திங்கள், 29 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 145

ஆறாவது ஸ்கந்தம் - பதினோறாவது  அத்தியாயம்

(வ்ருத்ராஸுரன் இந்த்ரனோடு ஸம்பாஷித்தல் (உரையாடுதல்))

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஓ, மன்னவனே! இங்கனம் ஸேனையில் தலைவனாகிய வ்ருத்ரன் தர்மத்தினின்றும் நழுவாத வார்த்தையைச் சொல்லிக்கொண்டிருப்பினும், பயந்து மன நிலைமையற்று ஓடிப்போக முயன்றிருக்கிற அஸூரர்கள் அவனுடைய வசனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பால் அஸுர ச்ரேஷ்டனாகிய அந்த வ்ருத்ராஸுரன் அஸுர ஸைன்யமெல்லாம் காலம் அனுகூலமாயிருக்கப் பெற்ற தேவதைகளால் பீடிக்கப்பட்டு நாதனற்றது (தலைவன், காப்பாற்றுபவன் இல்லாதது) போலப் பயந்தோடுவதைக் கண்டு இந்த்ர சத்ருவாகிய வ்ருத்ரன் அந்த வ்யஸனத்தைப் (கஷ்டத்தைப்) பொறுக்க முடியாமல் மிகவும் கோபித்துத் தன் பலத்தினால் தேவர்களின் ஸேனையைத் தடுத்து விரட்டித் தேவதைகளை நோக்கி இங்கனம் மொழிந்தான். “யுத்தத்தில் முன் நிற்கமாட்டாமல் பயந்தோடிப் பின்புறத்தில் அடிபடுகின்ற இவ்வஸுரர்கள் மாதாவின் விஷ்ட்டை (மலம்) போல் ஒன்றுக்கும் உபயோகப்படாதவர்கள். இவர்களை வதிப்பதனால் உங்களுக்கு என்ன ப்ரயோஜனம்? பயந்தவனை வதிப்பது சூரர்களால் புகழத் தகுந்ததன்று; ஸ்வர்க்கத்தையும் விளைக்காது. ஓ, அற்பர்களே! ஆகையால், உங்கள் மனத்தில் சண்டை செய்ய வேண்டும் என்னும் விருப்பமாவது தேஹ பலமாவது உள்ளதாயின், சப்தாதி விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பமும் இல்லாதிருக்குமாயின், ஒரு க்ஷணகாலம் மாத்ரம் என்னெதிரில் நிற்பீர்களாக” என்றான். 

மஹாபலமுடைய வ்ருத்ராஸுரன் கோபமுற்றுத் தேவக்கூட்டங்களைத் தன் தேஹத்தினால் (சரீரத்தினால், உடல் உருவத்தினால்) பயப்படுத்திக்கொண்டு பலமுள்ளவளவும் ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை) செய்தான். அதனால் ஜனங்களெல்லாரும் பயந்து மூர்ச்சித்தார்கள். அந்த வ்ருத்ராஸுரனுடைய கர்ஜனையைக் கேட்டுத் தேவக் கூட்டங்களெல்லாம் வஜ்ராயுதத்தினால் அடிபட்டாற் போல் மூர்ச்சித்துப் பூமியில் விழுந்தன. யுத்த அரங்கத்தில் (போர்க்களத்தில்) தடுக்க முடியாத கொடிய மதமுடைய அந்த வ்ருத்ராஸுரன் சூலத்தைக் கையில் ஏந்திப் பூமியை நடுங்கச் செய்து கொண்டு நடந்து, மதங்கொண்ட மஹாகஜம் (பெரிய யானை) பனங்காட்டை அழிப்பது போல், அங்கனம் மூர்ச்சித்துக் கண் மூடிக்கொண்டிருக்கிற தேவ ஸைன்யத்தைப் பலமுள்ளவளவும் தன் பாதங்களால் தாக்கினான். தேவேந்த்ரன் அது கண்டு கோபித்து அவன் மேல் பெரிய கதையை ப்ரயோகிக்க, அவ்வஸுரன் வருந்தியும் பொறுக்க முடியாத அக்கதை தன்மேல் வருவதைக் கண்டு அதை அவலீலையாகவே (விளையாட்டாக) இடக்கையினால் பிடித்துக் கொண்டான். அவ்விந்த்ரனின் சத்ரு (எதிரி) பெருங்கோபத்துடன் விரைவாக அடியிட்டுச் சென்று உரக்க ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை) செய்து அக்கதையினால் இந்த்ரனுடைய வாஹனமாகிய ஐராவதத்தின் தலையில் அடித்தான். யுத்தத்தைப் பார்க்க வந்தவர்கள் அனைவரும் அவன் செய்த கார்யத்தை வெகுமதித்தார்கள். அந்த ஐராவதம் வ்ருத்ராஸுரன் ப்ரயோகித்த கதையால் அடியுண்டு வஜ்ராயுதத்தினால் பிளக்கப்பட்ட பர்வதம் போல் சுழன்று, முகம் சிதறப்பெற்று, மிகவும் வருந்தி ரத்தம் கக்கிக்கொண்டு, இந்த்ரனுடன் ஏழு வில்லளவு தூரம் பின்னே நகர்ந்தது. அவ்வஸுரன் யுத்த தர்மத்தை உணர்ந்த மஹானுபாவன். ஆகையால், வாஹனம் வருந்தித் தானும் மனவருத்தமுற்றிருக்கிற அவ்விந்த்ரன் மேல் மீளவும் கதையை ப்ரயோகிக்காமல் வெறுமனே இருந்தான். 

இந்த்ரன் அம்ருதப் பெருக்குடைய தன் கையினால் ஐராவதத்தைத் தடவிக்கொடுத்து அதன் வருத்தமெல்லாம் தீரச்செய்து மீளவும் அவ்வஸுரன் மேல் எதிர்த்து நின்றான். மன்னவர் தலைவனே! அவன் யுத்தம் செய்ய வேண்டுமென்னும் விருப்பத்துடன் முன்னே வந்து வஜ்ராயுதத்தை ஏந்திக் கொண்டு நிற்கின்றவனும், தன் ப்ராதாவான (ஸஹோதரனான) விச்வரூபனை வதித்தவனும், தன் சத்ருவுமாகிய, இந்த்ரனைக் கண்டு அவன் செய்த பாபிஷ்டமான கொடுந்தொழிலையும் சோகத்தினால் நினைத்துப் பின்பு மோஹத்தினால் சிரித்து இங்கனம் மொழிந்தான். “என் சத்ருவாகிய நீ தெய்வாதீனமாய் என் முன்னே வந்து நின்றாய். நீ ப்ராஹ்மணனைக் கொன்றவனல்லவா? அதிலும் உனக்குக் குருவாகிய என் ப்ராதாவை (ஸஹோதரனான) வதித்தாய் (கொன்றாய்). அஸத்துக்களில் சிறந்தவனே! இரக்கமின்றிப் பாறைபோன்ற உன் ஹ்ருதயத்தை என் சூலத்தினால் பிளந்து இப்பொழுதே என் ப்ராதாவின் (ஸஹோதரனின்) கடனைத் தீர்த்துக் கொள்கிறேன். தெய்வாதீனமாய் நீ எனக்கு நேர்பட்டாய். என் ப்ராதாவான (ஸஹோதரனான) விச்வரூபன் ப்ராஹ்மணன்; ப்ரஹ்மவித்து; உனக்கு ஆசார்யன்; யாக தீக்ஷைக்கு உட்பட்டிருந்தவன். நீ அவனை நம்ப வைத்து, ஸ்வர்க்கத்தை விரும்பி யாகம் செய்பவன் யாக பசுவின் தலையை அறுப்பது போல், அறுத்தாய். இங்கனம் தகாத பாபிஷ்ட கார்யம் செய்தமையால் வெட்கம், செல்வம், பயம், புகழ் இவைகளெல்லாம் உன்னைத் துறந்தன. நீ செய்த பாபகர்மத்தினால் புருஷர்களைப் பிடுங்கித் தின்னும் தன்மையுள்ள பிசாசங்களாலும் நிந்திக்கத் தகுந்தவனாயிருக்கின்றாய். இப்பொழுது நான் உன் தேஹத்தை என் சூலத்தினால் பிளக்கையில் அக்னி ஸம்ஸ்காரம் செய்யப் பெறாத அத்தேஹத்தைக் கழுகுகள் தின்னப்போகின்றன. தேவதைகள் மதி கெட்டுக் கொடுந்தொழிலனான உன்னைத் தொடர்ந்து இந்த யுத்தத்தில் ஆயுதங்களை ஏந்தி என்னை அடிப்பார்களாயின், கூரான என் சூலத்தினால் அவர்களது கண்டங்களைச் சேதித்து (அறுத்து) அந்த ரக்தங்களால் பூதநாதர்களையும் அவர்களுடைய பரிவாரங்களையும் ஆராதிக்கிறேன். அல்லது, ஒ தேவேந்தரனே! வீர! இந்த யுத்தத்தில் நீயே என் தலையை வஜ்ராயுதத்தினால் அறுப்பாயாயின், என் தேஹத்தினால் பூதங்களுக்குப் பலி கொடுத்துக் கர்மபந்தங்களை எல்லாம் துறந்து, ஆழ்ந்த மனமுடைய ஞானிகளின் பாத தூளியால் பரிசுத்தமான கதியைப் பெறுகிறேன்.

ஓ தேவேந்தரனே! உன் சத்ருவாகிய நான் உன்னெதிரில் நின்று கொண்டிருக்கையில், தடைபடாத உன் வஜ்ராயுதத்தை ஏன் ப்ரயோகிக்காதிருக்கின்றனை? “முன் ப்ரயோகித்த கதை, லோபியிடத்தில் (கஞ்சனிடத்தில்) செய்த யாசனை (பிச்சை) போல் வீணாய்விட்டதே. அங்கனம் இதுவும் வீணாய்விடுமோ” என்று ஸந்தேஹிக்க வேண்டாம். இந்த வஜ்ராயுதம் அதைப்போல் வீணாகாது. ஓ இந்த்ரா! உன் வஜ்ராயுதம் பகவானுடைய தேஜஸ்ஸினாலும் ததீச மஹர்ஷியின் தவத்தினாலும் தீக்ஷ்ணமாயிருக்கின்றது. ஸ்ரீவிஷ்ணுவும் உனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். ஆகையால் அந்த வஜ்ராயுதத்தினால் உன் சத்ருவாகிய என்னை வதிப்பாயாக. பகவான் எந்தப் பக்ஷத்தில் இருக்கிறானோ அதே பக்ஷத்தில் தான் ராஜ்ய ஸம்பத்து, ஜயம், ப்ரபுத்வம் முதலிய குணங்கள் உண்டாகும். நான் அசுரனாயினும் நரகத்திற்குப் போகமாட்டேன். ஸங்கர்ஷண பகவான் சொன்னபடி அவனுடைய பாதார விந்தங்களில் மனத்தை நிலைநிறுத்தி, நீ வேகத்துடன் ப்ரயோகித்த உன் வஜ்ராயுதத்தினால் க்ராம்யங்களான சப்தாதி விஷயங்களில் விருப்பமாகிற பாசமும் அறுப்புண்டு, ஸ்வர்க்காதி லோகங்களையெல்லாம் கடந்து, முனிவர்களின் கதியான மோக்ஷத்தையே பெறப்போகிறேன். எங்கள் ப்ரபுவாகிய ஸங்கர்ஷண பகவான், வேறு ப்ரயோஜனங்களை விரும்பாமல் தன்னிடத்தில் பக்தி செய்யும் புருஷர்களுக்கு ஸ்வர்க்காதி, லோகங்களிலும், பூமியிலும், அதலாதி லோகங்களிலும் உள்ள ஐச்வர்யங்களைக் கொடுக்கமாட்டான். ஏனென்றால், அவ்வைச்வர்யங்கள் த்வேஷம் (வெறுப்பு), பயம், மனோவ்யாதி, மதம் (கர்வம்), கலஹம் (சண்டை), வயஸனம் (கஷ்டம்),  ப்ரயாஸம் (வருத்திச் செய்யும் செயல்) முதலியவற்றைத் தவறாமல் உண்டாக்குகின்றன அல்லவா? எங்கள் ப்ரபுவாகிய ஸங்கர்ஷண பகவான் தன் பக்தர்களுக்கு தர்ம, அர்த்த, காமங்களைப் பற்றின ஆயாஸங்களைத் (மனச்சோர்வுடன் கூடிய முயற்சிகளைத்) தடுத்து மோக்ஷத்தையே கொடுப்பான். எவனுக்கு அற்பங்களும் (அளவுடையவையும்), அஸ்திரங்களுமான (நீடித்து இருக்காதவையுமான), தர்மார்த்த கர்மங்களைப்பற்றின ப்ரயாஸங்கள் (வருத்திச் செய்யும் செயல்கள்) நீங்குகின்றனவோ, அவனிடத்தில் பகவானுடைய அனுக்ரஹம் உண்டென்பதை ஊஹிக்கலாம். அவன் தன்னையொழிய வேறு ப்ரயோஜனங்களை விரும்பாத ஏழையர்க்கே அருள்புரிவான். சப்தாதி விஷயங்களை விரும்பி அவற்றிற்காகப் பணிகிற உன்னைப் போன்றவர்களுக்கு அவனருள் கிடைப்பது அரிது. 

ஓ, பகவானே! நான் உன் பாதமூலத்தையே அவலம்பமாகப் (ஆதாரமாகப்) பற்றின உன் தாஸர்களுக்குத் தாஸனாகவே மீளவும் பிறப்பேனாக. என் மனம் என் ப்ராண நாதனாகிய உனது குணங்களையே நினைக்குமாக. என் வாக்கும் அவற்றையே கீர்த்தனம் செய்யுமாக. என் சரீரம் உனது ஆராதன ரூபமான கர்மத்தைச் செய்யுமாக. ஸமஸ்த ஸௌபாக்யங்களுக்கும் நிதி போன்றவனே! நான் உனக்குத் தாஸனாயிருப்பதைத் தவிர ஸமஸ்த பூமண்டலத்திற்கும் ப்ரபுவாயிருக்கும் ஐச்வர்யத்தையாவது, பாதாளம் முதலிய லோகங்களின் ஆதிபத்யத்தையாவது (ஆளுமையையாவது), அணிமாதி யோக ஸித்திகளையாவது, ப்ரஹ்மாவின் ஐச்வர்யத்தையாவது, கைவல்யமென்கிற ஆத்மானுபவத்தையாவது, வைகுண்ட லோகத்தையாவது விரும்பமாட்டேன். தாமரைக் கண்ணனே! இறகு முளைக்கப்பெறாத பறவைக்குட்டிகள் தாயைப் பார்க்க ஆவலுடன் இருப்பது போன்றும், பசியினால் வருந்தின சிறு கன்றுகள் / குழந்தைகள் தாய்ப்பாலை வேண்டி இருப்பது போன்றும், தேசாந்தரம் (வேறு இடத்திற்குச்) சென்ற கனவனைக் / காதலனைக் காண விரும்பும் மனைவி / காதலி போலவும், என் மனம் உன்னையே பார்க்க வேண்டுமென்று விரும்புகின்றது. நான் உன் மாயையினால் சரீரம், பிள்ளை, பெண்டிர், வீடு முதலியவற்றில் மனம் சென்று என் கர்மங்களால் ஸம்ஸார சக்ரத்தில் சுழன்று கொண்டிருப்பினும், எனக்கு உத்தம ச்லோகனான உன் பக்தர்களிடத்தில் ஸ்நேஹம் உண்டாகுமாக. அந்தச் சரீரம் முதலியவற்றில் எனக்கு மனப்பற்று நேராதிருக்குமாக. இங்ஙனம் நீ அருள் புரிய வேண்டும்”. 

பதினொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக