ஞாயிறு, 28 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 144

ஆறாவது ஸ்கந்தம் - பத்தாவது அத்தியாயம்

(இந்திரன் ததீசியுடைய எலும்புகளால்  வஜ்ராயுதத்தை உருவாக்கிக்கொண்டு வ்ருத்ராஸுரனோடு யுத்தம் செய்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஜகத்ரக்ஷகனாகிய பகவான், இங்கனம் இந்திரனுக்குக் கட்டளையிட்டுத் தேவதைகள் பார்த்துக்கொண்டேயிருக்கையில், அவ்விடத்திலேயே மறைந்தான். பிறகு, தேவதைகள் பகவான் மொழிந்தபடியே ததீசி முனிவரிடம் போய், அவருடைய அங்கங்களைக் கொடுக்கும்படி வேண்டினார்கள். பாரதனே! அதர்வ முனிவருடைய புதல்வராகிய அந்தத் ததீசி முனிவர், மஹானுபாவர். அவர் செயல்களெல்லாம் தீர்ந்து ம்ருத்யுவை (மரணத்தை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆகையால், அவர் தேவதைகளின் வசனத்தைக் கேட்டு ஸந்தோஷம் அடைந்து புன்னகை செய்து “ஓ ,தேவதைகளே! ப்ராணிகளுக்கு மரணகாலத்தில் பொறுக்கமுடியாத வருத்தம் உண்டாகுமென்றும், அக்காலத்தில் அவர்க்குப் ப்ரஜ்ஞையும் (நினைவும்) தவறிப்போகும் என்றும் நீங்கள் அறியீர்களோ? ஜீவிக்க வேண்டுமென்று விரும்பும் ப்ராணிகளுக்குத் தேஹம் மிகவும் அன்பிற்கிடமாயிருக்குமல்லவா? அங்கனம் இஷ்டமான தேஹத்தை நேரே ஸ்ரீமஹாவிஷ்ணு வந்து யாசித்தாலும் எவன் தான் கொடுக்க உத்ஸாஹப்படுவான்? ஆகையால், நீங்கள் தான் என் தேஹத்தை வாய் கூசாமல் எப்படிக் கேட்கலாம்? நான்தான் எப்படி கொடுப்பேன்?” என்றார். அதைக் கேட்ட தேவதைகள், அம்முனிவரை நோக்கி  “ஓ, அந்தணர் தலைவரே! உம்மைப்போன்ற பெரியோர்கள் ப்ராணிகளிடத்தில் மன இரக்கமுடையவர்கள். அழகிய புகழுடைய அனைவராலும் உங்கள் நடத்தைகள் புகழத்தக்கவைகளாய் இருக்கின்றன. உங்களுக்கு எது துறக்க முடியாதது? தன் ப்ரயோஜனத்தை எதிர்பார்க்கிறவன், பிறனுடைய ஸங்கடத்தை (கஷ்டத்தை) உணரமாட்டான். உணர்வானாயின் யாசிக்கவே மாட்டான். பிறர் தன்னை யாசிப்பார்களாயின், கொடுக்க வல்லவன் இல்லையென்று சொல்லவே மாட்டான்” என்றார்கள். அதைக் கேட்ட மஹர்ஷியும், “தேவதைகளே, உங்களிடத்தில் தர்மத்தைக் கேட்க விரும்பி நான் உங்களிடம் அப்படி மொழிந்தேனன்றி வேறில்லை. இத்தேஹம் தனக்குக் காரணமான ப்ராரப்தகர்மம் (புண்ய பாப கர்மங்கள்) தீர்ந்தமையால் என்னை விட முயன்றிருக்கின்றது. உங்களுக்கு ப்ரியமான இத்தேஹத்தை நானும் அபிமானத்துடன் துறக்கிறேன். ஓ, நாதர்களே! நிலையற்றதாகிய இச்சரீரத்தினால் ப்ராணிகளிடத்தில் தயை செய்து, தர்மத்தையாவது, புகழையாவது ஸாதிக்கமாட்டானாயின் அவனைப்பற்றி ஸ்தாவரங்களும் சோகிக்கும். ப்ராணிகளின் வருத்தங்கண்டு வருந்துவதும், ஸந்தோஷம் கண்டு ஸந்தோஷிப்பதுமாய் இருக்கையாகிய இவ்வளவே அழிவற்ற தர்மமென்று புண்ய ச்லோகரான பெரியோர்கள் நிச்சயித்திருக்கிறார்கள். தேஹங்கள் நாய், நரி முதலியவற்றிற்கு ஆஹாரமாக வேண்டியவைகள்; பிறர்க்கு உபயோகப்பட வேண்டியவைகள்; நிலையற்றவைகள். அவற்றால் ஆத்மாவுக்கு ஆகவேண்டிய உபயோகம் எதுவுமே இல்லை. மனுஷ்யர்கள் அத்தகைய தேஹங்களாலும் பிள்ளை, பேரன் முதலிய பந்துக்களாலும் பிறர்க்கு உதவி செய்யாமல் இருப்பார்களாயின், அதைக்காட்டிலும் வேறு வருத்தமே இல்லை. ஆ! இப்படியும் செய்வார்களோ?” என்றார். உண்மையை உணர்ந்த அம்முனிவர், இங்கனம் நிச்சயித்துக்கொண்டு இந்திரியங்களையும், மனத்தையும், புத்தியையும் அடக்கி ஆத்மாவைப் பரமாத்மாவினிடத்தில் ஸமர்ப்பித்து கர்மபந்தங்களெல்லாம் தீரப்பெற்று, மேலான யோகமார்க்கத்தில் இறங்கித் தன் தேஹத்தைத் துறந்தார். 

பிறகு அவர் தன்னை விட்டுப்போன தேஹத்தையும் அறியவில்லை. அப்பால் தேவேந்த்ரன் அம்முனிவருடைய தேஹத்திலுள்ள எலும்புகளைக் கொண்டு விச்வகர்மாவினால் வஜ்ராயுதம் செய்வித்து அதை எடுத்துக்கொண்டு, பகவானுடைய தேஜஸ்ஸுடன் கூடி, உத்ஸாஹம் வளரப்பெற்று, ஸமஸ்த தேவகணங்களோடு கூடி, ஐராவதத்தின் மேல் ஏறி விளங்கினான். பிறகு அத்தேவேந்திரன் முனி கணங்களால் துதிக்கப்பெற்று, மூன்று லோகங்களையும் களிக்கச் (மகிழ்விக்கச்) செய்பவன் போன்று அஸுர ஸைன்யங்களில் தலைமையுள்ள வீரர்களால் சூழப்பட்ட சத்ருவாகிய வ்ருத்ரன் மேல் எதிர்த்தோடினான். அப்பொழுது அவ்விந்தரன், ப்ரளய காலத்தில் கோபித்து யமன் மேல் எதிர்த்தோடுகிற ருத்ரன் போல விளங்கினான். ஓ, மன்னவனே! அப்பால் முதல் சதுர்யுகத்தில், த்ரேதாயுகத்தின் ஆரம்பத்தில் நர்மதா நதிக்கரையில் தேவதைகளுக்கு அஸுரர்களோடு மிகவும் பயங்கரமான யுத்தம் நடந்தது. அப்பொழுது, ஏகாதச ருத்ரர்களும் அஷ்ட வஸுக்களும், த்வாதச ஆதித்யர்களும், அச்வினி தேவதைகளும், பித்ருக்களும், அக்னிகளும், மருத்துக்களும், ருபுக்களும், ஸாத்யர்களும், விச்வதேவரும், தேவதைகளும் இந்திரனைச் சூழ்ந்திருந்தார்கள். அங்கனம் தேவதைகளோடு கூடி வஜ்ராயுதத்தை ஏந்தித் தன்னொளியுடன் விளங்குகின்ற தம் சத்ருவாகிய (எதிரியாகிய) தேவேந்த்ரனைக் கண்டு வ்ருத்ரன் முதலிய அஸுரர்கள் பொறுக்க முடியாதிருந்தார்கள். நமுசி, சம்பரன், அனர்வன், த்விமூர்த்தன், வ்ருஷபன், அம்பரன், ஹயக்ரீவன், சங்குகிரன், விப்ரசித்தி, அயோமுகன், புலோமன், வ்ருஷபர்வன், ப்ரேஹதி, உத்கடன், தூம்ரகேசன், விரூபாக்ஷன், கபிலன், விபாவஸு இவர்களும் ஆயிரமாயிரமான தைத்யர்களும், தானவர்களும், யக்ஷர்களும், ராக்ஷஸர்களும், இல்வலன், பல்வலன், தந்தசூகன், வ்ருஷத்வஜன், காலநாபன், மஹாநாபன் பூதஸந்தாபனன், வருகன் இவர்களும் ஸுமாலி, மாலி முதலியவர்களும் ஸ்வர்ணமயமான அலங்காரங்களை அணிந்து ம்ருத்யுவுக்கும் அணுக முடியாத இந்த்ரனுடைய ஸேனையின் முன்நின்று தடுத்துப் பரபரப்பின்றிக் கொடிய மதம் (திமிர்) உடையவராகிப் பெரிய ஸிம்ஹநாதத்துடன் (சிங்க கர்ஜனையுடன்) எதிர்த்துக் கதை, உழல், தடி, பாணம், ஈட்டி, இரும்புத்தடி, தோமரம், சூலம், கோடாலி, கத்தி, சதக்னி, முஸுண்டி முதலிய ஆயுதங்களாலும், அஸ்த்ரங்களாலும் தேவச்ரேஷ்டர்களை நாற்புறத்திலும் சூழ்ந்து அடித்தார்கள். தேவதைகள் அஸுரர்களால் ப்ரயோகிக்கப்பட்டுப் புங்கானுபுங்கமாய் (கூட்டம் கூட்டமாய்) வந்து விழுகின்ற பாணங்களால் நாற்புறத்திலும் மறைக்கப்பட்டு, ஆகாயத்தில் மேகங்களால் மறைக்கப்பட்ட நக்ஷத்ரங்கள் போல் கண்ணுக்குப் புலப்படாமலே இருந்தார்கள். அங்கனம் அஸுரர்கள் மழை பெய்தாற் போல் பெய்த ஆயுதங்களும், அஸ்த்ரங்களும் தேவஸேனா ஜனங்களின்மேல் படவேயில்லை. வெகுவேகமாய்ப் பாணப்ரயோகம்  செய்யவல்ல (அம்பு எய்யவல்ல) தேவதைகள் அவற்றை ஆகாயத்திலேயே ஆயிரம் கண்டங்களாக அறுத்து விட்டார்கள். அனந்தரம் அஸுரர்கள் தாம் ப்ரயோகித்த அஸ்த்ரங்களும், சஸ்த்ரங்களும் அங்கனம் வீணானமை கண்டு மலைச்சிகரங்களையும், மரங்களையும், கற்களையும் கொண்டுவந்து தேவதைகளின் மேல் பெய்தார்கள். தேவதைகள் அவற்றையும் முன்போலவே அறுத்தார்கள். பிறகு, வ்ருத்ரனை நாதனாகவுடைய அஸுரர்கள், தாம் ப்ரயோகித்த பலவகை அஸ்த்ரங்களாலும், சஸ்த்ரங்களாலும் சிறிதும் அடிபடாமல் தேவதைகள் க்ஷேமமாயிருப்பதையும், மீளவும் தாம் ப்ரயோகித்த மரங்களும், கற்களும், மலைச்சிகரங்களும் அவர்மேல் படாமல் வீணானவற்றையும் கண்டு எல்லோரும் பயந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அனுகூலர்களான பெரியோர்களின் மேல், புத்தியில்லாத மூடர்கள் பிதற்றுகிற வசவுகள் எல்லாம் வீணாவது போலத் தேவக் கூட்டங்களின் மேல் அஸுரர்கள் செய்த ப்ரயாஸங்கள் (முயற்சிகள்) எல்லாம் வீணாயின. அவ்வஸுரர்கள், பகவானிடத்தில் பக்தியில்லாதவர்கள். ஆகையால் தேவதைகள் அவர்களுடைய பலத்தையெல்லாம் அனாயாஸமாகப் பறித்தார்கள். ஆதலால், அவ்வஸுரர்கள் யுத்தத்தில் தமக்குள்ள கொழுப்பெல்லாம் பாழாகப் பெற்றுத் தம்முடைய ப்ரயாஸங்கள் (முயற்சிகள்) எல்லாம் வீணானமை கண்டு ப்ரசித்தி பெற்றவர்களாயினும், யுத்த ஆரம்பத்தில் தம் ப்ரபுவான வ்ருத்ராஸுரனைத் துறந்து ஓடிப்போக மனங்கொண்டார்கள். மஹாவீரனும், ஆழ்ந்த மனமுடையவனும், கொடியனுமாகிய அந்த வ்ருத்ராஸுரன் தன் ப்ருத்யர்கள் (சேவகர்கள்) ஓடுவதையும், தன் பலத்தில் சிறிது அழிந்து போனதையும், மற்றவர்கள் பயந்து ஓடிப்போவதையும் கண்டு அக்காலத்திற்குரியதும், கம்பீர மனமுடைய வீரர்களுக்கு இனியதுமான வார்த்தையை மொழிந்தான். “ஓ விப்ரசித்தீ? நமுசீ! புலோமா! மயனே! அனர்வா! சம்பரா! நீங்கள் என் வார்த்தையைக் கேளுங்கள். பிறந்தவர் அனைவரும் மரணம் அடைவார்களென்பது நிச்சயம். அந்த ம்ருத்யுவிற்கு எந்த ப்ரதிக்ரியாவும் (பரிஹாரம், எதிர்ச்செய்கை) ஏற்படவில்லை. ஆகையால், அதைத் தடுக்க முடியாது. ஓ,  ராக்ஷஸர்களே! அந்த மரணத்தினால் ஸ்வர்க்கலோகமும், யசஸ்ஸும் விளையுமாயின், அதை எவன் தான் விரும்பமாட்டான்? இவ்வுலகத்தில் இரண்டு வகையான மரணங்கள் கிடைக்க அரியவையென்று பெரியோர்களால் புகழப்படுகின்றன. உள்ளிந்த்ரியத்தையும், வெளியிந்த்ரியங்களையும் வென்று, யோகத்தில் இழிந்து, ப்ரஹ்ம த்யானத்தினால் சரீரத்தைத் துறக்கை ஒன்று. வீரர்களின் படுக்கையாகிய யுத்தபூமியில் பின்வாங்காமல் சத்ருக்களால் அடியுண்டு சரீரத்தைத் துறக்கை மற்றொன்று. விவேகமுடையவர்கள் இவ்விரண்டு மரணங்களையும் உபேக்ஷிக்க (வெறுத்து ஒதுக்க) மாட்டார்கள்.”

பத்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக