ஞாயிறு, 24 ஜனவரி, 2021

மங்கைக்காதலி - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

“மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!” என்று கூறினாள் சூடிக்கொடுத்தச் சுடர்கொடி. காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்பர் ஆன்றோர். மானுடத்தை காதலித்த கவிஞர் ஒரு கோடி என்றால் தெய்வத்திடம் ஆராக்காதல் கொண்ட தொண்டர்கள் பலகோடி சேரும். ஆண்டாள் போன்று ஆழ்வார்களில் திருமங்கைக் காதலியும் ஒருவர். அவளது மனம் ஆண்டவனின் அருளையே நாடி இருந்தது.


 ஒரு நாள் அரங்க மாளிகையின் நடுவே கருங்கடல் வண்ணனாய் கண்டோர் களிப்புறும் வகையில் அரிதுயில் அமர்ந்த ஆனந்தமூர்த்தியிடம் மையல் கொண்டு ஆராக்காதல் அடைந்து விட்டாள். எப்பொழுதும் ஒரே ஏக்கம். மனதிற்குள்ளே கம்பளிப் பூச்சிகள் நெளிவதைப்போன்று ஒரே கிறுகிறுப்பு. எங்கு நோக்கினும் எந்நேரத்திலும் தன் காதலனின் திருவுருவையேக் கண்டாள். காதல் பெருகிடின் கருத்தொழிந்து பித்துற்ற நிலையில் பேதுருளானாள்.


பறவைக் கூட்டம் ஒன்று வானவெளியில் பறந்து செல்வதை கண்டாள். அவைகளுடன் தன் பிரிவாற்றாமையை சொல்லி அழ அவள் எண்ணியிருக்க வேண்டும் மாறாக ஒருகால் அந்த பறவைக் கூட்டங்கள் தனக்கு உதவி புரிந்து தன் காதலனுடன் தன்னை சேர்த்து வைக்காதா என்ற ஏக்கமும் சேர்ந்திருக்கிறது.


செம்போத்து என்ற ஒரு பறவை உண்டு, காக்கை போன்ற உடலமைப்பு. ஆனால் அதன் இறகுகள் பொன்னிறமாயும் வண்ணம் கொள்பவை அவை. அந்த செம்போத்தை பார்த்து விளிக்கிறாள் திருமங்கை காதலி.


‘திருத்தாய் செம்போத்தே, திருமாமகள் தன்கணவன்,

மருத்தார்தொல்புகழ் மாதவனை வரத் திருத்தாய் செம்போத்தே.’



மனமிகுந்த மாலையையணிந்த என் மாதவனை என்னிடம் வரும்படியாக சொல். தான் யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதை மறந்த அவள், அடுத்ததாக அங்கே பறந்து வந்த ஒரு காக்கையையை பார்த்து விளிக்கிறாள். காக்கைகள் கரைந்தால் யாராவது விரும்பிய விருந்தினர் வீட்டுக்கு வருவது என்பது பலர் நம்புவது உண்டு. அந்த நம்பிக்கை தோன்றவும் காகத்தைப் போன்ற கருமுகில் வண்ணன் என் காதலன் தொல்புகழ் உத்தமன் இங்கு என்னை காண காக்கையே கரைவாயாக என்று வேண்டுகிறாள்.


‘கரையாய் காக்கைப்பிள்ளாய், கருமாமுகில் போல்நிறத்தன்,

உரையார் தொல்புகழ் உத்தமனைவரக், கரையாய் காக்கைப்பிள்ளாய்.’


அவளது நிலைக்கு எந்த உதவியும் செய்யாது காக்கையும் பறந்துவிட்டது போலும். அருகிலுள்ள மாதவி பொதும்பரில் வாழும் குயிலொன்று அவள் முன் வந்து நின்றது. குயிலே, நீ கூவுவதை நிறுத்தாமல் எனக்கு நன்மையளிக்கக் கூடிய வகையிலே கூவ மாட்டாயா? உன் கூவல் சோகக்கூவல். அனைவரின் மனதையும் கவரக்கூடியதன்றோ! என் காதலனை காணாமல் வாடிடும் எனக்கு என் காதலன் என்னிடம் வரும்படியாக நீ கூவ மாட்டாயா! அவன் ஆயர்பாடியில் இருந்த காலத்தில் மாவாய் கீண்டு மகிழ்ந்தானே, அந்த மகிமையை நீ அறியாயா? குயிலும் அவளுக்கு சோகத்தையே கூட்டிவிட்டது!.


‘கூவாய் பூங்குயிலே, குளிர்மாரி தடுத்துகந்த,

மாவாய் கீண்ட மணிவண்ணனைவரக், கூவாய் பூங்குயிலே.’


பச்சை கிளிகள் பறந்து செல்வதை அந்த பாவை பார்க்கிறாள். அந்த கிளிகள் சோடி சோடியாக பறப்பதைக் கண்டு மனம் கலங்குகிறாள். அத்தகைய இன்ப வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லையே. அந்தக் கிளிகள் தனக்கு எவ்விதமாக உதவிகள் புரியாதா என மனம் ஏங்குகிறது! கிளிகளை பார்த்து விளிக்கத் தொடங்குகிறாள்.


‘சொல்லாய் பைங்கிளியே, சுடராழி வலனுயர்த்த,

மல்லார் தோள்வட வேங்கடவன்வர, சொல்லாய் பைங்கிளியே.’


பசுமை பொருந்திய கிளிப்பிள்ளைகளே எனக்கு ஓர் அரிய உதவி செய்திட வேண்டும். என் காதலன் சுடர்விட்டுப் பொலிகின்ற சக்கரத்தை ஆயுதமாய் கொண்டு தன் வலக்கரத்தில் உயர்த்தி பிடித்துள்ளானே அந்த உத்தமன், என் வேங்கடவன், என்னிடம் வரச் சொல்ல மாட்டாயா? பச்சைக்கிளி கூட்டம் பறந்துவிட்டது போலும். வேதனையுடன் திரும்பும்பொழுது சுவற்றிலே ஒரு பல்லி அவளுக்கு தென்படுகிறது! பல்லி சொன்னால் பலன் உண்டாகும் என்பதை அவள் அறிவாள். உடனே பல்லியிடம் தன் குறைகளை கொட்டி தீர்த்துவிட முனைகிறாள்.


‘கொட்டாய் பல்லிக்குட்டி, குடமாடி யுலகளந்த,

மட்டார் பூங்குழல் மாதவனைவரக், கொட்டாய் பல்லிக்குட்டி.’


குடக்கூத்தாடிய கோவலன் கோபாலன் அவன். ஆயர்பாடியில் அன்று ஆய்ச்சியருடன் குடக்கூத்தாடிய என் காதலன் அன்று வாமனனாய் தன் ஈரடியால் மூவுலகம் அளந்த உத்தமன். அவனிடம் மையல் கொண்டு வாழும் என்னை ஏளனமாய் நகையாதே! என் மாதவன் என்னிடம் வர பல்லியே நீ கொட்டிடுடுவாய் என்று வேண்டுகிறாள்.


பல்லியும் நகர்ந்திருக்க வேண்டும், இப்படி பறவைகளை பார்த்தும் தன் மனத்தாலும், தன் ஆற்றொனா மையலினாலும் வாடும் அவள் நித்திரையின்றி நடு இரவும் கழிந்து அதிகாலை நெருங்கிவிட்டதை அறிந்தாளில்லை. அந்நேரத்தில் ஒரு சேவல் எங்கிருந்தோ குரல் கொடுக்கிறது! இதயத்தை தவிர இதுநாள்வரை தன் காதலை பூட்டி வைத்திருந்த அவள் பறவைகளைப் பார்த்து விளித்தும் பலனில்லாமல் இறுதியாக தோழியை நாடுகின்றாள்!.


“தோழி நான் என் செய்வேன்? இதுவரை என் அருமை காதலன் ஆழிவண்ணன் வரவே இல்லையே, பொழுது விடியப் போகிறதே, கோழியும் குரல் கொடுத்து விட்டதே, நான் என்ன செய்வேன் என் மனம் கலங்குகிறதே என்றாள்.


‘கோழி கூவென்னுமால், தோழி நானென்செய்கேன்,

ஆழிவண்ணர் வரும்பொழுதாயிற்று கோழி கூவென்னுமால்.’


மேலும் அரற்றுகிறாள், அவளது காதல் அளவு கடந்து நிற்கிறது. அதனால் கோபமும் மேலிடுகிறது! எதற்காக? எவரிடம்? காமதேவனிடம் தான். அந்த மன்மதன் பலம் பொருந்திய தன் ஐந்து கணைகளையும் அவள் மேல் பிரயோகித்து விட்டால், அவனுடைய மலர்கணைகளை தன்னால் எப்படி தாங்கி சமாளித்து இருக்க முடியும் என்கிறாள்.


காமற் கென்கடவேன், கருமாமுகில் வண்ணற்கல்லால்,

பூமேலைங்கணை கோத்துப் புகுந்தெய்யக், காமற் கென்கடவேன்.


அவளுடைய துயரம் நீங்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு வழி தான் கருமுகில் வண்ணன், அந்த கள்வன் வந்தால்தான் அவள் துயரம் தீரும். அவனோ மாயம் செய்கிறான் அவள் வரையில். அவன் அவளிடம் நெருங்கி வராத வரையில் காமனின் கடுஞ்சுரங்கள் அவளை வாட்டி வதைத்து எரித்துவிடும்! கருமுகில் வண்ணனும் வரவில்லை. காமனுக்கும் பதில் சொல்ல வேண்டும். என்ன செய்வது என்று அறியாது ஏங்கி நிற்கின்றாள். அதையும் அவளே வெளிப்படுத்துகிறாள்.


எல்லாம் சரிதான் கனவிலே அவனை கண்டிருக்கிறாள், பற்பல இடங்களில், பற்பல தோற்றங்களில் பலமுறை பார்த்துள்ளாள். ஆனாலும் அவனை இன்னான், இன்னவிடத்தான் என்று உறுதியாக அவளால் கூற இயலவில்லை. ஆனால் ஒன்று அவனது கையில் சார்ங்கம் என்ற வில் இருந்தது, அவனை எங்கு தேட முடியும். அதையும் என்னால் கூற முடியவில்லையே என்று அலைபாய்கிறது அவளது மனம்.


‘இன்னா ரென்றறியேன், அன்னே ஆழியொடும்,

பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை, இன்னா ரென்றறியேன்.’


ஒருவனுக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது அவனுக்கு மணமுடிக்க யார் பெண் தருவார்கள். பைத்தியம் தெளிந்தால் பிறகு பெண் கொடுக்கலாம் என்பார்கள். ஆனால் மனமானால்தான் பைத்தியம் தெளியும். இது போன்ற நிலையில் தான் இவ்விளநங்கை திருமங்கைக் காதலி தன் காதலன் தன்னிடம் வந்தால்தான் தன் காதல் வேகம் தணியும் என்பதையும் அறிவாள்! தன்னிடம் அவன் வருவானோ மாட்டானோ என்ற பயம் வேறு அவளுக்கு. அவன் அவ்வாறு எல்லாம் எளிதில் வந்து விடக்கூடியவனா என்ன அவன். அவள் ஒருமுறை குடந்தையில் கண்டு களித்திருக்கிறாள். அந்த இன்பச்சூழ் நிலையில் இனிதமர்ந்து இன்பம் துய்க்கும் அந்த இளங்காலை, அந்த இன்பச்சூழலை விட்டு தன்னைத் தேடி வந்து தன் துயர் தீர்க்க வந்து விடுவானா என்ற அவநம்பிக்கை தலை எடுத்து விட்டன. எனவே மனம்விட்டு அரற்றுகிறாள்.


இவ்வாறெல்லாம் தான் சந்தித்து பேசும் அஃறினை பொருட்கள் யாவும் தனக்கு யாதொன்றும் உதவாதா என்று விளித்துக் கூறும் திருமங்கை காதலியின் ஆழ்ந்த காதல் உணர்வை போற்றாமல் இருந்திட முடியுமா!


அவளிடத்தில் அவன் அதாவது கருமாமுகில் வண்ணன் வரமாட்டான் என்று தெரிந்த போதிலும், அவள் உள்மனம் அவனை குடந்தையில் கண்டதை எண்ணிக் களிக்கிறாள். பொழுதும் விடிந்து விட்டது, சூரியனும் உதயமானான். அவள் அந்த இளங்காலையில், அந்த இன்பச் சூழ்நிலையில் அவன் தன்னைத் தேடி வந்து தன் துயர் தீர்க்க மாட்டானா என்ற அவநம்பிக்கை எழுந்தபோதிலும் அவன் வருவான் வந்து என் துயர் தீர்ப்பான் என்று மனம் விட்டு பாடுகிறாள்.


‘இங்கே போதுங்கொலோ, இனவேல்நெடுங் கண்களிப்ப,

கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால், இங்கே போதுங்கொலோ.’


இவ்வாறெல்லாம் தான் சந்திக்கும் பேசும் சக்தியற்ற செம்போத்து, காக்கை, குயில், கிளி, பல்லிக்குட்டி போன்ற உயிரினங்களை விட்டு விட்டு தோழியையும் தூது செல்லுமாறு விளிக்கின்றாளே, என்ன காரணத்தால் இந்த தூதாவது தனக்கு உதவாதா என்று விளித்துக் கூறும் திருமங்கைக் காதலியின் ஆழ்ந்த உன்மத்த காதல் உணர்வை போற்றாமல் இருக்க முடியுமா! எனவேதான் திருமங்கை காதலி மற்ற காதலியரை விடவும் உயர்ந்தவளாகின்றாள்.


வாழ்க திருமங்கைக் காதலி!  வாழ்க தமிழ் கூறும் நல்லுலகம்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக