ஶ்ரீமத் பாகவதம் - 139

ஆறாவது ஸ்கந்தம் – ஐந்தாவது அத்தியாயம்


(தக்ஷர் தன் பிள்ளைகளை நாரதர் கெடுத்தாரென்று அவரைச் சபித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தக்ஷப்ரஜாபதி பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பட்டுப் பஞ்சஜனருடைய புதல்வியை மணம்புரிந்து அவளிடத்தில் ஹர்யச்வரென்னும் பேருடைய பதினாயிரம் பிள்ளைகளைப் பெற்றார். மன்னவனே! அந்தத் தக்ஷருடைய பிள்ளைகள் அனைவரும் கலந்து ஒரே தர்மத்தை ஆசரிக்கும் தன்மை உடையவர்கள். அவர்கள் தந்தையால் ப்ரஜைகளைப் படைக்கும்படி நியமிக்கப்பெற்று மேற்கு திக்குக்குப் போனார்கள். ஸிந்து நதி ஸமுத்ரத்தில் போய் கலக்குமிடத்தில் நாராயண ஸரஸ்ஸென்று ஓர் புண்யதீர்த்தம் இருக்கின்றது. அது மிகுந்த பெருமையை உடையது. முனிவர்களும், ஸித்தர்களும் அதை ப்ரீதியுடன் பணிகின்றார்கள். ஹர்யச்வர்கள் அந்தப்புண்ய தீர்த்தத்தைத் தொட்டமாத்திரத்தில் மன மலங்களெல்லாம் கழிந்து பரமஹம்ஸர்கள் ஆசரிக்கும் தர்மத்தில் மதி (புத்தி) செல்லப் பெற்றார்கள். ஆயினும், அவர்கள் தந்தையாகிய ப்ராசேஸருடைய கட்டளைக்கு உட்பட்டுக் கடுமையான தவத்தை நடத்தினார்கள். இங்கனம் ப்ரஜைகளின் அபிவ்ருத்திக்காக (மேன்மேலும் வளர) யத்னஞ் (முயற்சி) செய்கிற அந்த ஹர்யச்வர்களைத் தேவரிஷியாகிய நாரதர் கண்டார். அவர் அவர்களை நோக்கி “ஓ ஹர்யச்வர்களே! நீங்கள் பாலர்களாய் இருக்கின்றீர்கள். உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே. பூமியின் முடிவை அறியாமல் ஏன் ப்ரஜைகளைப் படைக்கத் தொடங்கினீர்கள். அதை அறிவீர்களாயின் நீங்கள் இச்செயலில் முயற்சி கொள்ள மாட்டீர்கள். ஜகத்திற்கெல்லாம் ஈச்வரனொருவனே நியாமகன் (நியமிப்பவன்) என்பதையும், ஹ்ருதய பிலத்தினின்று (இதய குஹையிலிருந்து) வெளிப்பட்டு வர உபாயம் ஏற்படாமையையும், புத்தியாகிற பெண்மணியின் பலவாறான தோற்றங்களையும், சபலமான (பலத்துடன் கூடிய) அப்புத்தியுடன் கலந்த ஜீவனுடைய நிலைமையையும், ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களாகிற (அழிப்பு) இரண்டு கரைகளும் நிறைந்து பாய்கின்ற மாயையாகிற நதியையும், அற்புதமான இருபத்தைந்து தத்வங்கள் அடங்கினதும் ஜீவனோடு கூடியதுமாகிய சரீரமாகிற க்ருஹத்தையும், ஸம்ஸாரபந்தம் மோக்ஷம் இவைகளாகிற இரண்டு இறகுகளையுடைய ஸர்வேச்வரனாகிற ஹம்ஸத்தையும், சிறிய கத்திகளாலும், வஜ்ரங்களாலும் நிர்மிக்கப்பட்டுத் திடமும் (உறுதியானதும்) கூரியதும் சுற்றிக்கொண்டே இருப்பதுமாகிய காலசக்ரத்தையும், எல்லாம் உணர்ந்து ஜன்மங்கள் தோறும் தந்தையைப் போல் ஹிதத்தையே உபதேசிக்கின்ற சாஸ்த்ரத்தின் அனுகூலமான கட்டளையையும் அறியாமல் நீங்கள் ஸ்ருஷ்டிக்கு யத்னம் (முயற்சி) செய்கிறீர்கள். இப்படியும் செய்வார்களோ? ஆ!” என்று மொழிந்தார்.

அந்த ஹர்யச்வர்கள் இயற்கையாகவே எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியவல்ல மதி (புத்தி) உடையவர்கள். அவர்கள் நாரதருடைய வார்த்தையைக் கேட்டுத் தம் புத்தியால் அந்த நாரதருடைய வார்த்தையின் கருத்தை ஆலோசித்து நிச்சயித்துக் கொண்டார்கள். “ஜீவனால் அறியக்கூடியதும் ப்ருதிவி முதலிய பஞ்சபூதங்களின் பரிணாமமுமான தேஹத்தைப் பூமியென்று மொழிந்தார். அது அனாதியான (ஆரம்பம் இல்லாத) புண்ய, பாப கர்மங்களைப்பற்றி ஏற்படுகின்றது. அத்தேஹம் அழியும் தன்மையுடையது என்பதை அறியாமல் அனாதியான கர்மபந்தத்தைப் போக்கும் திறமையற்று மேன்மேலும் ஸம்ஸாரத்தையே வளர்க்கின்ற கர்மங்களைச் செய்வதனால் என்ன உபயோகம்? பகவான், விழித்துக்கொண்டிருக்கை, ஸ்வப்னம் (கனவு) காண்கை, உறக்கம் என்கிற இம்மூன்று அவஸ்தைகளைக் கடந்தவன்; தனக்குத்தானே ஆதாரமாயிருப்பவன். ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறுபட்டவன்); ஷாட்குண்யபூர்ணன்; தோஷங்கள் எவையும் தீண்டப்பெறாதவன். அவனொருவனே எல்லாவற்றிலும் உட்புகுந்து தரித்து நியமிப்பவன்; கர்மத்தினால் விளையும் உற்பத்தியற்றவன். இத்தகைய ஸர்வேச்வரனை உபாஸிக்காமல் மற்ற கர்மங்களைச் செய்வதனால் என்ன ப்ரயோஜனம்? 

ஜீவன், குஹை போன்ற ஹ்ருதயத்தில் சென்று, பாதாளத்தில் சென்று, போகங்களில் ஆழ்ந்து, தன்னையும் மறந்து, தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து அதினின்று வெளிப்படாமல் அவ்விடத்திலேயே இருப்பதுபோல், ப்ரக்ருதியைக் காட்டிலும் விலக்ஷணமான (வேறான) தன் ஸ்வரூபத்தை அறியாமல் காமபோகங்களில் ஆழ்ந்து அதினின்று வெளிப்பட்டுவரத் தெரியாமல் அங்கேயே இருக்கிறான். ஸ்வயம்ப்ரகாசமான அத்தகைய ஆத்மஸ்வரூபத்தை அறியாமல், மேன்மேலும் சரீர பந்தத்தையே விளைக்கும்படியான கர்மங்களைச் செய்வதனால் என்ன நன்மை உண்டாகும். கள்ள புருஷனை (கணவனைத் தவிர்த்து வேறு புருஷனை) விரும்பும் பெண்கள் காமமோஹத்தினால் தோன்றியபடி திரிவதுபோல், ஜீவனுடைய புத்தி ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) குணங்கள் மறைந்து, வெளியில் திரிகின்றது. அதன் நிலைமையாகிய விவேகம் (பகுத்து அறியும் தன்மை) உண்டாகப் பெறாதவன் அதற்கிடமில்லாத வீண் கர்மங்களைச் செய்வதனால் இவ்வுலகத்தில் என்ன க்ஷேமத்தை அடைவான்? நன்மதியில்லாத பார்யையை உடையவன் அவள் வேண்டுகிற ஆடை, ஆபரணம் முதலியவற்றைச் சம்பாதிக்கும் ஆயாஸத்தினால் (மனச்சோர்வுடன் கூடிய முயற்சியினால்) வருந்துவது போல், அங்கனம் திரிகின்ற புத்திக்கு உட்பட்டுக் கர்மத்திற்கு உட்படாமையாகிற தன் ஐச்வர்யத்தை இழந்து ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தை அனுபவிக்கின்ற ஜீவனுடைய ஸ்வரூபத்தையும், அப்புத்தியின் மூலமாய் விளையும் ஸ்வர்க்க, நரகாதிகளையும் அறியாமல், அற்பமும் (அளவோடு கூடியதும்) அஸ்திரமுமான (நீடித்து இருக்காததுமான) ஸ்வர்க்காதி போகங்களையும், துக்க ரூபமான நரகங்களையும் விளைக்கவல்ல வீண் கர்மங்களைச் செய்வதனால் என்ன உபயோகம்? 

மாயையென்னும் ப்ரக்ருதியே நதி. அதற்கு ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களே இருபுறத்து ப்ரவாஹங்கள் (ஓட்டம்). அந்நதி இஹலோக (இந்த உலகம்), பரலோகங்களாகிற (ஸ்வர்கம் போன்ற வேறு உலகங்கள்) இக்கரை-அக்கரையோரங்களில் பெருவேகமுடையது. அந்த ப்ரக்ருதியால், மதிமயங்கித் தன் ஸ்வரூபத்தை ஆராய்ந்தறியாமல், இஹபரலோகங்களை விளைக்கும்படியான அஸத் (நன்மை பயக்காத) கர்மங்களைச் செய்வதனால் என்ன உபயோகம்? ஜீவன் வரையிலுள்ள இருபத்தைந்து தத்வங்களின் ஸமுதாய ரூபமான இச்சரீரம் ஆச்சர்யத்திற்கிடமானது. ஈச்வரன் ஜீவன் மூலமாய் இதில் புகுந்திருக்கிறானாகையால் இது அவனுடைய சரீரமே. இது அவனால் தரிக்கப்பட்டிருக்கின்றது.  இத்தகைய சரீரத்தின் நிலைமையை அறியாமல், தேஹாத்ம ப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்), ஸ்வதந்த்ராத்ம ப்ரமம் (நான் பகவானுக்கு அடிபணிந்தவன் அன்று; தன்னிச்சையாக எதையும் செய்ய வல்லவன் என்ற கலக்கம்) முதலியவற்றை விளைக்கும்படியான அஸத் (நன்மை பயக்காத) கர்மங்களைச் செய்வதனால் என்ன உபயோகம்? ஈச்வரன் தோஷங்கள் தீண்டப்பெறாத பரிசுத்தன்; சாஸ்த்ரத்தினால் மாத்திரமே அறியத்தகுந்தவன்; ஸம்ஸார பந்தத்திற்கும், மோக்ஷத்திற்கும் காரணமான ப்ரவ்ருத்தி (உலகப் பற்றை வளர்க்கும்), நிவ்ருத்தி (இவ்வுலகப் பற்றிலிருந்து விலகும்) கர்மங்களைக் காட்டுகிறவன்; ஏகாந்தமான ஹ்ருதய குஹையில் வாஸம் செய்பவன். இத்தகையனான ஸர்வேச்வரனை ஆராய்ந்தறியாமல், அவனிடத்தில் மனப்பற்றை விளைக்கமாட்டாத அஸத் (நன்மை பயக்காத) கர்மங்களைச் செய்வதனால் என்ன உபயோகம்? காலசக்ரம் ப்ரஹ்மதேவன் முதல் பூச்சி, புழு வரையிலுள்ள ஸமஸ்த ஜகத்தையும் அறுக்கும் தன்மையது; ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதிகளுக்கு நிமித்தமாகையால் (காரணமாகையால்) பொறுக்க முடியாதது; ஸர்வகாலமும் சுற்றிக்கொண்டேயிருக்கும்; ஒருவருக்கும் உட்படாதது. இதை அறியாமல், அஸத் (நன்மை பயக்காத) கர்மங்களைச் செய்வதனால் என்ன உபயோகம்? 

சாஸ்த்ரம் ஹிதத்தை உபதேசிக்கின்றதாகையால், அதுவே ஜகத்திற்கெல்லாம் தந்தை. ப்ரவ்ருத்தி தர்மங்களெல்லாம் ஸம்ஸாரத்தை வளர்க்குமாகையால் அதினின்று வெளிப்பட வேண்டும் என்பதுவே அதன் கருத்து. இத்தகைய சாஸ்த்ரத்தின் கட்டளையை உள்ளபடி அறியாமல், ஸத்வாதி குணங்களின் பரிணாமமான சப்தாதி விஷயங்களில் விச்வாஸமுற்று, ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களைத் தொடங்குவதால் என்ன உபயோகம்? சாஸ்த்ரத்தின் கருத்தை அறிந்து அதற்கு அனுகூலமாக நடக்க வேண்டுமாயின், அச்செயல்களினின்று மீளவேண்டும்” என்று நாரதருடைய வாக்யங்களை ஆராய்ந்தறிந்தார்கள். 

மன்னவனே! இங்கனம் நிச்சயித்துக்கொண்ட ஹர்யச்வர்கள் அனைவரும் ஒத்தமதி (ஒரே மாதிரியான புத்தி) உடையவர்களாகி அந்த நாரதரை ப்ரதக்ஷிணம் செய்து மீளவும், இந்த ஸம்ஸாரத்திற்குத் திரும்பாமல் பரமபுருஷனிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்படியான மார்க்கத்தைக் கைப்பற்றினார்கள். நாரதமுனிவர் பரப்ரஹ்மத்தின் ஸாந்நித்யத்தை விளைக்கின்ற வீணையின் ஸ்வரத்தில் தோற்றுகிற ஹ்ருஷீகேசனுடைய பாதார விந்தங்களில் மனத்தை மாறாதபடி நிறுத்தி உலகங்களில் திரிந்தார். அப்பால்,  தக்ஷப்ரஜாபதி நல்லொழுக்கமுடைய தன் புதல்வர்கள் நாரதர் மூலமாய் நாசம் அடைந்தார்களென்று (தான் நியமித்த ஸ்ருஷ்டியின் முயற்சியைத் துறந்து முக்தியை அடைந்தார்களென்று) கேள்விப்பட்டுச் சோகித்தார். நற்பிள்ளையைப் பெறுதல் சோகத்திற்கிடமென்னும் பழமொழி யதார்த்தமாயிற்று. 

அந்த தக்ஷர் ப்ரஹ்மதேவனால் நல்வார்த்தைகளால் ஸமாதானம் சொல்லப்பெற்று மீளவும் பாஞ்சஜன்யையிடத்தில் சபலாச்வரென்னும் பேருடைய ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றார். அந்தச் சபலாச்வர்களும் தந்தையினால் ப்ரஜைகளைப் படைக்கும்படி நியமிக்கப்பட்டுத் தந்தையின் சொல்லைத் தலைக்கட்டுகையாகிற வ்ரதத்தைக் கைப்பற்றித் தமது முன்தோன்றல்களாகிய ஹர்யச்வர்கள் ஸித்தியடைந்த நாராயண ஸரஸ்ஸென்னும் புண்ய தீர்த்தத்திற்குப் போனார்கள். அவர்கள் அப்புண்ய தீர்த்தத்தின் ஜலத்தை ஸ்பர்சித்த மாத்ரத்தில் மனமலங்கள்  எல்லாம் தீரப்பெற்றுச் சிறப்புடைய ப்ரணவத்தை ஜபித்துக் கொண்டு அவ்விடத்தில் பெருந்தவம் செய்தார்கள் . 

“ஓம்! நாராயணனுக்கு நமஸ்காரம். அவன் ப்ராணிகளுடைய ஹ்ருதயகமலத்தில் வாஸம் செய்பவன்; உட்புகுந்து ஜீவாத்மாக்களை நியமிக்கும் பரமாத்மன். அவனுக்கு சுத்த ஸத்வமயமான (ரஜஸ், தமஸ் கலப்பில்லாத ஸத்வ குணம் மட்டுமே நிரம்பப்பெற்ற) பரமபதம் வாஸஸ்தானம். அவன் கல்யாண குணங்களெல்லாம் நிறைந்தவன்; ஸமஸ்த தோஷங்களும் தீண்டப்பெறாதவன். இத்தகையனான அவனை நாம் த்யானிப்போமாக” என்னும் இம்மந்திரத்தை ஜபித்துக் கொண்டு சில மாதங்கள் ஜலத்தையே ஆஹாரமாகக் கொண்டு மந்த்ரங்களால் கூறப்படும் தேவதையாகிய பரமபுருஷனை ஆராதித்தார்கள். பிறகு, சில மாதங்கள் வாயுவையே பக்ஷித்துக்கொண்டு அவனை ஆராதித்தார்கள். ராஜச்ரேஷ்டனே! நாரதமுனிவர், அவர்களும் படைக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருப்பதைக் கண்டு அவ்விடம் வந்து முன்போலவே கூடமான (ரஹஸ்யமான) வாக்யங்களைச் சொன்னார். 

“தக்ஷகுமாரர்களே! என்னுடைய உபதேசத்தைக் கேட்பீர்களாக. நீங்கள் ப்ராதாக்களிடத்தில் அன்புடையவர்களல்லவா? ஆகையால் உங்கள் தமையன்மார்களாகிய ஹர்யச்வர்கள் சென்ற வழியைத் தொடர்ந்து செல்வீர்களாக. ப்ராதாவாயிருப்பவன் தர்மத்தை அறிந்து தன் ப்ராதாக்கள் சென்ற நல்வழியைத் தொடர்ந்து செல்வானாயின், அவன் தான் செய்த புண்யகர்மமே பந்துவாகப் பெற்றுத் தேவதைகளுடன் கலந்து களிப்புறுவான்” என்றார். நாரதருடைய காட்சி ஒருகாலும் வீணாகாது.  அவர் உண்மையான பொருளைக் கண்டறிந்தவர். அம்முனிவர் இவ்வளவு மாத்ரமே மொழிந்து புறப்பட்டுப்போனார். தக்ஷரது புதல்வர்களான சபலாச்வர்களும் தமது முன்தோன்றல்களான ஹர்யச்வர்களுடைய மார்க்கத்தையே அனுஸரித்தார்கள். 

அப்பால், அவர்கள் பரப்ரஹ்ம ஸ்வரூபனான ஆத்மாவின் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்து ஆதிவாஹிகர்களுடன் செல்கின்ற ஸ்வயம்ப்ரகாசனான ஜீவன் நடந்து போவதும் பரமபுருஷனுக்கு அனுகூலமுமாகிய அர்ச்சிராதிமார்க்கத்தை அடைந்து கடந்த ராத்ரிகள் போல இன்னமும் திரும்பாமலே இருக்கின்றார்கள். இச்சமயத்தில் தக்ஷப்ரஜாபதி பலவகையான உத்பாதங்களை (பின் வரும் கெடுதியை அறிவிக்கும் அடையாளங்களைக்) கண்டு முன்போலவே தன் பிள்ளைகள் நாரதர் மூலமாய் நாசம் அடைந்தார்களென்று கேள்விப்பட்டார். புத்ர சோகத்தினால் மதிமயங்கின அந்தத் தக்ஷப்ரஜாபதி தெய்வாதீனமாய் நேரிட்ட தேவரிஷியாகிய நாரதரைக் கண்டு உதடு துடிக்கப்பெற்று எழுந்து அவர்மேல் கோபித்துக் கொண்டார். 

“நீர் ஸாதுவைப்போல் வேஷம் பூண்டிருக்கிறீரன்றி, இயற்கையில் ஸாதுவன்று. நீர் என் குழந்தைகள் விஷயத்தில் தப்புக்கார்யம் செய்தீர். அவர்கள் தமக்குரிய தர்மத்தில் முயன்றிருக்கையில், அவர்களுக்கு ஸந்யாஸிகளின் வழியைக் காட்டியனுப்பினீர். அவர்கள் கர்மத்தை விவரிக்கிற வேதத்தின் பொருளை ஆராய்ந்தறியவில்லை. ஆகையால், அவர்களுக்கு ரிஷிகளின் கடன் தீரவில்லை. அதற்குமேல் புத்ர உத்பத்தியால் (பிள்ளை பிறப்பதால்) தீரவேண்டிய பித்ருக்களின் கடனும், யஜ்ஞங்களால் தீரவேண்டிய தேவதைகளின் கடனும், தீருவதற்கு ப்ரஸக்தியே (வாய்ப்பே) இல்லை. ஆகையால்,  மூன்று கடன்களினின்றும் விடுபடவில்லை. பாபிஷ்டனே! அவர்களுக்கு இஹலோகத்து (இவ்வுலகத்து) நன்மை, பரலோகத்து (ஸ்வர்கம் போன்ற வேறு உலகத்து) நன்மை, இரண்டும் விளையாதபடி பாழ்செய்தனையே. இங்கனம் நெஞ்சில் இரக்கமில்லாமல் அறியாத பிள்ளைகளின் புத்தியைக் கலைத்த நீ பகவானுடைய புகழைப் பாழ்செய்து கொண்டு அவனுடைய பரிவாரங்களின் இடையில் வெட்கமின்றி எங்கனம் திரிகின்றனை? 

ஓ நாரதா! நீ ஒருவர்க்கொருவர் வைரமின்றி (பகையின்றி) ஸ்நேஹத்துடன் கலந்திருப்பவர்க்கு வைரத்தை (பகையை) விளைத்து ஸ்நேஹபங்கம் செய்யும் (நட்பைக் கெடுக்கும்) தன்மையனல்லவா? உன்னைத் தவிர மற்ற பாகவதர்கள் அனைவரும் எப்பொழுதும் ப்ராணிகளிடத்தில் அனுக்ரஹம் செய்வதே தன்மையாயிருக்கின்றார்கள். ப்ராணிகளுக்குக் கெடுதியையே தேடுகின்ற நீ அவர்களிடையில் எங்கனம் வெட்கமில்லாமல் திரிகின்றனை?  சப்தாதி விஷயங்களின் அனுபவம் துச்சமென்றும் (கீழானது என்றும்), நச்வரமென்றும் (அழியக்கூடியது என்றும்), ப்ராணிகளுக்கு உபதேசித்து அவர்களுக்கு அவ்விஷயங்களில் உண்டாயிருக்கிற மனப்பற்றாகிற பாசத்தை அறுத்து வைராக்யத்தை விளைப்பதாக நீ நினைக்கின்றனை. ஆயினும், ஜ்ஞானமில்லாமல் ஸாதுக்களின் வேஷத்தைப் பொய்யாகவே ஏற்றுக் கொண்டிருக்கின்ற நீ இங்ஙனம் புத்தியைக் கலைப்பதனால் வைராக்யம் முதலே உண்டாகாது. சப்தாதி விஷயங்களை அனுபவிக்காமல் ஒருவன் அவற்றின் கொடுமையை அறியமாட்டான். விஷயங்களை அனுபவித்த பின்பு அவற்றில் வெறுப்பு உண்டாவது போல், பிறர் புத்தியைக் கலைப்பதனால் உண்டாகாது. 

நாங்கள் கர்மத்தில் மனம் சென்று இல்லற வாழ்க்கையில் இழிந்து ஸாதுக்களாயிருக்கிறோம். நீ எங்களுக்குப் பொறுக்க முடியாத அனிஷ்டத்தைச் (கெடுதியைச்) செய்தனை. அதை நாங்கள் பொறுக்கமாட்டோம். எங்கள் ஸந்ததியைப் பாழ் செய்தவனே! நீ எங்களுக்கு மஹத்தான அப்ரியத்தைச் (விருப்பு அல்லாததைச்) செய்தனை. மூடனே! நீ ஓரிடத்திலும் நெடுநேரம் நிற்காமல் மூன்று லோகங்களிலும் திரிந்து கொண்டேயிருப்பாயாக. எவ்விடத்திலும் உனக்கு ஒரு  நிலை ஏற்படாதிருக்குமாக” என்று சபித்தார். ஸாதுக்களால் புகழப்பெற்ற நாரதர் அப்படியே ஆகட்டுமென்று அந்தச் சாபத்தை அங்கீகரித்தார். தான் பதில் செய்ய ஸமர்த்தராயினும், பிறர் செய்த அபகாரத்தைப் (கெடுதியைப்) பொறுத்திருக்கையே ஸாதுக்களின் தன்மையாம். 

ஐந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை