கொண்டு போவானென்னும் இவ்விஷயத்தை வண்டினிடத்தினின்று தெரிந்து கொண்டேன். மலைப்பாம்பு ஓரிடத்தினின்று நகராமல் தெய்வாதீனமாய்க் கிடைத்தவற்றைப் புசித்து, ஸந்தோஷமுற்றிருக்கின்றது. அவ்வாறே நானும் ஒரு வ்யாபாரமும் செய்யாமல், தெய்வாதீனமாய்க் கிடைத்த அன்னாதிகளால் ஸந்தோஷமுற்றிருக்கிறேன். அப்படித் தெய்வாதீனமாய் ஒன்றும் கிடைக்காது போயினும், தைர்யத்துடன் பல நாளாயினும் வெறுமனே படுத்துக்கொண்டிருக்கிறேன். 

அன்னம் ஒருகால் அல்பமாகவும், ஒருகால் வெகுவாகவும் கிடைக்கும். ஒருகால் நன்றாயிருக்கும். ஒருகால் நன்றாயிராது. ஒருகால் வெகு ரஸமுள்ளதாயிருக்கும்; ஒருகால் ரஸமற்றிருக்கும். ஒருகால் ச்ரத்தையுடன் கொண்டு வந்து கொடுப்பார்கள். ஒரு கால் பலவாறு பழித்துக்கொண்டு வந்து கொடுப்பார்கள். ஒரு கால் பகல், இரவு இரண்டு வேளையும் யதேஷ்டமாய்க் கிடைக்கும். எப்படி கிடைக்கினும் கிடைத்தபடியே புசிப்பேன். அது நன்றாயிருப்பினும் நன்றாயிராமற்போயினும், ரஸமுள்ளதாய் இருப்பினும், ரஸமற்றிருப்பினும், ச்ரத்தையோடு கொடுப்பினும், பழித்துக் கொடுப்பினும், அதைப் பற்றி ஸந்தோஷமாவது வருத்தமாவது எனக்குக் கிடையாது. நல்ல வஸ்த்ரமாவது, வெண்பட்டாவது, மான் தோலாவது, நாரத்துணியாவது, மரவுரியாவது வேறு எதுவாவது கிடைக்கினும், தெய்வாதீனமாய்க் கிடைத்த அதை உடுத்துக் கொள்கிறேன். இவ்வாறு ப்ராரப்த கர்மத்தைப் புசித்துக்கொண்டு மனக்களிப்புற்றிருக்கிறேன். ஒருகால் வெறுந்தரையிலும், ஒருகால் புல்லெழுந்த பூமியிலும், ஒருகால் இலைகள் படுத்த பூமியிலும், ஒருகால் கல் தரையிலும், ஒருகால் புழுதியிலும் படுத்துக்கொள்கிறேன். ஒருகால் உப்பரிகையில் கட்டிலிலும் மெத்தையிலும் பிறருடைய இஷ்டத்தின்படி படுத்துக் கொள்ளுகிறேன். ஒருகால் நன்றாக ஸ்நானம் செய்து, சந்தனம் பூசி, அழகான ஆடை உடுத்தி, பூமாலை அணிந்து ரதம் முதலிய வாஹனங்களின் மேலேறித் திரிகிறேன். 

ப்ரபூ! ஒருகால் அரையில் ஆடையின்றித் திகம்பரனாய்ப் பேய் பிசாசு போலத் திரிகிறேன். ஜனங்கள் இயற்கையாகவே ஒருவரோடொருவர் பொருந்தாமல் சிலர் துதிப்பார்கள்; சிலர் பழிப்பார்கள். நான் துதிக்கிறவர்களைப் புகழ்வதுமில்லை. நிந்திக்கிறவர்களைப் பழிப்பதுமில்லை. அவர்கள் அனைவர்க்கும், தர்மம் முதலிய நன்மைகளும், மஹானுபாவனான பகவானிடத்தில் மனவூக்கமும் உண்டாகும்படி ப்ரார்த்தித்துக் கொண்டிருப்பேன். ஜாதி உருவம் முதலிய விகற்பங்கள் சித்தத்தில் மறைந்ததாகவும் அந்தச் சித்தம் தேஹாத்ம ப்ரமத்திற்கிடமான (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்திற்கு, மயக்கத்திற்கு) மனத்தில் மறைந்ததாகவும், அந்த மனம் ஸாத்விக அஹங்காரத்தில் மறைந்ததாகவும், அந்த ஸாத்விக அஹங்காரம் மூல ப்ரக்ருதியில் மறைந்ததாகவும், அந்த மூலப்ரக்ருதி ஆத்மானுபூதியில் (ஜீவாத்ம அனுபவத்தில்) மறைந்ததாகவும் பாவிக்க வேண்டும். பிறகு, தன்னை சரீரமாகவுடைய பரமாத்மாவை ஆராய்ந்து, அவனை த்யானித்துக் கொண்டிருக்கும் முனிவன், செயலற்றுப் பரமாத்ம ஸ்வரூபனாகிய பரிசுத்த ஜீவஸ்வரூபத்தை அனுஸந்தித்துச் சரீரத்தினின்று மீளவேண்டும். இவ்வாறு என்னுடைய நடத்தையை நான் மறைத்துக்கொண்டிருப்பினும் பாகவத ச்ரேஷ்டனாகிய உனக்கு விவரித்துச் சொன்னேன். புத்தி ஹீனர்கள் இந்த என் நடவடிக்கையை லோக மர்யாதைக்கும் சாஸ்த்ர மர்யாதைக்கும் இணங்காததென்று நினைப்பார்கள். நீ பகவானிடத்தில் மனவூக்கமுடையவனாகையாலும் தர்ம ஸூக்ஷ்மம் தெரிந்தவனாகையாலும் நீ அப்படி நினைக்க மாட்டாயென்று உனக்கு இதை மறைக்காமல் வெளியிட்டேன்.

ஸ்ரீ நாரதர் சொல்லுகிறார்:- அஸூர ச்ரேஷ்டனாகிய ப்ரஹ்லாதன் அம்முனிவரிடத்தினின்று பரமஹம்ஸர்களின் தர்மத்தைக் கேட்டு, ஸந்தோஷமுற்று, அவரைப் பூஜித்து விடைபெற்றுக்கொண்டு, தன் க்ருஹத்திற்குப் போனான். 

பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக