ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 168

ஏழாவது ஸ்கந்தம் - பதினைந்தாவது அத்தியாயம்

(க்ருஹஸ்தாச்ரமத்தைச் சேர்ந்த சில தர்மங்களைக் கூறி மேல் மோக்ஷ தர்மங்களைச் சுருக்கமாய்க் கூறுதல்)

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- யுதிஷ்டிர மன்னவனே! ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களில் சிலர் தங்கள் தங்கள் வர்ணாச்ரம தர்மங்களை ஊக்கத்துடன் அனுஷ்டிக்கிறார்கள். சிலர், உபவாஸம் முதலிய தவத்தில் ஊக்கமுற்றிருக்கிறார்கள். சிலர், வேதாத்யயனத்திலும், ஓதுவிப்பதிலும் நிலையுற்றிருக்கிறார்கள். சிலர், ஜ்ஞானயோகம், கர்மயோகம் இரண்டிலும் நிலைநின்றிருக்கிறார்கள். அழிவற்ற பலன் விரும்புகிறவன், பித்ருக்களைக் குறித்துச் செய்யும் ச்ராத்தங்களில், அன்னாதிகளை, கர்மயோகத்தை உதவியாகக் கொண்டு, ஜ்ஞான யோகத்தையே முக்யமாகச் செய்பவனுக்குக் கொடுக்கவேண்டும். தேவதைகளைக் குறித்துச் செய்யும் கார்யங்களிலும், ஹவிஸ்ஸுக்களை ஜ்ஞானயோக நிஷ்டனுக்கே கொடுக்க வேண்டும். ஜ்ஞானயோக நிஷ்டன் நேராத பக்ஷத்தில், கர்மயோக நிஷ்டர் முதலிய மற்றவர்களில் ஜ்ஞானாதி தாரதம்யத்தைப் பார்த்துக் கொடுக்க வேண்டும். விச்வேதேவ ஸ்தானத்தில் (விச்வா என்பவரின் பத்து புதல்வர்களான வஸு, ஸத்ய, க்ரது, தக்ஷ, கால, காம, த்ருதி, குரு, புரூரவ, ஆர்த்ரவ என்பவர்கள் விச்வேதேவர்கள் ஆவர்; புரூரவ, ஆர்த்ரவ என்கிற இரண்டு விச்வேதேவர்கள் ஸ்தானத்தில், ச்ராத்தத்தில் ப்ராஹ்மணர்களை புஜிப்பிக்க வேண்டும்) இரண்டு ப்ராஹ்மணர்களையும், பித்ரு ஸ்தானத்தில் மூன்று ப்ராஹ்மணர்களையும், புஜிப்பிக்கவேண்டும். அல்லது, இரண்டு ஸ்தானங்களிலும் ஒவ்வொரு ப்ராஹ்மணனையாவது புஜிப்பிக்க வேண்டும். 

பணப்பெருக்குடையவனும் இப்படியே செய்ய வேண்டுமன்றி, ச்ராத்தத்தில் இதற்குமேல் விஸ்தரித்து ப்ராஹ்மணர்களைப் புஜிப்பிக்கலாகாது. ச்ராத்தத்தில் தெளஹித்ரனைப் புஜிப்பிக்கப் பார்த்தால், அவன் பிள்ளைகளை விட்டு அவனை மாத்ரம் புஜிப்பிக்கத் தோன்றாது. இவ்வாறு பந்துக்கள் பலர் நேருவார்களாகையால், அவர்களை உபேக்ஷிக்க (விலக்க) முடியாமல், ச்ராத்தத்தில் ப்ராஹ்மணர்களை அதிகமாய்ப் புஜிப்பிக்க வேண்டிவரும். அப்படி புஜிப்பிக்கின், தேச காலங்கள், ச்ரத்தை, த்ரவ்யங்கள், ஸத்பாதரங்கள், பூஜை ஆகிய இவையெல்லாம் குணமுள்ளவையாயினும், பந்துக்களுக்குக் கொடுப்பதனால், குணமற்றவையாய் விடும். ஆகையால், அதிகமாய் வளர்த்தலாகாது. முன் சொன்ன புண்ய தேசத்தில், புண்ய காலத்தில், செய்யும்படியாக நேரிட்ட ச்ராத்தத்தில், முனிவர் புசிக்கும் செந்நெல் முதலிய தான்யங்களால் சமைத்த அன்னத்தை ஸ்ரீமஹாவிஷ்ணுவை உத்தேசித்து, ஸத்பாத்ரமான ஒரு ப்ராஹ்மணனுக்குக் கொடுப்பார்களாயின், அது இவ்வுலகத்தில் விருப்பங்களையெல்லாம் கடந்து, கடைசியில் அழிவற்ற பலனான மோக்ஷத்தையும் கொடுக்கும். தேவதைகளுக்கும், ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும், பூதங்களுக்கும், தனக்கும், பந்துக்களுக்கும் அன்னத்தைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். அந்தத் தேவர் முதலிய ஸமஸ்த ப்ராணிகளையும், பரமபுருஷ ஸ்வரூபர்களாகவே பாவிக்க வேண்டும். ச்ராத்தத்தில், பித்ருக்கள் முதலியவர்களை உத்தேசித்து மாம்ஸத்தைக் கொடுக்கலாகாது. தானும் தர்மத்தின் உண்மையை ஆராய்ந்து புசிக்கலாகாது. முனிவர்கள் புசிக்கிற செந்நெல் முதலிய தான்யங்களால் சமைத்த அன்னங்களால், பித்ருக்கள் முதலியவர்க்கு மேலான ப்ரீதி விளைவது போலப், பசுக்களை (விலங்குகளை) ஹிம்ஸித்து (கொன்று) மாம்ஸம் கொடுப்பதனால், ப்ரீதி உண்டாகாது. மற்றும், மேலான தர்மத்தை விரும்பும் மனுஷ்யர்களுக்கு, மனோவாக்காயங்களென்கிற (மனது, சொல், உடல் என்கிற) மூன்று கரணங்களாலும் ப்ராணிகளுக்கு த்ரோஹம் (துன்பம்) செய்யாமையாகிற இந்த தர்மத்தைக் காட்டிலும், மேலான தர்மம் மற்றொன்றும் இல்லை. 

யஜ்ஞங்களின் உண்மையை அறிந்தவர்களும், சப்தாதி விஷயங்களில் விருப்பமற்றவர்களும், ப்ராணிகளுக்கு த்ரோஹம் (துன்பம்) செய்யாமையே மேலான தர்மமென்பதை உணர்ந்தவர்களுமான சில பெரியோர்கள், பசு (விலங்கு), புரோடாசம் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் மாவினால் ஆன பண்டம்) முதலியவற்றை த்ரவ்யமாகவுடைய கர்ம யஜ்ஞங்களைப் பரமாத்ம உபாஸன (பகவானைத் த்யானம் செய்வதான) ரூப ஜ்ஞானத்தினால் ஜ்வலித்துக் கொண்டிருக்கிற தமது யோகாக்னியில் ஹோமம் செய்கிறார்கள். பசு புரோடாசாதிகளை த்ரவ்யமாகவுடைய க்ரியா (செயல் முறையிலான) யஜ்ஞங்களை அனுஷ்டிக்க முயன்ற புருஷனைக் கண்டு பசு முதலிய பூதங்கள், “இவன் யாகம் செய்யப்போகிறான். யஜ்ஞத்தின் உண்மை அறியாத மூடன். இவன் நமது ப்ராணன்களால் த்ருப்தி அடையப் பார்க்கிறான். இவன் நம்மை நிச்சயமாய் வதிப்பான்” என்று பயப்படுகின்றன. ஆகையால் தான் சிலர், கர்ம யஜ்ஞங்களைத் துறந்து, ஜ்ஞான யஜ்ஞங்களை அனுஷ்டிக்கிறார்கள். 

தர்ம ஸூக்ஷ்மத்தை அறிந்த புருஷன், தெய்வாதீனமாய்க் (பகவான் அருளால்) கிடைத்த, முனிவர்கள் புசிக்கிற செந்நெல் முதலிய தான்யங்களால் சமைத்த அன்னங்களால், தினந்தோறும் நித்ய, நைமித்திக கர்மங்களை மனக்களிப்புடன் அனுஷ்டிக்க வேண்டும். விதர்மம், பரதர்மம், உபமாதர்மம் (உபதர்மம்), சலதர்மம், ஆபாஸதர்மம் (விவரம் பின்னால் தரப்பட்டுள்ளது) ஆகிய இவ்வைந்து தர்மங்களும் அதர்மமாகிற வ்ருக்ஷத்தின் (மரத்தின்) கிளைகள். தர்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவன், இவற்றை அதர்மங்களைப் போலத் துறக்க வேண்டும். 

எதைத் தர்மமென்கிற புத்தியுடன் செய்தாலும், தன் வர்ணாச்ரம தர்மங்களுக்குத் தடை நேருமோ அதை, “விதர்மம்” என்பார்கள். 

க்ஷத்ரியாதிகளுக்கு விதித்த தர்மத்தை, ப்ராஹ்மணாதிகள் செய்வார்களாயின், அது அவர்க்குப் “பரதர்மமாம்”. 

வேதத்திற்கிணங்காத ஆகமங்களில் சொல்லப்பட்ட பாஷண்ட தர்மம், “உபதர்மமாம்”. பிறரை வஞ்சிப்பதற்காகச் செய்யும் தர்மமும் உபதர்மமே. 

சாஸ்திரங்களிலுள்ள சப்தங்களுக்கு வேறு பொருள் கூறிச் செய்யும் தர்மம், “சலதர்மம்”. செய்தோமென்கிற பேருக்காகச் செய்யும் தர்மமும் அதுவே. அதாவது கோதானம் செய்தோமென்கிற பேருக்காக, சாகப் போகிற பசுவை தானம் செய்கை முதலியதாம். 

தம்முடைய இஷ்டப்படி, நான்கு ஆச்ரமங்களிலும் சேராமல் தனியே ஏற்படுத்திக்கொள்கிற அவதூதாச்ரமம் முதலிய தர்மம், “ஆபாஸ தர்மமாம்”. 

ப்ராஹ்மணாதிகளின் ஸ்வபாவத்திற்கு அனுகுணமாக ஏற்படுத்தப்பட்ட யாகாதி தர்மங்களே, மனத்தின் சாந்தியை விளைக்கும். ஆகையால், பிறருடைய தர்மங்களை அனுஷ்டிப்பதில் ப்ரயோஜனமில்லை. பணமில்லாதவன், தன்னுடைய தர்மங்களை அனுஷ்டிப்பதற்காகவும் கூடப் பணத்தை விரும்பலாகாது. யாத்ரைக்காகவும் கூடப் பணத்தை விரும்பலாகாது. மலைப்பாம்பு போல் ஒரு ப்ரயத்னமும் (முயற்சியும்) செய்யாதிருப்பானாயின், அந்த ப்ரயத்னம் (முயற்சி) செய்யாமையே, அவனுக்கு ஜீவனத்தை விளைக்கும். யத்னம் (முயற்சி) செய்யாமல், தெய்வாதீனமாய்க் (பகவான் அருளால்) கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷமுற்று, தன்னைச் சரீரமாகவுடைய பரமாத்மாவை அனுபவித்துக் களிப்பவனுக்கு உண்டாகும் ஸுகம், சப்தாதி விஷயங்களில் விருப்பமுற்று அவற்றைப் பெறுதற்காகப் பணத்தை விரும்பி எல்லாத் திசைகளிலும் ஓடித்திரியும் புருஷனுக்கு எப்படி உண்டாகும்? 

எதிலும் விருப்பமின்றி தெய்வாதீனமாய்க் (பகவான் அருளால்) கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷமுற்றிருக்கும் புருஷனுக்குத் திசைகளெல்லாம் ஸுகமயமாயிருக்கும். பாதரக்ஷை (செருப்பு) அணிந்தவனுக்கு, முள், கல் முதலியவற்றினின்று க்ஷேமமே உண்டாவது போல, அவனுக்கு எல்லா இடங்களிலும் ஸுகமே உண்டாகும். 

ராஜனே! ஸந்தோஷமுற்றிருப்பானாயின் எவன்தான் கேவல ஜலத்தினால் ஜீவிக்கமாட்டான்? ஸந்தோஷமற்றவன், உபஸ்தம் (பிறப்பு உறுப்பு), ஜிஹ்வை (நாக்கு) இவற்றின் ஸுகத்திற்காக முயன்று, நாய் போல் பிறர்க்கு உழைப்பான். மற்றும், ப்ராஹ்மணன் தெய்வாதீனமாய்க் (பகவான் அருளால்) கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷம் அடையாமல் மேன்மேலும் சப்தாதி விஷயங்களில் விருப்பங்கொண்டு அதற்காக முயற்சி செய்வானாயின், அவனுடைய ப்ரஹ்ம தேஜஸ்ஸும், சாஸ்த்ர ஜ்ஞானமும், உபவாஸம் முதலிய தவமும், புகழும், பாழாய் விடும். சப்தாதி விஷயங்களில் விருப்பம் மாறாதிருக்குமாயின், விவேகாதிகளால் விளைந்த ஞானமும் பறந்துபோகும். காம (ஆசை), க்ரோத (சினம்), லோபங்களை (பேராசை) உடையவன், பசி, தாஹங்கள் தீருமாயின், காமத்தினின்று (ஆசையிலிருந்து) மீளலாம். க்ரோதத்தின் (கோபத்தின்) பலனான பரஹிம்ஸை (பிறரைத் துன்புறுத்துதல்) முதலியன கைகூடுமாயின், அதினின்றும் கரையேறலாம். அவ்வளவில், அந்தக் காம (ஆசை), க்ரோதங்களின் (கோபங்களின்) பலன் கைகூடுகின்றது. ஆகையால், அவற்றினின்றும் ஒருவாறு மீளலாம். திசைகளையெல்லாம் வென்று, பூமண்டலத்தையெல்லாம் ஆண்டாலும், எவனும் லோபத்தினின்று (பேராசையிலிருந்து) கரையேறமாட்டான். 

மஹாராஜனே! இந்த லோபத்தைப் பற்றியே பல பண்டிதர்கள் பல விதமான லோக (உலக)  ந்யாயங்களையும் (நீதிகளையும்), வைதிக (வேத)  ந்யாயங்களையும் (நீதிகளையும்) உணர்ந்து, ஸம்சயங்களை (ஸந்தேஹங்களை) எல்லாம் போக்க வல்லராகி, சபைக்கு முன்னின்று நிர்வஹிக்கும் தீரர்களாயிருந்தும், தெய்வாதீனமாய்க் (பகவான் அருளால்) கிடைத்ததைக்கொண்டு ஸந்தோஷமுற்றிருக்க முடியாமல் நரகத்தில் விழுகிறார்கள். “இது நம்முடைய போகத்திற்குரியது” என்னும் புத்தியைத் துறக்கையால், சப்தாதி விஷயங்களிலுண்டான ஆசையை வெல்ல வேண்டும். காமத்தைத் துறக்கையால், கோபத்தை வெல்லவேண்டும். காமத்தை அனுபவிக்க ஒட்டாமல் தடை செய்பவரிடத்திலன்றோ, கோபம் உண்டாகின்றது. காமத்தை வென்றால், கோபத்தையும் வெல்லலாம். பணத்தினால் பல கெடுதிகள் விளையுமென்பதை ஆராய்கையால், லோபத்தை வெல்ல வேண்டும். சேதன, அசேதன, ஈச்வரர்களென்கிற தத்வங்களின் உண்மையை ஆராய்கையால் பயத்தை வெல்ல வேண்டும். பிறந்தவன் சாவது மாறாது என்பதை ஆலோசித்து, சோக (துன்பம்), மோஹங்களை (மயக்கம், கலக்கம்) வெல்ல வேண்டும். ஜம்பமில்லாத (கர்வம் இல்லாத) பெரியோர்களின் ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்), ஜம்பத்தை வெல்ல வேண்டும். பரமாத்ம த்யானத்திற்கு விக்னங்களான உலக வம்பளப்பு (வீண் பேச்சு) முதலியவற்றை மௌனத்தினாலும், ப்ராணி ஹிம்ஸையைத் தன் தேஹம் முதலியவற்றில் விருப்பின்மையாலும், வெல்ல வேண்டும். ப்ராணிகளாலுண்டான துக்கத்தை, அதற்குக் காரணமான ப்ராணிகளிடத்தில் தயையினாலும், தெய்வாதீனமாய் (தானாக) நேர்ந்த துக்கத்தை, “இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்கிற மன ஸமாதானத்தினாலும், தேஹத்திலுண்டான துக்கத்தை, ப்ராணாயாமம் முதலிய யோக பலத்தினாலும், தூக்கத்தை ஸாத்விகமான ஆஹாரங்களை உட்கொள்ளுகையாலும், வெல்லவேண்டும். ஸாத்விக ஆஹங்காரங்களால் ஸத்வ குணத்தை வளர்த்தி, அதனால் ரஜஸ், தமோ குணங்களையும், மனத்தை அமைதியால் அடக்குவதாலும் வெல்லவேண்டும். குருவிடத்தில் உண்மையான பக்தி செய்வானாயின், இவையெல்லாவற்றையும் அனாயாஸமாக வெல்லலாம். 

ஒன்றான பகவானே ஆசார்யனாகத் தோன்றி, ப்ராணிகளை அனுக்ரஹிக்கிறானென்று சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றனவாகையால், பகவத் ஸ்வரூபனும், ஜ்ஞானமாகிற விளக்கைக் கொடுத்து மஹோபகாரம் (பேருதவி) செய்பவனுமாகிய குருவை, “இவன் நம்மைப் போன்ற ஒரு மனுஷ்யனே” என்று எவன் நினைக்கிறானோ, அவன் செய்த வேதாத்யயனம், முதலியனவும் காமாதிகளை வென்றதும், கஜஸ்னானம் போல (யானை குளிப்பதைப் போல; அது குளித்த பின் தன் தலையில் மண்ணை வாரிப்போடும்) பயனற்றதேயாம். இந்த ஸ்ரீக்ருஷ்ணன், ப்ரக்ருதி (அசேதனப் பொருட்களையும்) புருஷர்களுக்கு (ஜீவாத்மாக்களையும்) நியாமகனும் (நியமிப்பவன்), எங்களைப் போன்ற யோகீச்வரர்களால் த்யானிக்கத் தகுந்த பாதாரவிந்தக்களை உடையவனுமாகிய ஒன்றான பகவானே. 

இவ்விஷயத்தில் ஸந்தேஹம் இல்லை. ஆயினும், இவ்வுலகத்து ஜனங்கள், இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஸ்வரூபத்தை அறியாமையால், இவனைத் தம்மைப் போலவே ஸாதாரணமான ஒரு மனுஷ்யனாக நினைக்கிறார்கள். இவ்வாறே குருவின் உண்மையை அறியாத மூடர்கள், அவனைச் சாதாரண மனுஷ்யனாக நினைக்கிறார்கள். ஆறு இந்திரியங்களை வென்று அடக்குகையாகிற இந்த ப்ரயோஜனத்திற்காகவே சாஸ்த்ரங்கள், வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டுமென்று விதிக்கின்றன. அவை அந்த ப்ரயோஜனத்தை விளைக்காது போகுமாயின், பயனற்றவைகளே. மற்றும், அந்த வர்ணாச்ரம தர்மங்கள், இந்திரிய ஜயத்தை விளைத்தும் (புலன்களை வென்றும்) பரமாத்ம த்யானத்தை விளைக்காது போகுமாயின், வீண் சிரமத்தையே விளைப்பவையாம். 

ஜீவனத்திற்காக ஏற்பட்ட யாஜனாதி (யாகம் முதலிய) கர்மங்கள், பரமாத்ம த்யான ரூபமான யோக அனுஷ்டானத்தையே (த்யானத்தையே) முக்யமாகவுடைய ஜீவனத்தை விளைக்காது போகுமாயின், அவையும் ப்ரயோஜனம் அற்றவைகளேயாம். அவ்வாறு இருக்கும் புருஷன் செய்கிற ஸ்மார்த்த (ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட), யாகாதியான வைதிக (வேதத்தில் சொல்லப்பட்ட) கர்மங்களும் பயனற்றவைகளே. மனத்தை அடக்கி ஆளுந்திறமையுடையவன், பிள்ளை, பெண்டிர் முதலியவர்களிடத்தில் மனப்பற்றைத் துறந்து சரீரம் தவிர மற்ற பரிக்ரஹங்கள் (பொருள், சொத்து) எவையுமின்றி நான்காவது ஆச்ரமமான ஸன்யாஸ ஆச்ரமத்தைப் பற்றவேண்டும். ஸன்யாஸியான பின்பு, தானொருவனேயாகி, ஜன ஸஞ்சாரமில்லாத (மக்கள் நடமாட்டமில்லாத) இடத்தில் இருந்துகொண்டு, பிக்ஷையால் (பிச்சையால்) கிடைத்த அன்னத்தை மிதமாகப் புசித்து, பரிசுத்தமாய் மேடு பள்ளமில்லாத இடத்தில் தன்னுடைய ஆஸனத்தை அசையாதபடி அமைத்து, அதன்மேல் தர்ப்பாஸனத்தையும் அதன் மேல் மான்தோலையும், அதன்மேல் வஸ்த்ரத்தையும் பரப்பி, அந்த ஆஸனத்தின் மேல் உட்கார்ந்து, சரீரத்தை நேராக நிறுத்தி, ஓம் என்று அனுஸந்திக்க வேண்டும். 

பூரகம் (மூச்சை உள் இழுத்தல்), கும்பகம் (மூச்சை அடக்குதல்), ரேசகம் (மூச்சை வெளி விடுதல்) இவைகளால் ப்ராண (மூச்சுக் காற்று), அபான (உடலில் கீழ் நோக்கிச் செல்லும் வாயு) வாயுக்களை அடக்க வேண்டும். மனம் சப்தாதி விஷயங்களில் எதுவரையில் ஓடாதிருக்குமோ, அதுவரையில் கண்களை மூக்கு நுனியில் நிறுத்தி, ப்ராணாயாமம் செய்யவேண்டும். மனம் சப்தாதி விஷயங்களைப் பற்றின விருப்பங்களால் இழுக்கப்பட்டுச் சுழன்று கொண்டு எந்தெந்த விஷயத்தை நினைக்குமோ, அந்தந்த விஷயத்தினின்று அதை இழுத்து, ஹ்ருதயத்திலிருக்கின்ற சுபாச்ரயமான (பாபத்தைப் போக்குவதும், த்யானிக்கத்தக்கதுமான) பரமபுருஷனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தில் நிலைநிறுத்த வேண்டும். இப்படித் தினந்தோறும் விடாமல் அப்யஸித்து (பயிற்சி செய்து) வருகிற ஸன்யாஸியின் மனம், ஸ்வல்ப (குறுகிய) காலத்திற்குள்ளாகவே வேறு விஷயங்களில் செல்லுகை தவிர்ந்து, நிலை பெறும். கட்டையில்லாத நெருப்பு தானே அணைவதுபோல, அவனுடைய மனம் தானே ஓய்ந்திருக்கும். 

சப்தாதி விஷயங்களின் விருப்பங்களால் இழுக்கப்படாமல் மற்ற நினைவுகளெல்லாம் ஒழியப்பெற்ற அத்தகைய மனம், பரப்ரஹ்மானுபவ (பகவனை அனுபவிக்கிற) சரீரமாகிற இந்த ரதம் எவ்வளவு காலம் தனக்கு ஸ்வாதீனமாய் (வசமாய்) இருக்கின்றதோ, அதற்குள்ளாகவே பெரியோர்களின் பாதார விந்தங்களைப் பணிந்து, அதனால் கிடைத்த கூருள்ள அறிவாகிற கத்தியை ஏந்தி, ராகம் (விருப்பு,வெறுப்பு) முதலிய சத்ருக்களை (எதிரிகளை) அழித்து, தன் பக்தர்களைக் கைவிடாத பகவானையே பலமாகப்பற்றி, மனக்கலக்கமற்று, மோக்ஷ ஐச்வர்யத்தை நமக்குப் பகவான் அவச்யம் கொடுப்பானென்று ஸந்தோஷமுற்று, சரீரம் (உடல்) முதலியவற்றிலும் அதைத் தொடர்ந்த மற்றவைகளிடத்திலும், மனப்பற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்யவில்லையாகில், மனவூக்கமற்றிருக்கிற அவனை, வெளியில் திரியும் துஷ்ட (கெட்ட) ஸ்வபாவமுடைய இந்திரியங்களாகிற குதிரைகளும், புத்தியாகிற பாகனும், கெட்ட வழியான ப்ரவ்ருத்தி (ஸம்ஸாரத்தை வளர்க்கும்) மார்க்கத்தில் கொண்டு போய் நுழைத்து சப்தாதி விஷயங்களாகிற திருடர்களிடத்தில் தள்ளிவிடுவார்கள். அந்தத் திருடர்கள், குதிரைகளோடும், பாகனோடும் கூடி ஊக்கமற்றிருக்கிற அவனை, பெரிய மரண பயமுடையதும், அந்ததாமிஸ்ரமென்கிற நரகம் போன்றதுமாகிய ஸம்ஸாரமாகிற பாழுங்கிணற்றில் தள்ளிவிடுவார்கள். 

வேதத்தில் விதிக்கப்பட்ட கர்மங்கள், ப்ரவ்ருத்தி (ஸம்ஸாரத்தை வளர்க்கும்) கர்மமென்றும், நிவ்ருத்தி (ஸம்ஸாரத்திலிருந்து விடுபட உதவும்) கர்மமென்றும் இருவகைப்பட்டிருக்கும். ப்ரவ்ருத்தி கர்மத்தினால், அனுபவத்திற்காக ஸ்வர்க்காதி லோகாந்தரங்களுக்குச் சென்று மீளவும் இந்தக் கர்ம பூமிக்குத் திரும்பி வருவான். நிவ்ருத்தி கர்மத்தினால், மீளுதலில்லாத மோக்ஷத்தைப் பெறுவான். அக்னி ஹோத்ரம், தர்சம், பூர்ணமாஸம், சாதுர்மாஸ்யம், பசுயாகம், ஸோமயாகம், வைச்வதேவம், பலிஹரணம் இவை முதலிய வேதோக்தமான (வேதத்தில் சொல்லிய) கர்மங்களெல்லாம் ப்ராணி ஹிம்ஸைக்கிடமாகி, புரோடாசம் முதலிய த்ரவ்யங்கள் நிறைந்திருப்பவை. இவற்றை, ஸ்வர்க்காதி பலன்களை விரும்பிச் செய்வானாயின், ப்ரவ்ருத்தி கர்மங்களென்று பெயர் பெறுகின்றன. அக்கர்மங்கள், ராகம் (விருப்பு, வெறுப்பு) முதலிய தோஷங்களை மேன்மேலும் வளர்க்குமன்றி, அவற்றைப் போக்க மாட்டாது. பலன்களை விரும்பாமல் பகவானுடைய ஆராதனமென்னும் புத்தியுடன் செய்வானாயின், அப்பொழுது நிவ்ருத்தி கர்மங்களென்று பெயர் பெறுகின்றன. அவை ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்களைப் போக்கி, மனத்தெளிவை விளைக்கும். தேவாலயங்களை நிர்மாணம் செய்கை, தோட்டங்களை வளர்க்கை, கிணறு முதலியன வெட்டுவிக்கை, ப்ராணிகளுக்கு ஜீவனம் கற்பிக்கை, முதலியவை பூர்த்த தர்மங்களாம். இவை ஸ்மார்த்த கர்மங்களென்றும் கூறப்படும். 

கர்ப்பாதானம் முதல் மயானத்தில் கொண்டு போய்ச் செய்கிற தஹனம் வரையிலுமுள்ள ஸம்ஸ்காரங்களெல்லாம் செய்யப்பெற்ற ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களென்கிற மூன்று வர்ணத்தவர்களும், யாகம் முதலிய வைதிக கர்மங்களையும், குளம், கிணறு வெட்டுவித்தல், தேவாலயம் கட்டுவித்தல் முதலிய ஸ்மார்த்த கர்மங்களையும் அனுஷ்டித்து வருவார்களாயின், தேஹத்தைத் துறந்தபின்பு, பூத ஸூக்ஷ்மங்களால் (பஞ்சபூதங்களின் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய நிலை) அணைக்கப் பெற்று, தூமம், ராத்ரி, க்ருஷ்ணபக்ஷம், தக்ஷிணாயனம் என்னும் தேவதைகளை ஒவ்வொருத்தரையும் க்ரமமாக அடைந்து, கடைசியில் சந்த்ரனிடம் சேர்ந்து, அங்கு அம்ருதமயமான சரீரம் பெற்று, கர்மபலன்களை அனுபவித்து, அச்சரீரத்தைத் துறந்து, அந்தச் சந்திரனிடத்தினின்று க்ரமமாக செடி, கொடி, அன்னம், ரேதஸ்ஸு என்னுமிவைகளில் ஒவ்வொன்றிலும் சிற்சில காலம் தங்கியிருந்து, கடைசியில் இவ்வுலகத்தில் பிறக்கிறார்கள். தூமம் முதல் சந்த்ரன் வரையிலுமுள்ள இம்மார்க்கம், பித்ருயாணமென்னும் பேருடையது. இவ்வழியில் சென்றவர்கள், மீண்டும் இவ்வுலகில் வந்து பிறப்பார்கள். செடி முதல் ரேதஸ்ஸூ வரையிலுமுள்ள இம்மார்க்கம் புனர்ப்பவயானமென்னும் பேருடையது. 

இது தவிர, தேவயானமென்றொரு வழி உண்டு. அவ்வழியில் போக விரும்புகிறவர்கள், கண், காது முதலிய ஜ்ஞானேந்த்ரியங்களில், கர்மேந்திரியங்களின் வ்யாபாரங்களையும், ஸங்கல்பமாகிற அலைகளையுடைய மனத்தில் ஜ்ஞானேந்த்ரியங்களையும், ஸத்வம் தலையெடுத்த அம்மனத்தைச் சாஸ்த்ரத்திலும், ஹோமம் செய்வார்கள். அந்தச் சாஸ்த்ரத்தை, அக்ஷர மாத்ருகையிலும் (ஸம்ஸ்க்ருத மொழியில் “அ” முதல் “க்ஷ” வரையிலான 51 எழுத்துக்கள் மாத்ருகை எனப்படும்), அவ்வக்ஷர மாத்ருகையை ஓங்காரத்திலும் (ப்ரணவத்திலும்), அந்த ஓங்காரத்தைப் பிந்துநாதத்திலும் (பிந்துநாதமென்பது, நான்காம் மாத்ரை. மாத்ரையாவது வர்ண உச்சாரண காலத்தின் அளவு), அந்தப் பிந்து நாதத்தை ஜீவனிடத்திலும், அடங்கினதாகப் பாவிப்பார்கள். அந்த ஜீவனையும் பரமபுருஷனிடத்தில் அர்ப்பணம் செய்வார்கள். பிறகு, சரீரத்தினின்று கிளம்பி, அக்னி, ஸூர்யன், திவஸம், ப்ராஹ்ணம் (பகலின் முடிவு), சுக்லபக்ஷம், பௌர்ணமாஸி, உத்தராயணம், அமானவன் என்னும் இவ்வழியாகச் சென்று பரம், வ்யூஹம் முதலிய பல அவதாரங்களையுடைய பரமபுருஷனைப் பெறுகின்றார்கள். இவ்வழியை, தேவயானமென்று வேதாந்தங்கள் சொல்லுகின்றன. பரமாத்மாவை உபாஸிக்கிறவன், அக்னி முதலிய தேவதைகளில் ஒவ்வொருவருடைய ஸ்தானத்தையும் க்ரமமாக அடைந்து, கடைசியில் ப்ரக்ருதி ஸம்பந்தம் அடியோடு தீர்ந்து, அபஹதபாப்மத்வம் (பாப ஸம்பந்தம் இல்லாமை) முதலிய குணங்கள் அமைந்த ஆத்ம ஸ்வரூபம் தோன்றப்பெற்று, பரமாத்மாவை அனுபவித்துக்கொண்டு இருப்பானன்றி, அதினின்று மீண்டு வரமாட்டான். 

வேதத்தினால் விவரிக்கப்பட்ட பித்ருயானமென்றும், தேவயானமென்றும் பேருடைய இவ்விரண்டு மார்க்கங்களையும் சாஸ்த்ரமாகிற கண்ணால் கண்டறிகிற எவனும் மதி (புத்தி) மயங்கமாட்டான்; பக்தியோகத்தினால் பரமபுருஷனை அடைவான். அப்பரமபுருஷன், ஸ்ருஷ்டிக்கு முன்பும், ப்ரளயத்திலும், இடையிலுள்ள ஜனங்களின் உள்ளும் புறமும் அமைந்திருப்பவன். ஜ்ஞான ஸ்வரூபர்களாய் மேன்மைக்கிடமான ஜீவாத்மாக்களும், அவர்களால் அறியத்தக்கதும் தாழ்மைக்கிடமுமாகிய அசேதனமும் அமைந்து, நாமரூபங்களுக்கிடமாயிருப்பதும், சேதனாசேதன ரூபமுமான ஸகல வஸ்துக்களும் மூல ப்ரக்ருதியும் ஸமஷ்டி ஜீவனுமாகிய இவையெல்லாம் இப்பரமபுருஷனேயன்றி வேறில்லை. கண்ணுக்குப் புலப்படுகின்ற இத்தேஹம், அழியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுதும், புருஷார்த்தமாகாதென்று பெரியோர்கள் நிரூபிக்கிறார்கள். அவ்வாறே, சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்று பிரிந்திருப்பதும், இந்த்ரியங்களால் அனுபவிக்கப்படுவதுமாகிய மற்ற வஸ்துவும் புருஷார்த்தமன்று. புருஷார்த்தமாவது, புருஷர்களால் ஆசைப்படத்தகுந்த பொருள். அத்தன்மை மஹாநந்த ஸ்வரூபனாகிய பரமபுருஷனொருவனுக்கே உள்ளதன்றி, மற்ற எதற்கும் கிடையாது. 

அஹங்காரத்திற்கிடமான சரீரம், அநித்யமாயிருப்பது போல, மமகாரத்திற்கிடமான சப்தாதி விஷயங்களும், அநித்யங்களே. ஸ்வப்னத்தில் (கனவில்) அனுபவிக்கப்படும் தேஹம், அப்பொழுது தொடர்ந்திருப்பினும், விழித்துக்கொண்ட பின்பு புலப்படாமையாலும், அப்பொழுதும் ஆத்மா நானென்று தோற்றுகையாலும், அது ஆத்மாவன்று என்பது வெளிச்சமே. அவ்வாறே, விழித்துக்கொண்டிருக்கும் சரீரமும் ஆத்மாவாக மாட்டாது. ஆத்மாவுக்கு இயற்கையில் ஏற்பட்ட நித்யத்வம் முதலிய தர்மங்கள், அச்சரீரத்தில் ஸம்பவிக்கமாட்டாது. பூமி முதலிய பஞ்சபூதங்களின் பரிணாம ரூபங்களான வ்ருக்ஷங்களின் (மரங்களின்) நிழல் அந்த வ்ருக்ஷங்களைச் சேர்ந்தவற்றில் எதிலும் உட்பட்டதன்று. வ்ருக்ஷங்களின் ஸமுதாயம் நிழலென்று சொல்ல முடியாது. வ்ருக்ஷங்களின் பரிணாமத்தினால் ஏற்பட்டதென்றும் சொல்ல முடியாது. ஆயினும், வ்ருக்ஷங்களை விட்டுப் பிரிந்திருக்கத்தக்கதுமன்று. வ்ருக்ஷங்கள் எதுவரையில் இருக்குமோ, அதுவரையில் அவற்றை விடாமல் தொடர்ந்திருப்பதுமன்று. ஒருகால் தோன்றி ஒருகால் தோன்றாதிருக்கிறதாகையால், அநித்யம். இவ்வாறே, சரீரமும் ஆத்மாவை விட்டுப் பிரிந்திருக்க மாட்டாதாகையால், அவ்வாத்மாவின் நிழல் போன்றிருக்கும். சரீரம், ஆத்மாக்களின் ஸமுதாயமென்று சொல்ல முடியாது. ஆத்மாவின் பரிணாமமென்றும் சொல்ல முடியாது. ஆத்மாவை விட்டுப் பிரிந்திருக்கவும் மாட்டாது. அநித்யமாகையால், ஆத்மாவாக மாட்டாது. பூமி முதலிய பஞ்சபூதங்களும், தன்மாத்ரங்களாகிற அவயவங்கள் சேர்ந்த ஸமுதாயங்களாகையாலே, தன்மாத்ரங்கள் (பஞ்ச பூதங்களின் ஸூக்ஷ்மமான நிலை) அழியுமாயின், ஸமுதாய ரூபங்களான அந்தப் பஞ்ச பூதங்களும் அழிந்து போகும். அவயவங்களையுடைய பூதங்கள், அழிகையில் அவற்றின் அவயவங்கள் கடைசியில் இல்லாமலே போய்விடும். சரீரமும், பஞ்ச பூதங்களின் ஸமுதாய ரூபமாகையால், அநித்யமே (அழியக்கூடியதே). ஆகையால், அத்தகையதான சரீரத்தை நித்யனான ஆத்மாவென்று ப்ரமிக்கலாகாது (நினைத்து மயங்கக் கூடாது). இரண்டு வஸ்துக்கள் குணங்களால் ஒன்றோடொன்று ஒத்திருக்குமாயின், அந்த ஒற்றுமையே ஒன்றை மற்றொன்றாக ப்ரமிப்பதற்குக் (தவறாக நினைப்பதற்குக்) காரணமாகும். தேஹத்திற்கும், ஆத்மாவுக்கும் அவ்வாறு ஒற்றுமை இல்லாமையால், தேஹத்தில் ஆத்மாவென்னும் ப்ரமம் (தவறான எண்ணம்) ஒற்றுமையைப் பற்றி வந்ததன்று. அக்னியின் ஸம்பந்தமுடைய ஜலத்தை உஷ்ணமென்று ப்ரமிப்பது (நினைத்து மயங்குவது) போல, ஆத்மாவை விட்டுப் பிரியாதிருக்கின்ற சரீரத்தை, ஆத்மாவென்று ப்ரமிக்கிறார்கள் (நினைத்து மயங்குகிறார்கள்). ஒருவன் உறங்கும் பொழுது, தான் உறங்குவதாகவும், விழித்துக்கொண்டிருப்பதாகவும், ஸ்வப்னம் (கனவு) காண்கிறான். விழித்துக் கொண்ட பின்பு, ஸ்வப்னத்தில் (கனவில்) தான் விழித்துக்கொண்டதாகக் கண்டது உண்மையன்று என்று தெரிந்து கொள்கிறான். அவ்வாறே, உண்மையான ஆத்மஸ்வரூபத்தை அறியாத ஸம்ஸாரிகள் “எனக்குத் தெரியும்” என்றும், “எனக்குத் தெரியவில்லை” என்றும் நினைக்கிற ஜ்ஞானத்தின் விதி, நிஷேதங்கள் (செய், செய்யாதே என்பது), அஜ்ஞான கார்யங்களே (அறியாமையின் விளைவுகளே). ஸம்ஸாரிகளுக்கு, ஆத்ம ஜ்ஞானமில்லாமையால், அவர்களுக்கு மற்ற விஷயங்களைப் பற்றி உண்டாகிற அறிவுகளும், அஜ்ஞானங்களே (அறியாமையே). தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்த ஜ்ஞானிகளுக்கு, அது கிடையாது. பரமாத்மாவை உபாஸிக்கிறவன் பாவாத்வைதம், க்ரியாத்வைதம், த்ரவ்யாத்வைதம் (விவரம் பின்னால் தரப்பட்டுள்ளது) என்று மூன்று வகைப்பட்ட உண்மையான அத்வைதங்களை மனத்தில் நிச்சயித்துக்கொண்டு, தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பதும் (வேறாயிருப்பதும்), பரமபுருஷனுக்கு உட்பட்டதுமாகிய ஆத்ம ஸ்வரூபத்தை ஆராய்ந்து, ப்ரமரூபமான (மனக்கலக்க ரூபமான) மூன்று அத்வைதங்களையும் துறப்பான். 

கார்ய காரணங்களிரண்டும் ஒன்றேயென்று நினைக்கை பாவாத்வைதமாம். அதாவது, நூல்கள் ஒன்றோடொன்று சேர்க்கப்பட்டுத் துணியாக ஏற்படுகின்றனவாகையால் நூல்களும் துணியும் ஒன்றாயிருப்பது போல, சேதன, அசேதன, ஈச்வரர்களாகிற மூன்று வஸ்துக்கள் அமைந்த இந்த ப்ரபஞ்சமெல்லாம், ஸூக்ஷ்ம சேதனா சேதனங்களோடு கூடின பரமபுருஷனைக் காட்டிலும் வேறுபட்டது அன்று என்று நினைக்கையே. இந்நினைவினால், பரமபுருஷனல்லாத வஸ்து உண்டு என்கிற ப்ரமத்தைத் (மனக்கலக்கத்தைத்) துறக்க வேண்டும். 

யுதிஷ்டிரனே! மனோ (மனது), வாக் (சொல்), காயங்கள் (உடல்) என்கிற மூன்று கரணங்களாலும் தாம் செய்யும் கர்மங்களையெல்லாம் பரமபுருஷனிடத்தில் அர்ப்பணம் செய்கையே க்ரியாத்வைதமாம். இதனால், கர்மங்கள் ஈச்வரனை எதிர்பாராமல் தாமே பலன்களை விளைக்கின்றன என்கிற ப்ரமத்தைத் (மனக்கலக்கத்தைத்) துறக்க வேண்டும். 

தான் ஸம்பாதித்த பணத்தையும் அதனால் ஏற்பட்ட மற்ற போக்ய வஸ்துக்களையும் வீடு, வாசல் முதலிய மற்றவைகளையும், தன், புதல்வன் முதலிய ஸமஸ்த ப்ராணிகளுக்கும் பொதுவாக நினைக்கையே த்ரவ்யாத்வைதமாம். இதனால், தான் ஸம்பாதித்ததெல்லாம் தனக்கேயென்னும் ப்ரமத்தைத் (மனக்கலக்க்கத்தைத்) துறக்கவேண்டும்.

ஜீவாத்மாக்கள், ஜ்ஞானத்தையே வடிவாகவுடையவராகையால், ஒருபடிப்பட்டவரென்று நினைக்கையும், தேஹம், வீடு, பணம் முதலிய மற்றவையெல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமங்களாகையால் (மாற்றங்களாகையால்) ஒரு படிப்பட்டவையென்று நினைக்கையும் ஆகிய இவ்விரண்டு நினைவுகளும் த்ரவ்யாத்வைதமாம். இதனால், சரீரங்கள் தோறும் ஆத்மாக்கள் வெவ்வேறு தன்மைகளை உடையவர்கள் என்கிற ப்ரமத்தையும் (மனக்கலக்க்கத்தையும்), பணம், வீடு, வாசல் முதலியவை ப்ரக்ருதியைத் தவிர வேறு வஸ்துவின் பரிணாமமென்னும் ப்ரமத்தையும் (மனக்கலக்கத்தையும்)  துறக்க வேண்டும். மற்றும் எவ்விதத்திலும் கெடுதியில்லாத ஜ்ஞான  நிஷ்டையிலிருப்பவன், சாஸ்த்ரத்தில் எந்த வஸ்துவுக்கு எந்த வஸ்துவோடு அபேதம் (வேற்றுமை இன்மை) நிரூபிக்கப்பட்டிருக்கின்றதோ அதையும் அனுஸந்தித்துக்கொண்டே, செய்யவேண்டிய கர்மங்களைச் செய்ய முயலவேண்டும். சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப்பட்ட (மறுக்கப்பட்ட) அபேதங்களை (வேற்றுமை இன்மைகளை) நெஞ்சிலும் நினைக்காமல் மறக்க வேண்டும். இவ்வாறு ச்ருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸம், புராணம் முதலியவற்றில் சொல்லப்பட்ட பாவாத்வைதம் முதலிய அபேதங்களையும் (வேற்றுமை இன்மை), தேஹம், ஜீவாத்மா, ஈச்வரன் இவர்களுக்குள்ள பேதத்தையும் (வேற்றுமையையும்) அனுஸந்தித்து, வர்ணாச்ரம கர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு, பகவானிடத்தில் பக்தியை வளர்த்திக் கொண்டு வருவானாயின், க்ருஹஸ்தாச்ரமத்தில் இருப்பவனும் ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதியான மோக்ஷத்தைப் பெறுவான். 

மன்னவனே! ஸர்வசக்தியும், ஸர்வாந்தராத்மாவுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய அனுக்ரஹத்தினால் தான் நீங்கள் கடக்க முடியாத பற்பல ஆபத்துக்களையெல்லாம் கடந்தீர்கள். மற்றும், நீ இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களைப் பணிந்திருந்த மஹிமையால், திக் பாலர்களையெல்லாம் வென்று மஹர்ஷிகளுடன் யாகங்களைச் செய்தாய். அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய அனுக்ரஹத்தினாலேயே, நீ மோக்ஷத்வையும் பெறுவாய். ஆகையால், நீ உன்னைப்பற்றிச் சிந்திக்க வேண்டியதே இல்லை. 

யுதிஷ்டிரனே! நான் கடந்த ப்ரஹ்ம கல்பத்தில் உபபர்ஹணனென்று பேர் பெற்ற ஒரு கந்தர்வனாயிருந்தேன். கந்தர்வர்களெல்லோரும் என் குணங்களுக்கு ஸந்தோஷப்பட்டு என்னைப் புகழ்ந்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது நான் ஸௌந்தர்யம் (அழகு), மாதுர்யம் (இனிமையான குரல்), ஸௌகந்தயம் (நல்ல வாசனை) முதலிய குணங்களால் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி இனியனாயிருந்தேன். மற்றும், மாதர் மணிகள் எப்பொழுதும் மிகுந்த அன்பு செய்யத் தகுந்த பேரழகனாகி மதித்துச் (கர்வத்துடன்) சப்தாதி விஷயங்களில் மிகுதியும் ஆவலுற்றிருந்தேன். ஒரு கால் ப்ரஜாபதிகள் பகவானுடைய குணங்களை அனுபவித்துக் களிக்கையாகிற (இன்புறுவதாகிய) ப்ரஹ்மஸத்ரத்தை (நீண்ட நாட்கள் செய்யப்படும் யாகம்) நடத்த முயன்று பகவானுடைய கதைகளைப் பாடும் பொருட்டுக் கந்தர்வர்களையும், அப்ஸரஸ்த்ரீகளையும் வரவழைத்தார்கள். அப்பொழுது, கந்தர்வர்களை அழைத்தார்களென்று தெரிந்து, ஸ்த்ரீகளால் சூழப்பட்டுப் பகவானுடைய குணங்களைத் தழுவாத வேறு பாடல்களைப் பாடிக்கொண்டு, அவ்விடம் சென்றேன். அந்த ப்ரஜாபதிகள் நான் செய்ததை அபராதமாக நினைத்து, “இவ்வாறு எங்களை அவமதித்த நீ கந்தர்வ சோபை (அழகு) அழியப்பெற்று உடனே கீழ்ஜன்மத்தைப் பெறுவாயாக” என்று தமது தவமஹிமையால் சபித்தார்கள். அப்பொழுதே,  நான் ஒரு கீழ் ஸ்த்ரீக்குப் பிள்ளையாகப் பிறந்தேன். அந்த ஜன்மத்திலும் பரமபுருஷனை உள்ளபடி அறிந்து, பிறர்க்கும் உபதேசிக்கும் திறமையுடைய ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களுக்குச் சுச்ருஷை (பணிவிடை) செய்கையாலும், அவர்களுடைய ஸஹவாஸத்தாலும் (தொடர்பாலும்) இந்தக் கல்பத்தில் ப்ரஹ்ம தேவனுக்குப் புதல்வனாகப் பிறந்தேன். பகவானுடைய ஸம்பந்தமுடைய அந்தணர்களின் ஸஹவாஸத்தினால் (தொடர்பினால், சேர்க்கையால்), நான் இப்படிப்பட்ட ஜ்ஞான ஜன்மத்தைப் பெற்றேன். நீ நேரே அந்தப் பகவானோடு ஸஹவாஸம் செய்தவன் (கூடவே வஸித்தவன்). நீ உன் மோக்ஷத்தைப் பற்றிச் சிந்திக்க இடமே இல்லை. 

மன்னவனே! கேட்ட மாத்ரத்தில் பாபத்தைப் போக்கவல்ல க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை உனக்கு மொழிந்தேன். க்ருஹஸ்தாச்ரமத்திலிருப்பவன், இதை அனுஷ்டிப்பானாயின், பகவானிடத்தில் ஆத்ம ஸமர்ப்பணம் செய்த ஞானிகள் பெறும் பதவியான மோக்ஷத்தைப் பெறுவான். பகவானுடைய அனுக்ரஹத்திற்குப் பாத்ரமாகிய நீ, இந்தத் தர்மத்தை அனுஷ்டித்துப் பெறவேண்டியது ஒன்றுமில்லை. ஆ! இந்த மனுஷ்யலோகத்தில் நீங்கள் மிகுந்த பாக்யமுடையவர்கள். ஏனென்றால், ஸாக்ஷாத் பரப்ரஹ்மம் ஸ்ரீக்ருஷ்ண ரூபியாய் மானிட உருவம் பூண்டு, மறைந்து, உங்கள் க்ருஹத்தில் வஸிக்கிறதென்று உலகங்களையெல்லாம் புனிதம் செய்பவர்களான முனிவர்கள், உங்கள் க்ருஹத்திற்கு நாற்புறத்தினின்றும் வருகின்றார்கள். எங்கள் மாமனாகிய ஸ்ரீக்ருஷ்ணனைப் பரப்ரஹ்மமென்று எவ்வாறு சொல்லலாமென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். பேரறிஞர்களான யோகிகளால் த்யானிக்கத் தகுந்ததும், கேவல ஜ்ஞானாநந்த ஸ்வரூபமுமாகிய பரப்ரஹ்மம், இந்த ஸ்ரீக்ருஷ்ணனே. இவன் உங்களுக்கு மாமன் மாத்ரமேயல்லன்; ப்ரீதிக்கிடமான நண்பனும், அந்தராத்மாவும், பூஜிக்கத் தகுந்தவனும், நியாமகனும் (நியமிப்பவனும்), ஹிதோபதேசம் செய்பவனும் அவனே. தங்கள் பாக்யத்தை என்னென்று சொல்லமுடியும்? ப்ரஹ்மதேவன், ருத்ரன் முதலிய எப்படிப்பட்ட ஜ்ஞானிகளும் இந்திரியங்களை வென்று பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானித்துப் பக்தியுடன் ஆராதிப்பார்களேயன்றிப் புத்தியால் எவ்வளவு தூரம் த்யானித்தாலும், அவனை உள்ளபடி அறிய மாட்டார்கள். யோகேச்வரர்களுக்கு ப்ரபுவாகிய அந்த ஸர்வேச்வரன் எனக்கு அருள் புரிவானாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரத வம்சாலங்காரனாகிய யுதிஷ்ட்ரன், தேவர்ஷியாகிய நாரதர் மொழிந்ததைக் கேட்டு மிகவும் ஸந்தோஷம் அடைந்து, ஸ்ரீக்ருஷ்ணனையும், அப்பொழுது பக்கத்திலிருந்த நாரதரையும், ப்ரீதியினால் தழதழத்துப் பூஜித்தான். நாரத முனிவரும், ஸ்ரீக்ருஷ்ணனையும், யுதிஷ்டிரனையும் பார்த்துப் போய் வருகிறேனென்று விடை பெற்றுக்கொண்டு, புறப்பட்டுப்போனார். யுதிஷ்டிரனும் ஸ்ரீக்ருஷ்ணனே பரப்ரஹ்மமென்று நாரதர் மொழியக் கேட்டு, மிகவும் வியப்புற்றான். இவ்வாறு, தக்ஷரது புதல்விகளான திதி முதலியவர்களின் வம்சங்களைத் தனித்தனியே உனக்கு மொழிந்தேன். இந்த வம்சங்களில் தான் தேவர், அஸுரர், மனுஷ்யர், முதலிய ஜங்கம (அசைபவை) ஸ்தாவரங்கள் (அசையாதவை) அடங்கின இவ்வுலகங்களெல்லாம் உண்டாயின.

பதினைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

ஸப்தம (ஏழாவது) ஸ்கந்தம் முற்றுப்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக