“நம் பாரத இதிகாசச் செல்வங்களுள் ஒன்றான மகாபாரதம், ஐந்தாவது வேதமாகப் போற்றப் படுகிறது. தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் சதுர்வித புருஷார்த்த சாதனமாக இதை அளித்துள்ளார் வேத வியாச மகரிஷி” என்றார் தமது சொற்பொழிவில் பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா.
பிரஸ்தான த்ரயத்தில் ஒன்றாகப் புகழ்பெற்ற பகவத் கீதை கூறும் பரமார்த்தத்தையே ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் விளக்கமாகக் கூறுகிறது. இந்த ஆயிரம் நாமங்களின் படைப்பு இக, பர நலன்களை அளிக்கக்கூடிய ஒரு மஹா மந்திரப் பூங்கொத்து. மகாபாரதத்தின் அனுசாசனிக பர்வத்தின் உட்பகுதியான இந்த இரத்தின மஞ்சரி, பீஷ்மாச்சாரியார் மூலமாக யுதிஷ்டிரனுக்கு உபதேசிக்கப்பட்டது.
யுத்த முடிவில், யுதிஷ்டிரனுக்கு பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணனை தரிசிக்க, யுதிஷ்டிரன் சென்றான். அச்சமயத்தில் பரமாத்மா தியானத்தில் ஆழ்ந்திருக்கக் கண்டு, யோகீஸ்வரனை வணங்கி நின்றான் யுதிஷ்டிரன். ஸ்ரீகிருஷ்ணன் தியானத்திலிருந்து வெளிவந்த பின், தர்மபுத்திரன், அவரைப் பார்த்து “ஸ்வாமி! 'யோகி ஹ்ருத் த்யான கம்ய'மான நீர் தற்போது யாரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான்.
அப்போது ஸ்ரீ கிருஷ்ணன், “அம்புப் படுக்கையில் அணையும் அக்னி போலிருக்கும் பீஷ்ம பிதாமகர் என்னை தியானிக்கிறார். அதனால் என் மனம் பீஷ்மரிடம் சென்று விட்டது” என்றான். மேலும், “குரு வம்சத்தின் பிதாமகரும், சத்சரித்திரம் கொண்டவருமான அந்த மகாத்மா, நான்கு வேதங்களுக்கும், கால ஞானத்துக்கும் நிதி. ஆகவே, அந்த மகானுபாவரிடமிருந்து சகல தர்மங்களையும் அறிந்து கொள்வது உன் கடமை” என்று எடுத்துக் கூறி, யுதிஷ்டிரனோடு சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணன் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் சென்றான்.
பீஷ்மர், மகரிஷிகள் கூட்டத்தால் சூழப்பட்டு, பாணங்கள் ஏற்படுத்திய படுக்கையின் மேல் பிரகாசமான ஒளி போல் படுத்திருந்தார். முகுந்தனைக் கண்டவுடன் கங்கா புத்திரன் கைகூப்பினார். குசலம் விசாரித்தபின், “தர்ம விஷயங்களை உன் ஆசீர்வாத பலத்தால் யுதிஷ்டிரனுக்கு கூறுவதற்கு நான் தயார். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். சர்வ வேதங்களுக்கும் ஜகத் குருவாகிய நீ இதை உபதேசிக்காமல் எனக்கு இந்தப் பொறுப்பை அளித்திருப்பதன் உட்பொருள் என்ன?” என்று வினவினார் பீஷ்மாச்சாரியார்.
“மகாத்மா! இப்போது நான் உபதேசிப்பதால் எனக்குப் புதிதாகக் கிடைக்கப்போகும் கீர்த்தி எதுவும் இல்லை. அதனால், நான் உபதேசிப்பதை விட உத்தம தர்ம வாழ்க்கை நடத்திய உம்போன்ற மனித சிரேஷ்டர் தர்மோபதேசம் செய்வதே சிறப்பு” என்று பரமாத்மா பதிலளித்தான்.
இதைக் கேட்ட பிதாமகர், “பரமாத்மாவான உனது ஆணையை விட உயர்ந்தது வேறு இல்லை. உனது அனுகிரக பலத்தால் உன் சன்னிதியில், பிரம்ம ரிஷிகளின் முன்னிலையில் தர்ம பரம்பரையை போதிப்பது என் பாக்கியம்” என்று கூறி, யுதிஷ்டிரனுக்கு அநேக தர்மங்களை உபதேசித்தார். அவ்விதம் சாந்தி பர்வத்தைத் தொடர்ந்து அனுசாசநிக பர்வத்தில் 148 அத்தியாயங்கள் பூர்த்தி ஆன பின் பீஷ்மாச்சாரியார் 149வது அத்தியாயத்தில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை உபதேசித்தார்.
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் வெறும் துதி நூலோ, நாமங்களின் வரிசையோ அல்ல. இதில் அநேக மர்மங்கள் உள்ளன. பிரதானமாக, இது ஞான விஷயத்தை முன்னிறுத்துகிறது. மறுபக்கம் நாராயணனின் லீலை வைபவங்களையும், அவதார விசேஷங்களையும், மாதுர்யம் மிகுந்த நாமங்கள் வழியே நினைக்க வைத்து, பக்தி பாவனையில் படிப்போரை மூழ்கடிக்கக்கூடிய, பக்தியைப் பிரதானமாகக் கொண்ட துதி இது. பாவங்களைப் போக்கி, அதன் மூலம் மனத்தின் மலினங்களை நீக்கி, சித்த சுத்தியை அடைவித்து, ஞான வைராக்கியங்களை ஏற்படுத்தும் சக்தி இந்த நூலின் பாராயணத்தில் உள்ளது. ஒவ்வொரு நாமத்துக்கும் முன்னும் பின்னுமுள்ள நாமங்களிடையே உள்ள தொடர்பை கிரகித்தறிந்தால் பிரதி நாமத்திலும் ஒரு பிரத்தியேக ரகசியம் இருப்பது தெரியவரும்.
இந்த நாமங்கள் வெறும் அட்சரக் குவியல் அல்ல. நாராயணனின் சப்த சொரூபங்கள். மொத்தத்தில் இந்த ஸ்தோத்திரம் விஷ்ணுவின் சப்த மயமூர்த்தி, ஞானத்தை விளக்கிக் காட்டும் தத்துவ நூல். ஆதலால், இது நாம வித்யையாக, அக்ஷர வித்யையாக பூஜிக்கப் படுகிறது. விஷ்ணு சகஸ்ர நாமங்களின் கோர்வையில் அபாரமான சப்த சக்தி மறைந்துள்ளது. அந்த சப்த சக்தியில் அளவற்ற தெய்வீக சைதன்யம் பொதிந்துள்ளது. அதனால்தான் பல வியாதிகளுக்கும், கிரக கெடுதல்களுக்கும், நிவாரணமளிக்கும் உபாயமாக சாஸ்திர நூல்களே இந்த சகஸ்ரநாமங்களைப் படிக்கும்படி போதிக்கின்றன. மணி, மந்திரம், ஒளஷதம் இவற்றை விளக்கும் சாரதர சம்ஹிதை, சரக சம்ஹிதை போன்ற பல ஆயுர்வேத நூல்கள், ரோக நிவாரண வழிகளைப் பற்றி எடுத்துக் கூறுகையில் விஷ்ணு சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்படி அறிவுறுத்துகின்றன.
புருஷ சூக்த ஜபத்துக்கு மாற்றாகக் கூட விஷ்ணு சஹஸ்ரநாம தோத்திரத்தை குறிப்பிட்டுள்ளார்கள். 'சர்வ ஜீவ ரசுகணை' என்று போற்றப்படும் இந்த தோத்திரத்தை பிள்ளை பெற்ற வீட்டில் படித்தால் அனைத்து தரித்திரங்களும் விலகி விடும் என்பது பெரியோர் கூற்று. அநேக துர்நிமித்தங்களையும், அமங்கலங்களையும் நீக்கி, மகா பாபங்களைக் கூட நசியச் செய்து, இக, பர க்ஷேம சௌக்கியங்களை அளித்து பரமபதத்தை சித்தியடையச் செய்யும் சக்தி கொண்ட மந்திர அட்சரங்கள் அடங்கிய மாலை இது. தத்துவ சாஸ்திர நிதி இது. நாமங்களைக் கோத்த விதத்திலேயே தெய்வீக நாதத்தைத் தன்னுள் கொண்டுள்ளதால், சங்கீதம் ஒலிக்கும் அனுபவத்தை ஓதுபவர் கட்டாயம் அனுபவிப்பர்.
மகரிஷிகளால் உரைக்கப்படும் தோத்திரங்களுக்கு தத்துவ பலன், தாந்த்ரீக பலன் என்று இரண்டு பிரயோஜனங்கள் இருக்கும். முதலாவது, ஆன்மிகம். இரண்டாவது, லௌகீகம். தத்துவ தரிசனம் புத்தியை ஞானத்தால் நிரப்பி, அதன் மூலம் பரப்பிரம்மத்தை அடையச் செய்கிறது. தாந்த்ரீகம், உலகில் ஒவ்வொரு மனிதனும் விரும்பும் கோரிக்கைகளை நிறைவு செய்தும், இஷ்டமில்லாதவைகளை விலக்கியும் பலன்களை அருள்கிறது. ரகசியமான சப்த சக்தி மூலம் நாமத்துக்கு மந்திர சக்தி ஏற்படுகிறது.
அவ்வாறு மந்திரமயமான நாமத்தின் உச்சரிப்பு, ஜபம். இவை, விருப்பங்களைத் தீர்த்து, விருப்பமில்லாத ஆபத்துகளையும் வியாதிகளையும் விலக்கி, போகங்களையும், யோக க்ஷேமங்களையும் அடைவிக்கிறது. இதுவே, தாந்த்ரீக பிரயோஜனம். இவ்விரண்டும் நமக்கு வேண்டும். இந்த இரண்டையும் கொடுக்கக் கூடிய சக்தி இந்த நாமங்களுக்கு உள்ளது.
ஆயின், இந்த இரண்டையும் தவிர, மற்றுமொரு பலனும் இருக்கிறது. அது ஆனந்த அனுபவம். இதனை 'சாகத்வீக பிரயோஜனம்' என்று கூறலாம். எந்தப் பலனையும் மனத்தில் நினைக்காமல் பரம பிரேமையோடு நாம தோத்திரத்தை ஜபித்து விஷ்ணு அனுபவத்தைப் பெறுவது. இது பக்தி சம்பந்தமானது. நிஷ்காமம். இதுவே, உண்மையில் மிகச் சிறந்த பிரயோஜனம். இதனை நித்திய பாராயணமாகப் பொருளறிந்து படிப்பதன் மூலம் விஷ்ணுமயமான பரமாத்மாவின் நினைவு ஏற்படுகிறது. இந்த நாம வித்யையில் இத்தனை பலன்கள், குணங்கள் இருப்பதால்தான் இது அனைத்து தர்மங்களையும் விட உயர்ந்தது என்று கூறுகிறார் பீஷ்மாச்சாரியார் சீடன் யுதிஷ்டிரனிடம்.
தொகுத்தவர் - ராஜி ரகுநாதன்
நன்றி - தீபம் ஜனவரி 2017