ஶ்ரீமத் பாகவதம் - 135

ஷஷ்ட ஸ்கந்தம் (ஆறாவது ஸ்கந்தம்) முதல் அத்தியாயம்

அஜாமிளோபாக்யானம் (அஜாமிளன் சரித்ரம்)

விஷ்ணு தூதர்களுக்கும் யம தூதர்களுக்கும் ஸம்வாதம்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே ! வர்ணாச்ரமங்களுக்குரிய கர்மங்களை அனுஷ்டிக்கையாலும் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி அறிகையாகிற ஆத்மஜ்ஞான யோகத்தினாலும் உதவி செய்யப்பெற்ற பக்தியோகத்தினால் பரமபுருஷனுடைய அனுக்ரஹத்தைப் பெற்று ஸம்ஸாரத்தினின்று விடுபடுகையாகிற மோக்ஷத்தின் ஸ்வரூபத்தை முன்னமே விவரித்துச் சொன்னீர். ப்ரக்ருதி ஸம்பந்தம் தீரப்பெறாமல் ஸுகதுக்கங்களை அனுபவிப்பதற்காக ஸத்வ, ரஜஸ், தமோ குணமயமான தேஹங்களை அடிக்கடி பெறுகையாகிற ப்ரவ்ருத்தி மார்க்கத்தையும் மொழிந்தீர். அதர்மங்களைச் செய்கையால் விளையக்கூடிய பலவகை நரகங்களையும், முதன்மையான ஸ்வாயம்புவ மன்வந்தரத்தையும், அந்த ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர்களான ப்ரியவரதன், உத்தானபாதன் ஆகிய இவர்களின் வம்சத்தையும், அவரது சரித்ரங்களையும், த்வீபங்கள் அவற்றிலுள்ள வர்ஷங்கள், ஸமுத்ரங்கள், பர்வதங்கள், நதிகள், உத்யான வனங்கள், ஜம்பு முதலிய வ்ருக்ஷங்கள் பூமண்டலம் ஆகிய இவற்றின் நிலைமையையும், அவற்றின் பிரிவுகளையும், அடையாளங்களையும், அளவுகளையும், நக்ஷத்ரமண்டலம் முதலியவை அடங்கின த்யுலோகத்தின் ஸ்வரூபத்தையும், அதலம் முதல் பாதாளம் வரையிலுமுள்ள பூமியின் விவரங்களையும் ப்ரஹ்மதேவன் படைத்தபடியே விவரித்து மொழிந்தீர். பேரறிஞரே! கொடிய பல யாதனைகளுக்கு (நரக வேதனைகளுக்கு) இடமான நரகங்களை இப்பொழுதே மனுஷ்யன் எந்தக் காரணத்தினால் அடையாமல் தப்பித்துக்கொள்ள முடியுமோ அதை எனக்கு மொழிவீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மனத்தினாலும், வாயாலும், காயத்தினாலும் செய்த பாபத்தை இவ்வுலகத்திலேயே ப்ராயச்சித்தாதிகளால் போக்கிக்கொள்ளவில்லை என்றால், அவன் மரணம் அடைந்த பின்பு என்னால் மொழியப்பட்டவைகளும் பொறுக்கமுடியாத பல யாதனைகளுக்கு (நரக வேதனைகளுக்கு) இடங்களுமாகிய நரகங்களை அவச்யம் அனுபவித்தே தீருவான். இது நிச்சயம். ஆகையால் மரணம் அடைவதற்கு முன்னமே மனோவாக்காயங்கள் என்கிற மூன்று கரணங்களும் வலிவுடன் இருக்கும் பொழுதே இவ்வுலகத்திலேயே தான் செய்த பாபத்திற்கு ப்ராயச்சித்தத்தைப் பற்றி யத்னம் (முயற்சி) செய்ய வேண்டும். ரோகங்களின் (வியாதிகளின்) நிதானத்தை (காரணத்தை) அறிந்த வைத்யன் அந்த ரோகங்களின் பலாபலத்தை அனுஸரித்து அவற்றிற்குச் சிகித்ஸை (வைத்யம்)  செய்வதுபோல் பாபங்களின் குரு (கொடியவை) லாகவங்களை (எளியன) ஆலோசித்து அவற்றிற்கு ஏற்பட்ட ப்ராயச்சித்தங்களில் முயற்சி கொள்ள வேண்டும்.

மன்னவன் சொல்லுகிறான்:- பெரியோர்கள் இதைச் செய்யாதே என்று சொல்லி நிந்திப்பதைப் பார்த்ததாலும்,  இதைச் செய்யலாகாது என்று கேட்டமையாலும், தனக்கு அனிஷ்டத்தை விளைக்குமென்று அறிந்தவன் சப்தாதி விஷயங்களில் மனம் சென்று மெய் மறந்து பாபத்தைச் செய்வானாயின், அவன் செய்த ப்ராயச்சித்தம் பாபத்தை எங்கனம் போக்க வல்லதாகும்? ஒருகால் நாம் பாபத்தைச் செய்யலாகாதென்று தோன்றி அதினின்றும் மீள்கிறான். மற்றொரு கால் விஷயங்களில் மனம் சென்று மெய்ம்மறந்து அந்தப் பாபத்தையே மீளவும் செய்கிறான். அவன் செய்த ப்ராயச்சித்தமும் கஜஸ்நானம் (யானை நன்கு குளித்த பின் தன் தலையில் மண்ணை போட்டு குளித்ததை வீண் செய்வது) போல வீணேயென்று நான் நினைக்கிறேன். ஆகையால் அதற்குத் தகுந்த மற்றொரு உபாயத்தை மொழிய வேண்டும்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ராயச்சித்த ரூபமான கர்மத்தினால் பாபத்திற்கு அடியோடு பரிஹாரம் உண்டாகமாட்டாது. பரமாத்ம உபாஸனத்தில் இழியாமல் அஹங்கார மமகாரங்களாலும் ராக த்வேஷாதிகளாலும் மனக்கலக்கமுற்ற புருஷனுக்கு ப்ராயச்சித்தம் விதித்ததேயன்றிப் பரமாத்ம உபாஸகனான ஆத்மஜ்ஞானிக்கு (ஜீவ, பரமாத்ம தத்வங்களை நன்கு அறிந்து பரதத்வமான பரமாத்மாவையே த்யானம் செய்பவன்) ஆத்மஜ்ஞானமே பூர்வபாபங்களையும் மேல்வரும் பாபங்களையும் போக்குகின்றது. ஆனால் ஆத்மஜ்ஞானம் இல்லாதவன் மேன்மேலும் பாபம் செய்வானாயின், ஒருதரம் செய்த ப்ராயச்சித்தத்தினால் மேல் செய்யப்போகிற பாபங்களும் கீழ் செய்த பாபங்களும் தீரமாட்டாவாயின், ப்ராயச்சித்தம் வீணேயென்று நினைக்க வேண்டாம். அப்பொழுதுள்ள ரோகத்தை (வியாதியை) ஒளஷதத்தினால் (மருந்தினால்) போக்கிக்கொள்வது போல அந்தப் பாபங்களுக்கு அந்த ப்ராயச்சித்தங்களால் பரிஹாரம் நேரும். ஆகையால் ப்ராயச்சித்தங்களை விதித்தமை வீணாகமாட்டாது. 

ஓ மன்னவனே! பத்யமான (நன்மை தரும் பத்தியமான) அன்னத்தைப் புசிக்கும் புருஷர்களை வ்யாதிகள் பீடிக்கமாட்டாது அல்லவா? அங்கனமே மேற்சொல்லப்போகிற நியமங்களை அனுஷ்டிக்கும் புருஷன் மெல்லமெல்ல மஹாநந்தரூபமான மோக்ஷத்தைப் பெறுகையாகிற க்ஷேமத்தைப் பெறுவான். உபவாஸம் முதலிய தவம், ருதுகாலம் தவிர மற்ற காலங்களில் ஸ்த்ரீ ஸம்போகம் (சேர்க்கை) இல்லாமை முதலிய ப்ரஹ்மசர்யம், உள்ளிந்த்ரியமான மனத்தை அடக்குகை, வெளியிந்தரியங்களான செவி, வாய், கண், மூக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலியவற்றை அடக்குகை, ஸத்பாதரங்களில் (நல்லவர்களுக்கு) தானம் செய்கை, ப்ராணிகளுக்கு ஹிதம் செய்கை, பொய் பேசாமை, நல்லொழுக்கம், காமத்தில் விருப்பின்மை, பஞ்சமஹாயஜ்ஞாதி {ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்} வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்கை ஆகிய இவற்றால் சீதம் (குளிர்சி), உஷ்ணம் (சூடு), ஸுகம் (இன்பம்), துக்கம் (துன்பம்) முதலிய த்வந்தவங்களைப் (இரட்டைகளைப்) பொறுக்கும் தன்மையுள்ளவர்களும் மோக்ஷஸாதனமான உபாஸன ரூப தர்மத்தை அறிவிக்கிற சாஸ்த்ரங்களைக் கற்றுணர்ந்தவர்களுமாகிய பெரியோர்கள் ச்ரத்தையுடன் கூடி, அக்னி மூங்கில் புதரை அழிப்பது போல, மனோ வாக்காயங்களால் செய்த மஹத்தான பாபத்தையும் போக்கிக் கொள்கிறார்கள். சிலர் வாஸுதேவனையே ப்ராப்யனாகவும் (அடையப்பட வேண்டியவனாகவும்), ப்ராபகனாகவும் (அவனை அடைவதற்கு அவனே வழி – உபாயமாகவும்) பற்றி பக்தியால், ஸூர்யன் பனியைப் போக்குவது போலப் பாபத்தையெல்லாம் போக்கிக்கொள்கிறார்கள். 

மன்னவனே! பாபம் செய்தவன், ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதாரவிந்தங்களில் ஆத்ம ஸமர்ப்பணம் செய்து அவனுடைய பக்தர்களான பெரியோர்களைப் பணிகையால் தன் பாபங்களையெல்லாம் போக்கிக் கொள்வது போலத் தவம் முதலியவற்றால் அந்த பாபங்களைப் போக்கிக்கொள்ள வல்லவனாகமாட்டான். இவ்வுலகத்தில் நன்மையைப் பெறுதற்கு ஸாதனமாக விசாரிக்கப்படும் உபாயங்களில் இந்தப் பகவத் பக்திரூபமான உபாயமே மிகவும் அழகியது. ஏனென்றால், இதனால் எவ்விதத்திலும் பயத்திற்கு இடமில்லாததும் மஹாநந்த ரூபமுமாகிய மோக்ஷம் அநாயாஸமாக உண்டாகின்றது. ஆனது பற்றியே நன்னடத்தையுடைய பெரியோர்கள் ஸ்ரீமந்நாராயணனை முக்யமாகப்பற்றி அவனிடத்தில் பக்தி செய்கையாகிற இம்மார்க்கத்தில் நிலைநின்றிருக்கிறார்கள். இத்தகைய பகவத் பக்தியோகமே பலவகையான கொடிய நரகங்களை விளைக்கும் பாபங்களினின்று தன்னை மீட்டுக் கொள்வதற்குரிய உபாயமாகுமன்றி மற்றொன்றுமன்று. 

ராஜச்ரேஷ்டனே! ஒருக்காலும் ஸ்ரீமந்நாரயணனை நெஞ்சிலும் நினையாத பாபிஷ்டர்கள் எத்தனை ப்ராயச் சித்தங்களை அனுஷ்டிக்கினும், மத்யம் (கள்) நிறைந்த குடத்தைக் கங்கை முதலிய நதிகள் பவித்ரம் (தூய்மை) செய்யமாட்டாதது போல அவை அவர்களைப் பவித்ரம் செய்யமாட்டாது. இவ்வுலகத்தில் எத்தகைய பாபிஷ்டர்களாயினும் ஸ்ரீக்ருஷ்ணனுடைய குணங்களில் ப்ரீதியுடைய மனத்தை அவனுடைய பாதாரவிந்தங்களில் ஒருகால் நுழைப்பார்களாயின், அவர்கள் அதுவே தாம் செய்த பாபங்களுக்கெல்லாம் ப்ராயச்சித்தமாகப் பெற்று யமனையாவது பாசாயுதங்களைத் தரித்த யமபடர்களையாவது ஸ்வப்னத்திலும் (கனவிலும்) காணமாட்டார்கள். பகவானுடைய நாமத்தை அந்த அபிப்ராயமின்றிச் சொல்லினும் கூட அவன் யமனுக்காவது யமபடர்களுக்காவது உட்படமட்டான். இவ்விஷயத்தில் விஷ்ணு கிங்கரர்களுக்கும் யமகிங்கரர்களுக்கும் நடந்த ஸம்வாதமாகிற ஒரு பழைய வ்ருத்தாந்தத்தைக் கூறுகிறார்கள். அதைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

கன்யாகுப்ஜமென்னும் தேசத்தில் அஜாமிளனென்னும் ஒரு ப்ராஹ்மணன் இருந்தான். அவன் கீழ் ஜாதி ஸ்த்ரீயைப் புணரும் (உடலுறவு கொள்ளும்) தன்மையுடையவன்; வர்ணாச்ரம தர்மானுஷ்டான ரூபமான ஸதாசாரம் (நன்னடத்தை) அற்று அத்தாஸியின் (அந்த வேசியின்) ஸம்பந்தத்தினால் பதிதனாயிருந்தான் (மிகவும் கீழ்பட்டவனாய் இருந்தான்). அவன் பந்தயம் (சூது) வைத்தாடுகிற (bet – பணம், பொருள் இவற்றைப் பணயமாக வைத்து ஆடுகிற) சூதாட்டங்களாலும், கபடங்களாலும் திருட்டுத்தனத்தினாலும் குடும்பத்தைப் போஷித்துக்கொண்டு பெரியோர்களால் நிந்திக்கப்பட்ட வ்ருத்தியைக் (வாழ்க்கை முறையைக்) கைப்பற்றியிருந்தான். அவற்றாலும் குடும்பத்தைப் போஷிக்க முடியாதபொழுது பசு, பக்ஷி, மிருகம் முதலிய ப்ராணிகளையும் ஹிம்ஸித்துக்கொண்டு (துன்புறுத்திக்கொண்டு) எப்பொழுதும் அபரிசுத்தனாகவே (நேர்மை, தூய்மை அற்றவனாகவே) இருப்பான். இங்கனம் ஜீவிக்கும் தன்மையுள்ள அந்த ப்ராஹ்மணன் அந்த தாஸியிடத்தில் (வேசியிடத்தில்) தனக்குப் பிறந்த பிள்ளைகளைச் சீராட்டிக் கொண்டிருக்கையில், மஹாராஜனே! அவனுடைய வாழ்நாளில் எண்பத்தெட்டு வர்ஷங்கள் கடந்தன. அங்கனம் வயது முதிர்ந்த அந்த அந்தணனுக்குப் பத்துப் பிள்ளைகள் பிறந்திருந்தார்கள். அவர்களில் கடைசிப்பிள்ளை நாராயணனென்று பேரிடப்பட்டவன். அவன் அப்பொழுது இளைஞனாயிருந்தான். அவன் தாய், தந்தைகள் இருவருக்கும் மிகவும் அன்பிற்கிடமானவன். கிழவனாகிய அந்த ப்ராஹ்மணன் அவ்யக்த (மழலையாய், தெளிவில்லாமல்) மதுரமாய்ப் பேசுகின்ற இளம்பிள்ளையாகிய அந்நாராயணனிடத்தில் மனம் செல்லப்பெற்று அவனுடைய விளையாடல்களைப் பார்த்து மிகவும் ஆனந்தித்திருந்தான். அவன் தான் சாப்பிடும் பொழுது அக்குழந்தையையும் ப்ரீதியால் சாப்பிடுவிப்பதும், தான் தண்ணீர் முதலியன பருகும் பொழுது அவனையும் பருகச்செய்வதுமாகி ஒன்றும் தெரியாமல் ம்ருத்யு (மரணம்) ஸமீபித்து வந்திருப்பதையும் அறியாதிருந்தான். இப்படி ஒன்றுமறியாத மூடனாய்க் காலத்தைக் கழிக்கின்ற அவ்வந்தணன் மரணகாலம் மிகவும் ஆஸன்னமாய் (மிக அருகில்) இருக்கையில், நாராயணனென்னும் பிள்ளையிடத்தில் மதியைச் (கவனத்தை) செலுத்தியிருந்தான். அந்த அஜாமிளன், பாச ஹஸ்தர்களும் (மரணக்கயிற்றை கையில் கொண்டவர்களும்) மிகப் பயங்கரர்களும் கோணலான முகமுடையவர்களும் உடம்பெல்லாம் மேல்நோக்கின ரோமங்கள் அடர்ந்தவர்களும் தன்னை யமலோகத்திற்குக் கொண்டு போக வந்தவர்களுமாகிய மூன்று புருஷர்களைக் கண்டு மனம் கலக்கமுற்று தூரத்தில் விளையாடிக் கொண்டிருக்கிற நாராயணனென்னும் புதல்வனை மிகவும் நீண்ட குரலுடன் உரக்க அழைத்தான். 

மஹாராஜனே ! மரணம் அடைய முயன்றிருக்கிற அவ்வந்தணன் பகவானை அறிவிக்கவல்ல நாமத்தை வாயால் மொழியக் கேட்டுப் பகவானுடைய தூதர்கள் விரைந்தோடி வந்தார்கள். அந்த விஷ்ணு தூதர்கள் தாஸிக்குப் (வேசிக்குக்) பதியான (கணவனான) அஜாமிளனை ஹ்ருதயத்தினின்று பலாத்காரமாகப் பிடித்திழுக்கிற யமதூதர்களைத் தடுத்தார்கள். அங்கனம் தடுக்கப்பட்ட யமதூதர்கள் அந்த விஷ்ணு தூதர்களைப் பார்த்து மேல்வருமாறு மொழிந்தார்கள். “தர்மராஜனான யமனுடைய ஆஜ்ஞையைத் தடுக்கின்ற நீங்கள் யார்? யாரால் அனுப்பப்பட்டவர்கள்? எங்கிருந்து வந்தீர்கள்? இவனிடத்தில் நீங்கள் எந்தக் குணத்தைக் கண்டு யமனுடைய ஆஜ்ஞையைத் தடுக்கின்றீர்கள்? நீங்கள் தேவதைகளா? அல்லது கந்தர்வர்களா? அல்லது ஸித்தச்ரேஷ்டர்களா? நீங்களெல்லோரும் தாமரையிதழ் போன்ற கண்கள் அமைந்து பொன்நிறமான பட்டு வஸ்த்ரம் உடுத்துக் கிரீடம் குண்டலம் முதலிய ஆபரணங்களை அணிந்து தாமரை மாலையைத் தரித்துத் திகழ்கின்றீர்கள். நீங்களெல்லோரும் இளம் வயதுடையவர்களும் அழகான நான்கு தோள்கள் அமைந்தவர்களும் தனுஸ்ஸு, அம்பறாத்தூணி, கத்தி, கதை, சங்கு, சக்கரம், பத்மம் இவற்றைத் தரித்தவர்களுமாகி அழகுடன் விளங்குகிறீர்கள். உங்கள் தேஹகாந்தியால் திசைகள் எல்லாம் இருளற்று ஒளியுடன் விளங்குகின்றன. இப்படிப்பட்ட நீங்கள் யமனுடைய கிங்கரர்களான எங்களை ஏன் தடுக்கிறீர்கள்?” என்றார்கள். 

இங்கனம் யமதூதர்களால் மொழியப்பெற்ற விஷ்ணுதூதர்கள் சிரித்து அவர்களை நோக்கி மேககர்ஜனம் போன்ற கம்பீரமான மொழியுடன் இவ்வாறு கூறினார்கள். “நீங்கள் தர்மராஜனாகிய யமனுடைய தூதர்களாயிருப்பீர்களாயின், நீங்களும் தர்ம அதர்மங்களின் ஸ்வரூபத்தை உணர்ந்தவர்களாயிருக்க வேண்டும். ஆகையால் தர்மத்தின் உண்மையையும், அதர்மத்தின் உண்மையையும் எமக்குச் சொல்வீர்களாக. தண்டனை எங்கனம் விதிக்கப்படுகின்றது? இந்தத் தண்டனைக்கு இடம் யாவன்? காமம் செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கத் தகுந்தவர்களா? அல்லது அவர்களில் சிலர் தானா?” என்று கேட்டார்கள். யமதூதர்கள் விஷ்ணு தூதர்களை நோக்கி “வேதத்தினால் விதிக்கப்படுவது தர்மம். அதனால் விலக்கப்படுவது அதர்மம். தர்ம, அதர்மங்களுக்கு வேதமே முக்ய ப்ரமாணம். வேதம் ஸ்ரீமந்நாராயணனிடத்தினின்று நேரே உண்டானது. அவ்வேதம் தான் முன் கல்பத்தில் எப்படி இருந்ததோ, அப்படியே இந்தக் கல்பத்திலும் திகழ்கின்றது. ஆகையால் இதனிடத்தில் புருஷபுத்தி மூலமான தோஷங்கள் எவற்றையும் இருக்கும் என்று ஸந்தேஹப்பட இடமில்லையென்று நாங்கள் கேட்டிருக்கிறோம். இவ்வேதத்தின் தோற்றத்திற்கிடமான அந்நாராயணன் யாவனென்றால், எவன் அனைத்திலும் உட்புகுந்து தரிக்கும் திறமையுடைய தன் ஸ்வரூபத்தில் வேதம் தேவதைகள் முதலிய ரஜஸ், தமோ குணங்கள் நிறைந்த பதார்த்தங்களையெல்லாம் குணம், நாமம், க்ரியை, உருவம் இவற்றுடன் தனித்தனியே பிரிந்திருக்குமாறு அவ்வவற்றின் கர்மத்தை அனுஸரித்து வெளியிடுகிறானோ அவனே அந்த நாராயணன். ஸம்ஸாரத்திலுள்ள ஜீவாத்மாக்கள் அனுஷ்டிக்கிற தர்மங்களும், அதர்மங்களும் அபாரமானவை. அவற்றை எப்படி அறிய முடியுமென்றால், ஸூர்யன், அக்னி, ஆகாயம், காற்று, ஸரஸ்வதி, சந்தரன், ஸந்த்யா காலங்கள் (காலையிலும் மாலையிலும் பகலும் இரவும் சேரும் நேரம்), பகல், ராத்ரி, திக்குகள், ஜலம், பூமி, காலம், தர்மம் ஆகிய இவற்றின் அபிமானி தேவதைகள் ஜீவாத்மாக்கள் செய்யும் புண்யபாப கர்மங்களுக்கு ஸாக்ஷிகளாய் இருக்கிறார்கள். இவர்களால் பாபம் செய்தவனென்று அறிவிக்கப்பட்ட புருஷன் தண்டனைக்கு இடமாவான். ஸம்ஸாரத்தில் உள்ளவர் அனைவரும் பாபகர்மம் செய்கிறவர்களே. ஆகையால் எல்லோரும் அவரவர் செய்த பாபத்திற்குத் தகுந்தபடி தண்டிக்கத் தகுந்தவர்கள். தர்மம் செய்கிறவர்களும் சப்தாதி விஷயங்களில் மனம் செல்லப்பெற்றவர்களாகையால் அவர்களுக்கும் பாபகர்மம் நேராதிருக்கமாட்டாது. அதர்மத்தின் பலனை அனுபவிக்க வேண்டிய வேளையில் அவர்களும் தண்டிக்கத் தகுந்தவர்கள்தான்.

நிர்த்தோஷர்களே! (குற்றமற்றவர்களே) உங்களுக்குப் பாபத்தின் ஸங்கதியே (விஷயமே) தெரியாது போலத் தோன்றுகிறது. புண்யங்களும், பாபங்களும் ப்ராணிகளுக்கு ஸம்பவிக்கின்றன. ஏதேனுமொன்றைச் செய்து கொண்டேயிருக்கும் ப்ராணிகளுக்குச் சப்தாதி விஷயங்களில் விருப்பம் மாறாமலேயிருக்கின்றது. அவ்விருப்பத்தினால் அவற்றைப் பெறுதற்குரிய கார்யங்களைச் செய்வார்கள். அப்பொழுது அவர்கள் பாபங்களைச் செய்தே தீரவேண்டியதாயிருக்கும். தேஹமுடையவன் (சரீரம் உடையவன்) எவனும் ஒன்றும் செய்யாமல் வெறுமனே இருக்கவல்லனாக மாட்டான். ஸத்வ, ரஜஸ், தமோ குண ஸம்பந்தமுடைய ஜீவன் அவற்றில் ஏதேனுமொன்று தலையெடுக்கப்பெற்றுத் தர்மத்தையாவது அதர்மத்தையாவது செய்து அவற்றிற்குத் தகுதியான ஸ்வர்க்க நரகாதி பலன்களைப் பரலோகத்தில் அனுபவிக்கிறான். தர்மம் செய்கிறவன் நரகத்தை அனுபவிக்கமாட்டான். அதர்மம் செய்கிறவனும் ஸ்வர்க்கத்தை அனுபவிக்கமாட்டான். மற்றும், அற்பமான (சிறிய) பாபத்தினால் மஹத்தான (பெரிய) துக்கத்தையும், அற்ப (சிறிய) தர்மத்தினால் மஹத்தான (பெரிய) ஸுகத்தையும் அனுபவிக்கமாட்டான். ஓ தேவச்ரேஷ்டர்களே! இவ்வுலகத்திலுள்ள ப்ராணிகள் ஜன்மாந்தரத்தில் ஸத்வாதி குணங்களில் ஏதேனுமொன்று தலையெடுக்கப்பெற்றுச் செய்த ஸாத்விகம், ராஜஸம், தாமஸமென்று மூன்று வகையான கர்மங்களின் பேதத்தினால் ஸுகிகள் (இன்பத்தை அனுபவிப்பவர்கள்), துகிகள் (துக்கத்தை அனுபவிப்பவர்கள்), மூடர்களென்று மூன்று விதமாகப் பிரிந்திருப்பது புலப்படுகின்றதல்லவா? அங்கனமே பரலோகத்திலும் ஸத்வாதி குணங்கள் தலையெடுத்துச் செய்யும் ஸாத்விகாதி கர்மபேதத்தினால் ஸுகிகள், துகிகள், மூடர்களென்கிற மூன்றுவிதமான பேதம் உண்டென்று ஊஹிக்கலாம். நிகழ்காலத்திலுள்ள ஸுகதுக்க மோஹங்கள் தமக்குக் காரணமான தர்ம அதர்மங்கள் ஸத்வாதி குணங்களின் எழுச்சியால் உண்டானவையென்று தெரியப்படுத்துவது போலக் கீழ்மேலுள்ள ஜன்மங்களில் நேரும் ஸுகதுக்க மோஹங்களும், தமக்குக் காரணமான தர்ம அதர்மங்கள் ஸத்வாதி குணங்களின் எழுச்சியால் உண்டானவையென்பதைத் தெரியப்படுத்துகின்றன. சரீரத்தில் தன் தேஜஸ்ஸினால் ப்ரகாசித்துக் கொண்டிருக்கிற பரமாத்மாவான ஸர்வேச்வரன் என்றும் மாறாது மலர்கின்ற தன் ஜ்ஞானத்தினால் பூர்வ ஜன்மத்தில் ஜீவன் செய்த புண்ய பாப கர்மங்களை ஆராய்ந்தறிகிறான். பகவான் தன் ஜ்ஞானத்தினால் பூர்வகர்மத்தை அனுஸரித்து அவற்றிற்குப் பலன் கொடுக்க வேண்டியதை நிரூபிக்கிறான். ஜீவன் செய்த கர்மங்கள் அடுத்த க்ஷணத்தில் மறைந்து போகின்றனவாயினும், அவற்றை நிரூபித்து நிக்ரஹ (தண்டித்தல்) அனுக்ரஹங்களை (அன்பு ஆசியுடன் ஆதரவு) ஸங்கல்பித்திருக்கும் (எண்ணியிருக்கும்) பகவான் அதை அனுஸரித்து ஸுகதுக்காதி பலன்களைக் கொடுக்கிறான். இருட்டில் கண்தெரியாத புருஷன் முன்னும் பின்னும் இருக்கும் வஸ்துக்கள் எவையும் தெரியப்பெறாமல் தன் சரீரத்தை மாத்ரமே சிந்தித்துக் கொண்டிருப்பான். ஸ்வப்னம் (கனவு) காண்கிறவன் அந்த ஸ்வப்னத்தில் (கனவில்) ஏற்பட்ட தேஹாதிகளை (சரீரங்களை) மாத்ரமே அனுஸந்திப்பானன்றி (நினைப்பானேயன்றி) விழித்துக் கொண்டிருக்கும் பொழுதுள்ள தேஹாதிகளை (சரீரங்களை) அனுஸந்திக்க மாட்டான் (நினைக்க மாட்டான்). அங்கனமே ஜீவன் தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்ற தவறான எண்ணம்) முதலிய அஜ்ஞானங்களுடையவனாகக் கர்மத்தினால் ஜ்ஞான (அறிவு) ஸங்கோசம் (குறைவு) உண்டாகப்பெற்று அப்பொழுது ஸ்பஷ்டமாய்த் தெரிகிற தேஹத்தை மாத்ரம் நினைப்பானேயன்றிக் கீழ்ப்போன தேஹத்தையாவது மேல்வரப் போகிற தேஹத்தையாவது நினைக்கமாட்டான். ஜீவனுக்குக் கீழ்மேலுள்ள ஜன்மங்களைப் பற்றின நினைவு அழிந்து போகின்றது. ஆகையால், அப்பொழுதுள்ள தேஹத்தின் போஷணத்திற்குரிய கர்மங்களைச் செய்வானேயன்றிப் பரமபுருஷனுடைய அனுக்ரஹத்தை விளைக்கும்படியான கர்மத்தைச் செய்யமாட்டான். ஜீவன் ஐந்து கர்மேந்திரியங்களால் போதல், வருதல், எடுத்தல் முதலிய கார்யங்களைச் செய்கிறான். ஐந்து ஜ்ஞானேந்திரியங்களால் ஐந்து விஷயங்களை அறிகிறான். பஞ்சபூதங்களும், பத்து இந்திரியங்களுமாகிய பதினைந்தைக் காட்டிலும் வேறுபட்டுப் பதினாறாவதாகிய மனம் செய்கைக்கும் அறிகைக்கும் உதவியாயிருக்கின்றது. கீழ்ச்சொன்ன பதினாறு தத்வங்களைக் காட்டிலும் வேறுபட்டுப் பதினேழாவதாகிய ஜீவன் தானொருவனாகவே பதினாறாவதாகிய மனத்துடன் கூடிய ஜ்ஞானேந்திரியங்களால் சப்தாதி விஷயங்களை அறிவதும் அம்மனத்தோடு கூடிய கர்மேந்திரியங்களால் செயல்களைச் செய்வதுமாகி ஸுக(இன்ப), துக்க(துன்ப), மோஹங்கள் (கலக்கம்) மூன்றையும் அனுபவிக்கிறான். பஞ்சபூதங்களும், பத்து இந்தரியங்களும், மனமும் ஆகப் பதினாறு அவயவங்கள் (உறுப்புக்கள்) உடையதும், அவித்யை (அறிவின்மை - இந்த உடலே ஆத்மா என்றும், நாம் பகவானுக்கு அடிமை அன்று; தன்னிச்சையாக செயல்படவல்லவர்கள் என்றும் தவறாக நினைப்பது), கர்மம் (புண்ய, பாப ரூபமான செயல்கள்), வாஸனை (கர்மங்களின் ஆழ்ந்த மனப்பதிவு) என்கிற மூன்று சக்திகளுடையதுமான ஸூக்ஷ்ம சரீரமானது (கண்ணுக்குப் புலப்படாத மனது, புத்தி, நான் என்ற தோற்றம், எண்ணங்களின் தொடர்ச்சி ஆகியன) ஹர்ஷம் (மகிழ்ச்சி), சோகம் (துக்கம்), பயம் இவற்றை விளைவிப்பதும், கர்ப்ப (தாயின் கருவறை), ஜரா (பிறப்பு) மரண (இறப்பு) முதலியவை மாறி மாறி வரப்பெறுவதுமாகிய ஸம்ஸாரத்தை ஜீவனுக்கு விளைக்கின்றது. தேஹஸம்பந்தமுடைய ஜீவன் தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து ஆறு இந்திரியங்களையும் வெல்லமுடியாமல் அவற்றின் வழியே சென்று தான் இஷ்டப்படாமற்போயினும் பலாத்காரமாகப் புண்யகர்மங்களையும், பாபகர்மங்களையும், இரண்டும் கலந்த  கர்மங்களையும் செய்விக்கப்படுகிறான். இங்கனம் தான் செய்த கர்மத்தினால் கோசகாரம் (கூட்டிற்குள் இருக்கும் பட்டுப்புழு) என்ற புழுபோலத் தன் ஸ்வரூபத்தைத் தானே மறைத்துக்கொண்டு தேஹத்தையே ஆத்மாவென்று ப்ரமிக்கிறான். ஒரு ப்ராணியும் கர்மத்தைச் செய்யாமல் இருக்கமாட்டாது. ஒன்றுமில்லாமற் போயினும் கடைசியில் துரும்பையாவது கிள்ளிக்கொண்டிருக்கும். அனாதியாக ஏற்பட்டிருக்கின்ற ஸத்வாதிகுணங்களால் ஜீவன் பலாத்காரமாக ஏதேனுமொரு கார்யத்தைச் செய்யும்படி தூண்டப்படுகிறான். மூலப்ரக்ருதியென்கிற ப்ரதானம் (மூலப்ரக்ருதி) ஜன்ம (பிறப்பு) மரணங்களுக்குக் (இறப்புக்கு) காரணமான கர்மத்தைப்பற்றி ஒருகால் பதினாறு தத்வ ஸ்வரூபமாய் அவ்யக்தமாகவும் (வெளிப்படையாகத் தெரியாமலும்), ஒருகால் தேவமனுஷ்யாதி தேஹரூபமாய் வ்யக்தமாகவும் (வெளிப்படையாகத் தெரிவதாயும்) இருக்கின்றது. எறும்பு முதலிய ஸூக்ஷ்ம (சிறிய) சரீரங்களும் யானை முதலிய ஸ்தூல (பெரிய) சரீரங்களும் கர்ம தாரதம்யத்தைப் (புண்ய, பாப கர்மங்களின் ஏற்றத்தாழ்வுகளைப்) பற்றியே உண்டாகின்றன. அத்தேஹங்களெல்லாம் தாய், தந்தைகளின் சாயலினை அனுஸரித்தேயிருக்கும். ஸாத்விகம், ராஜஸம், தாமஸமென்று மூன்று வகையான கர்மங்களைச் செய்து ஜீவாத்மாக்கள் பலவகைச் சரீரங்களைப் பெறுகிறார்கள். ஜீவனுக்கு ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் விளையும் ஸம்ஸாரம் இத்தகையது. அவனுக்கு இயற்கையில் ஏற்படாமல் வந்தேறியாய்க் கிடைத்த (கர்மங்களின் அடிப்படையில் அந்தந்த ஜீவனுக்கு கிடைக்கக்கூடிய) அந்த ஸம்ஸாரம் பரமபுருஷனிடத்தில் செய்யும் பக்தியால் அடியோடு மாறிப்போகின்றது. இந்த அஜாமிளன் வேத சாஸ்த்ராதிகளை நன்குணர்ந்தவன்; நல்லியற்கையும், நன்னடத்தையும் சமதமாதி குணங்களும் அமைந்தவன்; ஸ்த்ரீ ஸம்போகம் (பெண்களுடன் உடல் உறவு) இல்லாமையாகிற ப்ரஹ்மசர்ய விரதமுடையவன்; ம்ருதுவான ஹ்ருதயமுடையவன்; வெளியிந்திரியங்களை வென்றவன், ப்ராணிகளின் ஹிதத்தையே பேசுபவன்; பொய் பேசாதவன்; ஸாவித்ரி முதலிய மந்திரங்களை உணர்ந்தவன்; எப்பொழுதும் பரிசுத்தனாயிருப்பவன்; குரு, அக்னி, அதிதிகள், பெரியோர்கள் இவர்களுக்குச் சுச்ரூஷை (பணிவிடை) செய்யும் தன்மையன்; குணங்களால் விளையும் அஹங்காரம் தீண்டப்பெறாதவன்; ஸமஸ்த பூதங்களுக்கும் ப்ரியத்தையே செய்யும் தன்மையன்; பிறருடைய கார்யங்களை நிறைவேற்றிக் கொடுப்பவன்; மிதமாய்ப் பேசுபவன்; குணங்களில் தோஷங்களை ஏறிடும் தன்மையாகிற அஸூயை (பொறாமை) அற்றவன்; இத்தன்மையுள்ள இவ்வந்தணன் ஒருகால் தந்தையின் கட்டளையைத் தலைக்கட்ட (நிறைவேற்ற) முயன்று வனத்திற்குச் சென்று பழம், புஷ்பம், ஸமித்து, தர்ப்பம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து திரும்பி வந்தான். அப்பொழுது அவ்வனத்தில் தாஸியுடன் (வேசியுடன்) காமக்கலவியில் (இன்பச்சேர்க்கையில்) ஆழ்ந்திருக்கின்ற ஒருவனைக் கண்டான். அந்தத் தாஸி (வேசி) மத்யபானம் செய்து (கள் குடித்து) மதத்தினால் (மயக்கத்தால்) கண்கள் சுழலப்பெற்று யௌவன மதம் (இளமையின் கர்வம்) அமைந்து அரையாடையின் முடிச்சு அவிழ்ந்திருந்தாள். அவனும் நல்வழியினின்று நீங்கி வெட்கமற்று அத்தாஸியுடன் கலந்து விளையாடுவதும் பாடுவதும் சிரிப்பதுமாயிருந்தான். காமவிகாரத்தினால் (இன்ப விளையாட்டால்) கொழுத்திருக்கின்ற அவன் தன் புஜத்தினால் அணைத்துக் கொண்டிருக்கிற அந்தத் தாஸியைக் கண்டு அவ்வந்தணன் திடீரென்று மதிமயங்கிக் காமனுக்கு உட்பட்டான். அவ்வந்தணன் தான் குருவினிடத்தில் மனத்தை அடக்குவதற்குக் கேட்ட வழிகளையெல்லாம் அனுஸரித்துப் பலம் உள்ள அளவு விவேகத்தினால் மனத்தை அடக்கப் பார்த்தாலும் மன்மத விகாரத்தினால் நடுக்கமுற்றபடியால் அதை அடக்க வல்லமையற்றிருந்தான். அந்தத் தாஸியை நிமித்தமாகக் கொண்டு வளர்ந்தெழுகின்ற மன்மதனாகிற கபட (வஞ்சகமன) பிசாசத்தினால் (பேயால்) பிடியுண்டு முன் நினைவெல்லாம் மாறப்பெற்று அந்தத் தாஸியை மனத்தினால் சிந்தித்துக்கொண்டு ஸந்தியாவந்தனம் முதலிய தன் வர்ணாச்ரம தர்மத்தினின்று நழுவினான். ஐயோ! அப்படியிருந்தவனுக்கு இப்படிப்பட்ட தசை (நிலை) நேரிட்டது. ஒன்றும் அறியாத மூடர்களால் விரும்பத்தக்கவைகளும் மனத்திற்கினியவைகளுமான ஆடை, ஆபரணம் முதலிய வஸ்துக்களால் அவளுக்குத் தன்னிடத்தில் ப்ரீதி உண்டாகும்படி தன் தந்தை ஸம்பாதித்து வைத்த பணத்தையெல்லாம் கொண்டு அவளையே ஸந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தான். பாபிஷ்டனாகிய அந்தணன் கள்ள புருஷனைத் தேடும் கருத்துடைய அத்தாஸியின் கடைக் கண்ணோக்கத்தினால் அடியுண்டு விவேகமெல்லாம் தொலையப் பெற்று ப்ரௌடையாகாதவளும் (வயது வராதவளும்), அழகியவளும், பெரிய வம்சத்தில் கிடைத்தவளுமாகிய தன் பார்யையைச் (மனைவியை) சீக்ரத்தில் துறந்தான். ந்யாயமாகவும், அநியாயமாகவும் இங்குமங்கும் திரிந்து பணத்தை ஸம்பாதித்துக்கொண்டு வந்து பல பிள்ளைகளைப் பெற்ற அத்தாஸியின் குடும்பத்தைப் போஷித்துக்கொண்டு வந்தான். இங்கனம் இவன் சாஸ்த்ரமார்க்கத்தைக் கடந்து மனம் போனபடி திரியும் தன்மை கொண்டு பெரியோர்களால் நிந்திக்கப்படும் வழியில் இழிந்து பாபகர்மத்தினால் தன் வாழ்நாள்களை எல்லாம் கடத்திக்கொண்டு தாஸியைப் புணர்ந்த பாபத்தினால் அசுத்தனாகவே வெகுகாலமிருந்தான். ஆகையால் இவன் பாபம் செய்தவன். அதற்கு ப்ராயச்சித்தத்தையும் இவன் செய்யவில்லை. இத்தகையனான இவனை நாங்கள் யமனுடைய ஸந்நிதானத்திற்குக் கொண்டு போகிறோம். அங்கு நரகங்களை அனுபவிக்கையாகிற தண்டனையால் இவன் சுத்தனாவான்” என்றார்கள்.

முதல் அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை