ஆறாவது ஸ்கந்தம் – ஏழாவது அத்தியாயம்
(ப்ருஹஸ்பதி தேவதைகளைத் துறந்ததின் காரணத்தையும், தேவதைகள் விச்வரூபனைப் புரோஹிதனாக ஏற்படுத்திக் கொண்டதையும் கூறுதல்)
மன்னவன் சொல்லுகிறான்:- ப்ருஹஸ்பதி, தேவதைகளுக்கு ஆசார்யனல்லவா? அவர் என்ன காரணத்தினால் தேவதைகளைத் துறந்தார்? சிஷ்யர்களான தேவதைகள் தமது ஆசார்யனாகிய ப்ருஹஸ்பதி விஷயத்தில் என்ன அக்ரமம் செய்தார்கள் (முறை தவறி நடந்தார்கள்) மஹானுபாவரே! அதைச் சொல்வீராக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவாகிய தேவேந்திரன் ஒருகாலத்தில் கொலுமண்டபத்திற்கு வந்தான். மன்னவனே! தேவதைகளும், அஷ்ட வஸுக்களும், ஏகாதச ருத்ரர்களும், த்வாதச ஆதித்யர்களும், ரிஷிகளும், விச்வதேவர்களும், ஸாத்யர்களும், அச்வினி தேவதைகளும் அவனைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். ஸித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும் அவனைப் பணிந்தார்கள். வேதத்தை ஓதுகின்ற முனிவர்கள் அவனைத் துதித்தார்கள். வித்யாதரர்களும் அப்ஸரஸ்த்ரீகளும் கின்னரர்களும், பதகர்களும், உரகர்களும் அவனை அழகாகப் பாடினார்கள். சந்தர மண்டலம் போல் அழகிய வெண் கொற்றக்குடை அவனுக்குப் பிடித்தார்கள். சாமரம், விசிறி முதலிய மற்றும் பல மஹாராஜ சின்னங்களும் நிறைந்திருந்தன. அவன் தன் பக்கத்தில் பாதி ஆஸனத்தில் உட்கார்ந்திருக்கின்ற சசீதேவியுடன் மிகவும் திகழ்வுற்றிருந்தான். அப்பொழுது, ப்ருஹஸ்பதி அக்கொலுமண்டபத்திற்கு வந்தார். அவர் தேவதைகளுக்கும், தேவேந்திரனுக்கும் கௌரவிக்கத்தகுந்தவர்; மேலான ஆசார்யன்; தேவதைகளும், அஸுரர்களும் விழுந்து வணங்கும்படியான பெருமையை உடையவர்; முனிவர்களில் தலைவர். அத்தகைய ப்ருருஹஸ்பதி ஸபைக்கு வரும்பொழுது அந்த தேவேந்திரன் எழுந்திருப்பது, வணங்குவது, ஆஸனமளிப்பது முதலிய உபசாரங்கள் எவையும் செய்யாமல் ஸபையில் அவர் வந்திருப்பதைப் பார்த்தும் ஐச்வர்ய மதத்தினால் (ஆளுமை, செல்வச் செழிப்பு ஆகியவற்றால் உள்ள அகந்தையால்) பெரியோர்களின் மார்க்கத்தைக் கடந்து ஸிம்ஹாஸனத்தினின்று சிறிதும் அசையாமலேயிருந்தான். அப்பொழுதே, வித்வானும் ஸமர்த்தருமாகிய ப்ருஹஸ்பதி, இவன் ஐச்வர்ய மதத்தினால் (ஆளுமை, செல்வச் செழிப்பு ஆகியவற்றால் உள்ள அகந்தையால்) கலக்கமுற்றிருக்கிறான் என்பதை அறிந்து, உடனே பேசாமல் புறப்பட்டுத் தன் க்ருஹத்திற்குப் போனார். அப்பொழுதே அந்த இந்தரன் ஆசார்யனை அவமதித்தோம் என்பதை அறிந்து ஸபையில் தன்னைத் தானே வெறுத்துக்கொண்டான் “ஆ எனக்கு என்ன கஷ்டம் நேர்ந்தது? நான் தப்புக் கார்யம் செய்தேனல்லவா? நான் ஐச்வர்யத்தினால் மதி இழந்து அற்ப புத்தியாகி (புத்தி குறைந்தவனாய்), ஸபையில் ஆசார்யனை அவமதித்தேன். விவேகமுடையவனாய் இருப்பானாயின், ஸத்யலோகாதிபதியான ப்ரஹ்மதேவனுடைய ஐச்வர்யத்தையும் எவன்தான் ஆசைப்படுவான்? நான் தேவதைகளுக்கு ப்ரபுவாயிருந்தும், ஐச்வர்ய மதத்தினாலல்லவோ (ஆளுமை, செல்வச் செழிப்பு ஆகியவற்றால் உள்ள அகந்தையால் அல்லவோ) அஸுரர்களுக்கு இயற்கையில் ஏற்பட்ட மோஹத்தில் (மயக்கத்தில்) தள்ளுண்டேன். ராஜ ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்திருக்கும் ப்ரபு ஒருவர்க்கும் எழுந்து மர்யாதை செய்ய வேண்டியதில்லை என்று சிலர் சொல்லுவார்கள். அவர்கள் தர்மஸூக்ஷ்மம் அறிந்தவரல்லர். அவர்கள் தவறான வழியை உபதேசிப்பவர்களே. ஆகையால், அவர்கள் நரகத்தில் விழுவார்களென்பது நிச்சயம். அவர்களுடைய வாக்யத்தை நம்புகிறவர்கள் கல் ஓடங்கள் (கல்லால் ஆன படகு) போல் அமிழ்ந்து போவார்கள்.
ப்ருஹஸ்பதி ஆழ்ந்த மதியுடையவர்; தேவதைகளுக்கு ஆசார்யன். ஆகையால், அவர் நான் செய்த அபராதத்தை நெஞ்சில் வைத்துக் கொள்ளமாட்டார். நான் கபடமில்லாமல் (சூது, ஏமாற்றம் இல்லாமல்) அவருடைய பாதங்களைத் தலையால் ஸ்பர்சித்து வேண்டிக் கொள்ளுகிறேன்” என்று தனக்குள் சிந்தித்தான். இங்கனம் அந்த இந்த்ரன் சிந்தித்துக் கொண்டிருக்கையில், மஹானுபாவராகிய ப்ருஹஸ்பதி அதை அறிந்து யோகப்ரபாவத்தினால் க்ருஹத்தினின்று கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தார். பிறகு, தேவேந்தரன் ப்ருஹஸ்பதியைக் காணும் உபாயத்தைப் பலவாறு ஆராய்ந்தும், அது ஏற்படாமல் எப்படி அவரைக் காணலாமென்று அதையே புத்தியில் சிந்தித்துக்கொண்டு சோகத்தினால் வருந்திச் சிறிதும் ஸுகம் அடையாதிருந்தான். அஸுரர்களெல்லாரும் அந்த ஸங்கதியைக் (விஷயத்தைக்) கேட்டுத் தமது புரோஹிதரான சுக்ரனுடைய ஆலோசனையைக் கொண்டு தடுக்க முடியாத மதமுடையவர்களாகி (கர்வமுடையவர்களாகி) அத்தேவர்களை வதிக்க விரும்பி, அவர்களோடு யுத்தம் செய்யத்தொடங்கினார்கள். தேவதைகள், இந்திரனுடன் அவ்வஸுரர்கள் தொடுத்த கூரான பாணங்களால் தலைகளும், துடைகளும், புஜங்களும், பிளவுண்டு தலை வணக்கத்துடன் ப்ரஹ்மதேவனைச் சரணம் அடைந்தார்கள். மஹானுபாவனான ப்ரஹ்மதேவனும், தேவதைகள் வருத்தமுற்றிருப்பது கண்டு மிகவும் மன இரக்கமுற்று, அவர்களை நல்ல வார்த்தைகளால் ஸமாதானப்படுத்தி, “ஓ தேவச்ரேஷ்டர்களே, ஆ! உங்களுக்கு மஹத்தான கஷ்டம் நேர்ந்ததே! நீங்கள் பெரிய தப்புக்கார்யம் செய்தீர்கள். ப்ருஹஸ்பதி ப்ரஹ்மஜ்ஞானிகளில் சிறந்தவர்; ப்ராஹ்மண ச்ரேஷ்டர்; ஜிதேந்த்ரியர் (இந்த்ரியங்களை வென்றவர்). அவரை நீங்கள் ஐச்வர்ய மதத்தினால் (ஆளுமை, செல்வச் செழிப்பு ஆகியவற்றால் உள்ள அகந்தையால்) கௌரவிக்காதிருந்தீர்கள். தேவர்களே! நீங்கள் ஸம்ருத்தர்களாயிருந்தும் (செழிப்பு உடையவர்களாயிருந்தும்) ஸம்ருத்தியின்றி (செழிப்பின்றி) ஓய்ந்திருக்கிற உங்கள் சத்ருக்களிடத்தில் இன்று இப்பொழுது பரிபவம் (அவமானம்) நேரப் பெற்றீர்களல்லவா? இது அந்த அபராதத்தின் பலனே.
தேவேந்தரனே! உன் சத்ருக்கள் முதலில் குருவைத் திரஸ்காரம் செய்தமையால் (அவமதித்ததால்) க்ஷணித்ததையும் (அழிந்ததையும்), இப்பொழுது சுக்ராசார்யனைப் பக்தியுடன் ஆராதித்து ஸம்ருத்தர்களாயிருப்பதையும் (செழிப்பு உடையவர்களாய் இருப்பதையும்) காண்பாயாக. அவர்கள், சுக்ராசார்யனையே தெய்வமாகக் கொண்டு அவனை ஆராதித்துக்கொண்டு வருகின்றார்கள், கொழுப்புடையவர்கள், மஹாபலசாலிகள். அவர்கள் இருக்கிற நிலைமையைக் கண்டால், இன்றைக்கோ, நாளைக்கோ, அதன் மறுநாளைக்கோ என் ஸ்தானத்தையும் கூடக் கைப்பற்றுவார்களென்று தோன்றுகின்றது. இனி உங்களை வருத்துகிறார்களென்பதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? அவர்கள் பிறர்க்குத் தெரியாதபடி ஆலோசனை செய்கின்றார்கள்; ப்ருகு குலத்தில் பிறந்தவர்களுக்குச் சிஷ்யர்களாகி அவர்களிடத்தினின்று நீதி, நுட்பங்களை எல்லாம் ஆராய்ந்தறிகின்றார்கள். அவர்கள் ஸ்வர்க்கத்தை ஒரு பொருளாக நினைப்பார்களோ?
ப்ராஹ்மணர்களையும், பகவானையும், பசுக்களையும் ஆராதிக்கிறவர்களுக்கு எவ்விதத்திலும் கெடுதி உண்டாகாது. மற்றவர் எத்தகைய ப்ரபுக்களாயிருப்பினும், அவர்க்குக் கெடுதி நேரவே நேரும். ஆகையால், நீங்கள் சீக்கிரத்தில் விச்வரூபன் என்னும் ப்ராஹ்மணனை அனுஸரித்து அவனைப் புரோஹிதனாக ஏற்படுத்திக் கொள்வீர்களாக. அவன் த்வஷ்டாவின் புதல்வன், ஜிதேந்த்ரியன் (இந்த்ரியங்களை வென்றவன்), தவமுடையவன். அவன் உங்கள் ப்ரயோஜனத்தைக் (பயனைக்) கைகூட்டுவிப்பான். அவனுக்கு அஸுர்களிடத்தில் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) முதலியன இருக்கக்கூடும். அதனால் அவன் உங்களுக்கு ஏதேனும் சிறிது அனிஷ்டம் செய்யினும் அதை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்றார். இங்கனம் ப்ரஹ்மதேவன் மொழிந்த வசனத்தைக் கேட்ட அத்தேவதைகள் மனக்கவலை தீர்ந்து த்வஷ்டாவின் புதல்வனும் ரிஷியுமாகிய விச்ரூபனிடம் சென்று அவனை அணைத்துக் கொண்டு இங்கனம் மொழிந்தார்கள்.
“ஓ விச்வரூபனே! நாங்கள் அதிதிகளாக உனது ஆச்ரமத்திற்கு வந்திருக்கிறோம். உனக்கு க்ஷேமம் உண்டாகுக. நாங்கள் உனக்குத் தந்தைகளாக வேண்டும். இக்காலத்திற்கு உரியபடி நாங்கள் ஒரு விஷயத்தை ஆசைப்படுகின்றோம். அது உன்னால் நிறைவேற வேண்டும். ஓ, அந்தணர் தலைவனே! பிள்ளைகள், பிள்ளை பெற்றவராயினும் தந்தைக்குச் சுச்ரூஷை செய்யவேண்டியது அவச்யம். அதுவே அவர்களுக்கு மேலான தர்மமாம். இனி ப்ரஹ்மசாரிகளாய் இருப்பவர்களுக்கு பித்ரு சுச்ருஷை மேலான தர்மமென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? நீ எங்களுக்குப் பிள்ளையாக வேண்டும். ப்ரஹ்மசாரியுமாயிருக்கின்றாய். நீ எங்களுக்குச் சுச்ரூஷை செய்வது உரிய தர்மமே. மற்றும், ஆசார்யனை ஈச்வரனைப் போலவும், தந்தையை ப்ரஹ்மதேவனைப் போலவும், உடன் பிறந்தவனை இந்த்ரனைப் போலவும், மாதாவை ஒன்றான பூமிதேவியைப் போலவும், ஆராதிக்க வேண்டும். உடன் பிறந்தவர்களைத் தயையின் (இரக்க குணத்தின்) மூர்த்தியாகவும், அதிதியைத் தர்மத்தின் மூர்த்தியாகவும், அப்யாகதனை அக்னியின் மூர்த்தியாகவும், ஸமஸ்த பூதங்களையும் தானாகவும் பாவிக்க வேண்டும்.
அப்பனே! ஆகையால், உன் தந்தைகளாகிய நாங்கள் வருந்தி உன்னிடம் வந்திருக்கிறோம். எங்களுக்குச் சத்ருக்களிடத்தினின்று நேர்ந்திருக்கிற பரிபவத்தையும் (அவமானத்தையும்) அதனால் உண்டான எங்கள் மனவருத்தத்தையும் உன் தவமஹிமையால் போக்க முயன்று எங்கள் சொற்படி செய்வாயாக. நீ ப்ராஹ்மணன், ப்ரஹ்மஜ்ஞானி, ஸமஸ்த வர்ணங்களுக்கும் குரு. உன்னை நாங்கள் புரோஹிதனாயிருக்கும்படி வேண்டுகிறோம். நாங்கள் உன் தேஜஸ்ஸினால் அநாயாஸமாகச் சத்ருக்களை வெல்லுவோம். நீ எங்களிடம் அருள்புரிய வேண்டும். நாங்கள் எங்கள் ப்ரயோஜனத்திற்காக நீ சிறியவனாயினும் உன் பாதங்களில் வணங்குகிறோம். ப்ராஹ்மண ச்ரேஷ்டனே! பெரியவன் சிறியவனை வணங்குவது நிந்தைக்கிடமென்று நினைக்கவேண்டாம். வேதாத்யயனம் முதலியவை தவிர மற்ற விஷயங்களில் தான் வயதைப் பற்றின பெருமையைப் பாராட்டுவார்களன்றி, வித்யா (கல்வி அறிவு) விஷயத்தில் வயதின் பெருமையைப் பாராட்டமாட்டார்கள். நீ எங்களுக்கு வித்யோபதேசம் செய்யும் (அறிவை போதிக்கும்) புரோஹிதனாகையால், உன்னிடத்தில் வயதைப்பற்றின சிறுமையை ஆராயலாகாது. நீ வேதங்களை ஓதி உணர்ந்தவனாகையால் நீயே பெரியவன்” என்று மொழிந்தார்கள்.
மஹா தபஸ்வியாகிய அவ்விச்வரூபன் இங்கனம் தேவகணங்களால் வேண்டப் பெற்றுச் சிரித்துக்கொண்டே இனிய உரையுடன் அந்தத் தேவதைகளை நோக்கித் தர்மசீலர்கள் புரோஹிதம் செய்வதைப் பழிப்பார்கள். மற்றும், அத்தொழில் ப்ரஹ்மதேஜஸ்ஸை அழிக்கும். உலகங்களுக்கெல்லாம் ப்ரபுக்களாகிய நீங்கள் வேண்டுகிறீர்கள். மற்றும், நீங்கள் எனக்குத் தந்தை முறையில் சேர்ந்தவர்கள். தந்தையைப் பணியுந்தன்மையுள்ள என்னைப் போன்றவன் மாட்டேனென்று அதை எங்கனம் தடுக்கமுடியும்? நான் உங்களுக்கு சிஷ்யன். சிஷ்யனுக்குக் குருக்களால் துண்டப்படுகையே பெரிய புருஷார்த்தமென்று பெரியோர்கள் கூறுகிறார்கள். சப்தாதி விஷய போகங்களில் விருப்பமில்லாதவர்கள் தேஹ தாரணத்திற்கு (இவ்வுடலைத் தாங்குவதற்கு) வேண்டியதை மாத்திரமே விரும்புவார்கள். அவர்கள் கதிர்களையாவது, உதிர்ந்த நெல்லுகளையாவது பொறுக்கி ஜீவிக்குந்தன்மையுடையவர்கள். அவர்களுக்கு அதுவே தனம். அவ்விரண்டில் ஒன்றால் அவர்கள் பஞ்ச மஹாயஜ்ஞாதி கர்மங்களைக் {(ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்} குறைவற அனுஷ்டித்துக்கொண்டு வருகிறார்கள். ப்ரபுக்களே! நிந்தைக்கிடமான புரோஹிதத் தொழிலை நான் எங்கனம் பெற்றுக்கொள்வேன்? அத்தொழிலினால் மதிகெட்ட (புத்தி கெட்ட) மூர்க்கன் ஸந்தோஷம் அடைவானன்றிக் காமபோகங்களில் விருப்பமில்லாதவன் அதை ஆதரிக்கமாட்டான். அவனுக்கு உஞ்சவ்ருத்தியே உரியது. ஆயினும், தந்தைகளாகிய நீங்கள் வேண்டுகிறபடியால், நான் அதைத் தடுக்க முடியாமல் ஏற்றுக்கொள்ளுகிறேன். உங்களுக்கு நான் இது செய்வது ஒரு பெரிதல்ல.
ஆகையால் நீங்கள் வேண்டினவற்றைத் தவம் முதலியவற்றாலும் என் ப்ராணன்களாலும் நான் ஸாதித்துக் கொடுக்கிறேன்” என்றான்.
மஹா தபஸ்வியாகிய விச்வரூபன் அவர்களுக்கு இங்கனம் ஆகட்டுமென்று ப்ரதிஜ்ஞை செய்து அவர்கள் வேண்டின புரோஹிதத்தொழிலை ஏற்றுக்கொண்டு மிக்க மனவூக்கத்துடன் கார்யங்களை நடத்திக்கொண்டு வந்தான். ஸமர்த்தனாகிய அவ்விச்வரூபன் சுக்ராசார்யனுடைய வித்யையால் பாதுகாக்கப்பட்டு அஸுரர்களிடத்தில் நிலை பெற்றிருக்கிற ஐச்வர்யத்தை நாராயண கவசமென்னும் தன் மந்த்ர வித்யையால் ஆகர்ஷித்துத் தேவேந்த்ரனுக்குக் கொடுத்தான். ஆழ்ந்த மதியுடைய விச்வரூபன், மஹேந்திரனுக்கு நாராயண கவசமென்னும் வித்யையை உபதேசித்தான். அவ்விந்தரன் அதனால் பாதுகாக்கப்பட்டு, அஸுர ஸைன்யங்களையெல்லாம் அழித்து ஐச்வர்யத்தைப் பெற்றான்.
ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.