நலம் தரும் நாமம்! - உ.வே.கருணாகரச்சாரியார் ஸ்வாமி

இராமாயணத்தில், வானரங்கள் கடலில் போட்ட கற்கள் எல்லாம் மிதந்தது என்று வரும். கற்கள் எப்படி மிதக்கும் எனக் கேள்வி எழுப்பினோமானால், ராம நாமத்தால்தான் கற்கள் எல்லாம் மிதந்தன என்று தெரிய வரும். ஆம்! வானரங்கள் கற்களை கடலில் போடுவதற்கு முன் அதில், 'ராம' என்ற நாமத்தை எழுதித்தான் கடலில் போட்டார்கள். இப்படி ராம நாமத்தின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம் என்றார் 'ராம நாம மகிமை' என்ற தம் உபன்யாசத்தில் உ.வே.கருணாகராச்சாரியார்.

"ராம நாமம், நம் பாவத்தை எல்லாம் போக்க வல்லது. எப்படி? நாம் செய்த பாவம் எல்லாம் 'ரா' என்று சொல்லும் பொழுது, வெளியில் போய் விடுகிறது. நாம் செய்த பாவங்கள் என்ன என்பது நமக்குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால், அதைப் போக்கிக் கொள்ள வழி தெரியாமல்தான் திண்டாடுகிறோம். ஆக, 'ரா' என்று சொல்லும் பொழுது நாம் இத்தனை நாட்கள் செய்த பாவங்கள் எல்லாம் போய் விடுகின்றன. 'ம்' என்று சொல்லும்பொழுது வாய் மூடிக்கொள்வதால் மீண்டும் பாவங்கள் உள்ளே வராது. சம்சாரம் என்னும் பெரிய கடலை, தாண்டவைக்கக் கூடிய பேராற்றல் வாய்ந்தது ராம நாமம்.

எந்த ஊர்ல போய் கோயில்கள்ல ராமர் விக்ரகத்தைப் பார்த்தோமானால், ராமர் நம்மைப் பார்த்து சந்தோஷமாக புன்முறுவல் பூத்த முகத்தோடுதான் காட்சி தருவார். 'புன்னகை புனிதன்' ராமர்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்துல வருமே 'ஸ்ரீராம ராம ராமேதி' ன்னு. அதைச் சொன்னவர் சாட்சாத் பரமேஸ்வரன்தான். ஒரு ஏகாதசி அன்னிக்கு, பரமேஸ்வரன் ஏகாதசி உபவாசம் இருந்து கொண்டிருந்த சமயம். அடுத்த நாள் துவாதசி வந்தது. பார்வதி தேவி சமையல் செய்து கொண்டிருக்கிறாள். 'விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணிட்டேளா?' ன்னு பார்வதி கேட்க, 'ஸ்மார்ட் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணிட்டேன்' என்கிறார் பரமேஸ்வரன். 'ஸ்ரீராம ராம ராமேதி' வந்தது அப்படித்தான். இந்த உலகத்துல இருக்குற அத்தனை உயிர்களுக்கும், 'ராம' நாம பெருமையைச் சொல்லணும்னு ஆசைப்பட்டார் பரமேஸ்வரன். அதனால்தான் காசில போய் உடகார்ந்தார். ராம நாமத்தைப் பற்றியோ, அதன் உயர்வைப் பற்றியோ ஒன்றுமே தெரியாத ஒரு ஜீவன்கூட காசில உயிர் விட்டா அதை மோட்சத்திற்கு அனுப்பி வைக்க, ஒவ்வொரு ஜீவன் காதுலேயும் இன்றளவும் 'ராம' நாமத்தை ஓதிக் கொண்டிருக்கிறார். பசுக்கள் போன்ற நம்மை எல்லாம் இப்படி காப்பாற்றிக் கொண்டிருப்பதாலேயே 'பசுபதி' என்கிற பெயரை வாங்கினார் பரமேஸ்வரன்.

இப்படி, பலருக்கும் பலவிதங்களிலும் சகல சௌபாக்கியத்தையும் அருளும் ராம நாமத்தைத் தொடர்ந்து சொன்னால், நமக்கும் நல்வாழ்வு அமையும்."

தொகுத்தவர் நளினி சம்பத்குமார்

நன்றி - தீபம் ஏப்ரல் 2013

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை