ஆறாவது ஸ்கந்தம் – நான்காவது அத்தியாயம்
(தக்ஷர் ப்ரஜைகளைப் படைக்க விரும்பி பகவானை ஆராதித்தல்)
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹர்ஷி! ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் நடந்த தேவர்கள், அஸுரர்கள், மனுஷ்யர்கள், நாகர்கள், மிருகங்கள், பக்ஷிகள் இவர்களின் ஸ்ருஷ்டி க்ரமத்தைச் சுருக்கமாகச் சொன்னீர். பரமபுருஷனாகிய பகவான் ப்ராணிகளை எந்தச் சக்தியினால் எப்படி ஸ்ருஷ்டித்தானோ, அதை விரிவாக அறிய விரும்புகிறேன்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ரசேதஸர்களென்கிற ப்ராசீனபர்ஹியின் பிள்ளைகள் பதின்மர் ஸமுத்ர (கடல்) மத்யத்தினின்று (நடுவிலிருந்து) கரையேறிப் பூமியெல்லாம் வ்ருக்ஷங்கள் (மரங்கள்) நிறைந்திருக்கக் கண்டார்கள். அவர்கள் வ்ருக்ஷங்களின் மேல் கோபித்துக்கொண்டு தவத்தினால் கோபம் ஜ்வலிக்கப்பெற்று அந்த வ்ருக்ஷங்களையெல்லாம் தஹிக்க விரும்பி முகத்தினின்று வாயுவையும், அக்னியையும் ஸ்ருஷ்டித்தார்கள். கௌரவச்ரேஷ்டனே! அந்த வாயுவும், அக்னியும் சேர்ந்து வ்ருக்ஷங்களையெல்லாம் தஹிக்கையில், மஹானுபாவனாகிய சந்தரன் அதைக் கண்டு அவரது கோபத்தை அணைக்க முயன்று “ஓ மஹாபாக்ய சாலிகளே! வ்ருக்ஷங்கள் மன இரக்கத்திற்கிடமானவை. இவற்றிற்கு நீங்கள் த்ரோஹம் (கெடுதி) செய்வது யுக்தமன்று (ஸரியன்று). நீங்கள் உலகங்களை வ்ருத்தி செய்ய வேண்டுமென்று விரும்புகிறவர்களல்லவா? ப்ரஜைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்பட்டவர்கள். ஸர்வேச்வரன், ப்ரஹ்மதேவன் முதலிய ப்ரஜாபதிகள் அனைவர்க்கும் ப்ரபு. அவன் நீங்கள் கொளுத்துகிற வ்ருக்ஷங்களிலும் அந்தராத்மாவாய் நிறைந்திருப்பவன். ஆயினும் அவற்றின் விகாரம் (மாறுதல்) தீண்டப் பெறாதவன். அப்படிப்பட்ட பகவான் பித்ருக்களையும், தேவதைகளையும் உத்தேசித்துக் கொடுக்கும் அன்னத்தை விளைவிப்பவைகளான வ்ருக்ஷங்களையும், ஒளஷதிகளையும் முதலில் ஸ்ருஷ்டித்தான். பாதங்களால் ஸஞ்சரிக்கின்ற ஜங்கம பூதங்களுக்குக் காலில்லாத ஸ்தாவர பூதங்கள் ஆஹாரமாக ஏற்பட்டிருக்கின்றன. கையுள்ள இரண்டு கால் ப்ராணிகளுக்குக் கையில்லாத நாற்கால் ஜந்துக்கள் ஆஹாரமாகின்றன. ஸ்தாவரங்களில் ஒன்று மற்றொன்றுக்கு ஆஹாரமாகிறதில்லை. அவை ஜனங்களுக்கே ஆஹாரமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. அவை எவ்வகை அபாரதமும் இல்லாதவை. ஆகையால் அவற்றிற்கு த்ரோஹம் செய்வது யுக்தமன்று. நீங்கள் இத்தனை காலமாய் தவம் செய்து பாபமற்றிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் தந்தையான ப்ராசீனபர்ஹியாலும், தவத்தினால் ஸந்தோஷம் அடைந்த பகவானாலும் ப்ரஜைகளைப் படைக்கும்படி நியமிக்கப்பட்டீர்கள். அந்த ப்ரஜைகளுக்கு ஆஹாரமான வ்ருக்ஷங்களை எப்படி தஹிக்கலாம்? ஆகையால் பெரியோர்கள் நடக்கும்படியான வழியைக் கைப்பற்றுவீர்களாக. உங்கள் தந்தையும், பாட்டனும், முப்பாட்டன் முதலிய மற்ற உங்கள் பெரியோர்களும் இந்த ஸன்மார்க்கத்திலேயே (நல்வழியிலேயே) நடந்தார்கள். கொழுந்துவிட்டெரிகின்ற கோபத்தை அடக்கிக் கொள்வீர்களாக. மற்றும் குழந்தைகளுக்குத் தாய், தந்தைகள் போலவும், கண்ணுக்கு இமைபோலவும், மடந்தையர்க்குக் கணவன் போலவும், பரமாத்ம ரஹஸ்யத்தை அறிய விரும்புகிற ஸந்நியாஸிகளுக்குப் பண்டிதன் போலவும், ஜங்கம ஸ்தாவர ரூபமான பூதங்களுக்கு மன்னவனே பந்துவும், ரக்ஷகனும், நண்பனுமாவான். ஆகையால் நீங்கள் உங்களை அடுத்த, இந்த வருஷங்களுக்கு த்ரோஹம் (கெடுதி) செய்யலாகாது. மற்றும், பகவான் ஸமஸ்த பூதங்களுடைய ஹ்ருதயங்களிலும் உள் புகுந்து நியமித்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் ஜகத்தெல்லாம் அவனுக்குச் சரீரமென்று பாவிப்பீர்களாக. இப்படி செய்வீர்களாயின் அந்த பகவான் உங்கள் விஷயத்தில் ஸந்தோஷம் அடைவான். இங்கனம் பகவானுடைய சரீரங்களாகிய இந்த வ்ருஷங்களுக்கு நீங்கள் த்ரோஹம் (கெடுதி) செய்வது யுக்தமன்று (ஸரியன்று). மனத்தில் திடீரென்று கிளம்பின பெருங்கோபத்தை ஆத்ம விசாரத்தினால் அடக்குவானாயின், அவன் ஸத்வாதி குணங்களைக் கடந்து க்ரமத்தில் ஸம்ஸார பந்தத்தினின்று விடுபடுவான். ஆகையால் நிரபராதிகளான வ்ருக்ஷங்களைக் கொளுத்தினது போதும். மிகுந்த வ்ருக்ஷங்களுக்கு உங்களிடத்தினின்று க்ஷேமம் உண்டாகுக. இந்த வ்ருக்ஷங்கள் இப்பெண்மணியைப் பாதுகாத்து வந்தன. இவள் அழகிய லக்ஷணங்கள் அமைந்தவள். மாரிஷையென்னும் பேருடையவள். இவளை நீங்கள் பார்யையாக அங்கீகரிப்பீர்களாக” என்றான்.
ஸோமராஜன் இங்கனம் அவர்களுக்கு நல்வார்த்தை சொல்லி அப்ஸரஸ்த்ரீகளின் புதல்வியும், மடந்தையர் மணியுமாகிய அக்கன்னிகையை அவர்களுக்குக் கொடுத்துப்போய்ச் சேர்ந்தான். அப்பால் அந்த ப்ராசேதஸர்கள் அனைவரும் தர்மத்தின்படி அப்பெண்னை மணம் புரிந்தார்கள். அவர்களுக்கு அந்த மாரிஷையிடத்தில் தக்ஷர் ப்ராசேதஸரென்று பேர் பூண்டு பிறந்தார். இவர் ஸ்ருஷ்டித்த ப்ரஜைகளால் மூன்று லோகங்களும் பெரும்பாலும் நிறைந்தன. அவர்க்குப் புதல்விகளிடத்தில் ப்ரீதி மிகுந்திருக்கும். அவர் வீர்யத்தினாலும், ஸங்கல்பதித்னாலும் ப்ராணிகளைப் படைத்த விதம் சொல்லுகிறேன். அதை என்னிடத்தில் ஊக்கத்துடன் கேட்பாயாக.
ப்ராசேதஸரென்கிற அந்த ப்ரஜாபதி தேவர், அஸுரர், மனுஷ்யர் முதலிய ப்ரஜைகளையெல்லாம் முதலில் ஸங்கல்பத்தினாலேயே படைத்தார். அவற்றில் சில ஆகாயத்திலுள்ளவை. சில பூமியிலுள்ளவை. சில ஜலத்திலுள்ளவை. ஸங்கல்பத்தினால் நடத்தின அந்த ப்ரஜா ஸ்ருஷ்டி (மக்கள் படைப்பு) அவ்வளவாக மேன்மேலும் வளராதிருப்பதைக்கண்டு அந்த ப்ராசேதஸர் விந்திய பர்வதத்தின் தாழ்வரைகளில் சென்று பிறரால் அனுஷ்டிக்க முடியாத கடுந்தவத்தை நடத்தினார். அந்த விந்த்யமலையின் தாழ்வரையில் அகமர்ஷணமென்னும் புண்ய தீர்த்தம் ஒன்று இருக்கின்றது. அது பாபங்களையெல்லாம் போக்கும்; புண்ய தீர்த்தங்களெல்லாவற்றிலும் சிறந்தது. அதில் அந்த ப்ராசேதஸர் மூன்று காலங்களிலும் ஸ்நானம் செய்து தவத்தினால் பகவானை ஆராதித்தார். அவர் ஹம்ஸ குஹ்யமென்னும் ஸ்தோத்ரத்தினால் இந்திரியங்களுக்குப் புலப்படாத பகவானை ஸ்தோத்ரம் செய்தார். அந்த ஸ்தோத்ரத்தை உனக்குச் சொல்லுகிறேன், கேட்பாயாக. அந்த ப்ராசேதஸர்க்குப் பகவான் அந்த ஸ்தோத்ரத்தினால் ப்ரஸன்னனானான்.
“பரமபுருஷனுக்கு நமஸ்காரம். அவன் சேதன அசேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணமானவன் (வேறானவன்). அவன் ஸத்யஸங்கல்பன்; ப்ரக்ருதியைச் சரீரமாகவுடையவன். ஜீவாத்மாக்கள் “தேவன் மனுஷ்யன்” என்னும் புத்திகளுக்கு விஷயமாவதுபோல, அவன் அப்புத்திகளுக்கு விஷயமாகமாட்டான்; தேசகால வஸ்து பரிச்சேதமற்றவன்; தனக்குத் தானே காரணன். அவன் எல்லாச் சரீரங்களிலும் ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய் வஸிக்கின்றான்; ஹிதத்தையே செய்பவன். ஜீவாத்மாக்கள் அனைவரும் அத்தகைய பரமாத்மாவுக்கு, ரத்னத்திற்குக் காந்திபோல் சேஷப்பட்டிருப்பவர்கள் (அடிமைப் பட்டிருப்பவர்கள்). அவர்களை அவன் அந்தராத்மாவாய்த் தரித்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் அவனுக்கு மேன்மையை விளைப்பதே ஸ்வரூபமாகப் பெற்றவராகையால் அவனுக்கு நண்பர்கள். ஆயினும் அவர்கள் தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து ஞான (அறிவு) ஸங்கோசத்தை (குறைவை) அடைந்து தமக்குள்ள அத்தன்மையை அறியாமலே இருக்கின்றார்கள். அத்தகைய ஸகாவான (நண்பனான) பரமபுருஷனுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.
தேஹம், ப்ராணன், மனம், ஜ்ஞானேந்திரியங்கள் பூமி முதலிய பஞ்சபூதங்கள், கந்தம் (வாஸனை) முதலிய தன்மாத்ரங்கள், கர்மேந்திரியங்கள் ஆகிய இவை தம்மைக்காட்டிலும் வேறுபட்ட ஜீவாத்மாவை அறியமாட்டாது. ஜீவனோவென்றால், தேஹம் முதலிய அவற்றையெல்லாம் அறிகின்றான். ஆயினும் தேஹாதிகளையும், தன்னையும் அறிகிற ஸர்வஜ்ஞனான பகவானையும், அவன் குணங்களையும் அறிகிறதில்லை. அவன் அபரிச்சின்ன ஸ்வரூபன். அவனை நான் ஸ்தோத்ரம் செய்கிறேன். ஜீவன் உறங்கும் பொழுது பரமாத்மாவினால் அணைக்கப்படுகின்றான். அப்பொழுது ஜீவன் தேஹத்தையே அறியாதிருக்கத், தன்னை அணைக்கின்ற பரமாத்மாவை அறிய ப்ரஸக்தியே (வாய்ப்பே) இல்லை. அந்தப் பரமபுருஷன் ராகாதி (விருப்பு, வேறுப்பு முதலிய) தோஷங்களால் வரும் கலக்கமற்ற உபாஸனை (த்யான) ரூப ஜ்ஞானத்தினால் அறியக்கூடியவனேயன்றி மற்றபடி அவனை அறியமுடியாது. அவன் பரிசுத்த ஸ்வரூபன்; பரிசுத்தமான ஹ்ருதயத்தில் வாஸம் செய்பவன். இத்தகையனான பகவானுக்கு நமஸ்காரம். அவன் மும்மூன்றாகிய ஒன்பது சக்திகளுடன் ஸங்கல்பத்தினால் ஜீவாத்மாக்களுடைய ஹ்ருதயங்களில் வீற்றிருக்கிறான். அவனைக் கண், காது முதலிய வெளி இந்த்ரியங்களால் அறியமுடியாது. அரணிக்கட்டையை மத்தாகக் கொண்டு கடைந்து அதினின்று அக்னியை எடுப்பது போலப், பண்டிதர்கள் தர்சபூர்ணமாஸாதிகளால் (அமாவாசை, பெளர்ணமிகளில் செய்யும் சடங்குகளால்) ஆராதிக்கத் தகுந்தவனாகிய அந்தப் பரமபுருஷனை யோக பரிசுத்தமான புத்தியினால் ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணனென்று (வேறானவன் என்று) அறிகின்றார்கள். அவன் விகாரங்களுக்கெல்லாம் (மாறுதல்களுக்கெல்லாம்) இடமான ப்ரக்ருகி ஸம்பந்தம் நீங்கப்பெறுகையாகிற மஹாநந்தரூபமான மோக்ஷத்தில் அனுபவிக்கத் தகுந்தவன். அவனே எல்லாச் சொற்களுக்கும் பொருளாயிருப்பவன். அவனுக்கு ஜகத்தெல்லாம் சரீரம். ஆயினும் அதன் தோஷங்களெவையும் தன்மேல் தீண்டப் பெறாதவன். அவன் ஆச்சர்யமான பல சக்திகளுடையவன். இத்தகையனான அந்த பரமபுருஷன் எனக்கு அருள்புரிவானாக. நாம் சப்தத்தினால் சொல்லுகிறதும், புத்தியால் நிச்சயிக்கிறதும், இந்திரியங்களால் அறிகிறதும், மனத்தினால் ஸங்கல்பிக்கிறதுமாகிய அவையெல்லாம் பரமபுருஷனுக்குச் சரீரமேயன்றி ஸ்வரூபமன்று; அவை ஸத்வாதி குணங்களின் பரிணாமங்கள் (மாறுபாடுகள்). ஆயினும் அவற்றின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களே (அழித்தல்) அவனுக்கு அஸாதாரணமான லக்ஷணமாம்.
உலகத்தில் அதிகரணம் (ஸம்பந்தம்), அபாதானம் (எடுத்தல்), கரணம் (இந்த்ரியங்கள்), ஸம்ப்ரதானம் (கொடுத்தல்), கர்மம் (செயல்), கர்த்தா (செய்பவன்) என்னும் இச்சக்திகளுக்கிடமான வஸ்துக்களும் ஸாதாரணமான பலவகை ஸம்பந்தமுடைய வஸ்துக்களும் ப்ரயோஜக (செய்விக்கும்) சக்தி ப்ரயோஜ்ய (செய்யும்) சக்தி இவையுடைய வஸ்துக்களும் காலமும் பரமபுருஷனே. பரமபுருஷன் இந்த ஜகத்தெல்லாம் உண்டாவதற்கு முன்பு கேவலம் காரணவஸ்துவாய் அழியாமலேயிருந்தான். அவனே இந்த ப்ரபஞ்சமாக விரிந்தான். ஆகையால் இந்த ப்ரபஞ்சமெல்லாம் அவனேயன்றி அவனைக்காட்டிலும் வேறுபட்டதன்று. அவனொருவனே. இத்தன்மையனன்றி மற்றொருவனும் இல்லை. அவன் தனக்குத் தானே காரணனன்றி அவனுக்கு மேற்பட்டவனும் இல்லை.
ஸ்ருஷ்டிக்கு முன்பு நாம (பெயர்) ரூபங்களுக்கு (உருவம்) இடமில்லாத ஸூக்ஷ்ம சேதனா சேதனங்களைச் சரீரமாகக்கொண்டிருந்த பரமபுருஷன் நாம (பெயர்) ரூபங்களுக்கு (உருவம்) இடமான ஸ்தூல சேதனா சேதனங்களைச் சரீரமாகக் கொண்ட புருஷனாய் விரிகின்றான். ஸ்வபாவ ஸ்வரூப பரிணாமங்களெல்லாம் (ஸ்வபாவ பரிணாமம் – அறிவில் ஏற்றத்தாழ்வு; இது ஜீவர்களுக்கு ஏற்படும் மாறுதல். ஸ்வரூப பரிணாமம் – தனது இயற்கைத் தன்மையிலேயே ஏற்படும் மாறுதல்; உதாரணம் மண் குடமாக மாறுவது; இது அசேதனத்திற்கு ஏற்படும் மாறுதல்) சரீரங்களாகிய சேதனா சேதனங்களைச் சேர்ந்தவைகளேயன்றி அவனைத் தீண்டமாட்டாது. உலகத்தில் பல பண்டிதர்கள் பகவானுடைய சக்திகளான ப்ருதிவி முதலிய தத்வங்களைப்பற்றிப் பலவாறு ஸித்தாந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு ஒருவருக்கொருவர் விவாதப்படுவதும் ஒத்துப் பேசுவதுமாயிருக்கிறார்கள். அவனுடைய சக்திகள் பண்டிதர்களுக்கும் தமது உண்மை தெரியாதபடி அடிக்கடி மதியை மயக்குகின்றன. அவன் கணக்கில்லாத கல்யாண குணங்களுடையவன்; அபரிச்சின்ன ஸ்வரூபன். அத்தகைய பரமபுருஷனுக்கு நமஸ்காரம்.
வேதாந்த வாக்யங்களில் சில பரமபுருஷனுக்குக் குணங்கள் உண்டென்றும், சில இல்லையென்றும் சொல்லுகின்றன. உண்மையும், இன்மையும் ஒன்றோடொன்று பொருந்தாதவை. இவ்விருத்த தர்மங்கள் எங்கனம் பொருந்துமென்பதை அவ்வேதாந்த வாக்யங்களைக்கொண்டே ஆராய்ந்தறிய வேண்டும். வேதாந்த வாக்யங்கள் ஸத்ய (எந்த மாறுபாடும் இல்லாதவன்), ஜ்ஞான (அனைத்தையும் அறிபவன், அறிவே ஸ்வரூபமனவன்) அனந்த (தேச, கால, வஸ்துக்களால் வரையறுக்கப்பட முடியாதவன்) ஸ்வரூபனென்றும், அபரிச்சின்ன ஸ்வரூபனென்றும் (அளவிட்டுக் கூற முடியாதவன்), கெட்டகுணங்கள் தீண்டப்பெறாதவனென்றும், சொல்லுகின்றன. ஆகையால் குணங்கள் உண்டென்னும் சொல் கல்யாண குணங்களைப் பற்றினதென்றும், இல்லையென்னும் சொல் கெட்ட குணங்களைப் பற்றினதென்றும் பிரித்தறிய வேண்டும். யோக மதத்திலும், ஸாங்க்ய மதத்திலும் ஈச்வரன் உண்டென்றும், இல்லையென்றும் விவாதத்தில் வேதாந்த வாக்யங்களைக் கொண்டு ஈச்வரன் உண்டென்று ஸித்தாந்தம் (கொள்கை) செய்வதுபோல், அவ்வாக்யங்களே அவனுக்குக் குணங்களையும் சொல்லுகையால் குணங்கள் உண்டென்பது ஸித்தாந்தமாம். ஆகையால் ஈச்வரனில்லையென்பதும் அவனுக்குக் குணங்கள் இல்லையென்பதும் ப்ரமமே (மயக்கமே, தவறான அறிவே). பரமபுருஷன் கர்மத்தினால் விளையும் நாமரூபங்கள் அற்றவனாயினும் தன் பாதமூலத்தைப் பணிகிறவர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு அவதார சேஷ்டிதங்களுடன் ராம, க்ருஷ்ணாதி நாமங்களையும் அந்தந்த உருவங்களையும் அங்கீகரித்தான். அவன் இணையெதிரில்லாதவன்; அனந்தன். அவன் எனக்கு அருள்புரிவானாக.
ப்ரக்ருதியின் பரிணாமமான வஸ்துக்களை அறியும் தன்மையுடைய இந்த்ரியங்களால் ஜனங்கள் மனோவ்ருத்தியின்படி (மனதில் தோன்றும் எண்ணப்படி) அந்தந்த வஸ்துக்களைக் காணும் பொழுது தனக்குச் சரீரமாகிய சேதனா சேதனங்களில் அந்தர்யாமியாய் இருக்கின்ற பரமபுருஷனும் அவர்கட்குத் தோற்றுகிறான். ராஜாவின் சரீரத்தைக் கண்டால் ராஜனையும் கண்டாற்போலவேயல்லவா? அங்கனமே ஜகத்திலுள்ள வஸ்துக்களைக் காணும் பொழுது அவற்றிற்கு அந்தர்யாமியாயிருக்கின்ற ஈச்வரனையும் கண்டாற்போலவே. ஆனால் இக்காட்சி எல்லாம் பரமாத்மாவுக்குச் சரீரமென்னும் பாவனை உடையவர்க்கேயன்றி மற்றவர்க்குக் கிடையாது. காற்று பூமியைக்காட்டிலும் விலக்ஷண (வேறான) வஸ்துவாயினும் பூமியின் பரிணாமமான புஷ்பத்தின் தூள்களை அடித்துக்கொண்டு அவ்வாஸனையுடன் வீசுகையில் கந்தவஹமென்று பேர் பெறுகின்றது. இங்கனமே பரமபுருஷன் ஜகத்தைக் காட்டிலும் விலக்ஷணனாயினும் (வேறானவனாயினும்) அதைச் சரீரமாக உடையவனாகையால் அதன் நாமரூபங்களைப் பெற்றுத் தோற்றுகிறான். அப்படிப்பட்ட ஸர்வேச்வரன் என் மனோரதத்தை நிறைவேற்றுவானாக.”
ஓ குருச்ரேஷ்டனே! இங்கனம் அந்த அகமர்ஷண தீர்த்தத்தில் தக்ஷர் ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டிருக்கையில் பகவான் பக்தவத்ஸலனாகையால் அவருக்கு ப்ரத்யக்ஷமானான். அவன் கருத்மானுடைய (கருடனுடைய) தோளின் மேல் பாதங்களைத் தொங்கவிட்டுக்கொண்டு முழந்தாள் வரையில் தொங்குகின்ற எட்டுப் புஜங்கள் விளங்கப்பெற்றுச் சங்கு, சக்கரம், கத்தி, கேடயம், பாணம், தனுஸ்ஸு, பாசம், கதை இவைகளைத் தரித்துப் பீதாம்பரம் உடுத்து மேகம் போல் கறுத்துத் தெளிந்தழகிய முகமும் கண்களும் திகழ வனமாலை அணிந்து ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், பெரியகிரீடம், கைவளை, மகரகுண்டலம், அரைநாண்மாலை, மோதிரம், கால்வளை, சிலம்பு, தண்டை, தோள்வளை முதலிய ஆபரணங்கள் பூண்டு மூன்று லோகங்களையும் மயக்கும்படியான உருவத்துடன் தோற்றினான். நாரதர், நந்தர் முதலிய பரிவாரங்கள் த்ரிலோக (மூன்று உலகங்களுக்கும்) ஈச்வரனான அந்த ஆதிபுருஷனைச் சூழ்ந்து வந்தனர். தேவர்கள் கூட்டம் கூட்டமாய் அவனைத் துதித்தார்கள். ஸித்தர், கந்தர்வர், சாரணர் முதலிய உபதேவதைகள் அவனைவரும் பாடினார்கள். மிகவும் ஆச்சர்யமான பகவானுடைய அவ்வுருவத்தைக் கண்டு தக்ஷப்ரஜாபதி பயம் தெளிந்து மனக்களிப்புற்றுப் பூமியில் தண்டம் போல் விழுந்து நமஸ்கரித்தார். நதிகள் ப்ரவாஹங்களால் நிறைந்திருப்பது போல, இந்த்ரியங்களெல்லாம் மஹத்தான ஸந்தோஷத்தினால் நிரம்பப்பெற்ற அந்த ப்ராசேதஸர் ஒன்றும் சொல்ல முடியாதிருந்தார். அவர் ப்ரஜைகளை விரும்பி அவனை ஆராதித்தார். அவ்விருப்பத்தை ஆனந்தத்தின் மிகுதியால் சொல்ல முடியாமல் தலைவணங்கி நிற்கிற தன் பக்தரைப் பார்த்து ஸமஸ்த ப்ராணிகளின் அபிப்ராயத்தையும் அறிந்த ஜனார்த்தனன் இங்கனம் மொழிந்தான்.
“பராசேதஸ! மிகுந்த மதியுடையவனே! நீ தவத்தினால் நன்கு ஸித்திபெற்றாய். மிகுந்த ச்ரத்தையுடன் என்னை ஆராதித்து என்னிடத்தில் மேலான பக்தியோகம் உண்டாகப்பெற்றாய். ப்ரஜாபதீ! உன்னிடத்தில் நான் மிகவும் ஸந்தோஷம் அடைந்தேன். இந்த ஜகத்தின் அபிவிருத்திக்காகவன்றோ நீ தவம் செய்தாய். ப்ராணிகள் வளர்ந்திருக்க வேண்டுமென்பதுவே என் விருப்பம். ப்ரஹ்மதேவன், ருத்ரன் ப்ரஜாபதிகளாகிய நீங்கள் ஸ்வாயம்புவர் முதலிய மனுக்கள் இந்திரன் முதலிய தேவதைகள் இவ்வனைவரும் என்னுடைய அம்சங்களே: ப்ராணிகளின் ஸம்ருத்திக்காகவே ஏற்பட்டவர்கள்.
ப்ராஹ்மண ச்ரேஷ்டனே! தவம் என்னுடைய ஹ்ருதயம். வித்யை சரீரம். க்ரியைகள் ஆகாரம். ஸோமமுள்ள யாகங்களும் ஸோமமில்லாத யாகங்களும் எனது அங்கங்கள். தானாதி தர்மங்கள் என் மனம். தேவதைகள் என் ப்ராணன். ஸ்ருஷ்டிக்கு முன்பு நானொருவனே இருந்தேன். இச்சேதனா சேதனங்களெல்லாம் அப்பொழுது எவையுமே இல்லை. ஜீவாத்மாக்கள் நாம ரூபங்களின்றி என்னிடத்தில் மறைந்திருந்தார்கள். ப்ரக்ருதியும் ஸூக்ஷ்ம தசையை அடைந்து உறங்கினாற் போல் என்னிடத்தில் முழுவதும் மறைந்திருந்தது நான் அனந்த கல்யாண குணாகரன். அபரிச்சின்ன ஸ்வரூபன். ஸத்வாதி குணமயமான ப்ரக்ருதியினின்று ப்ரஹ்மாண்ட ரூபமான என் தேஹம் உண்டாயிற்று. அதுவும் ஸத்வாதி குணங்களின் பரிணாமமே. அப்பொழுது அவ்வண்டத்தினின்று ஸமஷ்டிபுருஷனாகிய ப்ரஹ்மதேவன் உண்டானான். தேவர்களில் மேன்மையுடைய அந்நான்முகன் என்னுடைய ஸங்கல்பத்தினால் ஸ்ருஷ்டிக்க முயன்றும் தன்னை அஸமர்த்தனாக (திறமை அற்றவனாக) நினைத்தான். அனந்தரம் அவன் என்னால் தவம் செய்யும்படி சொல்லப் பெற்றுத் தாருணமான (கடுமையான) தவம் செய்தான். தவம் செய்த அந்த ப்ரஹ்மதேவன் ஸ்ருஷ்டிக்க வல்லவனாகித் தவபலத்தினால் ப்ரஜாபதிகளான உங்களை ஸ்ருஷ்டித்தான். ஆகையால் தவமே ஜகத்தின் அபிவ்ருத்திக்குரிய உபாயம்.
ஓ தக்ஷனே! பஞ்சஜனரென்னும் ப்ரஜாபதிக்கு அஸிக்னியென்று ஓர் புதல்வி இருக்கிறாள். அவளை நீ பார்யையாக (மனைவியாக) அங்கீகரிப்பாயாக. ஆணும், பெண்ணும் கலந்து ஸம்போகிக்கையாகிற தர்மத்தை ஏற்றுக் கொண்டு அதற்குரியவளாகிய அந்த அஸிக்னியிடத்தில் ப்ரஜா (மக்கள்) ஸ்ருஷ்டியை மேன்மேலும் வளர்த்திக்கொண்டு வருவாயாக. உனக்குப் பின்னிட்ட ப்ரஜைகளெல்லாம் என் ஸங்கல்பத்தினால் ஆணும், பெண்ணுமாய்க் கலந்து ஸந்ததியை வ்ருத்தி செய்யப் போகிறார்கள். மற்றும், யஜ்ஞாதி கர்மங்களால் என்னை ஆராதிக்கப் போகிறார்கள்” என்று மொழிந்து ஜகத் ஸ்ருஷ்டி கர்த்தாவான அந்த ஸர்வேச்வரன், ப்ராசேதஸர் பார்த்துக்கொண்டே இருக்கையில், ஸ்வப்னத்தில் (கனவில்) கண்ட பொருள் போல் அவ்விடத்திலேயே மறைந்தான்.
நான்காவது அத்தியாயம் முற்றிற்று.