செவ்வாய், 30 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 146

ஆறாவது ஸ்கந்தம் – பன்னிரண்டாவது அத்தியாயம்

(இந்த்ரனுக்கும் வ்ருத்ராஸுரனுக்கும்  ஸம்பாஷணமும், இந்திரன் வருந்தி வ்ருத்ராஸுரனை வதித்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரீக்ஷித்து மன்னவனே! தன் சரீரத்தைத் துறக்க விரும்பி, யுத்தத்தில் ஜயத்தைக் காட்டிலும் மரணத்தையே மேலாக நினைத்திருக்கின்ற அந்த வருத்ராஸுரன் இங்கனம் பகவானைத் துதித்துச் சூலத்தை ஏந்திக்கொண்டு, ப்ரளய ஜலத்தில் கைடபனென்னும் அஸுரன் பரமபுருஷனை எதிர்த்தாற்போல், இந்த்ரன் மேல் எதிர்த்து வந்தான். வீரனாகிய அந்த அஸுரேந்தரன், ப்ரளய காலாக்னி போலப் பொறுக்க முடியாமல், ஜ்வலிக்கின்ற நுனிகளையுடைய சூலத்தைச் சுழற்றிக் கோபத்துடன் இந்திரன் மேல் எறிந்து ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை) செய்து, “பாபிஷ்டனே! மாண்டு போவாய்” என்றான். பிறகு, வஜ்ராயுதத்தை ஏந்திக்கொண்டிருக்கும் தேவேந்திரன் ஆகாயத்தில் சுழன்று கொண்டு, ஸூர்யன் போலவும் நெருப்புத் தணல்கள் போலவும், கண்ணெடுத்துப் பார்க்க முடியாமல் எதிர்த்து வருகின்ற சூலத்தைக் கண்டு சிறிதும் தளர்ச்சியோ, பயமோ இன்றி நூறு கணுக்களையுடைய தன் வஜ்ராயுதத்தினால் அச்சூலத்தையும் வாஸுகியின் உடல் போன்ற அவனது புஜத்தையும் எல்லோரும் ஆச்சரியப்படும்படி அறுத்தான். பிறகு, வ்ருத்ராஸுரன் ஒரு புஜம் அறுப்புண்டு மிகவும் கோபமுற்று வஜ்ராயுதத்தை ஏந்தின இந்த்ரனைக் கிட்டிப் பரிகத்தினால் (இரும்புத் தடியால்) அவ்விந்தரனைக் கன்னத்தில் அடித்துத் தேவலோகத்து யானையான ஐராவதத்தையும் அடித்தான். அங்கனம் அடியுண்ட இந்த்ரனுடைய ஹஸ்தத்தினின்று (கையிலிருந்து) வஜ்ராயுதம் கீழ் விழுந்தது. கூட்டம் கூட்டமாயிருக்கிற தேவதைகள், அஸுரர்கள், சாரணர்கள், சித்தர்கள் அனைவரும் அவ்வஸுரன் செய்த அற்புதமான செயலைக் கண்டு வெகுமதித்தார்கள். மற்றும், அவர்கள் இந்திரனுக்கு நேர்ந்த ஸங்கடத்தைக் கண்டு, ஆ! ஆ! என்று மிகவும் இறைச்சலிட்டார்கள். அப்பொழுது, தேவேந்திரன் சத்ருவின் எதிரில் தன் கையினின்று வஜ்ராயுதம் நழுவினதற்கு லஜ்ஜித்து (வெட்கப்பட்டு), மீளவும் அதை எடுக்காதிருந்தான். அங்கனம் வஜ்ராயுதத்தை எடுக்காதிருக்கின்ற இந்திரனைப் பார்த்து வ்ருத்ராஸுரன் மொழிந்தான். 

“தேவேந்த்ரனே! நீ மீளவும் வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு உன் சத்ருவாகிய என்னை வதிப்பாயாக. இது சோகிப்பதற்கு (வருந்துவதற்கு, துக்கப்படுவதற்கு) சமயமன்று. சத்ருக்களை வதிக்க விரும்பி யுத்தம் செய்பவர்களுக்கு எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் ஜயமே உண்டாகுமென்கிற நியதி இல்லை. உலகத்திலுள்ள ப்ராணிகள் அனைவரும் பரமபுருஷனுக்கு உட்பட்டவர்கள். அவன் உட்புகுந்து கர்மங்களுக்குத் தகுந்தபடி அனைத்தையும் நியமித்துக் கொண்டிருக்கிறான். தேச, கால, கர்மங்களுக்குத் தகுந்தபடி ஸுக, துக்காதி பலன்களை அனுபவிக்கும் பொருட்டு ஜயம் (வெற்றி), அபஜயம் (தோல்வி) முதலியவற்றை ஈச்வரன் நடத்துகிறான். ஆகையால், தெய்வாதீனமாய் நேருகிற அபஜயாதிகளைப் (தோல்விகளைப்) பற்றி லஜ்ஜையையாவது (வெட்கத்தையாவது), சோகத்தையாவது (வருத்தத்தையாவது) ஏற்றுக்கொள்ளலாகாது. பரம புருஷனொருவனுக்கு மாத்ரமே ஸர்வதேச (எல்லா இடங்களிலும்), ஸர்வகால (எல்லா ஸமயங்களிலும்), ஸர்வாவஸ்தைகளிலும் (எல்லா நிலைகளிலும்) ஜயமே உண்டாகுமன்றி மற்றவர்களுக்கு அந்த நியதி கிடையாது. அவன் ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல் ஆகியவற்றை) நடத்தும் ப்ரபு; எல்லாமறிந்தவன்; ஆதிபுருஷன்; என்றும் அழியாதவன். ப்ரஹ்மதேவன் முதலிய லோகபாலர்களோடு கூடின இவ்வுலகங்களெல்லாம் கயிற்றால் கட்டுண்ட பறவைகள் போல் தங்கள் வசம் அன்றி அந்தப் பரமபுருஷனுடைய ஸங்கல்பத்தின்படி ஜீவிக்கின்றன. அவனே காலஸ்வரூபனாகி இவவுலகத்தில் ஜயம் (வெற்றி), அபஜயம் (தோல்வி) முதலியவற்றிற்குக் காரணமாயிருக்கிறான். செயல்களில் முயற்சி கொள்ளுந்திறமை, வேகம், பலம், ஜீவனம், மோக்ஷம், ஸம்ஸாரம் ஆகிய இவற்றிற்கெல்லாம் அந்தப் பரமபுருஷனே காரணன். இவ்வுலகத்திலுள்ள ஜனங்கள் இதை அறியாமல் அவற்றிற்குத் தம்மையே காரணமாக நினைக்கின்றார்கள். ஆகையால், அவர்கள் ஒன்றுமறியாத மூடர்கள். மரத்தினால் செய்யப்பட்ட பொம்மையும் வலையில் அகப்பட்ட மிருகமும் புருஷனுக்கு உட்பட்டிருப்பது போல், ஸமஸ்த ப்ராணிகளும் பரமபுருஷனுக்கு உட்பட்டவைகள். ப்ரக்ருதி, மஹத்தத்வம், அஹங்காரம், ஆகாசம் முதலிய பஞ்சபூதங்கள், இந்த்ரியங்கள், அந்தக்கரணம் (மனது) இவையெல்லாம் இந்தப் பரமபுருஷனுடைய அனுக்ரஹமில்லாமல் ஸ்ருஷ்டிக்க வல்லவையாக மாட்டாது. அங்கனமே நான்முகன் முதலிய ஜீவாத்மாக்களும் அவனுடைய அனுக்ரஹமில்லாமல் ஸ்ருஷ்டிக்க வல்லவர்களாக மாட்டார்கள். 

ஜனங்கள் தாங்கள் பரமபுருஷனுக்கு உட்பட்டவர்கள் என்பதையும் அவனுடைய அனுக்ரஹத்தை ஒழியத் தங்களுக்குத் தனியே திறமையில்லையென்பதையும் அறியாமல் தங்களை ஈச்வரர்களாக நினைக்கிறார்கள். ஈச்வரன்,  ப்ருதிவி முதலிய பூதங்களில் உட்புகுந்து தேவன், மனுஷ்யன் முதலிய பூதங்களைப் படைக்கின்றான்; அவற்றைக் கொண்டே அவற்றை அழிக்கிறான். ஆயுள், செல்வம், புகழ், ஐச்வர்யம் மற்றும் பல விருப்பங்கள் இவையெல்லாம் கர்மானுகுணமாக அவ்வவற்றிற்குரிய காலங்களில் தாமே உண்டாகின்றன. மரணம், ஏழ்மை முதலியவற்றை நாம் விரும்பாதிருப்பினும் அவை தாமே உண்டாகின்றனவல்லவா? அதற்குக் காரணம் நம்முடைய கர்மமேயல்லவா? அங்கனமே மற்றவையும் உண்டாகுமென்பதில் ஸந்தேஹமில்லை. 

ஆகையால் கீர்த்தி (புகழ்), அபகீர்த்தி (பழி), ஜயம் (வெற்றி), அபஜயம் (தோல்வி), மரணம் (இறப்பு), ஜீவனம் (வாழ்வு) இவற்றில் எது நேரினும் அதற்காக ஸுகத்தையாவது துக்கத்தையாவது ஏற்றுக்கொள்ளலாகாது. எல்லாவற்றிலும் ஸமமாகவேயிருக்க வேண்டும். ஸத்வ, ரஜஸ் தமஸ்ஸுக்கள் ப்ரக்ருதியின் குணங்களேயன்றி ஆத்மாவின் குணங்களன்று. அந்த ஸத்வாதி குணங்களின் பரிணாமமான தேஹத்தில் இருக்கிற ஜீவன் கேவலம் ஸாக்ஷியே அன்றிச் செயல்களை செய்பவனன்றென்றும், அத்தன்மை ப்ரக்ருதியைச் சேர்ந்ததென்றும் நினைப்பவன் மீளவும்  ஸம்ஸார பந்தத்தை  அடையமாட்டான். இந்த விஷயத்தில், நீ என்னையே த்ருஷ்டாந்தமாகக் (உதாரணமாகக்) காணலாம். நீ என் சூலாயுதத்தையும், என் புஜத்தையும் அறுத்தாய். நான் உன்னிடத்தில் தோற்றேன். ஆயினும், உன் ப்ராணன்களைப் பறிக்க விரும்பி மீளவும் சக்தியுள்ளவளவு ப்ரயத்னம் (முயற்சி) செய்கிறேன். யுத்தமென்பது சூதாட்டம் போன்றது. ப்ராணன்களே இதற்குப் பந்தயம். யானை, குதிரை, தேர் முதலியவை ஆட்டக்காய்கள். பாணங்களே பாய்ச்சிகைகள். இதில் எவனுக்கு ஜயம் (வெற்றி)? எவனுக்குப் பராஜயம் (தோல்வி)?" என்பது தெரியாது. நான் உலகத்திலுள்ள நிலைமையைச் சொன்னேன். ஆயினும் உனக்குப் பகவான் ஸஹாயமாய் இருக்கின்றானாகையால் உனக்கே ஜயமென்பது நிச்சயம்” என்றான். 

இந்திரன், வ்ருத்ராஸுரன் மொழிந்த சூது, வஞ்சனையற்ற வசனத்தைக் கேட்டு, அவனை வெகுமதித்து வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு ஞானிகளுக்கு இந்நிலைமை உண்டாவது ஆச்சர்யமன்றென்று வியப்பின்றிச் சிரித்துக்கொண்டே அவனைக் குறித்து மேல் வருமாறு கூறினான். 

''ஓ, அஸுரனே! நீ ஸித்தனாயிருக்கின்றாய். உனக்கு இத்தகைய மதி (புத்தி) உண்டாயிருக்கிறதல்லவா? நீ ஜகதீச்வரனும் ஸர்வாந்தராத்மாவும், நண்பனுமாகிய பகவானையே எல்லாவிதத்தாலும் பணிந்திருக்கின்றாய். நீ அஸுரர்களின் தன்மையைத் துறந்து, ஸத்வம் தலையெடுத்த பெரியோர்களின் ப்ரக்ருதியை பெற்றனையாகையால், ஜனங்களையெல்லாம் மதிமயக்கும்படியான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மாயையைக் கடந்தாய். ரஜோ குணத்தையே இயற்கையாகவுடைய உனக்கு ஸர்வாந்தராத்மாவும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய வாஸுதேவனிடத்தில் மாறாத பக்தி உண்டாயிற்று. இது பெரிய ஆச்சர்யமல்லவா? பகவான் தன்னைப் பற்றினவர்களுக்கு ஸம்ஸார பந்தத்தைப் போக்கிச் சிறந்த நன்மையான மோக்ஷத்தைக் கொடுப்பவன்; அம்ருத ஸாகரம் போன்று நித்யானந்தமயனாயிருப்பவன். அத்தகைய பகவானிடத்தில் பக்தி உண்டாகப்பெற்று, அவனிடத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் புருஷனுக்குக் குட்டைகள் போன்ற ஐச்வர்யம், கைவல்யம் முதலிய மற்ற அற்ப ஸுகங்களால் என்னாக வேண்டும்?” என்றான். யுத்தம் செய்பவர்களில் சிறந்த இந்த்ரன் வ்ருத்ரன் இவ்விருவரும் பகவத் தர்ம விசாரத்தை முன்னிட்டு ஒருவரோடொருவர் பேசிக் கொண்டே சண்டை செய்தார்கள்.

ராஜனே! சத்ருக்களை அழிக்கவல்ல வ்ருத்ராஸுரன் சிறந்த எக்கினால் (உருக்கு இரும்பினால் steel) செய்யப்பட்டதும் பயங்கரமுமாகிய இரும்புத் தடியை இடக்கையால் சுழற்றி இந்திரன் மேல் எறிந்தான். அவ்விந்த்ரன், யானையின் துதிக்கை போன்ற அவ்விரும்புத் தடியையும் அவனது இடக்கையையும் வஜ்ராயுதத்தினால் ஒரே தடவையில் சேதித்தான். இரண்டு கைகளும் அடியோடு அறுக்கப்பெற்று அவ்வஸுரன், இந்த்ரனால் இரண்டு சிறைகளும் சோதிக்கப்பெற்று, ஆகாயத்தினின்று பூமியில் விழுந்து அடியுண்ட பர்வதம் போல் ப்ரகாசித்தான். அவன் மிகவும் உயர்ந்த பெரிய சரீரமுடையவன். மஹாபலிஷ்டன், மஹா ப்ரபாவமுடையவன். அவன் நடக்கும்பொழுது, பூமியெல்லாம் சூர்ணமாய் விடும். அவன் கீழுதட்டைப் பூமியிலும், மேலுதட்டை ஆகாயத்திலும் வைத்து ஆகாயம் போலாழ்ந்த வாயைத் திறந்து ஸர்ப்பம் போல் பயங்கரமான நாக்கை நீட்டி யமன் போன்ற கோரைப் பற்களால் மூன்று லோகங்களையும் விழுங்குகிறவன் போன்று, பலத்தினால் பர்வதங்களையெல்லாம் நடுங்கச் செய்துகொண்டு பாதங்களால் நடந்துவரும் பர்வதம் போல நடந்து வந்து இந்தரனையும் அவனது வாஹனத்தையும் விழுங்கினான். 

ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகளும் மஹர்ஷிகளும் இந்தரனை வருத்ராஸுரன் விழுங்கினது கண்டு சிந்தையுற்று “ஆ! ஆ!” என்று இறைச்சலிட்டனர். இந்திரன் அவ்வஸுர ச்ரேஷ்டனால் விழுங்கப்பெற்றும் மரணம் அடையவில்லை. அவனது வயிற்றில் சென்றும், பரமபுருஷனை அணைந்திருக்கிற நாராயணகவசம் தரித்தவனாகையால் அந்நாராயணனுடைய மாயா பலத்தினால் வளர்ந்து வருகின்ற தன்னுடைய யோகமாயா பலத்தினால் பாதுகாக்கப்பட்டு ஜீவித்திருந்தான். பலாஸுரனை வென்ற அத்தேவேந்திரன் ஸமர்த்தனாகையால் வஜ்ராயுதத்தினால் வ்ருத்ராஸுரனுடைய வயிற்றைப் பிளந்து அதினின்று வெளிவந்து சத்ருவாகிய அந்த வ்ருத்ராஸுரனுடைய பர்வதத்தின் சிகரத்தைப் போன்ற தலையை அறுத்தான். கூரான நுனியுடைய வஜ்ராயுதம் நாற்புறத்திலும் சுழன்று அவ்வஸுரனுடைய கழுத்தை அறுக்கும் பொழுது ஒரு ஸம்வத்ஸரம் (வருடம்) ஆயிற்று. ஸம்வத்ஸரம் முன்னூற்றறுபது நாட்களும் வஜ்ராயுதத்திற்கு அதுவே கார்யமாயிருந்தது. அங்கனம் அவ்வஸுரன் தலையை அறுத்தபின்பு ஆகாயத்தில் துந்துபி வாத்யங்கள் முழங்கின. அப்பொழுது மஹர்ஷிகளும், கந்தர்வர்களும், ஸித்தர்களும் கூட்டங்கூட்டமாய் நின்று வ்ருத்ராஸுரனைக் கொன்ற வீர்யத்தை அறிவிக்கிற மந்த்ரங்களால் துதி செய்துகொண்டே இந்த்ரன் மேல் ஸந்தோஷத்துடன் புஷ்ப வர்ஷங்களைப் பெய்தார்கள். 

சத்ருக்களை அழிப்பவனே! வ்ருத்ராஸுரனுடைய தேஹத்தினின்று வெளிக்கிளம்பின ஸ்வயம் ப்ரகாசனான ஜீவாத்மா, ஸமஸ்தலோகங்களும் பார்த்துக் கொண்டிருக்கையில் ப்ராக்ருத லோகங்களைக்காட்டிலும் விலக்ஷணமான வைகுண்டலோகத்தை அடைந்தது. 

பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக