புதன், 24 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 140

ஆறாவது ஸ்கந்தம் – ஆறாவது அத்தியாயம்

(தக்ஷருடைய பெண்களின் வம்சத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தக்ஷப்ரஜாபதி மீளவும் ப்ரஹ்மதேவனால் ஸமாதானம் செய்யப்பெற்று, தன் பார்யையிடத்தில் அறுபது பெண்களைப் பெற்றார். அவர்களெல்லோரும் தந்தையிடத்தில் மிகுந்த அன்புடையவர்கள். அவர்களில் தர்மர்க்குப் பத்துப் பெண்களையும். கச்யப ப்ரஜாபதிக்குப் பதின்மூன்று பெண்களையும், சந்த்ரனுக்கு இருபத்தேழு பெண்களையும், ருத்ரன் அங்கிரஸ்ஸு க்ருபாயவர் இவர்களுக்கு இரண்டிரண்டு பெண்களையும், தார்க்ஷயனுக்கு மற்ற பெண்களையும் கொடுத்தார். இந்தத் தக்ஷரது பெண்களின் நாமங்களையும், அவர்களுடைய குழந்தைகளின் நாமங்களையும் சொல்லுகிறேன், கேள். 

இவர்களுடைய பிள்ளை பேரன் முதலிய ஸந்ததியால் மூன்று லோகங்களும் நிறைந்திருக்கின்றன. தர்மருடைய பத்னிகள் பானு, லம்பை, ககுபு, ஜாமி, வில்வை, ஸாத்யை, மருத்வதி, வஸு, முஹூர்த்தை, ஸங்கல்பை என்னும் பேருடையவர்கள். அவர்களுடைய பிள்ளைகளைச் சொல்லுகிறேன், கேள். 

பானுவுக்கு வேதனென்றும், ருஷபனென்றும் இரண்டு பிள்ளைகள். ருஷபனுடைய பிள்ளை இந்தரஸேனன். ஓ மன்னவனே! லம்பையின் பிள்ளை வித்யோதன். அவனுடைய பிள்ளை ஸ்தனயித்னு. ககுபின் பிள்ளை கீகடன். அவன் பிள்ளை ஸங்கடன். ஜாமியின் பிள்ளைகள் பூமியிலுள்ள துர்க்கங்களுக்கு (கோட்டைகளுக்கு) அபிமானி தேவதைகள். அவர்களுக்கு ஸ்வர்க்கனென்றும், நந்தியென்றும் இரண்டு பிள்ளைகள். விச்வையின் பிள்ளைகள் விச்வதேவர்கள். அவர்களுக்கு ஸந்ததி இல்லையென்று சொல்லுகிறார்கள். ஸாத்யையின் பிள்ளைகள் ஸாத்யரென்னும் தேவகணங்கள். அவர்களுடைய பிள்ளை அர்த்தஸித்தன். மருத்வதிக்கு மருத்வானென்றும், ஜயந்தனென்றும் இரண்டு பிள்ளைகள். ஜயந்தன் பகவானுடைய அம்சம். இவனை உபேந்தரனென்று சொல்லுகிறார்கள். முஹூர்த்தைக்கு மௌஹூர்த்திகரென்னும் தேவகணங்கள் பிறந்தன. அவர்கள் முஹூர்த்தாபிமானி தேவதைகள்; தத்தம் முஹூர்த்தத்திற்கு ஏற்பட்ட ஸுகதுக்காதி பலன்களை ப்ராணிகளுக்கு விளைக்கின்றார்கள். ஸங்கல்பையின் பிள்ளை ஸங்கல்பன். அவனுடைய பிள்ளை காமன். வஸுவின் பிள்ளைகள் அஷ்டவஸுக்கள். அவர்களின் நாமங்களைக் கேள். 

த்ரோணன், ப்ராணன், த்ருவன், அர்க்கன், அக்னி, தோஷன், வஸு, விபாவஸூ என்பவர். த்ரோணனுடைய பத்னி அபிமதியென்பவள். ஹர்ஷன், சோகன், பயன் முதலியவர்கள் அவளுடைய பிள்ளைகள். ப்ராணனுடைய பார்யை ஊர்ஜஸ்வதி. ஸஹன், ஆயு, புரோஜவன் இவர்கள் அவளுடைய பிள்ளைகள். த்ருவனுடைய பார்யை தரணியென்பவள். அவள் பலவகையான பட்டணங்களின் அபிமானி தேவதைகளைப் பெற்றாள். அர்க்கனுடைய பார்யை அசனையென்பவள். தர்ஷன் முதலியவர்கள் அவளுடைய பிள்ளைகள். அக்னியின் பார்யை வஸுதாரை. அவளுடைய பிள்ளைகள் த்ரவிணகன் முதலியவர். ஸ்கந்தன் அக்னிக்கு க்ருத்திகையிடத்தில் பிறந்தவன். விசாகன் முதலியவர் அந்த ஸ்கந்தனுடைய பிள்ளைகள். தோஷனுடைய பார்யை சர்வரியென்பவள். அவளுடைய பிள்ளை சிம்சுமாரன். அவன் பகவானுடைய அம்சம். வஸுவின் பார்யை ஆங்கிரஸி. அவளுடைய பிள்ளை விஸ்வகர்மா என்பவன். அவன் தேவதைகளுக்குத் தச்சுவேலை செய்பவன். அந்த விஸ்வகர்மாவின் பிள்ளை சாக்ஷுஷமனு. விச்வர்களும், ஸாத்யர்களும் அம்மனுவின் பிள்ளைகள். விபாவஸுவின் பார்யை உஷையென்பவள். அவள் வயுஷ்டன், ரோசிஷன், ஆதபனென்று மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். அவர்களில் ஆதவனுடைய பிள்ளை பஞ்சயாமன். அவன் பகலுக்கு அபிமானிதேவதை. அவனால் ப்ரஜைகள் தத்தம் செயல்களில் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். ருத்ரனுடைய பார்யைகள் இருவரில் ஒருத்தி ஸரூபை என்பவள். அவள் ருத்ரர்களென்னும் கோடி பிள்ளைகளைப் பெற்றாள். அவர்களில் ரைவதன், அஜன், பவன், பீமன், வாமன், உக்ரன், வருஷாகபி, அஜைகபாதன். அஹிர்ப்புத்ன்யன், பஹுரூபன், மஹான் என்னும் பதினொருவர்கள் முக்யமாயிருப்பவர்கள். ப்ரேதர், வினாயகர் முதலிய மற்றவர்கள், அந்த ருத்ரனுக்கு மற்றொரு பார்யையிடத்தில் பிறந்தவர்கள், பயங்கரமான உருவமுடையவர்கள்.

அவர்கள் ருத்ரனுடைய பரிவாரங்கள். அங்கிரஸ்ஸென்னும் ப்ரஜாபதியின் பார்யைகள் ஸ்வதையென்றும், ஸதியென்றும் இருவர். அவர்களில் ஸ்வதை பித்ரு தேவதைகளைப் பெற்றாள். ஸதி அதர்வாங்கிரஸமென்னும் வேதத்தின் அபிமானி தேவதையைப் பிள்ளையாகப் பெற்றாள். க்ருசாச்வருக்கு அர்ச்சிஸ்ஸென்றும், பீஷணையென்றும் இரண்டு பார்யைகள். அவர்களில் அர்ச்சிஸ், தூமரகேசனென்னும் பிள்ளையையும், பீஷணை வேதசிரன், தேவலன், வயுனன், மனு என்னும் நான்கு பிள்ளைகளையும் பெற்றார்கள். தார்க்ஷயனுக்கு வினதை, கத்ரு, பதங்கி, யாமினியென்று நான்கு பார்யைகள். அவர்களில் பதங்கி பக்ஷிகளையும், யாமினி விட்டில்களையும், ஸுபர்ணையென்னும் வினதை ஸாக்ஷாத் பரமபுருஷனுடைய வாஹனமான கருடனையும் ஸூர்யனுடைய ஸாரதியான அருணனையும், கத்ரு பல நாகங்களையும் பெற்றார்கள். 

பரதவம்சாலங்காரனே! க்ருத்திகை முதலிய இருபத்தேழு நக்ஷத்ரங்களும், சந்தரனுடைய பார்யைகள். அவன் மற்றவர்களை உபேக்ஷித்து ரோஹிணியிடத்தில் மாத்ரம் விசேஷ ப்ரேமத்துடன் இருந்தானாகையால், தக்ஷர் கோபித்துச் சபித்தார். அதனால் அவன் க்ஷயரோகத்தினால் (உருவம் குறையும் நோயால்) பீடிக்கப்பட்டு அவர்களிடத்தில் ஸந்ததியை உண்டாக்கவில்லை. அந்தத் தக்ஷரை அருள்புரிவித்து அப்புறம் கலைகளைப் பெற்றான். அவை சுக்லபக்ஷத்தில் வளர்வதும், க்ருஷ்ணபக்ஷத்தில் தேய்வதுமாயிருக்கின்றன. கச்யபருடைய பத்னிகள் ஜகத்திற்கெல்லாம் தாய்மார்கள். ஜகத்தெல்லாம் அவர்களுடைய ஸந்ததியே அவர்களுடைய நாமங்களைச் சொல்லுகிறேன், கேள். 

அவை உலகங்களுக்கெல்லாம் க்ஷேமத்தை விளைக்கும். அதிதி, திதி, தனு, காஷ்டை, அரிஷ்டை, ஸுரஸை, இளை, முனி, க்ரோதவசை, தாம்ரை, ஸுரபி, ஸரமை, திமி என்பவைகள் அவர்களுடைய நாமங்கள். ஜல ஜந்துக்களெல்லாம் திமியிடத்தினின்றும், நாய், புலி, பூனை முதலியவை ஸரமையிடத்தினின்றும், கிடாக்கள், பசுக்கள் இருகுளம்புடைய மற்ற நாற்கால் ஜந்துக்கள் இவையெல்லாம் ஸுரபியிடத்தினின்றும், பருந்துகள், கழுகுகள் இவை தாம்ரையிடத்தினின்றும், அப்ஸரஸ்த்ரீகளின் கூட்டங்கள் முனியிடத்தினின்றும், தந்தசூகம் முதலிய பல வகையான ஸர்ப்பங்கள் க்ரோத வசையிடத்தினின்றும், வ்ருக்ஷங்களெல்லாம் இளையிடத்தினின்றும், யாது தானர்கள் ஸுரஸையிடத்தினின்றும், கந்தர்வர்கள் அரிஷ்டையிடத்தினின்றும், ஒற்றைக்குளம்புடைய நாற்கால் ஜந்துக்கள் காஷ்டையிடத்தினின்றும் உண்டாயினர். தனுவுக்கு அறுபத்தோரு பிள்ளைகள். அவர்களில் ப்ரதானர்கள், பதினெட்டு பேர்கள். அவர்களைச் சொல்லுகிறேன், கேள். 

த்விமூர்த்தன். சம்பரன், அரிஷ்டன், ஹயக்ரீவன், விபாவஸ், அயமுகன், சங்குகிரன், ஸ்வர்ப்பானு, கபிலன், அருணன், புலோமன், வ்ருஷபர்வன், ஏக சக்ரன், ஸுதாபனன், தூம்ரகேசன், விரூபாக்ஷன், விப்ரசித்தி, துர்ஜயன் என்னுமிவர்களே. ஸ்வர்ப்பானுவின் புதல்வியாகிய ஸுப்ரபை என்பவளை நமுசி மணம் புரிந்தான். வ்ருஷபர்வனுடைய பெண் சர்மிஷ்டை. அவளை யயாதி மன்னவன் மணம்புரிந்தான். அவன் நஹுஷனுடைய பிள்ளை; மஹாபலிஷ்டன். வைச்வாநரனுடைய பெண்கள் உபதானவி, ஹயசிரை, புலோமை, காலகை என்று நான்கு பேர்கள். நால்வரும் மிக்க ஸௌந்தர்யமுடையவர். அவர்களில் உபதானவியை ஹிரண்யாக்ஷனும், ஹயசிரையை க்ரது ப்ரஜாபதியும் மணம் புரிந்தார்கள். ப்ரஹ்மதேவனால் தூண்டப்பட்டுப் புலோமை, காலகை என்னும் வைச்வாநரனின் மற்ற பெண்களிருவரை கச்யப ப்ரஜாபதி மணந்தார். புலோமையின் பிள்ளைகள் பௌலோமரென்பவர். இவர்களை நிவாத கவசரென்றும் வழங்குவதுண்டு. காலகையின் பிள்ளைகள் காலகேயரென்பவர். அவர்களிருவகையரும் யுத்தத்தில் திறமையுள்ள தானவர்களானார்கள். அவர்கள் அறுபதினாயிரம் பேர்கள்; யஜ்ஞங்களுக்கு விக்னம் செய்வதே தொழிலாயிருந்தார்கள். உன் பாட்டனாகிய அர்ஜுனன் ஒருகால் ஸ்வர்க்கலோகம் போகையில் இந்த்ரனுடைய ஆஜ்ஞையினால் தானொருவனே அவர்களெல்லோரையும் வதித்து விட்டான். 

விப்ரசித்தி ஸிம்ஹிகையென்னும் தன் பார்யையிடத்தில் நூற்றோரு பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் முதல்வன் ராஹு. மற்ற நூறு பேர்களும் கேதுக்கள். இந்த ராஹுதான் தானவர்களில் அதமனாயினும் (மிகக்கீழ்பட்டவனாயினும்) பகவானுடைய அனுக்ரஹத்தினால் க்ரஹமாயிருக்கையைப் பெற்றான். திமி முதலியவர்களின் வம்சத்தைச் சொன்னேன். இனி அதிதியின் வம்சத்தைச் சொல்லுகிறேன், கேள். 

தேவர்களுக்குத் தேவனும், ப்ரபுவுமாகிய நாராயணன் இவ்வதிதியின் வம்சத்தில் தனது அம்சத்தினால் அவதரித்தான். விவஸ்வான், அர்யமன், பூஷன், த்வஷ்டா, ஸவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்ரன், சக்ரன், உருக்ரமன் இப்பன்னிருவரும் அதிதியின் பிள்ளைகள். அவர்களில்,  விவஸ்வானுடைய பத்னி ஸம்ஜ்ஞையென்பவள். இவள் ச்ராத்ததேவனென்றும், மனுவென்றும் இரண்டு பிள்ளைகளையும், யமன், யமி என்று ஒரு புத்திரனையும் புத்திரியையும் பெற்றாள். அந்த ஸம்ஜ்ஞாதேவியே பூமியில் பெண் குதிரையாகப் பிறந்து அஸ்வினி  தேவதைகளைப் பெற்றாள். அவளே சாயையாகப் பிறந்து சனியையும், ஸாவர்ணியென்னும் மனுவையும், தபதியென்னும் பெண்ணையும் பெற்றாள். அப்பெண்மணி ஸம்வரணனென்பவனை மணம்புரிந்தாள். அர்யமனுடைய பார்யை மாத்ருகையென்பவள். அவர்களிடத்தினின்று வேலை செய்யும் தன்மையுள்ள ஜனங்கள் உண்டாயின. ப்ரஹ்மதேவன் அவர்களை மனுஷ்ய ஜாதியாக ஏற்படுத்தினான். பூஷனுக்கு ஸந்ததியே இல்லை. அவன் தக்ஷர்மேல் கோபித்த ருத்ரனைப் பார்த்துப் பற்களைக் காட்டிக்கொண்டு சிரித்தானாகையால், அவனுடைய பரிவாரங்கள் பூஷனது பற்களை உடைத்தன. ஆகையால், அவன் பிஷ்டத்தையே (மாவையே) சாப்பிடும் தன்மையன் ஆனான். தைத்யர்களின் தங்கை ரசனையென்பவள்; த்வஷ்டாவின் பார்யை. அவர்களுக்கு வீர்யமுடைய விச்வரூபன் பிறந்தான். முன்பு, ப்ருஹஸ்பதி தேவதைகளால் அவமதிக்கப்பட்டு அவர்களைத் துறந்தார். அப்பொழுது தேவதைகள், இவன் நமது சத்ருக்களாகிய தைத்யர்களின் மருமகனென்பதையும் பாராமல் இவ்விச்வரூபனைத் தமக்குப் புரோஹிதனாக வரித்தார்கள். 

ஆறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக