சனி, 27 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 142

ஆறாவது ஸ்கந்தம் - எட்டாவது அத்தியாயம்

(விச்வரூபன் மஹேந்திரனுக்கு நாராயண கவசத்தை உபதேசித்தல்)

மன்னவன் சொல்லுகிறான்:- ஆயிரங்கண்ணனாகிய தேவேந்திரன் எந்த வித்யையினால் பாதுகாக்கப்பட்டுச் சத்ரு ஸைன்யங்களை எல்லாம் விளையாடுவதுபோல் வென்று மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவாயிருக்கையாகிற ஐச்வர்யத்தை அனுபவித்தானோ, அப்படிப்பட்ட நாராயண கவசமென்னும் மந்திர வித்யையை எனக்கு உபதேசிப்பீராக. இதை ஜபித்தல்லவோ தேவேந்திரன் யுத்தத்தில் சத்ருக்களை வென்றான்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- புரோஹிதனாய் வரிக்கப்பட்ட விச்வரூபன் சத்ருக்களை ஜயிக்க உபாயம் என்னவென்று வினவுகிற தேவேந்திரனுக்கு நாராயண கவசமென்னும் மந்திரத்தை உபதேசித்தான். அதை உனக்கு உபதேசிக்கிறேன். மனவூக்கத்துடன் கேட்பாயாக.

 [கீழே சொல்லப்படும் மந்த்ரம், அதை ஜபிக்கும் முறை, மந்த்ரத்தின் பொருள் ஆகியவற்றை ஸத்குரு மூலம் உபதேசிக்கப்பெற்று அதன்படி அனுஸந்திக்க வேண்டும்] 

விச்வரூபன் சொல்லுகிறான்:- ஸ்நானாதி கர்மங்களை முடித்துக்கொண்டு பரிசுத்தனாய்க் கைகால்களை அலம்பிக் கொண்டு கையில் தர்ப்ப, பவித்ரம் அணிந்து வடக்கு முகமாய் உட்கார்ந்து ஆசமனம் செய்து மௌன விரதத்துடன் திருவஷ்டாக்ஷரம், திருத்வாதசாக்ஷரி, விஷ்ணுஷடக்ஷரி இம்மந்த்ரங்களால் அங்கந்யாஸமும், கரந்யாஸமும் செய்து ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன)  ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்று மூன்று வகையான பயங்களில் (அச்சங்களில்) ஏதேனுமொன்று நேருமாயின், ஸ்ரீமந்நாராயணனை இடைவிடாமல் த்யானித்து அவனை விளங்க வெளியிடுகிற இந்த நாராயண கவசத்தை ஜபிக்க வேண்டும். பாதங்கள், முழந்தாள்கள், துடைகள், வயிறு, ஹ்ருதயம், மார்பு, முகம், தலை ஆகிய இவ்வெட்டு இடங்களிலும் பாதம் முதல் தலை வரையில் க்ரமமாகவாவது தலை முதல் கால் வரையில் மாற்றியாவது திருவஷ்டாக்ஷரத்தின் எட்டு அக்ஷரங்களையும், முதலில் ப்ரணவத்தையும், கடைசியில் நமஸ்ஸையும் கூட்டிக்கொண்டு ந்யாஸம் செய்யவேண்டும். பிறகு திருத்வாதசாக்ஷரியால் கரந்யாஸம் செய்யவேண்டும். ப்ரணவம் முதல் யகாரம் வரையிலுள்ள பன்னிரண்டு அக்ஷரங்களையும் இரண்டு கைகளிலுமுள்ள ஆள்காட்டிவிரல் முதல் நான்கு விரல்களும், கட்டை விரல்களின் இரண்டு கணுக்களும் ஆகிய பன்னிரண்டு ஸ்தானங்களிலும் ந்யாஸம் செய்யவேண்டும். பிறகு விஷ்ணு ஷடாக்ஷரியால் ந்யாஸம் செய்ய வேண்டும். ஹ்ருதயத்தில் ஓங்காரத்தையும், தலையில் விகாரத்தையும், சிகையில் ணகாரத்தையும், கண்களில் வேகாரத்தையும், ஸந்திகளெல்லாவற்றிலும் நகாரத்தையும், விஸர்க்கத்தோடு கூடின மகாரத்தைக் கிழக்கு முதலிய எல்லாத் திக்குக்களிலும் ந்யாஸம் செய்யவேண்டும். இம்மூன்று மந்திரங்களால் அங்கந்யாஸ, கரந்யாஸங்களைச் செய்த புருஷன் மந்திர மூர்த்தியாகி, மந்த்ர ஜபத்திற்கு உரியவனாவான். பிறகு ஷாட்குண்ய பூர்ணனான பரமபுருஷனை த்யானிக்க வேண்டும். எத்தகைய உருவத்துடன் த்யானித்தால் தன் மனம் தெளிவு பெறுமோ, அத்தகைய உருவத்துடன் த்யானிக்க வேண்டும். அனந்தரம் ஜ்ஞானம், ப்ரபாவம், நற்செயல் இவற்றிற்கு இருப்பிடமான இம்மந்திரத்தைப் படிக்க வேண்டும். ஓம்! தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையுள்ள பரமபுருஷன் என்னை எல்லா இடங்களிலும் காப்பானாக. கருத்மானுடைய (கருடனுடைய) முதுகின்மேல் பாதார விந்தங்களை வைத்துக்கொண்டு, சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை பாணம், தனுஸ்ஸு, பாசம் ஆகிய எட்டு ஆயுதங்களையும் எட்டுப் புஜங்களால் தரித்து யானையைக் காக்க வந்தவனும், எட்டுக் குணங்களுடையவனுமாகிய பரமபுருஷன் என்னைக் காக்க வேண்டும்.

மத்ஸ்யமூர்த்தியான ஸர்வேச்வரன் ஜலத்தில் ஜலஜந்துக்களாகிற வருணபாசத்தினின்று என்னைப் பாதுகாப்பானாக. கபடத்தினால் மாணிக் குறளுருவங்கொண்ட (சிறிய உருவுடன் கூடிய ப்ரஹ்மசாரியாய் வந்த) ஸர்வேச்வரன் என்னைப் பூமியில் எல்லா இடங்களிலும் பாதுகாப்பானாக. உலகமெல்லாம் நிறைந்த உருவமுடைய த்ரிவிக்ரமன் என்னை ஆகாயத்தில் காக்க வேண்டும். அரண்யம் (காடு), யுத்தம் முதலிய ஸங்கடங்களில் ந்ருஸிம்ஹ மூர்த்தி என்னைக் காப்பானாக. அவன் ஸமர்த்தன்; அஸுரர் கூட்டத்தலைவர்களை அழிக்கும் தன்மையன். அவன் அட்டஹாசம் செய்யும் பொழுது திசைகளெல்லாம் ப்ரதித்வனி (எதிரொலி) செய்தன. கர்ப்பங்கள் எல்லாம் விழுந்தன. வராஹ உருவங்கொண்ட அந்த ஸர்வேச்வரன் என்னை மார்க்கங்களில் பாதுகாப்பானாக. அவன் யஜ்ஞஸ்வரூபி. வழியில் தன்னை எதிர்த்து வந்த ஹிரண்யாக்ஷனை வதித்தான். அவன் தன் கோரைப்பல்லால் பூமியைப் பாதாளத்தினின்று மேலுக்கெடுத்தான். பரசுராமன் பர்வத சிகரங்களில் என்னைப் பாதுகாப்பானாக. பரதனுக்குத் தமையனும், லக்ஷ்மணனோடு கூடினவனுமாகிய தாசரதிராமன் தேசாந்தரங்களுக்குப் (வேறு இடங்களுக்குப்) போகும் காலங்களில் என்னைப் பாதுகாப்பானாக. நாராயணன் அபிசாரம் ( பிறருக்குத் தீங்கு விளைவிக்கச் செய்யும் கர்மங்கள்) முதலிய உக்ர (கொடிய) தர்மங்களினின்றும் ஸமஸ்தமான ப்ரமாதத்தினின்றும் (கவனக்குறைவிலிருந்தும்) என்னைக் காப்பானாக. நராவதாரம் (மனிதனாய் அவதாரம்) செய்த அந்த ஸர்வேச்வரன், கர்வத்தினின்றும், தத்தாத்ரேய ரூபியான ஸர்வேச்வரன் யோகத்திற்கு விரோதம் செய்பவற்றினின்றும் என்னைக் காப்பார்களாக. பகவான் கபிலராக அவதரித்து யோக ரஹஸ்யத்தை வெளியிட்டான். அக்கபிலர் ஸித்த கணங்களுக்குத் தலைவர். அவர் ப்ராணிகளுக்கு ஜ்ஞான ப்ரதானம் செய்து (அறிவைத் தந்து) கர்ம பந்தத்தைப் போக்கினார். அந்த யோகேச்வரர் என்னைக் கர்ம பந்தத்தினின்று காப்பாராக. ஸனத்குமார பகவான் என்னை மன்மதனிடத்தினின்று காப்பானாக. ஹயக்ரீவாவதாரம் செய்து மது, கைடபாதிகளைக் கொன்ற பகவான் தேவதைகளிடத்தில் நான் படும் அபசாரத்தைப் பொறுத்து என்னை வழியில் காப்பானாக. பகவானை இடைவிடாமல் ஆராதிக்கின்ற நாரத மஹர்ஷி பகவத் ஆராதனத்திற்கு நேரும் விக்னத்தினின்று (இடையூறிலிருந்து) என்னைக் காப்பாராக. கூர்ம ஸ்வரூபியான பகவான் என்னை எல்லா நரகத்தினின்றும் பாதுகாப்பானாக. தன்வந்தரி ஸ்வரூபியான பகவான் அபத்யத்தினின்று (சாப்பிடக்கூடாதவற்றை சாப்பிடுவதிலிருந்து) என்னைக் காப்பானாக. ருஷப ஸ்வரூபியான பகவான் குளிர், காற்று முதலிய வருத்தங்களினின்று என்னைக் காப்பானாக.அவன் வெளியிந்திரியங்களையும், உள்ளிந்திரியங்களையும் வென்ற மஹானுபாவன். யஜ்ஞ ஸ்வரூபியான பகவான் லோக அபவாதத்தினின்று (உலகோர்களால் ஏற்படும் பழியிலிருந்து) என்னைக் காப்பானாக. பலராமன் துர்ஜனங்களால் (கெட்ட நடத்தை உள்ள மனிதர்களால்) நேரும் உபத்ரவங்களினின்றும் (துன்பங்களினின்றும்) ம்ருத்யுவினின்றும் என்னைக்காப்பானாக. ஆதிசேஷ ஸ்வரூபியான பகவான் கோபத்தையே இயற்கையாகவுடைய ஸர்ப்பங்களின் கூட்டத்தினின்று என்னைக் காப்பானாக. வ்யாஸ ரூபியான பகவான் என்னை அஜ்ஞானத்தினின்று (அறிவின்மையிலிருந்து) காப்பானாக. புத்த ஸ்வரூபியான பகவான் மதிமயக்கத்திற்கிடமான பாஷண்ட (வேதத்திற்கு விரோதமான செயல்களை உடைய) கணத்தினின்று (கூட்டத்திலிருந்து) என்னைக் காப்பானாக. தர்மத்தைக் காக்கும் பொருட்டு அவதரித்த கல்கி ரூபியான பகவான் காலத்தின் மலமான கலிகாலத்தினின்று என்னைக் காப்பானாக. (ஸூர்யோதமாய் ஆறு நாழிகை வரையில் ஸங்கவம். அதற்கு மேல் ஆறு நாழிகை பூர்வாஹ்ணம். அதற்கு மேல் மத்யாஹ்னம். அதற்குமேல் அபராஷ்ணம். அதற்குமேல் ஆறு நாழிகை ஸாயங்காலம்) கதையை ஏந்தின கேசவன் ப்ராதக்காலத்திலும், வேணுவைத் தரித்த கோவிந்தன் ஸங்கவத்திலும், கம்பீரமான சக்தியாயுதத்தைத் தரித்த நாராயணன் பூர்வாஹ்ணத்திலும், சக்ராயுதத்தைக் கையில் தரித்த விஷ்ணு மத்யாஹனத்திலும், கொடிய தனுஸ்ஸைத் தரித்துத் தேஜஸ்ஸினால் ஜ்வலிக்கின்ற மதுஸூதனன் அபராஹணத்திலும், மூன்று இடங்களில் வீற்றிருக்கின்ற மாதவன் ஸாயங்காலத்திலும், இருடீகேசன் ப்ரதோஷகாலத்திலும், அஸஹாய சூரனாகிய பத்மநாபன் ப்ரதோஷம் முதல் அர்த்தராத்ரி வரையிலுள்ள காலத்திலும் அர்த்தராத்ரி காலத்திலும், ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளத்தையுடைய ஸ்ரீதரன் அபரராத்ரியிலும், கட்கத்தை ஏந்தின ஜனார்த்தனன் பின்மாலை (ஸூர்யோதயத்திற்கு முந்தய விடியற்காலை) வேளையிலும், தாமோதரன் ஸந்த்யாகாலங்களிலும், கால மூர்த்தியும் ஜகத்திற்கெல்லாம் நியாமகனுமாகிய பகவான், விடியற்காலத்திலும் என்னைக் காப்பார்களாக. 

பகவானுடைய சக்ராயுதம், ப்ரளயகாலத்து வஜ்ராயுதம் போல் கூரிய நுனியுடையது. நாற்புறங்களிலும் சுற்றிக்கொண்டேயிருக்கும். அச்சக்ரம் பகவான் ப்ரயோகித்த மாத்ரத்தில் அக்னி உலர்ந்த புதரைக் கொளுத்துவது போல், சத்ரு ஸைன்யங்களையெல்லாம் அடியோடு பஸ்மம் செய்கின்றது. அதுவே அதற்கு இயற்கையாகையால் அதை நாம் ப்ரார்த்திக்க வேண்டியதில்லை. 

கதையே! நீ வஜ்ராயுதத்தோடொத்த ஊறலையுடைய நெருப்புத் துணுக்கைகள் (துளிகள்) கிளம்பப் பெற்று ஜ்வலிக்கின்றனை. நீ பகவானுக்கு மிகவும் அன்பிற்கிடமாயிருப்பவன். நான் அந்தப் பகவானுடைய தாஸன். ஆகையால் கூச்மாண்டர் (ஒரு வகை குட்டி சாத்தான்), வைனாயகர் (எல்லா நற்செயல்களுக்கும் தடையாய் இருக்கும் ஒரு வகை துர்புத்தியுள்ள அற்ப தேவதைகள்), யக்ஷர் (ஒரு வகை பிசாசு), ராக்ஷஸர், பூதர் (பிசாசு), க்ரஹர் (குழந்தைகளைக் கவர்ந்து செல்லும் துஷ்ட தேவதைகள்) மற்றுமுள்ள பலவகைச் சத்ருக்களையும் வேருடன் அழிப்பாயாக. 

சங்கங்களில் சிறந்த பாஞ்சஜன்யமே! நீ க்ருஷ்ணனால் ஊதப்பெற்றுப் பயங்கரமான ஒலியுடன் சத்ருக்களின் ஹ்ருதயங்களை நடுங்கச் செய்துகொண்டு யாதுதானர் (ஒரு வகை ராக்ஷஸர்), ப்ரதமர் (ருத்ரனுடைய பூத கணம்), ப்ரேதர் (கெடுதி செய்யும் ஆவி), மாத்ருகணங்கள் (தாயாக வரும் பெண் குட்டி பிசாசு), பிசாசர், ப்ரஹ்மராக்ஷஸர் (பாப செயலாலோ, சாபத்தாலோ பிசாசான ப்ராஹ்மணர்) முதலிய க்ரஹங்களையும் பயங்கரமான காட்சியுடைய மற்றும் பல க்ரஹங்களையும் பறந்தோடச் செய்வாயாக. 

கட்கங்களில் சிறந்த நந்தகமே! நீ கூரிய நுனியுடையவன். நீ பகவானால் ப்ரயோகிப்பட்டு என்னுடைய சத்ரு (எதிரி) ஸைன்யங்களை (படைகளை) எல்லாம் அழிப்பாயாக. 

சந்திரன் போன்ற பல கண்களையுடைய கேடயமே! பாபிஷ்டர்களான சத்ருக்களின் கண்களை மறைப்பாயாக. பாபிஷ்டமான கொடிய காட்சியுடையவர்களின் கண்களைப் பறிப்பாயாக. க்ரஹங்கள் தூமகேது முதலிய உத்பாதங்கள், மனுஷ்யர்கள், ஸர்ப்பங்கள், கோரைப்பல்லுடைய ஜந்துக்கள், பாபிஷ்டமான பூதங்கள் ஆகிய இவற்றினின்று எங்களுக்கு நேரும் பயங்களெல்லாம் பகவானுடைய நாமங்கள், உருவங்கள், ஆயுதங்கள் இவற்றின் கீர்த்தனத்தினால் உடனே பறந்து போகுமாக. எங்கள் நன்மைக்கு விக்னம் (இடையூறு) செய்பவை எவ்வெவை உண்டோ அவையெல்லாம் பகவானுடைய நாமோச்சாரணம் முதலியவற்றால் அழிந்து போகுமாக. கருத்மான் (கருடன்), ப்ருஹத், ரதந்தரம் (ஸாமவேத ஸ்துதி) முதலிய பல பிரிவுகளையுடைய ஸாமவேதத்தினால் துதிக்கப்படுகின்றான்; ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவன்; வேதஸ்வரூபன்; ஸமர்த்தன்; விஷ்வக்ஸேன ஸ்வரூபன். அவன் தன்னுடைய நாமங்களைச் சொல்லுகிற எங்களை எல்லா ஆபத்துக்களினின்றும் பாதுகாப்பானாக. பகவானுடைய நாமங்களும், உருவங்களும், வாஹனங்களும், ஆயுதங்களும், அனந்தன், கருடன் முதலிய பரிவாரங்களும், ஆபரணங்களும் எங்களுடைய புத்தி, இந்த்ரியம், மனம், ப்ராணன் இவற்றை எல்லா ஆபத்துக்களினின்றும் பாதுகாக்குமாக. சேதனா சேதன ரூபமான ஜகத்தெல்லாம், வாஸ்தவத்தில் பகவத் ஸ்வரூபமே. இவ்விஷயத்தில் எனக்கு ஸந்தேஹம் இல்லை. இது உண்மையாயின், எங்களுடைய உபத்ரவங்களெல்லாம் நசித்துப்போகுமாக. பரமபுருஷன் சேதனா சேதன ரூபமான ஜகத்திற்கெல்லாம் தானொருவனே அந்தராத்மாவாயிருக்கும் ப்ரபாவத்தினால், ப்ராக்ருதமான தேவ, மனுஷ்யாதி நாமங்களும், உருவங்களும் அவற்றின் மூலமாய் வரும் பேதமுமின்றி தன் ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்தினால் தானாகவே ஆபரணங்களையும், ஆயுதங்களையும், ராம, க்ருஷ்ணாதி உருவங்களையும் ராம, க்ருஷ்ணாதி நாமங்களையும் தரிக்கின்றான். இது உண்மையாயின், அவன் என் ப்ரார்த்தனையையும் உண்மையாக்கி ஸர்வ தேசங்களிலும் ஸர்வ காலங்களிலும், ஸர்வாவஸ்தைகளிலும் (எல்லா நிலையிலும்) ஆயுதங்கள் முதலிய ஸர்வ ஸ்வரூபத்தினாலும் எங்களைப் பாதுகாப்பானாக. நரஸிம்ஹ ரூபியான பகவான் திக்குக்களிலும் விதிக்குக்களிலும், மேலும், கீழும், உள்ளும், புறமும், நாற்புறத்திலும் பாதுகாப்பானாக. அவன் மஹத்தான தனது அட்டஹாஸ கோஷத்தினால் தன் பக்தர்களின் பயத்தைப் போக்குந்தன்மையன்; மற்றும், தன் தேஜஸ்ஸினால் ஸூர்யன் முதலிய மற்ற தேஜஸுக்களையெல்லாம் விழுங்கும் திறமையுடையவன்” என்று நாராயண கவசத்தை மொழிந்து, மீளவும் அவ்விச்வரூபன் தேவேந்த்ரனைப் பார்த்து, ஓ, தேவேந்த்ரனே! நாராயண கவசத்தை இங்கனம் உனக்கு மொழிந்தேன். இக்கவசத்தை அணிந்து (போர்த்திக்கொண்டு) ஸுகமாகவே அஸுரக்கூட்டத் தலைவர்களையெல்லாம் வெல்லுவாய். இதை அநுஸந்திக்கும் புருஷன் எவனைக் கண்ணால் பார்க்கிறானோ, காலால் தொடுகிறானோ, அவன் உடனே எத்தகைய பாபத்தினின்றும் விடுபடுவான். 

இம்மந்தர வித்யையைத் தரிக்கும் புருஷனுக்கு ராஜாக்கள், திருடர்கள், க்ரஹங்கள் முதலியவற்றினின்றாவது எவ்விடத்திலும், எவற்றினின்றும் பயம் உண்டாகாது. முன்பு ஒரு காலத்தில் கௌசிக கோத்ரத்தில் பிறந்த ஒரு ப்ராஹ்மணன் இவ்வித்யையை உபதேச மூலமாய்ப் பெற்று மறவாமல் அனுஸந்தித்துக் கொண்டு வந்தான். அவன் யோக தாரணையால் தன் சரீரத்தை ஒரு மருபூமியில் (பாலைவனத்தில்) துறந்தான். ஒருகால், சித்ராதனென்னும் கந்தர்வராஜன் ஸ்த்ரீகளுடன் விமானத்தின் மேல் ஏறிக்கொண்டு அந்த ப்ராஹ்மணன் விட்ட சரீரத்திற்கு நேராக ஆகாயத்தில் சென்றான். அக்கந்தர்வராஜன், உடனே அந்த ப்ராஹ்மணன் சரீரத்தை விட்ட இடத்தில் விமானத்துடன் தலைகீழாக விழுந்தான். அவன் எழுந்து வாலகில்ய ரிஷியின் வசனத்தினால் கௌசிக ப்ராஹ்மணனுடைய எலும்புகளை எடுத்துக் கொண்டு போய் ப்ராசீஸரஸ்வதியென்னும் நதியில் போட்டு ஸ்நானம் செய்து, இவ்வித்யையின் மஹிமைக்கு வியப்புற்றுத் தன்னிருப்பிடம் போய்ச் சேர்ந்தான். பயம் நேருங்காலத்தில், இந்நாராயண கவசத்தைக் கேட்கிறவனும் இதை ப்ரீதியுடன் கேட்டு அனுஸந்திக்கிறவனும் எல்லாப் பயங்களினின்றும் விடுபடுவார்கள். கூச்மாண்டம் முதலிய பூதங்கள் எவையும் அவர்களைக் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாது என்று மொழிந்தான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தேவேந்திரன் விச்வரூபனிடத்தினின்று இவ்வித்யையைப் பெற்று இதன் ப்ரபாவத்தினால் யுத்தத்தில் அசுரர்களையெல்லாம் வென்று, த்ரிலோகராஜ்ய லக்ஷ்மியைப் பெற்று அனுபவித்தான். 

எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக