ஶ்ரீமத் பாகவதம் - 136

ஆறாவது ஸ்கந்தம் – இரண்டாவது அத்தியாயம்

(விஷ்ணு தூதர்கள் விஷ்ணுநாமத்தின் மஹிமையைக் கூறி அவனை விடுவித்தலும், அவன் தான் செய்த பாபத்தைப்பற்றி வருந்தி வைராக்யம் பெறுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- விஷ்ணுதூதர்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டு ந்யாய நிபுணர்களாகையால் யம தூதர்களை நோக்கி “ஆ! என்ன கஷ்டம் நேர்ந்தது? தர்ம தர்சிகளின் (தர்மத்தை அறிந்தவர்களின்) ஸபையை அதர்மம் தீண்டுகின்றதே! பாபமற்றவரும் தண்டிக்கத் தகாதவருமான புருஷர்மேல் தர்ம தர்சிகளின் (தர்மத்தை அறிந்தவர்களின்) ஸபையிலுள்ள உங்களைப் போன்றவர் வீணாகவே தண்டனை விதிக்கிறார்களே. இதைக் காட்டிலும் வேறு அதர்மம் என்ன வேண்டும்? ப்ரஜைகளைத் (மக்களைத்) தண்டிக்கும் அதிகாரத்திலிருப்பவர்களும் பக்ஷபாதமின்றி (ஓரவஞ்சனையின்றி) ஸமமாயிருப்பவர்களும் பிறருடைய தோஷத்தைப் போக்குவதில் ஸமர்த்தர்களும் ப்ரஜைகளுக்குத் தந்தையைப்போல் ஹிதம் செய்பவர்களுமாகிய உங்களைப் போன்றவர்கள் வைஷம்யம் செய்தால் (ஸமநிலையின்றி அநீதி செய்தால்), ப்ரஜைகள் மற்ற யாரைச் சரணம் அடைவார்கள். எல்லாம் அறிந்த பெரியோர்கள் எந்தெந்தக் கார்யங்களைச் செய்வார்களோ அந்தக் கார்யங்களையே தெரியாத ஜனங்களும் செய்யப் பார்ப்பார்கள். ஆகையால் தமது அனுஷ்டானத்தினால் உலகத்தில் தர்மத்தை நடத்துகின்றவர்களும் வேதத்தை அனுஸரித்து நடப்பவர்களுமான பெரியோர்கள் தண்டிக்கத் தகாதவர்களைத் தண்டிப்பது யுக்தமன்று. ஒருவன் மடியில் ஜனங்கள் நம்பிக்கையுடன் தலையை வைத்துப் படுத்து ஸுகமாய் உறங்குவார்களாயின், அங்கனம் விச்வாஸ பாத்ரமாயிருப்பவனும் (நம்பிக்கைக்கு இடமாயிருப்பவனும்) மன இரக்கமுடையவனுமாகிய அவன் அந்த ஜனங்களுக்கு எங்கனம் த்ரோஹத்தை (கெடுதியை) நினைக்கலாம்? யமன் அபராதமுள்ள ஜனங்களைத் தண்டிப்பானேயன்றி நிரபராதிகளைத் தண்டிக்க மாட்டானென்று ஜனங்கள் அவனிடத்தில் விச்வாஸமுற்றிருக்கிறார்கள் (நம்பிக்கை கொண்டுள்ளார்கள்). அவனும் ப்ராக்ருதனைப்போல (ஸாதாரண, கல்வி அறிவு இல்லாதவனைப் போல) வைஷம்யத்தினால் (ஸமநிலையின்றி அநீதியால்) நிரபராதிகளைத் தண்டிப்பானாயின், அவனுக்கு விச்வாஸ காதக (நம்பிக்கை த்ரோஹம்) தோஷம் வரும். “இந்த அஜாமிளன் பாபிஷ்டனன்றோ? இவனைப் பற்றி என்ன விசாரம்?” என்கிறீர்களோ? கேளுங்கள். 

இவன் கோடி ஜன்மங்களில் செய்த பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் பண்ணினான். இவன் ஸ்வாதீனமற்றிருப்பினும் (தன் சுய நினைவு இன்றி இருப்பினும்) மங்களத்திற்கிடமான ஸ்ரீ விஷ்ணுவின் நாமத்தை மொழிந்தானல்லவா? அதுவே இவன் செய்த ப்ராயச்சித்தமாகும். நான்கு அக்ஷரங்கள் அடங்கின நாராயணாவென்னும் நாமத்தை இவன் மொழிந்தானாகையால் அதனாலேயே பாபிஷ்டனாகிய இவனுடைய பாபங்களுக்கெல்லாம் ப்ராயச்சித்தம் நடத்தினதாம். ஸ்வர்ணம் (தங்கம்) திருடினவன் ஸுராபானம் செய்தவன் (கள் குடித்தவன்) மித்ர த்ரோஹி (நண்பனுக்கு தீங்கு இழைத்தவன்) ப்ரஹ்மஹத்யை செய்தவன் (ப்ராஹ்மணனைக் கொன்றவன்) குருபத்னியைப் புணர்ந்தவன் (தனது குருவின் மனைவியுடன் உடல் உறவு கொண்டவன்) ஸ்த்ரீயைக் (பெண்ணைக்) கொன்றவன் ராஜனைக்கொன்றவன்., தாய் தந்தைகளைக் கொன்றவன் இவர்களும் மற்றும் பலவகைப் பாபங்கள் செய்தவர்களும் இந்த ஸ்ரீமஹாவிஷ்ணுவின் நாமத்தை ஒருகால் உச்சரிப்பார்களாயின், அவர்கள் அனைவருடைய பாபத்திற்கும் அதுவே பொருந்தின ப்ராயச்சித்தமாகும். விஷ்ணுவினுடைய நாமத்தை எவ்விதத்திலாயினும் உரைப்பார்களானால், அவனை நினைக்கும் மதி (புத்தி, அறிவு) உண்டாகும். அதனால் அவர்கள் பாபமெல்லாம் தீர்ந்து மோக்ஷத்தை அடைவார்கள். பகவானுடைய நாமங்களைச் சொல்வதனால் பாபங்களெல்லாம் தீர்ந்து பரிசுத்தர்களாவது போல பாபம் செய்தவன் வேதங்களை உணர்ந்த பெரியோர்களான மனு முதலியவர்கள் மொழிந்த சாந்தராயணம் (சந்த்ரனின் பிறை வளர்ச்சி, தேய்வு இவற்றுடன் தொடர்புள்ள விரதம் அல்லது ப்ராயச்சித்தம்) முதலிய வ்ரதங்கள் முதலிய ரூபமான ப்ராயச்சித்தங்களால் பாபம் தீர்ந்து சுத்தனாகமாட்டான். பகவானுடைய நாமங்களில் ஏதேனுமொன்றைப் பேசினால், அது அவனையும் அவன் குணங்களையும் நினைவுமூட்டிப் பாபங்களையெல்லாம் போக்கி மோக்ஷத்தைக் கொடுக்கும். அந்த ப்ரஹ்மவாதிகள் (வேதத்தை நன்கு அறிந்தவர்கள்) சொன்ன ப்ராயச்சித்தங்கள் பாபங்களை அடியோடு போக்கவல்லவையன்று. அந்த ப்ராயச்சித்தங்கள் செய்த பின்பும் மனம் அடிக்கடி பாபமார்க்கத்தில் போகவே போகும். ஆகையால் பாபங்களை வேரோடு போக்க வேண்டுமென்னும் விருப்பமுடையவர்களுக்குப் பகவானுடைய குணங்களை வெளியிடும் தன்மையுள்ள அவனது நாமங்களைப் பேசுகையே பொருந்தின ப்ராயச்சித்தமாகும். அது நல்லறிவை விளைக்கும்படியான ஸத்வகுணத்தை வளர்க்கும். ஆகையால், ஓ யமதூதர்களே! ஸமஸ்த பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் அனுஷ்டித்த இந்த அஜாமிளனை நீங்கள் யமலோகத்திற்குக் கொண்டுபோவது யுக்தமன்று (ஸரியன்று). இவன் மரணம் அடையும் ஸமயத்தில் பகவானுடைய நாமத்தை மொழிந்தானல்லவா? “இவன் நாராயணாவென்று பிள்ளையை அழைத்தானேயன்றிப் பகவானை அழைக்கவில்லையே. அது இவனுடைய பாபங்களுக்கு எங்கனம் ப்ராயச்சித்தமாகும்?” என்று நினைக்க வேண்டாம். நெருப்பை அதை அறியாதவன் தொட்டாலும் அது அவனைத் தஹிக்குமேயன்றி (சுடுமேயன்றி) வெறுமனேயிருக்குமா? அங்கனமே ஸங்கேதமாயாவது (குறிப்பால் அல்லது ஜாடையால்) பரிஹாஸமாயாவது (கேலிக்காவது) ஸ்தோபமாயாவது (ஸ்தோபம் நாக்குத் தழதழத்து ஸ்வாதீனமில்லாமல் சொல்லும் வார்த்தை) அவமதிக்கையாகவாவது வைகுந்தனுடைய நாமத்தைச் சொல்வார்களாயின், அது அவர்களுடைய ஸமஸ்த பாபங்களையும் போக்குமென்று பெரியோர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். 

உப்பரிகை முதலிய உயர்ந்த இடங்களினின்று விழுந்தவன், வழியில் தடுக்கப்பெற்றவன், தன் வர்ணாச்ரம தர்மத்தினின்று நழுவினவன், கை கால் முதலியன முறிந்தவன், ஸர்ப்பாதிகளால் கடியுண்டவன், ஜ்வரம் (காய்ச்சல்) முதலியவற்றால் எரிக்கப்பெற்றவன், தடி முதலியவற்றால் அடியுண்டவன் ஆகிய இவர்களில் எவனாயினும் ஸ்வாதீனமற்றிருப்பினும் ஹரியென்று சொல்வானாயின், அவன் எவ்வளவு பாபிஷ்டனாயினும் யமயாதனைகளுக்கு உரியவனல்லன். பேரறிஞரான மஹர்ஷிகள் பாபங்களின் குரு (கொடியவை) லாகவங்களை (எளியவை) ஆலோசித்து அவற்றிற்குத் தகுந்தபடி ப்ராயச்சித்தங்களை விதித்திருக்கிறார்கள். ஆயினும் அந்த தவம் முதலிய ப்ராயச்சித்தங்கள் தந்தமக்கு ஏற்பட்ட பாபங்களையே போக்குமன்றி அதர்மத்தில் செல்கின்ற மனத்தைப் பரிசுத்தம் செய்யமாட்டாது. பகவானுடைய நாமத்தை நினைக்கை முதலிய அவனுடைய ஸேவையில் ஸமஸ்த பாபங்களும் அவற்றிற்கிடமான மனமும் பரிசுத்தமாகும். பாபத்தைப் போக்குமென்னும் ஜ்ஞானத்துடனாவது அந்த ஜ்ஞானமில்லாமலாவது எப்படிப்பட்ட பாபிஷ்டனாயினும் உத்தம ஸ்லோகனாகிய பகவானுடைய நாமத்தைச் சொல்லுவானாயின், அது அவனுடைய ஸமஸ்த பாபங்களையும் பஸ்மம் செய்துவிடும். ஒருவன் மிகுந்த வீர்யமுடைய ஒளஷதத்தைத் தெரிந்தாவது தெரியாமலாவது உபயோகப்படுத்துவானானால் ஆரோக்யத்தை அடைவதுபோலப் பகவானுடைய நாமமாகிற மந்த்ரமும் அதன் திறமையை அறியாத புருஷனால் கூறப்படுமாயினும் பாபத்தையெல்லாம் பஸ்மம் செய்து விடும். ஓ தூதர்களே! இங்கனம் நாங்கள் மொழிந்த தர்மத்தில் உங்களுக்குச் சம்சயம் (ஸந்தேஹம்) உளதாயின், உங்கள் ப்ரபுவாகிய யமனைக் கேட்பீர்களாக. பேரறிஞனாகிய அந்த யமதர்மராஜன் மேன்மைக்கிடமான தர்ம ரஹஸ்யத்தை நன்றாக அறிந்தவன்” என்றார்கள். 

ஓ மன்னவனே! இவ்வாறு விஷ்ணுதூதர்கள் மொழிந்த பகவந்நாம உச்சாரண ரூபமான (பகவானுடைய பெயரைச் சொல்லுகிறதாகிற) தர்மத்தின் மஹிமையை நிச்சயித்து அந்த ப்ராஹ்மணனை யமபாசத்தினின்று விடுவித்து மரணத்தினின்று நீக்கினார்கள். இவ்வண்ணம் விஷ்ணு தூதர்களால் திரஸ்கரிக்கப்பட்ட (அவமதிக்கப்பட்ட) யமதூதர்கள் யமனுடைய ஸந்நிதானத்திற்குச் சென்று யமதர்மராஜனுக்கு நடந்த விஷயத்தையெல்லாம் உள்ளபடி தெரிவித்தார்கள். அந்த ப்ராஹ்மணன் யமபாசத்தினின்று விடுபட்டு நிர்ப்பயனாகி (பயமற்றவனாகி) முன் நிலைமையைப் பெற்று ஜீவித்தான். அவன் விஷ்ணு கிங்கரர்களைக் கண்டு மிகவும் ஸந்தோஷம் அடைந்து தலைவணங்கி நமஸ்காரம் செய்தான். 

பாபமற்றவனே! அவ்வந்தணன் ஏதோ ஒன்று சொல்ல விரும்பியிருப்பதை அறிந்த விஷ்ணுகிங்கரர்கள் அவன் பார்த்துக்கொண்டே இருக்கையில் திடீரென்று அதே இடத்தில் மறைந்தார்கள். பிறகு யமதூதர்கள் மொழிந்ததும் வேதங்களின் பூர்வபாகத்தில் விதிக்கப்பட்டதும் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்குட்பட்ட ஜனங்கள் அனுஷ்டிப்பதுமான கர்மயோகத்தையும் சுத்தஸத்வம் தலையெடுத்த பெரியோர்கள் அனுஷ்டிப்பதும் வேதாந்தங்களில் விதிக்கப்பட்டதுமான பாகவத தர்மத்தையும் கேட்டு மனத்தில் நிச்சயித்துக்கொண்டு பகவானுடைய மஹிமையைக் கேட்டமையால் அவனிடத்தில் மிகுந்த பக்தியோகம் உண்டாகப் பெற்றுத் தன்னுடைய பாபத்தை நினைத்து மிகவும் பரிதபித்தான். “நான் மனத்தை வெல்லமுடியாமல் பெரும் கஷ்டத்தை அடைந்தேன். ஐயோ! நான் கீழ்த்தர ஸ்த்ரீயிடத்தில் பிள்ளைகளைப் பெற்று என்னுடைய ப்ராஹ்மண்யத்தை அடியோடு பாழாக்கிக் கொண்டேன். பெரியோர்களால் மிகவும் நிந்திக்கத் தகுந்த என்னை நான் எவ்வளவு நிந்தித்தாலும் போராது. என்னைச் சுடினும் என்பாவம் தீராது. நான் மஹாபாபிஷ்டன்; குலத்தைக் கெடுக்க வந்த பாபி. மற்றும், பரிசுத்தமான வம்சத்தில் பிறந்தவளும் பரிசுத்தையும் ப்ரௌடையாகாத (வயதிற்கு வராத) இளம் பருவத்தளுமான என் பார்யையைத் (மனைவியைத்) துறந்து ஸுராபானம் (மது பானம்) செய்யுந்தன்மையளும் அசுத்தையுமான (தூய்மை இல்லாதவளுமான) கீழ்த்தர ஸ்த்ரீயைப் புணர்ந்தேன். வயது சென்றவர்களும் நாதன் அற்றவர்களும் (காப்பாற்றுவார் இல்லாதவர்களும் பிள்ளை முதலிய வேறு பந்துக்கள் அற்றவர்களும் பெருந்தவமுடையவர்களுமான தாய் தந்தைகளை நான் அவர்கள் செய்த உபகாரத்தை அறியாமல் நீசன் போலத் துறந்தேன். எவ்விடத்தில் தர்மஜ்ஞர்களான யமன் முதலியவர்கள் இருக்கின்றார்களோ, எவ்விடத்தில் என்னைப்போன்ற காமிகள் யமயாதனைகளை (யம தண்டனைகளை) அனுபவிக்கின்றார்களோ, அப்படிப்பட்ட பயங்கரமான நரகத்தில் நான் விழுவேனென்பதில் ஸந்தேஹமில்லை. இது நிச்சயம். இப்பொழுது யமதூதர்களும் விஷ்ணு தூதர்களும் வந்து ஸம்பாஷணம் செய்யக்கண்டேனே; இது ஸ்வப்னமா (கனவா)? அல்லது நான் நன்றாக விழித்துக் கொண்டிருக்கும்பொழுது கண்டதுதானா? பெரிய ஆச்சர்யமாயிருக்கிறது. இப்பொழுது அந்தத் தூதர்கள் எங்குப்போனார்களோ தெரியவில்லையே. கையில் பாச (கட்டி இழுக்கும் கயிறு) ஆயுதத்தைக் கொண்டு என்னைப் பிடித்திழுத்தார்களே; மற்றும், அழகர்களும் அழகிய காட்சியுடையவர்களுமான நான்கு ஸித்தர்கள் புலப்பட்டார்களே; என்னை யமதூதர்கள் பாசங்களால் கட்டி நரகத்திற்கு இழுத்துக்கொண்டு போகையில் அவர்கள் விடுவித்தார்களே. இப்பொழுது அவர்கள் எங்குப் போனார்களோ தெரியவில்லையே. நான் மந்தபாக்யன் (பாக்கியம் இல்லாதவன்). ஆயினும் தேவச்ரேஷ்டர்கள் எனக்குப் புலப்பட்டதற்குக் காரணமான மங்களம் ஏதோவொன்று என்னிடத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் என் மனம் தெளிவுற்றிருக்கின்றது. பரமபுருஷனும் என்னிடத்தில் அனுக்ரஹம் செய்திருக்கிறான். இல்லாத பக்ஷத்தில் கீழ்த்தர ஸ்த்ரீயைப் புணர்கின்றவனும் அசுத்தனும் மரணம் அடைய முயன்றவனுமாகிய என்னுடைய நாக்கு வைகுந்தனுடைய நாமத்தை உச்சரிக்க மாட்டாது. நான் மூர்க்கன்; துஷ்டன், பாபிஷ்டன்; கீழ்த்தர ஸ்த்ரீ ஸம்பந்தத்தினால் ப்ராஹ்மண்யத்தை அடியோடு அழித்துக் கொண்டவன்; இவ்வளவு நிலைமையிலிருந்தும் வெட்கமற்றவன். இப்படிப்பட்ட நான் எங்கே? மங்களங்களுக்கெல்லாம் இடமான நாராயணாவென்னும் பகவானுடைய நாமம் எங்கே? இப்படிப்பட்ட எனக்கு மரணகாலத்தில் அவனுடைய நாமோச்சாரணம் புண்யமில்லாமல் எங்கனம் உண்டாகும்? 

ஸித்தர்களைக் கண்டமையாலும் பகவானுடைய நாமத்தை உச்சரித்தமையாலும் புண்யமுடையவனென்று ஊஹிக்கத் தகுந்த நான் மனத்தையும் மற்ற இந்த்ரியங்களையும் ப்ராணவாயுவையும் அடக்கிக்கொண்டு, என்னை நான் மீளவும் பாபிஷ்டமான நரகத்தில் அழுத்தாதிருக்குமாறு யத்னம் (முயற்சி) செய்யவேண்டும். தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்) முதலியவற்றிற்கிடமான அஞ்ஜானம் சப்தாதி விஷயங்களை விரும்புகையாகிற காமம், கர்மம் ஆகிய இவற்றால் உண்டானதும் கர்ப்ப (தாயின் கருவறை), ஜரா (பிறப்பு) மரண (இறப்பு) முதலிய ரூபமுமான ஸம்ஸாரத்தைத் துறந்து ஸமஸ்த பூதங்களிடத்திலும் நட்பும், கருணையும் மனச்சிறப்புமுடையவனாகி மடந்தையென்னும் பேருடைய பகவானுடைய மாயையால் பிடியுண்ட என்னை அதினின்று விடுவித்துக்கொள்ள வேண்டும். பகவானுடைய மாயையே ஓர் வடிவங்கொண்டாற் போன்ற இம்மடந்தையாலல்லவோ நான் ஞானசூன்யனாகி விளையாட்டு மிருகம் போலப் பல ஆட்டங்களைப் பெற்றேன். தேஹத்திலுள்ள அஹங்காரமும் அதைத் தொடர்ந்த மற்றவைகளிடத்திலுண்டான மமகாரமும் ஆகிய அயதார்த்தமான (உண்மையற்ற, ஸரியல்லாத) புத்தியைத் துறந்து மனத்தைப் பகவானுடைய குணகீர்த்தனாதிகளால் பரிசுத்தமாக்கி அந்தப் பகவானிடத்தில் அதை நிலைநிறுத்தப்போகிறேன்” என்று தனக்குள் சிந்தித்துக் கொண்டான். இங்கனம் பெரிய நிர்வேதம் (இவ்வுலகப்பற்றிலிருந்து விடுபடுகை) உண்டாகப்பெற்ற அவ்வஜாமிளன் க்ஷணகாலம் மாத்ரமே ஸாதுக்களோடு ஸஹவாஸம் உண்டானமையால் பிள்ளை, பெண்டிர் முதலிய ஸமஸ்த பந்தங்களையும் துறந்து கங்கா த்வராத்திற்குச் சென்றான். அவ்வஜாமிளன் தேவர்க்கும் தேவனாகிய பரமபுருஷனுடைய ஸந்நிதானம் மாறாதிருக்கப்பெற்ற அந்தக் கங்கா த்வாரத்தில் உட்கார்ந்து பக்தியோகம் செய்ய ஆரம்பித்து இந்திரியங்களையெல்லாம் சப்தாதி விஷயங்களில் போகவொட்டாமல் இழுத்தடக்கி முதலில் ப்ரத்யகாத்மாவினிடத்தில் (ஜீவாத்மாவிடத்தில்) மனத்தைச் செலுத்தினான். அப்பால் ஸத்வ, ரஜஸ், தமோகுணங்களின் பரிணாமமாகிய தேஹாதிகளைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டு விலக்ஷணன் (வேறானது) என்பதை  அறிந்து அவ்வாத்மாவுக்கு அந்தர்யாமியான பரமாத்வாவை த்யானித்து ஸ்வரூபத்தினாலும் குணங்களாலும் அபரிச்சின்னனும் (அளவற்றவனும்) நித்ய ஜ்ஞானஸ்வரூபனும் பரந்தாமனுமாகிய பகவானிடத்தில் அம்மனத்தை நிலைநிற்கச் செய்தான். இங்கனம் பகவானிடத்தில் நிலைநின்ற மனமுடைய அவ்வஜாமிளன் சப்தாதி விஷயங்களினின்று மதி (புத்தி) நீங்கப்பெற்று, முன் பார்த்த விஷ்ணு தூதர்கள் எதிரேவந்து நிற்கக் கண்டான். அவன் “நாம் இவர்களை முன்பு கண்டோமே” என்று தெரிந்து கொண்டு தலைவணங்கி அவர்களை நமஸ்கரித்தான். அவர்களைக் கண்டபிறகு கங்கையின் தீர்த்தத்தில் தேஹத்தைத் துறந்து அந்த க்ஷணமே அந்த விஷ்ணு தூதர்களின் தேஹம் போன்ற திவ்யதேஹத்தைப் பெற்றான். அவ்வந்தணன் பரமபுருஷனுடைய கிங்கரர்களுடன் ஸ்வர்ணமயமான விமானத்தில் ஏறிக்கொண்டு ஆகாச மார்க்கத்தினால் ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் வீற்றிருக்கிற வைகுண்டலோகம் போய்ச்சேர்ந்தான். 

இங்கனம் அவ்வந்தணன் தனது வர்ணாச்ரம தர்மங்களையெல்லாம் அழித்துத் தாஸியைப் புணர்ந்து பதிதனாகி நிந்தைக்கிடமான கார்யங்களையே செய்துகொண்டு வ்ரதங்களெல்லாம் பாழாகப்பெற்று மரணகாலம் ஸமீபிக்க நரகத்தில் விழும்படி யமபடர்களால் இழுக்கப்படும் ஸமயத்தில் பகவானுடைய நாமத்தை உச்சரித்து உடனே அவ்வாபத்தினின்று விடுபட்டான். ஸம்ஸார பந்தத்தினின்று விடுபட வேண்டுமென்று விரும்புகின்றவர்களுக்கு அந்த ஸம்ஸாரத்திற்கடியான கர்ம பந்தத்தை வேரோடறுப்பது பகவானுடைய நாமோச்சாரணத்தைக் காட்டிலும் வேறொன்றும் இல்லை. ரஜஸ், தமோ குணங்களால் அழுக்கடைந்த மனம் பகவானுடைய நாமோச்சாரணத்தினால் பரிசுத்தமாகி ஸம்ஸார ஹேதுவான கர்மங்களில் பற்றாது. மனத்திற்கு இந்நிலைமை வேறு எவ்வழியாலும் உண்டாகாது. இந்த உபாக்யானம் (கதை) பரமரஹஸ்யம். பாபங்களைப் போக்கும். இதை ச்ரத்தையுடன் படிக்கிறவனும் பக்தியுடன் சொல்லுகிறவனும் எப்படிப்பட்ட பாபிஷ்டனாயினும் நரகத்தை அடையமாட்டான். யமகிங்கரர்கள் அவனைக் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டார்கள். அவன் விஷ்ணுலோகம் சென்று அங்குள்ளவர்களால் வெகுமதிக்கப் பெறுவான். 

அஜாமிளன் மரணகாலத்தில் நாராயணாவென்று பிள்ளையை அழைத்தானன்றி அப்பொழுது அவனுக்குப் பகவானைப் பற்றின நினைவே கிடையாது. ஆயினும் அது பகவானுடைய நாமமாகையால் அதைச் சொன்ன மாத்ரத்தில் அவன் விஷ்ணு லோகத்தை அடைந்தான். பகவானுடைய குணங்களை வெளியிடுகின்ற நாராயணாதி நாமங்களை ஒருவன் ச்ரத்தையுடன் உச்சரிப்பானாயின், அவன் விஷ்ணுலோகத்தை அடைவானென்பதில் சொல்லவேண்டுமோ? 

இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை