ஞாயிறு, 28 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 143

ஆறாவது ஸ்கந்தம் - ஒன்பதாவது அத்தியாயம்

(இந்த்ரன் விச்வரூபனை வதித்தலும், த்வஷ்டா வ்ருத்ராஸுரனைப் பிறப்பிக்க அவனிடத்தில் தேவதைகள் பயந்து ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரதவம்சாலங்காரனே அவ்விச்வரூபனுக்கு ஸோமபீதமென்றும், ஸுராபீதமென்றும், அன்னாதமென்றும் மூன்று தலைகள் இருந்தனவென்று வேதத்தில் கேட்டிருக்கிறோம். அவனுக்குத் தேவதைகள் தந்தை முறையில் சேர்ந்தவர்கள். அவ்விச்வரூபன் தேவதைகளுக்கு ஹவிர்ப்பாகம் (யாகங்களில் தேவதைகளுக்காக அக்னியில் ஹோமம் செய்யப்படும் பொருள்) கொடுக்கும் பொழுது இந்திரனுக்கு இதுவென்றும், அக்னிக்கு இதுவென்றும் வணக்கத்துடன் ப்ரத்யக்ஷமாக உரக்க மொழிந்தான். அவனே மாதாவிடத்திலுள்ள ஸ்னேஹத்தினால் (நட்பினால்), மாமன்மார்களான அஸுரர்களுக்கும், தேவதைகளுக்குத் தெரியாதபடி ஏகாந்தமாகவே ஹவிர்ப்பாகம் கொடுத்து அதை அவர்களுக்குச் சேர்ப்பித்தான். அவன் கபடமாகத் தேவதைகளை வஞ்சித்துச் செய்த கார்யத்தை இந்திரன் கண்டு இவன் இன்னம் என் செய்வானோவென்று பயந்து சீக்கிரமாக அவன் தலைகளை அறுத்தான். அவனுடைய ஸோமபீதமென்னும் தலை அறுப்புண்டு கபிஞ்சலமென்னும் பக்ஷியாயிற்று. ஸுராபீதமென்னும் தலை கலவிங்கமென்னும் பக்ஷியாயிற்று. அன்னாதமென்னும் தலை தித்திரியென்னும் பக்ஷியாயிற்று. விச்வரூபன் ப்ராஹ்மணனாகையால் அவனைக் கொன்றமையால் ப்ரஹ்மஹத்யா (ப்ராஹ்மணனைக் கொன்ற) ரூபமான பாபம் உருவத்துடன் வந்து நிற்க, தேவேந்திரன் அதைப் போக்கிக் கொள்ள வல்லனாயினும் அஞ்சலியினால் அதை ஏற்றுக்கொண்டான். அவ்விந்தரன் ஸம்வத்ஸரம் வரையில் அப்படியேயிருந்து அதன் பிறகு ஜன அபவாதம் (மக்கள் சொல்லும் பழி) தீரும் பொருட்டுத் தன் பாபத்தை நான்கு பாகங்களாகப் பிரித்து பூமி, ஜலம், வ்ருக்ஷம், ஸ்த்ரீகள் ஆகிய நான்கு இடங்களில் ஒவ்வொன்றில் ஒவ்வொரு பாகமாக வைத்தான். அவற்றில் பூமி, பள்ளங்கள் தாமே மறைய வேண்டுமென்று வரம் பெற்று, ப்ரஹ்மஹத்யையின் (ப்ராஹ்மணனைக் கொன்றதன்) நான்கிலொரு பாகத்தை ஏற்றுக்கொண்டது. அந்த ப்ரஹ்மஹத்யையே (ப்ராஹ்மணனைக் கொன்றதே) பூமியில் களர்நிலமாய்ப் (ஒன்றும் விளையாத நிலமாகப்) புலப்படுகின்றது. வ்ருக்ஷங்கள் எத்தனை தரம் வெட்டினாலும் தளிர்க்க வேண்டுமென்னும் வரம்பெற்று அந்த ப்ரஹ்மஹத்யையில் (ப்ராஹ்மணனைக் கொன்றதில்) ஒரு பாகத்தை ஏற்றுக்கொண்டன. அதுவே அந்த வ்ருக்ஷங்களில் பிசின் (கோந்து) ரூபமாயப் புலப்படுகின்றது. ஸ்த்ரீகள், ப்ரஸவம் வரையிலும் ஸம்போகிக்கையாகிற (ஆணுடன் உடல் உறவு கொள்ளும்) வரத்தைப் பெற்று ப்ரஹ்மஹத்யையின் (ப்ராஹ்மணனைக் கொன்றதன்) ஒரு பாகத்தை ஏற்றுக்கொண்டார்கள். அந்தப் பாபமே அவர்களிடத்தில் மாதந்தோறும் ரஜோரூபமாய்ப் புலப்படுகின்றது. ஜலம் தான் எங்கும் நிறைந்திருக்கையாகிற வரத்தைப் பெற்று ப்ரஹ்மஹத்யையின் (ப்ராஹ்மணனைக் கொன்ற) ஒரு பாகத்தை ஏற்றுக்கொண்டது. அந்த பாபமே ஜலத்தில் நீர்க்குமிழியாகவும், நுரையாகவும் புலப்படுகின்றது. 

பின்பு த்வஷ்டா தன் புதல்வனாகிய விச்வரூபன் தேவேந்திரனால் மாண்டமையால் அவன் மேல் வைரம் (பகை) கொண்டு “இந்திரனுக்குச் சத்ருவாய் வளர்ந்து வருவாயாக. சீக்கிரத்தில் சத்ருவாகிய இந்திரனை வதிப்பாயாக” என்று இந்திரனை ஒழிக்க விரும்பி ஹோமம் செய்தான். உடனே தக்ஷிணாக்னியினின்று ஒரு அசுரன் பயங்கர உருவத்துடன் தோன்றினான். அவன் உலகங்களெல்லாம் அழியும்படியான ப்ரளயகாலத்திலுள்ள ம்ருத்யுவைப் போன்றிருந்தான். அவன் தினந்தோறும் நாற்புறங்களிலும் ஒரு பாணத்தளவு வளர்ந்து வந்தான். அவன் எரிகின்ற பர்வதம் போலும், ஸந்த்யாகாலத்து மேகம்போலும் பேரொளியுடன் திகழ்ந்தான். அவனுடைய தாடி மீசைகளின் நுனிகள் பழுக்கக் காய்ச்சின செம்பின் நிறமுடையவைகளாயிருந்தன. அவன் கண்கள் மத்யாஹ்ன காலத்து ஸூர்யன்போல் பயங்கரமாக ஜ்வலித்துக்கொண்டிருந்தன. அவன் மூன்று நுனிகளுடன் ஜ்வலிக்கின்ற சூலத்தில் ஆகாயத்திற்கும், பூமிக்கும் இடையிலுள்ள வஸ்துக்களையெல்லாம் கோர்த்துக் கொண்டு கூத்தாடுவதும், உரக்க அட்டஹாஸம் செய்வதும், பாதத்தினால் பூமியை நடுங்கச் செய்வதுமாயிருந்தான். மற்றும், அவனது முகம் மலைச் செறிவுபோல் அகன்று ஆழ்ந்து ஆகாயத்தைப் பருகுவது போலும், நாக்கினால் நக்ஷத்ரங்களை நக்குவது போலும், மூன்று லோகங்களையும் விழுங்குவது போலும் தோன்றி, கோரைப்பற்கள் அமைந்து மிகவும் பயங்கரமாயிருந்தது. அத்தகைய முகத்துடன் அடிக்கடி கொட்டாவி விடுகின்ற அவ்வசுரனைப் பார்த்து உலகத்திலுள்ளவர் அனைவரும் பயந்து பத்துத்திசைகளிலும் ஓடிப்போயினர். த்வஷ்டாவின் தவமே அங்கனம் அஸுரனென்னும் உருவங்கொண்டு இவ்வுலகங்களெல்லாம் பரந்து நின்றது. ஆகையால் அவன் வ்ருத்ரனென்று பேர் பெற்றான். 

அவன் பாபிஷ்டன்; இந்திரன் முதலிய லோகபாலர்களுக்கெல்லாம் விரோதியாகி ஒருவர்க்கும் பொறுக்க முடியாமல் மிகவும் கொடியனாயிருந்தான். இந்திரன் முதலிய தேவச்ரேஷ்டர்கள் அனைவரும் ஸைன்யங்ளுடன் (படைகளுடன்) கூடித் தத்தமது திவ்யாயுதங்களாலும், திவ்யாஸ்த்ரங்களாலும் அவனை அடித்தார்கள். அவர்கள் அவனிடத்தில் உபயோகப்படுத்தாத ஆயுதமாவது, அஸ்த்ரமாவது எதுவுமே இல்லை. அவ்வஸுரன் அவற்றையெல்லாம் அப்படியே விழுங்கினான். அப்பால் அத்தேவர்கள் அனைவரும், ஆ! இதென்ன பலமென்று வியப்புற்று அவ்வஸுரனால் தமது தேஜஸ்ஸெல்லாம் பறியுண்டு வருந்தி, ஆத்மாக்களுக்கு அந்தராத்மாவாகிய ஆதிபுருஷனை மனவூக்கத்துடன் துதித்தார்கள். காற்று, ஆகாயம், அக்னி, ஜலம், பூமி இவைகளும் மூன்று லோகங்களிலுமுள்ள ப்ரஹ்மதேவன் முதலிய நாங்களனைவரும் எவனுடைய கட்டளைக்குட்பட்டுப் பயந்து எவனையே ஆராதிக்கின்றோமோ, ப்ரஸித்தி பெற்ற ம்ருத்யுவும் எவனிடத்தினின்று பயப்படுகின்றானோ, அத்தகைய பரமபுருஷனைக் காட்டிலும் மற்ற எவன்தான் நமக்கு ரக்ஷகனாவான்? அவன் இயற்கையில் ஏற்பட்ட மஹிமை உடையவனாகையால் வியப்புற்றவன்; அவாப்த ஸமஸ்தகாமன் ; மஹாநந்த ஸ்வரூபனாகிய தன்னைத் தான் அனுபவிக்கும் தன்மையன்; ராகம் (விருப்பு, வெறுப்பு) முதலிய தோஷங்களற்றவன்; பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் தீண்டப்பெறாதவன்; ஸர்வேச்வரன்; தன்னைப் பற்றினவர்களைப் பாதுகாக்க வல்லவன். அத்தகையனான பரமபுருஷனைத் தவிர மற்றொருவனைச் சரணம் அடைவானாயின். அவன் ஒன்றுமறியாத மூடனே; அவன் நாயின் வாலைப்பிடித்துக்கொண்டு ஸமுத்ரம் தாண்ட விரும்புகிறவனோடொப்பான். மத்ஸ்யத்தின் உருவங்கொண்ட அந்தப் பரமபுருஷனுடைய கொம்பில் பூமியாகிற ஓடத்தைக் கட்டி ஸத்யவ்ரதனென்னும் மனு ஸங்கடத்தைக் (கவலையைக், கஷ்டத்தைக்) கடந்தான். அத்தகைய மத்ஸ்ய ரூபியான பகவான் தன்னைச் சரணம் அடைந்த நம்மையும் மஹத்தான வ்ருத்ராஸுர பயத்தினின்று ரக்ஷிப்பான். இது நிச்சயம். முன்பு ஜகத்ஸ்ருஷ்டியின் ஆரம்பத்தில், ப்ரஹ்மதேவனும் பயங்கரமாய் வீசுகின்ற காற்றின் வேகத்தினால் கிளம்பும் அலைகளின் கோஷத்தினால் மிகவும் பயங்கரமான ப்ரளய ஜலத்தில் நாபி கமலத்தினின்று விழும்படியான தசையில் அகப்பட்டு ஒருவரும் ஸஹாயமின்றித் தனியனாகிப் பயப்படுகையில், பகவானால் அப்பயத்தைக் கடந்தான். அவனே நம்மையும், இப்பயத்தினின்று பாதுகாப்பானாக. பகவான் தனக்கு இணையும் எதிருமில்லாதவன். தனிப்பெரும் கடவுளாகிய அப்பரமபுருஷன், தன் ஸங்கல்ப ஜ்ஞானத்தினால் நம்மைப் படைத்தான். மற்றும், நாம் இப்பகவானால் அருள்புரியப்பெற்று ஜகத்தையெல்லாம் படைத்தோம். அவன் நமது ஹ்ருதய குஹையில் இருந்துகொண்டு நம்மை நியமித்துக் கொண்டிருப்பினும், அவனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை நாம் காணமுடியாமலே இருக்கிறோம். நாம் நம்மை அவனுக்குட்படாத ஸ்வதந்த்ர (தன்னிச்சைப்படி செயல்பட வல்ல) ப்ரபுக்களென்று (யஜமானர்கள், தலைவர்கள் என்று) அபிமானித்துக் (நினைத்துக்) கொண்டிருக்கிறோம். நம்மைக் காக்கும் பொருட்டு அவன் நம்மை எப்பொழுதும் தன்னுடையவர்களென்று அபிமானித்து (நினைத்து) நம்மைப் பாதுகாக்கும் பொருட்டு யுகங்கள் தோறும் தன் ஸங்கல்பத்தினால் தேவர், திர்யக் (விலங்கு), மனுஷ்யர் முதலிய ஜாதிகளில் தன் ஸங்கல்பத்தினால் திருவுருவங்களைக் கொண்டு அவதரித்துச் சத்ருக்களால் மிகவும் பீடிக்கப்பட்டிருக்கின்ற நம்மைப் பாதுகாத்தான். அவன் தன் பக்தர்களிடத்தில் மிகுந்த வாத்ஸல்யமுடையவன்; நமக்குத் தெய்வம்; காரண தசையை அடைந்த ஸூக்ஷ்ம சேதனா சேதனங்களையும் கார்ய தசையை அடைந்த ஸ்தூல சேதனா சேதனங்களையும் சரீரமாகவுடையவன்; சேதனா சேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணமானவன் (வேறானவன்). அவன் பரன் (எல்லோர்க்கும் மேலானவன்); தன்னைப் பற்றினார்களைப் பாதுகாக்க வல்லவன். தேவதைகளாகிய நாமெல்லோரும் அவனையே சரணம் அடைவோமாக. நாம் செய்யவேண்டியது இவ்வளவே. நம்மைத் தன்னுடையவர்களென்று அங்கீகரித்திருக்கிற அவன் நமது சத்ருக்களைப் போக்கி நமக்கு ஸுகத்தை விளைவிப்பான்; மஹானுபாவன்; தன் பக்தர்களைப் பாதுகாப்பதில் தீக்ஷித்துக் கொண்டிருப்பவன்” என்று துதித்தார்கள். 

மஹாராஜனே! இங்கனம் அத்தேவர்கள் துதித்துக்கொண்டிருக்கையில், மேற்குத் திக்கில் சங்கம், சக்கரம், கதை இவற்றைத் தரித்த பகவான் தோன்றினான். அவன் அப்போதலர்ந்த செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களுடையவன். ஸுநந்தர் முதலிய பதினாறு புருஷர்கள் அவனைப் பணிந்து வந்தார்கள். அவர்கள் ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம் தவிர மற்ற எல்லா விதத்திலும் பகவானோடொத்திருந்தார்கள். அத்தகைய பரமபுருஷனைக் கண்டு அந்த ஆனந்தத்தினால் தழதழத்து எல்லோரும் பூமியில் தண்டம் (குச்சி, தடி) போல் விழுந்து நமஸ்கரித்து மெல்ல எழுந்து இங்கனம் ஸ்தோத்ரம் செய்தார்கள்.

தேவதைகள் சொல்லுகிறார்கள்:- யஜ்ஞாதி (யாகம் போன்ற) ஸத்கர்மங்களெல்லாம் உன்னுடைய ஆராதன ரூபமாய்க் கொண்டு பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தையும் விளைக்கின்றன. யஜ்ஞமே (யாகமே) உன்னுடைய ஸ்ருஷ்டி ஸாமர்த்யம். நீயே யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்களை அனுஷ்டிப்பதற்குரிய ஆயுளைக் கொடுப்பவன். யஜ்ஞாதி (யாகம் முதலிய) பலன்களைக் கொடுத்து அனிஷ்டங்களைப் (துன்பங்களைப்) போக்கிப் பாதுகாப்பவன் நீயே. பக்தர்களைப் பாதுகாப்பதில் விளம்பத்தைப் (கால தாமதத்தைப்) பொறுக்க முடியாமல், ஸர்வகாலமும் ஸுதர்சன சக்ரத்தை ஏந்திக்கொண்டிருக்கின்றாய். உன்னுடைய நாமம் நினைத்த மாத்ரத்தில் மஹத்தான பயத்தையும் போக்கும் திறமையுடையது. இத்தகைய உனக்கு நமஸ்காரம். நீ ஸ்வர்க்கம், மோக்ஷம், நரகமென்கிற மூன்று கதிகளுக்கும் நிர்வாஹகன் (நியமிப்பவன்). நீ ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்). ஜகத்காரணன்! அத்தகைய உன் ஸ்வரூபத்தை உன் ஸ்ருஷ்டிக்கு உட்பட்டவனும், உன்னால் கொடுக்கப்பட்ட ஜ்ஞான சக்திகளையுடையவனுமாகிய என்னைப் போன்ற புருஷன் அறியவல்லனாக மாட்டான். ஓம்! ஷாட்குண்யபூர்ணா! நாராயணா! வாஸுதேவ! ஆதிபுருஷா! மஹாபுருஷா! மஹானுபாவா! பரமமங்கள / பரமகல்யாணா! பரமகாருணிகா! கேவல ஜகதாதாரா! லோகைகநாதா! ஸர்வேச்வரா! லக்ஷ்மீநாதா! பரமஹம்ஸ பரிவராஜகர்கள் மேலான ஆத்மஸமாதி யோகத்தினால் உன்னை ஆராய்கின்றார்கள். தெளிந்த பக்தி யோகத்தினால் அஜ்ஞானமாகிற (அறிவின்மையாகிற) கதவைத் திறந்து மனத்தைச் சுத்தி செய்து ஆத்மாவை ஸாக்ஷாத்கரித்தவர்களுக்கு அவ்வாத்மாவுக்கு அந்தர்யாமியும் மஹாநந்த ஸ்வரூபனுமாய் நீ தோற்றுகின்றாய். இத்தகைய நீ, உலகங்களைப் படைப்பதும், பாதுகாப்பதும், அழிப்பதுமாயிருக்கின்றாய். இது உனக்கு விளையாட்டேயன்றி வேறன்று. இந்த உன் வியாபாரம் உலகத்திலுள்ளவர் வ்யாபாரங்களைக் காட்டிலும் விலக்ஷணமாய் (வேறாய்) இருக்கையால் அறிய முடியாதிருக்கின்றது. நீ வேறொரு ஆதாரத்தையும், எங்களைப்போன்ற ஸஹாயத்தையும் எதிர்பாராமல் ஸத்வாதி குணங்கள் தீண்டப் பெறாமல் எவ்வகை விகாரங்களுக்கும் இடமாகாமல், பிரித்தறிய முடியாதபடி மறைந்திருக்கிற சேதனா சேதனங்களோடு கூடின உன்னையொழிய வேறொரு சரணமில்லாத இவ்வுலகமாகப் படைப்பதும், பாதுகாப்பதும், அழிப்பதும் செய்கின்றாய்; இங்கனம் செய்கின்ற நீ, கர்மத்திற்குட்பட்ட ஸம்ஸாரி ஜீவனைப்போல் ஸத்வாதி குணங்களின் கார்யமான ப்ரபஞ்சத்தில் விழுந்து ஸாத்விகம், ராஜஸம் முதலிய கர்மங்களையும் அவற்றின் பலன்களையும் ஏற்றுக்கொள்கின்றனையா? அல்லது ஆத்மஸ்வரூபத்தின் உண்மையை உணர்ந்து, அவ்வாத்மானுபவத்தில் நிலை நின்று அந்தந்த வஸ்துக்களின் நிலைமையை உள்ளபடி அறிந்த ஞானி போல் உதாஸீனமாயிருக்கின்றனையா? என்று உன் நிலைமையை நாங்கள் எவ்விதத்திலும் அறிய முடியாதிருக்கிறோம். நீ ஸம்ஸாரி ஜீவனைப்போல் ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களைக் கர்மத்திற்குட்பட்டுச் செய்பவனல்லை. ஞானியைப்போல் கேவலம் உதாஸீனமாயிருப்பவனுமல்லை. உன்னிடத்தில் கர்த்ருத்வமும் (செயலைச் செய்வதும்) உதாஸீனத்வமும் (எதையும் பொருட்படுத்தாமலிருப்பதும்) ஆகிய இரண்டும் இருக்கின்றன. ஆகையால், உன் நிலைமை விலக்ஷணமாய் (வேறாய், மாறுபட்டதாய்) இருக்கின்றது. இவ்விரண்டு தன்மைகளும் ஒன்றோடொன்று சேராதவைகளேயாயினும், விரோதமில்லை. உன்னிடத்தில் இரண்டும் ஸம்பவிக்க இடமுண்டு. நீ ஷாட்குண்யபூர்ணன்; கணக்கில்லாத கல்யாண குணகணங்களுடையவன்; ஸமஸ்த சேதனர்களுக்கும் அந்தர்யாமியாயிருந்து, அவர்களை நியமிக்கின்றாய். நீ அச்சேதனர்களோடொக்க நினைக்கமுடியாத மஹிமையுடையவன். உன்னருளுக்கு இலக்காகாத பல வாதிகள் உன்னை அறியப் புகுந்து ஸந்தேஹித்து, இப்படியோ அப்படியோ என்று தர்க்கித்து ஒருவாறு நிச்சயித்துச் சில ப்ரமாண ஆபாஸங்களை (தவறான ஆதாரங்களைக்) கொண்டு, அவரவர்க்கு அவ்வப்பொழுது தோன்றினபடி எழுதுவித்த கள்ளப் பொய்ந்நூல்களின் (உண்மைக்குப் புறம்பான புத்தகங்களின்) பழக்கத்தினால் மனம் கலங்கித் தாம் நிச்சயித்ததே பொருளென்று துராக்ரஹம் (வீண் பிடிவாதம்) கொண்டு விவாதப்படுகிறார்கள். நீ ப்ராக்ருதமான தோஷங்கள் எவையும் தீண்டப்பெறாதவன். ப்ரளயதசையில் இந்த ப்ரபஞ்சத்தை உன்னிடத்தில் அடக்கிக்கொண்டு நீயொருவனே மிகுந்திருக்கின்றாய். நீ உன்மாயைக்கு உட்படாமல் மறைந்திருக்கின்றாய். இத்தகைய உன்னிடத்தில் எந்தப் பொருள் தான் சேராது? உன்னிடத்தில் பொருந்தாத இரண்டு தன்மைகள் எவையுமே இல்லை. கயிற்றைப்பார்த்து ஸர்ப்பமென்று (பாம்பென்று) நினைப்பவர்களின் நினைவை, அக்கயிறு தடுக்காதிருப்பதுபோல், உன்னைப்பற்றி விவாதப்படுகிறவர்களின் அபிப்ராயத்தைத் தடுக்காமல், நீ வெறுமனேயிருக்கின்றாய். ஆகையால் உன்னுடைய பெருமையை அறியாமல் சிலர் உன்னிடத்தில் சிலவற்றைச் சேராதவையாக நினைக்கிறார்களேயன்றி மற்றில்லை. நீ  தேவர் முதலிய ஸமஸ்த வஸ்துக்களிலும் நிறைந்திருக்கின்றாய். ஆயினும், அவற்றின் தோஷங்கள் தீண்டப்பெறாமல் நிர்விகார ஸ்வரூபனாய் (உன் இயற்கை நிலையில் மாற்றம் இன்றி) இருக்கின்றாய். அசேதனத்தோடு (ஜடமான சரீரத்தோடு) கூடின ஸமஸ்த ஜீவாத்மாக்களும் உனக்குச் சரீரமாயிருக்கின்றனர். ஆகையால் விகாரங்களெல்லாம் (மாறுபாடுகளெல்லாம்) அந்தச் சேதனா சேதனங்களைச் சேர்ந்தவைகளேயன்றி உனக்குக் கிடையாது. நீ ஸர்வேச்வரன்; ஸர்வ ஜகத்காரண பூதன். நீயே சேதனா சேதன ரூபமான இந்த ப்ரபஞ்சமாகத் தோற்றுகின்றாய். இத்தகையன் நீயொருவனேயன்றி உனக்கு ஈடாவது, எதிராவது எதுவுமே இல்லை. 

ஓ பகவானே, மதுஸூதனா! ஒரு ப்ரயோஜனத்தையும் எதிர்பாராமல் உன்னிடத்தில் பக்தி செய்யும் தன்மையுடைய பெரியோர்கள் இத்தகையனான உன் பாதாரவிந்த ஸேவையை எங்கனம் துறப்பார்கள்? அவர்கள் புருஷார்த்தம் இன்னதென்று நிச்சயித்து அறியும் பண்டிதர்கள்; உன்னையே ப்ரீதிக்கிடமுள்ள நண்பனாகக் கொண்டவர்கள்; ராகத்வேஷாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்களின்றிப் பிறருடைய கார்யங்களை நிறைவேற்றும் தன்மையுடையவர்கள். அவர்கள் உன் மஹிமையாகிற ஸமுத்ரத்தில் சிறு துளியை ஒருகால் அனுபவித்து அவ்வளவில் தம்மனத்தில் மஹானந்தம் பெருகப்பெற்று ஐஹிக ஸுகாபாஸங்களையும் (இவ்வுலகில் ஸுகம் என்று நினைக்கப்படும் சிறு இன்பங்களையும்), ஆமுஷ்மிக ஸகாபாஸங்களையும் (ஸ்வர்கம் போன்ற வேறு உலகங்களில் அனுபவிக்கப்படும் குறுகிய கால இன்பங்களையும்) உதறியிருப்பவர்கள்; ஸமஸ்த பூதங்களுக்கும், ப்ரியனும் நண்பனும், ஸர்வாந்தராத்மாவும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய உன்னிடத்தில் நிலைநின்று களிக்கின்ற (இன்புறுகின்ற) மனமுடையவர்கள். இத்தகைய பெரியோர்கள் மீளவும் இந்த ஸம்ஸாரத்தில் திரும்பவொட்டாமல் மோக்ஷத்தைக் கொடுக்கவல்ல உன் பாதாரவிந்த ஸேவையை எங்கனம் துறப்பார்கள்? 

நீ மூன்று லோகங்களையும் உட்புகுந்து நியமிக்கின்றாய். அவற்றிற்கு ஆதாரமாயிருக்கின்றாய். நீ இவ்வுலகங்களையெல்லாம் மூன்று அடிகளால் அளந்தாய். சந்த்ரன், ஸூர்யன், அக்னி இம்மூவரும் உன்னுடைய கண்கள். உன் வைபவம் மூன்று லோகங்களின் மனத்தையும் பறிக்குமாறு மிகவும் அழகாயிருக்கின்றது. தைத்யர், தானவர், மனுஷ்யர் முதலியவர் அனைவரும் உன் விபூதிகளே (சொத்துக்களே). ஆகையால் அவர்களை நீ வதிக்க நினைப்பது யுக்தமன்று. ஆயினும், அவர்களுக்கு இது அபிவ்ருத்தி (வளரும்) காலம் அன்று என்று நினைத்து, முன்பு உன் ஸங்கல்பத்தினால் தேவர், மனுஷ்யர் ஜல ஜந்துக்கள் முதலிய ஜாதிகளில் அவதரித்து சத்ருக்களை அவரவர்களுடைய அபராதத்திற்குத் தகுந்தபடி தண்டித்தாய். பகவானே! தவறான வழியில் செல்பவர்களைத் தண்டிக்கும் தன்மையனே! உனக்குத் திருவுள்ளமாயின், இந்த த்வாஷ்ட்ரனையும் (த்வஷ்டாவால் உருவாக்கப்பட்ட வ்ருத்ராஸுரனையும்) வதிப்பாயாக. அப்பனே! நாங்கள் உன்னுடையவர்கள். நீ உன் திவ்யமங்கள விக்ரஹத்தைக் காட்டி எங்களை அங்கீகரித்தனையல்லவா? உன்னிணையடிகளை த்யானிக்கையால் எங்கள் மனம் ஸ்வாதீனமாகி நாங்கள் வேறு விஷயங்களில் போகவேண்டுமென்றாலும் போகவொட்டாமல் விலங்கு போல் தடுக்கின்றது. அருள் நிறைந்து, தெளிந்து, அழகிய புன்னகையோடு கூடின கண்ணோக்கத்தினாலும், கருணையால் பெருகி வருகின்ற இனிய உரையாகிற அம்ருத தாரையாலும் (அம்ருதத்தின் பெருக்காலும்) எங்கள் தாபத்தைப் போக்குவாயாக. 

பகவானே! நாங்கள் உனக்கு அறிவிக்க வேண்டிய ப்ரயோஜனம் என்ன இருக்கின்றது? அக்னிக்கு அதன் துணுக்கையால் (நெருப்புப் பொறியால்) ஆகவேண்டிய ப்ரயோஜனம் உண்டோ? உன் மாயை ஆச்சர்யமானது. இவ்வுலகங்களின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களுக்குரியபடி பரிணாமங்களை (மாற்றங்களை) அடைகின்ற அந்த மாயை உன் விநோதத்திற்கிடமாயிருக்கின்றது. நீ ஸமஸ்த ஜீவ ஸமூஹங்களுக்குள், ஹ்ருதயங்களில் ப்ரஹ்மமென்று சொல்லப்படுகிற ப்ரத்யகாத்ம (ஜீவாத்ம) ஸ்வரூபத்தினாலும், வெளியில் ப்ரக்ருதி ஸ்வரூபத்தினாலும், தேசம், காலம், தேஹம், அவஸ்தை இவற்றிற்குத் தகுந்தபடி ஸுகம், துக்கம் முதலிய ஸமஸ்த ஜ்ஞானங்களையும் விளைத்துக்கொண்டு நிறைந்திருக்கின்றாய். ஜீவாத்மாக்களுடைய மனோபாவங்களுக்கெல்லாம் நீ ஸாக்ஷியாயிருக்கின்றாய். நீ தஹராகாசன் (ஹ்ருதய குஹையில் அந்தர்யாமியாய் இருப்பவன்); ஸ்வயம்ப்ரகாசமும் (தானே தோன்றுவதும்) எல்லாவற்றையும் விளக்குவதும் அபரிச்சின்னமுமான ஜ்ஞானமே வடிவமாகப் பெற்றவன். பரப்ரஹ்மமென்னும் பேர் உனக்கே முக்யமானது. நீ மூன்று லோகங்களையும் உள் புகுந்து தரிக்கின்றாய். நாங்கள் உன்னுடைய ஸங்கல்பத்தினால் ஏற்பட்ட நிலைமையுடையவர்கள். எங்களால் உனக்கு ஆகவேண்டிய ப்ரயோஜனம் ஒன்றுமில்லை. ஆகையால் நாங்கள் எதற்காக வந்தோமோ அதை நீயே நிறைவேற்றுவாயாக. 

தைத்ய, தானவாதிகளுக்கும் அந்தராத்மாவாயிருந்து, அவர்களுடைய நிலைமையை நீயே நடத்துகின்றாய். உனக்கு நாங்கள் எல்லோரும் ஸமானர்களே (ஸமமே – ஒன்றே). ஆயினும், நாங்கள் பரம குருவாகிய உனது பாதாரவிந்தங்களின் நிழலைப்பற்றியிருக்கிறோம். அந்நிழல் பலவகைப் பாபங்களால் விளையும் ஸம்ஸார பரிச்ரமங்களையெல்லாம் (களைப்பு, துன்பங்களையெல்லாம்) போக்கும் தன்மையுடையது. ஆகையால் நீ எங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். ஓ ஜகதீசா! இந்த த்வஷ்டாவின் புதல்வனாகிய வ்ருத்ராஸுரன் மூன்று லோகங்களையும் விழுங்குகின்றான். க்ருஷ்ணா! இவன் எங்கள் தேஜஸ்ஸுக்களையும், அஸ்த்ரங்களையும், ஆயுதங்களையும் விழுங்கினான். ஆகையால் இவனை வதிப்பாயாக (கொல்வாயாக). நீ ஸமஸ்த தோஷங்களும் தீண்டப்பெறாத பரிசுத்தன். ஹ்ருதய புண்டரீகத்தில் வாஸம் செய்கின்றாய்; ஜீவாத்மாக்களுடைய சித்த வ்ருத்திகளுக்கு (எண்ணங்களுக்கு) ஸாக்ஷியாயிருக்கின்றாய். ஆகையால், எங்கள் வருத்தம் உனக்கு நன்றாகத் தெரியும். நீ பூமியின் பாரத்தைப் போக்கி, ஸுகத்தைக் கொடுப்பவன். உன் புகழ் பரிசுத்தமானது. நாங்கள் வேறு முயற்சிகளையெல்லாம் துறந்து, உன்னையே சரணம் அடைந்திருக்கிறோம். உன் கட்டளைப்படி நடப்பவர்களை, நீ உன்னுடையவர்களாக அங்கீகரித்து அருள் புரியும் தன்மையுடையவன்; ஸம்ஸார மார்க்கத்தில் திரியும் வழிப்போக்கர்களுக்கு நிலைநின்ற ஆதாரமாயிருப்பவன்; ஐஹிக ஸுகத்தை (இவ்வுலக இன்பத்தை) மாத்ரமேயன்றி ஆமுஷ்மிக ஸுகத்தையும் (ஸ்வர்கம் முதலிய வேறு உலக இன்பத்தையும்) கொடுப்பவன். மேன்மையான புருஷார்த்தம் நீயே. தன்னைப் பற்றினாருடைய துக்கங்களைப் போக்குகையால் நீ ஹரியென்று பெயர் பெற்றனை. இத்தகைய உனக்கு நமஸ்காரம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! தேவதைகளால் ப்ரீதியுடன் துதிக்கப்பெற்ற பகவான் தன் துதியைக் கேட்டு ஸந்தோஷித்து அவர்களை நோக்கி இங்கனம் மொழிந்தான்.

பகவான் சொல்லுகிறான்:- ஓ தேவ ச்ரேஷ்டர்களே! நீங்கள் பண்ணின ஸ்தோத்ரமாகிற வித்யையால் நான் மிகவும் ஸந்தோஷம் அடைந்தேன். இந்த ஸ்தோத்ர வித்யையினால், புருஷர்கள் என்னிடத்தில் பக்தி உண்டாகப் பெற்றுத் தேஹத்தைக்காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவின் ஐச்வர்யத்தையும் நினைப்பார்கள். தேவ ச்ரேஷ்டர்களே! நான் ஸந்தோஷம் அடைவேனாயின், எதுதான் துர்லபம்? ஆயினும் என்னிடத்தில் நிலை நின்ற மதியுடைய  தத்வஜ்ஞன் (உண்மையை உணர்ந்தவன்) என்னையொழிய மற்றொன்றையும் விரும்பமாட்டான். சப்தாதி விஷயங்களைப் புருஷார்த்தமாக நினைத்திருக்கும் புருஷன் இந்திரியங்களுக்குட்பட்டுத் தன்னுடைய நன்மையை அறியமாட்டான். அந்தச் சப்தாதி விஷயங்களை விரும்புகிறவனுக்கு ஒருவன் சிறந்த நன்மையை விளைக்க வல்லவனாயிருந்தும், அவற்றையே கொடுப்பானாயின், அவனும் அவனைப் போன்ற ஒரு மந்தபுத்தியனேயாவான் (அறிவு குறைந்தவனேயாவான்). 

மேலான புருஷார்த்தம் இன்னதென்பதையும், அதன் உபாயத்தையும் அறிந்தவன், அதை அறியாமல் கேவல கர்மத்திலேயே மனம் சென்று வருந்துகிறவனுக்கு அக்கர்மத்தையே செய்யும்படி சொல்லமாட்டான். சிறந்த வைத்யன், ரோகி, அபத்யமான (சாப்பிடக்கூடாத) வஸ்துவை விரும்பினும், அதை அவனுக்குக் கொடுக்கமாட்டானல்லவா? ஆகையால் நீங்கள் என்னை அருள்புரிவித்துச் சத்ருக்களை ஜயிக்க வேண்டுமென்று விரும்புவது, உங்கள் புத்திக்குறைவின் கார்யமே. மோக்ஷத்தைக் கொடுக்கவல்ல நானும் நீங்கள் விரும்பினபடி செய்வது யுக்தமன்று. ஆயினும் தங்கள் கார்யம் நிறைவேறும் உபாயத்தைச் சொல்லுகிறேன், கேளுங்கள். 

ஓ, தேவேந்திரன் முதலிய தேவ ச்ரேஷ்டர்களே! நீங்கள் ததீசி மஹர்ஷியிடம் போவீர்களாக. உங்கள் இஷ்டம் நிறைவேறும். நீங்கள் கால விளம்பம் (தாமதம்) செய்யாமல் அம்மஹர்ஷியிடம் சென்று, பரமாத்ம உபாஸன ரூபமான வித்யையாலும் வ்ரதங்களாலும், தவங்களாலும் ஸாரமுள்ள அவரது சரீரத்தைக் (உடலைக்) கொடுக்கும்படி வேண்டுங்கள். அவர் பரிசுத்தமான ப்ரஹ்மவித்யையின் கரையறிந்தவர். அவ்வித்யையை, அவர் அச்வினி தேவதைகளுக்கு (இரட்டையரான தேவ வைத்யர்களுக்கு) உபதேசித்தார். அவ்வித்யையே, அச்வசிரஸ்ஸென்று ப்ரஸித்தி பெற்றது. அவ்வித்யோபதேசத்தினால் அச்வினி தேவதைகளுக்கு (இரட்டையரான தேவ வைத்யர்களுக்கு) மரணமில்லாமையையும் விளைத்தார். அவர், தன் தந்தையாகிய அதர்வ முனிவரிடத்தினின்று என்னைத் தேவதையாகவுடையதும், அபேத்யமுமான (பிளக்க முடியாததான) நாராயண கவசத்தைத் தான் பெற்று அதை த்வஷ்டாவுக்கு உபதேசித்தார். த்வஷ்டா விச்வரூபனுக்கு உபதேசித்தான். அவ்விச்வரூபனிடத்தினின்று நீ பெற்றாய். அம்முனிவர் மஹானுபாவர். அவருடைய சரீரம் மிகவும் ஸாரமுடையது. அவர் தர்மத்தை உணர்ந்தவர். நீங்கள் யாசிப்பீர்களாயின், அவர் தனது அங்கங்களை அவச்யம் கொடுப்பார். அவற்றைக் கொண்டுவந்து விச்வகர்மாவினிடம் கொடுத்தால், அவன் அவற்றால் மேலான ஒரு ஆயுதத்தை இயற்றிக் கொடுப்பான். இந்திரன், அவ்வாயுதத்தைக் கொண்டு என்னுடைய தேஜஸ்ஸினால் பலம் வளரப்பெற்று, வ்ருத்ராஸுரனுடைய தலையை அறுப்பான். அங்கனம் அந்த வ்ருத்ராஸுரன் தொலைந்த பின்பு, நீங்கள் தேஜஸ்ஸையும், அஸ்த்ரங்களையும், ஆயுதங்களையும், ஸம்பத்தையும் (செல்வத்தையும்) முன் போல மீளவும் பெறுவீர்கள். உங்களுக்கு க்ஷேமம் உண்டாகும். பயப்பட வேண்டாம். என்னிடத்தில் மனப்பற்றுடையவர் எதற்கும் வருந்தமாட்டார்கள் அவர்களை எவரும் பாதிக்க மாட்டார்கள்? 

ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக