காத்திருப்பான் கமலக்கண்ணன்
சோவென்று இடைவிடாத பெருமழை பெய்துகொண்டிருந்தது. பிரளயம் வந்துவிடும்போல் தோன்றியது. கோகுலத்திலிருந்த அத்தனை யாதவர்களும் கோவர்த்தன கிரியின் கீழ் வந்து நின்று கொண்டிருந்தார்கள்.
ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறதே! வானத் துணியில் கிழிசல் ஏற்பட்டு விட்டதா? ஆனால், கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததைப் பற்றி யாதவர்கள் யாரும் கவலைப் படவில்லை.
அவர்களைக் காக்கத்தான் கண்ணன் இருக்கிறானே! ஒற்றை ஆள்காட்டி விரலால் மலையைத் தூக்கியவாறு நின்று கொண்டிருந்தான் கண்ணன். சக்கரத்தை ஏந்தும் கரம் இப்போது மலையைத் தாங்கிக் கொண்டிருந்தது. அவன் முகத்தில் எப்போதும் போல் இனிய புன்முறுவல்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஆடுமாடுகள் என மலையின் கீழ் ஒதுங்கிய கூட்டம் ஆனந்தமாய் மழையை ரசித்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த கோவர்த்தனகிரி தனக்குள் நகைத்துக் கொண்டது! அதன் நகைப்பை உணர்ந்த கண்ணன் மலையிடம் மானசீகமாகப் பேசலானான்:
"என்ன சிரிப்பு? என் விரல் வலிக்குமே என்று உனக்குக் கவலையாக இல்லையா?''
"வலியா? உனக்கா? உலகம் முழுவதும் தாங்குபவன் நீ. வராக அவதாரத்தில் பூமி முழுவதையுமே தாங்கி கடலிலிருந்து மேலே கொண்டுவந்தவன் தானே நீ! உன்னை நம்பினால் உலகம் மேலே வரும் என்பதும் உண்மை தானே! உனக்கு வலிக்கக் கூடாது என்று நானே என்னை இயன்றவரை லேசாக்கிக் கொண்டுவிட்டேன். நான் நகைத்தது என் மன ஆனந்தத்தின் காரணமாக''.
"அப்படி என்ன ஆனந்தமோ? உன்னைச் சரண்புகுந்து உன் அருளின் நிழலில் ஒதுங்குபவர்களை முன் ஜென்மத்தில் செய்த முன்வினைப் பயன் என்கிற மழை ஒன்றும் செய்யாதே, அதன் நிரூபணம் தானோ இந்தக் காட்சி என்று நினைத்து மகிழ்ந்தேன்''.
"முன்ஜன்மம் பற்றிப் பேசுகிறாயே? இது துவாபரயுகம். போன திரேதாயுகத்தில் நீ யாராக இருந்தாய் என்ற நினைவு உனக்கு வந்ததா?'' கண்ணன் நகைத்தான்.
மலையின் மனத்தில் அதன் சென்ற பிறவி குறித்த சிந்தனைகள் ஓடின. சேதுபந்தனம் நிகழ்ந்த ராமாயண காலம். அனுமன் கடலோரத்தில் மலைகளைக் கொண்டு வந்து குவித்தான். பாலம் வேகவேகமாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வடக்கிலிருந்த பெரும் மலைத் தொடரிலிருந்து ஒவ்வொரு மலையாக எடுத்துச் சென்ற அனுமன், மலைக்கூட்டத்தின் இடையே இருந்த சுமேரு என்ற மலையையும் கடற்கரைக்குக் கொண்டுசெல்லக் கையிலெடுத்தான்.
அவன் அந்த மலையோடு தாவி, பாதி வழி வரும்போதுதான் தொலைவிலிருந்தே தெரிந்தது சேது பாலம் முற்றிலுமாகக் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என!
மலையை அப்படியே கீழே வைத்துவிட்டான். மலை தன்னை வைத்த இடத்தில் காலூன்றிக் கொண்டது. பின் அனுமனிடம் கேட்கலாயிற்று.
"இது என்ன நியாயம் பிரபோ? ராம சேவைக்குப் பயன்படுவேன் என நினைத்தேன். அது இயலாமல் போய்விட்டது. ராம சேவைக்குப் பயன்பட்ட என் உறவினர்களான மற்ற மலைகளிலிருந்தும் இப்போது பிரிக்கப்பட்டு விட்டேன். உறவுகளற்ற மலையாகி விட்டேன். எனக்கு என்ன கதி இனி? கடவுளின் சேவையில் பங்குகொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடையாதா?''
கண்கலங்கி மலை சொன்ன வார்த்தைகளைக் கேட்ட அனுமன் ஓடோடி வந்து ராமபிரானிடம் அவற்றைச் சொன்னான். ராமன் சொன்ன பதிலையும் ஓடிவந்து மலையிடம் சொல்லி ஆறுதல்படுத்தினான்.
"மலையே! இறைவனின் அடுத்த அவதாரம் வரை காத்திரு. காலம் கனியும்போது நீ கடவுளுக்குச் சேவை செய்வாய்!'' சொல்லிவிட்டு அனுமன் ஒரே தாவாகத் தாவி சேது அணைநோக்கிச் சென்றுவிட்டான்.
தாவியது அனுமன் மட்டுமா? காலமும் என்ன வேகமாகத் தாவிச் செல்கிறது! திரேதாயுகம் முடிந்து துவாபரயுகம் பிறந்துவிட்டதே! இதோ கண்ணனின் அருளால் யாதவ குலத்தைக் காக்கிறேனே! இதுதான் நான் இறைவனுக்குச் செய்யும் சேவையா! மலை நெகிழ்ச்சியுடன் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தது.
ஏழுநாள் மழைக்குப் பின் இந்திரன் வந்து கண்ணனைப் பணிந்தான்.
"எனக்குச் செய்து கொண்டிருந்த பூஜையை நிறுத்தி மலைக்குப் பூஜை செய்யுமாறு நீ சொன்னதைக் கண்டு பொறாமை கொண்டேன் கண்ணா! ஆணவத்தால் கோகுலத்தை அழிக்க மழை பொழிந்து பார்த்தேன். ஆனால், மூலப் பரம்பொருளான உன்னிடம் என் ஆணவம் செல்லாது என்பதை உணர்ந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடு! என் மனத்தில் தோன்றும் ஆணவத்தைப் போக்க நீ அருள்புரிவாயாக,'' என்று கண்ணனையே சரணடைந்தான்.
சரணடைந்தவர்களைக் காக்கும் பக்தவத்சலனான கண்ணன் இந்திரனை மன்னித்து அனுப்பி வைத்தான்.
மழை நின்றதும் யாதவர்கள் தங்கள் குடியிருப்புகளுக்குச் சென்றார்கள். மலையை மெல்லக் கீழே வைத்தான் கண்ணன். மலை கண்ணனைப் பணிந்தது.
"ஏழு நாள் உனக்குச் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது கண்ணா! உன் கருணையே கருணை!'' கண்ணன் குறும்பு கொப்பளிக்கக் கலகலவென நகைத்தான்:
"மலையே! எனக்கு நீ சேவை செய்தாயா? உன்னையல்லவா ஏழுநாள் நான் தூக்கிக் கொண்டிருந்தேன். நான் உனக்குச் சேவை செய்ததாக அல்லவா தோன்றுகிறது!''
"அபசாரம்! அபசாரம்!'' மலை தன் கன்னத்தில் போட்டுக் கொண்டது!
"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்கிறார்களே அடியார்கள்! உன் அருள் இருந்தால் தானே உன்னைப் பக்தி செய்யும் மனமே வாய்க்கும்! கிருஷ்ணா! சென்ற திரேதாயுகத்தில் உனக்குச் சேவை செய்யும் வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது. இந்த துவாபர யுகத்திலோ உனக்குச் செய்த சேவையை நீதான் எனக்குச் செய்ததாக மாற்றிச் சொல்கிறாய்."
"நீ வார்த்தைகளை மாற்றிப் பேசுவதில் வல்லவனான திருட்டுக் கண்ணனாயிற்றே! நீ எது சொன்னாலும் அதைக் கீதை என உலகம் ஏற்கும். நல்லது. உன் அருளால் அடுத்துவரும் கலியுகத்திலாவது உனக்குச் சேவை செய்யும் வாய்ப்பை அருள்வாய்!"
கண்ணன் மலையையே கனிவுடன் பார்த்தான். தான் தூக்கி நின்ற ஏழு நாட்களும் மலை தன்னைத் தானே லேசாக்கிக் கொண்டதையும் எண்ணிப் பார்த்தான். பின் புன்முறுவலுடன் அதன் வேண்டுகோளுக்கு இணங்கி அருள் புரிந்தான்.
"மலையே! உன்னை துவாபர யுகத்தில் ஏழு நாள் நான் தாங்கினேன். அதற்கு பதிலாக, கலியுகத்தில் ஏழு மலையாக நீ என்னைத் தாங்குவாயாக. நான் ஸ்ரீனிவாசனாக உன்மேல் கோயில் கொள்வேன். மலையப்பனாக மக்கள் என்னை வணங்குவார்கள். என் திருமார்பில் உறையும் லட்சுமியின் கடாட்சம் மக்களுக்குப் பொங்கும். அதற்கு நன்றிக்கடனாக என்னைத் தேடிவந்து மக்கள் பொன்னையும் பொருளையும் வாரி வாரிக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். உன் மேல் இருக்கும் எனது திருக்கோயில் திருப்பதி என்ற பெயரில் மலையளவு செல்வம் பெற்று உயரும். மக்கள் உன்மேல் உறையும் என்மேல் பக்தி செலுத்தி, பிறர் மலைக்கத்தக்க வகையில் மலையளவு சாதனைகளை நிகழ்த்துவார்கள்".
கண்ணனது அருளுரையைக் கேட்ட மலை அவனை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கியது.
"ஒரு மலையாக இருக்கும் நான் ஏழு மலையாகப் போவதும் உன் கருணையல்லவா? உன் கருணையால் ஒருவர் பலமடங்காய்ப் பயன்பெறுவார் என்பதற்கும் இதுவே விளக்கமல்லவா?'' நெகிழ்ச்சியில் மலையரசனின் விழிகளில் மழைநீர் கசிந்தது. கண்ணனின் தாமரைப் பூங்கரம் மலையரசனை ஆசீர்வதித்தது.
நன்றி - தினமலர் மே 2012