ஞாயிறு, 28 ஜூன், 2020

கண்ணன் கதைகள் - 1 - திருப்பூர் கிருஷ்ணன்

அவர்களை ஒதுக்காதீர்கள்

உத்தங்க மகரிஷி அந்த வனாந்திரமான பிரதேசத்தில் கால்கடுக்க நடந்து கொண்டிருந்தார். தாகம் அவரை வாட்டி வதைத்தது.

"என்ன தாகம் இது! உயிரே போய்விடும்போல் அல்லவா இருக்கிறது? கண்ணன் அவரைச் சோதிக்கிறானா?

ஆம். உண்மையிலேயே அதுதானே நடக்கிறது!

முனிவர் அல்லவா அவர்? எப்போதாவது யாரேனும் அடியவர்கள் உபசரித்தால் கனிகள், பசும்பால் மட்டும் சாப்பிடுவதுண்டு. மற்றபடி காற்றும் நீருமே ஆகாரம்.

ஆனால், இன்றென்ன இப்படி ஒரு தாகம்! அங்கே ஒரு பொய்கை கூடத் தென்படவில்லை.

உத்தங்கர் தாகத்தின் கொடுமை பொறுக்காமல் காலோய்ந்து உட்கார்ந்து விட்டார். 

"கண்ணா! என் உணர்வுகளையெல்லாம் வென்று விட்டதாக மமதை கொண்டேன். ஆனால், இந்தப் பாழும் தாக உணர்வை வெல்ல முடியவில்லையப்பா! பிராணனே போய்விடும் போல் இருக்கிறதே? கண்ணக் கடவுளே! எங்கிருந்தாவது எனக்கு ஒரு குவளை நீர் கிடைக்க நீ அருளக் கூடாதா?" வாய்விட்டுக் கதறியும் கூட அந்தக் கதறல் ஏன் அவன் செவியை எட்டவில்லை?

அஸ்தினாபுரத்தில் பாஞ்சாலியின் கதறல் கேட்டு, துவாரகையிலிருந்து சேலை வழங்கியவன், இன்று தன் கதறலைக் கேட்டு ஒரு குவளை தண்ணீர் தருவதில் என்ன சிரமம்? 

கண்ணனின் கருணைக் கடல் வற்றிவிட்டதா?

பாஞ்சாலியைப் பற்றி நினைத்ததும் உத்தங்கருக்கு பாரதப் போரின் போது, கண்ணன் அவருக்கு வழங்கிய ஒரு வாக்குறுதி ஞாபகத்தில் வந்தது.

அதன்படி இப்போது கண்ணன் அவருக்குத் தண்ணீர் தந்ததாக வேண்டுமே? பரம்பொருள் வாக்கு தவறுமா என்ன?

உத்தங்கர் திகைத்தார். அவர் மனத்தில் பழைய நினைவுகள் படம் படமாய் விரிந்தன.

பாரதப் போர் முடிந்து கண்ணன், துவாரகை திரும்பும் வழியில் உத்தங்க மகரிஷி கண்ணனைக் கண்டார்.

பாரதப் போர் நிலவரம் எதுவும் உத்தங்கருக்குத் தெரியாது. தவத்திலேயே ஆழ்ந்திருந்த அந்த மகரிஷி, கண்ணனை வணங்கி வெகுபிரியமாய் விசாரித்தார்.

"கண்ணா! பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தினாய் அல்லவா? எல்லோரும் நலம் தானே? பீஷ்மர் எப்படி இருக்கிறார்?''

கண்ணன் பணிவோடு நடந்த அனைத்தையும் சொன்னான். பீஷ்மர் இறந்துவிட்டார். 

கவுரவர்கள் கொல்லப்பட்டார்கள். வள்ளல் கர்ணனும் கூட மாண்டுபோனான். இப்போது தர்மபுத்திரரின் அரசு ஸ்தாபிக்கப் பட்டுள்ளது.

இந்தச் செய்திகளை முதன்முறையாகக் கேட்ட உத்தங்கரின் கோபம் எல்லை மீறியது. கண்ணன் கடவுள் என்ற எண்ணத்தைக் கூட அந்தக் கோபம் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

"என்ன சொல்கிறாய் கண்ணா? நீ நினைத்தால் அவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா? ஏராளமான பேர் கொல்லப்படுவதில் என்ன ஆனந்தம் உனக்கு? நீ நினைத்தது தானே நடக்கும்? அவ்விதமெனில் நீ ஏன் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை? இதோ உன்னைச் சபிக்கப் போகிறேன்!'' 

உத்தங்கர் கமண்டலத்திலிருந்து கண்ணனுக்குச் சாபம் தருவதற்காக ஒரு பிடி தண்ணீரை கையில் எடுத்து விட்டார். கண்ணன் அந்தத் தண்ணீரைச் சடாரென்று தட்டிவிட்டான்.

தனக்குச் சாபமளிப்பதன் மூலம், அவரது தவவலிமை குறைந்து போவதைத் தான் விரும்பவில்லை என்றும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதே தன் அவதார நோக்கமென்றும் அதைக் கருத்தில் கொண்டே செயல்பட்டதாகவும் விளக்கினான். மனித அவதாரத்தில் மனித சக்திக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும், அதை மீறித் தான் செயல்பட்டும் கூட, துரியோதனனை மாற்ற இயலவில்லை என்றும் கண்ணன் கூறியதைக் கேட்டு உத்தங்கர் மனம் நெகிழ்ந்தார்.

உத்தங்கரைப் பாசம் பொங்கப் பார்த்த கண்ணன், அர்ச்சுனனுக்குப் போர்க்களத்தில் கீதை சொன்ன போது, தான் காட்டிய விஸ்வரூப தரிசனத்தை உத்தங்கருக்கும் காட்டினான். அவர் பிரமிப்போடு விஸ்வருபத்தை தரிசித்தார். மீண்டும் பழைய வடிவம் பெற்ற கண்ணன், உத்தங்கரிடம் கனிவோடு சொன்னான்.

"ஏதேனும் ஒரு வரம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் உத்தங்கரே!''

"கண்ணா! உன் விஸ்வரூப தரிசனத்தையே பார்த்துவிட்ட பிறகு. இனி வேறென்ன வேண்டும் எனக்கு? உன்னைச் சபிக்க எடுத்த என் கை நீரைத் தட்டிவிட்டாயே! அதனால் அல்லவோ என் தவம் பிழைத்தது! என் கை நீரைத் தட்டி விட்ட நீ, எப்போது எங்கே எனக்கு நீர் தேவைப்பட்டாலும் அது கிடைக்க அருள்வாயாக. இந்த வரமும் கூட எனக்குத் தேவையில்லை தான். ஆனால், வரம் கேள் என்று பரம்பொருளே சொன்ன பிறகு அதன் கட்டளையைப் பணிவதே சரி என்பதால் இதைக் கேட்டேன்!''

கண்ணன் கலகலவென்று நகைத்தான். "அப்படியே ஆகுக!' என்று சொல்லி வாழ்த்திவிட்டு சென்றுவிட்டான்.

வனப் பிரதேசத்தில் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த உத்தங்கர் இப்போது திகைத்தார். "அன்று கண்ணன் தந்த வரம் பொய்ப்பிக்குமா? ஏன் இன்னும் தண்ணீர் கிட்டவில்லை?"

அப்போது தொலை தூரத்தில் ஒரு புலையன் வருவது தென்பட்டது. கையில் ஒரு குவளை நீரோடும் சுற்றிலும் நாய்களோடும் வந்து கொண்டிருந்தான். 

"சாமி எங்க இங்க வந்து மாட்டிக்கிட்டீங்க? தண்ணீர் இல்லாத காடாச்சே இது? தாகம் வாட்டுதா? தண்ணீர் தரட்டுமா? வாங்கிக் குடிக்கிறீங்களா?'' கடும் தாகத்திலும் உத்தங்கரின் ஆசாரம் அவரைத் தடுத்தது. போயும் போயும் புலையன் கையால் நீர் வாங்கி அருந்தவா? 

"சீச்சி! தள்ளிப் போ!'' .. அவனை விரட்டினார் அவர்.

"சாமீ, தள்ளிப் போன்னு சொன்னீங்களே? எதைத் தள்ளிப் போகச் சொல்றீங்க? என் உடலையா? ஆன்மாவையா? உடலுக்கே சாதி கிடையாது என்கிறபோது, ஆன்மாவுக்கு ஆண், பெண் பால் வேற்றுமை கூடக் கிடையாதே சாமி? எல்லா உடலும் சாகப் போகிறதுதானே? சாகாத உடல் இருந்தாச் சொல்லுங்க. அதை உசந்த சாதி உடல்னு நான் ஒப்புக்கிறேன்!''

உத்தங்கர் திகைத்தார்.

"ஒரு புலையன் என்ன அழகாக வேதாந்தம் பேசுகிறான்! யார் இவன்?"

"யாரப்பா நீ?'' திகைப்போடு கேட்டார்.

பதில் சொல்ல அவன் அங்கே இல்லை. அவனும் உடன் வந்த நாய்களும் சடாரெனக் காட்சியை விட்டு மறைந்துவிட்டன.

"கண்ணா! என் தெய்வமே! என்ன சோதனை இது? வந்தது யாரப்பா?'' உத்தங்கர் கதறினார். 

அவரின் செவிகளில் இனிய புல்லாங்குழல் நாதம் கேட்டது. திரும்பிப் பார்த்தார். கண்ணன் குறும்பு தவறும் புன்முறுவலோடு நின்று கொண்டிருந்தான்.

"உத்தங்கரே! உமக்கு நீர் தருவதாகத்தான் வாக்குறுதி தந்தேனே தவிர. யார் தருவார் என்று உத்தரவாதம் தரவில்லையே. நாய்களோடு கீழ்ச்சாதி என நீர் எண்ணும் புலையன் வடிவில் வந்தவன் யார் தெரியுமா? தேவேந்திரன்! அவனிடம், உத்தங்கர் என் பக்தர், தாகத்தால் வாடுகிறார். அவருக்கு நீரையல்ல., அமிர்தத்தையே கொண்டு கொடு என்றேன். அவன் மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பதை விரும்பவில்லை. புலைய வடிவில் செல்கிறேன். அவர் ஏற்றால் வழங்குகிறேன் என்றான். ஆனால், அவன் எதிர்பார்த்த படியே நீர் அவன் உருவைக் கண்டு வெறுப்படைந்தீர். அமிர்தத்தை இழந்துவிட்டீர்!''

உத்தங்கரின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.

"உத்தங்கரே! கீழச்சாதியினர் என்று உங்களைப் போன்றோர் கருதும் மனிதர்களால் தானே உலகம் நடக்கிறது? உழவுத் தொழில் செய்வோர் மண்பாண்டம் செய்வோர், ஏன் கழிவை அகற்றுவோர் இவர்களெல்லாம் தொழிலை நிறுத்திவிட்டால் உலகம் என்ன ஆகும்? வர்ணாஸ்ரமம் என்பது தொழில் சார்ந்த பிரிவே தவிர, பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை ஏன் நீங்கள் உணரவில்லை? கீழ்ச்சாதியினர் என்று உங்களைப் போன்றோர் ஒதுக்கும் மனிதர்கள் செய்யும் தொழில் தானே அமிர்தம்? அந்த அமிர்தத்தால் தானே உலகம் அழியாமல் நிலையாய் நிற்கிறது? அவர்கள் இல்லாவிட்டால் என்றோ உலகம் அழிந்திருக்குமே? ஒரு பிரிவினரை ஒதுக்கினால் அவர்கள் மூலம் கிடைக்கும் அமிர்தத்தையே அல்லவா உலகம் இழக்க நேரிடும்?"

உத்தங்கர் கண்களைத் துடைத்துக் கொண்டார். பக்திப் பரவசம் நிறைந்தவராய், "கண்ணா! நீ அர்ச்சுனனுக்குச் சொன்னது அர்ச்சுன கீதை. எனக்குச் சொன்னது உத்தங்க கீதை. இந்த கீதையின் உண்மையை உலகம் உணரட்டும் பிரபோ! என் மனதில் தெளிவு பிறக்க உன் ஆசி தேவையப்பா!" என்றார்.

கண்ணனின் கரம் அவருக்கு ஆசி வழங்கியது. பின், அவனது உருவம் அவர் நெஞ்சுக்குள் புகுந்து மறைந்தது.

நன்றி - தினமலர் மே 2012


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக