ஶ்ரீமத் பாகவதம் - 167

ஏழாவது ஸ்கந்தம் - பதினான்காவது அத்தியாயம்

(க்ருஹஸ்தாச்ரம தர்மங்களைக் கூறுதல்)

யுதிஷ்டிரன் சொல்லுகிறார்:- தேவர்ஷீ! இல்லற வாழ்க்கையில் நிலைநின்ற மனமுடைய என்னைப்போன்றவன், எவ்விதத்தில் இந்த ஸன்யாஸிகள் பெறும் பதவியாகிய மோக்ஷத்தைப் பெறலாமோ, அவ்விதத்தைச் சொல்வீராக.  

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- மஹாராஜனே! நீ எல்லாம் அறிந்தவனாயினும், உலகத்தவர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு நன்றாக வினவினாய். நீ கேட்ட க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை, உனக்கு நான் சொல்லுகிறேன். இந்தத் தர்மத்தை அனுஷ்டிப்பதனால், புண்ய, பாப கர்மங்கள் தொலைந்து, ஜ்ஞான யோகம் கைகூடும். 

மன்னவனே! க்ருஹஸ்தாச்ரமத்திலிருப்பவன், அவ்வாச்ரமத்திற்குரிய ஸந்தயாவந்தனம் பஞ்ச மஹாயஜ்ஞங்கள் {ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்} முதலிய அவச்யமான கர்மங்களை வாஸுதேவனுக்கு அர்ப்பணமென்னும் புத்தியுடன் அனுஷ்டித்துக் கொண்டு, அவ்வாஸுதேவ பகவானுடைய குணங்களை மனத்தில் நினைந்து, நைந்து, உருகுந் தன்மையுள்ள பாகவதர்களை உபாஸிக்க வேண்டும். 

க்ருஹஸ்தாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய காலம் தவிர மற்ற காலங்களில் சாந்தி முதலிய குணங்கள் அமைந்த ஜனங்களுடன் கூடி, அப்பாகவதர்களிடத்தினின்று அம்ருதம் போன்ற பகவானுடைய அவதார கதைகளை ச்ரத்தையுடன் அடிக்கடி கேட்கவேண்டும். அப்பெரியோர்களின் ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்), தேஹத்தில் அஹங்காரத்தையும் (நான் என்ற எண்ணத்தையும்), பெண்டிர், பிள்ளை முதலியவர்களிடத்தில் மமகாரத்தையும் (எனது என்ற எண்ணத்தையும்), மெல்ல மெல்லத் துறக்க வேண்டும். ஸ்வப்னத்தினின்று (கனவிலிருந்து) எழுந்தவன், ஸ்வப்னத்தில் (கனவில்)  கண்ட வஸ்துக்களெல்லாம் நிலையற்றவையென்று நினைப்பது போல, தேஹம், வீடு, வாசல், பிள்ளை, பெண்டிர் முதலியவற்றில் அபிமானத்தைத் (பற்றுதலைத்) துறந்து, இவையெல்லாம் நிலையற்றவையென்று நினைக்க வேண்டும். அந்நினைவுடைய பண்டிதன், அத்தேஹம் முதலியவற்றில் மனப்பற்று அற்றவனாயினும், பற்றுடையவன் போல ப்ராண தாரணத்திற்கு (உயிர் இச்சரீரத்தில் இருப்பதற்கு) வேண்டிய காரியத்தை அவற்றால் நடத்திக்கொண்டு, மனுஷ்யத்வம் (மனிதத் தன்மை) முதலியவை அந்தந்த தேஹங்களின் தர்மங்களேயன்றி ஆத்மாவின் தர்மமன்று என்று அனுஸந்திக்கவேண்டும். ஜ்ஞாதிகளும் (பங்காளிகளும்), தாய் தந்தைகளும், பிள்ளைகளும், உடன் பிறந்தவர்களும், நண்பர்களும், மற்றவர்களும் எதைச் சொல்லுகிறார்களோ, எதை விரும்புகிறார்களோ, அதைத்தான் அப்படியே மமகாரமின்றிப் (எனது என்ற எண்ணமின்றி) புகழவேண்டும். 

மழை பெய்து விளைந்த தான்யம் முதலியவற்றையும், பூமியில் விளையும் ஸ்வர்ணம் முதலியவற்றையும், திடீரென்று நேரிடுகின்றவற்றையும், பகவானுடைய அனுக்ரஹத்தினால் ஏற்பட்டவையென்று பாவித்து, அவற்றில் தன் தேஹ தாரணத்திற்கு (இச்சரீரம் உயிருடன் இருப்பதற்கு) வேண்டியவற்றை மாத்ரம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். தம் வயிறு எவ்வளவால் நிறையுமோ, அவ்வளவை மாத்ரமே ப்ராணிகள் தம்முடையதென்று அபிமானிக்கலாமே (நினைக்கலாமே) அன்றி, அதற்கு மேற்பட்டவற்றைத் தம்முடையதென்று அபிமானிப்பார்களாயின் (நினைத்தார்களாயின்), அவர்கள் திருடர்களே; அவர்கள், தண்டனைக்கு உட்படுவார்கள். அவர்களுக்கு, எப்பொழுதும் ஸம்ஸாரம் நீங்காது. ஆகையால், அவற்றைப் பக்ஷிக்கிற (உண்கின்ற) நாய், பூனை முதலிய ம்ருகங்கள், ஒட்டகம், கழுதை, குரங்கு, எலி, நகரும் ஜந்துக்கள், ஈக்கள் இவற்றையெல்லாம் தன் பிள்ளைகளைப் போலப் பார்க்க வேண்டுமேயன்றி, அவற்றின் மேல் கோபங்கொண்டு ஹிம்ஸிக்கலாகாது (துன்புறுத்தக் கூடாது). பிள்ளைகளுக்கும், இந்த ம்ருகம் முதலியவற்றிற்கும் என்ன பேதம்? ஒரு பேதமும் இல்லை. தான் க்ருஹஸ்தனானாலும், மிகவும் ப்ரயாஸப்பட்டு (கஷ்டப்பட்டு) தர்ம, அர்த்த, காமங்களைக் கைப்பற்றலாகாது. தேசகாலங்களுக்குத் தகுந்தபடி தெய்வாதீனமாய்க் (பகவானின் அருளால்) கிடைப்பதைக் கொண்டு ஸந்தோஷமுற்றிருக்க வேண்டும். 

நாய், பாதகிகள் (தன் நிலையிலிருந்து நழுவியவர்), சண்டாளர் (கடைசி வர்ணத்தவர்) முதலியவர்களுக்கும் அவரவர் விரும்புகிற அன்னாதிகளைச் சக்திக்குத் தகுந்தபடி கொடுக்க வேண்டும். தன் பார்யையிடத்திலும் (மனைவியிடத்திலும்) கூட, என்னுடையவளென்கிற அபிமானத்தைத் (பற்றைத்) துறக்க வேண்டும். மனிதர்களுக்குப் பார்யையிடத்தில் “எனக்கே இவள்” என்னும் அபிமானம் (பற்று) அதிகமாயிருக்கும். பார்யைக்காகத் (மனைவிக்காகத்) தந்தையையும், குருவையும் வதிப்பார்கள். அவர்களிடத்தில் அபிமானத்தை (பற்றை) எவர்க்கும் துறக்கமுடியாது. விவேகமுடையவன், அப்படிப்பட்ட பார்யையிடத்திலும் (மனைவியிடத்திலும்)  அபிமானத்தைத் (பற்றைத்) துறக்க வேண்டும். இந்த அபிமானத்தைத் (பற்றைத்)  துறந்தவன், எவராலும் வெல்ல முடியாத பரமபுருஷனையும் வென்றவனாவான்.  

“புழு, விஷ்டை (மலம்), பஸ்மம் (சாம்பல்) இவற்றில் போய் முடியக்கூடிய இந்த தேஹம் எங்கே? அந்தத் தேஹத்தின் ஸுகத்திற்காக ஏற்பட்ட பார்யை (மனைவி) எங்கே? ஆகாயம் போல் எங்கும் பற்றற்று இருக்கும் தன்மையுடைய ஆத்மா எங்கே? ஒன்றோடு மற்றொன்றுக்கு என்ன சேர்த்தியுண்டு?” என்னும் தத்வ விசாரத்தினால் (ஆத்ம, பரமாத்ம தத்வங்களைப் பற்றிய சிந்தனையினால்), அந்தப் பார்யையிடத்திலுள்ள அபிமானத்தையும் (பற்றையும்) துறக்க வேண்டும். தெய்வாதீனமாய்க் (பகவானின் அருளால்) கிடைத்த அன்னாதிகளைக் கொண்டு பஞ்ச மஹா யஜ்ஞாதி {ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்} கர்மங்களைச் செய்து, அதில் மிகுந்தவற்றைக்கொண்டு தன் தேஹ தாரணத்தை (சரீரத்தைக் காப்பாற்றுவதை) நடத்த வேண்டும். மற்றது தெய்வாதீனமாய்க் (பகவனின் அருளால்) கிடைத்திருப்பினும், அதில் தன்னுடையதென்கிற அபிமானத்தைத் (பற்றை) துறக்க வேண்டும். இத்தகைய அறிவுடையவன், பெரியோர்கள் அடையும் பதவியாகிய மோக்ஷத்தைப் பெறுவான். தேவர்கள், ரிஷிகள், மனுஷ்யர்கள், பூதங்கள் (பிராணிகள்), பித்ருக்கள் ஆகிய பஞ்ச மஹாயஜ்ஞ தேவதைகளுக்கும், தனக்கும் தனித்தனியே அந்தராத்மாவான பரமபுருஷனை, யாஜனம் (யாகங்களைச் செய்தல்), அத்யாபனம் (வேதம் கற்பித்தல்) முதலிய தன் வ்ருத்தியால் (செயலால்) ஸம்பாதித்த த்ரவ்யத்தினால் (பொருளால்) தினந்தோறும் ஆராதிக்க வேண்டும். தனக்கு விருப்பம், திறமை, அறிவு இவை மூன்றும் அடைந்திருக்கையாகிற அதிகாரம் உளதாயின், அதிகாரத்திற்குத் தகுந்தபடி எல்லா யாகங்களும் செய்யத் தக்கவைகளே. கல்ப ஸூத்ரங்களில் (யாகங்களைச் செய்யும் முறையை விளக்கும் நூல்களில்) சொல்லிய விதியின்படி, அக்னிஹோத்ரம் முதலிய கர்மத்தினால் பரமபுருஷனை ஆராதிக்க வேண்டும். 

ராஜனே! ஸமஸ்த யஜ்ஞங்களிலும் (யாகங்களிலும்) ஹவிர் பாகங்களைப் (அக்னியில் தேவதையை உத்தேசித்து ஹோமம் செய்யப்படும் பொருளைப்) புசிக்கிற இந்த பரமபுருஷன், ப்ராமணர்களின் முகத்தில் ஹோமம் செய்த அன்னாதிகளால் த்ருப்தி அடைவது போல, அக்னி முகத்தில் ஹோமம் செய்த அன்னாதிகளால் த்ருப்தி அடைகிறதில்லை. பகவான் ப்ராஹ்மணர்களையே முகமாகவுடையவன். ஆகையால், ப்ராஹ்மணர்களை அவரவர் விரும்பும் கர்மங்களால், உன் சக்திக்கு உரியபடி ஆராதிப்பாயாயின், அதனால் அவர்களுக்கு அந்தர்யாமியான பகவான் த்ருப்தி அடைவான். அவ்வாறே தேவதைகளையும், மனுஷ்யர் முதலிய மற்றவர்களையும் அவரவர்களுக்கு வேண்டிய கர்மங்களால் ஆராதித்து, அவர்களுக்கு அந்தராத்மாவான பரம புருஷனைக் களிப்புறச் செய்வாயாக. ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களில் எவனாயினும் பணமுடையவனாயிருப்பானாயின், புரட்டாசி மாதத்தில், க்ருஷ்ண பக்ஷத்தில், தன் பணச்செருக்குக்கு உரியபடி, தாய் தந்தைகளுக்கும், அவரது பந்துக்களுக்கும் ச்ராத்தம் (மஹாளய ச்ராத்தம்) செய்யவேண்டும். அதற்கு மஹாளயமென்று பெயர். கர்க்கடக ஸங்க்ராந்தி (ஆடி மாதப் பிறப்பு - தக்ஷிணாயனம்), மகா ஸங்க்ராந்தி (தை மாதப் பிறப்பு - உத்தராயணம்) இவ்வயனங்களிலும், மேஷம் (சித்திரை), துலா (ஐப்பசி) ஆகிற விஷூவத்திலும், வ்யதீபாதத்திலும் (காலத்தின் 17 வது பிரிவானது வ்யதீபாதம் எனப்படும்), திதிக்ஷயத்திலும் (திதியானது இரண்டு ஸூர்ய உதயங்களுக்குள் ஆரம்பித்து முடிந்துவிட்டால் அது திதிக்ஷயம் எனப்படும்), சந்த்ர க்ரஹணத்திலும், ஸூர்ய க்ரஹணத்திலும், த்வாதசியன்றும், ச்ரவண நக்ஷத்ரத்தன்றும், சுக்லபக்ஷ (வளர்பிறை) த்ருதீயையாகிய அக்ஷய த்ருதீயையன்றும், கார்த்திக மாஸத்தில் சுக்லபக்ஷத்து நவமியன்றும், ஹேமந்த, சிசிர ருதுக்களாகிய மார்கழி, தை, மாசி, பங்குனி என்கிற நான்கு மாதங்களின் க்ருஷ்ணபக்ஷத்து அஷ்டமிகள் நான்கிலும், மாசி மாஸத்தில் சுக்லபக்ஷத்து ஸப்தமியிலும், மகா நக்ஷத்ரமும் ராகா பெளர்ணமாஸியும் கூடுந்தினத்தன்றும், மாஸ நக்ஷத்ரங்களோடு கூடின பெளர்ணமாஸிகளிலும், அனுஷம், ச்ரவணம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி இவற்றில் ஏதேனுமொன்று சேரப்பெற்ற த்வாதசியன்றும், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி இவற்றில் ஏதேனுமொன்று சேரப்பெற்ற ஏகாதசியன்றும், ஜன்ம நக்ஷத்ரத்திலும் (பிறந்த நக்ஷத்ரத்திலும்), ச்ரவணத்தன்றும், ச்ராத்தம் செய்யவேண்டும். 

(குறிப்பு: நிறை பௌர்ணமி “ராகா” எனப்படும். பெளர்ணமி திதி சற்று குறைந்திருந்தால், அது “அனுமதி” எனப்படும்)

அயனம் முதலிய இக்காலங்கள் நன்மையை விளைக்கும்படியான தர்மத்தை அனுஷ்டிப்பதற்குரிய காலங்கள். இவை நன்மையை விளைக்கும்  காலங்கள். இக்காலங்களில், நன்மைக்கிடமான ஸ்நானாதி புண்ய கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும். அதுவே ஆயுளுக்குப் பயனாம். இக்காலங்களில் செய்கிற ஸ்நானம், ஜபம், ஹோமம், தவம், இவையும், தேவதைகள், ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள் இவர்களுக்குச் செய்யும் ஆராதனம், பித்ருக்கள், தேவதைகள், மனுஷ்யர், பூதங்கள் இவற்றிற்குக் கொடுக்கும் தானம் இவையுமெல்லாம் அழிவற்ற பலனைக் கொடுப்பவையாம். 

யுதிஷ்டிர மன்னவனே! பத்னிக்குச் (மனைவிக்குச்) செய்கிற பும்ஸவன, ஸீமந்தாதி ஸம்ஸ்கார காலங்களிலும், குழந்தைகளுக்குச் செய்கிற ஜாதகரண நாமகரணாதி ஸம்ஸ்கார காலங்களிலும், ப்ரேதனுக்குச் செய்கிற தஹனாதி ஸம்ஸ்கார காலங்களிலும், மரணம் அடைகிற தினத்தன்றும் மற்றும் க்ஷேமத்தை விரும்பிச் செய்கிற கார்ய காலங்களிலும் நடத்துகிற ஸ்நானாதி கர்மங்கள் அழிவற்ற பலனைக் கொடுக்கும். இவ்வாறு, நன்மைக் கிடமான காலங்களைச் சொன்னேன். இனி தர்மம் முதலிய நன்மைகளை விளைக்கவல்ல தேசங்களைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

எவ்விடத்தில் ஸத்பாத்ரம் (தானம் பெறவல்ல நல்ல நபர்) கிடைக்குமோ, அத்தேசம் தானாதி கர்மங்களுக்கு முக்யமான தேசம். சேதனா சேதன ஸ்வரூபனான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹம் எவ்விடத்தில் இருக்கின்றதோ, தவம், வித்யை, தயை இவை அமைந்த ப்ராஹ்மண குலம் எவ்விடத்தில் வஸிக்கின்றதோ, அவ்விடங்களும், எவ்வெவ்விடங்களில் பகவானுடைய பூஜை நடக்கின்றதோ அவ்விடங்களும், மிகவும் புண்யமான தேசங்கள். அவையெல்லாம் நன்மையை விளைக்கவல்ல, தர்மங்களை அனுஷ்டிப்பதற்கு உரிய தேசங்களாம். மற்றும், புராணங்களில் ப்ரசித்திபெற்ற கங்கை முதலிய நதிகள் எவ்வெவ்விடங்களில் இருக்கின்றனவோ, அவ்வவ்விடங்களும், புஷ்கரம் முதலிய தடங்களும், பெரியோர்கள்  நித்ய வாஸம் செய்யும் இடங்களும் தர்மானுஷ்டானத்திற்கு உரிய தேசங்கள். குருக்ஷேத்ரம், கயை, ப்ரயாகம், புலஹருடைய ஆச்ரமம், நைமிசாரண்யம், பல்குனி நதி பாயுமிடம், ராமஸேது, ப்ரபாஸ தீர்த்தம், த்வாரகை, காசி, மதுரை, பம்பா ஸரஸ்ஸூ, பிந்து ஸரஸ்ஸென்கிற கர்த்தமாச்ரமம், பதரிகாச்ரமம் என்கிற நாராயணாச்ரமம், அலக்நந்தையின் கரை, சித்ரகூடம் இவை முதலிய ஸ்தலங்களும், மஹேந்தரம், மலயம் முதலிய ஸமஸ்தமான குலபர்வதங்களும் (மலைகளும்), பகவானுடைய அர்ச்சாவிக்ரஹங்கள் இருக்கும் இடங்களும், ஆகிய இவையெல்லாம் மிகவும் புண்யமான தேசங்கள். நன்மையை விரும்பும் புருஷன், இந்த ஸ்தானங்களை அடிக்கடி பணிய வேண்டும். இந்த ஸ்தலங்களில் செய்யும் தர்மம் ஒவ்வொன்றும், ஆயிரமடங்கு அதிகமான பலனை விளைக்கும். 

மன்னவனே! ஸத்பாத்ரத்தின் (தானம் பெறவல்ல நல்ல நபரின்) ஸ்வரூபத்தை அறிந்த பண்டிதர்கள், ஜங்கம (அசையும்), ஸ்தாவர (அசையாத) ரூபமான இந்த ப்ரபஞ்சத்திற்கெல்லாம் அந்தராத்மாவாகி எல்லாம் தானேயென்னும்படி அமைந்திருக்கிற பரமபுருஷனொருவனே ஸத்பாத்ரமென்று நிச்சயித்திருக்கிறார்கள். ராஜனே! உன்னுடைய ராஜஸூய யாகத்தில், தேவதைகளும், ரிஷிகளும், தவம் முதலியவற்றால் ஸித்திபெற்ற பெரியோர்களும், ப்ரஹ்மதேவனும், அவனது புதல்வர்களான ஸனகாதிகளும் இருக்கையில், அச்சுதனே அக்ர பூஜைக்கு உரியவனாக ஏற்பட்டானல்லவா? ஆகையால், அவனே ஸத்பாத்ரமென்பது உனக்கே தெரியுமல்லவா? ஜீவ ஸமூஹங்கள் நிறைந்த இந்த ப்ரஹ்மாண்டமாகிற பெரிய வ்ருக்ஷத்திற்கு (மரத்திற்கு), அச்சுதன் வேராகையால், அவனுக்குச் செய்யும் ஆராதனம், ஸமஸ்த ஜீவ ஸமூஹங்களுக்கும் திருப்தியை விளைக்கும். மனுஷ்யர், திர்யக்கு, ரிஷிகள், தேவதைகள் என்கிற புரங்களைப் படைத்து அவற்றில் ஜீவனாகிற தன் சரீரத்துடன் சயனித்துக் கொண்டிருக்கிறானாகையால் பகவான், புருஷனென்று பெயர் பெற்றான். 

அந்த மனுஷ்யாதி சரீரங்களிலுள்ள ஜீவாத்மாக்களிடத்தில், பகவான் ஜ்ஞானம், சக்தி முதலிய குணங்களின் தாரதம்யத்தோடு (ஏற்றத்தாழ்வோடு) வர்த்திக்கிறான் (இருக்கிறான்). ஆகையால், எவர்க்குப் பூஜை செய்யினும், பகவானுக்குச் செய்கிறோமென்கிற எண்ணத்துடனே செய்யவேண்டும். பகவானுடைய ஜ்ஞானாதி குணங்கள் எவ்வெவ்விடங்களில் அதிகமாய் விளங்குகின்றனவோ, அவை மேலான பாத்ரங்களாம். குணங்கள் எவ்விடத்தில் குறைவாயிருக்கின்றனவோ, அவை உத்தம பாத்ரங்கள் அல்ல. (பரமாத்மாவான பரம புருஷனே ஸத்பாத்ரம் (ஆராதனைக்கு உரியவன்). மற்றவர்கள், அந்தப் பரமாத்ம ஸ்வரூபர்களாகையால் பூஜிக்கத்தகுந்தவர்கள். அதுவும், குணங்களுடைய தோற்றத்தின் தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வை) அனுஸரித்தே நடத்தவேண்டும்). 

மன்னவனே! த்ரேதாதி யுகங்களில், ப்ராணிகள் எல்லாம் பகவத் ஸ்வரூபமென்பதை ஆராய்ந்து கௌரவிப்பதைத் தவிர்ந்து, ஒருவரையொருவர் அவமதிப்பதில் மதி (புத்தி) கொண்டிருப்பதைக் கண்டு, பகவானுடைய ஆராதனத்திற்காகப் பண்டிதர்கள், அவனுடைய அர்ச்சா விக்ரஹங்களை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகு சிலர், அவ்விக்ரஹங்களில் பகவான் இருக்கிறானென்பதை நம்பி ச்ரத்தையுடன் ஆராதிக்கிறார்கள். பகவத் ஸ்வரூபர்களான ஒருவரையொருவர் த்வேஷிக்கும் (வெறுக்கும்) புருஷர்களுக்கு, அந்த அர்ச்சா விக்ரஹங்கள் எவ்வளவு ச்ரத்தையுடன் ஆராதனம் செய்யப் பெறினும், அவர்கள் விரும்பும் புருஷார்த்தங்களைக் கொடுக்கிறதில்லை. ப்ராஹ்மணர்கள், உபவாஸம் முதலிய தவம், ஆத்மாவின் உண்மையை அறிந்து பரமாத்மாவை உபாஸிக்கையாகிற வித்யை, தெய்வாதீனமாய்க் (பகவானது அருளால்) கிடைத்தவற்றைக் கொண்டு ஸந்தோஷமுற்றிருக்கை, இவற்றால் பகவானுடைய சரீரத்தைத் தரிக்கின்றார்களாகையால், புருஷர்களுக்குள் ப்ராஹ்மணனே ஸத்பாத்ரம் (ஆராதிக்கத் தகுந்தவர்கள்) என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். ராஜனே! மூன்று லோகங்களையும் தன் பாத தூளியால் புனிதம் செய்பவனும், ஜகத்திற்கெல்லாம் அந்தராத்மாவாய் இருப்பவனுமாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கும், ப்ராஹ்மணர்களே மேலான தெய்வம். இனி நம்மைப்போன்ற மற்றவர்க்கு ப்ராஹ்மணர்கள் தெய்வமென்பதில் ஸந்தேஹமென்ன? 

பதினான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை