ஶ்ரீமத் பாகவதம் - 264

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தெட்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் த்ரிவக்ரையின் க்ருஹத்திற்கும், அக்ரூரனுடைய மாளிகைக்கும் போய், அவர்களை அனுக்ரஹித்து, அக்ரூரனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்புதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அனந்தரம் (பிறகு), ஸர்வாந்தராத்மாவும், எல்லாவற்றையும் ஒரே ஸமயத்தில் ஸாக்ஷாத்கரிப்பவனுமாகிய பகவான், த்ரிவக்ரையென்னும் ஸைரந்த்ரி (அந்தப்புர பணிப்பெண்), அக்ரூரன் இவர்களுக்குத் தான் வருகிறேனென்று சொன்னதையும், அவர்களுடைய அபிப்ராயத்தையும் ஆராய்ந்து காம விகாரத்தினால் (காதல் கிளர்ச்சியால்) தபிக்கப்பட்ட (எரிக்கப்பட்ட) ஸைரந்த்ரிக்கு (அந்தப்புர பணிப்பெண்ணிற்கு) ப்ரியம் செய்ய விரும்பி, அவளுடைய க்ருஹத்திற்குச் சென்றான். அங்கு, வீட்டிற்கு வேண்டிய உபகரணங்கள் பலவும் விலையுயர்ந்து நிறைக்கப்பட்டிருந்தன. காம போகத்திற்கு (காதல் ஆசை அனுபவிக்க) வேண்டிய கருவிகள் பலவும் ஸம்ருத்தமாயிருந்தன (நிறைந்திருந்தன). மற்றும், அந்த க்ருஹம், முத்துமாலைகளாலும், த்வஜங்களாலும் (கொடிகளாலும்), மேற்கட்டுகள், படுக்கைகள், ஆஸனங்கள் இவைகளாலும், நல்ல மணமுள்ள தூபங்களாலும், அத்தகைய தீபங்களாலும், அத்தகைய பூமாலைகளாலும், கந்தங்களாலும் (வாசனை பொருட்களாலும்) பலவர்ணங்களால் எழுதப்பட்டு மிகவும் அழகாயிருப்பவைகளும், காம சாஸ்த்ரத்தில் (ஆண் பெண் உறவு பற்றிய சாஸ்த்ரத்தில்) நிரூபிக்கப்பட்டவைகளுமாகிய பலவகைச் சித்ரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

ஸ்ரீக்ருஷ்ணன், இத்தகையதான தன் மாளிகையைக் குறித்து வருவதைக் கண்டு, அந்த ஸைரந்த்ரி (அந்தப்புர பணிப்பெண்) மிகவும் பரபரப்புற்று, அப்பொழுதே ஆஸனத்தினின்று எழுந்து, ஸகிகளுடன் (தோழிகளுடன்) அவ்வச்சுதனை உரியபடி எதிர்கொண்டு, சிறந்த ஆஸனம் முதலிய உபசாரங்களால் பூஜித்தாள். பிறகு, உத்தவன் அந்த ஸைரந்த்ரியால் நன்றாகப் பூஜிக்கப்பட்டு, அவள் தனக்காகக் கொடுத்த ஆஸனத்தை ஸ்பர்சித்து (தொட்டு), வெறுந்தரையிலேயே உட்கார்ந்தான். ஸ்ரீக்ருஷ்ணனோ வென்றால், காமக் கலவியில் (காதல் சேர்த்தியில்) ஆழ்ந்த மனமுடைய உலகத்தவர்களின் நடத்தையை அனுஸரித்து, புதியதும், விலையுயர்ந்ததுமாகிய படுக்கையின் மேல் ஏறி உட்கார்ந்தான். 

அந்த ஸைரந்த்ரி (அந்தப்புர பணிப்பெண்), எண்ணெய் தேய்த்து, அரைப்பு முதலியன பூசி, ஸ்நானம் செய்து, வெண்பட்டாடை உடுத்து, ஆபரணங்களை அணிந்து, பூமாலைகள் சூட்டி, சந்தனம், குங்குமம் முதலிய கந்தங்கள் (வாசனைப் பொருள்) பூசித் தாம்பூலம் (வெற்றிலை பாக்கு), ஆஸவம் (திராட்சை ரஸம்) இவற்றால் வாய் மணக்க, அம்ருதம் போன்ற மேலான மத்யபானம் செய்து (கள் அருந்தி), மற்றும் பலவகைகளாலும் தன் தேஹத்தை அலங்கரித்துக் கொண்டு, வெட்கம் நிறைந்த மந்த ஹாஸம் (புன்னகை) அமைந்த விலாஸங்களோடு (விளையாட்டோடு) கூடிய, கண்ணோக்கங்களோடு கூடி ஸ்ரீக்ருஷ்ணனிடம் சென்றாள். புதிய கலவி (சேர்த்தி) ஆகையால் வெட்கமுற்று, சங்கித்து நிற்கின்ற அப்பெண்மணியை அழைத்து, வளையினால் அலங்கரிக்கப்பட்ட கையைப் பிடித்து, படுக்கையின் மேல் உட்கார வைத்துக் கொண்டு, சந்தனம் கொடுத்தமையாகிற சிறிது புண்யம் செய்த அப்பெண்மணியுடன் க்ரீடித்தான் (இன்புற்றான்).  

அந்த ஸைரந்த்ரி (அந்தப்புரத்துப் பணிப்பெண்), ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களை மோந்து, காம வேதனையால் (காதல் கிளர்ச்சியால்) தபிக்கப்பட்ட (வருத்தம் அடைந்த) கொங்கைகளிலும், கண்களிலும், அப்பாதங்களை வைத்துக் கொண்டு, அவற்றின் நோய்களெல்லாம் தீரப்பெற்று, அன்பனும் ஆநந்தமே ஒரு வடிவம் கொண்டாற் போலிருப்பவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனைப் புஜங்களால் (கைகளால்) மார்பில் அமைத்தணைத்து, நெடுநாளாகத் தொடர்ந்து வந்த மன்மத தாபத்தைத் (காதல் வருத்தத்தைத்) துறந்தாள். அம்மடந்தை, மோக்ஷம் கொடுப்பவனும், யோகிகளுக்கும் கூட அடைய முடியாதவனும், ஸர்வேச்வரனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை, சந்தனம் கொடுத்த மாத்ரத்தினால், பெற்றனுபவித்து, பாக்யமற்றவளாகையால், இவ்வாறு வேண்டினாள். (மோக்ஷங் கொடுப்பவன் கைபுகுந்திருப்பினும், அற்பத்தை வேண்டினாளே; இதென்ன வருத்தம்?)

ஸைரந்த்ரி சொல்லுகிறாள்:- தாமரைக் கண்ணனே! உன்னுடைய கலவியைத் (சேர்த்தியைத்) துறக்க முடியாதிருக்கின்றேன். மிகுந்த அன்பனே! என்னுடன் சில நாள் இங்கு க்ரீடித்துக் கொண்டிருப்பாயாக. நீ இங்கேயே என் க்ருஹத்தில் வஸித்திருப்பாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு வேண்டுகிற அந்த ஸைரந்த்ரியை (அந்தப்புரத்துப் பணிப்பெண்ணை) இனிய உரை முதலியவற்றால் வெகுமதித்து, காமக் கலவியாகிற (காதல் சேர்த்தியாகிற) வரத்தைக் கொடுத்து (உன்னிஷ்டப்படி நடத்த மறுபடியும் வருகிறேனென்று மொழிந்து) வெகுமதியளிக்கும் தன்மையனும், ஸர்வேச்சவரனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், உத்தவனுடன் அவளுடைய க்ருஹத்தினின்று புறப்பட்டு, ஸமஸ்த ஸம்பத்துக்களும் நிறைந்த தன் க்ருஹத்திற்குப் போனான். நீயே என்னைக் காக்கவேண்டுமென்று அவனையே சரணம் அடைகையாகிற ப்ரபத்தியைத் (அவன் திருவடித் தாமரைகளில் செய்யும் சரணாகதியைத்) தவிர மற்ற எந்த உபாயங்களாலும் ஆராதிக்க முடியாதவனும், ஸர்வேச்வரனான ப்ரஹ்ம தேவனுக்கும் ஈச்வரனுமாகிய பகவானை, சந்தனம் கொடுத்த மாத்ரத்தினால் அருள் புரியும்படி ஆராதித்து, மனத்தினால் அறியக்கூடிய சப்தாதி விஷய ஸுகத்தை வேண்டினாளாகையால் இந்த ஸைரந்த்ரி (அந்தப்புரத்துப் பணிப்பெண்) அறிவில்லாதவள்; கெடுமதியினள்; பாக்யமற்றவள். 

அப்பால், ஸமர்த்தனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், பலராமனோடும், உத்தவனோடும் கூடி, அக்ரூரனைக் கொண்டு ஒரு கார்யம் செய்ய விரும்பியும், அவனுடைய மனோரதத்தை நிறைவேற்ற விரும்பியும், அவனுடைய மாளிகைக்குப் போனான். அவ்வக்ரூரன் மனுஷ்யர்களில் சிறப்புடையவர்களைக் காட்டிலும் ச்ரேஷ்டர்களும் (உயர்ந்தவர்களும்), தன் பந்துக்களுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், பலராமன், உத்தவன் இவர்களைத் தூரத்திலேயே கண்டு, எழுந்தெதிர் கொண்டு, மிகவும் ஸந்தோஷம் அடைந்து, ஆலிங்கனம் செய்து (அனைத்து), அபிநந்தித்தான் (வரவேற்று உபசரித்தான்). 

அவ்வக்ரூரன், ஸ்ரீக்ருஷ்ண, ராம, உத்தவர்கள் மூவரையும் நமஸ்கரித்து, தானும் அவர்களால் நமஸ்காரம் செய்யப் பெற்று, அவர்களுக்கு ஆஸனம் அளித்து, அதில் உட்கார்ந்திருக்கின்ற அவர்களை விதிப்படி பூஜித்தான். மன்னவனே! அவர்களுடைய பாதங்களை அலம்பின ஜலத்தைச் சிரத்தில் ப்ரோக்ஷித்துக் (தெளித்துக்) கொண்டு அர்க்யம் (விருந்தினவராக வந்தவர்கட்கு பருக நீர் தருதல், கால் கழுவ நீர் தருதல்) முதலியவற்றாலும், திவ்யமான ஆடைகளாலும், திவ்யமான சந்தனம், குங்குமம் முதலிய கந்தங்களாலும் (வாசனைப் பொருட்களாலும்), பூமாலைகளாலும், சிறந்த ஆபரணங்களாலும் பூஜித்து, பாதங்களை மடியில் இட்டு, சிரஸ்ஸினால் நமஸ்கரித்து, துடைத்துப் பிடித்துக்கொண்டே, விநயத்தினால் வணங்கி, ஸ்ரீக்ருஷ்ண, ராமர்களைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

அக்ரூரன் சொல்லுகிறான்:- பாபிஷ்டனாகிய (பாபியான) கம்ஸன், தன்னைச் சேர்ந்தவர்களுடன் உங்களால் கொல்லப்பட்டான். இது பெரிய ஸந்தோஷம். நீங்கள் இந்த யாதவ குலத்தை மஹத்தான வருத்தத்தினின்று உத்தரித்து (கரையேற்றி) நன்கு வளர்த்தீர்கள். நீங்கள் புருஷோத்தமர்கள்; ஜகத்திற்கெல்லாம் காரணமாயிருப்பவர்கள். இந்த ஜகத்தெல்லாம் நீங்களே. உங்களைத் தவிர மேன்மையுடைய வஸ்து மற்றொன்றும் இல்லை. நீங்கள் ஜகத்திலுள்ள ஒவ்வொரு வஸ்துவிலும் உட்புகுந்து, நியமித்துக் கொண்டிருக்கிறீர்களாகையால், உங்களைக் காட்டிலும் வேறுபட்ட வஸ்து எதுவுமே இல்லை. (ஜகத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) நீங்களே காரண பூதர்களாகையால், உங்கள் ஸங்கல்பத்தினால் கம்ஸனைக் கொன்றதும், தன் குலத்தை வாழ்வித்ததும், யுக்தமே (ஸரியே)). 

ஸ்வரூபத்திலும், குணங்களிலும் அளவற்றிருக்கையால் ப்ரஹ்மமென்று பெயர் பெற்றவனே! நீ உன் சக்தி போல் உன்னை விட்டுப் பிரியாதிருக்கின்ற ப்ரக்ருதி (ஜடப்பொருட்களின் மூலப்பொருளான மூலப்ரக்ருதி, பகவானின் ஆச்சர்ய சக்தி), புருஷ (ஜீவாத்மாக்கள்), காலங்களைச் சரீரமாகக் கொண்டு, உபாதான காரணமாகவும் (மண் குடத்திற்கு மண் போன்று material cause ஆகவும்), ப்ரக்ருதி புருஷர்களுக்கு நியாமகனாகி (நியமிப்பவனாய்) நிமித்த காரணமாகவும் (மண் குடத்திற்கு குயவன் போன்று efficient cause ஆகவும்) இருந்து, சேதனா சேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் படைத்து, அதற்குள் அந்தராத்மாவாய்ப் புகுந்து, நியமித்துக் கொண்டிருக்கின்றாயாகையால், தேவ, மனுஷ்யாதி நாமங்களுக்கெல்லாம் நீயே முக்யப் பொருளாகி, ஒருவனாயினும் பலவாகத் தோன்றுகின்றாய். 

வேதங்களும், வேதங்களில் ப்ரஸித்தர்களான வாமதேவாதி மஹர்ஷிகளும், உன்னை இவ்வாறே ஸாக்ஷாத்கரிக்கின்றனர் (நேராகப் பார்த்து அறிகின்றனர்). பூமி முதலிய மஹா பூதங்கள், தங்களை உபாதான காரணமாகவுடைய (மண் குடத்திற்கு மண் போன்று material causeஆக உடைய) ஜங்கம (அசையும்) ஸ்தாவரமான (அசையாத) வஸ்துக்களில் பலவாறு தோன்றுவது போல, நீ ஸ்ருஷ்டிக்கு முன்பு, நாம ரூபங்களுக்கு இடமில்லாத (பெயர், உருவம் இல்லாத) ப்ரக்ருதி (ஜடப்பொருட்களின் மூலப்பொருளான மூலப்ரக்ருதி, பகவானின் ஆச்சர்ய சக்தி), புருஷ (ஜீவாத்மாக்கள்), காலங்களைச் சரீரமாகவுடையவனாகி, ஒருவனாயிருப்பினும், அத்தகைய ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான ஸமஸ்த வஸ்துக்களிலும், அவற்றிற்குக் காரணமான மஹாபூதங்களிலும் பலவாறு தோன்றுகின்றாய். நீ, இந்த ப்ரபஞ்சத்திற்கெல்லாம் அந்தராத்மாவாயிருக்கின்றாய். ஒரு ஜீவனே, க்ரமத்தில் தேவ மனுஷ்யாதி அனேக சரீரங்களைப் பெற்று, வெவ்வேறாகத் தோற்றுவது போலவும், ஸௌபரி முதலியவர் ஒரே தடவையில் அனேக சரீரங்களை ஏற்றுக் கொண்டு பலவாறு தோன்றுவது போலவும், நீ ஸமஸ்த சேதனா சேதனங்களுக்கும் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களுக்கும்) அந்தராத்மாவாகி, அவ்வுருவங்களால் பலவாறு தோன்றுகின்றாய். ஆனால், ஜீவாத்மாவைப் போல நீ கர்மத்திற்கு உட்பட்டவனில்லை. உன் சக்திகளைப் போல், உன்னை விட்டுப் பிரியாதவைகளான ரஜஸ்ஸு, தமஸ்ஸு, ஸத்வம் என்னும் ப்ரக்ருதியின் குணங்களால் ஜகத்தைப் படைப்பதும், அழிப்பதும், காப்பதுமாயிருக்கின்றாய். 

ரஜோகுணம் தலையெடுத்த நான்முகனென்னும் ஜீவனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டிக்கின்றாய். தமோ குணம் தலை எடுத்த ருத்ரனென்னும் ஜீவனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸம்ஹரிக்கின்றாய் (அழிக்கின்றாய்). ஸத்வ குணத்தை நடத்துகிற நீ, நேரே அவதரித்து, ரக்ஷிக்கின்றாய். ஆயினும், அந்த ரஜஸ்ஸு முதலிய ப்ராக்ருத குணங்களாலும், அவற்றின் மூலமாய் வந்த ஸ்ருஷ்டி முதலிய வியாபாரங்களாலும் நீ தீண்டப் படுகிறதில்லை. நீ ஸத்வாதி குணங்களுக்கு உட்பட்டவனுமல்ல. நீ நடத்துகிற ஸ்ருஷ்டி முதலிய வ்யாபாரங்கள், புண்ய, பாப கர்மங்களைப் பற்றி வந்தவைகள் அல்லாமையால், ஸுக துக்காதிகளை அனுபவிக்கச் செய்யவல்ல கர்ம பந்தம் உனக்குக் கிடையாது. நீ ஞானஸ்வரூபன் (அறிவு வடிவானவன்). அந்த ஸ்வரூபம், என்றும் மறையாமல் தோன்றப் பெற்றவன். ஆகையால், நீ இயற்கையாகவே ஸமஸ்த தோஷங்களும் தீண்டப் பெறாதவன்; ஸமஸ்த கல்யாண குண ஸ்வரூபன். ஆகையால், உனக்குக் கர்ம பந்தம் உண்டாவதற்குப் ப்ரஸக்தியே (வாய்ப்பே) இல்லை. 

நீ தேவ மனுஷ்யாதி தேஹங்களை உன் போகத்திற்காக ஏற்றுக் கொள்கிறதில்லை. ஆகையால், ஜீவாத்மாக்களுக்கு அந்தராத்மாவாயிருக்கிற உனக்கு, ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரண (இறப்பு) ஆதி (முதலிய) ரூபமான ஸம்ஸாரம் நேரே கிடையாது. உன் சரீரமாகிய ஜீவாத்மாவுக்கே அது உள்ளது. “நரஸிம்ஹன் வெளுத்திருக்கிறான்” என்றால், அந்த வெண்மை தேஹத்தைச் (உடலைச்) சேருமேயன்றி, ஆத்மாவைச் சேராதல்லவா? அவ்வாறே, ஸம்ஸாரம் உன் சரீரமாகிய ஜீவாத்மாவைச் சேர்ந்ததேயன்றி, உனக்குக் கிடையாது. ஜீவன் புண்ய பாப கர்மங்களின் பயனான ஸுக, துக்காதிகளை அனுபவிக்கும் பொருட்டு, தேவ மனுஷ்யாதி சரீரங்களைப் பெறுகிறானாகையால், அவனுக்கு ஸம்ஸாரம் (உலகியல் வாழ்க்கை) உண்டு. நீ தேவ, மனுஷ்யாதி உருவங்களை விளையாட்டிற்காக ஏற்றுக் கொள்கின்றனையாகையால் உனக்கு ஸம்ஸாரம் (உலகியல் வாழ்க்கை) கிடையாது. ஸம்ஸாரம் (உலகியல் வாழ்க்கை) இல்லாமையால், அதற்குக் காரணமான கர்ம பந்தமும் (புன்ய, பாப வினைகளின் கட்டும்) கிடையாது. பந்தமில்லாமையால் மோக்ஷமும் கிடையாது. கட்டுண்டவனல்லவோ, விடுபடவேண்டும்? ஆகையால், ஸம்ஸார பந்த மோக்ஷங்களிரண்டும் உனக்குக் கிடையாது. 

நீ ராம, க்ருஷ்ணாதி ரூபனாய்ச் சரீரங்களை அங்கீகரிக்கினும், அவ்வுருவங்கள் உன் ஸங்கல்பத்தினால் ஏற்பட்டவைகளேயன்றி, புண்ய பாப கர்மங்களால் ஏற்பட்டவைகளன்று. ஆனால், “எல்லாரும் என்னை ஏன் அப்படி அறிகிறதில்லை?” என்னில், நாங்கள் ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையைப் பற்றின விவேகம் (பகுத்தறிவு) அற்றவர்களாகையால், உன்னுடைய உருவங்களும், ஜீவனுடைய உருவங்களோடு ஒத்தவைகளேயென்று ப்ரமிக்கிறோம். “நான் ராம, க்ருஷ்ணாதி உருவங்களை ஏற்றுக் கொள்வதற்கு ப்ரயோஜனம் என்?” என்னில், நீ உபதேசித்த பழையதான வேதங்களால் நிரூபிக்கப்பட்ட தர்ம மார்க்கம், அனர்த்தத்தை (கெடுதியை) விளைவிப்பவைகளும், விபரீதங்களுமான பாஷண்ட (வேதத்தில் சொல்லப்பட்ட நெறிமுறைகளுக்கு எதிரான) மார்க்கங்களால் (வழிகளால்) பாதிக்கப்பட்டு அழியும் பொழுதெல்லாம், நீ சுத்த ஸத்வ மயமான திருவுருவங்களைக் கொண்டு, அவதரிக்கின்றாய். 

திறமைகள் அமைந்தவனே! அவ்வாறு ராமாதி உருவங்களைக் கொண்டு அவதரித்த நீ, இப்பொழுது ஆஸுர ப்ரக்ருதிகளான (அசுரர்களான) கம்ஸாதி மன்னவர்களின் பற்பல அக்ஷெளஹிணி ஸைன்யங்களை (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷெளஹிணி படை எனப்படும்) வதித்து, பூமியின் பாரத்தை நீக்கும் பொருட்டும், இந்த யாதவ குலத்திற்குப் புகழை  நிரம்ப விளைக்கும் பொருட்டும்,  வஸுதேவனுடைய க்ருஹத்தில் தன்னுடைய அம்சமாகிய பலராமனுடன் அவதரித்தாய். ஸ்ரீக்ருஷ்ணா! நீ ப்ரஹ்ம, ருத்ராதி ஸமஸ்த தேவதைகளையும், பித்ருக்களையும், பூதங்களையும், மன்னவர்களையும் சரீரமாகவுடையவன். மற்றும், உன் பாதங்களை அலம்பின ஜலம், மூன்று லோகங்களையும் புனிதம் செய்கின்றது. நீ ஜகத்திற்கெல்லாம் குரு. இந்த்ரியங்களால் விளையும் அறிவுகளுக்கு விஷயமாகாதவனே! இத்தகைய நீ எழுந்தருளினாயாகையால், எங்கள் க்ருஹம் மிகுந்த பாக்யமுடையதாயிற்று. பண்டிதனாயிருப்பானாயின், எவன்தான் உன்னையொழிய மற்றவனைச் சரணம் அடைவான்? 

உன்னைத் துறந்து மற்றொருவனைச் சரணம் அடைகிறவன், மூர்க்கனே. நீ பக்தர்களிடத்தில் மிகுதியும் அன்புடையவன்; உண்மையே பேசுந்தன்மையன்: யாத்ருச்சிகம் (தற்செயலாக நடந்த நற்செயல்) முதலியவற்றையும் ஸுக்ருதங்களாக (நன்றாக செய்யப்பட்ட நற்செயல் என்று) நினைவிட்டு, ப்ராணிகளைப் பாதுகாப்பவன்; ஹிதத்தையே நடத்துபவன். நீ கம்ஸாதிகளை வதித்ததும், அவர்களுடைய நன்மைக்காகவேயன்றி, வேறில்லை. 

உன்னுடைய முக மலர்த்தியையே (ஸந்தோஷத்தையே) பயனாக விரும்பி, வர்ணாச்ரமங்களுக்குரிய தர்மங்களை அனுஷ்டித்துக்கொண்டு, ப்ரீதியுடன் உன்னைப் பணியும் புருஷனுக்கு, நீ அவன் வேண்டும் விருப்பங்களையெல்லாம் கொடுக்கின்றாய். விருப்பங்களைக் கொடுப்பது, உனக்கு ஒரு பொருளன்று. மஹாநந்த ஸ்வரூபனும் (உயர்ந்த இன்ப வடிவானவனும்), பரம புருஷார்த்த ஸ்வரூபனும் (சிறந்த அடையப்படக்கூடிய பொருளாயும்), வளர்தல், குறைதல் முதலிய விகாரங்களற்றவனுமாகிய தன்னையுங்கூட நீ அவனுக்குக் கொடுக்கின்றாய். (மோக்ஷங் கொடுக்கின்றாய்). ஜனார்த்தனா! (ஸர்வாந்தராத்மாவே!) ப்ரஹ்ம தேவன் முதலிய தேவச்ரேஷ்டராலும், யோகீச்வரர்களான ஸனகாதிகளாலும் அறிய முடியாத உண்மையுடைய நீ, இம்மனுஷ்ய லோகத்தில் ஒன்றுமறியாத மூடர்களான எங்களுக்கு இந்த க்ருஹத்தில் புலப்பட்டாயே; இது, எங்கள் பாக்யமே அல்லவா? உன் மாயையினால், பிள்ளை, பெண்டிர், பணம், நண்பர், க்ருஹம், தேஹம் முதலியவற்றிலுண்டான மோஹமாகிற பாசத்தைச் சீக்ரத்தில் அறுப்பாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு பக்தனாகிய அக்ரூரனால் பூஜித்துத் துகிக்கப்பட்ட மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அக்ரூரனை தன் சொற்களால் மதிமயங்க செய்பவன் போன்று புன்னகையுடன் மேல்வருமாறு மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- நீர் எங்களுக்கு என்றும் ஹிதஞ்செய்பவர்; தந்தையின் உடன் பிறந்தவர் (சிற்றப்பா); கம்ஸனைப் போலன்றிப் புகழத் தகுந்த பந்துவுமாயிருக்கின்றீர். நாங்களோவென்றால், உம்மால் பாதுகாக்கத் தகுந்தவர்களும், போஷிக்கத் தகுந்தவர்களும், தயை செய்யத் தகுந்தவர்களுமாயிருக்கின்றோம். நாங்கள் உம்முடைய பிள்ளைகளல்லவா! ஆகையால், உமக்கு நாங்கள் பூஜிக்கத் தகுந்தவர்களல்லோம். நீரே எங்களுக்குப் பூஜிக்கத் தகுந்தவர். உம்மைப் போன்ற பாகவதர்கள், மிகவும் மேன்மைக் கிடமானவர்கள்; நன்மையை விரும்பும் மனுஷ்யர்கள் அனைவராலும் நன்கு பணியத் தகுந்தவர்கள். 

இந்த்ராதி தேவதைகளன்றோ பணியத் தகுந்தவர்களென்னில், அவர்கள் கேவலம் தங்கள் ப்ரயோஜனத்தையே முக்யமாக எதிர்பார்ப்பவர்களன்றி, பரோபகாரம் செய்யும் (பிறர்க்கு உதவும்) தன்மையரல்லர். உம்மைப் போன்ற பாகவதர்களோவென்றால், தங்கள் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல், பரோபகாரம் செய்யும் (பிறர்க்கு உதவும்) தன்மையர்கள். ஆகையால், நீங்களே பணியத் தகுந்தவர்களன்றி, இந்த்ராதி தேவதைகள் பணியத் தகுந்தவர்களல்லர். கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களாவது, மண், சிலை (கல்) இவைகளால் இயற்றப்பட்ட தேவ ப்ரதிமைகளாவது (பொம்மைகளாவது) உங்களைப் போல் பணிகிறவர்களைப் புனிதம் செய்யமாட்டா. ஏனென்றால், அவை நெடுநாள் பணிவிடை கொண்ட பின்பு தான் புனிதம் செய்யும். 

பரோபகாரம் செய்யும் (பிறர்க்கு உதவும்) தன்மையுள்ள உம்மைப் போன்ற பாகவதர்களோவென்றால், கண்ட மாத்ரத்திலேயே புனிதம் செய்கிறார்கள். இத்தகைய நீங்கள் நன்மையை விரும்பும் பெரியோர்களுக்குள் மிகவும் மேன்மையுடையவர். ஆகையால், நீர் எங்களுக்கு நன்மையைச் செய்ய விரும்பி, பாண்டவர்களுடைய ஸுக, துக்கங்களை விசாரித்துக்கொண்டு வரும் பொருட்டு, ஹஸ்தினாபுரம் போய் வருவீராக. தந்தையாகிய பாண்டு ஸ்வர்க்கம் செல்லுகையில், பாலர்களாகிய அவனுடைய பிள்ளைகள், தாயுடன் மிகவும் வருந்தி, ராஜனாகிய த்ருதராஷ்ட்ரனால் தன் பட்டணத்திற்கு அழைத்துக் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கப்பட்டு, இப்பொழுது அங்கு வஸித்துக் கொண்டிருக்கிறார்களென்று கேள்விப்பட்டோம். ராஜனாகிய திருதராஷ்ட்ரன் துர்ப்புத்தியுடைய பிள்ளைக்கு உட்பட்டு, அவிவேகமுற்று, தன் ப்ராதாவின் பிள்ளைகளான பாண்டவர்களிடத்தில் ஸமநோக்குடன் நடந்து கொள்வதில்லை என நினைக்கிறேன். இது நிச்சயம். ஆகையால், நீர் போய் இப்பொழுது அந்த த்ருதராஷ்ட்ரன் பாண்டவர்களிடத்தில் சரியாக நடக்கிறானா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டு வருவீராக! அதைத் தெரிந்து கொண்டு, நமது நண்பர்களாகிய பாண்டவர்களுக்கு எப்படி நன்மை உண்டாகுமோ அப்படி செய்து முடிப்போம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அவனைப் பற்றினவர்களுடைய மன வருத்தங்களைப் போக்கும் தன்மையனும், ஸர்வேச்வரனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீகிருஷ்ணர் அக்ரூரனுக்கு இவ்வாறு கட்டளையிட்டு உடனே பலராமனோடும், உத்தவனோடும் கூடி தன் க்ருஹத்திற்குப் போனான்.

நாற்பத்து எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.


 

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை