ஆறாவது ஸ்கந்தம் – மூன்றாவது அத்தியாயம்
(யமதூதர்கள் யமனைக்கேட்க அவன் அவர்களுக்கு ஸமாதானம் கூறுதல்)
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ஸம்ஸாரத்திலுள்ள ஜனங்களெல்லாம் தன்வசமாயிருக்கப்பெற்ற யமதர்மராஜன் விஷ்ணு தூதர்களால் தன் தூதர்கள் நிராகரிக்கப்பட்ட வ்ருத்தாந்தத்தை (விஷயத்தை) அவர்கள் சொல்லக் கேட்டு என்ன மொழிந்தான்? மஹர்ஷீ! யமனுடைய ஆஜ்ஞை ஓரிடத்தில் பங்கப்பட்டதாக (தடைப்பட்டதாக) இதுவரையில் எப்பொழுதும் கேட்டதில்லை. இவ்விஷயத்தில் எல்லோர்க்கும் ஸம்சயம் (ஸந்தேஹம்) உண்டாகக்கூடியது. முனிவரே! இந்த ஸந்தேஹத்தைத் தீர்ப்பவர் உம்மைவிட மற்றொருவரும் இல்லையென்று நிச்சயித்திருக்கிறேன்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- விஷ்ணு தூதர்களால் தம் முயற்சி தடைபடப்பெற்ற யமதூதர்கள் தம் ப்ரபுவாகிய யமனிடம் சென்று விண்ணப்பம் செய்தார்கள். “ப்ரபூ! இவ்வுலகத்தில் புண்யகர்மம், பாபகர்மம், மிச்ர (இரண்டும் கலந்த) கர்மம் என்று மூன்று வகையான கர்மங்களைச் செய்கிற ஜீவலோகத்திற்குக் கர்மபலன்களைக் கொடுக்கும் ப்ரபுக்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்? தண்டனை விதிக்கும் ப்ரபுக்கள் பலர் உளராயின், ஸுகதுக்கங்கள் எவனுக்கு உண்டாகும்? எவனுக்கு உண்டாகாது? அந்த ப்ரபுக்கள் ஒருவர்க்கொருவர் ஒற்றுமையின்றி ஒருவன் கட்டளையை மற்றொருவன் தடுப்பானாயின், ஜீவலோகத்தில் ஒருவனுக்கும் ஸுகமாவது துக்கமாவது உண்டாக மாட்டாது. தண்டனை விதிக்கும் ப்ரபுக்கள் பலராயினும், அவர்கள் ஒத்திருப்பார்களாயின், ஜீவலோகத்திற்கு ஸுகதுக்கங்கள் உண்டாகக்கூடும். ஆயினும் அவர்களுடைய ப்ரபுத்வம் (ஆளுமை, யஜமானத்வம்) சில தேசங்களுக்கு ப்ரபுக்களாகிய ராஜாக்களின் ப்ரபுத்வம் (ஆளுமை, யஜமானத்வம்) போன்று முக்யமாயிராது. உலகத்தில் சிலர் பல ப்ராணிகளைத் தம் வசங்கொண்டு ப்ரபுக்களாய் இருக்கின்றார்கள். நீ அந்த ப்ராணிகளுக்கும் அவர்க்கு ப்ரபுக்களான மற்றவர்க்கும் மேலான ப்ரபு. நீ நன்மை, தீமைகளை ஆராய்ந்தறிந்தவன்; அவற்றை ப்ரஜைகளுக்கும் அறிவிப்பவன்; பாபம் செய்தவர்களுக்குத் தண்டனை விதிப்பவன். உன் கட்டளை பூலோகத்தில் இதுவரையில் தடைப்பட்டதில்லை. இப்பொழுது அற்புதமான உருவமுடைய நான்கு ஸித்த புருஷர்கள் வந்து உன் கட்டளையைத் தடுத்து விட்டார்கள். நாங்கள் ஒரு பாதகனை (பாவம் செய்தவனை) நரகத்திற்கு இழுத்துக்கொண்டு வருகையில், அந்த ஸித்தர்கள் வந்து பாசங்களை அறுத்துப் பலாத்காரமாக அவனை விடுவித்தார்கள். நாராயணாவென்று சொன்ன மாத்ரத்தில் பயப்படாதேயென்று விரைந்தோடி வந்தார்கள். அவர்கள் யாரென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். அவர்களை எங்களுக்குச் சொல்லவேண்டும்” என்றார்கள்.
ப்ரஜைகளைத் தண்டிக்கும் அதிகாரியாகிய யமதேவன் தன் படர்கள் இங்கனம் வினவக்கேட்டு ஸந்தோஷம் அடைந்து பகவானுடைய பாதாரவிந்தங்களை நினைத்துக்கொண்டு தன் தூதர்களைப் பார்த்து “என்னைக் காட்டிலும் மேற்பட்டவன் மற்றொருவன் உளன். அவன் ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான ஸமஸ்த ஜகத்திற்கும் ப்ரபு; வஸ்த்ரத்தில் நூல்போல அவனிடத்தில் இந்த ஜகத்தெல்லாம் கோர்க்கப்பட்டிருக்கிறது. ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி(படைப்பு), ஸ்திதி (இருப்பு, காத்தல்), ஸம்ஹாரங்கள் (அழித்தல்) மூன்றும் அவனுடைய ஸங்கல்பத்தினால்தான் நடக்கின்றன. மூக்கில் கயிறு கோர்க்கப்பெற்ற எருதுகள் மனிதரிடம் உட்பட்டிருப்பது போல, இவ்வுலகம் முழுவதும் அவன் வசத்தில் இருக்கின்றது. தொழுவத்தில் கயிறுகளால் பசுக்களைக் கட்டுவதுபோல, அவன் வேதஸ்வரூபமான தன் வாக்கில் வர்ணாச்ரம தர்மங்களால் ஜனங்களைக் கட்டுகிறான். ஜனங்கள் நாமங்களும், கர்மங்களும் நியதமாயிருக்கப் பெற்று அவனிடத்தில் பயந்து அவனுக்குப் பூஜை செய்கிறார்கள். யமனென்று பேர்பெற்ற நான் மஹேந்த்ரன், நிருதி, வருணன், ஸோமன், அக்னி, ருத்ரன், வாயு, ஸூர்யன், ப்ரஹ்மதேவன், தேவதைகள், விச்வாவஸு முதலிய உபதேவதைகள் ஸாத்யர், ம்ருத்கணங்கள், ருத்ரகணங்கள், ஸித்தர், ரஜஸ், தமோ குணங்கள் தீண்டப்பெறாத ப்ருகு முதலிய ப்ரஜாபதிகள் ஆகிய நாங்கள் அனைவரும் ஸத்வகுணம் தலையெடுத்திருப்பவராயினும் அந்தப் பகவானுடைய மாயையினால் தீண்டப்பெற்று அவனுடைய கருத்தை அறிய வல்லரல்லோம். அவன் ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் அந்தராத்மாவாய் இருப்பவன். அவர்களுடைய ஹ்ருதயத்தில் வாஸம் செய்கிறான். அவனை ப்ராணிகள் இந்த்ரியங்கள், மனம், ப்ராணாயாமம், ஹ்ருதயம், வாக்கின் திறமை இவற்றில் எதனாலும் காணமுடியாது. உருவங்களைக் கண் பார்க்குமன்றிக் கண்ணை உருவங்கள் பார்க்கவல்லவையோ? அங்கனமே அந்தப் பகவான் அவரவர் ஹ்ருதயத்தில் நித்யவாஸம் செய்யினும் அவனைப் பார்க்கமுடியாது. அவன் ஸ்வதந்தரன், ப்ரக்ருதியை அடக்கியாள்பவன், ஸர்வேச்வரன்; பரமபுருஷன்; மஹானுபாவன்; தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையன். அத்தகையனான அந்தப் பகவானுடைய தூதர்கள் இவ்வுலகத்தில் ஸஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனத்திற்கு இனியராய் இருப்பார்கள். அவர்களுடைய உருவமும், குணங்களும், ஸ்வபாவமும் பகவானோடொத்திருக்கும். அந்த விஷ்ணுதூதர்கள் தேவதைகளாலும் பூஜிக்கப்படும் பெருமையுடையவர்கள். அவர்களுடைய உருவம் பளபளவென்று ஜ்வலித்துக் கொண்டிருக்கும். அவர்களுடைய காட்சி மிக்க அற்புதமாயிருக்கும். ஸாதாரணமாய் ஒருவர்க்கும் புலப்பட மாட்டார்கள். அவர்கள் பகவானிடத்தில் பக்தியுடைய ஜனங்களை ம்ருத்யுவாகிய என்னிடத்தினின்றும் மற்ற ஸமஸ்த பூதங்களிடத்தினின்றும் பாதுகாக்கிறார்கள். பகவான் மொழிந்த தர்ம ஸூக்ஷ்மத்தை ரிஷிகளாவது, தேவதைகளாவது, ஸித்த ச்ரேஷ்டர்களாவது, அஸுரர்களாவது, மனுஷ்யர்களாவது அறியமாட்டார்கள். வித்யாதரர், சாரணர் முதலிய மற்றவர் இதை எங்கனம் அறியப்போகிறார்கள்? ஓ படர்களே ! ஆனால் இதை அறிந்தவர் யாவரெனில், சொல்லுகிறேன், கேளுங்கள்.
நான், ப்ரஹ்மதேவன், நாரதர், ருத்ரன், ஸனத்குமாரர், கபிலர், ஸ்வாயம்புவமனு, ப்ரஹ்லாதன், ஜனகர், பீஷ்மர், பலி, ஸ்ரீசுகர் ஆகிய நாங்கள் பன்னிருவரும் பரம ரஹஸ்யமான இந்தப் பாகவத தர்மத்தை அறிவோமன்றி மற்றவர்க்குத் தெரியாது. மற்றவர்க்கு இதை அறியவும் முடியாது; பரிசுத்தமானது. இதை அறிந்தவன் மோக்ஷத்தை அடைவான். பகவானுடைய நாமத்தை உச்சரிக்கை முதலியவற்றால் அவனிடத்தில் விளையும் பக்தியோகமே இவ்வுலகத்திலுள்ள புருஷர்கள் ஸாதிக்க வேண்டிய மேலான தர்மமாம். பிள்ளைகளே! பகவானுடைய நாமோச்சாரணத்தின் மஹிமையைப் பாருங்கள். அஜாமிளனும்கூட ம்ருதயு பாசத்தினின்று விடுபட்டான்.
புருஷர்கள் தமது பாபங்கள் தீரவேண்டுமென்று விரும்புவார்களாயின், பகவானுடைய குணங்களையும், செயல்களையும் வெளியிடுகிற நாமங்களில் ஏதேனுமொன்றைச் சொல்லின் இவ்வளவே போதும். மஹா பாபிஷ்டனாகிய அஜாமிளனும் நாராயணாவென்று மரணகாலத்தில் பிள்ளையை அழைத்த மாத்ரத்தில் மோக்ஷத்தை அடைந்தான். இவ்வுலகத்திலுள்ளவர் சாஸ்த்ரங்களைப் பரக்கக் (முழுமையாகக்) கற்றுணரினும் பகவானுடைய மாயையால் மிகவும் மதிமயங்கி ஸ்வர்க்கம் முதலிய அற்ப (சிறிய, முக்யம் அல்லாத) புருஷார்த்தங்களை வெளியிட்டு வஞ்சிக்கிற வேதத்தில் அபிநிவேசம் (அதிக ஈடுபாடு) கொண்டு மஹத்தான யாகாதி கர்மங்களை அனுஷ்டிக்க முயன்று பகவந்நாம உச்சாரணத்தின் மஹிமையை அறிகிறதில்லை. எவர்கள் நல்ல மதி (புத்தி) உண்டாகப்பெற்று பகவானுடைய நாமோச்சாரணத்தின் மஹிமையை ஆராய்ந்து அபரிச்சின்னனான பகவானிடத்தில் பக்தியோகம் செய்கின்றார்களோ, அவர்கள் என் தண்டனைக்கு உட்பட்டவர்களல்லர். அவர்களுக்கு ஏதேனும் சிறிது பாபம் உளதாயினும், அதை அவர்கள் செய்யும் பகவந்நாமோச்சாரணம் போக்கிவிடும். பகவானைச் சரணம் அடைந்து ஸாது குணங்கள் (நற்குணங்கள்) அமைந்து எல்லாம் பகவத்ஸ்வரூபமே என்றுணர்ந்து ஜகத்தையெல்லாம் ஸமமாகப் பார்க்கும் தன்மையுடையவர் பெரியோர்கள். அவர்களுடைய புகழ் பரிசுத்தமானது. அதைத் தேவர்களும், ஸித்தர்களும் பாடுகிறார்கள். அவர்களைப் பகவான் தன் கதையால் பாதுகாக்கிறான். நீங்கள் அவர்களின் அருகாமையில் செல்ல வேண்டாம். அவர்களுக்கு ஸம்ஸார பயமே கிடையாது. மற்றும், அவர்களைத் தண்டிக்க நாம் ஸமர்த்தரல்லோம். ஸம்ஸாரிக ஸுகங்களில் மனம் செல்லப் பெறாதவரும் ருசியறிந்தவருமான பரமஹம்ஸர்கள் ஸர்வகாலமும் ஆதரிக்கிற முகுந்தனுடைய பாதாரவிந்தங்களின் தேன்போன்ற அனுபவ ரஸத்தில் எப்பொழுதும் மனம் செல்லாமல் பாபிஷ்டர்களாகி நரகத்திற்கு வழிகாட்டுகிற இல்லற வாழ்க்கையில் விருப்புற்றிருக்கின்ற பாபிஷ்டர்களை மாத்ரமே இவ்விடம் கொண்டு வருவீர்களாக. நாக்கால் பகவானுடைய குணங்களை வெளியிடுகிற அவன் நாமங்களைப் பேசாமல், மனத்தினால் அவன் பாதாரவிந்தங்களை நினைக்காமல், தலையினால் ஒருகாலும் அவனுக்கு வணங்காமல், பகவானுடைய ஆராதனத்தை இம்மியும் அனுஷ்டிக்காத பாபிஷ்டர்களை மாத்ரமே இங்குக்கொண்டு வருவீர்களாக. ஸ்ரீமந்நாராயணன் புராணபுருஷன்; ஷாட்குண்ய பூர்ணன். என் தூதர்களாகிய நீங்கள் செய்த அபராதத்தை அவன் பொருத்தருள்வானாக. நாம் அவனுடைய தாஸர்கள்; ஒன்றுமறியாதவர்கள். நாம் அஞ்சலி செய்து வேண்டுவோமாயின், அவன் நம்மிடத்தில் பேரருள் செய்வான். அவன் அந்தர்யாமி. அவனுக்கு நமஸ்காரம்” என்றான்.
குருவம்ச ச்ரேஷ்டனே! ஆகையால் விஷ்ணுவின் நாமத்தை உச்சரிக்கை ஜகத்திற்கு மங்களங்களை எல்லாம் விளைக்கும். மஹத்தான பாபங்களுக்கும் இதுவே முக்யமான ப்ராயச்சித்தமென்று உணர்வாயாக. ஸ்ரீவிஷ்ணுவின் புகழ்கள் எல்லையில்லாதவை. ஸர்வகாலமும் அவற்றைக் கேட்கிறவர்களும், சொல்லுகிறவர்களும் அவனிடத்தில் பக்தி நன்றாக விளையப்பெறுவார்கள். அவரது மனம் இந்தப் பக்தியினால் சுத்தமாவதுபோல் மற்ற வ்ரதாதி நியமங்களால் சுத்தமாகாது. ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதாரவிந்தங்களின் ரஸமறிந்தவன் பாபத்திற்கிடமான சப்தாதி விஷயங்களில் மனப்பற்று செய்யமாட்டான். அதை அறியாதவன் சப்தாதி விஷயங்களால் அடிபட்டுத் தன் பாபத்தைப் போக்க விரும்பி ப்ராயச்சித்த ரூபமான கர்மங்களைச் செய்வான். அவன் அதனால் மீளவும் பாபத்தையே ஏற்றுக்கொள்வானன்றிப் பாபத்தினின்று நீங்கமாட்டான்.
பரீக்ஷித்து மன்னவனே! இங்கனம் யமதூதர்கள் தம் ப்ரபுவான யமதர்மராஜன் மொழிந்த பகவானுடைய மஹிமையெல்லாம் விஷ்ணு தூதர்கள் சொன்னதோடு ஒத்திருப்பதைக் கண்டு வியப்புற்று பகவானுடைய பக்தர்களின் அருகாமையில் சென்றால் நம்மை ப்ரபு தண்டிப்பானென்று அந்த யமனிட்ட கட்டளைக்கு அஞ்சி அதுமுதல் அவர்களைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் பயப்படுகின்றார்கள். மலயபர்வதத்தில் பகவானை ஆராதித்துக் கொண்டிருக்கிற அகஸ்த்ய மஹர்ஷி பரமரஹஸ்யமான இந்த இதிஹாஸத்தை எனக்கு மொழிந்தார்.
மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.